பெங்களூர் அவல் இட்லி

தேதி: September 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

பச்சரிசி - ஒன்றரை கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
சமையல் சோடா உப்பு - ஒரு சிட்டிகை
வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மோர் - 4 மேசைக்கரண்டி
கெட்டி அவல் - அரை கப்
பெருங்காயத் துண்டு - ஒரு சிறிய குண்டு மணி அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் ஊற வைக்கவும். அதை போல உளுத்தம் பருப்பையும் வெந்தயத்தையும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி விட்டு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கிரைண்டரில் ஊற வைத்த பச்சரிசியை கழுவி விட்டு போட்டு அதனுடன் தேங்காய் துருவலையும் போட்டு கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு, ஊற வைத்த உளுத்தம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் கிரைண்டரில் போட்டு அரைத்து அதே பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அரைத்த இரண்டு மாவையும் கலந்துக் கொண்டு அதனுடன் அவல் மற்றும் மோர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து எடுத்து பொடி செய்துக் கொள்ளவும். அதன் பிறகு கடுகு, நறுக்கின இஞ்சி துண்டுகள், பொடி செய்த பெருங்காயம் போட்டு 30 நொடி வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் கரைத்த மாவுடன் உப்பு, சோடா உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு அதனுடன் தாளித்தவற்றையும் போடவும்.
கலந்து வைத்திருக்கும் மாவில் எல்லாவற்றையும் போட்ட பிறகு ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்தவும். இட்லி தட்டில் கலந்து வைத்திருக்கும் மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி இட்லி பானையில் வைக்கவும்.
இட்லி பானையை மூடி 10 நிமிடம் ஆவியில் வேக விடவும். 10 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும்.
பின்னர் வேக வைத்த இட்லியை ஒரு தட்டில் எடுத்து வைத்து மேலே கொத்தமல்லித் தழை மற்றும் வேர்க்கடலை வைத்து அலங்கரித்து பரிமாறவும். இதற்கு வெங்காயச் சட்னி அல்லது இட்லி மிளகாய் பொடி சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

How to get ketti aval in thsi receipe?

Subha

அவலில் வெள்ளை அவல் இளம் சிவப்பு நிற அவல் பார்த்ததுண்டு..அட்மின் கெட்டி அவல்னா என்னன்னு கேட்டு சொல்லுங்களேன்.

தளிகா:-)

தளிகா
அவலில் மெல்லிசு அவல் கெட்டி அவல் உண்டு.
மெல்லிசாக, தேசலாக இருக்கும் அவலில் உப்புமா, கேசரி எல்லாம் செய்ய முடியாது. மெல்லிய அவலை ஊற வைத்து இட்லி, தோசை, ஆப்பம் எல்லாவற்றிற்கும் அரிசி அரைக்கும்போது சேர்த்து அரைத்தால் சூப்பராக வரும் இட்லி, தோசை, ஆப்பம்.
கெட்டி அவலில் உப்புமா செய்யலாம்.
சிவப்பு அவல் கைக்குத்தல் அவல். உடம்புக்கு ரொம்ப நல்லது.
அன்புடன்
ஜெயந்தி மாமி

இல்லை ஜெ இப்ப தான் பாத்தேன்..நல்ல இருக்கீங்களா?ரொம்ப நன்றி ஜே விளக்கத்துக்கு..சிகப்பு அவல் பாத்திருக்கேன்..ஆனால் இவ்வளவு விஷயம் இருக்குன்னு தெரியலை..இப்பல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்கிரதில்லை இல்லையா.பரவால எப்பவாவது வந்து ஆஜராகிட்டு போனா கூட போதும்