இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 6

இந்தோனேஷியா உணவு

நாம் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலேயே பெரும்பாலும் காலை உணவு காம்ப்ளிமென்டாக கிடைக்கும். இந்தோனேஷிய உணவுகளோடு வெஸ்டர்ன் உணவுகளும் இருக்கும். அதனால் பிரச்சினை இருக்காது. மதிய உணவும் இரவு உணவும் நம் ருசிக்கு ஏற்றார்போல தேடி சாப்பிட வேண்டியிருக்கும்.
 
இந்தோனேஷியர்களின் முக்கிய உணவு நம்மைப் போலவே அரிசிதான். ஆனால் அரிசி வகை நமது அரிசி போல் இருக்காது. பசைத்தன்மை சற்று அதிகமாக இருக்கும். மூன்றுநேர உணவிலும் காய்கறிகளும் மீன் அல்லது இறைச்சி கண்டிப்பாக இருக்கும். பழவகைகளும் சேர்த்துக் கொள்வார்கள்.

லொந்தோங் (Lontong) என்னும் உணவு பெரும்பாலும் காலை நேர உணவக எடுத்துக் கொள்வார்கள். நம்ம ஊர் இட்லி மாதிரி ஆனால் இட்லி இல்லை. ஊறவைத்த அரிசியுடன் தேங்காய் கலந்து வாழையிலையில் கட்டி ஆவியில் வேகவைத்து துண்டுகளாக்கி காய்கறிகள் முக்கியமாக பலாக்காய் தேங்காய்ப்பால் சேர்த்த குழம்புடன் பரிமாறுவார்கள். முதல் முறை சாப்பிட்டபோது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் எனக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் ஒன்று.

புட்டு… ஆம் நம் ஊர் புட்டேதான். இந்தோனேஷிய மொழியிலும் புட்டு தான். ஆனால் வீடுகளில் அதிகம் செய்வதில்லை. மாலை நேரங்களில் தள்ளுவண்டிகளில் கொண்டுவருவார்கள். அரிசிமாவுடன் பாண்டான் இலைகளின் (ரம்பை இலை) ஜூஸ் கலந்து மூங்கில் குழலில் தேங்காய் சேர்த்து இட்டு ஆவியில் வேக வைத்து தென்னை வெல்லத்துடன் கொடுப்பார்கள். அருமையாக இருக்கும்.

ஆப்பம்… யெஸ் யெஸ் நம்ம ஆப்பமே தான். ஏறக்குறைய நாம் செய்யும் அதே முறைதான். சிலர் மாவுடன் ஒரு முட்டையும் சேர்ப்பார்கள். இந்தோனேஷிய கோழிக்கறியுடன் தருவார்கள். இதுவும் பெரிய ரெஸ்ட்ரான்டில் கிடைக்காது. ரோட்டோர கடைகளில்தான் கிடைக்கும்.

ரொட்டி பராத்தா அல்லது ரொட்டி சனாய் … ஆமாம்பா ஆமாம் நம்ம பரோட்டாவேதான். ஆனால் விதம் விதமாக கிடைக்கும். முர்தபா என்றால் முட்டை ஸ்டஃப் செய்த பராத்தா. சாக்லேட் ஃபில்லிங், வாழைப்பழ ஃபில்லிங்-னு வகை வகையா கிடைக்கும்.

நாசி லெமாக் (Nasi Lemak)… இந்த உணவு சிங்கப்பூர் மலேஷியாவிலும் பிரபலம். தேங்காய்ப்பாலில் வேகவைத்த சாதம், மிளகாய் கலவையில் பொரித்த நெத்திலி கருவாடு, சம்பால் என்னும் காரமான மிளகாய் சட்னி, வேக வைத்த அல்லது ஆம்லெட் போட்டு நீள நீள ஸ்ட்ரிப்களாக வெட்டிய முட்டை பொரித்த கோழித்துண்டு சில வெள்ளரிக்காய் துண்டுகளுடன் பரிமாறுவார்கள். அருமையாக இருக்கும்.

சோத்தா அயாம்(Soto Ayam) இந்தோனேஷிய சிக்கன் சூப், ரைஸ் நூடுல்ஸ் இன்னும் சில காய்கள் சேர்த்து காரசாரமாக இருக்கும்.

பொதுவாக இந்தோனேஷிய உணவுகள் இந்தியர்களின் சுவைக்கு ஏற்றதாக இருக்கும்.. அவர்கள் எல்லா சமையலிலும் சேர்க்கும் பெலாச்சான்(Belachan) என்னும் குட்டி இறால் பேஸ்ட் (fermented shrimp paste) அதன் சுவை நிச்சயம் புதிதாக அங்கே வருபவர்களுக்கு பிடிக்காது. முதலிலேயே சொல்லிவிட்டால் அதை சேர்க்காமல் செய்து தருவார்கள். 

பத்தாமில் மிஸ் செய்யாமல் பருகக்கூடிய ஒரு ஜூஸ், ஜூஸ் ஆல்புகாட் (Jus Alpukat) என்னும் அவகேடோ ஜூஸ். ஒரு கப் குடித்தால் போதும் மூன்று மணிநேரத்துக்கு பசிக்காது. எல்லா மால்களிலும் கிடைக்கும். 

இன்னொரு லோக்கல் டிலைட் ரோட்டி மாணிஸ் (Roti Manis). ஃபில்லிங் நமது விருப்பத்துக்கு ஏற்ப வைத்து தருவார்கள்.

ஸ்வீட் கார்னும் மிஸ் செய்ய கூடாது. இந்தியாவில் சாப்பிடுவதை விட சுவையாக இருக்கும். இதுவும் எல்லா மால்களிலும் இருக்கும்.

இரவில் கிடைக்கும் சாத்தே (Sate)… பார்பிக்கியூ செய்யப்பட்ட கோழி அல்லது இறைச்சி துண்டுகளுடன் வேர்க்கடலையில் செய்த ஒரு சாஸ் சேர்த்து தருவார்கள். நானெல்லாம் அதற்கு சொத்தையே எழுதி கொடுப்பேன். இந்த சாத்தேக்கு பிரபலமான இடம் நகோயா ஹில்ஸ் மாலின் எதிரே உள்ள முக்கிய சாலையில் மாலை நேரங்களில் முளைக்கும் தள்ளுவண்டி கடைகள். பெரிய ரெஸ்ட்ரான்டுகளில் நிச்சயமாக இந்த சுவை கிடைக்காது.

பத்தாம் வருபவர்கள் தவறாமல் ருசி பார்க்க வேண்டிய இன்னொன்று JCO Donuts ன் டோனட்கள். டோனட் சாப்பிட பத்தாம் போய்தான் சாப்பிடணுமான்னு யோசிப்பீங்களே.  நான் ருசித்த வரையில் இந்த டோனட்டின் சுவையே தனி. 

பத்தாமிலிருந்து நண்பர்களுக்கு உறவினர்களுக்கும் வாங்கிச்செல்லும் பத்தாமின் சுவை குவே லாப்பிஸ் (Kue Lapis) என்னும் லேயர் கேக். டயட் இருப்பவர்கள் ஆசைக்கு ஒரு துண்டு மட்டும் சாப்பிட்டு திருப்தி பட்டுக்கொள்ளுங்கள். இதை வாங்க சிறந்த இடம் Lamoist. பல பிராண்டுகளில் இந்த குவே லாப்பிஸ் கிடைத்தாலும் இந்த Lamoist பிரபலமானது 

டோனட் மற்றும் குவே லாப்பிஸ் இரண்டுமே மெகா மாலில் கிடைக்கும்.

இல்லை இல்லை எங்களுக்கு இந்திய உணவுதான் வேண்டும் என்றாலும் பிரச்சினை இல்லை. சில இந்திய உணவகங்கள் இருக்கின்றன. நகோயா ஹில்ஸ் மாலின் எதிரே தாஜ் இந்திய உணவகம் உள்ளது. ஆர்டர் செய்தால் டோர் டெலிவரியும் உண்டு. தமிழ் பேசும் நண்பர்கள் அங்கே வேலை செய்கிறார்கள். அங்கே நமது உணவு வகைகள் கிடைக்கும். சென்னை ரெஸ்டாரன்ட் பத்தாம் சென்டர் பகுதியில் உள்ளது.

பிஸ்ஸா ஹட், கே எஃப் சி, மெக்டொனால்ட்ஸ் போன்ற கடைகளும் எல்லா இடங்களிலும் இருக்கும். 

பத்தாம் ஒரு தீவு என்பதால் கடல் உணவுக்கு மிகவும் பிரபலமான இடம். கடலின் மீது பலகை கட்டி உணவகம் அமைத்திருப்பார்கள். நாம் உணவகத்திற்குள் போகும் போது தொலைவில் இருக்கும் கடல் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி வந்து சில மணிநேரங்களில் நம் காலுக்கு கீழே இருக்கும். கடல் காற்றை அனுபவித்துக் கொண்டே இங்கே சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற பல கடல் உணவகங்கள் இருந்தாலும் கோல்டன் ப்ரான் சீ ஃபுட் (Golden prawn seafoods) மிகவும் பிரபலம். இந்த கடலோர கடலுணவகங்களின் சிறப்பே மீன்களை உயிரோடு வைத்திருப்பார்கள்.. சில உணவகங்களில் கடலில் வலைகட்டி அங்கே மீன்கள் உயிருடன் உலாவிக் கொண்டிருக்கும். தேவையான மீனை சொன்னால் பிடித்து சமைத்து தருவார்கள். நாமே அவர்கள் தரும் சிறிய தூண்டில் கொண்டு அங்கேயே இறால் பிடித்து கொடுத்தாலும் அதை சமைத்து தருவார்கள். இதை எழுதும் போதெஎ என் மனம் சொல்கிறது “பத்தாம் ஐ மிஸ் யூ அன்ட் யுவர் சீஃபுட்”

இந்தோனேஷிய உணவு வகைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். லாக்சா, இக்கான் அசாம், நாசி கோரேங், மீ கோரேங், மீ ரெபூஸ், மீ சியாம்,….. லிஸ்ட் ரொம்ப நீளம்.

இத்தனை உணவுவகைகள் இருந்தாலும் அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் நம் நாக்கு நமது இந்திய உணவைத்தானே தேடும். பத்தாம் சென்ற புதிதில் நமது இந்திய மளிகை சாமான்கள் எதுவுமே பத்தாமில் கிடைக்காது. 2013 வரை இதே நிலைதான். சாப்பாட்டு அரிசி இட்லி அரிசி உளுந்து பருப்பு என கடுகு முதல் எண்ணெய் வரை சிங்கப்பூரில் இருந்துதான் வாங்கி வரவேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் சிங்கையிலும் நமது பொன்னி அரிசி கிடைக்காது. அதனால் இந்தோனேஷிய அரிசிதான் சமைப்பேன். குழம்பு ஊற்றி முதல் வாய் சாப்பிடும் போது தளர்வாக இருக்கும் சாதம் அடுத்த இரண்டு வாய்க்குள்ளாகவே இறுகி விடும். அரிசியின் அதிக பசைத்தன்மையே காரணம். சாதமே இப்படி என்றால் இட்லியை நாங்கள் மறந்தே விட்டோம். தோசைக்கு மட்டும் எப்படி எப்படியோ முயற்சித்து கடைசியில் கண்டுபிடித்து விட்டோம். அரிசியை லேசாக வறுத்து அந்த சூட்டிலேயே தண்ணீரில் ஊற வைத்து அரைத்தால் தோசை சுமாராக இருக்கும்.

எல்லா கம்பெனிகளும் தம் ஊழியர்களுக்கு சிங்கப்பூருக்கான விசா வாங்கித் தராது. ஆனால் என்னவருக்கு அந்த சலுகை இருந்தது. கம்பெனியே எனக்கும் விசா வாங்க ஏற்பாடு செய்துவிடும். என் நாத்தனாரும் குடும்பத்தோடு சிங்கையில் இருந்ததால் எனக்கு வசதியாக போய் விட்டது. மாதம் ஒருமுறை அல்லது இருமுறை சிங்கை சென்று வேண்டிய பொருட்களை வாங்கி வருவோம். சிங்கை விசா இருப்பவர்கள் யார் சிங்கை சென்றாலும் பிற நண்பர்களுக்கும் தேவையான பொருட்கள் வாங்கி வந்து விடுவோம். இப்போது நினைத்தால் எப்படி சமாளித்தோம் என்று இருக்கிறது. சிங்கையில் இருந்து எந்த நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தாலும் லிஸ்ட் கொடுத்துடுவோம் மளிகை சாமான் வாங்க. இப்போது பத்தாமிலேயே இந்திய கடை வந்து விட்டது.

அடுத்த பாகத்தில் பத்தாமின் அடையாளமான பரேலாங் பாலத்துக்கும், மீன் பிடிக்கவும் போகலாம்.

 

- கவிசிவா

இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 5

Comments

உணவு லிஸ்ட் பார்க்கும்போது இதுக்கே போகணும் போல இருக்கு. நம்ம ஊர் ஸ்பெஷ்ல் போல கிடைப்பதால் சங்கடம் இல்லை.

Be simple be sample