பீட்ரூட் புலாவ்

தேதி: March 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

திருமதி. சுஸ்ரீ அவர்களின் பீட்ரூட் புலாவ் குறிப்பைப் பார்த்து, வனிதா அவர்கள் விளக்கப்படங்களுடன் செய்த‌ குறிப்பு இது.

 

பாசுமதி அரிசி - 2 கப்
பீட்ரூட் - ஒன்று
கேரட், பீன்ஸ், பட்டாணி -‍ ஒரு க‌ப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் -‍ 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிள‌காய்த் தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி
த‌னியாத் தூள் - 2 தேக்க‌ர‌ண்டி
தேங்காய்ப் பால் - ஒரு கப்
பிரியாணி இலை - ஒன்று
ப‌ட்டை, ஏல‌க்காய் -‍ 2 (அ) விருப்ப‌த்திற்கேற்ப‌
அன்னாசிப்பூ - ஒன்று
கிராம்பு - 4
எண்ணெய் - 2 தேக்க‌ர‌ண்டி
உப்பு - தேவையான‌ அள‌வு
புதினா, கொத்தமல்லித் தழை -‍ கால் கட்டு


 

அரிசியை நன்றாகக் களைந்து அந்தத் தண்ணீரை ஊற்றிவிட்டு, பிறகு அதில் புதிய தண்ணீரை ஊற்றி 15 - 20 நிமிடங்கள் ஊறவிட‌வும். பீட்ரூட்டின் தோலைச் சீவிவிட்டு சிறு ச‌துரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கேர‌ட் மற்றும் பீன்ஸைப் பொடியாக நறுக்கி வைக்க‌வும். வெங்காய‌த்தை மெல்லிய‌ துண்டுக‌ளாக நறுக்க‌வும். ப‌ச்சை மிள‌காயை நீளவாட்டில் கீறி வைத்துக் கொள்ள‌வும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த‌‌தும், ம‌சாலாப் பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்க‌வும். பிறகு அதில் வெங்காயம், ப‌ச்சை மிள‌காய் போட்டு வ‌த‌க்க‌வும். வெங்காய‌ம் சிறிது நிற‌ம் மாறி வ‌ரும் போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் 5 நிமிட‌ங்க‌ள் வ‌த‌க்க‌வும்.
பிறகு நறுக்கி வைத்த‌ காய்க‌றிக‌ள், ப‌ட்டாணி சேர்த்து புதினா மற்றும் கொத்த‌ம‌ல்லித் த‌ழையைச் சேர்த்து வதக்கவும்.
காய் கலவை சற்று நேரம் வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வ‌த‌க்கவும்.
பிற‌கு ஒரு க‌ப் தேங்காய்ப் பால் மற்றும் 3 க‌ப் த‌ண்ணீரை அளந்து ஊற்ற‌வும். (அரிசி: த‌ண்ணீர் அள‌வு, 1:2 என்ற‌ விகிதத்தில் இருக்க‌வேண்டும்).
கொதி வந்ததும் அரிசியை நீர் இல்லாமல் வடித்துச் சேர்த்து மீண்டும் கொதிவரவிடவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நன்கு கொதித்து வரும் போது, குக்க‌ரை மூடி, லேசாக ஆவி வ‌ரும் போது வெயிட் போட்டு, 2 இர‌ண்டு விசில் வரும் வரை வேகவிட்டு இற‌க்கவும். ஆவி அட‌ங்கிய‌தும் குக்கரைத் திறந்து, சாதம் உடையாமல் மிருதுவாக‌ க‌லந்துவிட‌வும்.
க‌ம‌கம‌ மணத்துடன் சுவையான‌ பீட்ரூட் புலாவ் த‌யார். வெங்காய‌ தயிர்ப் ப‌ச்ச‌டியுட‌ன் சாப்பிட‌ மிகவும் அருமையாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எங்க வீட்டில் எல்லோருக்கும் ஃபேவரட் ஆகிவிட்டது இந்த குறிப்பு. பிள்ளைகளை பீட்ரூட் & கேரட் சாப்பிட வைக்க இது நல்ல முறை. விரும்பி சாப்பிடவும் செய்கிறார்கள். இந்த குறிப்பை செய்து அனுப்பி வெளியாகும் இடைவெளியில் இதை எப்படியும் 4 முறையாவது செய்திருப்பேன். :) அந்த அளவு ஃபேவரட் ஆயிட்டுது எங்க வீட்டில். சுவையான சுலபமான குறிப்புக்கு மிக்க நன்றி சுஸ்ரீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் வனி... வாட் அ சர்ப்பிரைஸ்?! வனி, எப்படி இருக்கிங்க‌?! நீண்ட‌ நாள் கழித்து இன்று காலை அறுசுவைக்குள் எட்டிப் பார்த்தால் முகப்பில் உங்களோட‌ இந்த‌ குறிப்பு!! ரொம்ப‌ அழகா செய்து காட்டியிருக்கிங்க‌ வனி!, பின்ன‌ செய்தது யாரு, நம்ம‌ வனியாச்சே?! ;‍) தேங்க் யூ! குழந்தைகளுக்கு ரொம்ப‌ பிடித்து சாப்பிடுகிறார்கள் என்று கேட்க‌ ரொம்ப‌ ரொம்ப‌ சந்தோஷமா இருக்கு வனி. இங்கேயும் இது ஃபேமிலி ஃபேவரட்!! :‍) குறிப்பை மிக‌ அருமையாக‌ செய்து, உங்க‌ ஸ்டைலில் படு சூப்பராக‌ ப்ரசண்ட்டும் செய்ததற்கு மிக்க‌ நன்றி வனி! :‍)

அன்புடன்
சுஸ்ரீ

கலர்புல்லா இருக்கு.செய்து பார்க்கிறேன் ஒரு நாள்.

சூப்பர்ர்ர் கலர்ஃபுல் டேஸ்டி புலாவ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.