சைனீஸ் ரோல்ஸ்

தேதி: February 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

பிரான்ஸில் வசித்து வரும் <a href="experts/620" target="_blank"> திருமதி. ரஸியா </a> அவர்களின் தயாரிப்பு இந்த சைனீஸ் ரோல்ஸ் (சைய்யோ). ஒரு சுவையான சைனீஸ் உணவின் செய்முறையை, மிகத் தெளிவாக இங்கே விளக்குகின்றார். ஒரு உபரித் தகவல் - பிரான்ஸில் இவர் வசிக்கும் பகுதியில் உள்ள பல உணவுவிடுதிகளுக்கும் இந்த சைனீஸ் ரோல்ஸ்களை இவர் தயார் செய்து கொடுக்கின்றார்.

 

ரைஸ் பேப்பர் (18 c ) - 500 கிராம்
வெர்மிசெல்லி சோயா - 100 கிராம்
முளைக்கட்டிய பச்சை பயறு - 300 கிராம்
கேரட் - ஒரு கிலோ
கறுப்பு காளான் - 25 கிராம்
வெங்காயம் - ஒன்றரை
முட்டை - 3
ஃபிஷ் சாஸ் - ஒரு மேஜைக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கோழி(அ)மாட்டு இறைச்சி(அ) இறால், நண்டு சதை - 300 கிராம்
சன் ஃபிளவர் ஆயில் - ஒரு லிட்டர்


 

இறைச்சியை கழுவி, எலும்பு நீக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வெர்மிசெல்லி சோயாவை சுடுதண்ணிரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி 2 இன்ச் நீளத்திற்க்கு கத்திரிகோலால் வெட்டிக்கொள்ளவும். (இந்த வெர்மிசெல்லி நரம்பைபோல் இருக்கும்.) கறுப்பு காளானையும் 10 நிமிடம் சுடுநீரில் போட்டு நீரை பிழிந்து மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துவைக்கவும்.
கேரட்டை நன்கு கழுவி, தோல் நீக்கி, துருவி அதில் உள்ள நீரை பிழிந்து கொள்ளவும்(கேரட் சாற்றினை வீணாக்காமல் ஜுஸாக அருந்தலாம்). வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முளைவிட்ட பயறை கழுவி நீரை வடிகட்டவும். பின்னர் நறுக்கின கேரட், வெங்காயம், வெர்மிசெல்லி, காளான், இறைச்சி, மிளகுத்தூள், பிஷ் சாஸ், அஜினோமோட்டோ இவை அனைத்தையும் ஒன்றாகப் போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். உப்பையும் அத்துடன் சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முக்கால் பாகம் நீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் ரைஸ் பேப்பர் ஒன்றை எடுத்து, இரண்டு கைகளால் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, பாதியளவு பேப்பர் நீரில் நனையும்படி 30 விநாடிகள் பிடிக்கவும். பிறகு அதேபோல் மறுபாதி நனையுமாறு 30 விநாடிகள் பிடிக்கவும்.
இப்படி கொதிநீரில் நனைத்து எடுத்த பேப்பரை ஒரு தூய்மையான வெள்ளைத் துணியின் மீது விரித்து வைக்கவும். பிறகு அதன் ஒரு ஓரத்தில் கலந்து வைத்துள்ள பூரணத்தை ஒரு கரண்டியளவிற்கு வைக்கவும்.
படத்தில் காட்டியுள்ளவாறு பேப்பரின் இரண்டு ஓரங்களையும் உட்பக்கமாக மடிக்கவும்.
பின்னர் பூரணம் உள்ள அடிபாகத்தில் இருந்து மேல்நோக்கியவாறு உருட்டவும்.
இப்படியே அனைத்து பூரணத்தையும் ரோல்களாக சுருட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள ரோல்களைப் போட்டு வேகவிடவும்.
மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். பாத்திரத்தின் அளவைப் பொறுத்து, ஒருமுறைக்கு இத்தனை ரோல்ஸ் என்று போட்டு பொரித்தெடுக்கலாம்.
இரண்டு குச்சிகளைக் கொண்டு ரோல்ஸ்களை எடுத்து, எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு எண்ணெய்யை வடிக்கவும். இப்போது சுவையான சைனீஸ் ரோல்ஸ்(சைய்யோ) தயார்.
சாலட் இலைகளைக் கழுவி எடுத்து, அதன் நடுவில் சிறிது நறுக்கின புதினா, கொத்தமல்லி தழைகளை வைத்து, அத்துடன் சைனீஸ் ரோலையும் வைத்து இலையை சுருட்டிக்கொள்ளவும். இதற்கு ஃபிஷ் சாஸ் தொட்டுக்கொண்டு சாப்பிடவும். <a href="node/3179" target="_blank">பிஷ் சாஸ் செய்முறை</a>.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிக்க நன்றி!மேலும் நான் முட்டையின் அளவை குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்,மன்னிக்கவும்,இதற்க்கு 3 முட்டைகள் தேவைப்படும்.

முட்டையின் எண்ணிக்கை விடுபட்டிருந்தது. முதல் படத்தில் ஒரு முட்டை மட்டும் காட்டப்பட்டிருந்ததால், ஒரு முட்டை என்று யூகம் செய்துகொண்டேன்.

மற்றொரு சந்தேகம். இது நிறையப் பேருக்கு வரலாம். ரைஸ் பேப்பர் என்பது ரைஸினால் செய்யப்படுவதா? அல்லது எதைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது? அதனைச் சாப்பிடலாமா? பேப்பரை ரோலில் இருந்து எடுப்பது குறித்து எங்கேயும் நீங்கள் குறிப்பிடவில்லையே! அந்த பேப்பரை எடுத்துவிட்டு சாப்பிடவேண்டுமா.. அல்லது அப்படியே சாப்பிடவேண்டுமா?

ரைஸ்பேப்பர் அனைவரும் அறிந்திருப்பார்கள் என்று எண்ணிவிட்டேன்,இது அரிசியில் தயார் செய்யப்பட்டு பல அளவுகளில் விற்க்கிறது,நம் வீடுகளில் அரிசி வடகம் தயார் செய்கிறார்கள் அல்லவா அது போல் அரிசியில் செய்யப்பட்ட பேப்பர் .சதுரமாகவும் வட்டமாகவும் விற்க்கபடுகிறது,இந்த பாக்கெட் மேல் ரைஸ்பேப்பர் என்றுதான் குறிப்பிடபட்டிருக்கும்.இதை அப்படியேதான் சாப்பிடவேன்டும் காய்ந்து இருக்கும் அரிசி பேப்பர்களை கொதிக்கும் தண்ணீரில்போடும் போது வெந்துவிடும்,இதர்க்கான பொருட்க்கள்யாவும் சைனீஸ்கடைகளிள் கிடைக்கும்

எப்படி இருக்கீங்க?
ஒரு சைனீஸ் கடைக்கு சென்றபோது ரைஸ்பேப்பரை பார்த்தேன்...உடனே உங்கள் குறிப்பு ஞாபகம் வந்தது...உடனே ரைஸ்பேப்பரை வாங்கிவந்து உங்கள் செய்முறையை செய்ய அனைத்தும் தயார்செய்துவிட்டேன்...
அனால் நன்றாகவே சொதப்பிவிட்டேன்...
ரைஸ்பேப்பர் சுடுத் தண்ணீரில் நனைத்து எடுக்கும் போது ஒன்றொடு ஒன்று ஒட்டிகொண்டு பிரிப்பதற்க்குள் போதும் போதும் எர்ன்றாகிவிட்டது...
பிரித்தபிறகு பார்த்தால் முழுதும் நிறைய ஓட்டைகள்...
ரைஸ்பேப்பரை நனைக்க வேறு ஏதேனும் வழி உள்ளதா? கூறவும்....

நன்றி...

நன்றி...

எப்படி இருக்கிறீர்கள்.....முதன்முறை செய்யும் பொழுது கொஞ்சம் சிரமமாகதான் இருக்கும் போக போக சரியாகிவிடும் நீங்கள் பேப்பரை சுடுதண்ணீரில் போட்டதும் தண்ணீர் வடியும் முன் துணியில் போட்டுவிடுங்கள் எடுக்கும் பொழுதும் கைகளில் சிறிது தண்ணீர் தொட்டுக்கொண்டு எடுத்தீர்கள் என்றால் நன்றாக வரும் நன்கு தண்ணீர் உலர்ந்தாலும் எடுப்பதற்கு சிரமமாக இருக்கும் ஆகையால் சிறிது தண்ணீர் இருக்கும் பொழுதே எடுத்துவிடுங்கள் முயற்சி செய்துபார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நான் நலமாக உள்ளேன்...நீங்கள் எப்படி இருக்கீங்க?
நீங்கள் சொன்னது போல முயற்சி செய்து பார்க்கிறேன்...
நான் சூடாக தண்ணீர் இருக்கும் போதே துணியின் மேல் போடவில்லை...கைகளில் வைத்துக்கொண்டு பிரிக்க முயன்றேன்...
நன்றி...

நன்றி...

எப்படி இருக்கீங்க?தங்கள் முயற்ச்சி எடுத்தது மிக்க மகிழ்ச்சி!மேலும் நான் போட்டோவில் செய்வதுபோல் செய்யவும் ,எப்படி என்றால் ஒரு பேப்பரை எடுக்கவும் இரண்டு கைகளால் இரு பக்கமும் பிடிக்கவும் அப்படியே கொதி தண்ணீரில் பாதி அளவு படும் படி நினைக்கவும் சில நொடிகளில் அது வெந்துவிடும் பிறகு பேப்பரை மேல் நோக்கி எடுத்து வெந்த பக்கம் நாம் பிடித்துக்கொன்டு வேகாத புறத்தை தண்ணீரில் விட்டு வெந்தபின்பு ஈரத்துடன் துனியில் போடவும் சுருக்கம் வராமல் பார்த்துக்கொள்ளவும் லேசான சுருக்கம் இருந்தால் ஈரத்துடனேயே எடுத்தோமானால் வந்துவிடும்,இல்லை என்றால் மீண்டும் கொதிநீரில் விட்டு சுருங்காமல் செய்யலாம், ஜுலைஹா சொல்வது போல் போக போக பழகிவிடும்,சிலர் இந்த சிரமத்தை தவிர்ப்பதர்க்கு சமூஷா ஷீட்டை பயன்படுத்துகிறார்கள்(நம்மவர்கள்)ஆனால் இதன் ஒரிஜினல் சுவை மாறிவிடும்!மீண்டும் முயற்ச்சியுங்கள்,வாழ்த்துக்கள்!ஜுழைகாவிர்க்கும் எனது நன்றி!

நீங்கள் சொன்னது போல முயற்சி பண்ணி பார்க்கிறேன். ஆமாம் பழக பழக சுலபமாக வந்தூவிடும் என நினைக்கிறேன். முயற்சித்துப் பார்த்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
நன்றி...

நன்றி...

நலமா? சைனீஸ் ரோல்ஸ் மிக அருமையாக இருந்தது.விளக்கம்,ருசிஅருமையாக இருந்தது. பாராட்டுகள் பல. இதுப் போலவே விளக்கப்படத்துடன் சமோசா செய்வதை செய்து காட்டுவீர்களா? ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி.
அன்புடன் தமிழி.

அன்பிர்க்கினிய தமிழி
நான் நலமே, நீங்கள் நலமா?உங்கள் அன்பான விசாரிப்பிர்க்கு நன்றி!
மேலும் இந்த சைனீஸ் ரோல்ஸை செய்து பார்த்து பாராட்டியுள்ளீர்கள்!உங்கள் பாராட்டு எனக்கு குளுகுளுன்னு இருக்கிறது நம்முடைய செய் முறைய்யில் மற்றவர்கள் செய்து பார்த்து அவர்களிடம் பாராட்டு பெறும் போது உண்மைய்யில் மகிழ்ச்சியாக இருக்கிறது!மேலும் சமோசா செய்முறை முடியும் போது தருகிறேன்.

மறக்காமல் பின்னூட்டம் அனுப்ப்யதர்க்கு மிக்க நன்றி தமிழி!
என்றும் அன்புடன்
ரஸியா

ரசியா அவர்களுக்கு,,
இந்த ரோல்ஸ் செய்ய நானும் ரைஸ் பேப்பர் வாங்கி வந்தேன். அதை சுடு தண்ணீரில் போட்டதும் அது கொஞ்சம் சூருங்கிவிட்டது. மேலும் இது கொஞ்சம் எண்ணெய் பிடிக்குமா ??

தண்ணீரில் போடும் போது சிறிது சுறுங்கத்தான் செய்யும்,ஒட்டாதவாரு விரித்து துணியில் மேல் போடுங்கள்.இது அதிகம் எண்ணை குடிக்காது!

ரசியா நான் இதை இப்போ செய்து சாபிட்டாசு.. என் கணவர் மிகவும் பாராட்டினார்.
உங்களுக்கு நன்றி ..
சாப்பிட்ட மறு நொடி உங்களுக்கு என் வாழ்த்துக்கள் கூற வந்துட்டேன்.. எண்ணெய் கொஞ்சம் பிடிக்கிறது.. என் தவறு என்ன ???