பட்டி - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?"

அன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா ?

என்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே ! பட்டி இன்னும் ஆரம்பிக்களையே ! என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .
சீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த மைண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .

இன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா ? அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா ? இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.

(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .

பட்டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.

நான் தனக்காகவும் தன் நேரத்தை செலவிடுகிறாள் அணி!!!
நானெல்லாம் கணவருக்காக காத்திருக்கும் அணி அல்ல..

எனக்கு தோன்றியதை சமைப்பேன் தோன்றும் நேரம் சாப்பிடுவேன்..

எனக்கு என் குழந்தையை இப்போது குளிப்பாட்ட வேண்டும் என்று தோன்றினால் குளிப்பாட்டுவேன்.. அந்த நேரம் குழந்தைக்காக செலவளிக்கிறேன் என்று நான் சொல்ல மாட்டேன்.. என் கடமையை எனக்கு தோன்றிய நேரத்தில் செலவிடுகிறேன்..

என் கணவருக்கு உணவை எடுத்து வைத்து விட்டு பலதடவை தூங்கியிருக்கிறேன்(நீங்களும் செய்து இருப்பீர்கள்)..

உணவு சமைப்பது இதை எல்லாம் அடுத்தவர்களுக்காக செலவிடும் நேரம் இல்லை.. நாமும் சாப்பிடுகிறோமே தோழீஸ்!!!!நமக்காக சமைப்பதாக எடுத்து கொண்டால் அந்த நேரமும் நம் நேரமே!!!
எதிர்ப்பு தெரிவித்தால் தான் பட்டி சூடு பிடிக்கும் என்று சொல்லி கிளம்புகிறேன்..

வாதங்கள் சூடு பிடிக்குது.. எதிர்ப்பு!!! .. பட்டிக்காக மட்டும்!

எதிரணி,

மிக திறமையாக செயல்படும் எம் எதிரணி பேச்சாளருக்கு என் வாழ்த்துக்கள்!

//எனக்கு என் குழந்தையை இப்போது குளிப்பாட்ட வேண்டும் என்று தோன்றினால் குளிப்பாட்டுவேன்.// தங்கள் வாதப்படி எல்லாம் எல்லாருக்கும் சரி வராது. ஒவ்வொருத்தருடைய திட்டமிடலும் இயலாமையும் அதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணத்துக்கு ஒரு குழந்தையை நாம் நினைத்த போதெல்லாம் குளிப்பாட்ட முடியாது. அதற்கென்று நேரம் பார்க்க வேண்டும். காலநிலையை பொறுத்து சில வேலைகளை முன்னதாகவோ / பின்னதாகவோ செய்ய வேண்டி வரும். அது அவரவர் வசதி.
மேலும் நான் சொன்னது தனியாக குழந்தையை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்களுக்காக எனவும் எடுத்துக்கொள்ளலாம். அவரவர் அவரோட அனுபவங்களையும் அவரை சார்ந்தோர் படும் கஷ்டங்களையும் வைத்து வாதிடுவார்கள். நான் குறிப்பிட்டுள்ளது போல் உங்களுக்கு இது வரை ஒன்று கூட நடந்ததில்லையா! ஆச்சர்யமாக இருக்கிறது. (உங்களுக்கும் நடந்திருக்கும்.!)

//என் கடமையை எனக்கு தோன்றிய நேரத்தில் செலவிடுகிறேன்..// வீட்டிலிருக்கும் பெண்களுக்கு எப்போதுவேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமே! வேலைக்கு செல்லும் பெண்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் சகோதரி

//நானெல்லாம் கணவருக்காக காத்திருக்கும் அணி அல்ல..// //என் கணவருக்கு உணவை எடுத்து வைத்து விட்டு பலதடவை தூங்கியிருக்கிறேன்(நீங்களும் செய்து இருப்பீர்கள்)..// இதுவும் அவரவர் விருப்பம். நீங்கள் உங்களுக்காக நேரங்களை ஒதுக்க பார்க்கிறீர்கள். வந்து சாப்பிடட்டும் நாம தூங்குவோம் என்றெல்லாம் எல்லாராலும் நினைக்க முடியாது தோழி. நமக்காக தினமும் ஓயாது உழைக்கும் அவருக்கு பிடித்ததை சமைத்ததை காட்டிலும் பரிமாறுவதிலே ருசி அதிகரிக்கும். நமக்காக என்னவள் காத்திருக்கிறாள் என்றெண்ணமும் ஒரு பிடித்தத்தை உண்டாக்கும். அதில் அலாதி இன்பம். நன்கு இட்லி சாப்பிடும் கணவர் அருகில் மனைவி அமர்ந்திருந்தால் 6 இட்லி கூட சாப்பிடுவார். மனதார பரிமாறிய சந்தோஷம் நாம் பிடித்ததை சாப்பிட்டாலும் கிடைக்காது.

//நாமும் சாப்பிடுகிறோமே தோழீஸ்// ஆமாம் நாமும் தான் சாப்பிடுகிறோம். நமக்காக அவ்வளவு மெனக்கிடுவோமா என்பதை யோசிக்க வேண்டும். நமக்கு சாதாரணமாக (உதாரணத்துக்கு) தோசைக்கு இட்லிபொடி அல்லது தேங்காய் சட்னி வைத்து சாப்பிடுவோம். கணவர் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்காக ஸ்பெஷலாக சமைக்க மாட்டோம் என்று சொல்வதெல்லாம் பட்டி பேச்சுக்கு சரியாக வரும். நடைமுறையில் எப்படி நடக்கிறோம் என்பதையும் யோசிக்கவேண்டும்.

//நமக்காக சமைப்பதாக எடுத்து கொண்டால் அந்த நேரமும் நம் நேரமே!!!// இது வாசகம் மிகவும் பிடித்திருக்கிறது. நாம் சமைப்பதை மட்டும் குறிப்பிடவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.

எம் அணிக்கு சார்பாக வாதிட பேச்சாளர்களை அழைக்கிறேன் !!

- பிரேமா

தோழிகளே, உங்களின் வருகைக்கும் வாதங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் பல . நடுவராக சிலவிஷயங்களை விளக்கும் கடமை உள்ளதால் இந்தப்பதிவு . மன்றத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி உங்களின் பதிவுகள் இருக்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கும். புது தோழிகள் என்பதால் விதிமுறைகள் பற்றிய விபரங்கள் தெரியாமலும் இருக்கலாம் . பட்டிமன்ற விபரங்கள் என்ற இழையில் அனைத்தும் உள்ளன . இருந்தும் இங்கும் சொல்கிறேன் .

எங்கள் அணியினர் சொன்னதுபோல் அல்லது எதிரணியினர் சொன்னதுபோலன்னு நீங்க சொல்லலாம் தவறில்லை . ஆனால் ஒருவரின் பெயரை சொல்லி கருத்து வாதங்கள் வேண்டாம் . அதுபோல எதிரணியிணரின் வாதங்களை மேற்கோள் காட்ட வேண்டுமானால் பொதுவாக சொல்லி வாதிட்டால் போதுமானது . தனிப்பட்ட ஒருவரின் பதிவுகளை மேற்கோள்காட்டி பதிவிட அவசியம் இல்லை . (நீங்கள் கேட்களாம் நடுவர் மட்டும் அப்படி செய்கிறார் என்று !! என்ன செய்ய நடுவர் இருதரப்பையும் அலச வேன்டுமல்லவா.. :-)

வாதங்களை படித்துவிட்டு விளக்கத்துடனும் கருத்துடனும் வருகிறேன் . இப்போதைக்கு பட்டி சூடுபிடித்துள்ளது.... மகிழ்ச்சி . தொடருங்கள் உங்களின் அனல் பறக்கும் வாதங்களை . பட்டியை சிறப்பாக எடுத்து செல்லும் இரு அணியினருக்கும் வாழ்த்துக்கள்.

தங்கள் விளக்கத்துக்கு நன்றி

உங்களின் பதிவை பார்த்து தான் நானும் அப்படி செய்தேன். இதுவரை பட்டியில் கலக்காததால் விதிமுறைகளை பற்றி தெரியவில்லை. இனி மாற்றி கொள்கிறேன். அதுவும் நடுவர் (ஏதோ) ஒரு அணிக்காக வாதிடுவது புதுமையாக உள்ளது. அதை பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும். விதிமுறைகளை இன்னும் விரிவாக படிக்க வில்லை.

சாதாரணமாக பட்டிமன்றத்திலும் எதிரணி கூறிய பாய்ண்டை மேற்கோள் காட்டி வாதிடுவார்கள். அப்போது தானே சரியான வாதமாக இருக்கும். அதனால் செய்தேன்.

இது சாதாரணமாக வாதமே தவிர எனக்கும் தோழிக்கும் எந்த விதமான மனக்கசப்பும் இல்லை. அவர் அறுசுவையில் எனக்கு மிகவும் பிடித்த நபர். அவருக்கும் இது புரியும் என்று நம்புகிறேன். தவறிருந்தால் அனைவரும் மன்னிக்கவும் !!

- பிரேமா

வணக்கம் நடுவரே! இவ்வளவு கால தாமதத்திற்கு மன்னிக்கவும் .அடுத்தவர்கான‌ கடமை என்னை தட்டி அழைத்ததால் இவ்வளவு தாமதம் .
எதிரணியினர் கூறினார்கள் நவராத்திரி 9 நாளும் தங்களுக்காக தங்கள் நேரங்களை செலவு செய்வதாக ஆனால் அந்த வருடத்தில் மீதம் உள்ள 356 நாட்களையும் அவர்களை அறியாமலேயே அடுத்தவர்களுக்கு செலவு செய்கின்றனர் என்பது என் கருத்து.
மற்றொரு தோழி கூறினார் தனக்கு பிடித்தமான உணவுகளை சமைப்பதாக அது எல்லோருக்கும் பொருந்தாது .நான் சமைக்க எடுக்கும் என் நேரம் முழுவதும் என் கணவர்,மாமி,மாமா என அனைவரும் ஏற்று விரும்பி சாப்பிட கூடிய உணவையே நான் சமைக்க வேண்டும் .
எனக்கு புலாவ் ரைஸ் பிடிக்கும் ஆனால் என் வீட்டில் யாருக்கும் பிடிக்காது .கடந்த ஆறு மாதங்களாக சமைத்து சாப்பிட நினைத்தும் இன்று நேரம் கிடைக்கவில்லை.இது என்ன கெடுமை:-(.

எனது அணியினர் கூறியது போல் எதிர்ப்பு பட்டிக்கு மட்டும்.:-)

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

நடுவருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

நடுவரே, எனக்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க.

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, கணவர், குழந்தைகள், மாமியார், மாமனார், மச்சினர், நாத்தனார், கொழுந்தனார் இவங்கல்லாம் அடுத்தவங்களா என்ன?

இவங்க எல்லோருடைய நன்மைக்காகவும் நாம பாடுபடுவது என்பதை அடுத்தவங்களுக்குன்னு எப்படி சொல்லலாம்?

இவங்களுக்காக நாம் செய்வது எல்லாம் நூறு பங்கு நமக்கு திரும்பக் கிடைக்குதா இல்லையா?

நாத்தனாருக்க்காக காலையில் பிடிச்ச டிஃபன் பண்ணிக் கொடுக்கிறீங்களா>

“அண்ணி, காலேஜ் விட்டு வர்றப்ப உங்களுக்குப் பிடிச்ச முல்லைப்பூ பார்த்தேன், வாங்கிட்டு வந்தேன், வச்சுக்குங்க” என்று அன்புடன் பூவைச் சூட்டி விடுவாங்களே, அந்த மணம் உங்களுக்கே உங்களுக்குதானே.

மாமனார் பூஜைக்காக எல்லாம் எடுத்து வைக்கிறீங்க நீங்க. சாயங்காலம் லைப்ரரியில் இருந்து வர்றப்ப, உங்களுக்கு பிடிச்ச எழுத்தாளர் புக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்து கொடுக்கிறாரே, அது உங்களுக்கான நேரமாக அவர் செய்து கொடுப்பதுதானே.

கொழுந்தனார், மச்சினர் எல்லாம் லீவுக்கு வந்தப்ப சலிக்காம சமைச்சுப் போட்டீங்களே, நீங்க அவங்க ஊருக்குப் போனப்ப, ரிலாக்ஸ்ட் ஆக தூங்கி எழுந்ததும், உங்களுக்காக ஸைட் சீயிங் அரேஞ்ச் பண்ணி அனுப்பி வச்ச அனுபவங்கள் உங்களுக்கே உங்களுக்கானதுதானே.

குடும்பத்தில் மூத்த பெண்ணாக, தம்பிகள் தங்கைகளை பாத்துகிட்டீங்க, இன்னிக்கு உங்க பிள்ளைகள் படிப்பா, கல்யாணமா, ஓடோடி வந்து உங்க மனசு நினைக்கிறதை நொடியில் நடத்திக் காட்டறாங்களே, இதெல்லாம் உங்களுக்காக நடப்பதுதானே.

பிள்ளைகளுக்காக ஓடி ஓடி உழைக்கிறேனேன்னு தோணுதா? கவலையே படாதீங்க, அவங்க செட்டில் ஆனதும் என்ன செய்யறது போரடிக்குதுன்னு நீங்க புலம்பறப்ப - கவலைப்படாதீங்க அம்மா, இதோ புது லேப் டாப், காமிரா, மொபைல் - உங்களுக்குப் பிடிச்ச அறுசுவை பாருங்க, சமையல் குறிப்பு அனுப்புங்கன்னு உங்க நேரத்தை உங்களுக்காக செலவு செய்ய சொல்லித் தர்றாங்க பாருங்க.

இன்னிக்கு நீங்க குடும்பத்தினருக்காக செலவு செய்யறதாக நினைக்கிற நேரமெல்லாம், வங்கியில் டெபாசிட் செய்த மாதிரி. வட்டியோட உங்களுக்கான நேரமாக ஏதோ ஒரு வடிவில் கிடைச்சிட்டுதான் இருக்கு.

அடுத்தவங்க என்றால் - ரத்த சம்பந்தம் இல்லாதவங்க, அக்கம்பக்கம், தெரு, ஊர், நாடு, இவங்களுக்காக - அவங்க நலம் நாடி உழைக்கிறீங்களா - நீங்க நெஜமாவே க்ரேட், க்ரேட்.

அதைப் பத்தி புலம்பறதுக்கு ஒண்ணுமே இல்ல, உங்களை மாதிரி அடுத்தவங்களுக்காக நேரத்தை செலவு செய்யும் தைரியம் உள்ள பெண்கள் ரொம்பத் தேவையா இருக்காங்க இப்ப.

வாங்க வாங்க

அன்புடன்

சீதாலஷ்மி

//அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, கணவர், குழந்தைகள், மாமியார், மாமனார், மச்சினர், நாத்தனார், கொழுந்தனார் இவங்கல்லாம் அடுத்தவங்களா என்ன?/// ஒன்னு கேக்கலாமா? மத்தவங்க சாப்பிட்டா நம்ம வயிறு நிறையுமா? நாம் நமக்காக சாப்பிட்டு தானே ஆக வேண்டும். யாரும் அடுத்தவங்கன்னு சொல்லல.

நீங்கள் ஒரு கூட்டு குடும்பத்தில் இருக்கிறீர்கள்.! அதனால் வேலை பகிர்ந்தளிக்கப்படும். உடம்பு சரியில்லாத நேரத்திலும் உங்களை கவனிக்க / தாங்க ஆள் இருப்பாங்க. பாதுகாப்பா இருப்பீங்க. எத்தனை பெண்கள் தனியாக கணவரோடும் குழந்தையோடும் இருந்துகொண்டு வேலைக்கும் போய்கொண்டு வீட்டையும் கணவரையும் குழந்தையும் தன்னையும் கவனிக்கிறார்கள் என்பதையும் தாங்கள் யோசித்து பார்க்க வேண்டுமல்லவா? உங்களுக்கு எது மன நிறைவோ / சந்தோஷமோ அது மற்றவர்களுக்கும் எப்படி இருக்கும் என்று யோசிக்கவேண்டும்.!

வீட்டில் ஆள் இருந்தால் நாங்களும் எங்களுக்கான நேரத்தை மிக சுலபமாக உபயோகிப்போம். தனியாக கவனித்து பாருங்கள். பகட்டுக்காக இல்லையென்றாலும் எதார்த்தம் அது தான்.

//பிள்ளைகளுக்காக ஓடி ஓடி உழைக்கிறேனேன்னு தோணுதா? கவலையே படாதீங்க, அவங்க செட்டில் ஆனதும் என்ன செய்யறது போரடிக்குதுன்னு நீங்க புலம்பறப்ப - கவலைப்படாதீங்க அம்மா, இதோ புது லேப் டாப், காமிரா, மொபைல் - உங்களுக்குப் பிடிச்ச அறுசுவை பாருங்க, சமையல் குறிப்பு அனுப்புங்கன்னு உங்க நேரத்தை உங்களுக்காக செலவு செய்ய சொல்லித் தர்றாங்க பாருங்க.// குழந்தைகளுக்காக உழைக்கிறதுல எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லையே. சொல்லப்போனால் வீட்டில் கணவரும் மனைவியும் வேலைக்கு போவதே குழந்தைகளுக்காக தானே. அவர்களோட எதிர்காலத்துக்காகத்தானே! அது எப்படி சுமையாக முடியும்.? வாதமே நமக்கான நேரத்தை நாம் செலவிடுகிறோமா என்பது தானே. அது தேவைப்படும் நேரத்தில் கிடைக்காமல் முடியாத / வயதான நேரத்தில் / காலத்தில் கிடைத்தென்ன பலன்? காலம் போன காலத்தில் யூ டியூப் பார்த்து என்ன செய்ய போகிறோம்? நடைமுறையில் சாத்தியமா என்பதையும் பார்க்க வேண்டும்.

//அதைப் பத்தி புலம்பறதுக்கு ஒண்ணுமே இல்ல, // இதை நீங்கள் தனியாக குழந்தையை சமாளித்து வீட்டையும் பராமரித்து உங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்கி, இருக்கிறீர்கள் என்றால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். கூட்டு குடும்பத்தில் / ஒற்றுமையான குடும்பத்தில் இருந்தால் இப்படி தான் பேச முடியும். நிஜத்தில் நங்கள் க்ரேட் !! உங்கள் சேவை தொடர, உங்கள் சந்தோஷம் நிலைக்க என் வாழ்த்துக்கள் !!

- பிரேமா

///காலையில் எழுந்து அனைவரின் பணிகளை முடிக்கும் வரை அந்த பெண்ணால் டெஅ குடிக்க மனம் வராது/// டீயா ? பச்ச தண்ணிகூட பல்லுல படாதுங்க.

///ஒரு சிறிய விடயத்தில் கூட நாம் எடுக்கும் முடிவு யாருக்கும் பதிக்குமா? என மற்றவர்களுக்காக தன் யோசிப்பாள் வீக் எண்டை எடுத்து கொண்டால் கூட குழத்தைக்கு பரிட்சை என்றால் வெளியே போக மாட்டோம் இல்லயா? என் வாதம்களை வைத்துவிட்டேன் நடுவரே ! இதில் நான் சொல்வது சரிதானே/// மிக்க சரிதான் ... நான் ஒத்துக்கொள்கிறேன் உங்களின் வாதங்களை , உங்க எதிரணி ஒத்துக்குறாங்களான்னு பார்க்கலாம்.

///சில பெண்கள் வீட்டு வேலைகளை வேகமாக முடித்து தனக்காக நேரம் செலவிட தயாராகும் பொது திடீரென முளைக்கும் அடுத்த வேலை; எதிர்பாராத விருந்தினர் வருகை; மறந்த முக்கியமான வேலை நினைவுக்கு வருவது; குழந்தை தூங்கி விழிப்பது போன்ற நேரங்களில் "நமக்கு நல்லது நடந்துட்டாலும் "! என்ற ஒரு புலம்பல்./// அட அட என்ன அருமையா பெண்களின் புலம்பலை சொல்லியிருக்கீங்க.... அந்தக்குரல்களின் சேர்க்கையில் என் குரலும் இருக்கிறதான்னு பாருங்கப்பா ?

///காலை தினமும் 7 மணி வரையாவது தூங்கும் குழந்தை விடுமுறை நாளன்று மட்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பது எப்படி? /// பெண்களுக்கு எதிரா என்னெல்லாம் சதிநடக்குது பாருங்க ??!!
///நம் திட்டமிடலில் தான் குறை; அந்த சிறிது நேர ஒய்வு கூட நாம் எடுத்திருக்கக்கூடாது என்று மனம் வெறுத்து புலம்ப மட்டுமே தெரிந்த ஒரு ஜீவன் பெண் !!/// கடைசில அந்த வேலைகளை செய்யவே முடியாதா ?

பெண்கள் தங்களை அறியாமலோ அல்லது அறிந்தும் முடியாமலோ தங்களது நேரத்தை தனக்காக செலவிடுவதில்லைன்னு ஆணித்தரமா சொல்லி உங்களின் அணிக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கீங்க . வாழ்த்துக்கள் பிரேமா...
காத்திருந்து பார்க்கலாம் உங்களின் எதிரணி இதற்கு சரியான விளக்கம் கொடுக்கிறார்களா என்று?

பட்டிக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்... நீங்கள் பெண்கள் தங்களின் நேரத்தை தனக்காக செலவிடுகிறாள் அணியா ?
///உணவு சமைப்பது இதை எல்லாம் அடுத்தவர்களுக்காக செலவிடும் நேரம் இல்லை.. நாமும் சாப்பிடுகிறோமே தோழீஸ்!!!!நமக்காக சமைப்பதாக எடுத்து கொண்டால் அந்த நேரமும் நம் நேரமே!!!/// அதானே இது அடுத்தவங்களுக்கு செய்கிறோம்னு நாம் செய்யாமல் விடுவதில்லையே..

///எதிர்ப்பு தெரிவித்தால் தான் பட்டி சூடு பிடிக்கும் என்று சொல்லி கிளம்புகிறேன்../// சூடு கிளப்பி பற்றவைத்து விட்டு எங்கே போனீர்கள்? உங்களின் எதிரணியினர்களின் வாதங்களுக்கும் பதில் கொடுக்கவேண்டுமல்லவா ?! விரைந்து வாருங்கள்...

மேலும் சில பதிவுகள்