இஞ்சி பச்சடி

தேதி: June 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
தேங்காய் துருவல் - கால் கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - முக்கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
வெல்லத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - ஒன்றரை மேசைக்கரண்டி
பெருங்காயம் - குண்டு மணி அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி+அரை மேசைக்கரண்டி


 

இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு அதில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் மிளகாய் வற்றலை போட்டு கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் துண்டுகளாக நறுக்கிய இஞ்சியை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வதக்கிய இஞ்சி, மஞ்சள் தூள், தேங்காய் துருவல், வெல்லம், பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல், வறுத்த பெருங்காயத் துண்டு, உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை ஊற்றவும்.
பிறகு ஒரு நிமிடம் கழித்து அதில் அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு 3 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
பச்சடி நன்கு கொதித்து நுரையுடன் பொங்கி வரும் போது ஒரு முறை கிளறி விட்டு இறக்கி வைத்து விடவும்.
சுவையான, ஆரோக்கியத்து உகந்த இஞ்சி பச்சடி ரெடி. இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசை, தயிர் சாதம் போன்றவற்றுடனும் சாப்பிடலாம்.
அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்