கருணைக்கிழங்கு பொரியல்

தேதி: March 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

திருமதி. அப்சரா அவர்களின் கருணைக்கிழங்கு பொரியல் என்ற குறிப்பு கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அப்சரா அவர்களுக்கு நன்றிகள்.

 

கருணைக்கிழங்கு - அரைக் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்புத் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

கருணைக்கிழங்கை தோல் சீவி மண் வாசனைப் போக கழுவி விடவும்.
பின்பு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை தனித்தனியே பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெந்த கிழங்கை சிறு, சிறுத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கி விட்டு நறுக்கி வைத்திருக்கும் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டவும்.
அடுப்பை மிதமான தீயில் பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். இடையில் ஒரு முறை கிளறவும். கிழங்கு பொன்னிறமானதும், வறுத்து பொடித்த தூளை தூவி பிரட்டி விட்டு, உப்பு சரிப் பார்த்து விட்டு மேலும் ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருக்கவும்.
கிழங்கு நன்கு உதிரியாய் வந்ததும் இறக்கி விடவும். சுவையான கருணைக்கிழங்கு பொரியல் தயார்.

இந்த பொரியல் சாம்பார், ரசம், தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

கிழங்கை புதிதாக வாங்கியவுடனே சமைத்தால் தான் அரிக்கும். நான்கு, ஐந்து நாட்கள் காற்றோட்டமாக வைத்திருந்து பின்பு சமைத்தால் அரிக்காது

இன்னும் மொறுகலாக வேண்டுமானால் இன்னும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் கூடுதல் நேரம் வைத்திருக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்