பொன்விழா அழைப்பிதழ் (மணநாள்) - காகித வேலை - அறுசுவை கைவினை


பொன்விழா அழைப்பிதழ் (மணநாள்)

வியாழன், 13/11/2014 - 13:01
Difficulty level : Easy
3.8
5 votes
Your rating: None

 

 • பொன் நிறத்திலான A4 அட்டைகள்
 • பொன் நிறக் கடதாசி
 • பொன் நிறத்திலான பார்டர் ஸ்டிக்கர்ஸ் (Golden Colour Border Stickers)
 • புகைப்படப் பிரதிகள்
 • சிறிய பொன் நிற மணி (Small Gold Pearls)
 • கார்னர் பஞ்ச் (Corner Punch)
 • ஃப்ளவர் பஞ்ச் (சிறியது) (Small Flower Punch)
 • லீஃப் பஞ்ச் (Leaf Punch)
 • ஸ்கோரர்
 • பென்சில்
 • கத்தி
 • கட்டிங் மாட்
 • கத்தரிக்கோல்
 • செலோடேப்
 • இடுக்கி
 • தட்டையான ஸ்பாஞ்ச் துண்டு
 • ஸ்டிக்கி டாட்ஸ் (Sticky Dots)
 • ஆல்ஃபபெட் எம்போஸிங் ஸ்டென்சில்
 • ஸ்டைலஸ்
 • லைட் பாக்ஸ்
 • அச்சடித்த அழைப்பு
 • பொருத்தமான தபாலுறைகள்

 

முதலில் அனைத்து A4 அட்டைகளையும் சரி பாதியாக வெட்டி, மடிப்பு வரவிருக்கும் இடத்தில் ஸ்கோரரால் அழுத்தி வரையவும். அந்தக் கோட்டின் வழியே அட்டையை இரண்டாக மடித்து மடிப்பின் மேலே ஒரு முறை ஸ்கோரரால் அழுத்திவிடவும். மடித்த அட்டையின் மடிப்பு மேலே இருக்குமாறு வைத்து அதன் வலப் பக்க கீழ் மூலையில் கார்னர் பஞ்ச் கொண்டு அடித்து வைக்கவும்.

அட்டையில் இடது பக்கமும், மடிப்பு ஓரமாகவும் ஒவ்வொரு வரி ஸ்டிக்கர் ஒட்டவும்.

அழைப்பிதழின் அளவில் ஒரு கடதாசியை மடித்து வைத்துக் கொள்ளவும். இங்கு காட்டியுள்ள இலை வடிவம் அட்டையில் எங்கு வர வேண்டும் என்பதைத் தீர்மானித்து வெட்டி நீக்கவும். புகைப்படப் பிரதி ஒன்றை உள்ளே வைத்துப் பார்த்து, ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் இப்போது செய்யலாம். (இதை நேரே அட்டையில் முயற்சி செய்யப் போனால் ஒன்றிரண்டு அட்டைகள் வீணாய்ப் போகும்). திருப்தியாக வந்ததும் முதலில் ஒரு அட்டையில் மட்டும் வெட்டி சரிபார்க்கவும். வரையும் போது நீளமான ஸ்டிக்கர் கோடு இலை வடிவத்தின் மேலே இருக்கிறதா என்பதைக் கவனிக்கவும்.

இந்த முதலாவது அட்டையை மற்றொரு அட்டையின் உள்ளே பொருத்திப் பிடித்து, (பஞ்ச் செய்த மூலைகள் ஒரே பக்கம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு) இலை வடிவத்தை வரைந்து வெட்டிக் கொள்ளவும். வெட்டுவதற்கு க்ராஃப்ட் நைஃப் தான் பொருத்தமாக இருக்கும். அனைத்து அட்டைகளையும் இதே விதமாக வெட்டி தயார் செய்யவும்.

புகைப்படம் ஒன்றை ஒரு அட்டையினுள் பிடித்துப் பார்த்து, இலை வடிவ இடைவெளிக்கேற்ப படத்தைச் சரியாக வெட்டிக் கொள்ளவும். படத்தை இங்கு காட்டியிருப்பது போல அட்டையில் வைத்து டேப் போட்டு ஒட்டிக் கொள்ளவும்.

படத்திலிருந்து வெட்டி நீக்கிய துண்டை அளவாக வைத்து மீதிப் படங்களை வெட்டி வைக்கவும். மீதி அட்டைகளிலும் படத்தை டேப் செய்யலாம்.

ஒரு அட்டைக்கு மூன்று பூக்கள், நான்கு இலைகள் என்னும் விகிதத்தில் அடித்து எடுக்கவும். பூக்களை ஸ்பாஞ்ச் துண்டின் மேல் வைத்து பூவின் மத்தியில் ஸ்டைலஸால் அழுத்திவிட பூக்கள் விரிந்தது போல தெரியும். இலைகளைத் திருப்பி நடு நரம்பை மட்டும் அழுத்திவிடவும்.

தபாலுறைகளிலும் வலப் பக்கக் கீழ் மூலையில் பஞ்ச் செய்யவும். உறைகளைத் திறந்தபடி வைத்து அடித்தால் தவறுகளுக்கு இடமிராது.

எம்போஸ் செய்வதற்கான லைட் பாக்ஸ் இல்லாவிட்டால், பாட்டரி விளக்கு ஒன்றை அதற்கு அளவான, ஒளி ஊடுருவ முடியாத பெட்டியொன்றுள் வைத்து மேலே கண்ணாடி ஒன்றை வைத்தால் போதும். கண்ணாடி மேசை இருக்குமானால் அதற்குக் கீழே டேபிள் லாம்ப் ஒன்றை வைத்துப் பயன்படுத்தலாம்.

ஆல்ஃபபெட் ஸ்டென்சிலை லைட் பாக்ஸின் மேல் திருப்பினாற் போல் வைக்கவும். அதன் மேல் பொன் நிறக் கடதாசியைத் திருப்பிப் போட்டு டேப் செய்து கொண்டால் வேலையின் போது விலகாமலிருக்கும். ஸ்டென்சிலையும் கடதாசியையும் திருப்பிப் போடுவது மிக முக்கியம். இரண்டில் ஒன்று பிழைத்தாலும் எழுத்துகள் கண்ணாடி விம்பம் போல ஆகிவிடும்.

விழாக் காணும் தம்பதியரின் பெயர் முதலெழுத்துக்களை அருகருகே எம்போஸ் செய்து எடுக்கவும். தேவையான பொழுது ஒட்டிய டேப்புகளில் ஏதாவது ஒன்றைப் பிரித்து எம்போஸிங் தகட்டை இடம் மாற்றலாம். ஒவ்வொரு சோடி எழுத்துகளுக்கு நடுவே இடைவெளி விடவும். எழுத்துகளை எம்போஸ் செய்து முடித்ததும் அவற்றை இதய வடிவில் வெட்டி வைக்கவும்.

இந்தப் படிமுறையில் பயன்படுத்துபவை அனைத்தும் மிகச் சிறிய பொருட்களாக இருப்பதால் இடுக்கி ஒன்று அவசியம். ஸ்டிக்கர் கோடுகள் சந்திக்கும் இடத்தில் பூக்களையும் இலைகளையும் ஒட்டி அலங்கரிக்கவும். பூக்களின் நடுவே க்ளூ வைத்து ஒவ்வொரு பொன் நிற மணியை வைத்து காயவிடவும்.

அட்டையின் பஞ்ச் செய்த மூலையில் முதலெழுத்துகள் உள்ள இதய வடிவத் துண்டை ஸ்டிக்கி டாட் கொண்டு ஒட்டிவிடவும்.

அழைப்பை ப்ரிண்ட் செய்து அட்டைக்கு அளவாக வெட்டி மடித்துக் கொள்ளவும். முன் பக்க அட்டையின் உட்பக்கம் மட்டும் சுற்றிலும் சிறிது க்ளூ தடவி ஒட்டவும். இப்போது அழைப்பிதழ் தயார்.

26 / 12 / 2010 அன்று என் பெற்றோர் பொன்விழாக் கண்டிருந்த சமயம் தயாரித்த அழைப்பிதழ் இது. அழைக்கப்பட்டவர்கள் ஃபோட்டோவைப் பிரித்து ஆல்பத்தில் வைத்துக் கொள்ளத்தக்கதாக, படங்களை க்ளூ வைக்காமல் டேப் போட்டிருந்தேன்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..உங்களது குறிப்பு என்

உங்களது குறிப்பு என் அம்மாவிடம் காட்டினேன் அவர்களுக்கு பிடித்தது. செய்து பார்க்கிரேன் என்று சொன்னார்கள்.எனக்கும் பிடித்தது... நானும் வீட்டில் இருக்கும் பொழுது செய்து பார்கிரேன்.

இமா அம்மா,

ரொம்ப‌ அழகா இருக்கு, உங்க‌ ஐடியாவும் அழைப்பிதழ்‍ உம் .

இப்படீ...... நாங்க‌ உங்க‌ அம்மா,அப்பாவ‌ பார்த்தாச்சு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

suuperb work... இந்த மாதிரி

suuperb work... இந்த மாதிரி அழைப்பிதழ் தயாரிக்க உங்களால் மட்டுமே முடியும்....

Imma Amma

Soo cute .creativity super...

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

சுபி மற்றும் அனைவருக்கும்

//ரொம்ப‌ அழகா இருக்கு,// :-) மிக்க நன்றி. //உங்க‌ ஐடியாவும்// என் ஐடியா என்று சொல்ல மாட்டேன். இது ஒரு கூட்டு முயற்சி. கோல்ட் கலர் அட்டைகள், பொருத்தமாகத் தபாலுறைகள் வாங்கி வந்தது க்றிஸ். போட்டோ வைக்கும் யோசனை சின்னமகனது. அழைப்புக்கான வாசகங்கள் (இங்கு தெரியாது) மூத்த மகனும், மருமகளும் என்னோடு உட்கார்ந்து எழுதினார்கள். பிறகு அதை என் சகோதரருக்கு அனுப்பி அவர்கள் அபிப்பிராயமும் கேட்டோம். முதலாவது அழைப்பிதழில் புகைப்படம் கருப்பு வெள்ளையாகத் தான் இருந்தது. வலையுலக நட்பு... சகோதரர் ஜெய்லானியோடு அரட்டையடிக்கும் போது அப்படியே பார்வைக்கு அனுப்பி வைத்தேன். வண்ணப் புகைப்படமாக்கும் யோசனை சொல்லி, வர்ணம் பூசிக் கொடுத்தது அவர்தான். நன்றி ஜெய்லானி. :-)

சின்னதாக இரண்டு மணிகள் (bell) சேர்ந்தாற் போல பிடித்து bow கட்டி வைத்திருந்தேன். அந்தப் பூக்களில் கீழே ஒட்டுவதாக இருந்தது. தபாலுறை கெட்டுவிட்டும் என்று தோன்றியதால் கைவிட்டோம்.

அட்டையின் நிறம் + இரவு நேரங்களில் மட்டும் வேலை... ;( குறிப்பில் படங்களின் அழகு 50% க்கும் குறைவாகத் தான் தெரிகிறது.

//உங்க‌ அம்மா,அப்பாவ‌ பார்த்தாச்சு.// இது 50 வருடத்துப் பழையது. ;) சமீப காலப் படம் முன்பே இங்கு வந்திருக்கிறதே! http://www.arusuvai.com/tamil/node/28918

இமா க்றிஸ்

shabana

:-) //செய்து பார்கிரேன்.// பார்க்க ஆவலாக இருக்கிறேன். மிக்க நன்றி.

இமா க்றிஸ்

ப்ரியா

// உங்களால் மட்டுமே// ;)) சும்மால்லாம் சொல்லப்படாது. மிக்க நன்றி ப்ரியா.

இமா க்றிஸ்

மேஸி

இன்றைய இமாவுக்கு அடிக்கல்லே இவர்கள்தானே! அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்கு இயலாவிட்டால் திறமைகள் இருந்து பயனென்ன!

விழாவுக்கு அடுத்தநாள் செபா சொன்ன வார்த்தைகள் வாழ்க்கையில் மறக்க இயலாதது. தன் திருமணநாள் அன்று இருந்ததை விட பொன்விழா அன்று அதிகம் சந்தோஷமாக இருந்ததாகச் சொன்னார். திருமணத்தின் போது அவரது பெற்றோர் உயிருடன் இல்லை. ஒரு தம்பி மட்டும் இருந்தார். பொன்விழாவன்று மக்கள், மருமக்கள், பேரப் பிள்ளைகள் என்று குடும்பம் பெரிதாகி இருந்தோம். :-)

இமா க்றிஸ்

இமாம்மா

பொன்விழா அழைப்பிதழ் (மணநாள்)

ரொம்ப நுணுக்கமான வேலைபாடுடன் அழகா பொறுமையாக செய்து இருக்கீங்க... சூப்பர் வொர்க்..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி

மிக்க நன்றி கனி. :-)

இமா க்றிஸ்