கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து

இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.

இது கடவுள் என்ற பொதுவான சொல்லைக் கொண்டு விவாதம் செய்யப்பட வேண்டிய விசயம். இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். இருதரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இதனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அலசலாம். நல்லவற்றையும் பட்டியலிடலாம். யார் மனதும் நோகாமல் இந்த விவாதம் செல்லும் வரை அது ஆரோக்கியமானதாக இருக்கும். (இதைவிட செய்வதற்கு எனக்கு ஆயிரம் நல்ல வேலைகள் உண்டு என்று நினைப்பவர்கள், தயவுசெய்து இந்த பக்கம் வரவேண்டாம். அதை இங்கே தெரிவிக்கவும் வேண்டாம். நீங்கள் உங்களின் பணியில் கவனம் செலுத்தலாம்.)

நண்பர் பாபுவுக்கும் மற்றும் சகோதரிகள் வின்னி, தளிகா அவர்களுக்கும் "பாராட்டுக்கு நன்றி!"

நண்பர் பாபுவுக்கு,
// இந்த 'ஏன்' னை அவரா கேட்டார்? அல்லது தங்களுக்கு தோன்றியா 'ஏன்' ஆ அது? அவர் அதை கேட்டிருந்தால் அது எந்த புத்தகத்தில் என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள். அவருக்கு இந்த சந்தேகம் வந்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகின்றேன். //

சுஜாதா அவர்கள் எழுதிய "நிலாக் காலம்" (தலைப்பு தப்பாகவும் இருக்கலாம், கதை Cricket பற்றியது, ஹீரோ முகுந்தன், ஹீரோயின் லில்லீ) என்ற புத்தகத்தில் கதை முடிந்தபின் கடைசி சில பக்கங்களில் "கணையாழியின் கடைசிப் பக்கங்கள்" சில இடம் பெற்றிருந்தன. அதில் ஒரு பக்கத்தில் அவரது சொந்ததில் ஒரு பெண் குழந்தை இறந்த துக்கதினால் வெளிப்பட்ட அவரது வாசகம்தான் "வாழ்க்கையில் சில ஏன்-களுக்கு பதிலே இல்லை". இது என்னை மிகவும் பாதித்த வாசகம். என் வாழ்க்கையில் நடந்த சில எதிர்பாராத சம்பவங்களில் இந்த வாசகம் ஞாபகம் வந்ததுண்டு. இந்தப் பதிவில் அதை நான் மேற்கோள் காட்டியதன் காரணம் "ஏன்" என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கத்தான்! இதைப் போன்று கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவரது "பால் வீதி"யில் எழுதிய,
.....
வரங்களே சாபங்கள் ஆகுமென்றால் - இங்கே
தவங்கள் எதற்காக!
.....
என்ற வரியும் என்னை மிகவும் பாதித்ததே. இதன் அர்த்தத்தை நான் வாழ்க்கையில் பலமுறை அடிபட்ட பின்புதான் புரிந்து கொண்டேன். இவைகள் மேற்கோள்களே...

// "செய்பவரும் மாறுவதில்லை. செய்யும் செயலும் மாறுவதில்லை. கிடைக்கும் விடை மட்டும் மாறுகின்றது." அடுத்த முறை எல்லா factors ஐயும் யோசித்து அவை எல்லாமே மிகச்சரியாய் இருக்கின்றவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படியும் மாறினால் மாறும் விசயத்தை எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் காரணம் கண்டறிந்து சொல்கின்றேன்.:-) //

தங்களின் பதிவுகளைப் படித்தபின்பு நான் தங்களிடம் இருந்து எதிர்பார்த்தபடியே பதில் இருக்கிறது :-) வாழ்க்கை என்பது 1+1=2 என்பது போன்ற எளிதான கணிதம் அல்ல என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி இருந்திருந்தால் நமக்கு பல அரிய தத்துவங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மனோஹரி அவர்கள் ".... மாமியாரே என்னை காப்பாத்து எனக்கு மன அமைதியைக் கொடு என்று அவர் காலில் விழுந்தால் தவிடு பொடியாகாத காரியங்களே கிடையாது." என்று எழுதியிருந்தார். இதனால் எல்லா மாமியார்களும் (மனிதர்களும்) மனம் மாறிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? மாறுவது கடினம் என்றுதான் எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் சொன்ன விளக்கங்கள் நமது ஆறறிவிற்குத் தெரிந்ததே! எனினும் தாங்கள் "எதற்கும் சரியான விடை இருக்கிறது" என்று எளிதாக எடுத்துக்கொள்ளாமல் சிறிது "Paradigm shift" செய்து "synergy"-ட்டாக யோசித்துப்பாருங்கள். உங்கள் வாழ்வில் நிகழ்ந்த சில விஷயங்களுக்கு உங்களை திருப்திப் படுத்தும் அளவுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என உணர்வீர்கள். இதை நீங்கள் "கடவுள்" என ஒப்புக்கொண்டேதான் ஆகவேண்டும் என நான் வாதாடவில்லை. நாம் ஒரு கணிதப்புதிருக்கு விடை காணும்போது "let us take X as ..." என்று பிரித்து ஆராய முயலுவோம். நான் எனக்கு விடை தெரியாதவற்றை "let us take that the reason for it as கடவுள் ..." என எடுத்துக் கொள்கிறேன். :-) அதை விளக்கமாக எழுத நேரமில்லாததால் வந்த வாசகம்தான் "நாம் ஒரு செயலைப் பல முறை செய்யும்போது, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விடைகிடைக்கிறது ..." என்பது.

Nostradamus பற்றி நான் என்றுமே வியந்ததில்லை. காரணம் அவரது கூற்றுகள் மறைமுகமான கூற்றுக்களே. அதற்கு எப்படி வேண்டுமானாலும் பொருள் புரிந்து கொள்ளலாம். Cayce-ன் கூற்றுக்கள் அப்படியல்ல. அவர் ஜோசியகாரரும் அல்ல. அவரது கூற்றுக்கள் பெரும்பாலும் பல நோய்களை குணப்படுத்தியிருக்கின்றன. YouTube-ல் உள்ள Video-ல் (http://www.youtube.com/watch?v=y1W2AfaD7lk) சில ஆராச்சியாளர்கள் Cayce-ன் கூற்றை வியந்திருக்கிறார்கள். அவர்கள் வியந்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. உங்களுக்கு?

நீங்கள் புரிந்தவற்றை சான்றாகவும் புரியாதவற்றை முக்கியத்துவம் அற்றவை என்றும் நினைப்பதாகத் தெரிகிறது. நான் எதையும், யாரையும் துச்சமாக நினைப்பதில்லை. ஏனெனில் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இழந்துவிட என் மனம் ஒப்புவதில்லை. அதே சமயத்தில் முட்டாள்தனமாக எதையும் நம்புவதும் இல்லை.

எனக்கு ஆன்மீகத்தில் புரிந்து கொள்ளமுடியாததை Plato-ன் "The Allegory of the Cave" (http://webspace.ship.edu/cgboer/platoscave.html) புரியவைத்தது. நமது ஐம்புலன்களினால் புரிந்து கொள்ளமுடியாத விஷயங்கள் பல இருப்பதை இந்த கதை புரியவைத்தது. இதைத்தான் "The Matrix" என்ற சினிமாவும் டெக்னிக்கலாக கூறியிருக்கிறது. "The Matrix"-ன் கதைச்சுருக்கம் இதுதான்:

.........
இயந்திரங்கள் மனிதர்களை அடக்கி மனிதப் பண்ணையை உருவாக்கி அதிலுள்ள ஒவ்வொரு மனிதரின் மூளையையும் தன் கட்டுக்குள் வைக்கின்றன. மூளையின் கட்டளைகள் நரம்புகளின் வழியே செல்லும்போது அந்த மின்சாரத்தை சேமித்து Power Source-ஆக பயன்படுத்துகின்றன. Mainframe Computer-களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மூளைக்கு Computer Generated காட்சிகள் பார்வையின் பிம்பங்களாக (Virtual Reality) தெரிகிறது. மனிதர்களின் ஒவ்வொரு புலனும் Computer-ல் ஓடும் Matrix (மாயை) என்ற Software-ன் கட்டுப்பாட்டுக்குள்.
......

இதன்படி மூளைக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் மனிதர்களுக்கு உண்மை. அந்த மனிதர்கள் தாங்கள் Matrix (மாயை)-ன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை அறிவது எங்ஙனம்?

இந்தக் கோணத்தில் யோசிக்கும் பொழுது நான் தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள வாழ்க்கையில் நிறைய புதிர்கள் இருப்பதை உண்ர்கிறேன். இந்தப்புதிர்கள்தான் கடவுளை நோக்கிய என் வாழ்க்கை பயணத்தின் வழிகாட்டிகள்!

ஆஹா.. கோபம், ஆத்திரம், இதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தை வார்த்தைகளில் காட்டும் விவாதம் என்று இல்லாமல், தெளிந்த ஓடை போன்று சலனம் இல்லாமல் போகும் இந்த விவாதம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது. நண்பர் உதயபாஸ்கருக்கு மிக்க நன்றி.

//"வாழ்க்கையில் சில ஏன்-களுக்கு பதிலே இல்லை". இது என்னை மிகவும் பாதித்த வாசகம். //

சுஜாதா அவர்கள் கேட்டிருந்த இந்த "ஏன்" ஐ நானும் படித்திருக்கின்றேன். நீங்கள் போன பதிவில் கேட்டிருந்த ஏன் களை சுஜாதா கேட்டிருக்கமாட்டார் என்பதை நான் கண்டிப்பாக நம்பக் காரணம் அவரது எழுத்துக்கள் மூலம் அவரை எனக்கு நன்கு தெரியும் என்பதுதான். ஏன்கள் சம்பந்தமான கேள்விகள் பலவற்றிற்கு அவர் தெளிவான விடையளித்துள்ளார். அதனால் நீங்கள் குறிப்பிட்டு இருந்த ஏன்கள் சம்பந்தமான குழப்பம் அவருக்கு இல்லை என்பதும் எனக்கு தெளிவு.

//அப்படி இருந்திருந்தால் நமக்கு பல அரிய தத்துவங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மனோஹரி அவர்கள் ".... மாமியாரே என்னை காப்பாத்து எனக்கு மன அமைதியைக் கொடு என்று அவர் காலில் விழுந்தால் தவிடு பொடியாகாத காரியங்களே கிடையாது." என்று எழுதியிருந்தார். இதனால் எல்லா மாமியார்களும் (மனிதர்களும்) மனம் மாறிவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? மாறுவது கடினம் என்றுதான் எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். //

யதார்த்தம். இதை யாராலும் மறுக்க முடியாது நண்பரே. நிச்சயம் நான் சொல்ல வந்த கருத்து தங்களுக்கு புரிந்திராமல் இருக்காது என்று நம்புகின்றேன். எல்லா மாமியார்களும் மாறமாட்டார்கள் என்பது ஓரறிவு கொண்ட எனக்கே புரியும்:-) நீங்கள் போன பதிவில் கேட்டிருந்தது அது ஏன் என்ற கேள்வி. நான் அதற்கு கொடுத்திருந்த விளக்கம், மனிதர்கள் மனம் சம்பந்தமான விசயங்களிலும், அதன் தொடர்ச்சியான அவர்கள் செயல்களிலும் எல்லோரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதற்கும் ஒரு ஏன் எழுப்பினால், அவர்கள் அறிவு, சிந்தனை, சூழல், உடல் அமைப்பு... இப்படி காரணங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். "எல்லாமே 1+1 ஆக இருந்தால் விடை 2 என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லவே இல்லை. வாழ்க்கையில் எனக்கு 3 விடையாக வருகின்றது என்றால், நீங்கள் கூட்டியது 1 + 1 அல்ல என்பதுதான் எனது பதில்".

// உங்கள் வாழ்வில் நிகழ்ந்த சில விஷயங்களுக்கு உங்களை திருப்திப் படுத்தும் அளவுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என உணர்வீர்கள். //

நிச்சயம் இல்லை. எல்லாவற்றிற்கும் எனக்கு பதில் இல்லை. நான் வாழ்க்கையில் வியந்து நோக்கும் விசயங்கள் ஏராளம். (ஆனால், "பெரும்பாலும்" பல நோய்களை குணப்படுத்தியிருக்கின்ற Cayce ன் கூற்றுக்கள் எனக்கு பெரிய வியப்பினைத் தரவில்லை. நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் youtube videoவும் எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.) எனக்கு திருப்தியளிக்காத பதில்கள் நிறையவே என் வாழ்வில் உள்ளன. எனக்கு விடை தெரியவில்லை என்பதால் அதற்கு விடையே இல்லை என்று நான் சொல்லப்போவதில்லை. அதற்காக விடை காண முடியாத விசயங்களுக்கு நான் கடவுள் என்று பெயரிட்டு எனது எல்லையை வரையறுத்துக்கொள்வதும் இல்லை. எனக்குள் இருக்கும் தேடுதல்கள் நான் வாழும் வரை முற்றுப்பெறாது. எனக்கு 15 வயதில் விடை தெரியாத பல விசயங்களுக்கு இன்று விடை தெரியும். இன்று தெரியாத விசயங்களுக்கு நாளை தெரியலாம். இதில் எனது கேள்விகளை ஓரிடத்தில் நிறுத்தி, இதற்கு பிறகு "let us take that the reason for it as கடவுள் " என்று தொடங்குவதை விட, நான் X என்று எடுத்துக் கொண்டு செல்வதையே விரும்புகின்றேன். ஏனெனில் நடைமுறையில் X க்கு பொருள் இல்லை. சக்தி இல்லை. அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் பிரச்சனைகளும் இல்லை.

//நீங்கள் புரிந்தவற்றை சான்றாகவும் புரியாதவற்றை முக்கியத்துவம் அற்றவை என்றும் நினைப்பதாகத் தெரிகிறது.//

இது ஒரு ஒப்பீனியன். இதனை யாரும் யார் மீதும் சார்த்தலாம். என்னிடத்தில் இருந்து உங்களைப் பார்க்கையில் எனக்கும் உங்களைப் பற்றி அப்படித்தான் எண்ணத் தோன்றுகின்றது. உங்களிடத்தில் இருந்து என்னைப் பற்றி அப்படி நினைக்க தோன்றுகின்றது. இவை 'நான்' என்பதற்கான definition அல்ல. வேறொரு விசயத்தில் நீங்கள் என்னை பார்க்கையில் இந்த கோணம் மாறலாம். இந்த விசயத்தில்கூட நிறைய 'ஏன்' கள் இருக்கின்றது கவனித்தீர்களா? இதற்கெல்லாம் நீங்கள் கொடுத்திருந்த பதில்தான் யதார்த்த உண்மை. "இதன்படி மூளைக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் மனிதர்களுக்கு உண்மை." பார்த்தீர்களா, சுற்றி சுற்றி இறுதியில் மூளைதான் கடவுள், நாத்திகன், சைத்தான், மனிதன்,.. எல்லாமே என்று வந்து நிற்கின்றோம்.

நான் கண்டிப்பாக synergy ட்டாக யோசிக்கின்றேன். அதன் விளைவுதான் இன்றைய பாபு. நீங்கள் எதிர்ப்பார்த்தபடி நான் இருக்கவில்லை என்ற காரணத்தால், நான் எப்படி யோசிக்கின்றேன் என்பது குறித்து உங்களுக்கு சந்தேகம் வந்தால், நான் உதவமுடியாது. உங்களுக்கு ஆச்சரியத்தை வரவழைத்து, அதனால் இறை நம்பிக்கையை அதிகரிக்கும் அதே நிகழ்வுகள் எனக்கு இறை குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது. நீங்கள், எப்படி இது என்ற ஆச்சரிய கேள்வி எழுப்பி, ஆஹா இது இறை என்று முடிவு செய்து கொள்ளும் ஒரு விசயம், அதே எப்படி என்று ஆச்சரிய கேள்வியை என்னுள் எழுப்பி அது அப்படியே தொக்கி நிற்கின்றது. எனது மனம், அறிவு ஏற்றுக்கொள்ளும் விடை கிடைக்கும்வரை. இதுதான் நம்மிருவருக்கும் உள்ள வித்தியாசம்.

<font color="006060"> "என்னதான் இன்ஜினியரோ, டாக்டரோ, வெளிநாடோ, உள்நாடோ, தன் பிறப்பு - இறப்பைப் பற்றித் தெளிவில்லாமல் இருப்பதும், மரணத்துக்குப் பின் என்ன? என்கிற கேள்வி - பதில் அளிக்காமலேயே இருப்பதும்தான். இந்த uncertainity - நிச்சயமின்மை அவனை இம்சிக்கிறது. ஏதாவது ஒரு ஆணியில் தன் நம்பிக்கையை மாட்டி வைக்க விரும்புகின்றான். முழுக்க முழுக்க பகுத்தறிவாதமும், ஏன் ஏன் என்ற முடிவில்லாத கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஓர் எல்லைக்குப் பிறகு கேள்வி கேட்காமல் நம்பவே விரும்புகின்றான். அந்த எல்லை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒரு எளிய மனதுக்கு தெரு கோடி பிள்ளையாரில் தொடங்கி, அண்ட சராசரங்களையும் பிரபஞ்ச விசைகளையும் ஆராய்ந்த ஐன்ஸ்டைனுக்கு இறுதியில் God என்கின்ற ஓர் எளிய வார்த்தை தேவைப்பட்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கின் போன்றவர்கள்கூட Detrminism பற்றிப் பேசும்போது ஆரம்ப கணத்தில் ஓர் எல்லையற்ற சக்தியைச் சொல்ல வேண்டியிருந்தது. தெருக்கோடி பிள்ளையாரா இல்லை க்வாண்டம் இயற்பியலா இடையில் எத்தனையோ... கடவுள்கள், மகான்கள் எல்லோருக்கும் பகுத்தறிவுக்கான எல்லை உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கைகளால் நல்லது நிகழும்வரை போனால் போகின்றது நம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடத்தான் விருப்பம்."</font>

மேலே உள்ள பத்தி, சுஜாதா அவர்கள் பெருகி வரும் ஆன்மீக அமைப்புகள் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கொடுத்திருந்த பதில். நான் சுஜாதா ஜாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுபவன் (நிஜ ஜாதியைச் சொல்லவில்லை :-)) போனால்போகட்டும், நம்புகின்றவர்கள் நம்பிக்கொள்ளுங்கள் என்று அவர் சொல்வதைத்தான் எல்லோரும் சொல்லி வருகின்றோம். :-)

எனக்கேன் வம்பு அழிச்சுடரேன்

சகா பாபு அவர்களே, உங்களை நான் வழி மொழிகிறேன்.. சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா? "படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. இல்லாத ஒன்றை தேட எனக்கு விருப்பம் இல்லை.ஆனால் உண்மையை அறிய முயற்சிக்கிறேன்.

நான் அறிய முயற்சிப்பது இதுதான்..

கடவுள் நம்மை உருவாக்கினார் என்றால் எதற்காக உருவாக்கினார் ?அவர் எப்படி தோன்றினார்?நாம் என்ன விளையாட்டு பொம்மையா? நாம் பிறப்பதினாலோ,இறப்பதினாலோ அவருக்கு என்ன லாபம்?நமக்கு தான் என்ன லாபம்?பிறந்ததிலிருந்து நாம் நம் மரணத்தை எதிர்க்கியுள்ளோம்.எதற்காக?

கண்டிப்பாக கடவுளின் பெயராலோ,மதத்தின் பெயராலோ கூறும் சடங்கு சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.. தற்போது நமக்கு இருக்கும் ஆதாரங்களான அனைத்து மத வேத,சாஸ்திரங்கள் அனத்தும் மனிதனாலே எழுத பட்டவை.. கடவுள் எழுதினார் என்று சான்று இல்லை.ஏனெனில் அப்போது நீங்களும்,நானும் பிறக்க வில்லை.. அதை மேற்கோள் சொல்லாமல் தற்போதைய நிலையை யாராவது விளக்கினால் பரவாயில்லை...

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

நானும் ஆரம்பத்துலேர்ந்து பாக்கிறேன். கடவுள் இருக்குன்னு சொல்றவங்க பதிலை படிச்சா ஆமா கடவுள் இருக்கணும்னு தோனுது. அப்புறம் பாபு அண்ணா பதிலை படிச்சா இருககாதுன்னு தோணுது. மறுபடியும் இருக்குது, இல்லேன்னு இப்படியே மாறி மாறி, இருந்த கொஞ்சம் தெளிவும் போய் இப்ப குழம்பிபோய் கிடக்கிறேன். அண்ணா.. இப்ப திருப்தியா? :-) எல்லாரும் இப்ப கடைசியா என்ன தான் சொல்ல வர்றீங்க, கடவுள் இருக்கா.. இல்லையா? மரியாதையா சொல்லிடுங்க. அப்புறம் நான் அழுதுடுவேன்.

யாருடைய பதிலையும் நீங்க எடுத்துக்கவேண்டாம் வினோதா. இங்கே சொல்லியிருக்கும் விஷயத்தை பார்த்து நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க...

சமீபத்தில் எனக்கு மிகவும் நெருங்கிய ஒரு சகோதரி அகாலமாய் மரணமடைந்தார்கள்.அவருக்கு நீரிழிவுடன் உயர் இரத்த அழுத்தம் வேறு, அத்தோடு எடையும் அதிகம்.

அவரிடம் உணவுக்கட்டுப்பாட்டுடன், மருந்துகளும் எடுத்துக்கொள்ளுமாறு பலமுறை நான் எச்சரித்தபோதும் எனக்குக் கிடைத்த பதில்,"எல்லாம் ஆண்டவர் இருக்கிறார் நான் யாருக்கும் எந்தப் பாவமும் பண்ணியதில்லை. எனக்கு எதுவும் வராது, நீ பிள்ளைகளுடன் பத்திரமாக ஊருக்குப் போயிட்டு வா" என்பதுதான்...

ஒவ்வொரு வாரமும் வீட்டில் பிரார்த்தனைக்கூட்டம் நடத்தி வருபவர்களுக்கெல்லாம் வயிறார சமைத்துப்போட்டு வழியனுப்புவார்.அப்படிப்பட்ட அந்த சகோதரி இன்று இல்லை.

இரண்டு வாரங்களுக்குமுன் திடீரென்று வந்த நெஞ்சுவலி அரை மணி நேரத்தில் அவரை அமரராக்கிவிட்டது. அவரையே சுற்றிச்சுற்றி வந்த அவரது இரண்டு ஆண்குழந்தைகளின் நிலையோ இன்று பெரும் அவலம்.

இன்னொரு விஷயம் அதையும் கேளுங்கள்...

எனக்குத் தெரிந்த அந்தப் பையனுக்கு வயது 15 இருக்கும்.ஆனல் வயதை மீறிய கடவுள் பக்தி(எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள்).

அதிகாலையில் சூரியன் உதிக்குமுன் அவன் கோவில் வாசலில் இருப்பான். கோவிலைப் பெருக்கி சுத்தம் செய்து பெண்பிள்ளைகளே வியக்குமளவுக்கு கோலம் போடுவான்(மார்கழியில் கோலத்தின் நடுவில் பூவும் வைப்பான்) அதற்குப்பிறகுதான் பள்ளி செல்வதெல்லாம். மாலை பள்ளிவிட்டு வந்ததும் திரும்பவும் கூட்டுதல்,கோலமிடுதல்,
கோவிலுக்குரிய பொருட்களை சுத்தம் செய்தல்,ப்ரசாதம் தயாரிப்பதிலும் உதவி செய்வான். அப்புறம் போய் படிப்பேன் என்று சொல்லுவான். பரீட்சை நாட்களில் கூட இந்தப் பணிக்கு விடுமுறை கிடையாது.

யாராவது அவனிடம், படிக்கவேண்டிய நேரத்தை இப்படிச் செலவழிக்கிறாயே என்று கேட்டால் "நான் அவன் வேலையைப் பார்க்கிறேன்,என் வேலையை அவன் பார்த்துக்கொள்வான் " என்று சிரித்துக்கொண்டே சொல்லுவான்.

ஆனால் அவனது இறுதித் தேர்வு முடிவுகள் அவன் சிரிக்கும்படியாக இல்லை. மூன்று பாடங்களில் தோல்வி.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பாருங்கள். என்ன முடிவு எடுக்கவேண்டுமென்று உங்களுக்கே புரியும்...

அன்பு சகோதரிக்கு,

இரண்டு கருத்துக்களை கேட்டதால் வந்த குழப்பம்தானே இது? என்னுடைய கருத்துக்கள் குழப்பமான கருத்துக்களாக இல்லையே.. :-)

நான் எப்போதும் இந்த விசயத்தில் மற்றவர்களுக்கு கூறும் தீர்வு இதுதான். இது நம்பிக்கை சார்ந்த விசயம். உங்கள் மனது எதை நம்புகின்றதோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகின்றீர்கள். எப்போது நீங்கள் குழப்பம் என்று சொன்னீர்களோ அப்போதே உங்களுக்குள் தேடுதல் இருக்கின்றது என்பது புரிகின்றது. உங்கள் தேடுதலுக்கு விடை கிடைக்குமா என்பதற்கு எனக்கு பதில் தெரியாது. ஆனால், தெளிவுக்கு வழி நிச்சயம் உண்டு.

இப்போது உங்கள் முன்னே இரண்டு பாதைகள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று கடவுளை தேடும் பாதை. மற்றொன்று அறிவியலை தேடும் பாதை.

இதில் நீங்கள் நடுநிலையாய் இருந்து எந்த பாதை சரி என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள் என்று சொல்லமுடியாது. இதில் நம்மால் நடுநிலை வகிக்க முடியாது. ஏனென்றால் நாம் அறிந்தோ அறியாமலோ பிறந்த பொழுதில் இருந்து நம் பெற்றோர்களால், அல்லது மற்றோர்களால், இதில் ஏதேனும் ஒரு பாதையில் ஏற்கனவே தள்ளப்பட்டு விட்டோம்.

இந்த இரண்டு பாதைகள் பற்றி தெரியாதவரால் மட்டுமே நடுநிலை வகிக்க முடியும். ஏதேனும் ஒரு பாதையில் ஏற்கனவே சிறிது காலம் பயணித்தவர் நடுநிலை வகிக்க முடியாது. நீங்கள் தற்போது எந்த பாதையில் இருக்கின்றீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அது கடவுள் உண்டு என்ற பாதையாக இருக்கலாம், அல்லது இல்லை என்ற பாதையாக இருக்கலாம். இந்த கணத்தில் இருந்து சிறிது காலம் வரை மற்றொரு பாதையில் மனதை திறந்து வைத்து பயணித்துப் பாருங்கள்.

அந்த பாதையை அப்படியே முழுமனதாக ஏற்றுக் கொண்டு பயணியுங்கள். அங்கே காண்பவற்றை, கிடைக்கும் அனுபவங்களை எப்படி மற்றொரு பாதையில் முன்பு செல்லும் போது ஏற்றுக் கொண்டீர்களோ அப்படியே ஏற்றுக்கொண்டு பயணம் செய்யுங்கள். சிறிது காலம் அந்த பாதையில் பயணித்து, உங்களுக்கு திருப்தி வரும் தூரம் வரை சென்று விட்டு, மீண்டும் ஆரம்பத்திற்கே வந்து, இரண்டு அனுபங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, எது உங்கள் மனதிற்கு உண்மை, நல்லது என்று படுகின்றதோ அதை இறுதி முடிவாய் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இரண்டு பாதையிலும் பயணித்ததில் நீங்கள் இழந்தது என்ன, அறிந்தது என்ன, அடைந்தது என்ன என்பதை வைத்து எது உங்களுக்கு சிறந்த பாதை என்று முடிவு எடுங்கள். இது உங்களின் சொந்த அனுபவத்தில் கிடைக்கும் முடிவு. அது எதுவாக இருந்தாலும், உங்களுக்கு தெளிவாக இருக்கும்.

இப்படித்தான் என் வாழ்க்கையில் நான் முடிவு எடுத்தேன். இது உங்களுக்கும் உதவலாம் என்று நம்புகின்றேன்.

வராம இருக்க முடியலப்பா?பாபு அண்ணா இன்னோர் கேள்விக்கும் விடை கொடுங்கள்.வேதங்களே வேண்டாம்.கட்டுபாடுகளே வேண்டாம்.கடவுள் பயமே வேண்டாம்.நீ நினைப்பதை செய்துகொள் என மனிதனை விட்டால் சமுதாயம் என்ன ஆவது?சில நல்லவர்களை விட்டுவிடுவோம்.உங்களைபோல்

ரோஸ், பெரிய்ய ஐஸ் பாரே வச்சிட்டீங்களே...
ஆமா இந்த கடைசி வரி ஐஸா, இல்லே நக்கலா????
தெரியாம தான் கேக்கிறேன்...

அன்பு தங்கை விதுபா கடவுள் நம்பிக்கையால் வரும் பிரச்சனைகளை கூறும்படியாக தங்களின் இரண்டு விளக்கங்களும் என்னைப் பொருத்தவரையில் பொருத்தமாக இல்லை என்று நினைக்கின்றேன். காரணம் நீங்கள் என்ன கூற நினைக்கின்றீர்கள் என்று எனக்கு நன்றாக புரிகின்றது. ஆனால் வெறும் புத்தகங்களை வைத்துக் கொண்டு கடவுள் இருப்பதாக, சொல்வதையே திரும்ப திரும்ப கூறுபவர்களுக்கு நிச்சயமாக தங்களின் உதாரணங்களை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியுமா, (முக்கியமாக வினோதா போன்ற குழப்பமாக உள்ளவர்களுக்கு) என்று மெத்த சந்தேகமாக இருக்கின்றது.

அதாவது.முதலில் கூறிய சகோதரி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதால் நிச்சயமாக அவருக்கு மரணம் சீக்கிரமே சம்பவிக்குமென்று தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாக இருந்திருப்பார்கள். ஆனால் வாகன விபத்து போன்ற சம்பவத்தால் அவர் அகால மரணமடைந்திருந்தால் அவர் கடவுளின் மீது கொண்ட பக்தி வீணாகிப் போன உதாரணம் பொருத்தமாக இருந்திருக்கும் என்றி நினைக்கின்றேன்.

அதைப் போல் தாங்கள் குறிப்பிட்டுள்ள சிறுவனின் உதாரணம் கூட கடவுள் நம்பிக்கை இருப்பவருக்கும், இல்லாதவருக்கும் தெரியும், படிக்காவிட்டால் பரிட்சையில் தோல்வியில் தான் முடியும் என்று. ஆகவே இதற்கும் கடவுள் நம்பிக்கையால் தான் அவன் தோல்வி கண்டான் என்று கூறுவது பொருத்தமாக இல்லை. அதற்கு பதில் பரிட்சை எழுத முடியாதபடி அவனுக்கு ஏதாவது எதிர் பாராத தடங்கல்கள் ஏற்ப்பட்டிருந்தால் அந்த உதாரணம் சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இவ்வாறு நாம் கொடுக்கும் உதாரணம் மிகவும் பொருத்தமாக கூறினால் தான் ஓரளவிற்கு நமது கருத்தை தெளிவாக மற்றவருக்கு புரிய வைக்க முடியும் என்பது என்கருத்து.மன்னிக்கவும் என்னுடைய கட்சிக் காரருக்கே இவ்வாறு மாற்று கருத்துக்களை கூற வேண்டாம் என்று நினைத்தாலும் முடியவில்லை.

மேலும் சில பதிவுகள்