பருப்புப் பொங்கல்

தேதி: January 18, 2007

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - இரண்டு கோப்பை
சிறு பருப்பு - ஒரு கோப்பை
கடலைப்பருப்பு - கால் கோப்பை
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு துண்டு
மிளகு - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
நெய் - கால் கோப்பை
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி


 

ஒரு பெரிய பாத்திரத்தில் பத்துக் கோப்பை தண்ணீரை அளந்து ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் முதலில் கடலைப்பருப்பை கழுவி போட்டு வேகவிடவும்.
பருப்பு பாதி வேக்காடாகும் பொழுது அரிசியையும் சிறுபருப்பையும் கழுவி போட்டு வேகவிடவும். அடுப்பின் அனலை மிதமாக எரிய விடவும்.
இதற்கிடையில் இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு சீரகத்தை ஒன்றும் பாதியுமாக நசுக்கி வைக்கவும்.
பின்பு அரிசியும், பருப்புகளும் சேர்ந்து நன்கு வெந்தவுடன் இஞ்சி பச்சைமிளகாய் மற்றும் உப்பையும் போட்டு நன்கு கலக்கவும்.
பின்பு அடுப்பில் ஒரு சட்டியை வைத்து எண்ணெயும், நெய்யையும் கலந்து ஊற்றி காயவைக்கவும். பின்பு அதில் நசுக்கிய மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
அதை வெந்த பொங்கலின் மீது கொட்டி நறுக்கிய கொத்தமல்லியையும் தூவி நன்கு கலக்கி விட்டு இறக்கிவிடவும்.
இந்த சுவையான பருப்பு பொங்கலை சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள மனோகரி அக்கா எப்படி இருக்கிறீர்கள் ...இந்த பருப்பு பொங்கல் முன்பு ஒரு முறை செய்தேன் நன்றாக இருந்தது வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள் ....இன்றும் மீண்டும் செய்தேன் சுவை அருமை ரொம்ப நன்றிக்கா

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

ஹல்லோ ஜூலைகா நீங்க எப்படி இருக்கீங்க?வீட்டில் அனைவரும் நலமா?நான் நல்லா இருக்கேன் உங்க விசாரிப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது,உங்களோடு பேசி நீண்ட காலமாகிவிட்டது என்றாலும் நீங்க, மற்றும் நம் அன்பு சகோதரிகள் வாணிரமேஷ், கதிஜா, அஸ்மா, பர்வின்பானு, சாஜுனா, தயாபரன் வஜிதா, இன்னும் ஏராளமான சகோதரிகளுடன், புதியதாக பழகிய அந்த நாட்களை நான் எபோதும் நினைப்பதுண்டு. இந்த நிகழ்வில் உங்களின் பங்களிப்பை காணும் போது ரொம்ப சந்தோசமாய் இருந்தது. பருப்பு பொங்கல் பிடித்திருந்தது இன்னும் சந்தோசத்தை அதிகரிக்கின்றது, பின்னூட்டத்திற்கும் உங்களுடன் பேச வாய்பளித்தமைக்கும் மனமார்ந்த நன்றி.

மனோகரி அக்கா, சுவையான பருப்புப் பொங்கல் செய்தேன். கடலைப் பருப்புக்குப் பதில் துவரம் பருப்புச் சேர்த்தேன். பச்சை மிளகாய் போடவில்லை. தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை, சும்மாவே சாப்பிடலாம் போல் இருந்தது. அருமையான பொங்கல் குறிப்பு

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த குறிப்பை செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி. துவரம் பருப்பை எதில் சேர்த்து செய்தாலும் சுவைதான்.பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.

திருமதி. அதிரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பொங்கலின் படம்

<img src="files/pictures/paruppu_pongal.jpg" alt="picture" />