சீடை

தேதி: August 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

பச்சரிசி மாவு - 2 கப்
உருட்டு உளுந்து - அரை கப்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
எள் - ஒரு மேசைக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயப் பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
ரீஃபைண்ட் ஆயில் - பொரிக்க


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெண்ணெய் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டியது அவசிய்ம்.
உளுத்தம் பருப்பை நன்றாக சிவக்க வறுத்து ஆறவிடவும்.
பச்சரிசி மாவை இரண்டு முறை சலித்து வைக்கவும்.
வறுத்த உளுந்து நன்றாக ஆறிய பிறகு, மிக்ஸியில் போட்டு நைசாகத் திரித்தெடுத்து, இரண்டு முறை சலித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைப் போட்டு, அத்துடன் உளுந்து மாவு, எள், உப்பு, வெண்ணெய், பெருங்காயப் பவுடர் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
பிசைந்த மாவு மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்குமாறு பார்த்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக (சீடைகளாக) உருட்டவும். (உருட்டும் போது அதிகமாக அழுத்தி உருட்டாமல், லேசாக கிள்ளினாற் போல உருட்டவும். இது மிகவும் முக்கியம்).
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, நன்றாகக் காய்ந்ததும் உருட்டிய சீடைகளைப் போடவும். (சீடைகளைப் எண்ணெயில் போடும் போது அதிகமாகவே எடுத்துப் போடவும்).
சீடைகள் பொன்னிறமாக வேகும் வரை திருப்பிப் போட்டு, நன்கு பொரியவிட்டு எண்ணெயை வடித்தெடுத்து டிஷ்யூ பேப்பர் விரித்த தட்டில் வைக்கவும்.
சுவையான மொறுமொறுப்பான சீடை தயார்.

சமையலில் எக்ஸ்பர்ட் ஆனவர்களையே சோதித்துப் பார்க்கும் பலகாரம் சீடை. அதனால் ஜாக்கிரதையாக செய்து பார்க்கவும். முதலில் அரை கப் அளவு மாவு போட்டு செய்து பார்க்கலாம். வறுத்த உளுந்த மாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.

எண்ணெயில் பொரிக்கும் போது சீடை வெடிக்க ஆரம்பித்தால் வாணலியில் ஒன்று கூட இல்லாமல் அனைத்தும் வெடித்து, சமையலறை முழுவதும் சிதறிவிடும். மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பக்கத்தில் தயாராக இட்லிப் பானை மூடியை வைத்துக் கொள்ளவும். ஒரு வேளை சீடை வெடிக்க ஆரம்பித்தால், உடனே அடுப்பை அணைத்துவிட்டு, இட்லிப் பானை மூடியை வைத்து வாணலியை மூடிவிட்டு, சமையலறையை விட்டு வெளியே வந்துவிடுங்கள். முதல் முறையாக செய்து பார்க்கும்போது பெரியவர்கள் துணையுடன் செய்து பாருங்கள்.

சீடை வெடிப்பதற்கான சில காரணங்கள்: சீடையை அதிகம் அழுத்தி உருட்டினால், அழுத்தத்தின் காரணத்தினாலும், எண்ணெய் சுத்தமானதாக இல்லையென்றாலும் வெடிக்கும். மாவில் தூசி, துரும்பு இருந்தாலும் வெடிக்கும். அதனால் மாவை இரண்டு முறை சலித்துச் சேர்க்க வேண்டும். தேங்காய் துருவலில் நார் அல்லது தூசி இருந்தாலும் வெடிக்கும். கவனமாகச் சேர்க்கவும். எள்ளிலும் கல் இல்லாமல் சுத்தப்படுத்திச் சேர்க்கவும். உருட்டிய சீடைகளை எண்ணெயில் போடும் போது குறைவாகப் போட்டால் வெடிக்கும். அதனால் சீடைகளை அதிகமாகவே (நிறைவாக) எடுத்துப் போட்டுப் பொரிக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா செய்து காட்டி இருக்கீங்க‌. விளக்கம் அருமையா இருக்கு.

எனக்கு அளவு சரியா தெரியாம‌ செய்யல‌. இது போன‌ வாரம் வெளியிட்டு இருந்தால் நேற்று கோகுலாஷ்டமிக்கு வீட்லயே செய்து இருப்பேன். கடைல வாங்க‌ வேண்டியதா போச்சி.

நீங்க‌ சொன்ன‌ குறிப்பு கூட‌ எனக்கு தெரிந்த‌ சின்ன‌ குறிப்பு என்னனா சீடை உருட்டினதும் சேஃப்டி பின் இல்லனா குண்டூசியால‌ ஒரு குத்து குத்தி நடு பாதி வரை சின்னதா ஓட்டை (துளை) மாறி போட்டு அப்றம் எண்ணைல‌ பொரித்தால் வெடிக்காதுனு சொல்வாங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

உங்கள பாலோ பண்ணினா கண்டிப்பா நல்லாத்தான் இருக்கும்,நான் சும்மாவே பயபடுவேன் எண்ணை என்றால் ,,கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து தட்டை செய்துவிட்டேன் ,,இப்படி பயமுறுத்தினால் நான் என் செய்வேன் ,,,அவ்வ்வ் இருந்தாலும் கண்டிப்பாய் செய்வேன் ,,செய்தபின் சொல்கிறேன்
நல்லவேள முதலிலேயே இதன் பாதகத்தையும் சொல்லிடீங்க இல்லீன்னா எனக்கு ரொம்ப கஷ்டம்தான்,,,வீடுகார தொணக்கி வச்சிகிடனும்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் சீடை சாப்பிட்டிருக்கிறேன். உங்கள் குறிப்பைப் படிக்க அந்த வேளாங்கன்னி டு பெங்களூர் பயணம் நினைவுக்கு வந்தது. :-)

ஒரு முறை செய்து பார்க்கலாம் என்று நினைத்துத்தான் குறிப்பைப் படித்தேன். கீழே கொடுத்திருக்கும் எச்சரிக்கைகளுக்கு நன்றி. இது பலகை வீடு. ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ;(

‍- இமா க்றிஸ்

அன்பு பாலநாயகி,

முதலிலேயே அனுப்ப நினைச்சிருந்தேன். வீட்டில் நெட் கனெக்‌ஷன் கிட்டத்தட்ட 2 வாரம் வேலை செய்யலை. லேட் ஆகிடுச்சு.

நீங்க சொன்ன டிப்ஸ் கரெக்ட்தான். ஒரு புக்ல படிச்ச நினைவு வருது.

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அஷ்வதா,

பொதுவாக நானுமே சூடான எண்ணெய் விஷயம் என்றால் பயப்படுவேன். அதனால்தான் முன் ஜாக்கிரதை முத்தம்மாவாக குறிப்பிட்டு வச்சேன். செய்யறப்ப ஜாக்கிரதையாக இருக்கலாம்தானே.

இட்லிக்கு அரைக்கறப்ப, ஒரு கை கூடுதலாகப் போட்டு, புழுங்கரிசி மாவு எடுத்துக்குங்க(இதில் குறிப்பிட்டிருக்கும் பச்சரிசி மாவுக்கு பதிலாக)

அதே போல, உளுந்த மாவுக்குப் பதிலாக பொரிகடலையை பவுடராக ஆக்கியும் போடலாம்.

ஒரு சிறிய கப் அளவு செய்து பார்த்துட்டு, பிறகு அளவு கூடுதலாக செய்யலாம்.

செய்து பாருங்க, நல்லா வரும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இமா,

எனக்கு இந்த மாதிரி, முறுக்கு, சீடை, தட்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

யு.எஸ்.ல மகன் வீட்டுக்குப் போனதும், நான் கொண்டு போயிருந்த உள்ளங்கையளவு கடவுள் படத்தை எங்களுக்குக் கொடுத்திருந்த ரூம் சுவரில் ஒட்ட நினைத்தேன்.

செலோ டேப் இருக்கான்னு கேட்டேன். எதற்கு என்றார் மகன். படம் சுவரில் ஒட்டணும், ஆணி அடிக்க முடியாதில்லையா என்றேன்.

ஒரு சின்ன ட்ராயிங் பின் கொண்டு வந்து, அந்தப் படத்தை சுவரில் பின் பண்ணினார் பாருங்க,.... அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

அப்புறம்தான் சொல்கிறார், இங்கே சுவர் எல்லாம் கார்ட்போர்ட்தான், உள்ளே பஞ்சு இருக்கும்னு. என்னத்தை சொல்ல.

மரத்தரை, கிச்சன் சிங்க் பக்கத்தில் இருக்கும் டாப் மீதும் மரம்தான், அதில் ஈரப் பாத்திரங்கள் வைக்கக் கூடாது, ஒரு ட்ர்க்கி டவல் வைத்து, அந்த டவலை உடனே காயப் போட்டு...

குளிக்கும் அறையில் மரச் சுவர்கள் ‍‍- அதனால் வென்னீர் ஆவி பட்டு, ஊதி விடும், மறக்காமல் எக்ஸாஸ்ட் ஃபேன் போடணும்.

நிறையக் கற்றுக் கொண்டேன்.

ஒரு முறை ரிப்பன் பக்கோடா செய்து கொண்டிருந்த போது, பாதி செய்த பிறகு, எண்ணெய் பொங்கி, சட்டியின் விளிம்பு வரை வந்து விட்டது. படக் என்று அடுப்பை ஆஃப் செய்து விட்டேன். இருந்தாலும் படபடன்னு இருந்தது.

சமையல் குறிப்பைப் புதியவர்கள் பார்த்து முயற்சிப்பாங்க, அதனால்தான் மற்ற விஷயங்களும் குறிப்பிட்டேன்.

கொஞ்சமாக செய்து பாருங்க இமா. சரியாக வரும்.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப நாளைக்கு பிறகு உங்க குறிப்பு வந்துருக்கு :-)

சீடை ரொம்ப பிடிக்கும்... நீங்க தெளிவா அழகான செய்முறையுடன் கொடுத்துருக்கீங்க... தேங்க்யூ மேடம்... அம்மா ஹெல்ப் பண்ண்ரேன்னு சொல்லிருக்காங்க.. செய்து பார்க்கிறேன்...

தொடர்ந்து நிறைய குறிப்புகள் கொடுங்க...

கலை

உங்களைமாதிரியே எனக்கும் இந்த‌ சீடை, முறுக்கு & தட்டையெல்லாம் மிகவும் பிடிக்கும்.
சீடை செய்யறதுக்கு மட்டும் கொஞ்ஜம் பயம். சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கிற‌ ஒரு ஃபிரெண்ட் சீடை முயற்சி பன்னும்போது, வெடித்து முக‌மெல்லாம் சூடான‌ எண்ணெய் தெளித்து, அவங்க‌ பட்ட‌ வேதனைக்கதையை கேட்ட பிறகு, சீடை செய்யற‌ யோசனையே கைவிட்டிருந்தேன். இப்ப‌ உங்க‌ குறிப்பை பார்த்தவுடன் முயற்சிக்கலாம்னு தோனுது.

சீடை எனக்கும் வெடிச்சிருக்கு. அப்புறமா கற்றுக்கொண்டேன் அழுத்தி உருட்டக் கூடாதுன்னு. ஆனால், ஊசியால் ஒரு துளையிட்ட‌ பின் பொரித்தால் கட்டாயம் வெடிக்காமல் வரும்.

சீதாமேடம், தலைப்பை பார்த்த உடனே ஓடோடி வருவீங்கனு தெரியும். எனக்கு இனிப்பு கலந்த சீடை ரொம்ப பிடிக்கும்.
குறிப்பு பார்த்த உடனே கை பரபரத்தது. ஆனா கீழ போட்டிருக்கும் குறிப்புகள் தீபாவளி ராக்கெட் விடுறதுக்கு, எவ்வளவு பாதுகாப்பு யுக்திகளை கையாளவேண்டும் என்பதை போன்றல்லவா இருக்கு.
நானெல்லாம் சுருள் பட்டாசு வெடிக்கவே யோசிப்பேன்.

சரி பரவால்ல, அனைத்து பாதுகாப்பு கவசங்களோடும்,(அதாங்க இட்லிபோசி மூடி ) போருக்கு போவது போல களம் இறங்களாம்னு நினைச்சேன்.

ஆனா இப்ப அனு சொல்றதைப்பார்த்தா அணு குண்டு தயாரிப்பு போலல்லவா இருக்கு, நிஜமாவே யோசிக்கத்தான் வைக்குது.

பழைய ஹெல்மெட் ஒண்ணு இருக்கு, எடுத்து போட்டுடவேண்டியதுதான்.
குறிப்பையும் கொடுத்து, பின்விளைவுக்கு கம்பெனி பொறுப்பல்ல என்பது போலல்லவா போட்டிருக்கீங்க.
வாழ்க சீதாலஷ்மி தாயார் :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்களை ஹெல்மெட்டும், இட்லிபானை மூடியுமா கற்பனை பண்ணிப் பார்த்து சிரிப்பா சிரிக்கிறேன்.
தாங்கலை:)

அன்பு கலை,

பதிவுக்கு நன்றி. அம்மாவின் உதவியுடன் செய்து பார்த்து சொல்லுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அனு,

ஏற்கனவே சீடையைப் பாத்து, இங்க‌ எல்லோருக்கும் பயத்துல‌ காய்ச்சல் வந்த‌ மாதிரி இருக்காங்க‌. நீங்க‌ சொல்ற‌ சவுத் ஆஃப்ரிக்கா விஷயம் இன்னும் பயம்மா இருக்கு. ஆனா, இந்த‌ எச்சரிக்கை கண்டிப்பாகத் தேவைதான். ஏன்னா, சூடான‌ எண்ணெய் எப்பவுமே ஆபத்துதான்.

கொஞ்சமாக‌ செய்து பாருங்க‌ முதலில், எப்படி வந்துச்சுன்னு சொல்லுங்க‌. சரியாக‌ வரும்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நிகிலா,

உங்க‌ டிப்ஸ் சீடை செய்து பார்க்க‌ நினைக்கிறவங்களுக்கு கண்டிப்பாக‌ தைரியம் கொடுக்கும்னு நினைக்கிறேன்.

பதிவுக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருட்செல்வி,

ப்ளாக் எழுதறவங்க‌ டிஸ்கி அப்படின்னு ஒண்ணு போடுவாங்க‌. அது போலன்னு வச்சுக்குங்களேன்:)

ரொமப் மனசு சரியில்லன்னு வந்து உக்காந்தேன், உங்க‌ பின்னூட்டம் என் மனக் கவலையை மாற்றி, வாய் விட்டு சிரிக்க‌ வைத்து விட்டது:) நன்றி அருள்:)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நிகிலா,

எனக்கும் படிக்கும்போதே சிரிப்பு வந்துடுச்சு.:)

என்னதான் ஹெல்மெட்டும் இட்லிப் பானை மூடியும் வச்சிருந்தாலும், எண்ணெய் பொங்கி வழிந்தால் பயம்தான்.

அன்புடன்

சீதாலஷ்மி

‍அரிசியில் நொய் இருந்தா வெடிக்கும்னு அம்மா சொல்வாங்க‌. அம்மா செய்வதை பார்த்ததோட‌ சரி, இப்ப‌ அவங்க கூட‌ செய்யுறதில்லை. இந்த‌ அறிவு பதிவை படிச்சதும் எனக்கு அடுப்படி பக்கம் போகவே பயமா இருக்கு ;) சீடை அடுத்த‌ முறை செய்தா எனக்கு ஒரு பார்சல் கொடுத்துப்போடுங்க‌... பழைய‌ ஹெல்மட் எதுவும் என்கிட்ட‌ இல்லையாக்கும். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி,

சும்மா வனி வசு அப்படின்னு கூப்பிட்டுப் பார்த்தேன் :):)

ஒரு தடவ செய்ததோட சரி, இன்னிக்கு திரும்பவும் படிச்சுப் பாக்கறப்ப எனக்கே பயமாயிருக்கு:(

அன்புடன்

சீதாலஷ்மி

ஹா..ஹா சீதா . உங்க கமண்ட் படிச்சதும் நானும் பயந்துட்டேன்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அன்பு ஜெயந்தி,

நிஜமாத்தான்! எனக்கு சீடைன்னா கொஞ்சம் (கொஞ்சம் என்ன, நிறையவே) பயம்தான்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹா...ஹா அது சீடை மேலுள்ள பயமா? இல்லே ஞாயிறு இரவு வரும் பயமா? எதுக்கும் நாளை இன்னொருமுறை, வேண்டாம்... வெள்ளி இரவு படிக்க முயற்சி பண்ணூங்க சீதா. எனக்கு ஞாயிறு இரவு எதை கண்டாலும் பயம் தான்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

சீதா மேடம்,

சீடை செய்து பார்த்தேன், நல்லா வந்தது. கொஞ்சம் பெரிய உருண்டைகளாக வந்தது. நன்றி

அன்பு வாணி,

சீடை செய்து பார்த்து, ஃபோட்டோவும் போட்டிருக்கீங்க. மகிழ்ச்சி! (இத கபாலி ரஜினி வாய்ஸ்ல படிங்க)

மிகவும் நன்றி வாணி.

செய்து பார்த்ததற்காகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே அறுசுவையில் பதிவு போட சந்தர்ப்பம் ஏற்படுத்தியதற்காகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி