இனிப்பு மாங்காய் பச்சடி

தேதி: April 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

தமிழ் வருடப்பிறப்பு தினத்தன்று ஏதேனும் ஒரு பச்சடியை ஒவ்வொரு வீட்டிலும் செய்வார்கள். பெரும்பாலான இல்லங்களில் மாங்காய் பச்சடியை மறவாமல் செய்வார்கள். தமிழ் வருடப்பிறப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் மாங்காய் சீஸன் நன்றாக இருக்கும். குறைந்த விலையிலும் கிடைக்கும். அதோடு மட்டுமன்றி, வேப்பம்பூ வைத்தும் ஏதேனும் ஒன்று செய்வார்கள். பெரும்பாலான இல்லங்களில் வேப்பம்பூ ரசம் இருக்கும். இல்லையெனில் துவையல் செய்வார்கள். உங்களுக்காக இந்த எளிய முறை இனிப்பு மாங்காய் பச்சடி செய்முறையை விளக்குகின்றார் திருமதி. மங்கம்மா அவர்கள்.

 

பெரிய மாங்காய் - 2
உருண்டை வெல்லம் - 400 கிராம்
பச்சை மிளகாய் - 2
கடுகு - ஒரு தேக்கரண்டி


 

மாங்காயை மேல்தோல் சீவி உட்பகுதியை மெல்லிய சீவல்களாக சீவிக் கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
சீவிய மாங்காயை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதனுடன் கீறிய மிளகாயையும் சேர்த்து, இட்லி பானை அல்லது குக்கரில் வைத்து சுமார் 15 நிமிடம் வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொடி செய்த வெல்லத்தை போட்டு, கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்.
கரைத்த வெல்லத்தை பாத்திரத்துடன் அடுப்பில் வைத்து வேகவிடவும். வெல்லம் முழுவதும் நன்கு கரைந்து பொங்கி வரும் போது இறக்கிவிடவும்.
பின்னர் வெல்லக் கரைசலை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டிக் கொள்ளவும்.
வேக வைத்து எடுத்துள்ள மாங்காய் மற்றும் பச்சை மிளகாயை ஒரு பாத்திரத்தில் போட்டு, வடிகட்டின வெல்லப் பாகை ஊற்றி 7 நிமிடம் கொதிக்க விடவும். வெல்லத்தின் வாசனை போகும் வரை கொதித்தால் போதும்.
சுமார் 7 நிமிடம் கழித்து வாணலியில் அல்லது கரண்டியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்கவும்.
அதனை கொதிக்கும் மாங்காய் பச்சடியில் ஊற்றி இறக்கவும்.
இப்போது சுவையான இனிப்பு மாங்காய் பச்சடி தயார். இதனை ஒட்டு மாங்காவில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். விரும்பினால் பச்சடி கொதித்ததும் சிறிது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்