விறால்மீன் குழம்பு

தேதி: January 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

குளத்து (நன்னீர்) மீன் வகைகளில் விறால் மீன் அபார ருசியானது. இது எல்லாக் காலங்களிலும் கிடைப்பது அரிது. அதிக முள் இல்லாததால், சிறு பிள்ளைகளும் விரும்பிச் சாப்பிடுவர். இதன் ருசியைப் போலவே இந்த மீனின் விலையும் கொஞ்சம் அதிகம்தான்.

 

விறால் மீன் - 4 துண்டு
மாங்காய் - 4 துண்டு
தக்காளி - 1
புளி - சின்ன எலுமிச்சை அளவு
தேங்காய்த் துருவல் - கால் கப்
குழம்பு மிளகாய் தூள் - 2 1/2 மேசைக்கரண்டி
கல் உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

வெங்காயம், தக்காளி இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் துருவிய தேங்காயை போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து அரைத்து, விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை எடுத்துக் கொண்டு, இரண்டரைக் கப் தண்ணீர் ஊற்றி கரைக்கவும். கரைத்த புளித்தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
புளித்தண்ணீர் கொதிக்கும்போது அதில் மிளகாய் தூள். உப்பு போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
ஒரு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வெடிக்கவிடவும். பிறகு நறுக்கின வெங்காயத்தை போட்டு 30 நொடி வதக்கவும்.
வாணலியில் வதக்கியவற்றை எடுத்து கொதிக்கும் குழம்பில் போட்டு கிளறி விடவும்.
சுமார் 2 நிமிடம் கழித்து நறுக்கி வைத்துள்ள மீன் துண்டுகளை எடுத்து குழம்பில் போடவும்.
அதன்பின்னர் 3 நிமிடம் கழித்து நறுக்கின மாங்காய், தக்காளித் துண்டுகளை போட்டு கொதிக்க விடவும்.
சுமார் 6 நிமிடம் கழித்து அரைத்த தேங்காய் விழுதை அத்துடன் சேர்க்கவும்.
தேங்காய் விழுது சேர்த்து, மேலும் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடவும்.
இப்போது சுவையான விறால்மீன் குழம்பு தயார். காரம், புளிப்பினை அவரவர் விருப்பத்திற்கு குறைத்தோ, கூட்டியோ கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்