கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து

இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.

இது கடவுள் என்ற பொதுவான சொல்லைக் கொண்டு விவாதம் செய்யப்பட வேண்டிய விசயம். இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். இருதரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இதனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அலசலாம். நல்லவற்றையும் பட்டியலிடலாம். யார் மனதும் நோகாமல் இந்த விவாதம் செல்லும் வரை அது ஆரோக்கியமானதாக இருக்கும். (இதைவிட செய்வதற்கு எனக்கு ஆயிரம் நல்ல வேலைகள் உண்டு என்று நினைப்பவர்கள், தயவுசெய்து இந்த பக்கம் வரவேண்டாம். அதை இங்கே தெரிவிக்கவும் வேண்டாம். நீங்கள் உங்களின் பணியில் கவனம் செலுத்தலாம்.)

அன்பு சகோதரிக்கு இதை நான் கலவரமாக எடுத்துக்கொள்ளவில்லை.கலகம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம் :-) (சிலரின் கலகங்கள் நன்மையில் முடியும் என்று சொல்வார்களே...)

நான் சொன்ன விஷயங்கள் மூலம் நான் தெரிவிக்க வந்தது, இருவருமே கடவுள் மேல் வைத்த அளவு கடந்த நம்பிக்கையால் தன் கடமையைச் சரியாகச் செய்யத் தவறியவர்கள்.

38 வயது என்பது சாகும் வயதில்லையே...நோய் இருக்கிறது என்று தெரிந்தும் சிகிச்சை எடுக்காமலிருந்ததும், பரீட்சை வருவது தெரிந்தும் சரிவரப் படிக்காமலிருந்ததும் அவர்கள் கடவுள் நம்பிக்கையால் செய்யத் தவறிய கடமைகள்.

கடவுள் மேல் வைத்த அக்கறையை தங்கள் வாழ்க்கையில் வைத்திருந்தால் இருவரும் தோற்றுப் போயிருக்க மாட்டார்களே...இது தான் என் ஆதங்கம்...
இது வினோதாவுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்...

கடவுள் என்பவர் யார்? அவரின் வேலை என்ன? அவரை ஏன் வணங்க சொல்கிறார்கள்? வணங்குவதால் என்ன நன்மை? இவற்றிற்கு விடை தெரியும்போது கடவுள் உண்டா இல்லையா என்பது தெளிவாகலாம்.

உமாசங்கர் கூறியதுபோல் நம்மில் நிகழும் சில, பல விடைதெரியாத விசயங்கள்க்கே கடவுள் என பெயரிடப்பட்டது எனலாம். அந்த X 'ஒரு பொருள்' அல்ல. அதில் அடங்கியவை ஏராளம். எவ்வாறு பாபு விடை தெரிந்தவற்றையெல்லாம் X -லிருந்து நீக்கிவிடுகிறாரோ அவ்வாறே உ.ச. வும் விளக்கம் தெரிந்தவற்றை 'கடவுள்'-லிருந்து நீக்கிவிடுகிறார் என்றே நினைக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் விடை தெரிந்துவிடும் என்பது நம்பற்கரிது. இன்னொரு விசயம் மனிதன் தோன்றிய காலத்தில் விடை தெரியாத விசயங்கள் இன்றிருப்பதுபோல் பன்மடங்கு இருந்தது. அவனுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது, 'கடவுளாக'-பார்த்து கொடுத்துவிட்டார். (பாபு: உ.ச. கடவுள் என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எங்கும் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன்). ஆக இருவர் கருத்துக்களும் ஒன்றே (????!!!!).

இவ்வளவு அறிவியல் வளர்ந்தபின்பும் பல விசயங்களுக்கு விடை கிடைக்கவில்லை. அப்படியென்றால் அந்த காலகட்டங்களில்?
நம் முன்னோர் கூறிய அனேகமானவை நல்லவிசயங்களாகவே இருக்கின்றன. அப்படியிருக்க 'கடவுள்' தவறாக இருக்குமா?
விடை தெரியாத சில கேள்விகளுக்கு மனம் அமைதியாக இருக்கும்போது விடை கிடைக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தி சிறிதுநேரம் அமைதியாக இருக்கும்போது மூளைக்கு சிறிது ஓய்வும் மனதிற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. மூளையும் மனதும் நன்றாக வேலைசெய்யும்போது கேள்விக்கு விடை காண்பது எளிதாகின்றது.

இந்த ஒருநிலைப்படுத்தலுக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. அதுதான் கோவில், சர்ச், மற்றும் மாஸ்க். (இவற்றின் அமைப்பு மற்றும் அமைவிடத்தை பார்த்தாலே தெரியும் அது அமைந்ததன் நோக்கம்).
வெறும் மண்டபத்தில் போய் இதை செய்யச்சொன்னால் ஏற்கமாட்டார்கள் என்பதற்காகவும், ஒரு உருவம், ஒளி என்றிருந்தால் மனதை ஒருநிலைப்படுத்துதல் எளிது என்பதாலும் உருவம் தேவைப்பட்டது.அங்கு செல்லவைப்பதற்காக மக்களிடம் சொல்லப்பட்டதுதான், செல்லாவிட்டால், வணங்காவிட்டால், கெட்டது நடக்கும் என்ற பயமுறுத்தல். அடம்பிடிக்கும் குழந்தையிடம் பூச்சாண்டி (பாபு போன்று ஒருவரை காட்டி- கவனிக்க உருவம் தேவை (கற்பனைக்காகவாவது)) காட்டி உணவூட்டுதல்.

மேலும் மனம், மூளை சம்பந்தமான இந்த விளக்கத்தை கொடுக்கும்போது பலர் புரிந்துகொள்ளமாட்டர். ஒருசிலர் அதற்கு முக்கையத்துவம் அளிக்கமாட்டர். எனவே ஒரு பயமுறுத்தல் தேவைப்பட்டது.

எல்லோருக்கும் நன்மை பயக்குமெனில் ஒரு பொய் தவறில்லை என்பதுபோல 'கடவுள்' என்ற விசயம் மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்டது.

ஆனால் சிலர் இங்கு விவாதிப்பதுபோல், கடவுள் நல்லவர்களை காப்பார், தீயவர்களை தண்டிப்பார் (கடவுள் உண்டு என்போர்), தீயவர்கள் சந்தோசமாக இருக்கின்றனரே (கடவுள் இல்லை என்போர்) என்பதும் கற்பனையே.

ஒன்றை யோசித்துப்பார்த்தால் தெரியும், எல்லாவுயிர்க்கும் பொதுவானவன் என சொல்லப்படும் கடவுள் ஏன் மனித உருவில் இருக்கிறார். ஆகவே மனிதன் படைத்ததுதானே கடவுள்.
மனிதன் மனிதனையும், பிற விலங்குகளையும் கொல்லுதல் தீய செயல் என்று கடவுள் தீர்மானித்தால், மற்ற விலங்குகள் பிற விலங்குகளை தீயசெயல் என்றுதானே தீர்மானிக்கவேண்டும். அப்படி பார்த்தால் தீமையை மட்டுமே தினம் தினம் செய்துகொண்டிருக்கும் அந்த விலங்குகளை ஏன் படைத்தார்? அவற்றிற்கு என்ன தண்டணை? எனவே கடவுளால் படைக்கப்பட்டதல்ல உயிரினம். கடவுள்தான் படைத்தார் என ஆணித்தரமாக நம்புவதாக இருந்தால், படைத்தவுடன் முடித்துக்கொண்டார் அதன்பிறகு கடவுளுக்கும் உயிரினங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே தோன்றுகிறது.

கொலை, கொள்ளை, மற்றும் வன்புணர்ச்சி எல்லாம் நம் அறிவு வளர்ச்சியின் காரணமகவும், நம் இன (மனித இனம்) வளர்ச்சிக்காகவும் தவறானவை என நாம் வரையறுத்துக்கொண்டது. (வேட்டையாடுதலும் வன்புணர்ச்சியும் எல்லா உயிரினத்திற்கும் பொதுவானது. இதை தவறு என சிலர் புரிந்து பின்பற்றுவர், சிலர் பின்பற்ற மறுப்பர். எனவே கடவுள் என்ற கதாபாத்திரம் மூலம் ஒரு பயமுறுத்தல் தேவைப்பட்டது.
விடைதெரியாத பலவற்றிற்கு விடை தெரியவில்லை என்பதைவிட பலவாறு பெயரிட்டு பழகினர் மனிதர்கள். இது என் லக்கி பென், இது என் லக்கி சர்ட், என கூறுவது இதனால்தான் என நினைக்கிறேன். உண்மையில் பேனாவும், சர்ட்-ம் பல விசயங்களில் (பேனாவின் பிடியளவு, முனையின் தரம், சட்டையின் நிறம், தரம், அளவு, அன்றைய நாள் என எவ்வளவோ) அவருக்கு பொருத்தமானதாக இருந்திருக்கும்.இவை மனதிற்கும் மூளைக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கலாம். அதை என்று அவர் அழைப்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். ஏனெனில் மேற்கூறிய காரணங்களால், அணியும் ஒவ்வொறு முறையும் நல்லதையும், எழுதும் ஒவ்வொறு முறையும் நல்ல மதிப்பெண்னையும் கொடுக்கும் ஒரு பொருளை தனிமைப்படுத்தி அதற்கு சிறப்புக்கவனம் செலுத்துவதில் தவறில்லையே? (கவனிக்க: இந்த விசயத்தில் என்னென்ன காரண, காரியங்கள் அந்த பேனாவை ராசியானதாக்கையது என்று ஆராயத்தேவையில்லை. ஏனெனில் அது ஒன்றாக இருக்கலாம். ஓராயிரமாகவும் இருக்காலாம்).

இதுபோலவே மனதிற்கும் உடலுக்கும் நன்மை பயக்கும் ஒரு விசயத்திற்கு 'கடவுள்' என பெயரிட்டு அதில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் வைத்ததை எவ்வாறு தவறென்பது?

அப்பாடா ஒரு வழியா டைப் பண்ணி முடிச்சாச்சு.

இதை இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன் விது. இப்பொழுது தெளிவாக தங்கள் கருத்தை கூறி முடித்திருக்கின்றீகள். ஏற்கெனவே குழம்பி போய் பதிவை போட்டவரை மேலும் சுத்தவிடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதால் தான் எனது கருத்தைக் கூறினேன்.

எவ்வளவு பெரிய கலகம் அல்ல கலவரமே வந்தால் கூட அறுசுவை டாட் காம் என்ற சக்தி வாய்ந்த ஒரே கட்சியாக இருப்போம் அண்ணன் வாழ்க...நமது அண்ணன் வாழ்க...அறுசுவைக்காக சர்வருடன் போராடும் நம் அண்ணன் வாழ்க...தங்க தலைவர் நமது அண்ண பாபு வாழ்க....அல்லாரும் ஜோரா கூவுங்க.

நன்றி தங்கச்சி(???!!!)நீங்க தானே கட்சில வயசெல்லாம் பாக்கக்கூடாதுன்னு சொன்னீங்க ;-)

//ஒன்றை யோசித்துப்பார்த்தால் தெரியும், எல்லாவுயிர்க்கும் பொதுவானவன் என சொல்லப்படும் கடவுள் ஏன் மனித உருவில் இருக்கிறார். ஆகவே மனிதன் படைத்ததுதானே கடவுள்.
மனிதன் மனிதனையும், பிற விலங்குகளையும் கொல்லுதல் தீய செயல் என்று கடவுள் தீர்மானித்தால், மற்ற விலங்குகள் பிற விலங்குகளை தீயசெயல் என்றுதானே தீர்மானிக்கவேண்டும். அப்படி பார்த்தால் தீமையை மட்டுமே தினம் தினம் செய்துகொண்டிருக்கும் அந்த விலங்குகளை ஏன் படைத்தார்? அவற்றிற்கு என்ன தண்டணை? எனவே கடவுளால் படைக்கப்பட்டதல்ல உயிரினம். கடவுள்தான் படைத்தார் என ஆணித்தரமாக நம்புவதாக இருந்தால், படைத்தவுடன் முடித்துக்கொண்டார் அதன்பிறகு கடவுளுக்கும் உயிரினங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே தோன்றுகிறது//

திரு. இனியன் கூறியது போலதான் நானும் நினைக்கிறேன். கடவுள்தான் படைத்தார் என்றால் அவர் பாட்டுக்கு படைத்து விட்டு laws of physicsஐயும் வச்சிட்டு பொய்ட்டார். அவ்வளவுதான் :)

பி. கு: நன்றி திரு. இனியன். எனது மனதிலிருந்ததை எப்படி வார்த்தையில் எழுதுவது என்று தெரியாமல் இருந்தது. அதையே நீங்களும் சொன்னதால அதயே quote பண்ணீட்டேன். :)

சகோதரி ரோஸ்மேரி அவர்களுக்கு,

//பாபு அண்ணா இன்னோர் கேள்விக்கும் விடை கொடுங்கள்.வேதங்களே வேண்டாம்.கட்டுபாடுகளே வேண்டாம்.கடவுள் பயமே வேண்டாம்.நீ நினைப்பதை செய்துகொள் என மனிதனை விட்டால் சமுதாயம் என்ன ஆவது?//

"வேதங்களே வேண்டாம்" என்று சொல்ல விருப்பம் இல்லை. எது வேதம், அந்த வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன? அதனால் மனிதனுக்கு என்ன நன்மை என்பது பற்றிய முழு விளக்கம் இல்லாமல், அதை முற்றிலும் மறுக்க முடியாது.

ஆனால், நடைமுறையில் இன்று வேதங்கள் இருக்கின்ற காலத்தில் எத்தனை பேர் அந்த வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களின்படி வாழ்க்கை நடத்துகின்றார்கள்? தன்னை ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டுவோர் எத்தனை பேர்? (இதன் உட்பொருள் நானறிவேன். இருப்பினும் விளக்கத்திற்கு கேட்கின்றேன்.) மனதைத் தொட்டு சொல்லுங்கள். இன்று வேதங்களை தங்களின் சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் அதிகமா? வேதம்படி வாழ்பவர்கள் அதிகமா?

மதத் தீவிரவாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா மதத்தீவிரவாதிகளும் அவர்கள் வேதத்தை கரைத்து குடித்து இருக்கின்றார்கள். அவர்கள் கரைத்து குடித்த வேதத்தால் இந்த சமுதாயத்திற்கு கிட்டியது நன்மையா? கெடுதலா? இது ஏதோ ஒரு சிலர் என்று குறிப்பிட்டு ஒதுக்கக்கூடிய விசயம் அல்ல. ஏதோ ஒன்று, இரண்டு என்று நாம் அலட்சியப்படுத்தியதின் விளைவு இன்று விஸ்வரூபம் எடுத்து, புற்றுநோயாய் சமுதாயத்தில் புரையோடி அரிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த மதம்தான் என்று இல்லை. எல்லா மதத்திலும் பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை பெரும்பாலும் ஊக்குவிப்பவர்கள், அந்த மதம் சார்ந்த வேதத்தை நன்கு கற்றறிந்தவர்கள்.

வேதங்களினால் இப்போது கட்டுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை. அதிகப்பட்சம் மக்கள் இன்று பயப்படுவது சட்டத்திற்குதான். அதுவும் சட்டத்தை கையில் வைத்திருப்போர் அதற்கும் பயப்படுவதில்லை. இதனால், இறை நம்பிக்கை போவதால், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. நாம் அது முழுவதும் இல்லாத உலகத்தை பார்க்கவில்லை. எனவே நாம் இப்போது பயப்படலாம்.

இறை நம்பிக்கை எல்லாதவர்கள் இந்த உலகில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். அறுசுவை வாக்கெடுப்பை மாதிரியாகக் கொண்டாலே, 22% மக்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றார்கள் :-) அவர்கள் எல்லாம் கட்டுபாடுகள் இல்லாமல் வாழ்கின்றார்களா? எல்லாருமே கயவர்களாக வாழ்கின்றார்களா?

"கடவுள் பயமே வேண்டாமா?"
பிறந்ததில் இருந்து இன்று வரை நீங்கள், நான், அனைவருமே, கடவுளோ, வேதமோ செய்யக்கூடாது என்று கூறிய விசயங்கள் எத்தனையோவற்றை செய்துவிட்டு, இதெல்லாம் சின்ன தப்பு, கடவுள் நம்மை கண்டுக்கமாட்டார் என்று நமக்கு நாமே சமாதானம் கூறியிருக்கின்றோம். யாராவது மறுக்கின்றீர்களா? சிறு சிறு பொய்கள் சொல்லும் விசயத்தில் ஆரம்பித்து, ஏமாற்றுதல், பிறர் மனம் நோகச் செய்தல்.. இப்படி தவறுகள் செய்யாத மனிதனே கிடையாது.

இந்த கடவுள் பயம் விசயத்தில் இன்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளும் நிலைதான் அதிகம் காண்கின்றோம். அவரவர் வசதிக்கேற்ப தவறுகள் செய்துவிட்டு அதற்கு விளக்கம் கொடுத்து கொள்கின்றோம். சின்ன பென்சிலை திருடியவன், நான் என்ன தங்க செயினையா திருடினேன், இது பெரிய தவறு அல்ல என்று நினைக்கின்றான். தங்க செயின் திருடுபவன் நான் என்ன கடையையேவா கொள்ளை அடிச்சேன். ஒரே ஒரு செயின். அதுவும் அந்த கடைக்காரன் கொள்ளை அடிச்சு சேர்த்தது. இதை கடவுள் கண்டுக்கமாட்டாரு.. அந்த கடைக்காரனோ அத்தனை கடவுள் படத்தையும் கடையில மாட்டி வச்சிட்டு, கிலோவுக்கு கால் கிலோ தாமிரம் சேர்க்கிறான். இப்படித்தான் வியாபாரம் பண்ணனும். இது ஏமாத்து கிடையாது. கடவுள் கோவிச்சுக்கமாட்டாருன்னு சமாதானம் சொல்லிக்கிறான். இன்னும் ஒரு படி மேலே போய், சாமி உனக்கு தங்கத்தாலே தேர் வாங்கித்தர்றேன்னு சொல்லி, சாமிக்கே லஞ்சம் கொடுக்கிறான்.

நான் மேலே சொன்ன அவலங்கள் இன்றைக்கு நடைமுறையில் இல்லயென்று உங்களில் யாரேனும் மறுக்க முடியுமா? இதேபோல்தான் இன்றைக்கு கடவுள் சம்பந்தமான எல்லா விசயங்களுமே அவரவர் வசதிக்கேற்றார்போல் flexible ஆக வளைத்துக் கொள்ளும் விசயமாயிற்று. தவறுகளை செய்துவிட்டு காப்பதற்கு கடவுள் இருக்கின்றார் என்று கடைசியில் மனிதன் சென்று சேரும் இடமாக கடவுள் மாறிவருகின்றார்.

வாழ்க்கை நெறிமுறைகளுக்கு, வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்பதற்கு இப்போது யாரும் கடவுளுக்கு பயப்படுவதுபோல் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த எண்ணிக்கை குறைவுதான். கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுதல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் என்ற அளவிற்கு மனித நாகரிகம் சீர் கெட்டுக் கிடக்கின்றது. ஆலயங்களிலேயே தவறுகள் நடக்கின்றன. தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொண்டு உலகை ஏமாற்றும் கயவர்களும் இந்த பூமியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கடவுள் பயம் குறைவதால் உண்டாகும் மாற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடப் போவதில்லை. எனது எதிர்பார்ப்பு, கடவுள் பெயரால் நடந்து வந்த அக்கிரமங்கள் குறையும். கடவுள் விசயம், சென்டிமென்ட் என்று சட்டம் தயங்கும் விசயங்களில், நாளை இந்த நம்பிக்கை சென்ற பின்பு சட்டம் எல்லாவற்றிற்கும் பொதுவாய் இருக்கும். மக்கள் தங்களது நேரங்களை இன்னும் பயனுள்ள விசயங்களில் செலவழிக்க இயலும்.

நான் நல்லவனா, கெட்டவனா என்பது எனக்கு தெரியாது. கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு கடவுள், பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற பயங்கள்தான் இல்லை. சட்டத்திற்கு பயப்படுகின்றேன். தவறு செய்ய பயப்படுகின்றேன். தவறு செய்தால், மாட்டிக்கொண்டு அதனால் ஏற்படப்போகும் மான, அவமான உணர்வு விசயங்களுக்கு பயப்படுகின்றேன். இதையெல்லாம் தாண்டி, என்னையே நீ செய்தது சரியா என்று கேட்கும் எனது மனசாட்சிக்கு பயப்படுகின்றேன். இந்த பயங்கள் எல்லோருக்குமே இருக்கின்றது. இந்த உலகில் வாழ இந்த மூன்று பயங்களுமே போதுமானது என்பதுதான் எனது எண்ணம்.

எழுத்தாளர் சுஜாதா சொன்னதுபோல் இந்த நம்பிக்கைகளால் நன்மைதான் எனும்போது விட்டுவிடலாம். அதைத்தான் நானும் இதுநாள் வரை செய்து வருகின்றேன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்று ஒதுங்கி, எனது நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்கும் செயலை செய்யக்கூடாது என்று எண்ணுகின்றேன். ஆனால், நடக்கும் சமூக அவலங்களைப் பார்க்கும்போது நாம் ஒதுங்குவது தவறோ என்று தோன்றுகின்றது.

கடவுள் பெயரால் நட்க்கும் அக்கிரமங்களுக்கு, கடவுள் என்ற concept -டையே தவறு என எப்படி ஒதுக்குவது? அதில் நடக்கும் அக்கிரமங்களை வேண்டுமானால் சட்டம் கொண்டு திருத்தலாம். ஒரு பொருளால் தீமைகளும் இருக்கிறது என்பதற்கு அப்பொருளே வேண்டாமென எப்படி ஒதுக்குவது?

கடவுள் பயம் உள்ளவர்களும் தவறு செய்கிறார்கள். அதற்காக கடவுள் என்ற concept எப்படி தவறாகும். சட்ட, மன, மான, மனட்சாட்சி பயம் உள்ளவர்கள் தவறே செய்வ(த)தில்லையா?

நண்பர் இனியன் அவர்களே.. வருக வருக..

மிக நல்ல கருத்துக்கள் பலவற்றை உங்கள் பதிவில் வைத்திருக்கின்றீர்கள். கடவுளைப் படைத்தது மனிதன் தான் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். நிஜம். இதே வார்த்தையை நான் அறுசுவையில் முன்பு ஒருமுறை எழுதியிருக்கின்றேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லாமே உண்மைதான்.

கடவுள் என்பது ஒரு concept. அது மக்களுக்கு மன நிம்மதியை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. மனிதனுக்கு விடை தெரியாத காலத்தில், விடை தெரியாத கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட விடை கடவுள்... இது அத்தனையும் உண்மை. இதுதான் எனது கூற்றும்.

ஜீவராசிகளைப் படைத்தது கடவுள் அல்ல என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கமும் நன்றாக இருக்கிறது. சகோதரி நர்மதா அவர்கள் அதை ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆக கடைசியில் நீங்கள் எங்களது கட்சிதான். :-) இதுதான் எனது வாதமும். கடவுள் என்ற ஒரு நம்பிக்கை சார்ந்த கான்செப்ட் இன்று நடைமுறையில் இருக்கின்றது. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், கடவுள் நிஜத்தில் இல்லை.

//கடவுள் பெயரால் நட்க்கும் அக்கிரமங்களுக்கு, கடவுள் என்ற concept -டையே தவறு என எப்படி ஒதுக்குவது? அதில் நடக்கும் அக்கிரமங்களை வேண்டுமானால் சட்டம் கொண்டு திருத்தலாம். ஒரு பொருளால் தீமைகளும் இருக்கிறது என்பதற்கு அப்பொருளே வேண்டாமென எப்படி ஒதுக்குவது?//

சகோதரி அவர்கள், இறை நம்பிக்கை அழிந்தால் சமுதாயம் சீர்கெட்டுவிடாதா என்ற கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நான் கொடுத்திருந்த பதில் அது. இறை நம்பிக்கை வேறூன்றி இருக்கும் இக்காலத்தில் இவ்வளவு சீர்கேடுகள் இருக்கும்போது, இறையுணர்வு நீங்குவதால் அது பெரிய மாற்றத்தை உண்டாக்கிவிடாது என்பது எனது கருத்து. அதைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன்.

மற்றபடி, "அல்லவை நீக்கி நல்லவை கொள்ளலே வல்லோர் வகுத்த வழி" என்பதில் எனக்கும் உடன்பாடே.

நண்பர் பாபுவிற்கு, உங்கள் வரவேற்பிற்கு நன்றி. என் கடைசிப் பதிவை நீக்கிவிடலாம். உங்களின் பதிவை பார்ப்பதற்கு முன் எழுதியது.

சகோதரி நர்மதாவிற்கும் எனது நன்றி.

மேலும் சில பதிவுகள்