பருப்பு உருண்டை குழம்பு

தேதி: March 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

 

துவரம் பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - அரை கப்
வெங்காயம் - 7
பூண்டு - ஒன்று
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - அரை அங்குல துண்டு
சோம்பு - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புளி - பெரிய எலுமிச்சை அளவு
கலந்த மிளகாய் தூள் - அரை கப்
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தேங்காய் பூ - ஒரு கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும்.
தேங்காயைத் துருவிக்கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். புளியை ஒரு கப் தண்ணீர் ஊற்றி சுமார் 20 நிமிடம் ஊற வைத்து பிறகு கரைத்துக் கொள்ளவும். புளி கரைசலுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
துருவின தேங்காயுடன் அரைத் தேக்கரண்டி சோம்பு சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஊறிய பருப்பு, பச்சை மிளகாய், சோம்பு அரை தேக்கரண்டி, உப்பு அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன், நறுக்கின வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாய் சேர்த்து, நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு அவற்றை எலுமிச்சை அளவிலான உருண்டைகளாக உருட்டவும்.
உருட்டிய உருண்டைகளை இட்லி தட்டில் அடுக்கி வைத்து, மூடி வைத்து சுமார் 15 நிமிடம் வேக விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரை தேக்கரண்டி சோம்பு, வெந்தயம் போட்டு தாளித்து, நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கின தக்காளி போட்டு சுருங்க வதக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும்.
பின்னர் புளிக்கலவையை ஊற்றி, மேலும் 3 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்தவுடன் வேக வைத்து எடுத்துள்ள உருண்டைகளைப் போட்டு வேகவிடவும்.
மேலும் ஒரு கொதி வந்ததும் தேங்காய் கலவையை போட்டு இறக்கவும்.
இப்போது சுவையான உருண்டைக் குழம்பு தயார். இதனை நமக்காக செய்து காட்டியவர் திருமதி. மலர்கொடி யுவராஜன் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலந்த மிளகாய் தூள் என்றால் என்ன?.

மிளகாய், மல்லி, மஞ்சள் அனைத்தும் சேர்த்து அரைக்கப்படும் குழம்பு அல்லது சாம்பார் பொடியை கலந்த மிளகாய்த்தூள் என்று சொல்லுவர்.

கலந்த மிளகாய்த்தூள் என்றால் மீன் குழம்புக்கு பயன்படுத்தும் மசலாதூளா?

பருப்பு உருண்டை குழம்பு மிகவும் நன்றாக இருந்தது.
நான் வீட்டில் செய்து பார்தேன்.
THANKS.

உங்கள் குரிப்பு உதவியாக உள்ளது நன்றி.