அக்கார அடிசில்

தேதி: June 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

அக்காரம் என்பதற்கு கரும்பு, கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை என்று பொருள். அடிசில் என்றால் சோறு. சர்க்கரைப் பொங்கல் போன்ற அக்கார அடிசில் ஐய்யங்கார் இல்லங்களில் அதிகம் செய்யப்படும் சிறப்பு உணவு. செய்முறை பொங்கலை போன்றதுதான். நெய்யும், பாலும் அதிகம் சேர்த்து செய்யப்படும் இந்த அக்கார அடிசில், கைகளில் எடுத்தால் வழிந்தோடும்படியான, பாதி திட திரவ பதத்தில் இருக்கும்.

 

பச்சரிசி - அரை கப்
பாசி பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
பால் - ஒரு கப்
பொடித்த வெல்லம் - கால் கப்
ஏலக்காய் - 2
முந்திரி - 6


 

வெல்லத்தை பொடி செய்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். அரிசி, பாசி பருப்பு மற்றும் கடலை பருப்பை மூன்றையும் தூசி இல்லாமல் சுத்தம் செய்துக் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் உடைத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
திராட்சை பொரிந்ததும் அதனுடன் ஏலக்காய் பொடியை போட்டு கிளறி விட்டு பிறகு அதில் அரிசி, பாசி பருப்பு மற்றும் கடலை பருப்பு மூன்றையும் போட்டு 4 நிமிடம் நன்கு வறுக்கவும்.
4 நிமிடம் கழித்து அதில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறி விட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
அதன் பின்னர் கால் கப் பால் ஊற்றி பருப்புடன் பால் ஒன்றாகும்படி நன்கு கிளறி விட்டு 20 நிமிடம் நன்கு குழைய வேக விடவும். இடையில் கிளறி கொண்டே இருக்கவும்.
பிறகு வாணலியில் அல்லது அடி கனமான மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைய விடவும். வெல்லம் கரையும் வரை கிளற கொண்டே இருக்கவும். வெல்லம் கரைந்தால் போதும். அதிக நேரம் அடுப்பில் வைத்து பாகாக காய்ச்ச கூடாது.
அரிசி மற்றும் பருப்பு நன்கு குழைய வெந்ததும் காய்ச்சிய வெல்லத்தை வடிகட்டியால் வடிகட்டி அதில் ஊற்றவும்.
வெல்லத்தை ஊற்றிய பிறகு நன்கு 3 நிமிடம் கிளறி விடவும். அதனுடன் மீதம் இருக்கும் முக்கால் கப் பாலை ஊற்றி 5 நிமிடம் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பிறகு 2 நிமிடம் தீயை மிதமாக வைத்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
சுவையான அக்கார அடிசில் தயார். இதில் முந்திரி, திராட்சை சேர்க்காமல் சிறிது பச்சை கற்பூரம் சேர்த்தும் செய்வர்.
பிராமண சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன் வழங்கிய குறிப்பு இது. மாதர் சங்கத் தலைவி, சமூக சேவகி, நல்ல குடும்பத்தலைவி என்று பல முகங்களை உடைய இவர், அறுசுவை நேயர்களுக்கு ஏராளமான பிராமண உணவுகள் தயாரிப்பை செய்து காட்டவுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்