கோழி வறுத்த கறி

தேதி: May 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழிக்கறி - 1 1/2 கிலோ
இஞ்சி விழுது - 3 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 120 மி.லி.
வெங்காயம் - ஒரு கப்
தக்காளி - அரை கப்
மல்லித்தூள் - அரைத் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
கிராம்பு - 2
பட்டை - சிறுதுண்டு
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
மிளகு - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைசாறு - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

கோழிக்கறியினைச் சுத்தம் செய்து ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி விழுது மற்றும் பூண்டு விழுதிலிருந்து பாதி எடுத்துக் கொண்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு கறிகளின் மீது பூசி சுமார் 30 நிமிடங்கள் ஊற விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியைப் போட்டு மிதமான தீயில் லேசாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். கறித்துண்டுகளை தனியே எடுத்து வைத்து, எண்ணெயைத் தனியே வடித்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை இரண்டு மேசைக்கரண்டி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். மிளகினைப் பொடி செய்து கொள்ளவும். தனியே எடுத்து வைத்த எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பிலைப் போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளியைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு, தீயைச் சற்று அதிகமாக வைத்து எண்ணெய் பிரியும் வரை வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் மல்லித்தூள், ஏலப்பொடி, பட்டைப் பொடி, கிராம்பு பொடி அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இரண்டு மேசைக்கரண்டி புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு மசாலாவில் ஊற வைத்துள்ள கோழித்துண்டுகளைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து தீயின் அளவைச் சற்று அதிகமாக வைத்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயின் அளவை மிதமாக வைத்து, நன்கு கிளறவும். மசாலா கறியில் படிந்து இறங்கியவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து மிளகுத்தூள் தூவி இறக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். சுவையான கோழி வறுத்த கறி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்