சுரைக்காய் அடை

தேதி: September 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

சுரைக்காய் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 6
புழுங்கல் அரிசி - அரை கிலோ
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
கேரட் - ஒன்று
பெரிய வெங்காயம் - 3
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
மிளகாய் வற்றல் - 6
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி
எண்ணெய்


 

சுரைக்காயைத் தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து கொள்ளவும்.
கேரட்டைத் தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையை இரண்டாகக் பிய்த்து வைக்கவும். சோம்பைப் பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசியைப் போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்தெடுத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
க்ரைண்டரில் பொடியாக நறுக்கிய சுரைக்காய், மிளகாய் வற்றல் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு, அத்துடன் ஊற வைத்து எடுத்து வைத்துள்ள அரிசி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் அரைக்கவும். (மாவு கெட்டியாக இருக்க வேண்டும்).
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய கேரட், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், சோம்பு தூள் போடவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
வதக்கியவற்றை மாவுடன் சேர்த்து அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கலந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளலாம்).
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி, காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசைக் கல்லில் அடையாக ஊற்றி, மேலே அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 2 நிமிடங்கள் வேகவிடவும்.
2 நிமிடங்கள் கழித்து திருப்பிப் போட்டு, தேவைப்பட்டால் மேலே சிறிது எண்ணெய் ஊற்றி வேகவிடவும். ஒரு நிமிடம் கழித்து வெந்ததும் எடுக்கவும்.
சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சுரைக்காய் அடை தயார். கெட்டித் தேங்காய் சட்னியுடன் பரிமாறப் பொருத்தமாக இருக்கும்.
அறுசுவை நேயர்களுக்காக இந்தச் சுரைக்காய் அடைக் குறிப்பினை செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு அவர்கள். சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புதுவிதமான சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சுரைக்காய் அடை செய்து காட்டியதிற்கு நன்றி

சுரைக்கா அடை புதுரெசிபி சுரைக்காய் வச்சு அம்மா. அல்வா பொரியல்.புடி போடுவாங்க இது சாப்பிட்டா உடம்புல உள்ள கெட்டநீர் வெளியாகும்னு சொவாங்க ட்thanks

supper ஆன‌ சுவையான‌ அடை. ரொம்ப‌ நல்லா இருக்கு. வித்யாசமான‌ குறிப்பு.

எல்லாம் சில‌ காலம்.....

Intha adai seithen migavum suvaiyaga irunthathu nannri