ஜீரண பருப்பு சாதம்

தேதி: August 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கலரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - 3/4 கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு


 

ஒரு பானையில் 10 கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி பானையில் போடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிளகு, சீரகம் பொரித்து எடுத்து, பொடி பண்ணவும்.
சாதம், பருப்பு வெந்ததும் வடிதட்டு போட்டு பழைய முறைப்படி வடித்துக் கொள்ளவும்.
வடித்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி ஆற விடவும். கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் போடவும்.
அதனுடன் பொடித்த மிளகு சீரகம், உப்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றை சாதத்தில் சேர்க்கவும். நன்றாக கலந்துவிட்டு சாப்பிடவும்.


இந்த பருப்புசாதம் எளிதில் ஜீரணமாகும். இதற்கு எள்ளு துவையல் தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜீரண பருப்பு சாதம்,
மாலதியக்கா இச் சாதம் செய்தேன். நல்ல சுவையாக இருந்தது. கோயிலில் ஒருவித சாதம் தருவார்கள் அதுபோலவே இருந்தது. நல்லெண்ணெய் சேர்த்ததால் நன்றாக இருந்தது. நான் பருப்பை சில மணிநேரம் ஊறவிட்டு, பின்னர் அவிய விட்டு அரிசி சேர்த்தேன். எனக்கு நீங்கள் கூறியபடி வடிக்கத் தெரியாது, குழைந்து விடும் என்பதால் றைஸ் குக்கரிலேயே செய்தேன் நன்றாக இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா..!! இந்த சாதத்தை வடித்து செய்தால்தான் நன்றாக இருக்கும். சாதம் வடித்து பழக்கம் இல்லாதவர்களுக்கு ஒரு ஈஸியான பாதுகாப்பான முறை சொல்கிறேன்.
சாதம் வெந்ததும் வடிதட்டை போட்டு மூடி பானையின் மேல்பகுதியும் வடிதட்டும் சேரும் இடத்தில் இரண்டு க்ளிப்பை ( சாதாரண துணிகாயவைக்கும் அலுமினிய க்ளிப் ) மாட்டி விடுங்கள் இப்ப பானையை கவிழ்த்து வடித்துப்பாருங்க கஞ்சி கையில் சிந்தாது. வடிதட்டும் பானையைவிட்டு நகராது.
ரைஸ் குக்கரிலேயே செய்து விட்டீர்களா? அரிசியும் பருப்பும் வெந்து பொலபொலவென்று இருக்கவேண்டும். அப்பதான் நன்றாக இருக்கும். இந்த ரெஸிப்பி எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் இதுவும் எங்க பாட்டி காலத்து மெனு. பின்னூட்டதிற்கு நன்றி அதிரா...!!!