கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா?

<table width="98%"><tr><td align="center">
</td></tr></table>
<br />
அறுசுவை உறுப்பினர்கள், வருகையாளர்களின் வேண்டுகோளினை ஏற்று, அறுசுவையில் மகளிருக்கென சிறப்புப் பகுதி ஒன்று வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த பகுதியில் சமையல் அல்லாத மற்ற பல விசயங்கள் இடம்பெறும். அதில் சிலவற்றை இங்கே பட்டியலிடுகின்றேன்.
<font color="#900000"><b>
அழகு குறிப்புகள்
கைவினைப்பொருட்கள் தயாரிப்பு
தையற்கலை
கவிதைகள்
கதைகள்
கட்டுரைகள்
ஆடை அலங்காரம்
குழந்தை வளர்ப்பு
குடும்ப பராமரிப்பு..
</b></font>
இப்படி இன்னும் ஏராளமான பகுதிகள் இணைக்கப்படவுள்ளன. அனைத்துப் பகுதிகளையும் ஒரே நாளில் கொண்டு வருவது என்பது சற்று சிரமமானது. ஒவ்வொன்றாக விரைவில் சேர்க்கவுள்ளோம். இதில் கதை, கவிதை, கட்டுரை பிரிவுகளுக்கு ஆர்வம் உள்ள நேயர்களிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளிலும் படைப்புகள் அனுப்ப விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் படைப்புகளை வழக்கம்போல் கீழே தொடர்புக்கு என்று உள்ள லிங்க் மூலமாக எங்களுக்கு அனுப்பி வைக்கவும். அல்லது நேரடியாக feedback at arusuvai.com என்ற முகவரிக்கும் மின்னஞ்சல் செய்யலாம்.

இதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே படைப்புகளை அனுப்பலாம்.

<b>விதிமுறைகள்:
</b>
1. படைப்புகள் தங்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். பிற ஊடகங்களில் இருந்தோ, தளங்களில் இருந்தோ எடுக்கப்பட்டிருக்கக்கூடாது.
2. உங்களது சொந்த படைப்புகள் என்றாலும், வேறு எந்த ஊடகத்திலும் அவை ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.
3. படைப்புகளின் கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட நபரையோ, அமைப்புகளையோ குறை கூறுவதாக இருக்கக்கூடாது.
4. படைப்புகளை தேவைப்படின் மாற்றியமைக்கவோ, நிராகரிக்கவோ அறுசுவை நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
5. படைப்புகளை அனுப்புவோர் கண்டிப்பாக அறுசுவையில் உறுப்பினராக பெயர்ப்பதிவு செய்திருத்தல் வேண்டும். படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் வெளியிட விரும்பும் பெயர் (புனைப்பெயரும் கொடுக்கலாம்), பதிவு செய்துள்ள பெயர் இரண்டையும் மறக்காமல் குறிப்பிடவும்.
6. நிராகரிக்கப்பட்ட படைப்புகளை திரும்ப அனுப்புதல் இயலாது. ஆகவே, எந்தவொரு படைப்பையும் ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்பவும்.
7. படைப்புகள் அனைத்தும் கண்டிப்பாக தமிழில்தான் இருக்கவேண்டும். ஆங்கிலம், தமிங்கிலம் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
8. படைப்புகளுக்கு சன்மானம் எதுவும் கிடையாது.(எங்களின் அன்பையும், மற்றவர்களின் பாராட்டையும் தவிர)

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இங்கே கேள்விகள் எழுப்பலாம்.

அன்புடன்
பாபு

ஒரு நற்செய்தி. கவிதைகள் தேர்ந்தெடுப்பு குழுவில் இருந்து என்னை நானே நீக்கிக் கொள்கின்றேன். இனி வரும் கவிதைகளை இருவர் குழு மட்டுமே தேர்வு செய்யும். அவர்கள் தேர்வு செய்த கவிதைகளை மட்டுமே வெளியிடுவது என முடிவு செய்துள்ளோம். ஆகையால், கவிதைகள் தேர்வு குறித்து கேள்விகள் எதுவும் எனக்கு அனுப்ப வேண்டாம். கவிதைகளை மட்டும் அனுப்புங்கள். உங்கள் கவிதைகள் வெளிவரவில்லையெனில் நடுவர் குழுவிற்கு திருப்தியாக இல்லை என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

கவிதை எழுதுபவர்களுக்கு, நல்ல கவிதைகளை ரசிப்பவன் என்ற முறையில் சில கருத்துக்கள் சொல்ல விரும்புகின்றேன்.

1. கவிதை எழுதுவதற்கு முன்பு, தாங்கள் என்ன மாதிரி கவிஞர் என்பதை உங்களுக்கு நீங்களே மதிப்பிட்டு கொள்ளுங்கள்.

எழுத நினைத்தவுடன் வார்த்தைகள் பொருள்பட கோர்வையாய் வந்து கொட்டும் பிறவிக் கவிஞரா? இல்லை வார்த்தைகளை யோசித்து, அதை அடுக்கி, மாற்றியமைத்து, ஒரு வடிவம் கொடுக்கும் எழுத்து வித்தகரா? இதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். கவிதை எழுதுவதற்கு இந்த சுயமதிப்பீடு ரொம்ப முக்கியம்.

2. முதல்ரக பிறவிக் கவிஞர் என்றால் உங்களுக்கு ஆலோசனைகள் எதுவும் தேவையில்லை. நீங்கள் மடை திறந்தார்போல் அள்ளிவிடுவது கவிதைகளாக இருக்கும் பட்சத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், பிறவிக் கவிஞராக எண்ணிக் கொண்டு, இஷ்டத்திற்கு வார்த்தைகளை அள்ளிக் கொட்டி, என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதே புரியாமல் இது கவிதை என்று சொன்னீர்கள் என்றால், படிப்பவர்கள் பாவம்.

3. இரண்டாம் ரக, யோசித்து எழுதும் கவிஞர்கள்தான் இன்றைக்கு நாட்டில் அதிகம் இருக்கின்றனர். நீங்கள் அந்த வகைதான் என்றால், முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எழுத நினைக்கும் முதல் கவிதையே மிகச் சிறப்பாய் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சித்திரம் கைப்பழக்கம் என்றால் கவிதை மனப்பழக்கம். எழுத எழுதத்தான் நல்ல கவிதைகள் வரும். நீங்கள் இன்று எழுதிய கவிதையை ஒருமாதம் கழித்து திரும்பிப் படிக்கையில் உங்களுக்கே சிரிப்பு வரும்.

சரி, யோசித்து எழுதுபவர்கள் எப்படி கவிதை எழுதவேண்டும் என்பதற்கு சில குறிப்புகள்.

அ. முதலில் நன்கு யோசித்து எழுதப்போகும் பொருளை முடிவு செய்து கொள்ளுங்கள். கரு என்ன என்பது மிகவும் முக்கியம்.

ஆ. கரு என்ன என்பதை முடிவு செய்தபின்பு,, அது என்ன காலம் என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள். அது நடக்கின்ற செயலா, நடந்த செயலா, நடக்கப்போகின்ற செயலா என்பதும் அவசியம். இதற்கு தகுந்தாற்போல்தான் வார்த்தைகள் சேர்க்க வேண்டும். கவிதைத்தனமான வார்த்தைகள் என்று தப்பர்த்தம் செய்துகொண்டு காலம் தெரியாத வார்த்தைகள் போட்டு நிறைய குழப்புகின்றனர்.

இ. அது வெளிப்படுத்தும் உணர்வு என்ன என்பதை அடுத்து முடிவு செய்யுங்கள். சோகமா, காதலா, சிரிப்பா, வேதனையா, கோபமா, கலந்த கலவையா.. இப்படி என்ன உணர்வு என்பதையும் முடிவு செய்துகொள்ளுங்கள். எழுதி முடித்தபின்பு நீங்கள் படித்துப் பார்க்கையில் உங்கள் கவிதை நீங்கள் எதிர்பார்த்த உணர்வை வெளிப்படுத்துகின்றதா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும்.

ஈ. அடுத்து கற்பனை செய்யுங்கள். உடனே கவிதை எழுதிவிடவேண்டாம். முதலில் அந்த நிகழ்வினை மனக்கண்ணில் நிறுத்தி கற்பனை செய்யுங்கள். அது உங்கள் கண்முன்னே திரைப்படம் போல் வரவேண்டும். ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனியுங்கள். அதை அப்படியே உரைநடையாக எழுதிக் கொள்ளுங்கள்.

உ. இப்போது நீங்கள் எழுதியுள்ள உரைநடையை கவித்துவமான வேறு வார்த்தைகளைப் போட்டு அதே செய்தியை சொல்ல முடியுமா என்று முயற்சி செய்யுங்கள். நீங்கள் எழுதியுள்ள வரிகளை வேறு வார்த்தைகள் போட்டு பொருள்மாறாமல் கொடுக்க முடியுமா என்பதை முயன்று பாருங்கள். கிடைக்காத வார்த்தைகளைத் தேடி அலையுங்கள்.

ஊ. இங்கே எல்லோரும் எழுத நினைப்பது புதுக்கவிதையே.. விதிகள் பெரிதாக இல்லாததால் அதுதான் எளிது. புதுக்கவிதை எழுத உரைநடையை நான்கில் ஒரு பங்காக்கி, அதில் விசயத்தை சொல்லும் திறன் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் வார்த்தைகள் மாற்றிப் போட்டு எழுதியவற்றை, இப்போது சுருங்கச் சொல்லுதல் இயலுமா என்று பாருங்கள். சொல்லித்தான் ஆகவேண்டும்.

எ. கவிதைகளில் சொல்ல நினைப்பவற்றை நேரடியாக வார்த்தை அலங்காரம் கொண்டு சொல்லுதல் ஒருவிதம், பொருள் மட்டும் உணர வைத்தல் மற்றொருவிதம்.

"தூங்கியவன்
தூக்கத்திலேயே
போய்விட்டான்!"

இது நல்ல கவிதை வரி அல்ல சகோதரி. கவிஞர்களின் வார்த்தைகள் இப்படி இருக்காது. நான் கவிஞன் அல்ல. இருந்தாலும் நான் இதை முயற்சித்துப் பார்த்தேன் என்றால் இப்படி எல்லாம் எழுதுவேன்.

"உன் இறுதி உறக்கம்
உன்னை எழுப்பும் வரைக்கும்
யாருக்கும் தெரியவில்லை"

வார்த்தைகளை இப்படிப் போட்டால் கொஞ்சம் ஹைக்கூ மாதிரி ஒரு உணர்வு கொடுக்கும்.

"எழுப்பி களைத்து
அறிந்தேன் உன்
இறுதி உறக்கம்"

இதை அப்படியே எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருக்கலாம்.

"விடியலை நினைத்து உறங்கிய நீ
வெள்ளி முளைத்தும் எழாதது ஏன்"

"உறங்கும்முன் குறித்துக் கொள்ள மறந்தாயோ
நாளை மறவாமல் எழவேண்டும் என்று."

நான் மேலே குறிப்பிட்டுள்ளது நல்ல கவிதை வரிகள் என்று சொல்லமாட்டேன். நான் கவிதை எழுதுபவன் அல்ல. நல்ல கவிஞர்கள் இந்த நிகழ்வை மிக அருமையாக சொல்வார்கள். கவிதை ஆர்வம் உள்ள உங்களுக்கு இன்னமும் நிறைய மனதில் தோன்றும். கொஞ்சம் யோசித்து எழுதுங்கள். எழுதியவற்றை இரண்டு நாட்கள் கழித்து படித்துப் பாருங்கள். அதில் திருத்தங்கள் செய்யுங்கள். காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு போல், படைத்த நமக்கு எல்லா கவிதைகளுமே சிறப்பாக இருப்பது போல் தோன்றும். மற்றவர்களிடமும் காண்பித்து கருத்துக் கேளுங்கள். படைப்பதற்கு முன்பு நிறைய படியுங்கள். வித்தியாசமாக நிறைய யோசியுங்கள்.

சென்ற வாரம் சகோதரி ப்ரியசகி ஒரு செண்டிமெண்ட் கவிதை எழுதினாலும் எழுதினார், இந்த வாரம் வந்த கவிதைகள் அனைத்தும் அதே சாயலில் சோகத்தைப் பிழிந்து கொட்டுகின்றன. மனதை கனக்கச் செய்ய சோகக் கவிதைகள்தான் தேவை என்ற அவசியம் இல்லை.

"குப்பையைக் கிளறுவது
கோழியல்ல
கோணியுடன் சிறுவன்"

சுஜாதா விரும்பிய இந்த ஹைக்கூ வைப் படிக்கையில் மனசில் என்னவெல்லாமோ தோணும்.

நிறைய படியுங்கள், நன்கு ரசியுங்கள், பிறகு எழுதத் தொடங்குங்கள்.

வந்த கவிதையெல்லாம் படிச்சு பாத்து வெறுத்துப் போய் இந்த வேலையே வேண்டாம் சாமின்னு போற மாதிரி இருக்கு. என்ன நடந்துச்சுன்னு தெரியலையே. யாரும் சண்டை போட்டாங்களா???

நான்கூட கவிதை அனுப்ப நினைச்சேன். நல்லவேளை அனுப்பலை:) உங்க டிப்ஸ் எனக்கும் ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.

அட்மின் அண்ணா! உங்களை வைத்து பள்ளிகளில் 'கவிதை வகுப்பு' என்று ஒரு தனி வகுப்பே ஆரம்பிக்கலாம் போலிருக்கிறதே! எவ்வளவு அழகான உதாரணங்களுடன் எங்களுக்கு இங்கு க்லாஸ்(classe) எடுத்துள்ளீர்கள்! இது கண்டிப்பாக என்னைப் போன்ற இரண்டாம் ரகக்காரர்களுக்கு ரொம்ப உதவும். மிக்க நன்றிண்ணா!

நன்றி தெரிவித்த சகோதரிகளுக்கு நன்றி. எனக்கு இந்த துறையில் வகுப்பு எடுக்கும் அளவிற்கு ஞானம் கிடையாது. சில குறிப்புகள் மட்டுமே கொடுத்தேன்.

நான் பொறுப்பு விலகியதற்கு காரணம், என்னை யாரும் எதுவும் சொல்லிவிடவில்லை. எனக்கு அதில் ஏற்படும் தர்மசங்கடங்களினால்தான் தேர்வு குழுவில் இருந்து நீக்கிக் கொண்டேன். எல்லா கவிதைகளையும் என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஒருவரே நிறைய கவிதைகள் அனுப்புகின்றனர். சில சமயம் அதில் ஒன்றுகூட எனது எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் இல்லாதபோது, என்னால் தேர்வு செய்ய முடியவில்லை. ஆனால், அவர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் அனுப்பியிருப்பார்கள் என்பதை நினைக்கையில் எனக்கு தர்மசங்கடமாக இருக்கின்றது. சிலர் என்னாயிற்று எனது கவிதை என்று கேட்கும்போது என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. உங்கள் அனைவருக்கும் பழக்கமானவனாக நான் இருப்பதால், தேர்வு குழுவில் நான் இல்லாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகின்றது. வெளியாகும் கவிதைகளை நான் தேர்வு செய்யவில்லை என்பதை தெரிவிக்கவே மேலே உள்ள அறிவிப்பு.

சரி அதைவிடுங்கள்.

இந்த கவிதைப் பகுதிக்கு ஒரு போட்டிப் போன்ற ஒன்றை கொண்டு வரலாம் என்று நினைக்கின்றேன். அதாவது, ஒவ்வொரு வாரமும் நான் ஒரு தலைப்பு தருகின்றேன். சிட்சுவேசனும் சொல்லிவிடுகின்றேன். நீங்கள் அதற்கு கவிதை எழுதுங்கள். அதில் தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளை பூங்காவில் வெளியிடுகின்றோம்.

என்னது பரிசா..? நான் கொடுக்க தயார்தான். ஆனா, நீங்கதான் அதெல்லாம் எதுக்கு, நமக்குள்ள என்ன பரிசு பார்மாலிட்டீஸ் அது இது அப்படின்னு மறுத்துடுவீங்க. உங்களுக்கு தர்மசங்கடம் கொடுக்க வேணாம்னுதான்... ஹி..ஹி.. (கரெக்டா சொன்னீங்க விதுபா, அறுசுவையில கவிதை வெளிவர்றதே பெரிய பரிசுதான்..:-))

ஓக்கே. வாரம் வாரம் ஒரு கவிதை தலைப்பு. அதற்கான சிட்சுவேசன் கொடுத்துடுவோம். நீங்க அதுக்கு கவிதை எழுதுங்க. புதுக்கவிதை, மரபு, ஹைக்கூ.. இப்படி எதுவா வேணும்னாலும் இருக்கலாம். (என்ன சொல்றீங்க Dsen..? ஆங்கிலத்திலா.. ஸாரி.. அதுசரி, இன்னும் உங்களுக்கு கோபம் தீரலையா?)

இந்த வாரத்துக்கான தலைப்பு

" இணைய நட்பு "

சிட்சுவேசன் இதுதான்..
இங்கே அறுசுவையில நாம எல்லோரும் ஒரு குடும்பம் மாதிரி பழகி வருகின்றோம். நமக்குள்ள விவாதங்கள், சிலசமயம் சண்டைகள், சிரிப்புகள், ஆலோசனைகள், ஆறுதல் பரிமாற்றங்கள் இப்படி எல்லாமே நடக்குது. இத்தனைக்கும் நாம ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சிக்கிட்டதே கிடையாது. யார் முகம் எப்படி இருக்கும்னு கூட தெரியாது. அவர்கள் உண்மையான்னுகூட தெரியாது. இருந்தாலும் நமக்குள்ள ஒரு பிணைப்பு, நட்பு இருக்கு. இந்த வட்டத்துக்குள்ள உங்களுக்கு பிடிச்ச ஒருத்தரை பற்றி, அவருடனான நட்பை பற்றி கவிதை எழுதுங்க. யார் என்று பெயர் குறிப்பிட வேண்டாம். நீங்கள் அவரிடம் ரசித்தது, பிடித்தது, பிடிக்காதது, அவரை பார்க்காமலே உங்க மனசுல அவருக்கு நீங்க கொடுத்திருக்கிற உருவம் இதையெல்லாம் எழுதலாம்.

அப்படியெல்லாம் அறுசுவையில நட்பா யாரும் இல்லேன்னு சொல்றவங்க, பொதுவா இணைய நட்பு பத்தி எழுதுங்க.. பள்ளி, கல்லூரி நட்பு பற்றி (இப்ப) வேண்டாம். இணையத்தளத்தில் உண்டாகும் நட்பு பற்றி மட்டும் எழுதுங்க. அறுசுவை அனுபவமாக இல்லாவிட்டாலும், வேறு ஏதேனும் இணையத்தளம் மூலமாக உண்டான நட்பாக இருந்தாலும் எழுதலாம்.

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி. 27-அக்டோபர்-2007

(வழக்கம்போல் இதிலும் தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள்தான் வெளியிடப்படும். அப்புறம் முக்கியமான ஒன்று. சாதாரணமாக மற்ற தலைப்புகளில் கவிதைகள் அனுப்புகின்றவர்கள் எப்போதும் போல் அனுப்புங்கள். அவையும் வெளியிடப்படும். அது தனி. இது தனி.. )

சந்தேகம் எதுவும் இருந்தால் கேட்கலாம்.

க்ரேட் ஐடியா
எனக்கு பிடிச்சிருக்கு
அண்ணா மறதியா 'என் கவிதை எங்கே?' ந்னு கேட்டா தப்பா நினைக்காதீங்க... ஒரு ஆர்வம் தான்.
என் வகையில் நான் நினைத்த கவிதையை தான் அனுப்புகிரேன்!
இது வந்தால் சந்தோஷம் வரவில்லை எனில் இன்னும் தகுதியை அதிகப்படுத்த வேண்டும் என்றுதானே அர்த்தம்.

எனக்கு கவலை யாது எனில் ஊருக்கு போய்ட்டு வந்தால் நிறைய புதுமையுடன் புது 'அறுசுவை' நாம் இல்லாமல் 25 நாள் ஓடுமே என்றுதான்

சுபா தங்கைக்கு,

இந்தியாவில் நிறைய வசதி இல்லை என்று நான் குறிப்பிட்டது உண்மைதான். அதற்காக இவ்வளவு மோசமாக எண்ணிவிடவேண்டாம்:-)

இணைய வசதி இன்று எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதுவும் நீங்கள் வரப்போவதாக சொல்லும் மதுரை, சென்னை இரண்டிலும் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் ப்ரவுஸிங் செண்டர்ஸ் இருக்கும். கொஞ்சம் நேரம் செலவு செய்தால் அறுசுவையை பார்வையிடுதலோ, அறுசுவைக்கு பங்களித்தலோ எளிது. இன்னும் சொல்லபோனால், உங்களுக்கு இப்போது UAE ல் இருக்கும் லாகின் ப்ராப்ளம் இங்கே இருக்காது:-)

அன்புள்ள அண்ணா,
நான் வசதியை பற்றி கூறவில்லை.
நான் எனது சுற்றுலாவில் எங்கேஇருப்பேன் என்றே தெரியாது.
மேலும் தூக்கம் முழுவதுமே பிரயாணத்திலேயே இருக்கும் என்று தான் நினைக்கிறேன்.
சொல்லப்போனால் சென்னையில் எங்கள் வீட்டில் கனெக்சனே உள்ளது. அப்படியும் பார்க்கமுடியாது என்பது எனது நேரமின்மையையே குறிக்கும்.

கவிதை எழுத டிப்ஸ் கொடுத்துட்டீங்க.கவிதைக்கு தலைப்பும் கொடுத்துட்டீங்க.நல்ல ஐடியா.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சுபா சரியா சொன்னீங்க.ஊருக்கு போனா 30 நாளும் 30 இடத்தில இருக்கிறாப்புல தான் இருக்கும்,இதுல நமக்காக தனியா ஒரு மணி நேரம் கிடைச்சா கூட அது அதிசயம் தான்..

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மீண்டும் இந்த பகுதியை தூசி தட்டி எடுத்துள்ளேன். நிறைய உறுப்பினர்கள் கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டுவதால், அவர்களின் முழுத்திறனை வெளிக்காட்டும் நோக்கில், தலைப்பிற்கு கவிதை எழுதும் பகுதி மீண்டும் கொண்டு வரப்படுகின்றது.

கொடுக்கப்படும் தலைப்பு அல்லது நிகழ்விற்கு தகுந்த கவிதையை நீங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டும். சிறந்த கவிதைகள் அறுசுவையில் வெளியிடப்படும். விதிகள் எப்போதும் சொல்லப்படும் விதிகள்தான். இந்த த்ரெட்டின் ஆரம்பத்தில் உள்ளவற்றை படித்துக்கொள்ளவும்.

இந்த பகுதிக்கான புதிய விதி - கவிதை 10 வரிகளுக்கு மேல் 30 வரிகளுக்குள் இருக்க வேண்டும்.

தலைப்பு - "திரவியம் தேடி.."

கவிதைக்கான சூழல் + கரு இதுதான் : பொருள் தேடலுக்காக தாய்நாட்டைப் பிரிந்து, வெளிநாடு செல்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அப்படி வெளிநாடு வந்திருக்கும் ஒருவரின் புது மனைவி, சொந்த பந்தங்களை பிரிந்து, தனக்கு பழக்கமில்லாத ஒரு புது சூழலுக்கு தள்ளப்படுகின்றாள். இங்கே ஆயிரம் வசதிகள் இருந்தும், மனதிற்குள் ஒரு வெறுமை இருப்பதை உணர்கின்றாள். அவளின் ஏக்கத்தை கவிதையாக வடிக்க வேண்டும்.

உங்களின் கவிதையை arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது கீழே தொடர்புக்கு என்று உள்ள பக்கத்தின் வாயிலாகவும் அனுப்பலாம்.

கவிதைகள் 21-8-2010 க்குள் வந்து சேருமாறு அனுப்பவும்.

மேலும் சில பதிவுகள்