சுவையோ சுவை!!

அறுசுவை மக்களுக்கு வணக்கமுங்க.....

ஒருபக்கம் அறுசுவையில் நம்ம மக்கள், கிச்சன் குயின்களா மகுடம் சூடிட்டு இருக்காங்க!! அதை பார்க்கப் பார்க்க உள்ளுக்குள்ள ஒரே............இருங்க இருங்க, உடனே, உள்ள புகையிதுன்னு அவசரப்பட்டு நினைச்சுடக் கூடாது மக்களே! உள்ளுக்குள்ள ஒரேஏஏஏஏஏஏ......... ஆனந்தம்னு சொல்ல வந்தேனாக்கும்!

உடனே நீங்க கேப்பீங்க, உனக்கு எதுக்கு ஆனந்தம்னு? நம்ம மக்கள் விதம் விதமா படம் காட்டறதப் பார்த்து, நாங்களும் இம்ப்ரஸ் ஆகி, ஏதோ சமைச்சு ,வீட்டுல இருக்கிறவங்கள குஷிப்படுத்தறோமோ, இல்லையோ! ஆனா கடுப்பேத்தறோமாக்கும்!!!

சரி, அந்தக் கதையை விடுங்க, நம்மக் கதைக்கு வருவோம்! நம்மக் கதை என்ன கதைன்னு கேட்டீங்கன்னா? ரசிச்சு, ருசிச்சு சாப்பிடறதுதான்!! வேறென்ன??

மனிதர்களுக்கு பசிக்காம இருந்தாலோ! அல்லது அப்படியே பசிச்சாலும் நாக்குங்கிற ஒரு உறுப்பு இல்லாம இருந்தாலோ, எப்படி இருந்திருக்கும்? நினைச்சுப்பாருங்க...........உணவையும் மாத்திரை ரூபத்தில் விற்பனை செய்திருப்பாங்களோ!!

ரசித்து சமைக்கிறதுங்கிறது எப்படி ஒரு கலையோ, அதுபோல ரசிச்சு, ருசிச்சு சாப்பிடறது ஒரு பெரிய கலை!! சாப்பிடறதெல்லாம் ஒரு கலையான்னு நினைச்சு சிரிக்காதீங்கப்பா!! ரசிச்சு சாப்பிட ஆளே இல்லைன்னா………… சமையலை ஒரு கலைன்னு சொல்ல முடியாது! பசிக்காக செய்யற ஒரு வேலைன்னுதான் சொல்லனும்!

எத்தனையோ விதமான உணவகங்கள், அங்கு கிடைக்கிற உணவுகள், எவ்வளவு சுவையுடன் இருந்தாலும், வீட்டுச் சாப்பாடுக்கு, ஒருபடி கீழதான் அந்த உணவுகள் அப்படிங்கிறது என்கருத்து!

பெண்கள் அறுசுவை அரசிகளா இருக்கலாம்!! ஆண்களுக்கு அவங்க மனைவிமார்கள் சூப்பரா சமைச்சுக் குடுக்கிறவங்களா இருக்கலாம்!! இல்லைன்னா அவரவர்களே கூட சமைக்கத்தெரிந்த செஃப் ஆக இருக்கலாம்!! எப்படி இருந்தாலும், அவரவர்களுக்குப் பிடித்த, ரசித்துச் சாப்பிடக்கூடிய ஒரு ஆத்மார்த்தமான சாப்பாடுன்னா?? அது அவங்களோட அம்மா செய்து குடுத்த ஒரு ரசமோ! சாம்பாரோ! ஒரு துவையலாகவோக் கூட இருக்கும்! இல்லைன்னா பாட்டி செய்த ஒரு இனிப்பு உருண்டையோ! பலகாரமாகவோ! எதுவாக வேண்டுமானாலும் இருக்கும்!!

எங்க பக்க சமையலில் இட்லிக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன்னா, அது கெட்டியாக இல்லாத மட்டன்குழம்புதான்!! இட்லிக்கு மட்டன் குழம்புன்னா 2 இட்லி சேர்த்துக்கூட சாப்பிடத்தோணும்! சில விஷேச தினங்களில், அதே இட்லிக்கு ஆட்டுக்குடழ் குழம்பு சூப்பராகப் போகும்! போனாப்போகட்டும்னு இட்லிக்கு ஒரு இணை சொல்லலாம்னா அது வெங்காயமும், தக்காளியும் சேர்த்துச் செய்யற காரச்சட்னியைச் சொல்லலாம்!!

சப்பாத்திக்கு எத்தனையோ சைட்டிஷ் இருந்தாலும், எனக்குப் பிடிச்ச சைட்டிஷ் சிக்கன் கிரேவிதாங்க!! எங்கபக்கம் விஷெசங்கள், கல்யாணங்களில் கத்திரிக்காய்+ மொச்சை (அ)காராமணி (அ) கொண்டைக்கடலை (புளி சேர்த்து செய்வது) கிரேவி பரிமாறுவாங்க! அதை 2 வது தடவை கேட்டுச் சாப்பிடாதவங்க மிகக்குறைவு!!

அப்பவே செய்து சாப்பிடும் புளிசாதத்தைவிட, விஷேச நாட்களில் மீந்துபோன சாதத்தில் புளிசேர்த்துக் கிளரிவைத்து, அடுத்தனாள் காலையில் தாளித்துக் குடுப்பாங்க பாருங்க! முன்னாடி நாள் சாப்பிட்ட விருந்தைவிட இதுதான் அவ்வளவு பிரமாதமா இருக்கும்!!

காலேஜ்ல,ஸ்கூல்ல ஹாஸ்டல் சாப்பாடுங்கிறது எவ்வளவுதான் கொடுமையா இருந்தாலும், சில சமயம் அங்கேயும் அசத்தலான சாப்பாடு கிடைக்கும்! சில ஐயிட்டங்கள் ரொம்ப பிரமாதமா இருக்கும்! அதுல என்னோட விருப்பம் வெஜிடபிள் பிரியாணி, உருளை பொரியல், பொங்களுக்கு காம்பினேஷனா ஒரு புளிக்குழம்பு குடுப்பாங்க! அந்தமாதிரி ஒரு புளிக்குழம்பு இதுவரைக்கும் எங்கேயும் சாப்பிட்டதில்லைங்க!! யாருக்காவது இந்த புளிக்குழம்பு ரெசிப்பீ தெரிஞ்சா சொல்லுங்கப்பா!

காலை வேளைகளில், அதுவும் குறிப்பா கோடைக்காலங்களில் நீராகாரம் சாப்பிட்டு இருக்கீங்களா? இட்லி, தோசை,பூரி, பொங்கல் மற்றும் இருக்கவே இருக்கு காய்ஞ்சிபோன ப்ரெட் சாண்விட்ச், இவையெல்லாம் இந்த நீராகாரங்கள் பக்கத்துலக் கூட நிக்க முடியாதுங்க!! அதுக்கு கடிச்சிக்கிறதுக்குன்னு (சைட்டிஷ்) ஒரு "புளிகடுப்பான்" எங்க பாட்டி செய்வாங்க! அந்த மாதிரி ஒரு புளித்தொக்கு எங்கேயும் கிடைக்காதுங்க! கத்துக்கலையேன்னு நினைத்து நான் வருத்தப்படற ஒரே ரெசிப்பீ அதுமட்டும்தான்! இந்த நீராகாரத்திலேயும் ஸ்பெஷலா சொல்லனும்னா? முன்னாடி நாளே செய்த கம்புச்சோற்றுடன் (கம்பை உரலில்தான் இடிப்பாங்க) அடுத்தனாள் காலையில் வெண்ணெய் எடுத்தமோர் சேர்த்துக் கரைத்து, தொட்டுக்க சின்னவெங்காயம் இல்லைன்னா மோர்மிளகாய், இதுக்கு ஈடா அந்த தேவலோகத்து அமிர்தத்தையேக் குடுத்தாலும் நானெல்லாம் வேண்டாமின்னுதாங்க சொல்லுவேன்!!!

சமீபத்தில அறுசுவையில் சிம்ளின்னு ஒரு உருண்டை செய்துகாட்டியிருந்தாங்க! அதைப் பார்த்தவுடன் எங்கவீட்டுல செய்யற எள்ளுருண்டை ஞாபகம் வந்தது. எத்தனையோ ஸ்வீட்ஸ் இருந்தாலும் எனக்குப் பிடித்த ஸ்வீட்னா எள்ளுருண்டைதான்! எங்க வீட்ல 2 விதமான எள்ளுருண்டை செய்வாங்க! முதல்ல அரிசிமாவு+வெல்லம்+ வறுத்த எள்ளு சேர்த்து செய்யறது. 2 வது வறுத்தஎள்ளு+வெல்லம்+சிம்ளிக்கு செய்வதுபோல் ராகிஅடை செய்து, மூன்றையும் சேர்த்து உரலில் இடித்து உருண்டை பிடிப்பாங்க! இப்படி வீட்ல எள்ளுருண்டை செய்தாங்கன்னா, அந்த வாசம் உண்மையிலேயே ஊரெல்லாம் வீசும்!!

கம்புல கொழுக்கட்டை செய்வாங்க! அதுக்கு தொட்டுக்க கருப்பட்டிப்பாகு அருமையா இருக்கும்!! எங்கவீட்ல சின்னக்கருவாடை வறுத்து பொரியல் மாதிரி செய்வாங்க! சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டா அவ்வளவு பிரமாதமா இருக்கும்!! கூட வேற எதுவுமே தேவைப்படாது!!

இன்னும் லிஸ்ட்ல‌ நிறைய இருக்குங்க! அடை அவியல், இடியாப்பம்+ ஆப்பம் அதுக்கு இணையா தேங்காய்ப்பால்+வெல்லப்பாகு, முன்னாடி நாளே செய்த மீன்குழம்பு + கருவாட்டுக்குழம்பு, வத்தக்குழம்பு மற்றும் முட்டைக்குழம்புன்னு சொல்லிட்டேப் போகலாம்!!!

இதோடவிட முடியுமா? என்னோட ஃபேவரெட்ஸ் இன்னும் இருக்குங்க! இதுவரைக்கும் சொன்னதெல்லாம் எங்க வீட்டுல சாப்பிட்டது! இதுக்குமேல சொல்றதெல்லாம் ஸ்கூல் படிக்கும்போது வீட்டுக்கு வெளியே சாப்பிட்டது. நம்மளோட ஆல்டைம் ஃபேவரெட்னு சொன்னா அது இலந்தவடைதான்! இப்பவும் எங்கபாத்தாலும் வாங்காம விடமாட்டோமில்ல நாங்க!!

அப்புறம் இருக்கவே இருக்கு ஜவ்வுமிட்டாய், தேன்மிட்டாய், கல்கோனா.......என்னோட ஒரே வருத்தம், இதெல்லாம் இப்ப கடைங்கள்ல கிடைக்கிறதே இல்லை!! சின்ன நெல்லிக்காய் மாதிரியே, உப்பு,மிளகாய்ப்பொடி தூவி "கெலாக்காய்"நு ஒன்று கிடைக்கும்! சுவை நெல்லிக்காயைவிட சூப்பரா இருக்கும் போங்க!!!

""நித்தம் நித்தம் நெல்லுச்சோறு"" இந்த பாட்டை எப்பவாவது கேட்க்க நேர்ந்ததுன்னா!! இத்தனை ஐயிட்டங்களும் என் மனசுக்குள்ள ஒரு ரவுண்ட் வலம் வந்திடும்!!!

((பின்குறிப்பு:= ஒரு பெரிய ரகசியம், உங்களுக்கு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோங்க........ கல்கோனா, கம்மர்கட், இலந்தவடை, தேன்மிட்டாய் மற்றும் ஜவ்வுமிட்டாய் இவைகளோட ரெசிப்பீ தெரிஞ்சவங்க ,அறுசுவையில வெளியிட்டாங்கன்னா, அவங்களுக்கு ""அறுசுவை பேரரசி"" பட்டம் மட்டும் இல்லாம ஆயிரம் பொற்காசுகளும் பரிசா குடுக்கறாங்களாம்!!! :-)))).

4
Average: 3.7 (3 votes)

Comments

//ரசிச்சு, ருசிச்சு சாப்பிடறது ஒரு பெரிய கலை!!// உண்மைதான். :-)

கமர்கட் - http://www.arusuvai.com/tamil/node/13875
தேங்காய்ப்பூ கமர்கட் - http://www.arusuvai.com/tamil/node/1317
கமர்கட் மிட்டாய் - http://www.arusuvai.com/tamil/node/5650

ஐம்பது பொற்காசுகளாவது கிடைக்கும்ல! ;)

‍- இமா க்றிஸ்

//உணவகங்கள், அங்கு கிடைக்கிற உணவுகள், எவ்வளவு சுவையுடன் இருந்தாலும், வீட்டுச் சாப்பாடுக்கு, ஒருபடி கீழதான் அந்த உணவுகள் அப்படிங்கிறது என்கருத்து!//. என் கருத்தும் கூட அனு. வீட்டு சமையலில் ஆரோக்கியமும், அன்பும் கலந்திருக்கே :)

கமர்கண்ட் அதிக விருப்பமில்லை, ஆனால் தேன் மிட்டாய் இருக்கே அது தான் அளவில்லாமல் சாப்பிட்டிருக்கேன், போன முறை ஊருக்கு சென்றிருந்த போது தற்செயலாக ஒரு கடையில் கண்னில் பட்டது, உடனே ஒரு பாக்கெட் வாங்கி வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டுப் பார்த்தால் .... நல்லாவே இல்லை. அந்த காலத்து சுவையில்லை. ரொம்ப ஏமாற்றமாகி விட்டது.
அப்புறம் என்ன, மாசமா இருக்கையில் நானே செய்து சாப்பிட்டேன், நல்ல வேளை நினைவு படுத்திட்டீங்க.
ரெசிப்பி அனுப்பி விடுகிறேன் சீக்கிரம்.

பண்டிகைன்னா காலையில எங்க வீடுகளிலும் இட்லிக்கு மட்டன் குழம்பு தான். நீங்கள் போட்டுள்ல மட்டன் குழம்பு படம் கண்ணைப் பறிக்குதே, பார்சல் அனுப்பிடுங்கோ அனு.
அது சரி அம்மா, பாட்டின்னு சமையல் வல்லுனர்களே உங்க வீட்ல வைச்சுக்கிட்டு எங்களுக்கெல்லாம் ரெசிப்பிஸ் கொடுக்காம இப்படி படம் (தண்ணி) மட்டும் காட்டுறீங்களே ;)

உங்க‌ பதிவு சுவையோ சுவை.
எனக்கும் எங்கே எப்போ எது சாப்பிடாலும் எங்க‌ பாட்டி சமையலுக்கு அது ஈடாகாதுன்னு தோணும். எங்க‌ பாட்டி சூப்பரா சமைப்பாங்க‌. பொறுமையா சமைக்கணும்னு பாட்டி சொல்லுவாங்க‌..

சரியான‌ காம்பினேஷனோட‌ உணவு அமைந்தால் தான் ரசிச்சு சப்பிட‌ முடியும். கம்புக் கொழுக்கட்டைக்கு கருப்பட்டி பாகா?? சாப்பிட்டுப் பார்க்கணுமே.

நீராகாரம் கோடைகாலத்தில் அமுதபான‌மா இருக்கும். ரெண்டு டம்ளர் குடிச்சா, சும்மா வயிறு ஏசி பண்ணின‌ மாதிரி இருக்கும்.

எள்ளுருண்டை செய்வேன். அதில் அரிசிமாவு சேர்த்ததில்லை.

ஜவ்வுமிட்டாய், தேன் மிட்டாய், கல்கோனா ஆஹா!!!! எங்கியோ கூட்டிட்டு போயிட்டீங்க‌ அனு.:)))

சப்புகொட்ட வைக்கிறீங்க பதிவை போட்டு ;) வனிக்கு பிடிச்சது இட்லிக்கு சிக்கன் குழம்பு. அது ஏனோ மட்டன் வாசம் அந்த அளவு விருப்பம் இல்லை. சப்பாத்திக்கு சிக்கன் குழம்பு, குருமா எல்லாத்தையும் விட அம்மா பண்ணுற தால் தான் ரொம்ப விருப்பம். இவருக்கு பிடிக்குதோ இல்லயோ எனக்காக நான் அடிக்கடி செய்வேன். நீங்க சொன்ன மாதிரி ஹாஸ்டல் ஃபுட்ல சிலது நமக்கு பிடிச்சு போகுது... நான் படிச்சது ஈரோடு பக்கம் என்பதால் ஹாஸ்டலில் தரும் பருப்பு சாதமும் அப்பளமும் பிடிக்கும். வெள்ளிகிழமை சமைக்கிறவங்களுக்கு ரெஸ்ட் கொடுத்து எங்களூக்கு போடும் ப்ரெட் + பட்டாணி குருமா காம்பினேஷன் பிடிக்கும். தேன் மிட்டாய்... பல காலமா சொல்லிட்டு இருக்கேன் ரெசிபி தரேன்னு... எந்த நேரம் சொன்னேனோ... வேலை வேலைன்னு ஆயிடுச்சு லைஃப். ஒரு முறை ஃபோட்டோ எல்லாம் எடுத்தேன், ஆனா இரவு நேரம் சரியா வரல படம், அடுத்த முறை செய்து அனுப்பலாம்னு விட்டுட்டேன். அதோட அதை மறந்தும் போனேன். கமர்கட்டு எங்க பெரியம்மா செய்து அடிக்கடி சாப்பிட்டிருக்கேன். நான் செய்ததில்லை இதுவரை. அத்தனை விருப்பமும் இல்லை. இலந்தவடை எல்லாம் நான் சாப்பிட்டதே இல்லைங்கோ.. எப்பவோ சுவை பார்த்த நினைவு, அது தான்னு நினைக்கிறேன், சரியா நியாபகம் இல்லை. கொஞம் புளிப்பா, கொஞம் காரமா இருக்குமோ? வயசாகிடுச்சு, எல்லாம் மறந்து போகுது. கல்கோனா - ஹிந்தி படம் பேரு மாதிரி இருக்கு. யாருன்னு தெரியல.

எங்களை ரெசிபி கேட்குறது இருக்கட்டும்.... இம்புட்டு ரெசிபி மேல சொன்னீங்க.. அதெல்லாம் எப்ப அனுப்ப போறீங்கன்னும் சொல்லுங்க. வனி வெயிட்டிங்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ரசிச்சு, ருசிச்சு சாப்பிடறது ஒரு பெரிய கலை!!// உண்மைதான். :-)// அறுசுவை அரசியான‌ நீங்களே ஒத்துக்கிட்டீங்க‌ ரசிச்சு சாப்பிடறது ஒரு கலைன்னு, இனிமே நானும் பெருமையா சொல்லிக்கலாம் 65 கலையில‌ (இப்பதான் சாப்பிடறதையும் ஒரு கலையா சேர்த்தாச்சுல்ல‌ :))) எனக்கும் ஒரு கலை தெரியும்னு!! :))).

//ஐம்பது பொற்காசுகளாவது கிடைக்கும்ல! ;)// ஐம்பது என்ன‌? நூறே எடுத்துக்கோங்க‌, உங்களுக்கு இல்லாமலா??

///வீட்டு சமையலில் ஆரோக்கியமும், அன்பும் கலந்திருக்கே// உண்மைதான் வாணி.

//போன முறை ஊருக்கு சென்றிருந்த போது தற்செயலாக ஒரு கடையில் கண்னில் பட்டது, உடனே ஒரு பாக்கெட் வாங்கி வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டுப் பார்த்தால் .... நல்லாவே இல்லை. அந்த காலத்து சுவையில்லை. ரொம்ப ஏமாற்றமாகி விட்டது.// நானும் ஒருமுறை தேடிப்பிடிச்சு வாங்கி சாப்பிட்டேன்!! டேஸ்ட் பழையமாதிரி இல்லவே இல்லை!!

//ரெசிப்பி அனுப்பி விடுகிறேன் சீக்கிரம்// சீக்கிரமா அனுப்புங்க‌.....மறக்காம‌ 100 பொற்காசுகளை, என் பெயரைச்சொல்லி இனாமா வாங்கிக்கோங்க‌ அறுசுவையில....:))

//நீங்கள் போட்டுள்ல மட்டன் குழம்பு படம் கண்ணைப் பறிக்குதே, பார்சல் அனுப்பிடுங்கோ// அந்த‌ மட்டன் குழம்பை செய்தவங்ககிட்டதான் பார்சல் அனுப்பச்சொல்லனும்!:)) படத்தை வேண்டுமென்றால் நான் அனுப்பரேன்....

///அது சரி அம்மா, பாட்டின்னு சமையல் வல்லுனர்களே உங்க வீட்ல வைச்சுக்கிட்டு எங்களுக்கெல்லாம் ரெசிப்பிஸ் கொடுக்காம இப்படி படம் (தண்ணி) மட்டும் காட்டுறீங்களே ;)/// கரெக்டா சொன்னீங்க!! எனக்கு வெக்கத்தெரிஞ்சதைதான் நான் காமிக்க‌ முடியும்! அதுதான் (தண்ணி) உங்க‌ வீட்ல‌ மட்டுமில்ல‌, எல்லார் வீட்டிலேயும் இருக்குமே!! ஸ்பெஷலா அதைவேற‌ காமிப்பானேன்னுதான் விட்டுட்டேன்!!!

//உங்க‌ பதிவு சுவையோ சுவை// நன்றி நிகி...

//பொறுமையா சமைக்கணும்னு பாட்டி சொல்லுவாங்க‌// பாட்டி சரியாத்தான் சொல்லியிருக்காங்க‌! உணவுங்கிறது ருசிக்காக‌ மட்டும் இல்லாமல், நம்ம‌ ஆரோக்கியமும் அதில்தான‌ இருக்கு!! என்ன‌ சமைக்கிறோம், எப்படி சமக்கிறோம்னு தெரிந்து, புரிந்து செய்தால் மட்டும்தான், நோய் நொடியில்லாமல் இருக்கமுடியும்!! இப்ப‌ இருக்கிற‌ அவசர‌ உலகத்தில், பொறுமையான‌ சமையலேக் கிடையாது!! சமைக்கிறதும் ஃபாஸ்டாதான், சாப்பிடறதும் ஃபாஸ்ட் ஃபுட்தான்!!

//கம்புக் கொழுக்கட்டைக்கு கருப்பட்டி பாகா?? சாப்பிட்டுப் பார்க்கணுமே// சாப்பிட்டு பாருங்க‌, இதுவும் நல்லா இருக்கும்!!

//நீராகாரம் கோடைகாலத்தில் அமுதபான‌மா இருக்கும். ரெண்டு டம்ளர் குடிச்சா, சும்மா வயிறு ஏசி பண்ணின‌ மாதிரி இருக்கும்// உண்மையிலேயே வயிறு குளிர‌ சாப்பிடனும்னா, நீராகாரம்தான் பெஸ்ட் நிகி....

///சப்புகொட்ட வைக்கிறீங்க பதிவை போட்டு// கிச்சன் குயின்னு ஒரு விஷயத்தை ஆரம்பித்து வைத்து, எங்களையெல்லாம் தினம் தினம் சப்புக்கொட்ட‌ வெக்கறீங்க‌ வனி நீங்க‌!!

//நீங்க சொன்ன மாதிரி ஹாஸ்டல் ஃபுட்ல சிலது நமக்கு பிடிச்சு போகுது... நான் படிச்சது ஈரோடு பக்கம் என்பதால் ஹாஸ்டலில் தரும் பருப்பு சாதமும் அப்பளமும் பிடிக்கும். வெள்ளிகிழமை சமைக்கிறவங்களுக்கு ரெஸ்ட் கொடுத்து எங்களூக்கு போடும் ப்ரெட் + பட்டாணி குருமா காம்பினேஷன் பிடிக்கும்// நான் படித்தது சேலம் ஹாஸ்டலில்....இதே பருப்பசாதம்,அப்பளம் காம்பினேஷன் அங்கேயும் உண்டு...நல்லாதான் இருக்கும், இருந்தாலும் அந்த‌ பிரியாணி அளவுக்கு வராது! அங்கேயும் சனிக்கிழமைகளில் பிரெட்டும்,சாம்பாரும்தான்! எனக்கு என்னவோ அந்த‌ சாம்பார் காம்பினேஷன் கொஞ்சம் ஒத்து வராது.......

//தேன் மிட்டாய்... பல காலமா சொல்லிட்டு இருக்கேன் ரெசிபி தரேன்னு... எந்த நேரம் சொன்னேனோ... வேலை வேலைன்னு ஆயிடுச்சு லைஃப். ஒரு முறை ஃபோட்டோ எல்லாம் எடுத்தேன், ஆனா இரவு நேரம் சரியா வரல படம், அடுத்த முறை செய்து அனுப்பலாம்னு விட்டுட்டேன். அதோட அதை மறந்தும் போனேன்// ஆஹா!! ஞாபகப்படுத்திட்டோம்ல‌ இப்ப‌.... சீக்கிரமா அனுப்புங்க‌...அப்பதான் 1000 பொற்காசு கிடைக்கும்....:)))

//இலந்தவடை எல்லாம் நான் சாப்பிட்டதே இல்லைங்கோ.. எப்பவோ சுவை பார்த்த நினைவு, அது தான்னு நினைக்கிறேன், சரியா நியாபகம் இல்லை. கொஞம் புளிப்பா, கொஞம் காரமா இருக்குமோ? வயசாகிடுச்சு, எல்லாம் மறந்து போகுது// புளிப்பு, காரத்தோட கொஞ்சம் இனிப்பையும் சேர்த்துக்கோங்க‌!! என்ன‌ அடிக்கடி வயசாகிடுச்சுன்னு புலம்பறீங்க‌.....நல்ல‌ விஷயம் இல்லையே இது.....எப்பவுமே நாம ஸ்வீட் 16 ன்னு நினைச்சுக்கனும்...அதுக்கு ஒரே வழி நம்ம‌ வயசை மறந்துடனும்....நானெல்லாம் மறந்துட்டேனாக்கும்!! ஒரு தடவை டாக்டர் என் வய‌சைக்கேட்க்க‌, நான் ஒரு வயசு சொல்ல‌, என் கணவர் அதில்லைன்னு சொல்லி ஒரு வயதை சொல்றார்.....ஒரே காமெடியாகி, டாக்டர் சிரிக்கிறாங்க‌....:)))

//இம்புட்டு ரெசிபி மேல சொன்னீங்க.. அதெல்லாம் எப்ப அனுப்ப போறீங்கன்னும் சொல்லுங்க. வனி வெயிட்டிங்// மேல‌ சொன்னது எல்லாம் நான் செய்ததா எப்போ சொன்னேன்?? நான் ரசுச்சு சாப்பிட்டேன்னுதான் சொன்னேன்!!:))))

ஜவ்வு மிட்டாய் விற்க்கும் நபர் ஜவ்வு மிட்டாயைக் கொண்டு கையில் வாட்ச் கட்டி விட்டது, மீசை ஒட்டி விடுவது, சிறிய குருவி செய்து தருவது எல்லாம் ஒரு காலம் :(
ஒன்றாம் வகுப்பு படிக்கையில் பள்ளியை தொட்டு அடுத்துள்ள வீட்டு பாட்டி ஒருவர் தினமும் ஜவ்வு மிட்டாய் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி பள்ளிக் கூட வாசலில் விற்ப்பது வழக்கம். ஒரு நாள் அவர் வர தாமதித்தாலும் அவரின் வீட்டிற்க்கே சென்று வாங்கி விடுவேன். 10 பைசாவுக்கு 2 மிட்டாய் கொடுப்பார்கள்.
முதல் குழந்தை உண்டாகியிருந்த போது ஜவ்வு மிட்டாய் சாப்பிட ஆசை வந்து என் தங்கை ஊரில் தேடி தேடிப் பார்த்தாள். கிடைத்தால் யாரிடமாவது கொடுத்தனுப்புகிறேன் என்றாள், கிடைக்கவே இல்லை :(
கல்கோனா சாப்பிட்டு பல் உடைந்த கதையெல்லாம் உண்டு :))
எள்ளுருண்டை போன்று கடலை மிட்டாயும், இஞ்சி முறப்பா-வும் கூட அதிக வாண்டட் தான்.

உங்க வீட்டுக்கு வந்து இட்லியும் மட்டன் குழம்பும் சாப்பிடலாம் என்றிருந்தேன் அனு. ம்... தண்ணீணீ... எங்கூட்டு குழாயிலே பிடிச்சு குடிச்சிக்கிறேன் :) ஹி ஹி ஹி (இனிமே வீட்டுக்கு வான்னு கூப்பிடுவீங்களா ??!)

தேன் மிட்டாய்,கமர்கட்டு,இலந்தவடை எல்லாம் பழைய‌ நியாபகத்திர்க்கு அழைத்து சென்று விட்டது.இதெல்லாம் என்னோட‌ பேரவரிட்டும் கூட‌.இலந்தவடை மட்டும் தான் இப்ப‌ கடைகளில் கிடைக்குது.அருமையான‌ பதிவு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

//இட்லிக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன்னா, அது கெட்டியாக இல்லாத மட்டன்குழம்புதான்!! இட்லிக்கு மட்டன் குழம்புன்னா 2 இட்லி சேர்த்துக்கூட சாப்பிடத்தோணும்//

எங்க அம்மா சன்டே என்றாலே சுட சுட இட்லி அதற்கு இணையாக மட்டன் குழம்பு (அ) சிக்கன் குழம்பு (அ) தலைகறி குழம்பு (அ) தோன்ஜல் (இதை எப்படி சொல்வீங்கன்னு தெரியாது) இந்த நான்கில் ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். சுட சுட சாப்பிடும் போது ஆஆஆ நினைக்கும் போதே எவ்வளவு சுவை.. அம்மா கை மணமே தனி தான் அனு...

எங்க பாட்டி நான் ஏழாவது படிக்கும் போதே இறந்துட்டாங்க. ஆனால் அந்த சின்ன வயசில் என் பாட்டி என்னை கோழி ஈரல் வாங்கி வர சொல்வாங்க. நான் வாங்கி வந்தவுடன் அதில் தக்காளி வெங்காயம் மிளகாய்தூள் உப்பு மிளகு தூள் சேர்த்து நல்லா காரசாரமாக செய்து பழைய சோறு மற்றும் ஈரல் தொக்கு சேர்த்து ஊட்டி விடுவாங்க அதை சாப்பிடும் போது எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா. என் பாட்டியின் கை மணம் யாரிடமும் பார்த்ததில்லை. அதே போல் குட்டி குட்டி கோழி முட்டை விற்கும் அதையும் வாங்கி பாட்டி பொரியல் பண்ணி தருவாங்க. அதெல்லாம் இப்பொழுது கனவில் தான் நினைக்கமுடியும். எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டுது.

அனு உங்கள் பிளாக் படித்தவுடன் நினைவிற்கு வந்துவிட்டது. உங்கள் எழுது நடை ரொம்ப சூப்பரா இருக்கு..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

//ஜவ்வு மிட்டாயைக் கொண்டு கையில் வாட்ச் கட்டி விட்டது, மீசை ஒட்டி விடுவது// இதுவும் ரசிச்சிருக்கேன்! ஆனா கையில‌ கட்டிக்க‌ மட்டும்தான்! இந்த‌ மிட்டாயை பம்பாய் மிட்டாய்னு சொல்வாங்க‌!

//ஒன்றாம் வகுப்பு படிக்கையில் பள்ளியை தொட்டு அடுத்துள்ள வீட்டு பாட்டி ஒருவர் தினமும் ஜவ்வு மிட்டாய் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி பள்ளிக் கூட வாசலில் விற்ப்பது வழக்கம். ஒரு நாள் அவர் வர தாமதித்தாலும் அவரின் வீட்டிற்க்கே சென்று வாங்கி விடுவேன். 10 பைசாவுக்கு 2 மிட்டாய் கொடுப்பார்கள்// நீங்க‌ சொல்ற‌ இந்த‌ ஜவ்வுமிட்டாய்தான் என்னோட‌ ஃபேவரெட் மிட்டாய்! கலர் சேர்க்காம‌ செய்வாங்க! சின்ன‌ சின்ன‌ துண்டுகளாகத்தான் விற்பாங்க‌! அதே, 10 பைசாவுக்கு 2 மிட்டாய்தான்!

//கல்கோனா சாப்பிட்டு பல் உடைந்த கதையெல்லாம் உண்டு// அப்படி ஹார்ட் ஆ இருந்ததனால‌தான், அவ்வளவு பிடிக்கும்! ரொம்ப‌ நேரம் வாயில் வைத்து சுவைக்க‌ முடியும் இல்ல‌.....

//கடலை மிட்டாயும், இஞ்சி முறப்பா-வும் கூட அதிக வாண்டட் தான்// கடலைமிட்டாய் இப்பவும் Eastham போனா வாங்கி வந்துடறேன், அதனால‌ மிஸ் பன்றதைல்லை!Ginger candy னு Asda ல‌ பார்த்து (இஞ்சி முறப்பா ஞாபகத்துல‌) வாங்கினேன், வாயில‌ போட்டவுடனே சப்புனு ஆகிடுச்சு......

//உங்க வீட்டுக்கு வந்து இட்லியும் மட்டன் குழம்பும் சாப்பிடலாம் என்றிருந்தேன் அனு. ம்... தண்ணீணீ... எங்கூட்டு குழாயிலே பிடிச்சு குடிச்சிக்கிறேன் :) ஹி ஹி ஹி (இனிமே வீட்டுக்கு வான்னு கூப்பிடுவீங்களா ??!)/// உங்க‌ ஊரை விட‌ இங்க‌ தண்ணி நல்லாயிருக்குமாம்!!! எல்லாரும் சொல்றாங்க‌!! அதனால‌ வாங்க‌, நல்ல‌ தண்ணி குடிச்சிட்டு, வாணின்னு ஒரு கிச்சன் குயின் நல்லா சமைப்பாங்களாம்!! அவங்களே வேற‌, சமையல் செய்து எடுத்துட்டு வந்துடுவாங்க‌!!! சாப்பிடற‌ வேலை மட்டும்தான்!!......:)))))

படித்து பதிவிட்டமைக்கு நன்றிங்க‌ முசி......

///இலந்தவடை மட்டும் தான் இப்ப‌ கடைகளில் கிடைக்குது/// இதுவும் இப்ப‌ எல்லா இடங்களிலும் கிடைக்கமாட்டேங்குது.....

//எங்க அம்மா சன்டே என்றாலே சுட சுட இட்லி அதற்கு இணையாக மட்டன் குழம்பு (அ) சிக்கன் குழம்பு (அ) தலைகறி குழம்பு (அ) தோன்ஜல் (இதை எப்படி சொல்வீங்கன்னு தெரியாது) இந்த நான்கில் ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். சுட சுட சாப்பிடும் போது ஆஆஆ நினைக்கும் போதே எவ்வளவு சுவை.. அம்மா கை மணமே தனி தான் /// தோன்ஜல் அப்படிங்கிற‌ பெயரை இதுவரை கேள்விப்பட்டதில்லைங்க‌!! "தொதல்" என்று கேள்விப்பட்டிருக்கேன்!
அம்மா கைப்பக்குவம் தனிதான் ரேவதி! ஒரு சாதாரண‌ ரசம்கூட‌ அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்....

//எங்க பாட்டி நான் ஏழாவது படிக்கும் போதே இறந்துட்டாங்க. ஆனால் அந்த சின்ன வயசில் என் பாட்டி என்னை கோழி ஈரல் வாங்கி வர சொல்வாங்க// ஏழாவது படிக்கும்போதே ஈரல் வாங்கத்தெரியுமா உங்களுக்கு? பரவாயில்லையே!!! எனக்கு அப்பல்லாம் சாப்பிட‌ மட்டுதாங்க‌ தெரியும்...:))). எங்க‌ பாட்டியும் ஈரல் ஸ்பெஷலிஸ்ட்...சூப்பரா செய்வாங்க‌...

//அனு உங்கள் பிளாக் படித்தவுடன் நினைவிற்கு வந்துவிட்டது. உங்கள் எழுது நடை ரொம்ப சூப்பரா இருக்கு// நன்றி ரேவதி......இந்த‌ பதிவை எழுதத் தூண்டியதே கிச்சன் குயின்க‌ளாகிய‌ நீங்கள் அனைவரும்தான்!

அணு நாக்குல சப்பு கொட்ட வைக்கிறிங்களே. முகப்புல இருக்குற மீன்குழம்பு எச்சில் ஊறுது. எனக்கும் எல்லா டிபன் வைக்கும் சிக்கன் தான் பிடிக்கும்.

Be simple be sample

//அணு நாக்குல சப்பு கொட்ட வைக்கிறிங்களே// உங்கள் படங்களைப் பார்த்து சப்புக்கொட்டி, சப்புக்கொட்டி கடைசியில் பதிவாக‌ வந்துவிட்டது! வேறொன்றும் இல்லை!! (((அணு)))) சும்மா.... ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான‌? :)))

//முகப்புல இருக்குற மீன்குழம்பு எச்சில் ஊறுது// அவ்வ்வ்வ்வ்......அது மீன்குழம்பு இல்லை ரேவ்ஸ் ....மட்டன் குழம்பு....

பழைய சுவையை கிளறி போட்டுறிகிங்க போல. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க அனு சிஸ்டர்.
இப்போ புதுசா டிவி-ல வர்ற கடலை மிட்டாய் விளம்பரத்த பாக்கிறப்ப இன்னும் கொஞ்ச நாள்ல கல்கோனா, கம்மர்கட், இலந்தவடை, தேன்மிட்டாய் மற்றும் ஜவ்வுமிட்டாய் எல்லாம் பிராண்ட் ல வரும்னு நினைக்கிறேன்

உன்னை போல் பிறரை நேசி.

அந்த‌ நாள் நியாபகம் வந்ததே தோழியே தோழியே!

//எப்படி இருந்தாலும், அவரவர்களுக்குப் பிடித்த, ரசித்துச் சாப்பிடக்கூடிய ஒரு ஆத்மார்த்தமான சாப்பாடுன்னா?? அது அவங்களோட அம்மா செய்து குடுத்த ஒரு ரசமோ! சாம்பாரோ! ஒரு துவையலாகவோக் கூட இருக்கும்! // ஆமா கன்சிவா இருக்கிற டைம்ல‌ அம்மா வைக்கிற‌ வெண்டைக்காய் புளிக்குழம்பு , இட்லி மட்டன் காம்பினேசன் சாப்பிடனும்னு நானும் ஆசைப்பட்டேன் சிஸ். எப்பவும் அவ்ங்க‌ கையால சமைத்து சாப்பிடனும்னு தான் தோனும்.

எங்க‌ பாட்டி இருந்த‌ சமயங்களில் கேழ்வரகு கூழ் செய்து நீங்க‌ சொன்ன‌ சின்னவெங்காயம் மோர்மிளகாய் காம்போ தருவாங்க. ப்ப்ப்ப்பாஆ அவ்ளோ டேஸ்ட் ஆ இருக்கும்.

அப்பறம் கலாக்காய் நல்லா சாப்பிட்டுருக்கேன். தேன்மிட்டாய் ஸ்ஸ்ஸ். கவர் ஒபன் பண்ணா காலிபண்ணாம‌ விடுற்தில்லங்க‌ . சுகர் ஐட்டம்தான் இருந்தாலும் பாதில‌ வைக்க‌ மனசு இருக்காது. நீங்க‌ கேட்டீங்கனு தேன்மிட்டாய் ரெசிபிலாம் செய்து அனுப்பிருக்காங்க‌ வாணி சிஸ் அவங்கல‌ இப்டி டீல் ல‌ விட்டுட்டீங்க‌.

உங்க‌ புண்ணியத்துல‌ ஃபேஸ்புக்ல‌ ஒரே தேன்மிட்டாய் வாரம்தான் போங்க‌. நம்ம‌ மக்கள் ஒவ்வொருத்தரும் போட்டி போட்டு போட்டோ கலர் கலரா அப்டேட் பண்ணிருக்காங்க‌ சிஸ்.

மொத்தத்தில் சுவையோ சுவை: வாசித்தவர்களையும் சுவைக்க‌ வைத்தது.

மிக்க‌ நன்றி சிஸ்!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

///பழைய சுவையை கிளறி போட்டுறிகிங்க போல// ரொம்ப‌ கிளறிட்டேன் போலிருக்கு!! காணாமப்போன‌ நகைச்சுவை குயினே வந்துட்டாங்க‌!!!:)))))

//ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க அனு சிஸ்டர்// நன்றி கிறிஸ் சிஸ்டர்.......

//இப்போ புதுசா டிவி-ல வர்ற கடலை மிட்டாய் விளம்பரத்த பாக்கிறப்ப இன்னும் கொஞ்ச நாள்ல கல்கோனா, கம்மர்கட், இலந்தவடை, தேன்மிட்டாய் மற்றும் ஜவ்வுமிட்டாய் எல்லாம் பிராண்ட் ல வரும்னு நினைக்கிறேன்// ஐ ஐ ஐ...வந்தா நான் இப்படிதான் சந்தோஷப்படுவேன்!!

நீங்களும் என்னைப் போலவே ரசித்துச் சாப்பிட்டு, ரசைனையோட‌ சொல்லியிருக்கீங்க‌!!

//அப்பறம் கலாக்காய் நல்லா சாப்பிட்டுருக்கேன்// ஆஹா! நீங்க‌ ஒருத்தராவது சாப்பிட்டு இருக்கீங்களே!! நான் மட்டும்தான் சுவைத்திருப்பேன் போலிருக்குன்னு நினைச்சுட்டேன்!!

//உங்க‌ புண்ணியத்துல‌ ஃபேஸ்புக்ல‌ ஒரே தேன்மிட்டாய் வாரம்தான் போங்க‌. நம்ம‌ மக்கள் ஒவ்வொருத்தரும் போட்டி போட்டு போட்டோ கலர் கலரா அப்டேட் பண்ணிருக்காங்க‌ சிஸ்// ஆஹா! இந்த‌ ஒரு புண்ணியமாவது கிடைச்சுதே!:))))

//மொத்தத்தில் சுவையோ சுவை: வாசித்தவர்களையும் சுவைக்க‌ வைத்தது// மிக்க‌ நன்றிங்க‌.

அன்பு அனு,

அசத்திட்டீங்க போங்க! சூப்பராக எழுதியிருக்கீங்க.

நீங்க சொன்னதும் எத்தனை பேர் ஃபேஸ்புக்ல தேன் மிட்டாய் செய்து காட்டியிருக்காங்க பாருங்க.

நீராகாரத்தையும் மோர் மிளகாயையும் கூட அற்புதமா வர்ணிச்சு எழுதியிருக்கீங்க.

சுவையாக எழுதுவது போலவே சூப்பராக சமையலும் செய்வீங்கதானே.

அன்புடன்

சீதாலஷ்மி

படித்து ரசித்தமைக்கு மிக்க‌ நன்றி சீதாம்மா!
//நீங்க சொன்னதும் எத்தனை பேர் ஃபேஸ்புக்ல தேன் மிட்டாய் செய்து காட்டியிருக்காங்க பாருங்க// எத்தனைபேரோட‌ மனசுலயும், நாக்கிலேயும் இந்த‌ தேன்மிட்டாய் இடம் பிடிச்சிருக்குன்னு தெரிந்தது!!! ஆனால் இதில் என்பங்கு எதுவுமே இல்லை!! வாணிக்குதான் நான் நன்றி சொல்லனும்!

//சுவையாக எழுதுவது போலவே சூப்பராக சமையலும் செய்வீங்கதானே// அவ்வ்வ்வ்.....நல்லா சாப்பிடுவேன்!!! சமைச்சுக்குடுக்க‌ யாரும் இல்லாததனாலே, ஏதோ சமைப்பேன் அவ்வளவுதான்!!!:))))