வெஜ் ரோல்ஸ்

தேதி: August 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

சுவையான இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கி வரும் <a href="experts/2552" target="_blank"> திருமதி. நர்மதா </a>அவர்கள் இந்த வெஜ் ரோல்ஸ் செய்முறையை படங்களுடன் விளக்குகின்றார். இது இலங்கையில் அதிகம் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. பொதுவாக அங்கே இதை எல்லா உணவு விடுதிகளிலும் வாங்கலாம்.

 

மேல்மாவிற்கு:
மைதா மாவு - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
ஈஸ்ட் - அரை தேக்கரண்டி
இளம் சூடான தண்ணீர் - கால் கப்
சீனி - ஒரு தேக்கரண்டி
பூரணத்திற்கு:
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
கோஸ், லீக்ஸ் கலவை - ஒரு கப்
வெங்காயம் - பாதி
உள்ளி - 4 பற்கள்
கடுகு, பெரிய சீரகம், கறுவா(பட்டை), கிராம்பு, ஏலம் - சிறிது
மிளகாய் தூள் - ஒரு மேசைகரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - அரை லிட்டர் பொரிப்பதற்கு


 

தக்காளி, உருளைக்கிழங்கினை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும். காரட்டை மெல்லிய சிறு துண்டுகளாக வெட்டவும் அல்லது துருவி வைக்கவும். கோஸ், லீக்ஸ் இரண்டையும் மெலிதாக அரிந்து வைக்கவும். வெங்காயம், உள்ளியை பொடியாக வெட்டி வைக்கவும். கறுவா(பட்டை), கிராம்பு, ஏலத்தை வெறும் சட்டியில் வறுத்து பொடித்து வைக்கவும்.
இளம் சூடான தண்ணீரில் சீனியை கரைத்து அதில் ஈஸ்ட்டை போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் மைதா மாவினை அரித்தெடுத்து(சலித்து) உப்புடன் கலந்து வைக்கவும். பின்னர் நொதித்த ஈஸ்ட் கலவையை மாவுடன் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும். தேவைப்படின் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் பிசைந்த மாவினை உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள்(மணிநேரங்கள்) வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, பெரிய சீரகம், வெட்டிய உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளி ஆகியவற்றைப் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர் அதனுள் வெட்டிய கோஸ், லீக்ஸ், கேரட்டை சேர்த்து கிளறி மூடி 5 நிமிடங்களுக்கு அவிய விடவும்.
பின்னர் வெட்டிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு கலந்து மூடி வேக விடவும். தண்ணீர் ஓரளவு வற்றியதும் பொடித்து வைத்த ஏல கலவையை சேர்த்து கிளறவும். தண்ணீர் நன்கு வற்றி கறி சுருண்டு வந்ததும் இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.
பின்னர் குழைத்து வைத்த மாவினை எடுத்து திரும்பவும் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போல தேய்த்து கொள்ளவும்.
தேய்த்த மாவின் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது ஒன்றரை மேசைக்கரண்டி கறியை நீளவாக்கில் வைக்கவும். பின்னர் இரு பக்க கரையிலும் உள்ள மாவினை கறியின் மேலே வருமாறு மூடவும். (இப்போது செவ்வக வடிவில் இருக்கும்)
பின்னர் மாவினை கறியுடன் சேர்த்து இழுத்து உருட்டவும். (இது உருளை வடிவில் இருக்கும்).
ஒரு பிரஷ்ஷால் சிறிது தண்ணீரை இதன் மேலே பூசி ரஸ்க் தூளில்(Bread crumps) போட்டு பிரட்டவும்.
பிரட் தூள் உருளை முழுவதும் ஒட்டும்படி நன்கு பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.
இதேபோல் அனைத்து மாவையும் சப்பாத்திகளாக தேய்த்து, உள்ளே மசாலா வைத்து, உருட்டி, ப்ரட் துகள்களில் தேய்த்து எடுத்து வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 லீட்டர் எண்ணெயை விட்டு, அது நன்கு கொதித்ததும் அதனுள் இந்த ரோல்சினை ஒன்று அல்லது இரண்டாக போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான வெஜ்-ரோல்ஸ் தயார். இதனை தக்காளி சாஸ்/கெட்ச்-அப்புடன் பரிமாறலாம்.

மாவினை பிசைந்து உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள் வைத்திருந்து எடுக்கும் போது அது நன்கு ஊதியிருக்கும் (ஈஸ்ட் சேர்த்திருப்பதால்) எனவே அதனை திரும்பவும் பிசைதல் அவசியம். கறியை தண்ணீர் வற்றும் வரை விடும் போது அடிப்பிடிக்காது கிளறிக் கொண்டே இருக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்