மாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி

அன்புத் தோழிகளுக்கு,

மேலே கொடுத்திருக்கும் தலைப்பு - ஒரு பழைய பாடலின் ஆரம்ப வரி

”மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி

மருமகள் தன்னை பெருமைகளுடனே
வாழ வைப்பது புது நீதி

மருமகளெல்லாம் எருமைகளா
அந்த மாமியாருக்கு அடிமைகளா

அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்

பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்

கிட்டத்தில் நின்னா சிரிச்சா என்று
கேள்வி கேட்க கூடாது

தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது

ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது

பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது

சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்”

சாமி பக்கணும் கோவில் போகணும்
நம்ம சந்தோஷத்துக்கு
டைம் கொடுக்கணும் கொடுக்கணும்”

இவை அந்தப் பாடலின் சில வரிகள்.

மருமகள்களோட எதிர்பார்ப்புகளில் முக்கியமானவை எல்லாம் இந்த வரிகளில் தெரிகின்றனதானே.

அன்பு இமா,

முதல் வேலையாக அன்னமாமி பற்றிய பதிவை மீண்டும் ஒரு முறை படித்தேன்.

அன்னமாமி - அவங்க மருமகள்கிட்ட மட்டுமல்ல, எல்லோரின் மீதும் அன்பு செலுத்திய தேவதை.

//என் மனதில் என் மாமியாருக்கு எத்தனை உயர்வான இடம் கொடுத்திருக்கிறேனோ அதை விட ஒரு மடங்கு அதிகம் என் மருமக்கள் மனதில் பிடித்தாக வேண்டும்.// அதில் சந்தேகமே இல்ல இமா.

இதிலதான் மாமியாருக்கான சேதி இருக்குன்னு நினைக்கிறேன். அன்பான மாமியாரின் அரவணைப்பை அனுபவித்த மருமகளும் ஒரு நல்ல மாமியாராகத்தான் உருவெடுப்பார். மருமகளுக்கு ஒரு நல்ல ரோல் மாடலாக மாமியார்கள் இருந்தால் பிற்கால குடும்பமும் நல்லா இருக்கும்.

//மருமக்கள், மறு மக்கள் என்பது ஏன் மறந்து போகிறது! சுயநலமாகச் சிந்தித்தால் கூட மருமக்களை நன்றாக நடத்த வேண்டியதற்கான ஒரு காரணம் இருக்கிறது. மூப்பு அடையும் சமயத்தில் என்ன ஆகும்! பிள்ளைகள் எப்படிச் சந்தோஷமாகப் பார்ப்பார்ப்பார்கள்! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். :-)//

இதுதான் மாமியார்கள் முக்கியமாக புரிஞ்சுக்க வேண்டிய விஷயம். இப்ப இருக்கிற அதே தெம்பும் தைரியமும் எப்பவும் இருக்குமா? வாழ்க்கை நிறைவடையற நேரத்துல கூட இருக்கப் போவது மருமகள்கள்தான் என்பதை யோசிச்சால் நல்லது.

உங்க பதிவில் மருமகள்களுக்கும் ஒரு செய்தி இருக்கு இமா.

பாட்டி தாத்தாகிட்ட பிரியமா இருந்து, வளருகிற பேரக் குழந்தைகள் பிற்காலத்தில் தன் மனைவி மக்கள்கிட்டயும் பிரியமா இருப்பாங்க. வயசான அம்மா அப்பாகிட்டயும் அன்பா இருப்பாங்க. இது இயல்பாகவே வந்து விடும்.

அதனால மருமகள்களுக்கு ஒரு சேதி - உங்க குழந்தைகள் நல்ல முறையில் வளர, பிற்காலத்தில் நல்ல குடும்பத் தலைவன்/தலைவியாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காகவாவது மாமியாரை அனுசரித்துப் போகலாம்.

இன்னும் நிறையப் பேசலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நிகிலா,

உங்க தங்கை சொன்னது சரிதான். பக்குவமாக நடந்துக்கறவங்களா, புரிஞ்சவங்களா அமைஞ்சா அதிர்ஷடம்தான். நாம நல்லா நடந்துக்கறதும் பாந்தமா பொருந்தி வரும்.

ஆனா, எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்குப் போட்டியா, புரிஞ்சாலும் புரியாத மாதிரியே நடக்கற மாமியாரா இருக்கறவங்கதான் இப்ப ப்ரச்னையே.

அப்படி நடக்கற இடத்துல, நீங்க சொல்வது போல - பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம் வேண்டியிருக்கு.

நீங்களும் இமாவும் சொல்லியிருக்கும் ஒரு கருத்து என்னை யோசிக்க வைச்சுது. மாமியார் கொடுத்திருக்கும் சுதந்திரம்தான் அது.

இது கிடைக்காததாலதான் நிறைய வீட்டுல சச்சரவு ஆகுதோ என்னவோ?

ஆனா மாமியார் பார்வையில் சொல்றப்ப - நம்ம வீட்டு மருமகளுக்கு நாமதானே எல்லாம் எடுத்து சொல்லணும், இப்படி நடந்துக்கோ அப்படி செய்யாதேன்னு என்ற எண்ணத்தில் சொல்லும் விஷயங்களுமே சண்டைக்கு அடித்தளமாகி விடுகிறது நிறைய இடங்களில்.

மருமகளுக்கான சேதி - மாமியாராகப் பார்க்காமல் - அட்லீஸ்ட் அனுபவம் வாய்ந்தவங்க சொல்றாங்க, எதுக்கும் கேட்டு வைப்போமே அப்படின்னு அனுசரிச்சுப் போயிட்டா கொஞ்சம் சூடு குறையறதுக்கு வாய்ப்பு இருக்கு.

மாமியாருக்கான சேதி - இப்ப வர்ற மருமகள் எல்லாம் - படிச்சு முடிச்சு, வெளி உலகம் தெரிஞ்சவங்களா, புத்திசாலியாகத்தான் வர்றாங்க. நாம மருமகளா வந்தப்ப இருந்த மாதிரி, மிரள மிரள முழிக்கிற அப்பாவி தங்கமணியா இல்ல. அதனால, அவங்ககிட்ட இருந்து நாம கத்துக்கலாம், அல்லது அவங்க போக்கில் விட்டுடலாம். அதான் நல்லது.

இன்னும் நிறையப் பேசலாம் நிகிலா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

பிச்சு உதறிட்டீங்க போங்க. பாயிண்ட் பாயிண்ட் ஆக நீங்க சொல்லியிருப்பதிலேயே தீர்வுகளும் சுலபமாக் கிடைச்சுரும் போல.

1. நான் கஷ்டப்பட்டேன், அதனால உன்னையும் படுத்துவேன் அப்படின்னு நினைக்கிற மாமியார்கள் - கொஞ்சம் உல்டாவாக - ஏதோ நான்தான் கஷ்டப்பட்டேன், அதே கஷ்டம் என் மருமக படக்கூடாது, அப்படின்னு புரிஞ்சிகிட்டாங்கன்னா/புரிய வைக்கப்பட்டாங்கன்னா நிம்மதி.

2. இவங்க எப்படி வீட்டுக்காரரை டாமினேட் பண்றாங்களோ அதே மாதிரிதான் மருமகளும் அவ வீட்டுக்காரரை அடக்கி ஆள நினைப்பா என்ற உண்மை ஒரு நாளைக்கு சுரீர்னு உரைச்சுதுன்னா அப்புறம் அப்படியே அமைதி ஆகிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

3. பிரச்னையே இல்லாத இடம்.

4. இவங்க அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஏங்கிகிட்டு இருக்கறவங்க. குக்கரை அடுப்பில் செட் பண்ணிட்டு, குழம்புக்கு புளி கரைச்சு வச்சிட்டு, அதுக்கப்புறம் கூட, மருமகள் - ‘இன்னிக்கு எவ்வளவு அரிசி வைக்கணும் அத்தை, புளிக்குழம்பா, மோர்க்குழம்பா என்ன செய்யணும்?’னு கேட்டாலே உச்சி குளிர்ந்துடுவாங்க. வார்த்தைக்கு வார்த்தை ‘எங்க வீட்டுல எல்லாம் எங்க அத்தைதான்’ன்னு ஐஸ் வச்சாலே போதும். மருமக வண்டி சுமாரா ஓடிடும்.

5, 6. இந்த மாதிரி மாமியார் இருக்கற வீட்டுல மகனுக்கும் ரொம்பப் பொறுமை வேணும். மனசுக்குள்ளயே இந்த பொசசிவ்னெஸ் மற்றும் காம்ப்ளெக்ஸ் வச்சிட்டு இருக்கறவங்க எப்படிப் பேசுவாங்க என்ன பிரச்னை பண்ணுவாங்கன்னு முள் மேல நிக்கிற மாதிரியே மருமக நின்னுட்டு இருக்கும்படியா இருக்கும். கணவருடைய சப்போர்ட் இருந்ததுன்னாலே மருமகள் மனதளவில் தைரியமாகவும், மாமியார் ஏற்படுத்தும் பிரச்னைகளை பெரிசு படுத்தாமயும் இருக்கப் பழகிடுவாங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு vid,

மாமனாரைப் பொறுத்தவரை, மருமகன் வர்றப்ப எழுந்து நிற்பது, உலகப் பிரச்னைகளைப் பத்தி பேசறது, நலம் விசாரிப்பது இவ்வளவுதான். மகளுக்குப் புகுந்த வீட்டில் ஏற்படும் பிரச்னைகளைப் பத்தி அவங்க அம்மாகிட்டதானே சொல்வாங்க, அப்பாகிட்ட ரொம்ப கம்ப்ளெயிண்ட் வராது இல்லையா. அதுவும் இல்லாம மருமகன் எப்பவுமே ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணுவார்.

அந்த மெல்லிசான கோட்டை ‘என்னை அறிந்தால்’ அஜித் மாதிரி ரெண்டு பேருமே தாண்ட மாட்டாங்க. அதனாலதான் மாமனார் மருமகன் உறவு டிப்ளமேடிக் ஆக இருக்கும் எப்பவுமே.

மருமகள் வந்தவுடனே எல்லா மாமியாருக்கும் ஒரு வேகம் வந்துடும். இந்த வீட்டுப் பழக்கம் எல்லாம் நாமதானே சொல்லிக் கொடுக்கணும், அப்படின்னு ஒரு ஆர்வக் கோளாறுல(!) ‘நம்ம வீட்டுல குழம்புக்கு நல்லெண்ணெய்லதான் தாளிக்கணும், ரசத்துக்கு மிளகாய் வத்தல்தான் கிள்ளிப் போடணும், காலைல காக்காய்க்கு சோறு வச்சுட்டுதான் சாப்பிடணும், சாம்பாருக்கு சீரகமும் தேங்காயும் சேர்த்துதான் அரைக்கணும்,’ இப்படியெல்லாம் பேசுவாங்களா - மருமகளுக்கு அப்பவே கொட்டாவி வர ஆரம்பிச்சுடும்.:):)

இது கூடப் பரவாயில்ல - ‘ஏன் பளவுஸ்ல இவ்வளவு லோகட் ஆக இருக்கு? ஜீன்ஸ் எல்லாம் நம்ம வீட்டுக்கு ஒத்து வராது,
என்னது, நைட் பேண்ட் ஆ? இதெல்லாம் என்ன கூத்து? அப்படின்னு மருமகளோட ப்ரைவஸி விஷயத்துலயும் தலையிட/கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சா அவ்வளவுதான்.

அத்தை சொன்னாங்க அப்படிங்கறது மாறிப் போய் - ‘ என்னங்க, உங்க அம்மாவை கொஞ்சம் சும்மா இருக்க சொல்லுங்க’ அப்படின்னு மருமகள்கள் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க.

மாமியார்களுக்கு சொல்லும் சேதி இதுதான். இது எதுக்கு நமக்கு? சொந்தக் காசுலயே சூனியம் வச்ச்சுக்கற வேலை...ம். மகனுக்குப் பிடிச்சிருந்தால் மருமகள் அது போல நடந்துக்கப் போறா, அவ்வளவுதான். இது நம்ம டிபார்ட்மெண்ட் இல்லவே இல்லன்னு இருப்பதுதான் நல்லது.

//மிகவும் மனசு சங்கடப்படும்படி பேசினால், மனதை வேறு விஷயத்தில் செலுத்துவேன். நம்மால் முடிந்தவரை உறவுகளை காயப்படுத்தாமல் இருக்கலாம்.//

க்ரேட்! க்ரேட்!! க்ரேட்!!! இத இதத்தான் நாங்க எதிர்பார்க்கறோம்.

வயசான காலத்துல சும்மா இருக்க முடியாம நாங்க ஏதாவது பேசிட்டாலும், நீங்க சின்னவங்க பக்குவமா நடந்துக்கறப்ப பிரச்னை தொடராம இருக்குது இல்லையா.

தமிழில் டைப் பண்ண முடியுமான்னு பாருங்களேன். எல்லோரும் படிக்கறதுக்கு சௌகரியமாக இருக்கும்.

தொடர்ந்து வந்து பேசுங்க. நிறைய மருமகள்கள் பல விஷயங்களில் என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டு இருக்காங்க. வாங்க, வந்து சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கிரிஷ்மஸ்,

இந்த இழை ஆரம்பிக்கக் காரணமே நீங்கதான். உங்க பதிவை எங்கேயோ பார்த்தேன். பதில் போட யோசிக்கறதுக்குள்ள அந்த இழையைக் காணோம். பஸ்ஸை மிஸ் பண்ணிட்டோமேன்னு புது ரூட் போட்டுட்டேன்.

அப்புறம் - நான் நடுவர் எல்லாம் இல்ல. சும்மா எல்லோரும் உக்காந்து பேசி நாளாச்சேன்னுதான் இந்த டாபிக் ஆரம்பிச்சேன்.

வாங்க பேசலாம்(இது பாரதி பாஸ்கர் குரலில் படிங்க)

மருமகள் - மறுமகள். இந்த வீட்டில் பிறந்த பெண் கல்யாணமாகி வேற வீட்டுக்குப் போனது போல, வேறு வீட்டில் பிறந்து இங்கே மற்றும் ஒரு மகளாக வந்த பெண்ணைக் குறிப்பிடும் சொல் இது. ஆனா, இலக்கணப்படி ‘று’ ‘ரு’ ஆகிடுச்சோ என்னவோ தெரியலை.

மகளுக்கு மாற்றாக வந்த பெண் என்பது - மாற்றுப் பெண் என்பதுதான் மாட்டுப் பெண் என்பதாக மருவியதுன்னு படிச்சிருக்கேன். அதெல்லாம் இல்ல, இந்த வீட்டுக்கு மாடு மாதிரி உழைக்கத்தான் அனுப்பி வைச்சிருக்காங்கன்னு மாட்டுப் பெண்கள் புலம்பியதும் உண்டு.

என்னுடைய உறவினர் ஒருத்தர் சொன்னது இது:

இந்தக் காலத்தில் பெரும்பாலும் பையன்கள் வெளியூரில்/வெளிநாட்டில்தான் இருக்காங்க. அதனால - மருமகள் நம் வீட்டுக்கு வர்றப்ப அவ விருந்தாளி.

என்னம்மா, காலையில் காஃபியா, டீயா, இட்லி சூடா இருக்கணுமா, ஷாப்பிங் போய்ட்டு மதியம் லஞ்சுக்கு வீட்டுக்கு வந்துடுவீங்களா? என்று சில நாட்களே தங்கும் மருமகளை உபசரிக்கப் பழகிட்டாங்க இக்கால மாமியார்கள்.

அதே போல நாம மகன் வீட்டுக்குப் போனாலும் - நம் எல்லை ஹாலிலேயே நின்னுடுது. நாம கம்பீரமா டி.வி. பாக்கறப்ப, மருமகள் ஹார்லிக்ஸ்/பூஸ்ட் கரைச்சு, கையில் கொண்டு வந்து தர்றாங்க. டைனிங் டேபிளில் உக்காந்து, மகனோடு, மருமகளோடு, கதைகள் பேசிட்டு, நாம் கொண்டு போன பரிசுகளைக் கொடுத்துட்டு, கிளம்பிடறோம். அதனால் பிரச்னைகள் வரும் வாய்ப்பு குறைவு என்று சொன்னாங்க.

இங்கயும் பாருங்க - ஒரே வார்த்தைக்கு வேறு வேறு அர்த்தம். டிஸ்டன்ஸ் இருந்தால் பிரச்னை இல்லன்னு நான் நினைக்கிறேன். டிஸ்டன்ஸ் இருப்பதால்(ஜெனரேஷன் கேப்)தான் பிரச்னையே என்று நீங்க சொல்லியிருக்கீங்க.

நீங்க சொல்லியிருப்பதும் உண்மைதான் கிரிஷ்மஸ். கணவனுக்கு பேஸ்ட், பிரஷ் முதல் கொண்டு கையில் கொடுத்து, ஈரத்துண்டை காயப் போட்டு, ஷூ பாலிஷ் போட்டு எடுத்து வைத்து, ட்ரஸ்ல பட்டன் இருக்கா என்று பார்த்து தைத்து வைத்து, கடமையே கண்ணாயினாராக இருந்த மாமியார்களுக்கு - இப்ப உள்ள மருமகள் தன் கணவனிடம் - ‘ குளிச்சுட்டு வர்றதுக்குள்ள என் ப்ளவுஸ் கொஞ்சம் அயர்ன் பண்ணி வச்சுடேன், சாயங்காலம் வர்றப்ப டெய்லர்கிட்ட இருந்து என்னோட டாப்ஸ் தச்சதை வாங்கிட்டு வந்து வச்சுடு’ என்றெல்லாம் சர்வ சகஜமாக சொல்றதைக் கேக்கறப்ப கொஞ்சம் பக்குன்னுதான் இருக்குன்னு நினைக்கிறேன்.

ஆனா, எரிச்சல் படறதுங்கறதை விட, கொஞ்சம் பம்முறாங்க இந்தக் காலத்து மாமியார்கள்னுதான் எனக்குத் தோணுது. இந்த ஒப்பீடும் சலிப்பும் கொஞ்ச நாளில் சரியாகிடும். ஏன்னா, இவங்க பேசறதை எல்லாம் கவனிச்சு, பதில் சொல்றதுக்கோ, தலையில் ஏத்திக்கிறதுக்கோ பிஸியான மருமகள்களுக்கு நேரம் இருக்கறதில்லை. அதனால அப்படியே விட்டுட்டால் கொஞ்ச நாளில் நாட்டு நடப்பு புரிஞ்சு மாமியார்களும் அமைதியாகிடுவாங்கன்னு தோணுது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அனு,

மாமியார் மெச்சின மருமகளும் இல்லை, மருமகள் மெச்சின மாமியாரும் இல்லை என்று சொலவடை சொல்வாங்க.(அப்பாடி, நம்ம வழக்கப்படி சொலவடை சொல்லியாச்சு, பழமொழியும் வந்துட்டே இருக்கு)

மகளைப் போல மருமகளை நினைக்கிற மாமியாரும், அம்மாவைப் போல மாமியாரை நினைக்கிற மாமியாரும் ரொம்ப ரொம்ப ரொம்பக் குறைவு. அப்படி இருந்துட்டால்தான் பிரச்னையே இல்லையே.

//இப்படிப்பட்ட‌ பிரச்சனைகளில் அந்தபெண்ணின் தாய்வீட்டின் பங்கு நிறைய‌ இருக்கும்! பெண் நல்லபடியா எல்லாருடன் சேர்ந்து வாழனும்கிறதைவிட‌, தன்பெண்மட்டும்தான் சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிற‌ அம்மாக்களும் பிரச்சனைக்கு காரணமா இருக்காங்க‌!!//

சரியாகச் சொன்னீங்க அனு. எனக்கு ஒரு கேள்வி கட்டாயம் இருக்கு. புகுந்த வீட்டுக்குப் போகும் பெண்களிடம் அதாவது நம் தோழிகளிடம் அவங்க அம்மா சொல்லி அனுப்பியது என்ன? தோழிகளோ/அக்காவோ/அண்ணியோ என்ன சொன்னாங்க? அது உங்ககிட்ட ஏற்படுத்திய பாதிப்பு என்ன? இந்தக் கேள்வியை நாமே கேட்டு, ஒரு பதில் தெரிஞ்சுக்கலாம்.

’உங்க மாமியார் என்ன முகத்துல அப்படி ஒரு கிரீம் அப்பிட்டு இருக்காங்க, ரொம்ப சின்னப் பொண்ணுன்னு நினைப்பு போல’.

உன் மாமியார் அவங்க நாத்தனார்கிட்ட என்னமா சண்டை போட்டுட்டு இருந்தாங்க தெரியுமா. ஜாக்கிரதையா இருந்துக்கோ.

எல்லோருக்கும் பலகாரம் கொடுத்தப்ப, முறுக்கு ஜிலேபி எல்லாம் எண்ணி எண்ணிக் கொடுக்கறாங்க. ரொம்ப கஞ்சம் போலயே.

வாய்க்குள்ளயே சிரிக்கறாங்களே, ரொம்ப பதவிசுன்னு காட்டிக்கிறாங்களா என்ன.

இப்படி கமெண்ட்ஸ் எல்லாம் கேக்கறப்பவே மாமியார் பத்தி ஒரு வெறுப்பான பிம்பம் மருமகள் மனசுல உருவாகிடும்.

//சில‌ இடங்களில் மருமகள்கள் வீட்டுக்குள் வரும்போதே, விரோத‌ மனப்பான்மையை உள்ளுக்குள் வளர்த்துக்கறாங்க!//

மருமகள் பெரிய இடத்துப் பொண்ணுன்னு முதல்லேயே இடம் கொடுத்துடாதே. தலை மேல ஏறி உக்காந்துடுவா அப்புறம்.

ரிசப்ஷனுக்கு கொண்டை போட்டுக்கோன்னு சொன்னதுக்கு எனக்கு அந்த ஹேர்ஸ்டைல் பிடிக்காதுன்னு தலையை விரிச்சுப் போட்டுட்டு நிக்கிறாளே. ரொம்பப் பிடிவாதக்காரி போல.

இப்படி மருமகளைப் பற்றி மத்தவங்க பேசுவதைக் கேட்டுக்கிட்டு, மருமகள் வர்றப்பவே போருக்கு ரெடியாகிற மனப்பான்மை வந்துடுது நிறைய மாமியார்களுக்கு.

சுருக்கமா சொன்னா - மாமியார் மருமகள் இரண்டு பேருக்குமே உள்ள சேதி இதுதான். ஓபன் மைண்ட் ஆக இருந்துடுங்க. ஒரே வீட்டில்தான் இருக்கப் போறீங்க, பொறுமையா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ட்ரை பண்ணலாம். அவசரம் இல்லை, அதுவரைக்கும் ஒருத்தர் பாதையில் மற்றவர் குறுக்கிடாமல் இருக்கலாம்.

நீங்க சொல்லும் சேதி - ஒருத்தர் குரலை உயர்த்தும்போது மற்றவர் அமைதியாக இருந்துட்டா பிரச்னைகள் வளராது. புரிஞ்சுகிட்டா சரி.

நன்றி அனு. இன்னும் சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேவதி,

ஒரு எமோட் ஐகான் போடறதுக்கு உங்களை இப்படி யோசிக்க வச்சுட்டேனே, அடடா.

உங்க ஸ்ட்ரீட் அட்ரஸ் உடனே கொடுங்க ரேவதி. யாருக்குமே மாமியார் இல்லன்னா, இந்தத் தெருவில பொண்ணு கொடுக்க ஏராளமான போட்டி இருக்கும்.

உண்மையத்தான் சொல்றேன். இப்பல்லாம் பெண்ணைப் பெத்தவங்க என்ன கேக்கறாங்களாம் தெரியுமா?

மாப்பிள்ளை வீட்டுல ராகு கேது எதுவும் இல்லையேன்னு கேக்கிறாங்களாம். ஜாதகக் கட்டத்தைப் பத்தி இல்ல, மாமியாரும் மாமனாரும் ராகு கேதுவாம்!

பையன் வீட்டுல எத்தனை டஸ்ட் பின் என்று கேட்டதாக ஒரு பத்திரிக்கையில் படிச்சு ரொம்ப ரொம்ப மனசு வருத்தப்பட்டேன். பையனின் பெற்றோர்களுக்குத்தான் இந்தப் பெயர் வச்சிருக்காங்களாம். மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் ஆகிட்டுது. இதெல்லாம் என்ன மனப்பான்மையோ தெரியல.

ஒரு மேட்ரிமோனி நிறுவனத்தில் கேட்ட உரையாடல் இது.

ஒரு பெண்ணின் பெற்றோர் வந்திருந்தாங்க. பையனுக்கு அக்கா தங்கச்சி யாரும் இருக்கக் கூடாது அந்த மாதிரி வரன் வேணும்னாங்க. எனக்குப் புரியவே இல்ல. ஏன், பெண்ணுக்கு நிறைய பொறுப்பு ஏத்துக்கும்படியா இருக்கும்னு நினைக்கிறீங்களான்னு கேட்டப்ப அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?

உரையாடலை அப்படியே தர்றேன்:

‘எங்க பொண்ணை நாங்க ரொம்ப செல்லமா வளர்த்திருக்கோம்’

சரி

அவளுக்கு நாங்க நிறைய நகை போடுவோம்

சரி

அவ தன்னுடைய நகையெல்லாம் அங்கங்க அப்படியப்படியே கழட்டி வச்சிடுவா. நாங்கதான் அதெல்லாம் எடுத்து வைக்கிற வழக்கம்.

அதனால

கட்டிக் கொடுக்கிற இடத்துல அவங்க வீட்டுப் பொண்ணுங்க இருந்தா, எங்க வீட்டுப் பொண்ணு கழட்டி வைக்கிற நகை மேல ஆசைப்பட்டு எடுத்துச்சுன்னா, இதெல்லாம் தவிர்க்கறதுக்குத்தான் அக்கா தங்கச்சி இல்லாத இடமாப் பாக்கறோம்.

இதைக் கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(இதை வடிவேலு வாய்ஸ்ல படிங்க)

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா! இவங்க வீட்டுப் பொண்ணைக் கட்டப் போற பையனை நினைச்சு அனுதாபப்பட மட்டும்தான் முடிஞ்சுது.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா,
15 நிமிடமா இந்த‌ இழையை வாசித்து கொண்டிருக்கிறேன். ஒரு பதிவு ரசித்து படித்து முடிக்கிறதுக்குள்ள‌ அடுத்த‌ பதிவு அதுவும் இவ்ளோ நீளமா எப்படி உங்களால‌ முடியுது ஜெட் வேகத்தில் டைப் பண்ண‌?

உங்களோட‌ இனியொரு பணி செய்வோம் படித்திருக்கிறேன். நான் அதன் ரசிகை. தங்களுடன் பழக‌ வாய்ப்பு கிடைத்ததில் மிக்க‌ மகிழ்ச்சி.

சரி மேட்டருக்கு வருவோம். நல்ல‌ தலைப்புனு சொல்றதவிட‌ ரொம்ப‌ அவசியமான‌ தலைப்புமா. தொடர்ந்து பேசுங்க‌. என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியதாக‌ இருக்கும்.

நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

//அடுத்த தலைமுறை மாமியார்/ மருமகள்கள் நண்பிகள் போன்று மாறுவார்கள். // ஏற்கனவே நிறைய வீடுகள்ல இருக்காங்க நிகிலா. அவங்க வெளியில சொல்லாம இருக்க, பிரச்சினைகளுக்குள்ளாகுபவர்கள் மட்டும் வெளியே சொல்வதால் பிரச்சினையான மாமியார் மருமக்கள்தான் மஜாரிட்டி என்பது போல தோன்றுகிறது என நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

இதுக்குத்தான் சீதா மேடம் அடிக்கடி அறுசுவைக்கு வரணும்ங்கிறது :)

மாமியார்- மருமகள் என்கிற விவாதத்தில் மேலே நீங்களும், தோழிகளும் குறிப்பிட்டிருக்கும் நல்ல விஷயங்கள் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கவையே. ஆனால் சில மாமியார்கள் ஒரு மருமகளிடம், நல்ல முகமும், மற்றொரு மருமகளிடம் அகோர முகமும் காட்டுவது எதினால் ? என் அனுபவத்தில் ஒரெ மாமியார் , தூரத்தில் வாழும் (வெளி நாடுகளில் அல்லது வேறு இடத்தில்) மருமகள் எப்போதாவது விருந்தினர் போன்று வந்து செல்லும் மருமகளை கெஞ்சுவதும், கொஞ்சுவதும், தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், அதே சமயம் கூடவே இருந்து வீட்டில் எல்லா வேலைகளும் செய்து சில நேரங்களில் வேலைக்கும் சென்று வரும் மருமகளை முறைப்பதும் எதினால் ? அதற்க்காக மருமகள்களிடம் குற்றம் இல்லை என்றோ, மாமியார் மட்டுமே தவறுகிறார் என்றோ சொல்ல வரவில்லை. இரு மருமகள்களிடமும் நிறை குறைகள் இருக்கத்தானே செய்யும். அவர்களை ஏன் சரி சமமாக நடத்த முயல்வதில்லை.
இங்கு எவர் பட்சத்தில் தவறு அதிகம்?
திடீரென்று ஒரு அவசரம் என்றால் உடனிருப்பவள் தானே பார்த்துக் கொள்கிறார்கள். இப்படி நிறம் மாறும் மனித குணங்களினால் கூட பெண்ணைப் பெற்றவர்கள் பெண் கொடுக்கும் முன் பல விஷயங்களை யோசிக்க வேண்டுவதுடன் அதை வெளிப்படையாகவும் கேட்டு விடுகிறார்களோ ?!!

மேற்கத்திய மக்களிடம் எனக்கு பிடித்தமான விஷயம் என்னவெனில் மாமியாரும், மாமனாரும் சில வார இறுதியில் பேரக் குழந்தைகளை அழைத்து வீட்டுக்கு வந்து விடுவார்கள். வாரம் முழுதும் மகனும், மருமகளும் வேலை மற்றும் குழந்தைகள் என பிஸியாக ஓடி கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஓய்வு மற்றூம் கணவன் மனைவிக்கிடையே தம்பதிகளாய் (சினிமா, உணவகம், சுற்றுலா)வெளியே சென்று வர. அதே போன்று மகள் குழந்தைகளையும் மற்றோரு வீக்கென்டில் கூடவே வைத்துக் கொள்வார்கள். பெரியவர்களுக்கும் பேரக் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க ஒரு வாய்ப்பு. பண்டிகை, விசேஷங்கள் என்றால் மகன்கள் குடும்பமும், மகள்கள் குடும்பமும் ஒன்றாக பெற்றோர் வீட்டிற்க்கு வந்து மகிழ்ச்சியாக உணவருந்தி, பேசி விளையாடி என்று மகிழ்வார்கள். ஏனெனில் அவர்களில் ஒருவருக்கொருவர் மனக் கசப்புகள் இருப்பின் அதை சம்பந்தப் பட்டவரிடம் வெளிப்படையாக சொல்லி மன்னிப்பு கேட்டு ராசியாகி விடுவார்கள். இது ஒரு ஆரோக்கியமான உறவு முறை என்றே எனக்குப் படும்.
நம் இடங்களில் மருமகள் மாமியாரை பேயாக வர்ணித்து மனதுக்குள் திட்டிக் கொள்வதும், மாமியும் அதே போன்று மருமகளை மனசுக்குள்ளே முறுமுறுத்துக் கொண்டும் உணவு பரிமாறிக் கொள்வதுமாய் இப்படியே மாமியாரின் காலம் முடிந்து விடும். மீண்டும் "வாழையடி வாழையாய்" அடுத்து வரும் தலை முறையிலும் இவையெல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கும்.
நான் குறிப்பிட்ட வெளி நாட்டவர்களின் வாழ்க்கை முறைக்கு மிக முக்கிய காரணம் வீட்டின் பெரியவர், மாமனார் என வைத்துக் கொள்வோம் அவர் தன் மனைவியை மதிக்க தெரிந்தவர். மனைவியை மெஷின் போன்று நடத்தாமல் மரியாதைக்கும், அன்பிற்க்கும் உரியவளாய் நடத்துவார்கள். மகன் தந்தையைப் பார்த்து மனைவியை எப்படி நடத்துவது என்பதை கற்றுக் கொள்கிறான் மகன் பெரியவனாகி விட்டால் (18 வயதுக்கு மேல்) நீ ஒரு முழு மனிதன் (Man) என்கிற பொறுப்புணர்வை வளர்த்து விடுகிறார்கள். ஆகவே அவனுக்கு திருமணம் ஆனாலும் அவனின் சொந்த விஷயத்தில் தலையிடுவதில்லை. அதை குறையாக எடுத்துக் கொள்லவும் மாட்டார்காள். அதனால் தான் என்னவோ வெளி நாட்டு தம்பதிகளுக்குள் வரும் பிரச்சனைகக்கு அவர்கள் குடும்பத்தினர்கள் எவ்விதத்திலும் காரணமாயிருக்க மாட்டார்கள்.

நம் சமுதாயத்தில் மாமியின் மனதில் தன் கணவனால் தான் சரியாக நடத்தப் படவில்லை என்கிற குறை கூட மருமகளை ஆரம்பத்திலிருந்தே அடக்கி வைக்க ஒரு காரணம்.
அதேபோன்றுதான் மாமியும், மகனுக்கு விவரம் தெரியும் போதிலிருந்தே திருமண பந்தத்தில் முதலில் மனைவி, அதின் பின் தான் தாய். (தொப்புள் கொடியிலிருந்து அறுத்து தாலி கொடியுடன் இணைக்கப் படுவதை) தி.பின் கூட்டு குடும்பமாய் இருப்பின் இருவரையும் எப்படி பேலன்ஸ் செய்து வாழ்வது என்பதை தாய் கற்றுக் கொடுப்பது அவசியமாகிறது.
""நம் குடும்பங்களுக்கு மட்டும் இத்தகைய தெளிவு வந்து விட்டால் எந்த மாமியும் மருமகளைப் பற்றியும் கவலைப் பட வேண்டியிருக்காது. அப்படி மட்டும் நடந்தால் !! (??) "" மாமியார்- மருமகள் என்னும் உறவு அம்மா-மகள், நல்ல தோழிகள் என "உறவு முறை மாறித்தான்" ஒற்றுமையாக வாழ வேண்டியதுமில்லை. அப்படியே அடிபிறழாமல் "மாமியார்-மருமகளாகவே "சுமுகமாக ஓடிக் கொண்டிருக்கும். என்னைக் கேட்டால் இது மாறுவதற்க்கு காலம் எடுக்கும். அடுத்து வரும் நம் தலைமுறைகளுக்கு நாம் தான் கற்றுக் கொடுத்து மாற்ற வேண்டி உள்ளது.

மேலும் சில பதிவுகள்