வாஸ் அலங்காரம் - அலங்காரப் பொருட்கள் - அறுசுவை கைவினை


வாஸ் அலங்காரம்

Sat, 24/10/2015 - 12:38
Difficulty level : Medium
3.25
4 votes
Your rating: None

 

 • புதிதாகத் துளிர்த்த மாதுளங் கொப்புகள் சில
 • பாக்கிங் ஃபோம் ‍- ஒரு துண்டு
 • பாரமில்லாத‌ ஃபோம் குருவிப் பொம்மைகள் ‍- 2
 • சிறிய‌ வாஸ்
 • வெட் ஒயாஸிஸ்
 • க்ராஃப்ட் நைஃப்
 • க்ராஃப்ட் க்ளூ
 • இடுக்கி
 • ப்ளூ டாக் ‍- ஒரு சிறு துண்டு
 • கத்தரிக்கோல் (தோட்ட‌ வேலைக்கானது)
 • கூரான‌ கம்பி அல்லது ப்ளாஸ்டிக் குச்சு
 • வாளியில் பாதி அளவு நீர்

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

கிளைகளை அதிகாலைப் பொழுதில் சேகரித்து உடனுக்குடனே வாளி நீரில் போட்டு வைக்கவும். தளிர்கள் பெரிதாக‌ இருந்தால் சிறிது வாடினாலும் கண்ணுக்குச் சட்டென்று புலப்படும்; நிறமும் சிவப்பாக‌ இராது. அதனால் மிகவும் சிறிய‌ இலைகள் உள்ள‌ கிளைகளாகத் தெரிந்து எடுக்கவும். கிளைகளின் அடிப் பாகத்தைச் சரிவாக‌ வெட்டி விடவும். வாஸின் உள்ளே போகும் கிளைப் பகுதியில் முட்கள் இருந்தால் அவற்றையும் வெட்டி விடவும்.

பாக்கிங் ஃபோமை உதிர்த்து வைக்கவும்.

ஒயாஸிஸை வாஸுக்கு அளவாக‌ வெட்டி எடுத்து, வாஸினுள் இறுக்கிக் கொள்ளவும். முற்றாக‌ நிரம்பும் வரை நீர் நிரப்பி வைக்கவும்.

வாஸினுள் உள்ள ஒயாஸிஸில் சில இடங்களில் குச்சினால் குத்திக் கொண்டு கிளைகளைப் பொருத்தமான‌ விதத்தில் சொருகவும்.

உதிர்த்து வைத்துள்ள‌ ஃபோம் முத்துக்களை கிளைகளில் ஆங்காங்கே ஒட்டவும். பெரிதும் சிறிதுமாகக் கலந்து ஒட்டவும். தனித்த‌ முத்துக்களாகவோ இரண்டு அல்லது மூன்று சேர்ந்தாற் போலவோ ஒட்டலாம். வெளிப் பக்கம் உள்ள‌ கிளைகளில் நேரடியாக‌ க்ளூ வைத்து விட்டு இடுக்கியால் முத்துக்களைப் பொறுக்கி ஒட்டுவது சுலபமாக‌ இருக்கும். இடையில் உள்ள‌ இடங்களை நிரப்ப‌ முத்துகளை இடுக்கியால் பிடித்துக் கொண்டு, க்ளூ வைத்து இடுக்கியாலேயே சரியான‌ இடத்தில் வைக்கலாம். முட்கள் கையைக் குத்தாமல் கவனமாகச் ஒட்டவும்.

பொருத்தமான‌ இடத்தைத் தெரிந்து, பறவைகளை க்ளூ டாக் வைத்து ஒட்டவும். அலங்காரம் காய்ந்து தூக்கிப் போடும் போது பறவைப் பொம்மைகளை எடுத்துச் சேமிக்க‌ விரும்பினால் க்ளூ பயன்படுத்தாமல் இப்படி க்ளூ டாக் போட்டு வைப்பது நல்லது.

தேவையானால் கிளைகளில் மேலும் வெள்ளை முத்துக்களை ஒட்டி நிரப்பலாம்.

சுலபமான‌ அழகான‌ இந்த அலங்காரத்தைச் செய்வதற்கு, மாதுளங் கொப்புகளுக்குப் பதிலாக சிறிய இலந்தை மரக் கொப்புகளையும் பயன்படுத்தலாம்.

இங்கு இப்போது வசந்தத்தின் ஆரம்பம். இங்கு உள்ள‌ மாதுளஞ் செடி கூட‌ இலை உதிர்த்து வசந்தத்தில் துளிர்க்கிறது. அழகுக்காக‌ வளர்க்கும் இந்தச் செடியின் காய்கள் உண்ண‌ முடியாதவை. அதனால் கிளைகளை வெட்டுவது மனதிற்குச் சங்கடமாக‌ இருக்கவில்லை.

வீட்டில் குழந்தைகளோ செல்லப் பிராணிகளோ இருந்தால் எட்டாத‌ இடத்தில் வைக்க‌ வேண்டும். முட்களால் குத்திக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது; பழங்கள் என்று நினைத்துச் சாப்பிடக் கூடும்; காதினுள் மூக்கினுள் போட்டுக் கொள்ளவும் கூடும். அதனால் முத்துகள் கொட்டாத‌ விதமாக‌ ஒட்டியிருக்க‌ வேண்டும்.


ஆன்ட்டி

சூப்பர். என்னிடம் குருவிகள் இருக்கு, செய்து பார்க்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள வனிதா,

மிக்க நன்றி. செய்து அறுசுவையில் போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.
அன்புடன் செபா.