கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து

இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.

இது கடவுள் என்ற பொதுவான சொல்லைக் கொண்டு விவாதம் செய்யப்பட வேண்டிய விசயம். இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். இருதரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இதனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அலசலாம். நல்லவற்றையும் பட்டியலிடலாம். யார் மனதும் நோகாமல் இந்த விவாதம் செல்லும் வரை அது ஆரோக்கியமானதாக இருக்கும். (இதைவிட செய்வதற்கு எனக்கு ஆயிரம் நல்ல வேலைகள் உண்டு என்று நினைப்பவர்கள், தயவுசெய்து இந்த பக்கம் வரவேண்டாம். அதை இங்கே தெரிவிக்கவும் வேண்டாம். நீங்கள் உங்களின் பணியில் கவனம் செலுத்தலாம்.)

அன்புள்ள அஸ்மா லாத்தாவுக்கு
உங்க பதில் ரொம்ப அருமை.சிந்திக்க தூண்டும் அறுமையான் விவாதம்.எனக்கு தமிழில் எழுத நேரம் எடுப்பதால் அதிகம் எழுதுவதில்லை.நான் உம்மு ஹிஷாம்.நீங பிளீஸ் உங க மெஸன்சரை திறந்து பார்க்கவும்

அன்பு சகோதரி ஆயிஷா! நலமா? மெஸ்ஸெஞ்சரை பார்த்தேன். நம் அனைவரின் கல்வி ஞானத்தையும் அதிகப்படுத்தி தர, ஆதியும் அந்தமுமான ஏக இறைவன் போதுமானவன்!

//கடவுள் இல்லை என்பதற்க்கு தாங்கள் கூறும் ஆதாரம் என்ன ?அதை சொல்லுங்கள்!சகோதரரே!//

அதோ அந்த இடத்தில் 'ஜிங்கிடிசிக்கா' இருக்கிறது என்கின்றீர்கள். நான் "ஜிங்கிடிச்சிக்காவா, அப்படின்னா என்ன? எங்கே இருக்கு' என்று கேட்கிறேன். அது அங்கே இல்லை என்று ஆதாரம் கொடுங்கள் பார்க்கலாம் என்று ஆரம்பித்தீர்கள் என்றால் நான் என்ன சொல்வது?! இந்த விவாதத்தைப் பொறுத்தவரை, இல்லாத ஒன்றை ஏதோ ஒன்று இருக்கு என்று சொல்கின்ற நீங்கள்தான் அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். :-) அடுத்தடுத்த பதிவுகளில் விளக்கம் கொடுத்திருக்கின்றீர்கள். ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

அதற்கு முன்பு, என்னைப் பற்றி கொஞ்சம். நான் என்னை நாத்திகன் என்று அழைத்துக் கொள்பவன் அல்ல. எந்த கழகத்தைச் சார்ந்தவனும் அல்ல. எனது கல்லூரி பருவம் வரை தீவிர தெய்வ நம்பிக்கை கொண்டிருந்தவன் நான். கல்லூரி நாட்களில் கடவுள் இல்லை என்று வாதம் புரியும் நண்பர்களுக்கு எதிரணியில் இருந்து தீவிரமாக வாதிட்டவன். இது போன்ற வாதங்களினால் பின்னாட்களில் என்னாலும் சிலவற்றை யோசிக்க முடிந்து, படிப்படியாக உண்மையை உணர்ந்து கொண்டவன். ஏதோ ஒரு எதிர்பாராத நிகழ்வினால் தெய்வத்தை வெறுத்து நம்பிக்கையை துறந்தவன் அல்ல. விடை தெரியாத சந்தேகங்களுக்கு நானே தேடியறிந்து விடை தெரிந்து கொண்ட போது, உண்மை எதுவென்பதை உணரமுடிந்தது. அறிவியலை வெறும் மனப்பாடம் மட்டும் செய்யாமல், கொஞ்சம் புரிந்து படித்த போது பதில் தெரிந்திராத பல விசயங்களுக்கு பதில் கிடைத்தது. நடக்கும் நிகழ்வுகளுக்கு கேள்வி எழுப்பியபோது ஏமாற்றுதல்கள் புரிந்தது. கடவுளைப் பற்றி மனதில் சந்தேகம் கொள்ளுதல் கூட பாவம் என்று எண்ணி, என்னை ஒரு சின்ன வட்டத்திற்குள் அடைத்துக் கொண்டு சிந்தித்த போது கிடைக்காத விடைகள், அந்த வட்டம் தாண்டி, கடவுள் இல்லை என்பவர் நிலையில் இருந்து யோசித்தபோது எல்லாமே தெளிவாய் தெரிந்தது. எது என்னவென்றே அறியாத சிறுவயதில் உணவுடன் சேர்த்து திணிக்கப்பட்ட பக்தி, கடவுள் நம்பிக்கையை ஒரே நாளில் எடுத்தெறிந்துவிடவில்லை. யாரோ ஒருவர் சொன்னதை கேட்டு உடனே மனம் மாறிவிடவில்லை. தெளிவு பெற பெற நிகழ்ந்த மாற்றம் இது. நீங்களும் சிந்தியுங்கள். சின்ன வட்டத்திற்குள் அடைத்துக் கொண்டு சிந்திக்காமல், கொஞ்சம் விசாலமாக அறிவியலை கையில் எடுத்துக் கொண்டு சிந்தியுங்கள். உண்மை உணர்வீர்கள்.

//இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் ஒழுங்கு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. விண்ணில் எத்தனை... எத்தனை. விண்மீன்கள்! எத்தனை எத்தனை தொலைவில் இருக்கின்றன. அவைகள் உலகைவிடப் பன்மடங்குப் பெரிய உலகங்கள் என்று நாமறிவோம்.//

நல்லவேளை.. இந்த அளவிற்கு அறிந்திருக்கின்றீர்கள். நான் இதைப் பற்றி அதிகம் பேச வேண்டியிருக்குமோ என்று பயப்பட்டேன். நிறைய பேர் பூமி மட்டும்தான் உலகம், மேலே வானத்திற்கு மேல் சொர்க்கம் இருக்கிறது, அடுத்தப் பக்கம் நரகம், அங்கே கடவுள் பெரிய சட்டியில் எண்ணெய் காய்த்துக் கொண்டிருக்கின்றார் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அளவிற்கு அறிவு கொண்ட பாமர மக்களுடன் வாதாடுவதுதான் கொஞ்சம் கஷ்டம். அந்த விதத்தில் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியே. உங்களுக்கு கொஞ்சம் அறிவியல் தெரிந்திருக்கிறது.

பிரபஞ்சத்தை நீங்கள் மட்டுமல்ல, என்னையும் சேர்த்து எல்லோருமே வியப்புடன்தான் பார்க்கின்றோம். இதன் எல்லை எங்கே இருக்கும், ஆரம்பம் எங்கே இருக்கும், இருக்கும் நட்சத்திரங்கள் எத்தனை? மேலேயோ, கீழேயோ... செல்லச் செல்ல என்ன இருக்கும்? கற்பனை செய்து பார்க்கையில் பெரும் வியப்பாக இருக்கும். இந்த வியப்பு அப்படியே நின்று.. "ஓஓ.. இந்த அதிசயங்களை படைத்தது கடவுள் என்னும் அற்புத விஞ்ஞானி" என்று முற்றுப் புள்ளி வைத்துக் கொள்ளாது. எது, எதனால், எப்படி என்று அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழும். எப்படி எல்லாமே ஒரே பாதையில் சுற்றுக்கின்றன? என்ன மாதிரியான சக்திகள் இதனை இயக்குகின்றன என்பதையெல்லாம் சிந்திக்க தோணும், விடை காணும் ஆர்வம் எழும். வானவியல் பற்றி இருக்கின்ற புத்தகங்கள், இணையத்தளங்களை பார்வையிடச் சொல்லும். படித்து கொஞ்சம் தெளிவும் பெறும். இதுதான் சிந்தித்தல். 'ஆஹா என்னே அதிசயம்.. இதுவல்லவா கடவுளின் செயல்' என்று ஒரு எல்லையுடன் நின்று கொண்டு எல்லாவற்றிற்கும் கடவுளை காரணம் காட்டிவிட்டு அடுத்தவரைப் பார்த்து பகுத்தறிவு இல்லாதவர், சிந்திக்க தெரியாதவர்கள், வடிக்கட்டிய அறிவீனர்கள் என்று விமர்சனங்கள் கொடுத்துவிட்டால் சகோதரி அஸ்மா போன்றவர்கள் கைதட்டி பாராட்டு தெரிவிக்கலாம். மன்னிக்கவும். நான் உங்கள் அறியாமை குறித்து வருத்தப்பட மட்டுமே செய்வேன்.

//அவைகள் எப்போதாவாது வழிதவறி ஒன்றோடொன்று மோதிக் கொண்டனவா? மண்டலங்கள் சுற்றிச் சுற்றி வரும் போது பாதை மாறி இன்னொரு மண்டலத்தோடு இடித்துக் கொண்டனவா? //

எதனால் சுற்றி வருகின்றன என்ற அறிவியல் தெரிந்தால், ஏன் மோதாமல் சுற்றுகின்றன என்ற விளக்கம் உங்களுக்கு புரியும். இதையெல்லாம் நான் ஓரிரு வரிகளில் விளக்க முடியாது. பக்கம் பக்கமாக விளக்கம் தர தற்போது எனக்கு நேரமில்லை. சில இணையத்தளங்களின் முகவரிகள் தருகின்றேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள். மோதிக்கொண்டனவா, இடித்துக் கொண்டனவா என்பது எல்லாம் தெரியாமல் கேட்கும் கேள்வியா? இல்லை மோதிக்கொண்டது இல்லை என்று நீங்கள் சொல்லும் பதிலா? எதுவாயினும் சொல்கின்றேன். நட்சத்திரங்கள் மோதிக் கொள்ளுதல், உடைதல், பாதை விலகுதல் என்று எல்லாமே வான்வெளியில் நடந்து வருகின்றன. நாம் பூமி என்னும் ஒரு அணுவைவிட சிறிய கோளத்தில் (பிரபஞ்சத்தின் பிரமாண்டத்துடன் ஒப்பிடுகையில்) தற்போது சுகமாக ஜீவித்துக்கொண்டிருக்கின்றோம். இதே பூமியில் ஒரு யுகத்தில் பேரழிவு ஏற்பட்டு இருக்கின்றது. நம் மீது எதுவும் மோதாமல் இருக்கின்ற வரை, விதி, ஒழுங்கு என்றெல்லாம் பேசிக்கொண்டு இருப்போம். மோதுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன என்னும் அறிவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா?

//அப்படி இருக்க இம்மாபெரும் உலகமும் அதிலுள்ள அதிசயப் பொருட்களும் தாமாய் தற்செயலாய் தோன்றன என்று எப்படிக் கூற முடியும். செயற்கை நிலா தானாய் இயங்கவில்லை. கோடிக்கணக்கில் செலவழித்து அறிஞர் பலர் புத்தி நுட்பத்தைப் பயன்படுத்தி அதை வானவெளியில் விட்டனர். இயற்கை நிலாவும், வீண்மீன்களும், மண்டலங்களும் ஆக்கியோனில்லாமல் தானே தோன்றியிருக்க முடியுமா?

ஆக்கியோனில்லாமல் ஆன பொருளில்லை - என்பதே அறிவார்ந்த முடிவு.//

ஆக்கியோன் என்ற எல்லையோடு நிறுத்தி கொள்வதுதான் அறிவா? ஆக்கியோனை ஆக்கியது யார் என்று யோசித்து பார்க்க உங்களுக்கு தோன்றவில்லையா? ஆக்கியோன் இதையெல்லாம் ஆக்குவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தான்? ஆக்கியோன் தான் உருவான உடனே இவற்றையெல்லாம் ஆக்கிவிட்டானா? இல்லை ஆக்கியோன் முதலில் உருவாகி, ஒரு நல்ல நாள் பார்த்தும், யோசித்து, திட்டமிட்டு, அண்ட சராசரங்களையும் உருவாக்கினானா? அதுவரை அவன் எங்கிருந்தான்? அவனது மூலம் என்ன? இதையெல்லாம் யோசித்து பார்த்தீர்களா? இல்லை கடவுள் என்ற அளவிற்கு யோசித்ததே போதும் என்று திருப்திபட்டு கொண்டீர்களா? இல்லை அது ஒரு மாபெரும் சக்தி, அதற்கு தோற்றம், அழிவு எல்லாம் கிடையாது என்று சிறுபிள்ளைக்கு சொல்லும் கதை சொல்லப் போகின்றீர்களா?

//பொறுப்புள்ள ஒரு நாயகனில்லாமல் ஒரு குடும்பம் நிலை நிற்க முடியாது. அதிகாரமும் ஆற்றலுமுள்ள ஒரு அரசன் இல்லாமல் ஒரு நாடு நிலை நிற்க முடியாது. இந்த பிரபஞ்சம் மட்டும், ஒரு திட்டமிடும் சக்தியில்லாமல் நிலைநிற்கிறது என்று கூற முடியுமா? இப்பிரபஞ்சத்திற்குப் பின்னால் ஒரு திட்டமிடும் சக்தி உண்டு என்பதும், இப்பிரஞ்சத்திலுள்ள பொருட்கள் அனைத்தையும் ஆக்கி அவற்றை ஒரு சீரான முறையில் இயங்கச் செய்யும் தனித்தன்மையுடைய அறிவார்ந்த சக்தி உண்டென்பது நிச்சயம். //

ஒரு சக்தி சூரியனைப் படைக்கின்றது. சுற்றிலும் கோள்களை ஓட விடுகின்றது. ஆங்காங்கு நிலாக்களை வைக்கின்றது. அதே போல், கோடிக்கணக்கான சூரிய நட்சத்திரங்களை படைக்கின்றது. மனித அறிவால் அளக்க முடியாத பிரபஞ்சத்தை உருவாக்குகின்றது. அதில் ஒரு சிறிய புள்ளியாகிய பூமியில் மட்டும் உயிரினங்களைப் படைக்கின்றது. எறும்பில் ஆரம்பித்து, கரையான், கொசு, ஈ, பூச்சிகள், விலங்குகள், மீன்கள், தாவரங்கள் என்று வகைவகையாய் கோடிக்கணக்கான உயிரனங்களை படைக்கின்றது. மனிதர்களையும் படைக்கின்றது. ஈ, எறும்பில் ஆரம்பித்து, தேவா, தளிகா வரை அனைவரும் அரட்டை அடிக்கின்றார்களா, நெட்டில் டவுன்லோடு செய்கின்றார்களா, நல்ல காரியம் செய்கின்றார்களா என்பதை பார்த்துக் கொண்டே இருக்கின்றது. தினமும் கோடிக்கணக்கான உயிர்களைப் படைத்துக் கொண்டும், கோடிக்கணக்கான உயிர்களை அழித்துக் கொண்டும் நேரத்தை செலவழிக்கின்றது. இதை ஒரு சக்தி, ஒரே ஒரு சக்திதான் செய்து கொண்டிருக்கின்றது. இதை படிக்கையில் எங்கேயோ லாஜிக் இடிக்கவில்லை? இந்த ஒரு பத்தியை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். உங்களுக்குள் நீங்களே சில கேள்விகள் கேட்டுக்கொள்ளுங்கள்.

//கடவுளால் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களையும் ஏதாவது ஒரு வகையில் குறையோடுதான் கடவுள் படைத்திருக்கிறார். 100% குறையேயில்லாத மனிதன் இவ்வுலகில் இருக்க முடியாது. //
//அப்படி உலகம் சீராக இயங்கவேண்டுமென்றால், மனிதர்களிடையே வித்தியாசம் இருந்தால்தான் இயங்கமுடியும். அதானால்தான் ஒருவருக்கு காசு பணத்தை குறைத்து வழங்கியுள்ள கடவுள், இன்னொருவருக்கு உடல் உறுப்புகளில் குறைபாடுகளை வழங்கியுள்ளார்.
-சிலருக்கு அறிவை குறைத்தோ
-அழகை குறைத்தோ
-சந்தோஷத்தை குறைத்தோ
-அல்லது எல்லாவற்றையும் கொடுத்து கூடவே ஓயாத நோய் நொடிகளையும் கொடுத்தோ
-அல்லது எல்லாம் கிடைக்கப்பெற்ற இன்னொருவருக்கு பல பிரச்னைகளால் நிம்மதியை குறைத்தோதான் கடவுள் இந்த மானிட உலகை அமைத்திருக்கிறார். இதில் கடவுளின் குறைபாடு என்று கடவுளை குற்றம் சொல்வதற்கு இடமேயில்லை. //

ஓ, இதையெல்லாம்கூட அவர்தான் செய்கின்றாரா? அழகு என்பது பார்ப்பவர்களை சார்ந்த விசயம். எனக்கு அழகானது உங்களுக்கு அசிங்கமாக இருக்கலாம். எது அறிவு என்பது வரையறுக்கப்படமுடியாத ஒன்று. சந்தோசமும் மனிதருக்கு மனிதர் மாறுபடும் விசயம். இதையெல்லாம்கூட அவர்தான் நிர்ணயிக்கின்றாரா?!! ஆச்சரியம்.

//ஒரு சீரான முறையில் இயங்கச் செய்யும் தனித்தன்மையுடைய அறிவார்ந்த சக்தி உண்டென்பது நிச்சயம்.
//
//ஒருவர் இன்னொருவரை சார்ந்து வாழும்போதுதான் இவ்வுலகம் முறையான, சீரான அமைப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதற்காகத்தான் கடவுள் சில குறைபாடுகளை மனிதனுள் ஏற்படுத்தியுள்ளார்.
//

சீரான முறையில் இயங்க, சீரான முறையில் இயங்க .. என்று ஆங்காங்கே போட்டுவிட்டு, நீங்கள் ஒருவரையொருவர் பாராட்டி வேறு கொள்கின்றீர்கள்!! என்ன சீரான முறையில் இயங்குகின்றது? எனக்குப் புரியவில்லை? பணக்காரனைப் படைத்து ஏழையைப் படைத்தது பணக்காரனுக்கு வேலை செய்யவா? அப்படி செய்தால் சீராகின்றதா? என்ன விளக்கம் இது?

காசு பணம், ஏழை, பணக்காரன் வித்தியாசம், அறிவு போன்ற விசயங்கள் எல்லாம் மனிதன் தோன்றிய நாளில் வந்த விசயங்கள் இல்லை. எத்தனை வருடங்களாக காசு, பணம் இருக்கின்றது என்று நினைக்கின்றீர்கள்? மனிதன் இன்று இருப்பது போலவே கோட் சூட்டுடன் படைக்கப்பட்டான் என்பதையே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றீர்களா? மனிதன் மனிதனாகவே பிறக்கவில்லை என்று சிறிய உண்மை உங்களுக்கு இன்னமும் பிடிபடவில்லை. இன்று நாம் கொண்டிருக்கும் உருவம் பரிணாம வளர்ச்சி என்பது தெரியவில்லையா? விலங்காய் இருந்துதான் காலப் போக்கில் மனிதனாகி, ஒவ்வொரு விசயத்திலும் வளர்ச்சி கண்டிருக்கின்றோம் என்ற உண்மை புரியவில்லையா? இன்று நாம் பேசும் மொழி சில காலங்களுக்கு முன்பு இப்படி கிடையாது. அதற்கு சில காலங்களுக்கு முன்பு மொழியே கிடையாது. வார்த்தைகளும், அர்த்தங்களும் இல்லாதபோது மனிதனுக்கு சிந்தனைகளே இருந்திருக்காது. விலங்குகளுக்கு இருப்பது போன்று வெறும் பிம்ப அசைவுகளே ஓடியிருக்கும். சப்தங்களை வார்த்தைகளாக்கி, அதற்கு அர்த்தம் புகட்டி, சிந்தனை, அறிவு என்பதெல்லாம் மனிதன் உருவாகி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மனிதனுக்கு கிடைத்தவை. இதை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா? இதில்தான் கடவுள் ஏற்ற இறக்கங்களை வைக்கின்றாரா?!!

வாதத்திற்காக எடுத்துக்கொள்ளுங்களேன். கடவுள் என்று நீங்கள் சொல்லக்கூடிய சக்திக்கு இருக்கின்ற அதீத சக்தி எனக்கோ, உங்களுக்கோ இருந்தால் நாம் இப்படித்தான் உலகைப் படைப்போமோ? இப்படித்தான் மனித குணங்களைப் படைப்போமோ? சீராக இயங்க வேற்றுமைகளைப் படைத்தான், சீராக இயங்க நோய் நொடிகளை படைத்தான் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்கின்றீர்களே... இந்த வேற்றுமைகள், நோய் நொடிகள், கெட்ட குணங்கள், ஏழ்மை என்று எதுவும் இல்லாமல் எல்லோரும், எப்போதும் சுபிட்சமாய் வாழும் உலகை அந்த மாபெரும் சக்தியால் படைக்க முடியாதா? எனக்கு சக்தி இருந்தால் நான் அதைத்தானே செய்வேன். இதில் எங்கே சீர்மை கெடப் போகின்றது. நோய் இல்லாவிடில் சீர் கெட்டுவிடுமா? எப்படி? இறப்பு இல்லாவிடில் பூமி பாரம் தாங்காது போய்விடுமா? நான்தான் மிகப் பெரிய சக்தியாயிற்றே. தேவையெனில் இன்னொரு கோடி பூமிகள் உருவாக்கி வானில் அலையவிடுகின்றேன். எல்லோருக்கும் செல்வம் கொடுத்து சந்தோசம் என்பதை தவிர வேறு எதையும் கொடுக்காமல் வைக்கின்றேன். எதற்கு நான் உனக்கு துன்பம் கொடுக்க வேண்டும்? சில புத்திசாலிகள் பதில் சொல்வார்களே.. இறைவனை பற்றி நாம் நினைக்கத்தான் அவன் நமக்கு துன்பம் தருகின்றானாம்.. சிரிப்பாக இல்லை. மாபெரும் சக்தியாகிய என்னை நீ எதற்கு நினைக்க வேண்டும்? நீ நினைக்கவில்லையென்றால் நான் அழிந்துவிடுவேனா? அதெல்லாம்கூட பரவாயில்லை. உனக்கு துன்பம் கொடுத்துதான் என்னை நீ நினைக்க வைக்கவேண்டுமா? கொடுக்காமலே நீ எப்போதும் என்னை நினைக்க வைக்க என்னால் முடியாதா? எனக்குதான் எதையும் செய்யும் சக்தி இருக்கின்றதே..

//கடவுள் அளவில்லாத அறிவுடையவராக இருப்பதால்தான் ஒவ்வொருவருக்கும் ஒன்றைக்கொடுத்து இன்னொன்றை எடுப்பது என்ற ஒரு அருமையான ஏற்பாட்டில் இவ்வுலகை சீராக இயங்கவைத்துக்கொண்டிருக்கிறார். //

கடவுள் அளவில்லாத அறிவுடையவர்!!! .. ஆஹா.. என்னே அறிவு..!! இவர் மனிதர்களைப் படைக்கின்றாராம். கருவில் இருக்கும்போதே கலைப்பாராம். கரு வளர்ந்தவுடனும் அழிப்பாராம். கரு குழந்தையாகி வெளியில் வரும்போதும் தொப்புள் கொடி சுற்றி அழிப்பாராம். பிறந்து சில வாரங்கள் கழித்தும் அழிப்பாராம். சில வருடங்கள் கழித்தும் அழிப்பாராம். வளர்ந்து சற்று பெரியவர்களாகி பள்ளிக்கு செல்லும் போது, 'அட அங்கே நூறு குழந்தைகள் கும்பகோணம் பள்ளியில் குதூகலமாக படித்துக் கொண்டிருக்கின்றனரே.. எதிர்காலத்தை பற்றின பயமே இல்லாமல் சிறார்கள் துள்ளி திரிகின்றார்களே.. காலையில் குளித்து, புதிய உடை அணிந்து, மலர்ந்த முகத்துடன் தாய் தந்தையருக்கு டாட்டா காட்டிவிட்டு, முகத்தில் சிரிப்புடன் பள்ளிக்கு வந்துள்ளனரே.. இவர்களை விட்டுவைக்காதே.. கூப்பிடு அந்த ஆயாவை, கொளுத்து அந்த கொட்டகையை..' என்று கூக்குரலிட்டு, பிஞ்சுகள் கதறக் கதற, ரோஜா உடல்களை வேக வைப்பாராம். இந்தோநேசியாவில் பூகம்பத்தை உருவாக்கி, அந்த அதிர்வுகளை கடல் வழியே அனுப்பி, இலங்கையை கொஞ்சம் துவம்சம் செய்துவிட்டு, அதன்பிறகு நாகையில் வந்து முடிப்பாராம். சுனாமியாய் இவர் வந்தால், எதிரே இருப்பது குழந்தையா, கிழவியா, கர்ப்பிணியா, கயவனா என்றெல்லாம் தெரியாதாம். எல்லோரையும் அழித்து தள்ளுவாராம். இதற்கெல்லாம் விடை கேட்டால், படைத்த உயிரை திருப்பி அழைத்துக் கொண்டாராம்!! எங்கே?!! நீ நினைத்தால் படைப்பாய், கருவிலேயே அழிப்பாய், இல்லை வெளிவந்ததும் அழிப்பாய், இல்லை வேண்டியபோது அழிப்பாய்.. என்ன மாதிரி கிறுக்கன் நீ?? அறிவுள்ள நீ அழிப்பதற்காக ஒன்றை எதற்கு படைக்க வேண்டும்? ஆற்றல் உள்ள நீ ஏன் அழிக்க வேண்டும்? அதை அழிக்காமலே நீ நினைத்ததை செய்ய முடியாதா?

சகோதரிகளே... நீங்கள் போட்டிருந்த "சிந்தித்துப்பாருங்கள்" வார்த்தையையே இங்கே உங்களுக்கு பதிலாக தருகின்றேன். உண்மையாக சிந்தித்துப் பாருங்கள். சிறுவயதில் இருந்தே ஊட்டப்பட்டுவிட்ட இறை நம்பிக்கையை சட்டென எடுத்து, தூக்கி வீசிவிட முடியாது. அது உங்கள் இரத்தத்தில் ஊறி இருப்பதால், இப்போது இதற்கு நீங்கள் பதில் அளிக்க நினைத்தால்கூட எப்படி இவனை மடக்குவது என்று நினைத்துதான் விளக்கங்கள், பதில்கள் கொடுக்க நினைப்பீர்கள். தயவுசெய்து கொஞ்சம் சிந்தித்து பதில் சொல்லுங்கள். உங்கள் நம்பிக்கைகளை சற்று நேரத்திற்கு ஒதுக்கிவைத்துவிட்டு, இரண்டு பக்கமும் சேராமல், நடுநிலையாய் நின்று, எப்படி கடவுள் என்பது உண்மையாக இருக்க முடியும் என்பதை யோசியுங்கள். உலகில் நடைபெறுவது எல்லாம் எதனால் நடைபெறுகின்றன என்பதை தீர யோசியுங்கள். மனிதனின் தோற்றம் எப்படி என்பதை கற்பனை செய்து பாருங்கள். 50 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்களுக்கும் நமக்குமே எவ்வளவு வித்தியாசங்கள்? இதில் 5000 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்கள் எப்படி இருந்திருக்கவேண்டும் என்று யோசியுங்கள்.

மனிதன் என்பவன் ஒரு யூஸ் அண்டு த்ரோ வாட்ச் மாதிரி என்பதை மனதில் எப்போதும் நிறுத்திக்கொள்ளுங்கள். மூளையும், இதயமும் இயங்குவது நின்றால் மனிதன் என்பது தூக்கி எறியப்படவேண்டிய ஒரு பொருள். அவ்வளவுதான். அதனை எரித்தால், பாஸ்பரஸ், கார்பன் என்று கொஞ்சம் மிஞ்சும். அதில் உயிர் என்று தனியாக எதுவும் இல்லை. அது மேலோகம், கீழோகம் என்றெல்லாம் பறந்து போவதில்லை. அதற்கு மறுபிறப்பு என்றெல்லாம் எதுவும் கிடையாது.

நம்மை மீறிய சக்தி ஏதோ ஒன்றல்ல.. நிறைய இருக்கின்றன. வெப்பம், காற்று என்று நிறைய சக்திகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நீங்கள் வழிபட தேவையில்லை. வழிபடாவிட்டாலும் அவை ஒன்றும் கோபித்துக்கொள்ளாது. அவை அழிக்கும்போது எதிரே இருப்பது யார் என்று பார்த்தெல்லாம் அழிப்பதில்லை.

சிந்தியுங்கள், சிந்தியுங்கள்.. யாரோ சின்ன வயதில் சொன்னார்கள் என்பதை இன்று வரை எடுத்துக்கொள்ளாதீர்கள். எல்லாவற்றிற்கும் விடை தேட முயற்சி செய்யுங்கள். இதுபோன்ற நம்பிக்கைகளினால் நல்லவை மட்டுமே நடக்கின்றன என்று இருந்தால், என் போன்றவர்கள் இதைக் குறித்து பேசவே மாட்டோம். ஆனால், இன்று உலகில் கடவுள் வியாபாரப் பொருள் ஆகிவிட்டது. உலகில் நடக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மூடநம்பிக்கை காரணமாக இருக்கின்றது. மனித அறிவு வளர்ச்சியுறாத காலங்களில் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இன்றைய யுகத்தில், இதை வைத்து கொடுமைகள் நடப்பது கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்படவேண்டிய ஒன்று. மறுபடியும் சிந்தியுங்கள்.

கடவுள் என்பவர் யார்? அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? கயிலாய மலையிலா? காபாவிலா? யாருக்கென்றே முடிவுக்கு வராமலிருக்கும் எருசலேமிலா?யாரால்சொல்லமுடியும்?

மனிதப் பிறவியென்பது முழுக்க முழுக்கத் தேடல் தான்.தேடித் தன்னால் பதில் சொல்ல முடிந்தால் அதனை மனித சக்தி என்பதும் பதில் கிடைக்காத தேடலை தெய்வ சக்தி என்றும் காலம் காலமாகக் கூறிவருகிறோம். இது தான் நடைமுறை.

ஐந்து வயதில் அம்மா சொன்ன கதையைக் கேட்டபோது நிலவிலிருந்த பாட்டி ஐந்தாவது படிக்கும் போது அடைந்த அறிவு வளர்ச்சியில் மனசிலிருந்து மறைந்துபோகிறாளே அது போலத்தான் கடவுள் கொள்கைகளும்.

நம் மதம், மார்க்கம் என்ற கொள்கைகளை விட்டுவிட்டு நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால் இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

மூடிவைத்த தண்ணீர்ப் பாத்திரத்தை மூன்று நாள் கழித்துத் திறந்தால் உள்ளே உருவாகியிருக்கும் உயிர்களைப்போல் உலகத்தில் தோன்றியது தான் மனித உயிர்களும். இது முழுக்க முழுக்க ஒரு வேதியியல் மாற்றம். RNA,DNA என்று அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு செல் உயிராயிருந்து பல செல் உயிர்களாய்ப் பகிர்ந்து பரிணாம வளர்ச்சியில் பிறந்தது தான் மனித இனம்.

மண்ணிலிருந்து தான் உயிர்கள் தோன்றியது. நீர்,வாயுக்கள், கால்ஷியம், இரும்பு போன்ற தனிமங்கள் இவையெல்லாம் சேர்ந்து தானே மனித உடல் இயங்கிக் கொண்டிருக்கிறது? இதைத்தான் நாம் மண்ணை பிடித்து மூச்சைக் கொடுத்து மனிதனைப் படைத்தான் என்று நம் மூளைக்கெட்டியபடி சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

சரி, கடவுள் இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவர் ஏன் மக்களைப் பிரித்து மாக்களாக்கி ஒருவரை ஒருவர் அடித்துப்பிடித்து அழித்துக்கொள்ளச் செய்கிறார்? நம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தெரிந்த பிரித்தாளும் சூழ்ச்சியா இது?

பாவம் செய்தவர்களை இறைவன் தண்டிக்கிறான். நல்லவர்களை ரட்சிக்கிறான் என்றால் இந்தோனேஷியாவில் அடிக்கடி பூகம்பம் வருவதால் அங்கிருக்கும் மக்கள் பாவிகளா, நம் ஊரில் வரவில்லை என்பதற்காக நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்களா ...சொல்லுங்கள்.

பூமித்தட்டுகள் இடித்துக்கொள்வதால் பூகம்பம் உண்டாகிறது, மேகங்கள் உரசிக்கொண்டால் மின்னல் வருகிறது, வெற்றிடத்தை நோக்கி காற்று நகர்கிறது, பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்கிறது. இதெல்லாம் இயற்கை. இதற்கு இறைவன் என்று பெயரிட்டு மகிழ்ந்தது மனிதனின் இனிய கற்பனை.

Sorry for typing in English...Many of us believe in God. Some people do not believe in God. I think it is waste of time, trying to convince the other group.
I posted my first reply but now I will not be posting any replies further and wish to withdraw from the discussions. If some people believe in God, they think that is right. Some atheists believe their opinion is right. Let us try to repect every one's right to follow thier beliefs.

அன்பே உருவானவர்களுக்கு!
ஒரு காலத்தில் காலையில் எழுந்து படைக்கும் அறையில் இருக்கும் படங்களைத் துடைத்து பொட்டிட்டுப் பூவிட்டு வேலுக்குப் பூசை செய்து பள்ளிக்குச் சென்றவன் தான். மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து மூச்சைப் பிடித்துக் கொண்டு பச்சைத் தண்ணீரில் தலைமுழுகி என் வயதொத்தவர்களோடு தேவார திருவாசகங்களைக் கிராமத்துத் தெருவில் பஜனை பாடிச் சென்றிருக்கிறேன். 'மந்திரமாவது நீறையும்' 'கூற்றாயினவாறு'வையும் ஒப்பிப்பதில் பிழைசெய்து என் தாய்வழிப்பாட்டனாரின் தமையனாரிடம் (நடுத்தாத்தாவிடம்) தொடையில் கிள்ளு வாங்கியிருக்கிறேன்.
ஆனாலும் நான் சிந்தித்துப் பார்த்த அளவில் கடவுள் என்பது ஒரு கற்பிதமே. நம் சிறுவயதில் இத்தகையதொரு அனுபவம் நிச்சயம் நம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். ஒரு சிறு தட்டில் அல்லது கிண்ணத்தில் உணவேந்தி இடையில் நம்மை ஏந்தி நமக்கு நிலாவைக் காட்டி நித்தம் ஒரு கதைசொல்லி மட்டுமா நம் அம்மா நமக்கு உணவூட்டினார். எத்தனைமுறை பூதத்தையும் பிள்ளை பிடிப்போனையும் பூச்சாண்டியையும் சொல்லி ஊட்டியிருப்பார். நம் அம்மா நம்மை ஏன் அவ்வாறு முறுத்தினார். அழுது அடம்பிடிக்கும் குழந்தைக்கு அமுதூட்ட அது தேவைப்பட்டதால் தானே. அவ்வாறு தான் தாய்மை உணர்வுடைய நம் முன்னோர் நம்மை நன்னெறிப்படுத்த நமக்கு நல்வழிகாட்ட கடவுள் என்ற ஒன்றைக் கற்பித்தனர். கற்பிதம் செய்தனர். அதனால் தான் பல கடவுள், பல மதம், பலவழி, பல நம்பிக்கைகள். நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மதப்பற்றைச் சற்று விலக்கிவிட்டுச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் எல்லா மதத்துக்குள்ளும் சிறுசிறு முரண்பாடுகள் சிந்தித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்புடைய பதிலைக் கூறமுடியாத இடர்ப்பாடுகள். ஆனாலும் அவற்றின் முழுமுதல் நோக்கம் மனித குலத்தை அன்புக் கயிற்றால் கட்டிப்போட்டுச் சமுதாயத்தைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதுதான்.
அம்மா பூச்சாண்டி சொல்லியிராவிட்டால் அப்பொழுது நாம் உணவு உண்டிருக்க மாட்டோம். (ஆனால் நிச்சயம் பசிக்கும்போது உண்டிருப்போம்) நம் முன்னோர் கடவுள் என்றொரு மாபெரும் கற்பனைச் சக்தியைக் கற்பித்திராவிட்டால் எளிதில் வந்து பதிந்த நல்ல பல குணங்கள் நம்மிடம் அவ்வளவு எளிதில் பதிந்திருக்கா.
இன்று பாருங்கள்! கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் சரி இல்லாதவர்களும் சரி கிட்டத்தட்ட ஒரே பாதையில் சுயநலமிகளாய்ச் சுழன்றுகொண்டு இருக்கிறோம். 'இல்லை' என்கின்றவனும் எந்த வித உறுத்தலும் இன்றிச் சமுதாயச் சீர்கேடுகளை உண்டாக்குகின்றான். 'இருக்கிறான்' என்கின்றவனும் சீர்கேடுகளை விதைத்துவிட்டு உண்டியலில் காசெறிந்தால் சரியாகிவிடும் என்று கனவு காண்கிறான்.
கடவுள் என்பவர் இதற்காககவா படைக்கப்பட்டார்? கற்பிதம் செய்யப்பட்டார்? அல்லது பகுத்தறிவாளர்தான் பகுத்தறியும் திறனைச் சமுதாயச் சேர்கேட்டிற்காக என்று சிந்தித்திருப்பாரா?
குருடனுக்குக் கைத்தடிபோல, இருட்டுக்குக் கைவிளக்குபோலப் பயன்படும் என்று கருதிய கடவுள் படைப்பு மதநம்பிக்கை இன்று மக்களை ஆடம்பரம் போலித்தனம் என்றெல்லாம் அவலப்பட வைக்குமா அல்லது பொதுநலம் கருதி பகுத்தறிவுப் பாசறையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தான் பதவிக்கும் செல்வாக்குக்கும் ஆலாய்ப்பறந்து நம்பிய கொள்கையை நட்டாற்றில் விடுவார்களா?
இத்தகையவர்களைக் கற்பித்த கடவுளும் கேட்கவில்லை. கற்றவரும் கேட்கவில்லை.
நல்லவை நடக்க வேண்டும் நல்லதை நம்ப வேண்டும். முடியும் என்றால்! உன் அறிவால் தெளிந்து அவற்றைக் கடைப்பிடிக்க முடியும் என்றால் உனக்குக் கடவுளும் தேவையில்லை வேறொரு கைப்பொருளும் தேவையில்லை. முடியாது என்றால் குழந்தைக்குப் பூச்சாண்டிபோல கடவுள் என்ற பெயரில் ஏதாவது ஒரு கற்பிதம் தேவைத்தான் படுகிறது. குருடனுக்குக் கைத்தடிபோல...

பாவி

நானும் வீட்டிலிருந்தே கடவுள் நம்பிக்கையில் வளந்தாலும் சுயமாக சிந்தித்து நம்பத்த் தொடங்கியது வேதத்தை அலசத் தொடங்கியவுடன் தான்..
கோடிக்கனக்கில் செலவு செய்து இன்று விஞ்ஞானிகள் விழிபிதுங்க ஆராய்ச்சி செய்ய்து விடைய கன்டுபிடிக்கும்(கனிக்கும்)போது எத்தனையோ வருடங்களுக்கு முன்னேயே அதற்கான விடை வேதத்தில் ரொம்ப சுலபமா சொல்லப் பட்டிருக்கு......அதெப்படி என்று சிந்திக்கத் தொடங்கியபொழுது கடவுள் உன்டு என்றும் நம்பினேன்
யுனிவேர்ஸ் உருன்டை,பறந்தது என பலபல ஆராஇச்சிகள் நடந்து இப்பொழுதுதான் அது ட்ரம்பெட் ஷேப்பில் உள்ளதுன்னு கன்டுபிடிச்சப்ப பல வர்ஷத்துக்கு முன்னேயே அது எளிமையாக வேதத்தில் சொல்லப் பட்டிருக்கிரது..அதெப்படி??
கருவில் குழந்தந்தை உருவாகத் தொடங்கியவுடன் அட்டையின் உருவத்தில் இருக்கும் பின் இன்னும் கொஞ்ச நாளில் அது கடித்து துப்பிய ஒரு பொருளின் வடிவில் இருக்கும் என எந்த ஒரு sceintific ட்ரெயினிங்கும் இல்லாமல் ஒரு மனிதன் அதனை இவ்வளவு துல்லியமாக சொல்லமுடியாது...கடவுளுக்கு மட்டுமே முடியும்.
இது போல் இன்னும் பல ஆராய்ச்சியால் இன்னும் கன்டு பிடிக்க முடியாத ,விஞ்ஞானிகளைக் கூட வியப்படையச் செய்த விஷயங்கள் வேதத்தில் சொல்லப்பட்டதால் நான் கடவுள் உன்டு என்று நம்புகிரேன்.

தளிகா:-)

விலங்லிருந்து மனிதன் உருவானான் என்ற டார்வின்
கொள்கை நிருபிக்கப்படாத தத்துவம், சரி, கடவுள் இருக்கிறார் என்பது நிரூபிக்கபட்டதா ?

வேதங்களை கடவுள்தான் அனுப்பினார் என்பதற்கு என்ன ஆதாரம் ?

இந்த உலகில் நல்லவர்களாக வாழ்ந்தவர்களுக்கு
பரிசும், தீயவர்களுக்கு தண்டனையும் கிடைக்கும் என்று பயம் இருந்தால்தான், மனிதன் தீமை செய்ய மாட்டான், இதைத்தான் வேதங்களும் சொல்கின்றன.

மனிதனை நெறிபடுத்தவும், அவன் வாழும் சமுதாயத்தை கட்டுகோப்பாக வைத்திருக்கவும் மனிதர்களால் உருவாக்கபட்டதுதான் வேதங்கள். அதை கடவுள் அனுப்பினார் என்று மனிதர்கள் சொல்லித்தான் நாம் நம்பி கொண்டிருக்கிறோம்.

அம்மா சொல்லிதானே அப்பாதெரியும்.அது மாதிரி கடவுளும் அவங்க சொன்னது தானெ? ஐந்துவேலை தொழ சொன்னது அம்மா, குரான் படிக்க சொன்னதும் அம்மா தான்.அம்மவுக்கு அவுங்க அம்மா சொல்லியிருகாங்க. பாத்து அனுபவிச்சு சொன்னது யாருமில்ல
டார்வின் தத்துவம் நிருபிக்கப்படல தான்.
கடவுல் கொள்கை நிருபிச்சது யாரு?

மேலும் சில பதிவுகள்