சின்னச் சின்ன டிப்ஸ் - 2 (பிரியாணி)

பிரியாணி செய்யுறது பலருக்கு சரியா வரதில்லைன்னு சொல்றோம். எனக்கும் ஆரம்பத்தில் பெரிய சிக்கலான விஷயமா தான் இருந்தது. ஆனா வாரம் ஒருமுறை அல்லது குறைந்தது 15 நாளுக்கு ஒரு முறை பிரியாணி செய்யும் போது பக்குவம் தானா வந்துடுச்சு. ”ப்ராக்டிஸ் மேக்ஸ் பெர்ஃபக்ட்” ;) அப்படி என்ன பெரிய விஷயம் பிரியாணி பண்றது?? ஒன்னுமே இல்லைங்க... ரொம்ப ரொம்ப சுலபம் தான். சின்ன சின்ன விஷயங்களை கவனிச்சா போதும், உங்க பிரியாணியும் சம ஹிட் ஆகும். கீழ இருக்க டிப்ஸ் ட்ரை பண்ணிப்பாருங்க, என்ன சந்தேகம் வந்தாலும் தயங்காம கேளுங்க, நானும் எக்ஸ்பர்ட் இல்லைங்க, இப்பவும் பலர் வீட்டு பிரியாணி என்னை விட சூப்பர்னு கத்துக்க விரும்புறது தான்.... ஆனாலும் கட்டாயம் எனக்கு தெரிஞ்ச அளவில் உதவ காத்திருக்கேன். அட்லீஸ்ட் சுவையில் இல்லன்னாலும் பக்குவத்தில் நிச்சயம் பெர்ஃபக்‌ஷன் கொண்டு வர நான் உதவுவேன்.

1. பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்க்கணும். சுவை நன்றாக இருக்கும்.

2. அரிசியை கையால் பிசைந்து கழுவ கூடாது, அரிசி உடைந்து பிரியாணி குழையும். விரலால் அலசி கழுவணும். பாசுமதி வாசம் பிடிக்கிறவங்க, அதிகமா அரிசியை கழுவ கூடாது. இரண்டு முறை தண்ணீர் மாற்றி கழுவி 15 நிமிடம் ஊற வைங்க.

3. அரிசி மோட்டா டைப்பா இருந்தா நீரில் ஊற வைங்க, ரொம்ப மெல்லிய அரிசியா இருந்தா நீரை வடிச்சுட்டு ஈரமான அரிசியை அப்படியே வைங்க 15 நிமிஷம். அதுவே போதும், நீரோட ஊற வைக்க தேவை இல்லை.

4. அரிசி அதிகம் ஊறினாலும் உங்க பிரியாணி குழைந்து போகும். நினைவில் வைத்து பிரியாணி செய்ய ஆரம்பிக்கும் போது ஊற வைங்க போதும்.

5. வெங்காயம், தக்காளி எல்லாமே நல்லா வதங்கணும் பிரியாணிக்கு. அரைகுறையா வதக்க கூடாது.

6. சிக்கன் சேர்ப்பதா இருந்தா நீர் சேர்க்காமல் வேக விடுங்க மூடி போட்டு. சிக்கனில் இருந்து வரும் நீரே போதுமானது.

7. மட்டன் சேர்ப்பதா இருந்தா மட்டன் வேக வெச்சு தனியா அந்த நீரை வடிச்சு எடுத்து வெச்சுக்கங்க. மட்டனை மசாலாவோடு சேர்த்து பிரட்டி விட்ட பின் மட்டன் வேக வைத்த நீர், கூட தேவையான நீர் எல்லாம் சேர்த்து கொதிக்க விடுங்க. மட்டன் வேக வெச்ச நீர் சுவையை அதிகப்படுத்தும்.

8. சிக்கன் பிரியாணியோ மட்டன் பிரியாணியோ... கறியில் உள்ள கொழுப்பை கவனிங்க சமைக்கும் முன். எவ்வளவு கொழுப்பு இருக்கோ அவ்வளவுக்கு எண்ணெய் விடும். அதுக்கு ஏற்ப உங்க எண்ணெய் அளவை முடிவு பண்ணுங்க. அதிகமான எண்ணெய் கூட பிரியாணி சுவையை கெடுத்துடும், திகட்டும்.

9. சிக்கனோ மட்டனோ... எலும்போடு இருப்பது தான் பிரியாணிக்கு சுவையான கறி. எலும்பில்லாதது அத்தனை சுவை சேர்க்காது. நிச்சயம் நல்ல கறி தான் நல்ல பிரியாணியை தரும்.

10. எந்த கறியா இருந்தாலும் பிரியாணி செய்யும் முன் ஒரு 1/2 மணி நேரம் ஊற விடுங்க. நிச்சயமா பிரியாணியோட சேர்த்து சாப்பிடும் போது கறி மட்டும் சுவையில்லாம இருந்தா நல்லா இருக்காது தானே? அதிலும் சுவை சேர்க்கணும்னா கொஞ்சம் ஊறுவது நல்லது. கறி மிருதுவா இருக்க தயிர், உப்பு, சர்க்கரை (1/2 தேக்கரண்டி போதும்) சேர்த்து ஊற வைக்கலாம்னு எப்பவோ யாரோ சொன்னாங்க. நான் சிக்கனுக்கு அதிகமா இதை ஃபாலோ பண்ணுவேன். ட்ரை பண்ணிப்பாருங்க.

11. இஞ்சி பூண்டு ஜீரணத்துக்கு மட்டுமில்லைங்க, அசைவத்தில் வாசமும் நல்லா இருக்க உதவுவது. கடையில் வாங்கின இஞ்சி பூண்டு விழுது இந்த வாசத்தை தராதுங்க. எந்த அளவு இஞ்சி எடுக்கறீங்களோ, அந்த அளவு பூண்டை எடுத்து ஃப்ரெஷா தட்டி போடுங்க. நல்ல வாசம் தரும். நான் பூண்டு எப்பவும் தோலோடு சேர்ப்பேன் வீட்டுக்கு அரைக்கும் போது. நீங்க தோல் இல்லாம சேர்ப்பதா இருந்தாலும் சேர்க்கலாம். மத்தில் கூட தட்டி போடலாம், மைய்யா அரைக்கணும்னு அவசியமே இல்லை.

12. நான் பயன்படுத்தும் கரம் மசாலா காம்பினேஷன்: 1 சின்ன பிரியாணி இலை, 1 கிராம்பு, 1 துண்டு பட்டை, 1 பச்சை ஏலக்காய், 1/2 கறுப்பு ஏலக்காய், 1/4 துண்டு ஜாதிக்காய், ஒரு சிட்டிகை சோம்பு, 1/4 துண்டு நட்சத்திர மொக்கு, 1/4 துண்டு ஜாதிபத்திரி. இதை லேசான தீயில் வைத்து வறுத்து எடுத்து கையால் பொடி செய்து பயன்படுத்துங்க. இதையும் அரைச்சு ஸ்டோர் பண்ணிக்காதீங்க, ஃப்ரெஷா பொடிக்குறது தான் வாசம்.

13. நீர் அளவு பாசுமதின்னா 1 கப் அரிசிக்கு 1 1/4 கப் முதல் 1 3/4 கப் வரை ஊற்றலாம். சராசரியா 1 1/2 கப் நீர் சரியா இருக்கும். இதுவும் சிக்கன், மட்டன் பிரியாணிக்கு மாறும். சிக்கன் என்றால் அதுவே நீர் விடுவதாயிற்றே. அதனால் கொஞ்சம் நீர் கம்மி பண்ணலாம். நாம ஊற்றும் தயிர், கறி விட்ட நீர் எல்லாம் கணக்கில் எடுக்கணும்.

14. உண்மையில் நீர் கொஞ்சம் குறைவா இருந்தா கூட முக்கால் பதம் வெந்ததும் கண்டு பிடிச்சுடலாம். அப்போ கொதி நீர் சிறிது பரவலா சேர்த்து தம்மில் வேக விடலாம். அதிகமா போனாலும் தீயை கொஞ்சம் கூட்டி வெச்சு வேகமா நீர் வத்தி போக விடலாம். அப்பறம் தம்மில் போடலாம். ஆனா இதெல்லாம் சொதப்ப வாய்ப்பிருக்கு. முதல் முறை இப்படி செய்து உங்க அரிசிக்கு எவ்வளவு நீர் விட்டா சரியா வரும்னு தெரிஞ்சுக்கிட்டு அடுத்த அடுத்த முறை அதை சரியா செய்யுங்க.

15. அரிசி போடும் முன் உப்புமா மாதிரி நீர் நல்லா கொதிக்கணும். இதுவும் அரிசி பதமா வேக அவசியம்.

16. கொதிக்குற நீரில் அரிசியை போட்டு ஒரே ஒரு முறை கலந்து விடுங்க. கறியோட பிரியாணி நல்லா கலந்ததும், மறுபடி கொதிக்க விடுங்க. கொதிக்க துவங்கினதும் தீயை மிதமா வெச்சு மூடிவிடுங்க.

17. கலக்க எப்பவும் முனை நேரா இருக்க கரண்டி பயன்படுத்துங்க. சாதம் போடுற கரண்டி போல. குழியானது போட்டு கலந்தா பிரியாணி குழையும். கிளறுவதும் எப்பவும் பாத்திரத்தின் ஓரத்தில் இருந்து ரொம்ப பக்குவமா கிளறிவிடணும். நடுவில் விட்டு கொடைஞ்சா குழைந்து போகும்.

18. நல்லா கவனிங்க... கொதி நீரில் அரிசி சேர்த்து ஒரே ஒரு முறை கலந்து விடுவதோடு போதும், அதன் பின் முழுவதும் வேகும் வரை கரண்டி போடாதீங்க. அரிசியை அடிக்கடி கலந்தால் கஞ்சி வெளியாகும், பிரியாணி குழைந்து போகும். இந்த தப்பு தான் காமனா நிறைய பேர் பண்றது.

19. முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடுங்க. முக்கால் பதம் வெந்ததும் மேலே சாதம் தெரியும் , நீர் தெரியாது. கலந்து விடாதீங்க. நீர் குறைவுன்னு தோணினாலும் தம்மில் போடும் போது அந்த ஆவி உள்ளுக்குள் இருந்து நீராவியா வேக வைக்கும் என்பதை நினைவில் வைங்க. கரம் மசாலா சேர்ப்பதை இப்போ சேர்க்கலாம். எலுமிச்சை இந்த நிலையில் பிழிந்தாலும் சரி, அல்லது கடைசியா பிழிந்தாலும் சரி தான்.

20. தம் போடும் முறை நிறைய இருக்கு. அவனில் போடுறாங்க, அடுப்பிலேயே தோசை கல் வெச்சு போடுறாங்க, எதுவும் இல்லாம ரொம்ப பொடி தீயில் நேராவே கூட வைக்கிறாங்க. எதை செய்வதானாலும் நீங்க பிரியாணி பண்ற பாத்திரம் அடி கனமான பாத்திரமா இருந்தா நல்லது. அது தான் தீயாமல் பிரியாணி நல்லா தம் போட வரும். மேலே ஆவி போகாமல் மூட வசதியா மூடி இருக்கணும். அலுமினியம் ஃபாயில் போட்டு பாத்திரத்தை மூடிட்டு மூடி போடலாம், அல்லது மாவு பிசைந்து தட்டையும் பாத்திரத்தின் ஓரத்தையும் சேர்த்து மூடலாம், அல்லது தட்டு மேல கல்லு வைக்கலாம். இதெல்லாம் ஆவி
வெளிய போகாம தம்மில் போடும் முறை.

21. பிரியாணிக்கு தக்காளி வதக்கும் போது, கறி வேகும் போதுன்னு எல்லா நிலையிலும் மூடி போட்டு வதக்குங்க, வேக விடுங்க. வாசம் நல்லா இருக்கும், தக்காளி எல்லாம் நல்லா குழைந்து வேகும்.

22. வெங்காயம் வதக்க, தக்காளி வதக்கன்னு எல்லா ஸ்டேஜுலையும் அந்த அந்த பொருளுக்கு ஏற்ப உப்பு சேர்த்து வதக்குங்க. அது சீக்கிரம் வதக்க மட்டுமில்ல, அந்த அந்த பொருளில் உப்பு சேர்ந்து சுவையை கூட்டவும் உதவும்.

23. கொத்தமல்லி புதினா எல்லாம் ரொம்ப அரைக்காம, பொடியா நறுக்கி போடுறது வாசம் நல்லா இருக்க உதவும். சிலருக்கு இதன் வாசம் கறியிலும் இருந்தால் பிடிக்கும், அப்படி நினைக்கிறவங்க கறி சேர்க்கும் முன்னே கூட புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கலாம்.

24. பிரியாணி எப்பவுமே சாப்பிட 2 மணி நேரம் முன்பே செய்துட்டா சுவை ரொம்ப நல்லா இருக்கும். பார்ட்டிக்கு எல்லாம் மதியமே பிரியாணி பண்ணி 3/4 பதம் வெந்ததும் அடுப்பை விட்டு எடுத்து அலுமினியம் ஷீட் போட்டு டைட்டா மூடி வெச்சுடுவேன். மாலை பரிமாற 1/2 மணி நேரம் முன் எடுத்து சிறு தீயில் 10 நிமிடம் வைத்து எடுத்து கிளறுவேன். பதமா வெந்து மசாலா கறியில் நல்லா ஊறி சுவையா இருக்கும் பிரியாணி. வீட்டிலும் இது போலவே சீக்கிரமா செய்து ஊற விட்டுட்டா டேஸ்ட் நிச்சயம் நல்லா இருக்கும். எலுமிச்சை சாதம், புளி சாதம் எல்லாம் கிளறி கொஞ்ச நேரம் வெச்சிருந்தா எப்படி சாதத்தில் அதன் சுவை கூடுதோ, அப்படி தான் பிரியாணியும்.

குக்கரில் நான் இதுவரை விசில் வைத்ததில்லை. கொதிக்கும் நீரில் அரிசி போட்டு கொதி வந்ததும் மூடி ஒரு விசில் கூட விடாம அப்படியே சிம்மில் 15 நிமிடம் வைப்பேன், நல்லா வரும். ஆனாலும் பிரியாணி குக்கரில் செய்வதை விட அடி கனமான பாத்திரத்தில் அடுப்பில் சமைப்பதே எனக்கு பிடிச்ச முறை. என்னவோ பிரியாணி என் கண்ட்ரோலில் இருப்பது போல ஒரு உணர்வு ;)

நம்ம அறுசுவையில் வித விதமான பிரியாணி குறிப்பு வருது. பலருக்கும் குழப்பம் இருக்கும், எல்லாத்துலையும் அதே சிக்கன், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தயிர், மசாலா வகை தானே இருக்கு, என்ன வித்தியாசம்னு... ஆனா ஒவ்வொரு வகைக்கும் சுவையில் நிறைய வித்தியாசம் இருக்கும், அதை சுவைத்து பார்த்தா உங்களுக்கே நல்லா புரியும்.

1. பிரியாணியில் வெங்காயம் அரைத்து சேர்ப்பதுக்கும், நறுக்கி சேர்ப்பதுக்கும் சுவை மனம் வேறுபடும். சின்ன வெங்காயம் அரைத்து சேர்த்தால் அது வேறு விதமான சுவையையும் மனத்தையும் தரும்.

2. புதினா கொத்தமல்லி சேர்த்தா ஒரு வாசம், சேர்க்கலன்னா வேறு விதம். நான் கறிவேப்பிலை கூட சேர்ப்பது உண்டு ஒரு வகை பிரியாணிக்கு. முக்கியமா வெஜிடபிள் பிரியாணிக்கு அது நல்ல வாசம்.

3. காரத்துக்கு மிளகாய் தூள் / பச்சை மிளகாய் / நறுக்கி தாளிப்பது / அரைத்து வதக்குவது ஒவ்வொன்றும் ஒரு வகை.

4. புளிப்புக்கு எலுமிச்சை / தயிர் / தக்காளி - ஒவ்வொன்றும் ஒரு வகை. இவற்றின் காம்பினேஷன் ஒரு வகை.

5. தாளிக்க முதலில் மசாலா பொருட்கள் சேர்ப்பது ஒரு வாசம், இஞ்சி பூண்டு முதலில் சேர்த்தால் ஒரு வாசம், வெங்காயம் முதலில் சேர்த்தால் ஒரு வாசம், புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கினா ஒரு வாசம்... இப்படி எண்ணெயில் முதலில் சேர்க்கும் பொருளே வாசத்தை மாற்றிவிடும்.

6. எண்ணெய் / நெய் - இதிலும் சுவை, வாசம் மாறுபடும். நெய்யை தாளிக்க பயன்படுத்துறதுக்கும், கடைசியில் சிறிது நெய் சேர்ப்பதுக்கும் கூட வித்தியாசம் இருக்கு தெரியுமா?

7. சிக்கன் எலும்போடு போட்டால் ஒரு சுவை, எலும்பில்லாமல் போட்டால் ஒரு சுவை. எலும்போடு இருப்பதே மிகுந்த சுவை தரும்.

8. தேங்காய் கசகசா முந்திரி சேர்த்து அரைப்பது ஒரு காம்பினேஷன். தேங்காய் மட்டுமே அரைப்பது ஒரு வகை. தேங்காய் பாலாக சேர்ப்பது ஒரு வகை. அந்த தேங்காய் பால் கூட ரெடிமேடுக்கும், வீட்டில் எடுத்ததுக்கும் எவ்வளவு வித்தியாசம்!!

9. மசாலா அரைக்கும் போதே பச்சை மிளகாய் / காய்ந்த மிளகாய் அரைத்து சேர்த்தால் அது ஒரு வகை.

10. கரம் மசாலாவை முதலில் சேர்த்து வதக்கினா ஒரு வாசம், கடைசியா தூவி தம்மில் போட்டால் ஒரு வாசம். பிரியாணிக்கு கரம் மசாலா கடைசியா சேர்ப்பது தான் எனக்கு பிடிச்ச முறை.

11. நட்ஸ் எல்லாம் வறுத்து சேர்த்தால் ஒரு சுவை / அவை இல்லாமல் செய்தால் ஒரு சுவை / சிலர் பைனாப்பிள் கூட சேர்ப்பாங்க பிரியாணியில் அது ஒரு சுவை. எனக்கு ஆனா நட்ஸ் சேர்க்கும் முறை பிடித்தமில்லை. முஹல் டைப் பிரியாணியில் நட்ஸ் நிறைய இருக்கும். ரிச்சான உணவு.

12. கறியுடன் உருளை சேர்த்தால் வாசமும் சுவையும் மாறுபடும்.

13. கறி தனியா அரிசி தனியா சமைச்சு லேயர் லேயரா தம் போடுவாங்க. இது ஒரு வகை பிரியாணி.

14. அரிசியை நெய்யில் அல்லது எண்ணெயில் லேசா வதக்கிட்டு அப்பறம் சமைப்பாங்க பிரியாணி, ஒன்னோடு ஒன்னு ஒட்டாம வரவும் இது நல்ல முறை. இப்படி செய்யும் போது சுவை வித்தியாசமா இருக்கும்.

15. புலாவுக்கும் பிரியாணிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. முக்கியமா மசாலா. பிரியாணி கொஞ்சம் ஹெவி மசாலா, புலாவ் ரொம்பவே மைல்டா இருக்கும். லேயர் லேயரா தம் போடுறதும் பிரியாணிக்கே உள்ள தனித்துவம். தம் போடுறதே தனித்துவம்னு சொல்லலாம்.

பிரியாணி வகைகளும், மாறுபாடும்:

16. அவாதி பிரியாணி ஏறக்குறைய முஹல் பிரியாணி போல தான். முஹல் பிரியாணி நட்ஸ் எல்லாம் சேர்த்து, லேயர் லேயரா தம் போடும் முறை. அவாதி பிரியாணியில் நெய் அதிகம் இருக்கும். அரிசியை கூட நெய்யில் வறுத்து பின் கறி சமைத்த மசாலாவில் வேக வைத்து பின் கறியையும் சாதத்தையும் லேயர் லேயரா தம் போடுவாங்க. முக்கியமா மட்டன் இந்த முறையில் நல்ல சுவையா இருக்கும். மட்டன் வேக வெச்ச நீரில் அரிசியை சமைத்து, அதன் பின் கறி மசாலா கலவையை வைத்து லேயரா தம் போடுவாங்க.

17. ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி எல்லாம் நம்ம ஊர் ஸ்பெஷல். இவங்க யாரும் லேயரா போடுறதில்லைன்னு சொல்ல முடியாது. ஆம்பூர் பிரியாணியும் சிலர் லேயரா போடுறாங்க. செட்டிநாடு பிரியாணியில் ஸ்பெஷல் தேங்காய் பால் சேர்ப்பது.

18. திண்டுக்கல் / தலப்பாக்கட்டி பிரியாணியில் ஸ்பெஷல்னு சொல்லணும்னு ஜீரக சம்பா அரிசி தான். பாசுமதியை விட ஜீரக சம்பா சுவையும் வாசமும் தனி தான். ஆனா நீர் அதிகமா தேவைப்படும் பாசுமதியை விட. எலுமிச்சை, தயிர் சேர்ப்பது இதுல ஸ்பெஷல்.

19. ஹைதராபாத் பிரியாணி பச்சை மிளகாய் ஸ்பெஷல். அதை விட ஸ்பெஷல் தம் போடும் முறை. கறி அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதை மாவு கொண்டு மூடி தம்மில் வைப்பாங்க. அந்த கங்கு சூட்டில் சாதம் தம்மில் இருப்பது தான் ஹைதராபாத் பிரியாணியின் ஸ்பெஷல் வாசம், சுவைக்கு காரணம்.

20. தலச்சேரி பிரியாணி, மலபார் ஸ்டைல். இதில் பயன்படுத்துவது சின்ன வகை அரிசி. நம்ம ஊர் ஜீரக சம்பா போல. தம் போடும் போது தட்டை மூடி மேலயும் சூடான கறி துண்டு வைத்து தம் போடுவாங்க.

21. வாணியம்பாடி பிரியாணி ஆல்மோஸ்ட் ஆம்பூர் பிரியாணி போல தான், ஆனால் ஆம்பூர் பிரியாணி சுவை கூட இருக்குறதா தோணும். ஆர்காட் நவாபுகள் அறிமுகப்படுத்தியவை.

22. சிந்தி பிரியாணி பாகிஸ்தானி ஸ்டைல்.

சில வகை பிரியாணியில் முஹல் போன்றவற்றில் வெங்காயத்தை நிளவாட்டில் நறுக்கி நெய்யில் அல்லது எண்ணெயில் சிவக்க வறுத்து எடுத்து பிரியாணியில் தூவுவாங்க. கொஞ்சம் இனிப்பான சுவை தரும். இப்படி பிரியாணி ஒவ்வொன்னு ஒவ்வொறு வகையில் சிறப்பானவை. எல்லா வகையும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. ஆம்பூர் பிரியாணி பிடிக்கிறவங்களுக்கு செட்டிநாட்டு பிரியாணி சுவையா தெரியாம போகலாம். நான் இங்க சொல்லி இருக்குறது ஓரளவு பிரபலமான சில பிரியாணி வகைகளை மட்டுமே. இன்னும் எத்தனையோ வகையான பிரியாணி இருக்குங்க.

செய்து பார்த்தா உங்களுக்கு ஒவ்வொன்னும் ஒரு சுவையா தெரியும் :)

பிரியாணி எந்த நாட்டில் இருந்து வந்ததோ... அதுக்கு ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லி, எங்க நாடு தான் பிரியாணிக்கு தாய் வீடுன்னு சொல்வாங்க. அது எந்த நாட்டில் இருந்து வந்தாலும் நம்ம வீட்டில் செய்து பரிமாறும் போது நம்ம ஊர் பெண்களுக்கே உள்ள அதீத அன்பும், பொறுமையும் கலந்து சுவையான உணவா அமையும். எனக்கு பிடிச்ச விஷயம்.. “Don't practice until you get it right. Practice until you can't get it wrong." அதனால் விடாம ட்ரை பண்ணுங்க... பிரியாணி எப்பவுமே சூப்பரா வரும் என்ற நிலைவரை. ஆல் தி பெஸ்ட். ;)

5
Average: 4.6 (14 votes)

Comments

அன்பு வனி,

நிஜமாகவே ஒரு தீஸிஸ் லெவல்ல‌ ஆராய்ச்சி பண்ணி, சப்மிட் பண்ணியிருக்கீங்க‌. சூப்பரோ சூப்பர்.

நான் செய்யறதை பிரியாணின்னு சொல்றதை விட‌ வெஜிடபிள் பாத் அப்படின்னும் சொல்லிக்கலாம்.:):)

குக்கரில் ரீஃபைன்ட் ஆயில் ஊற்றி, ஏலக்காய் பொடி, ஜாதிபத்திரி, ஜாதிக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு,(இதில் எதுவெல்லாம் அவெலய்ப்ளோ அது மட்டும்)பொரிய‌ விட்டு, அப்புறம் வெங்காயம் வதக்குவேன். அதுக்கப்புறம் நறுக்கிய‌ காய்கறிகளைப் போட்டு வதக்கிட்டு, கடைசியில்தான் தக்காளியும் உப்பும் சேர்த்து வதக்குவேன். இதிலேயே அரிசியைப் போட்டுக் கிளறிட்டு, பிறகு தயிரும் கரம் மசாலாவும் சேர்த்துக் கிளறி, ஒன்றுக்கு இரண்டரை என்ற‌ அளவில் தண்ணீர் ஊற்றி, 3 விசில் வர‌ விடுவேன். கரெக்டாக‌ வெந்திருக்கும்.

ப்ரெட் ஸ்லைஸ்களை சப்பாத்திக் கல்லில் நெய் விட்டு டோஸ்ட் பண்ணி, அதை சின்னச் சின்ன‌ சதுரங்களாக‌ கட் செய்து, பிரியாணியில் சேர்த்துக் கிளறி விடுவேன்.

காய்களைப் பொறுத்த‌ மட்டில் வெங்காயம் நீளமாக‌ நறுக்கணும். காரட், உருளைக் கிழங்கு, முள்ளங்கி இதெல்லாம் தோல் சீவி, பொடியாகத் துருவி, சேர்ப்பேன்.

அரிசி அளவில் நாலில் ஒரு பங்கு காய் சேர்த்தால் போதும் என்று ஒரு குறிப்பில் படிச்சேன். ஆனா நான் செய்வதில் அரிசி ஒரு கப் என்றால் நறுக்கிய‌ காய்கள் நாலு கப் அளவுக்குக் கொஞ்சம் கூடவே இருக்கும்.

1 பெரிய‌ வெங்காயம், 2 தக்காளி, 3 காரட், 10 பீன்ஸ், அரை கப் பட்டாணி, பட்டர் பீன்ஸ், கொஞ்சம் காலிஃப்ளவர், கொஞ்சம் குடை மிளகாய் இதெல்லாம் நறுக்கி சேர்த்தாலே 4 கப் காய் ஆகிடும்.

அறுசுவை குறிப்புகளில் மாலதியின் செட்டி நாடு மட்டன் பிரியாணி பத்தி, நீங்களும் லாவியும் அடிக்கடி சொல்வீங்க‌ இல்லையா, அதனால‌ அந்தக் குறிப்பைப் பாத்தேன்.

இருங்க‌ இருங்க‌ அப்படியே ஷாக் ஆகிடாதீங்க‌.

மட்டனுக்கு பதிலாக‌ காய்கள் சேர்த்தேன். மத்தபடி அதில் அவங்க‌ சொல்லியிருக்கற‌ மாதிரியே, தேங்காய்ப் பாலில் முந்திரிப்பருப்பு, இஞ்சி, பாதாம் எல்லாம் சேர்த்து அரைத்து, தேங்காய்ப் பால் எடுத்து, வேக‌ வைத்து, செய்தேன்.

மதியம் சாப்பிட்டப்ப‌, வீட்ல‌ எல்லோரும் டேஸ்ட்ல‌ அப்படியொண்ணும் பெரிய‌ வித்தியாசம் தெரியலையேன்னாங்க‌.

ஆனா, அதே பிரியாணியை திரும்பவும் ராத்திரி சாப்பிட்டப்ப‌, மசாலா நன்றாக‌ ஊறி, செம‌ செம‌ டேஸ்ட் ஆக‌ இருந்தது.

பிரியாணி செய்தால், கொஞ்சம் சீக்கிரமே செய்து வைத்தால்தான் மசாலாவில் ஊறி, டேஸ்ட் ரொம்ப‌ நல்லா இருக்கும்னு புரிஞ்சுது.

தோழிகளுக்காக‌ கீழே லிங்க் கொடுத்திருக்கேன்.

அவங்க‌ ரைஸ் குக்கரில் செய்யும் முறையும் பின்னூட்டத்தில் சொல்லியிருக்காங்க‌.

http://www.arusuvai.com/tamil/node/6967

இதே போல‌ இன்னும் டிப்ஸ் நிறையக் கொடுங்க‌ வனி. பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஏ.....யப்பா எப்படிதான் இவ்வளவும் பொறுமையா உக்காந்து டைப் பண்ணீங்களோப்பா? சூப்பர் போங்க‌..

அத்தனையும் பயனுள்ள‌ டிப்ஸ்..பா. நானும் ஆரம்பத்துல‌ பிரியாணி 'பொங்கல்' பண்ணியிருக்கேன். அப்புறம் செய்து செய்து பார்த்து இப்பொ ஒவ்வொரு தடவை பண்ணும்போதும் நல்லாவே வருது.
பிரியாணிக்கு வெங்காயம் நல்ல‌ ப்ரவுனா வதங்கினா டேஸ்ட் நல்லா இருக்குமாம்.அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேக்கும்போது அடி பிடிக்காதுன்னு ஒரு செஃப் சொன்னாரு. நான் அப்படிதான் செய்வேன் பா.
ஒரு சில‌ பாயிண்ட்ஸ் நீங்க‌ சொன்னது மாதிரியேதான் நானும் பண்றேன்.ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் உப்பு சேக்கறது, மூடி வச்சு வதங்க‌ விடறதுன்னு.ஆனா நான் குக்கர்லதான் விசில் விடாம‌ செய்றேன்.பாத்திரத்தில் செய்ய‌ ஆசை..ஆனா பயமா இருக்கு.இனிமே ட்ரை பண்ணலாம்னு நெனைச்சிருக்கேங்க‌.

ரொம்ப‌ நன்றி..நிச்சயமா எல்லாருக்கும் பயன்படக்கூடிய‌ குறிப்புகள்.புக்மார்க் பண்ணிட்டேன்..பா.

கவிதாசிவகுமார்.

anbe sivam

romba thanks எனக்கு பிரியாணி சரியாக வராது இனிமேல் நல்ல try pannaren. arusuvakku Nan புதுசு .

by
Sundari

Hi vanitha mam excellent .. Enoda biriyani pongal mathri aaiduthu... Inimey i wil fellow ur tips... This is the best topic... I have one doubt... Ena masala use pannanum? I use biriyani masala n karam masala and chilli powder... Turmeric powder.... Pls srikama pathil solunga... Thanks ... Sorry tamila kandipa type panren... Enku tamila tupe pana kastama uruku... I wil try next time

மிக்க நன்றி :) நலமா? எப்பவாது இப்படி வந்து எட்டி பார்க்குறது ;) நீங்க சொல்ற மாதிரி இந்த கலவை சாதங்கள் போல பிரியாணியும் செய்து வெச்சு ஊறினா தான் சுவைன்னு நானும் நினைப்பேன். அழகான விளக்கம் சைவ பிரியாணிக்கு, இதை பிரியாணின்னு சொல்லாம பாத்துன்னு நாங்க சொல்ல மாட்டோம் சீதா 3:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) உங்களையும் பார்த்து ரொம்ப காலமாகுதே... நலமா? ஆமாம் வெங்காயம் தக்காளி எல்லாம் நல்லா வதங்கணும் பிரியாணிக்கு அப்ப தான் சுவையும் இருக்கும். இஞ்சி பூண்டு நான் எப்பவும் ஃப்ரெஷா தட்டி தானே போடுவேன், அதனால் அடி பிடிக்காது எப்பவுமே. ஒரு முறை குக்கர் இல்லாம ட்ரை பண்ணிப்பாருங்க, உங்களுக்கு ஒத்துவருதான்னு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசியம் செய்து பார்த்து சரியா வந்துச்சான்னு சொல்லணும் சுந்தரி :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) மசாலான்னு நான் எதுவும் பயன்படுத்துறது இல்ல ப்ரித்தி. எப்பவும் வீட்டு பொடிகள் தான். கரம் மசாலா செய்முறை மேலவே கொடுத்திருக்கேன் பாருங்க. கூட பச்சை மிளகாய், வெறும் மிளகாய் தூள் தான். குறிப்பில் பிரியாணி மசாலா போட சொன்னா போடலாம். உங்க குறிப்பை பொருத்தது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரியாணிக்கு அரிசி, தண்ணீர் எல்லாம் சேர்த்து அதில் கொஞ்சம் பட்டர் சேர்க்கலாம் இறக்கியவுடன் ஒரு மேஜைக்கரண்டி நெய்விட்டு இறக்கலாம்.
நன்றி.

புதிதாக இணைந்திருக்கீங்க... இன்னொறு இமா முதல் முறையா அறுசுவைக்குள்... வந்ததுமே அழகு தமிழ்!!! இமா என்ற பெயருக்கே உள்ளதோ :) நல்ல டிப்ஸ்... நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

VANI AKKA UNGABRIYANI TIPS SUPER

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vani akka neenga sonna tips nallarunthuchu thanks

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கருப்பு ஏலம் போடலாமா