ராப் மாஸ்டரும் இமா மிஸ்ஸும்

பாடசாலையில் இந்த வருடம் 'காலா' (gala) இல்லையாம். இந்தக் கல்வியாண்டில் கற்பித்தலுக்கு வெளியேயான நிகழ்வுகள் அதிகம் வருவதாலும் மூன்றாம் தவணை இறுதியில் அதிபர் நாற்காலியில் மாற்றம் ஒன்று நிகழவிருப்பதாலும் இந்த முடிவு.

இதனால் நிறைய வேலை குறையும். அதற்கு ஈடுகட்ட, ஏற்கனவே வேறு வேலைகள் வந்தாயிற்று. :-)

காலா இருந்தால்... வாரம் ஒரு விடயம் சொல்லிவிடுவோம் - துணிகள், வைத்திருக்கக் கூடிய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், தோட்டம்... இப்படி. கடைசி நாள் கேக் தினம்.

இன்னது என்றில்லாமல் பொருட்கள் வந்து குவியும். ஒருவருக்கு வேண்டாதது இன்னொருவருக்குப் பெறுமதியாக இருக்கும் இல்லையா! பொருட்கள் வந்து சேரச் சேர நாங்களும் எல்லாவற்றையும் தரம் பிரித்துக் கொண்டே போவோம். இதனால் காலை வகுப்புகள் ஆரம்பிக்க முன், இடைவேளைகள், non contact (இங்கு free period அப்படித்தான் அழைக்கப்படுகிறது) பாடசாலை விட்டதும் முக்கால் மணி நேரம் இப்படி எப்படி முயன்றாலும் தரம் பிரித்தல் கடைசி நாள் வரை முடிவதில்லை.

சின்னவர்கள் நிறைய உதவுவார்கள். இடையில் கண்ணில் பட்டவற்றை எடுத்து விளையாடவும் ஆரம்பிப்பார்கள். :-)

சில கடைகள், தொழில் நிறுவனங்கள் விற்பனை தாமதமாகும் பொருட்களை எங்களுக்குக் கொடுத்து உதவுவது உண்டு. இவை இங்கு மலிவு விலையில் விற்கப்படுவதால் விலை போகும்.

பாடசாலை நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலா அன்று பொறுப்பான வேலைகள் நிறைய இருக்கும். பொருட்கள் வாங்கச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

இங்கு இது பதினைந்தாவது வருடம் எனக்கு. முதல் வருடம் லினன் பகுதியில் நின்றேன். பிறகு தொடர்ந்து பல வருடங்கள் பொம்மை விற்பனை. இடையில் ஒரு வருடம் குழந்தைகளோடு பலூன் விற்றேன். சமீப காலமாக ஃபேஸ் பெய்ண்டிங் பகுதியில் வேலை கிடைக்கிறது.

ஒரு தடவை ஏதோ ஒரு கடையிலிருந்து பிரிக்கப்படாமல் பெட்டிகளில் நீளநீளமாக என்னவோ ப்ளாத்திக்குப் பொருட்கள் வந்து சேர்ந்தன. சுமார் ஐம்பது பெட்டிகள் இருக்கும். என்னவென்று அறியாமல் எப்படி விலை நிர்ணயிப்பது! ஒன்றைப் பிரித்துப் பார்த்தோம். என்னவோ 'wrap master' என்று இருந்தது. cling wrap dispenser என்று புரிந்தது. பரிசோதித்துப் பார்க்காமல் எப்படித் தெரியும் நல்லதா இல்லையா என்று! என்னவோ ஒரு காரணத்தால் வில்படாமல் தங்கியிருப்பது எப்படி நல்ல பொருளாக இருக்க முடியும்! $ 3.00 என்று விலை குறித்தோம். முழுவதையும் விற்றால் $150 டாலர் வரும். இருபதுதான் விற்பனையாகிற்று. மீதி இருந்ததைப் பொதி செய்யும் சமயம் எனக்கும் ஒன்று வாங்கிக் கொண்டேன். வழக்கம் போல, 'சரிவராவிட்டால் போகிறது $ 3.00 பாடசாலைக்கு என் அன்பளிப்பு,' என்று எண்ணிக் கொண்டுதான் வாங்கினேன். பிற்பாடு ஒரு சமயம் கடையில் பார்த்தேன். விலை $ 30.00 என்றிருந்தது. ஏங்கிப் போனேன். :-)

ஆரம்பத்தில் அமைதியாக சமையல் மேடையில் அமர்ந்திருந்தார் ராப் மாஸ்டர். பிறகு பயன்பாடு எங்களுக்குப் பிடிபட ஆரம்பித்தது. முன்பெல்லாம் க்ளாட் ராப்பைப் பிரிக்கும் சமயம் அட்டைப் பெட்டியோடு இணைந்திருக்கும் உலோகப் பற்கள் என் கையைப் பதம் பார்க்கும். இந்த உபகரணம் வந்த பிற்பாடு அந்தச் சிரமம் இல்லை. அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாகப் பல வருடங்கள் எங்களோடு இருந்து விட்டுத் திடீரென்று ஓர் நாள் உடைந்து போயிற்று. ;(

மூடியில் இருந்த கம்பிச்சுருளொன்று தெறித்து விலக, கூடவே சின்னதாக ஒரு ப்ளாத்திக்குத் துண்டும் பறந்து போயிற்று. பெட்டியை மூடி வைக்க இயலவில்லை. கிட்டத்தட்ட... வீசியே விட்டேன்.

ராப் மாஸ்டர் இல்லாமல் கை முறிந்தாற் போலிருந்தது. புதிதாக ஒன்று வாங்கலாம் என்று நினைத்தால் விலை! மூன்றுக்கும் முப்பதுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு மனதில் பாரமாக வந்து போயிற்று. பரவாயில்லை, வாங்கிவிடுவோம் என்று நினைத்துப் போனால் எங்குமே காணோம்.

வீசுவதற்கான பொருட்கள் இருந்த பெட்டியில் இருந்து மீண்டும் வெளியே வந்தது டிஸ்பென்சர்.

ஒரு வெள்ளை நாடா, வெள்ளை நிற வெல்க்ரோ, double sided tape, கத்தரிக்கோல்... இத்தனையையும் எடுத்துக் கொண்டு திருத்த வேலையில் ஈடுபட்டேன். படம்... அருகே வர மாட்டேன் என்று அடம் பிடித்து மேலேயே தங்கி விட்டது. படிப்பவர்கள் அட்ஜஸ்ட் ப்ளீஸ். :-)

1. பெட்டியின் நடு வழியாக, பெட்டி முழுவதையும் சுற்றி வெள்ளை நாடாவை ஒட்டினேன். பின் பக்கம் பிணைச்சல் விரிந்து கொடுக்கும் கோட்டை மட்டும் தவிர்த்து, மீதியை double sided tape கொண்டு ஒட்டினேன்.

2. முன்புறம் சின்னதாக ஒரு துண்டு வெள்ளை நிற வெல்க்ரோ இணைத்துவிட்டேன்.

மீண்டும் முன்பு போலவே சமையல் மேடையில் கம்பீரமாக அமர்ந்து கோலோச்சுகிறார் எங்கள் க்லிங் ராப் டிஸ்பென்சர்.

5
Average: 5 (5 votes)

Comments

எப்படியோ திருத்த‌ வேலை திருத்தமாக‌ வந்து கைகொடுத்திருக்கிறது. மாஸ்டர் மீண்டும் மேடையேறி விட்டார். வாழ்த்துக்கள் மாஸ்டருக்கும் மிஸ்ஸுக்கும்.

சில நேரங்களில் நாமா உபயோகப்படாது நு தூக்கிப் போடுற‌ பொருட்கள் தான் பின்னாளில் கைக்கொடுக்கும்.
சில‌ நேரங்களில் அனுபவித்ததுண்டு.

க்லிங் ராப் டிஸ்பென்சர் சர்ஜரி பண்ணி பூரணமா குணமாகலனாலும் 80% உயிர் பிழைச்சு இருக்கார் போலயே :)பல்லாண்டு வாழ‌ வாழ்த்துக்கள்

நல்ல‌ பதிவு :‍)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

என் செல்ல பட்டு இம்மா கைவைத்தால் எல்லாமே சுபம்தான் ,,,அது தெரிந்த விசயமென்றாலும் இந்த மாஸ்டர் புதுசாதான் இருக்கார் எனக்கு ,,,இப்டி ஒண்ணு இருக்குதா எனக்கும் கெடைச்சா நல்லா இருக்கும் கட்டர் கட் பண்ணிடுதே வெரல @@@

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

@ அஸ்வதா
எங்க சொல்லுங்க பார்க்கலாம். இ... மா - இமா. ;)))

‍- இமா க்றிஸ்

//எங்க சொல்லுங்க பார்க்கலாம். இ... மா - இமா. ;)))// ஹாஹா....:)) இ(ம்)மா(ம்) பெரிய சோதனையா? அஸ்.. வரதுக்குள்ள நடையக்கட்டுறேன் :))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

I MM A இம்மா தானே ;)

I M AA தானே இமா??

பேரு வெச்சப்போவே ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிட்டுதே!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா நு சொல்லனும்னா ima nu பேர மாத்துங்க கூகிள் imma = இம்மா இப்டிதான் சொல்லுது

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

//இமா நு சொல்லனும்னா ima nu பேர மாத்துங்க// கர்ர். மாத்த மாட்டேன். நீங்க சொல்லவும் வேணாம். ;)))

நீங்க தப்பா கூகுள்ல தேடினதுக்காக என் பேரை நான் எதுக்கு மாத்தணும்! ;D

இமா... என் பேர்ல பாதி மட்டும்தான் அஸ்வதா. நீங்க முழுசா தேடினா என்னை பேரை மாத்தச் சொல்ல மாட்டீங்க. என்ன பேர்னு கேட்காதீங்க. அழகான பெயர் அது. இங்க நிச்சயம் சொல்ல மாட்டேன்.

//ima nu பேர மாத்துங்க// ஹை! அது கூட இமன்னுல்ல வருது! ;D

பலர் நடுவுல ம் போடுறாங்கன்னுதான் கீழ சிக்னேச்சர் தமிழ்ல போட்டேன். அப்படி இருக்கவும் சிலர் இ'ம்'மா என்றேதான் எழுதுறாங்க. ;)) என் பெயர் தமிழ்ப் பெயர் இல்லை. Emma - எமா போல imma - இமாதான். அட்மின் முன்னால எங்கயோ சொல்லி இருந்தாங்க... ஐடீ ஆங்கிலத்துல இருந்தா பின்னால ஆங்கிலத் தளம் வரப்ப வசதியா இருக்கும் என்று. என் முழுப் பெயர் போட்டா தமிழ்லயோ ஆங்கிலத்துலயோ யாராவது தப்பாக எழுதினால் கவலையா இருக்கும், கூப்பிடுறவங்களுக்கு வசதியா இருக்க வேண்டும் என்றுதான் சுருக்கினேன். முன்னால எல்லாம் எல்லாருமே ஒழுங்காதான் கூப்பிட்டாங்க. இப்ப கொஞ்ச காலமாத்தான் இப்படி ஆகுது. அதனால கமண்ட் கீழ தமிழ்ல பெயர் வர மாதிரியும் போட்டேன். கொஞ்ச நாள் விட்டுப் பார்த்தேன். இனியும் விட்டா புதுசா வரவங்க இம்மாதான் என் பேர்னு நினைச்சுப்பாங்கன்னு பயமா இருக்கு. ;( சொல்லிரலாம்னு முடிவு பண்ணி சொல்லிட்டேன். இனியும் தப்பா கூப்பிட்டா அந்த கமண்ட் எனக்கான த்ரெட்ல இருந்தால் கூட அது எனக்கு இல்லைன்னு எடுத்துட்டு பதில் சொல்லாம விட்டுருவேன். ;D அப்றம் ஏன் பதில் சொல்லலன்னு கேட்கப்படாது யாரும். ;)))

‍- இமா க்றிஸ்

//I MM A இம்மா தானே ;)// இல்ல வனி. மேல அஸ்வதாவுக்கு போட்ட பதில் பாருங்க.

//I M AA தானே இமா??// அதுவும் இமாதான். ஆனா நான் Imaa இல்லை.

//பேரு வெச்சப்போவே ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிட்டுதே!!! ;)// நிச்சயம் ஆகல. என் பெயர் எப்பவுமே சரியாத்தான் இருந்து இருக்கு.

‍- இமா க்றிஸ்

//வாழ்த்துக்கள் மாஸ்டருக்கும் மிஸ்ஸுக்கும்.// & //பல்லாண்டு வாழ‌ வாழ்த்துக்கள்// :-) நன்றி நிகிலா & கனிமொழி.

‍- இமா க்றிஸ்

//கட்டர் கட் பண்ணிடுதே வெரல// ஆமாம், இது கட் பண்ணாது. எனக்கு இதனைப் பிடிப்பதற்கு முக்கியமான காரணங்களில் அதுவும் ஒன்று.

‍- இமா க்றிஸ்

மன்னிக்கணும் இப்போ எல்லாரும் படிச்சவங்க புரிஞ்சிருபாங்க ,,,இனிமே ஒழுங்கா கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன் !!!!என் செல்ல பட்டு @நான் எப்பயும் சரி பார்ப்பேன் ,, நான் அடித்தது சரி ன்னு நெனச்சு அப்படியே போட்டுட்டேன் ,,அதுனால உங்க மனசு கஷ்டம்னா சாரிடா செல்லம் ,,என் அண்ணி க்கு பிறகு உங்களை தான் ரொம்ப பிடிக்கும் ,, நீங்க ரொம்ப சாப்ட் ,,,,அதனால ஒரு பாசம் உங்கமேல வருது ,,,,எங்க அண்ணியும் தான் ,,

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அன்பு இமா,

உங்க‌ பொறுமைக்கு உதாரணம் இது.

விலை வித்தியாசம் - ஆமாம் இமா, ஒரு பொருளைப் பாக்கறப்ப‌, ரொம்ப‌ விலையா இருக்கே, பிறகு பாத்துக்கலாம்னு நினைப்பேன். அந்த‌ 'பிறகு' வர்றப்ப‌, அதே பொருளின் விலை அண்ணாந்து பாக்கற‌ மாதிரி உசந்து, என்னை மலைக்க‌ வைக்கும்.

நமக்குன்னு கிடைக்க வேண்டியது கிடைக்காம‌ இருக்காதுன்னு சமாதானம் பண்ணிக்குவேன். என்ன‌ செய்யறது.

அன்புடன்

சீதாலஷ்மி