பட்டி - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?"

அன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா ?

என்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே ! பட்டி இன்னும் ஆரம்பிக்களையே ! என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .
சீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த மைண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .

இன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா ? அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா ? இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.

(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .

பட்டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

//காத்திருந்து பார்க்கலாம் உங்களின் எதிரணி இதற்கு சரியான விளக்கம் கொடுக்கிறார்களா என்று?// எதிரணியில் ஒருவரேனும் தனியாக குழந்தையும் வீட்டையும் கவனித்து, வேலைக்கும் சென்று, தனக்காகவும் நேரம் ஓதுக்குகிறோம் என்று வாதிடுவார்களா?! என்று நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!!

- பிரேமா

பிரேமா, உங்கள் எதிரணித்தோழியின் வாதங்களை ஒன்னுமில்லாமல் ஆக்கிட்டீங்க !
///நன்கு இட்லி சாப்பிடும் கணவர் அருகில் மனைவி அமர்ந்திருந்தால் 6 இட்லி கூட சாப்பிடுவார்./// நிஜமா சொல்லுங்க பக்கத்துல உக்கார்ந்து பரிமாறுகிறார்கள் ?
உங்களின் எதிர்வாதம் மிக அருமை . தொடர்ந்து உங்கள் அணிக்கு பலம் சேர்த்துங்கள் .

//நிஜமா சொல்லுங்க பக்கத்துல உக்கார்ந்து பரிமாறுகிறார்கள் ?// நான் செய்கிறேனா என்று கேட்கிறீர்களா? நான் செய்வதை தான் சொன்னேன். என் கணவருக்கு பரிமாறுவதில் எனக்கு அலாதி இன்பம். அதுமில்லாமல் எங்கள் வீட்டிலும் எங்கள் மாமி வீட்டிலும் கணவருக்கு பரிமாறி தான் மனைவிமார்கள் சாப்பிடுவார்கள். வழக்கத்துக்காக இல்லையென்றாலும் என் விருப்பத்திற்காகவும் செய்கிறேன்.

- பிரேமா

///இதுவரை பட்டியில் கலக்காததால் விதிமுறைகளை பற்றி தெரியவில்லை. //
புதுமுகங்களை பட்டி அன்புடன் வரவேற்க என்றும் தவறியதில்லை தோழி. அது தெரியாமல் நடந்த தவறு என்பது புரிந்துதான் விதிமுறைகளை தெரிவித்துள்ளேன் :-)

////அதுவும் நடுவர் (ஏதோ) ஒரு அணிக்காக வாதிடுவது புதுமையாக உள்ளது. அதை பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்/// உங்களின் இந்த வரி எனக்கு புரியவில்லை . விளக்கினால் எனது பக்க விளக்கம் கண்டிப்பாக கிடைக்கும் .

///சாதாரணமாக பட்டிமன்றத்திலும் எதிரணி கூறிய பாய்ண்டை மேற்கோள் காட்டி வாதிடுவார்கள். அப்போது தானே சரியான வாதமாக இருக்கும். அதனால் செய்தேன்./// இதில் தவறில்லை . ஆனால், வாதிட்ட தோழிகளின் மனம் வருந்தக்கூடாது பாருங்கள் . அதனால் உங்களின் நடையிலேயே உறைத்தால் போதுமானது .

///இது சாதாரணமாக வாதமே தவிர எனக்கும் தோழிக்கும் எந்த விதமான மனக்கசப்பும் இல்லை./// பழைய பட்டிகளைப் படித்துப்பாருங்கள் பல குடுமிப்பிடிகள் அறங்கேறியிருக்கும் . ஆனால் பட்டியில் மட்டுமே என்பது மற்றயிழைகளில் தங்களுக்கே புரியும்.

///தவறிருந்தால் அனைவரும் மன்னிக்கவும் !!/// அறுசுவையில் யாரும் யாரையும் தவறாக நினைக்கமாட்டார்கள் . ஆனால் அது அப்படியே தொடர இந்த விதிமுறைகள் அவசியம் என்பதை அனைவரும் புரிந்துகொண்டால் நலம் . வாதங்களைப்பார்ப்போம் தோழி .

பட்டிக்கு வருக வருக என வரவேற்கிறேன் .
///அடுத்தவர்கான‌ கடமை என்னை தட்டி அழைத்ததால் இவ்வளவு தாமதம் ./// நீங்க சொல்லாமலே அணி புருஞ்சுபோச்சுங்க .

///எதிரணியினர் கூறினார்கள் நவராத்திரி 9 நாளும் தங்களுக்காக தங்கள் நேரங்களை செலவு செய்வதாக ஆனால் அந்த வருடத்தில் மீதம் உள்ள 356 நாட்களையும் அவர்களை அறியாமலேயே அடுத்தவர்களுக்கு செலவு செய்கின்றனர் என்பது என் கருத்து./// இது ஒரு நல்ல கருத்துதான் .

///எனக்கு புலாவ் ரைஸ் பிடிக்கும் ஆனால் என் வீட்டில் யாருக்கும் பிடிக்காது .கடந்த ஆறு மாதங்களாக சமைத்து சாப்பிட நினைத்தும் இன்று நேரம் கிடைக்கவில்லை.இது என்ன கெடுமை:-(./// இன்னுமா சாப்பிட முடியவில்லை !? பட்டி முடிந்ததும் பார்சல் அனுப்பி வைக்கிறேன் .
வாதங்களை தொடருவீர்கள் என நம்புகிறேன்...

//அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, கணவர், குழந்தைகள், மாமியார், மாமனார், மச்சினர், நாத்தனார், கொழுந்தனார் இவங்கல்லாம் அடுத்தவங்களா என்ன?/// அந்தக்கேள்வி எனக்குள்ளும் வந்திருக்கு !!

///கொழுந்தனார், மச்சினர் எல்லாம் லீவுக்கு வந்தப்ப சலிக்காம சமைச்சுப் போட்டீங்களே, நீங்க அவங்க ஊருக்குப் போனப்ப, ரிலாக்ஸ்ட் ஆக தூங்கி எழுந்ததும், உங்களுக்காக ஸைட் சீயிங் அரேஞ்ச் பண்ணி அனுப்பி வச்ச அனுபவங்கள் உங்களுக்கே உங்களுக்கானதுதானே./// இப்படி நடக்குமா??!!

///கவலைப்படாதீங்க அம்மா, இதோ புது லேப் டாப், காமிரா, மொபைல் - உங்களுக்குப் பிடிச்ச அறுசுவை பாருங்க, சமையல் குறிப்பு அனுப்புங்கன்னு உங்க நேரத்தை உங்களுக்காக செலவு செய்ய சொல்லித் தர்றாங்க பாருங்க./// நம்ம அறுசுவை பார்க்காம இருக்க முடியுங்களா ?? வாய்ப்பே இல்லை...

///இன்னிக்கு நீங்க குடும்பத்தினருக்காக செலவு செய்யறதாக நினைக்கிற நேரமெல்லாம், வங்கியில் டெபாசிட் செய்த மாதிரி. வட்டியோட உங்களுக்கான நேரமாக ஏதோ ஒரு வடிவில் கிடைச்சிட்டுதான் இருக்கு./// அப்போ உங்க எதிரணியினரை ஆளுக்கு ஒன்றாக ஃபிக்சட் டெபாசிட் பண்ண சொல்லிறலாம்..(நம்மலால முடுஞ்சது...)

எதிரணியினர் என்றுகூட யோசிக்காமல் பாராட்டியிருக்கீங்க....உங்களின் வாதங்களுக்கு எதிரணியினரின் பதில் என்னவென்று பார்க்கலாம்.

((ஒன்னு கேக்கலாமா? மத்தவங்க சாப்பிட்டா நம்ம வயிறு நிறையுமா?//)) ///மனதார பரிமாறிய சந்தோஷம் நாம் பிடித்ததை சாப்பிட்டாலும் கிடைக்காது./// யாரோ தனது முந்தைய வாதங்களின்போது இப்படி சொல்லியதுபோல காதில் விழுந்ததே...!!( அப்பாடா அந்த எதிரணிக்கும் பற்றவைத்தாகிவிட்டது...இப்பதான் திருப்தி).

///வீட்டில் ஆள் இருந்தால் நாங்களும் எங்களுக்கான நேரத்தை மிக சுலபமாக உபயோகிப்போம்./// இது யோசிக்க வேண்டிய விஷயம்தான்....

///அது தேவைப்படும் நேரத்தில் கிடைக்காமல் முடியாத / வயதான நேரத்தில் / காலத்தில் கிடைத்தென்ன பலன்? காலம் போன காலத்தில் யூ டியூப் பார்த்து என்ன செய்ய போகிறோம்? நடைமுறையில் சாத்தியமா என்பதையும் பார்க்க வேண்டும்./// இதுவும் நியாயம்தான்...

உங்களின் எதிரணி என்ன விளக்கம் தருகிறார்கள் என்று பார்ப்போம்.

///எதிரணியில் ஒருவரேனும் தனியாக குழந்தையும் வீட்டையும் கவனித்து, வேலைக்கும் சென்று, தனக்காகவும் நேரம் ஓதுக்குகிறோம் என்று வாதிடுவார்களா?! என்று நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!!/// நானும் காத்திருக்கிறேன்...( தோழி ஒரு ரகசியம் சொல்கிறேன் அறுசுவையில் இப்படிப்பட்டவர்களும் சம அளவில் உள்ளனர்...)

///வழக்கத்துக்காக இல்லையென்றாலும் என் விருப்பத்திற்காகவும் செய்கிறேன்./// மகிழ்ச்சி தொடரட்டும் உங்களின் உபசரிப்புகள்..:-)

பட்டி தீர்ப்பு காலையில் வெளியிடப்படும் என்பதை அன்புடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் . தங்களின் வாதங்கள் மீதமிருந்தால் காலை 9 மணிக்குள் சமர்ப்பிக்கவும் என கேட்டுக்கொள்கிறேன் .

முதலில் பட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் கூற கடமைப்பட்டுள்ளேன் . இரு அணிகளும் கிடைத்த நேரங்களில் எல்லாம் தங்களது வாதங்களை அருமையான முறையில் தவறாமல் பதிவிட்டு தன் அணியினை முன்னிருத்தி வாதிட்டீர்கள் .

ஆனால் ஒரு விஷயம் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவே இல்லை.....!!! ஒரு பெண் என்பவள் மனவியும் ,தாயும் மட்டும்தானா ??? அதாவது , ஒரு பெண்ணின் நேரம் என்பது அவள் திருமணத்தின் பின்பு என்பதாகவே எண்ணி அனைவரும் வாதிட்டது என்னை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையவைத்தது .

இன்னும் புரியவில்லையெனில் எனது கருத்துகளை படியுங்கள் . ஒரு பெண் பிறந்ததில் இருந்து திருமணம் வரை அவள் வீட்டில் இருக்கிறாள் . குறைந்தது 25 வருடங்கள் .
பிறகு வாழ்நாள் முழுவதும் (சராசரியாக 50,60 வயது வரை // அதற்கு மேலும் இருந்தால் மகிழ்ச்சியே///) மனைவியாக , மருமகளாக , தாயாக , கணவன் வீட்டாரின் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உறவுமுறையாக இருக்கிறாள் . அவளது கடமைகள் உறவுக்கு தக்கவாறு மாறுபடும் . திருமணத்திற்கு பிறகு வரும் வாழ்வையே நான் இரண்டாக பிரித்து யோசிக்கிறேன் .

பெண் எவ்வளவு காலம் கஷ்டப்படுகிறாள் ?? ( உண்மையில் அது ஒவ்வொரு பெண்ணும் கஷ்டம் என்று மனதுள் எண்ணுவதே காரணம் . அதே சமயம் அவள் மட்டும் குடும்பத்திற்காக கஷ்டப்படவில்லை என்பதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டும்) .

முதல் கட்டம் - குழந்தை பிறப்பு முதல் அவர்கள் படிப்பு முடியும் வரை ( அல்லது அவர்களின் திருமனம் முடியும்வரை ) .

இரண்டாம் கட்டம் - பிள்ளைகள் திருமனம் முடிந்து அவரது மருமகள் அல்லது மருமகனிடம் பொறுப்புகள் கொடுத்துவிட்டு இருக்கும் காலங்கள்...

இவ்வாறாக பெண்ணின் வாழ்க்கையை மூன்றாக பிரிக்கலாம் .( இரண்டு காலம் குடுத்துட்டு மூன்றுன்னு சொல்றீங்களேன்னு கேக்கப்பிடாது , திருமனத்திற்கு முன் ஒரு காலகட்டம் இருக்காக்கும்..:-))

தி.மு தன்வீட்டில் பெண் அனுபவிக்காத சுதந்திரம் ஏதாவது மிச்சம் இருக்கா ? சிறு வயதில் அம்மா வேண்டாமென்று சொன்னாலும் கூட அப்பா எவ்வளவுதான் நேரமாகி வீடு வந்தாலும் அவருடன் சைக்கிளோ , பைக்கோ ஒரு சுற்று சுற்றினால்தான் தூங்குவேன் என்று சொல்லி சென்றிருப்பீர்களே... ! அது உங்களின் நேரம்....

நான் டான்ஸ் கத்துக்கனும் , நான் கராத்தே போகனும் , என் தோழிகள் சுற்றுலா போறாங்க ப்ளீஸ்மா இம்முறை நான் பாட்டி வீட்டிற்கு வரலை நீங்க போயிட்டுவாங்கன்னு சொல்லி ஓடுவீங்களே அது உங்களுக்கன நேரம் என்பதை எப்படி மறந்தீர்கள் ??? உங்களை வகுப்பில் விட்டு அழைத்துவரும் நேரங்களெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பீர்கள் ?

உங்களுக்கு திடீர் உடல்நல பாதிப்பு வரும்போது என்னதான் அம்மா கூடவந்தாலும் மனம் அப்பாவை எதிர்பார்க்கும் . அப்போது ஓடிவரும் அப்பா அம்மாவிடம் சாதாரண காய்ச்சல்தானேமா நீயே பார்த்திருக்கலாம்ல ? இப்போ ஆபீஸ்ல மீட்டிங்கல இருக்கனும் நான் , உங்களுக்காக என் நேரத்தை வீணடித்து ஓடிவந்துட்டேன் என எந்த அப்பாவும் உனக்காக நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன் என சொல்லிக்காட்டியதில்லை என நம்புகிறேன் . அப்படி சொல்லி காட்டியிருந்தால் அதுவும் உங்களுக்கான நேரம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்...!!!

எந்தவொரு தாத்தாவும் பாட்டியும் ஊருக்கு வந்திருக்கும் பேத்தியை கோவிலுக்கும் தோட்டத்திற்கும் போகும் வழியில் பார்க்கும் அல்லது கேட்கும் அனைவரிடமும் இது என் பேத்தியாக்கும் , இவ நல்லா பாடுவா ! பரதம் ஆடுவா , பட்டணத்துல நல்லா படுச்சிருக்கா , இப்படி சொல்லி பெருமைப்படும் நேரங்கள் உங்களுக்கே உங்களுக்கானவை என்பதை எப்படி உணராமல் இருந்தீர்கள் ??? !!!

பெண்ணின் ஜாதகத்தையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு அப்பா அம்மா மட்டுமல்ல மாமன் , அத்தை ,பாட்டி , பெரிய தாத்தா , ஒன்னுவிட்ட அண்ணன் , தம்பி , என வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் அனைவரும் உங்களின் வாழ்வு சிறக்க வரன் தேடும் காலம் அனைத்தும் அந்த நேரங்கள் அனைத்தும் உங்களுக்கானவையே...!!! நீங்கள் கேட்கலாம் இவற்றில் எங்கள் நேரம் எப்படி செலவிடப்படும் ? ( அவர்கள் வரன் தேடும்போது நீங்கள் உங்களின் விருப்பங்களை செய்கிறீர்களே !! படிப்பது , வேலைக்கு செல்வது , அல்லது விருப்ப தொழில் செய்வது , வெறுமனே தோழிகளோடு காலம் கடத்துவது இப்படி பல ) இதெல்லாம் செய்வது அவர்களது கடமை என்று . அதே நாட்களில் போகும் இடத்தில் என்ன பெண் வளர்த்தி வைத்துள்ளீர்கள் என திட்டு வாங்க வைக்காதடீ வந்து ஒழுங்கா சமைக்க கத்துக்க என்று எந்த அம்மாவும் காதைத்திருகி சமையலறை அழைத்து செல்லாமல் உங்களின் விருப்பப்படி விட்டிருக்காங்களே ( திட்டினாலும் காதில் வாங்காமல் டீவியோ , வாட்ஸாப்போ , அறுசுவையோ பார்க்கிறோமே ) இது உங்களுக்கே உங்களுக்கான நேரமல்லவா...? இதை எப்படி மறுக்க முடியும் ...??? அதே சமயம் மற்றவர் என்று நீங்கள் எண்ணிக்கொண்டு ஒவ்வொன்றையும் செய்வது ( அடுத்த கட்டத்தில் இதற்கான விளக்கம் வரும் ) உங்களது கடமைகள்தான்....

மேலும் சில பதிவுகள்