நேரம் தவறாமையும், பள்ளிச் சுற்றுலாவும்..

அனைவருக்கும் இனிய வணக்கம்_()_ :)

நேரம் தவறாமை என்னும் இப்பதிவினை எழுத தூண்டியதே, என் மகளின் பள்ளிக்கூடத்தில் சுற்றுலா அழைத்து சென்ற பொழுது நடந்த விசயங்களை பார்த்ததுதான்.

மதியம் 2.30 மணிக்கு அனைவரும் பள்ளி வளாகத்தில் குழுமவேண்டும் என்ற அறிவுறுத்தலின் பேரில், நாங்களும் மகளை அழைத்துக்கொண்டு சரியாக 2.25 ஆஜராகிவிட்டோம்.
அங்கு சென்றால் வளாகமே வெறிச்சோடி இருந்தது. எங்களுக்கோ பயங்கர சந்தேகம் ஒருவேலை நாம்தான் தேதி சரியாக பார்க்காமல் சென்றுவிட்டோமோ என்று.
ஆசிரியரிடம் செல் பேசலாம் என்று நினைத்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்ததில் எங்களைப் போன்ற அப்பிராணி பெற்றோர் தங்களது குழந்தையுடன் தம்பதி சமேதரராக அமர்ந்திருந்தனர்.

நமக்கு ஏற்பட்ட சந்தேகமே அவங்களுக்கும் வந்துச்சாம், அப்பாடா மனசு ஒரே குசியாகிடுச்சு, பின்ன யாம் பெற்ற இன்பம் வேறு ஒருவரும் பெற்றார் என்றால் குசிக்கு கேட்கவா வேண்டும்.

மெது மெதுவாக வரத்தொடங்கினர். இரண்டு பேருந்துகளில் பயணம் துவங்குவதாக திட்டமிட்டு இருந்தனர்.

இங்கு வருத்தத்துடன் குறிப்பிட்டாக வேண்டிய ஒன்று என்னவென்றால் ஆசிரியரும் குறிப்பிட்ட நேரம் கழித்தே வந்தார் :( எகொசஇ..:(

நேரத்தைப்பற்றி போதிக்கவேண்டிய நீங்களே நேரம் கழித்து வரலாமா, என்று கேட்கவில்லை. மனதில் இருத்திக்கொண்டதோடு சரி.
புலம்பல்களுக்கு இடம் இருப்பதால் தான் இது போல நேரிடையாக கேட்கவில்லையோ என நினைத்து விடாதீர்கள்.

ஆசிரியர், ஆசிரியை வந்த உடனே குழந்தைகள் ஒவ்வொருவரும் பேசும் அழகை பார்த்த உடனே எல்லாமே மறந்துவிட்டது.

நா(னெ)மெல்லாம் ஆசிரியர் வந்தால் வணக்கம் வைத்துவிட்டு, அகன்றுவிடுவேன்.
ஆனால் இப்பலாம் ரொம்பவே மாற்றம்.
மிகவும் நட்புடன் பழகுவதை பார்க்கும் பொழுது ஆச்சர்யம்தான் உண்டானது.

ஒரு பையர் கேட்கிறார் மிகவும் அதிகார தோரணையில் சர் வென் வில் லீவ் .... ஒரு நிமிடம் ஜெர்க்காகித்தான் போனோம். அதற்கு தகுந்த பதிலை புன்முறுவலுடனே அளித்தார் அவ்வாசிரியர்.
மொட்டதாசன் குட்டைல விழுந்த மாதிரியே இருந்தது. ஒருவேலை நா(ன்)ம்தான் பத்தாம்பசலியா இருக்கமோ என்று உள்ளம் ஒரு நிமிடம் கனைத்து திரும்பியது.

சினிமாக்களில் வருவது போல, நானெல்லாம் அப்ப ஆசிரியர் சொன்னா ரொம்ப மருவாதியா பேசுவேனு ஆரம்பிச்சா நல்லா இருக்காதேனும் ஒரு எண்ணம் எழுந்து அடங்கியது.

தவறென்று சொல்லவில்லை, ஆனாலும் வரும் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே மறைந்து மாறிவிடுமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

வீட்டில் என்றால் அப்பாவை பெயர் சொல்லி செல்லம் கொஞ்சும் குழந்தைகளும் உண்டு, அம்மாவை செல்லப்பெயர் வைத்து அழைக்கும் குழந்தைகளும் உண்டு.
சில வீடுகளில் மரியாதையில் கொஞ்சம் குறைந்தாலும் முறைத்தலை அனுபவிக்கும் குழந்தைகளும் உண்டு.
இதுதான் நல்லது, இதுதான் கெட்டது என விளிக்கும் விதத்தைவைத்து அளவிடமுடியாது.

பாத்தீங்களா, தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத விசயத்தை நோக்கி பதிவு சென்று கொண்டிருக்கிறது.
இருங்க லகானை நேரம்தவறாமையை நோக்கி இழுக்கிறேன்.
மனம் சண்டிக்குதிரையாகி நொண்டிதான் அடிக்கிறது.

என்னைப்பொறுத்தவரைனு பெரிய வார்த்தை சொல்லும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை, அதனால் உலகம் என்ன சொல்லுதுனா, பெரிய பெரிய அறிஞர்கள், கற்றறிந்த சான்றோர்கள் என்ன சொல்றாங்கனா, நல்ல பழக்கம், கெட்டபழக்கம் என்பதுலாம் நாம் நடைமுறைப்படுத்துவதில்தான் இருக்கு.
அதாவது எப்படி தீய பழக்கம் அண்டிவிட்டால் அது விடாது கருப்பு போல் தொடர்கிறதோ, அது போல நல்ல பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் நல்லதாம்.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போலத்தான் இதுவும்.

நேரத்தை தவறவிட்டதனால் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய அரிய வாய்ப்புகளை இழந்தவர்கள் ஏராளம்.

மிக முக்கியமான சந்திப்புகள் கூட இந்த நேர ஆளுமைத்திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில், வெற்றி பெறாமலே போயிருக்கின்றது.

சிலபேர் சொல்வாங்க நான் என்ன பெரிய கலெக்டர் உத்யோகத்துக்கா போறேன், நேரத்துக்கு போறதுக்குனு, கலெக்டர் முதல் கடைக்கோடி ஊழியர்வரை நேரத்தை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

சாப்பிட நேரமில்லை, தூங்க நேரமில்லை ஒரே பரபரப்பு, இந்த பரபரப்பை குறைக்கணும்னா, நிச்சயம் நேரம்தவறாமை இருக்கவேண்டும். பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கும் நாளில் அமைதியா அமர்ந்து யோசித்தோமேயானால் கட்டாயம் ஏதோ ஒரு தவறினால் நேரத்தை கடந்துவிட்டிருப்போம். அந்த நேரத்திற்கான வேலையை தள்ளிப்போட்டிருப்போம்.

சிறுவயது முதலே நேரத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்க நாம்தான் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
பள்ளி ஊர்தி வந்து நின்று சப்தம் எழுப்பினால் மட்டுமே சாக்ஸ் போடுவேன் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளை சரியான அறிவுறுத்தலின் சரிசெய்யவேண்டும்.
காலையில் சீக்கிரமே எழும் பழக்கத்தை கடைபிடித்தாலே, அந்நால் முழுவதும் இனிமை ததும்பும் நாளாக ஒளிவீசும்.

இத்தனையும் எழுதிவிட்டு அன்று எத்தனை மணிக்கு சுற்றுலா கிளம்பினார்கள் என்பதை சொல்லாமல் விட்டால் தகுமா? சரியாக 4.00 மணிக்கு கிளம்பினார்கள்.
மலைவாசஸ்தலம் என்பதால் சீக்கிரமே அதாவது 3.00 மணிக்கு கிளம்பலாம் என்ற திட்டம் மாறிப்போய் கொஞ்சமே கொஞ்சம் அதாவது ஒரு மணிநேர காலதாமத்திற்கு பொறவு கிளம்பிட்டாங்க.

குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச்சென்று, அழைத்து வந்தனர். என் மகளுக்கு முதல் பள்ளி சுற்றுலா என்பதால் கொஞ்சமல்ல நிறையவே பயத்துடன் அனுப்பி வைத்தோம். அந்த பயத்தை போக்கும் விதமாக இருந்தது ஆசான்களின் கனிவான கவனிப்பும், பாதுகாப்பும்.
மதிப்புமிக்க அவர்களுக்கு மனமார்ந்த நன்றி சொல்லி அழைத்து வந்தோம்.

பின்குறிப்பு:

ஏதோ நேரத்தைப்பற்றி ரொம்பவே வியாக்கியானம் பேசி இருக்கனே, அப்ப நேரந்தவறாமைய சரியா பின்பற்றி ரொம்ப பெரிய புள்ளியா இருப்பனோனு நினைச்சு போடாதீங்க. (இப்பிடிவேற ஒரு நெனப்பா??)
நேரத்தை சரியாக கையாளும் வல்லமையை நானும் பின்பற்ற ரொம்பவே மெனக்கெடுறேன், அப்பவும் சொதப்பிடுது. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுனும் இப்பதிவினை சொல்லலாம். பயிற்சி கட்டத்தில்தான் இருக்கிறேன் இன்னமும்.

5
Average: 5 (5 votes)

Comments

நேரந்தவறாமை ரொம்ப‌ நல்ல‌ விஷயம். காலம் பொன் போன்றது.
ஆனால், இங்கே இன்னொரு விஷயத்தை நான் குறிப்பிட்டாக‌ வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட‌ மீட்டிங் எப்போதும் மதியம் மூன்று மணிக்கு தொடங்கும். ஆனால், ;இரண்டு மணிக்கு மீட்டிங் என்று சொன்னால் தான் மூன்று மணிக்கு வருவாங்க‌; இப்படி ஒரு கணிப்பு.
இதனால் நேரத்தை முன்கூட்டியே சொல்வதாக‌ பதிலளிக்கிறாங்க‌.

சொன்ன‌ நேரத்தில் நடத்தினால் அனைவரும் சொன்ன‌ நேரத்துக்கு வருவாங்க‌ என்பது எனது கருத்து. விவேகானந்த‌ கேந்திர‌ யோகா வகுப்பு சொன்ன‌ நேரத்தில் ஒரு நிமிடம் கூட‌ தாமதிக்காமல் நடக்கும் என்பது ஆரோக்கியமான‌ விஷயம்.

இப்பல்லாம் ஆசிரியரும் மாண‌வரும் ஃப்ரண்ட்ஸ் தான். இது நல்ல‌ விஷயம் தான். அம்மாவை செல்லமாக‌ பெயரிட்டு அழைப்பது கூட‌ தோழியாக‌ நினைப்பதால் தான். (பேரு அழகா இருக்கும்மான்னு கமெண்ட் வேற‌).:)

இது... எந்த நாட்டில் எந்த நகரம்!!

//சொன்ன‌ நேரத்தில் நடத்தினால் அனைவரும் சொன்ன‌ நேரத்துக்கு வருவாங்க‌// நிச்சயம் நிகி. இங்கல்லாம் அதான் நடக்குது. யாருக்காகவும் எந்த நிகழ்ச்சியும் காத்திருக்கிறது இல்லை. அதனால யாரும் லேட்டா வரவும் யோசிப்பாங்க.

இங்க ட்ரிப்புக்கு கால் மணி ஆச்சும் முன்னால வரச் சொல்லுவோம். நாங்க முதல் நாளே எல்லாம் ரெடியாக்கி வைச்சுட்டு போவோம். காலைல பசங்களுக்கு சொல்லுற நேரத்துக்கும் முன்னாலயே போய்ருவோம். பசங்க லேட்டானா அப்பா, அம்மா கூட்டிப் போய் காம்ப்ல விடுறதுக்கு அனுமதி இல்லை. இரண்டு தடவை ட்ரிப்புக்கு லேட்டா வந்த பசங்க அழுதுட்டு ஸ்கூல்லயே இருந்தாங்க. பாடசாலைக்கு காம்ப் ஆட்கள் ரீஃபண்ட் கொடுக்க மாட்டாங்க. அதனால அந்தக் குடும்பங்களுக்கு இரண்டு மடங்கு இழப்பு.

‍- இமா க்றிஸ்

அனைவரும் புரிந்துகொள்ள‌ வேண்டிய‌ நல்ல‌ பதிவு அருள்.

///நேரத்தை சரியாக கையாளும் வல்லமையை நானும் பின்பற்ற ரொம்பவே மெனக்கெடுறேன், அப்பவும் சொதப்பிடுது. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுனும் இப்பதிவினை சொல்லலாம். பயிற்சி கட்டத்தில்தான் இருக்கிறேன் இன்னமும்//
நானும் முயற்சிதான் செய்துகொண்டிருக்கிறேன், முடியும்னு நம்பறேன்.

//;இரண்டு மணிக்கு மீட்டிங் என்று சொன்னால் தான் மூன்று மணிக்கு வருவாங்க‌; இப்படி ஒரு கணிப்பு.
இதனால் நேரத்தை முன்கூட்டியே சொல்வதாக‌ பதிலளிக்கிறாங்க‌.// நானும் இது போல் பார்த்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நிச்சயதார்த்தம் போன்ற விசேசங்களுக்கு அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்காமல், காலம் தாமதித்தே ஆரம்பிக்கின்றனர்.
கேட்டால் கண்டிப்பா தாமதமாகித்தான் வருவாங்க, அதுனால நேரத்த கொஞ்சம் முன்கூட்டி போட்டுவிட்டோம் என சொல்கின்றனர். அப்பத்தான் ஐயர் குறித்த நேரத்தில் விசேசம் நடத்தமுடியும் என சொல்கின்றனர்.

//அம்மாவை செல்லமாக‌ பெயரிட்டு அழைப்பது கூட‌ தோழியாக‌ நினைப்பதால் தான். (பேரு அழகா இருக்கும்மான்னு கமெண்ட் வேற‌).:)// புரிது..புரிது :)))

கருத்துக்களுக்கு மிக்க நன்றி நிகி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//இது... எந்த நாட்டில் எந்த நகரம்!!// இது தமிழ்நாட்டில்தான் இமா. நீங்கள் ஆச்சர்யக்குறியுடன் வினவியிருப்பது எனக்கு என்ன கேட்கிறீர்கள் என புரியவில்லை, நானும் நாலஞ்சு தடவை படிச்சிட்டேன் ம்ஹூம் ,,,புகைப்படத்தை கேட்டீர்களோ என்று ஒரு ஐயம் எழுந்தது, புகைப்படங்கள் எல்லாம் சுட்டபடம்தான்.

//இரண்டு தடவை ட்ரிப்புக்கு லேட்டா வந்த பசங்க அழுதுட்டு ஸ்கூல்லயே இருந்தாங்க.// கேம்ஸ் சிடி மறந்துட்டேனு ஒரு சின்னவ்ர் அழுது அடம்பிடிச்சு, மீண்டும் போய் எடுத்துட்டு வந்தார்.:(

மிக்க நன்றி இமா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அனு மிக்க நன்றி :)
//நானும் முயற்சிதான் செய்துகொண்டிருக்கிறேன், முடியும்னு நம்பறேன்.// முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு அருள்,

நீங்க‌ சொல்லியிருப்பது நிஜம்தான். ஆனாலும் பதிவு போடறப்ப‌, மனசாட்சி என்னைக் கேள்வி கேக்குது! என்னிக்காவது அலாரம் அடிச்சவுடனே எழுந்தது உண்டா, ஆஃபிஸுக்கு பதறாம‌, நிதானமாப் போனது உண்டா அப்படின்னு.

பள்ளியில் மட்டுமல்ல‌, வீட்டிலும் நேரம் கணக்கிட்டு வேலைகளைச் செய்தால், எத்தனையோ ப்ரச்னைகளைத் தவிர்க்கலாம். பார்ப்போம், இனிமேலாவது திருந்த‌ முடிகிறதா என்று.

எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும்னு வடிவேல் வாய்ஸ் கேக்குது:):)

அன்புடன்

சீதாலஷ்மி

அருள் நான் டைம் கீப்பிங் சரியா பண்ணுவேன். 3வது படிக்கும்போதே சரியான நேரத்துக்கு ஒரு விடுமுறையும் எடுக்காமல் வந்ததற்கு பரிசு வாங்கிருக்கேன். ஆனா என் கணவர் எனக்கு நேர் எதிர். பிள்ளைகளும் தந்தை வழி. எனக்கும் வருத்தமான விஷயம்தான் .

Be simple be sample

எல்லாரும் லேட்டா வந்து நாம‌ போய் காத்து கெடப்போம் பாருங்க‌... அப்ப‌ தான் வனி ரொம்ப‌ டென்ஷனாகிடுவேன். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சீதா மேடம், நீங்க சொன்னது எல்லோருக்கும் வரதுதான். ஆனா சொன்னநேரத்துக்கு டாண்னு போய்டுவமில்ல. ஆனா இந்த அடிச்சு,பிடிச்சு,பதறாம போனா கொஞ்சம் அந்த நாள் டல்லா இருக்கிறாப்பில இருக்கும் இல்லீங்ளா?

//எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும்னு வடிவேல் வாய்ஸ் கேக்குது:):)// உங்களுக்கு இப்படி வாய்ஸ் கேட்குது.

ஆனா எனக்கு இப்ப என்னைய எல்லாரும், 'எல நீ ரொம்ப பர்பெக்ட்டு மாறில்ல பேசுற''னு எனக்கு பேர் தெரில ஆனா, அவரோட நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். எப்பவும் போலீஸ் வேசத்தில் வருவார். அந்த வாய்ஸ் கேட்குது..:(

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரேவ்ஸ்,//3வது படிக்கும்போதே சரியான நேரத்துக்கு ஒரு விடுமுறையும் எடுக்காமல் வந்ததற்கு பரிசு வாங்கிருக்கேன்// உளமார்ந்த பாராட்டுக்கள்ப்பா.
உங்களோட எண்ணங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ரேவா:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி, அடிச்சுபிடிச்சு வேலை முடிச்சு போனா, அங்க சாவகாசமா வரவங்களைப்பார்த்தா நிச்சயம் டென்ஷன் யாருக்குத்தான் வராது. கருத்திற்கு மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நேரம் தவறாமை பற்றி ரொம்ப நல்லா சொசொல்லியிருக்கீங்க. .

நட்புடன்
குணா