முகவாதம் (facial paralysis) - நான் அனுபவித்த கொடுமையான பிரச்சனை

இது 6 வருடங்களுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட அனுபவம். அக்னி நட்சத்திரம் முடிந்து சில வாரங்கள் ஆகியும் உக்கிரம் குறையாத சென்னை வெயிலில், ஊரில் இருந்து வந்திருந்த எனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்து, மில்கி வேயில்(milky way) ஒரு பவுல் ஐஸ்கிரீமையே மதிய சாப்பாடாக எடுத்துக் கொண்டு, மாலை பைகிராப்ட்ஸ் ரோட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு இருந்த அமிர்தா ஐஸ்கிரீம் பார்லரில் அரைக்கிலோ வாங்கினால் அரைக்கிலோ ஐஸ்கிரீம் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்து, அதையும் வாங்கி, நண்பர்கள் சாப்பிட முடியாமல் ஒதுக்கி வைத்த அரைக் கிலோவை நான் மட்டுமே சாப்பிட்டு விட்டு, கொடுமையான வெயில் நாளை கொஞ்சம் நா குளிர செலவழித்தேன். இடையிடையே தாகத்திற்கு குடித்த ஏழு பாட்டில் குளிர்பானங்களை குறிப்பிடவேண்டாம் என்று நினைக்கின்றேன். புண்ணியம் செய்த ஒருவன் சென்னையில் இருப்பது அன்றுதான் வருண பகவானுக்கு தெரிந்தது போலும். இரவு கொஞ்சம் தூறலை அள்ளிவிட்டார். கொதிக்கும் வாணலியில் தெளித்த தண்ணீர் போல சென்னை நகர தார் சாலைகளில் மழை நீர் பட்டு, புகை கிளம்பிற்று. நீண்ட நாட்களுக்கு பிறகு குளிர்காற்று உடலை தழுவிய ஆனந்தத்தில், அன்று இரவு சாரல் தெறிக்கும் ஜன்னல் அருகில் சட்டை போடாமல், மெல்லிய குளிரை அனுபவித்தபடியே உறங்கிவிட்டேன்.

எல்லோருக்கும் விடிந்தது போல் எனக்கும் பொழுது சாதாரணமாகவே விடிந்தது. எப்போதும் போல் brush, paste, soap எல்லாம் எடுத்துக் கொண்டு வாஷ் பேஸின் செல்லும் வரை என்னால் வித்தியாசமாக எதையும் உணரமுடியவில்லை. பைப்பை திறந்து வாய் கொப்பளிக்க ஒரு கை நீரை அள்ளி வாயில் ஊற்றியபோதுதான் விபரீதத்தை உணர முடிந்தது. வாயின் ஒரு பக்கத்தில் இருந்து தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தது. வாயில் இருந்த கொஞ்சம் தண்ணீரை, வாயை மூடி கொப்பளிக்க நினைத்தபோது இயலவில்லை. எல்லா நீரும் வலப்புற வாய் வழியே வெளியில் கொட்டியது. ஏதோ நடந்துவிட்டது என்பது மட்டும் புரிந்தது. ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டு, மறுகணம் சுதாரித்து கண்ணாடியில் முகம் பார்க்க ஓடினேன். முகத்தை பார்த்த எனக்கு அதிர்ச்சியில் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்க வாய் கீழிறங்கி இருந்தது. ஒரு கண்ணை இமைக்கவே முடியவில்லை. வாயை முழுவதுமாக திறக்க முடியவில்லை. எனது முகம் ஒரு பக்கம் முழுமையும் செயலற்று போய் இருப்பதை உணர முடிந்தது. தேவர் மகன் காக்கா ராதாகிருஷ்ணன், தெனாலி ஜெயராம் என்று படங்களில் பார்த்த வாதம் வந்தவர்கள் ஒவ்வொருவராக மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

தூங்கிக் கொண்டிருந்த என் நண்பர்களை அடித்து எழுப்பினேன். எல்லாருமே பயந்துவிட்டார்கள். எனது நண்பர் இம்மானுவேல் மட்டும் பார்த்த மாத்திரத்தில் சொன்னார்.. "பயப்படவே பயப்படாதீங்க பாபு, இதுக்கு பேரு முகவாதம், பதினைஞ்சே நாள்ல சரியாயிடும். எங்க அக்காவுக்கு இதேதான் வந்துச்சு. பிஸியோதெரபி ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டா போதும்." அவர் சொன்ன விதத்தைப் பார்த்ததும் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. இருந்தாலும் பயம் நீங்கவில்லை. எனக்கு உடலின் எந்த பகுதியில் எவ்வளவு பெரிய காயம் வந்தாலும் கவலைப்பட மாட்டேன். ஆனால் முகத்தில் சிறிய பரு வந்தால்கூட தாங்க முடியாது. இப்போது இப்படி ஒரு பிரச்சனை என்றதும் மிகவும் ஒடிந்துவிட்டேன். உடனடியாக ப்ரவுஸிங் சென்டருக்கு சென்று, நெட்டில் விபரங்கள் தேடினேன். பெல்ஸ் பால்ஸி அது இது என்று ஏதேதோ கொடுத்திருந்தார்கள். எதுவுமே எனக்கு மனதில் பதியவில்லை, ஒரே ஒரு தகவலைத் தவிர. இது எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்சனை என்ற ஒன்று மட்டும்தான் பதிந்தது.

சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில், ஒரு நியுராலஜிஸ்ட்டை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிச் சென்றேன். எனது நண்பர் அதெல்லாம் தேவையில்லை, நீங்கள் ஒரு நல்ல பிஸியோதெரபிஸ்ட்டை பாருங்கள், அது போதும் என்று தடுத்தார். கேட்கவில்லை. எனது முகமாயிற்றே. அநாவசிய ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. டாக்டர் பார்த்தவுடனே எனது நண்பர் சொன்ன அதே வார்த்தைகளை எழுத்து மாறாமல் சொன்னார். முக அசைவுகளை கட்டுப்படுத்தும் ஏழாவது நரம்பில் உண்டான பாதிப்பால் வந்த பிரச்சனை இது என்று நான் நெட்டில் தேடி எடுத்த விசயத்தை எல்லாம் சொன்னார். நானும் சும்மா இருக்க முடியாமல் கொஞ்சம் தெரிஞ்சவனாக காட்டிக் கொள்ள, "பெல்ஸ் பால்சி யா டாக்டர்" என்று கேட்டு என்று நெட்டில் தெரிந்து கொண்ட இரண்டு மூன்று வார்த்தைகளைப் எடுத்துவிட்டேன். அவர் கொஞ்சம் ஆச்சரியமாகி, எப்படி தெரியும், படிச்சிருக்கீங்களா என்று கேட்டார். அப்போதாவது கொஞ்சம் சும்மா இருந்திருக்க வேண்டும். தற்பெருமை குணம் அடங்கவில்லை. "இல்லை டாக்டர் நான் நெட்ல பார்த்தேன், நான் சாப்ட்வேர் இஞ்சினியர்". அப்போது அவர் செய்த புன்னகைக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை. பின்னர் அவர் கொடுத்த பில்லில் தெரிந்தது. அதுமட்டுமல்ல. MRI ஸ்கேன், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று எல்லாவற்றையும் எழுதிவிட்டார். என் நண்பன் கொஞ்சம் பொறுமை இழந்துபோய் இதெல்லாம் தேவையா என்று கேட்க, பிரச்சனையின் தீவிரம் எந்த அளவிற்கு என்பது இந்த ஸ்கேன் மூலம்தான் தெரியும். அது சரியாக தெரியாமல் பிஸியோதெரபி போகக்கூடாது என்றார். எங்களால் பதில் பேச முடிவதில்லை. ஸ்கேன் செய்வதாக சொல்லிவிட்டு வெளியில் வந்தபோது என் நண்பன் சத்தம் போட்டான். உன்னை யாரு கம்ப்யூட்டர் இஞ்சினியர்னு எல்லாம் பந்தாவிடச் சொன்னது?

அதே ஹாஸ்பிடலில் இருந்த பிஸியோதெரபி ட்ரீட்மெண்ட் பகுதிக்கு சென்று ஸ்கேன் அவசியமா என்று ஆலோசனை கேட்க சென்றோம். அங்கிருந்த ஃபிஸியோதெரபிஸ்ட் வடிவேலு மாதிரி 'ரொம்ப நல்லவரா' இருந்தார். விசயத்தை சொன்னவுடனே, ஸ்கேன் அது இதுன்னு பயமுறுத்தியிருப்பாங்களே என்றார். என்னுடைய முகத்தை கொஞ்சம் பரிசோதித்துவிட்டு ('வாயை மூடி பலூன் ஊதுவதுபோல் ஊதுங்க...' எங்க வாயை மூடுறது, எப்படி ஊதுறது?? சான்ஸே இல்ல.) ஸ்கேன் எல்லாம் தேவையில்லை. இது ரொம்ப சின்ன லெவல்தான். டெய்லி தொடர்ந்து 15 நாளைக்கு இங்க வாங்க. நான் சரி பண்றேன்னார். பதினைஞ்சு நாளைக்கு இப்படித்தான் அலையணுமான்னு மனசு ரொம்ப சோகமாச்சு. நல்லவேளை வாழ்நாள் முழுக்க இப்படி இருக்காம, 15 நாளோட விட்டுடுமேன்னு என்னை நானே தேற்றிக்கொண்டேன். இருந்தாலும் 15 நாளில் சரியாகிவிடுமா என்ற சந்தேகம் மட்டும் உள்மனதில் இருந்து கொண்டே இருந்தது.

பிஸியோதெரபி ட்ரீட்மெண்ட் தொடங்கியது. முகத்தில் மெல்லிய அளவிலான மின்சாரத்தைப் பாய்த்து சிறிது சிறிதாக அதிர்வுகளை உண்டாக்கினார்கள். பிறகு வாயை குவித்து ஊதும் பயிற்சி, கன்னத்தை மேல் நோக்கி தேய்த்துவிடும் பயிற்சி.. இப்படி ஒவ்வொன்றாய் ஆரம்பமாயிற்று. ஒரு கண் எப்போது திறந்தே இருப்பதால், கண்ணில் எரிச்சல் உண்டாயிற்று. கூலிங் கிளாஸ் போட சொன்னார்கள். 'அற்பனுக்கு வாதம் வந்தால் அர்த்த ராத்திரியிலும் கூலிங் க்ளாஸ் போடுவானாம்' என்று புது (பழ)மொழி உருவாக்கிக் கொண்டிருந்தேன்.

ஐந்து ஆறு நாட்கள் ஆயிற்று. எனக்கு பெரிதாய் முன்னேற்றங்கள் எதுவும் தெரியவில்லை. சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, சிரிப்பது, பேசுவது என்று நான் சாதாரணமாக செய்து கொண்டிருந்த எல்லாவற்றையும் சிரமப்பட்டு செய்து கொண்டிருந்தேன். நான் அப்போது எப்படி சிரித்தேன் என்பதை எனது நண்பர்கள் இன்றும் இமிடேட் செய்து காட்டுவார்கள். என்னுடைய பிஸியோதெரபிஸ்ட் மட்டும் கரண்ட் வைக்கும்போதெல்லாம் எனக்கு நல்ல முன்னேற்றம் தெரிகின்றது என்பார். எனக்கு 7 நாட்கள் கழித்துதான் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. கண்ணை கொஞ்சம் மூடித் திறக்க முடிந்தது. கன்னத்திலும் இலேசாக உணர்வு இருப்பது போன்று பட்டது. கொஞ்சம் சந்தோசமானேன். அடுத்தடுத்த நாட்களில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. 12 ஆம் நாள், ஓரளவிற்கு பழைய நிலைக்கு திரும்பிவிட்டேன். வாய் அசைவுகள் சரியாயிற்று, கண்ணும் சரியாயிற்று. முழுமையாக பழைய நிலைக்கு திரும்பவில்லை. கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. 12 நாட்களுக்கு பிறகு பிஸியோதெரபி சிகிச்சையை நிறுத்திக் கொண்டேன். அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு வரச்சொன்னார்கள். நான் செல்லாமல், ரூமில் இருந்தே முன்பு சொன்ன பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். 20 நாட்களுக்கு பிறகு முற்றிலும் குணமானேன்.

இன்று நான் இதனை கதை போல் சொன்னாலும், அன்று அனுபவித்த துயரங்கள் நிறைய. முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு மனதளவில் மிகப் பெரிய பாதிப்பு. 20 நாட்கள் யார் கண்ணிலும் படாமலே இருந்தேன். மேன்சனில் தங்கியிருந்ததால் வெளியில்தான் சென்று சாப்பிடவேண்டும். ஹோட்டல்ஸ் சென்று சாப்பிட முடியாது. சிறுகுழந்தை சாப்பிடுவதுபோல் எடுத்து வாயில் வைக்கும் உணவில் பாதி கீழே கொட்டிவிடும். நண்பர்கள் வந்தால் பார்த்து புன்னகைகூட செய்ய முடியாது. சாதாரணமாக சிரித்தாலும் நக்கலாக சிரிப்பது போல் இருக்கும். பழையபடி நான் சிரிப்பதற்கு ஒரு மாதம் ஆயிற்று. மறக்க முடியாத கொடுமையான அனுபவம் அது.

I am not feeling well

திரு. Captain Manoj அவர்களுக்கு,

எனக்கு அந்த முகவாதப் பிரச்சனை 2001 ல் ஏற்பட்டது. நான் அந்த பதிவை அறுசுவையில் கொடுத்தே 11 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே அது சம்பந்தமாக சிகிச்சை கொடுத்தவர்களை இப்போது உங்களுக்கு பரிந்துரைக்க இயலவில்லை.

இரண்டு வருடங்களாகப் பிரச்சனை இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். இது மிக நீண்ட காலமாக தெரிகின்றது. எனக்கு வெறும் 15 நாட்களில் சரியாயிற்று. ஒரு மாதத்தில் முற்றிலும் பழைய நிலைக்கு வந்துவிட்டேன். 80 சதவீதம் பேருக்கு ஒரு மாதத்திற்குள்ளே சரியாகிவிடும். சிலருக்கு ஒன்றில் இருந்து 6 மாதங்கள் எடுக்கும் என்று சொல்கின்றார்கள். மிகக் குறைந்த சதவீதத்தினருக்கே நீண்ட வருடக்கணக்கில் எடுக்கும் என்கின்றார்கள்.

இரண்டு வருடங்கள் என்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி இருப்பீர்கள். எந்த மருத்துவரை சந்தித்தீர்கள்? என்ன மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டீர்கள்? மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்? நீங்கள் எங்கு வசிக்கின்றீர்கள்? என்று நிறைய கேள்விகள் இருக்கின்றது. நீங்கள் அது குறித்து விபரங்கள் எதுவும் தராததால் என்ன மாதிரியான தகவலை
நாங்கள் உங்களுக்கு தர இயலும் என்று தெரியவில்லை.

பொதுவான ஆலோசனை, ஒரு நல்ல நரம்பியல் நிபுணரை பாருங்கள் என்பதுதான். அதனை நீங்கள் ஏற்கனவே செய்திருக்கலாம். அப்படி ஒருவேளை மருத்துவர் குறித்த தகவல் தேவையென்றால் நான் விசாரித்து உங்களுக்கு தெரிவிக்கின்றேன். மற்றபடி என் பக்கமிருந்து இதற்கு சிகிச்சை ஆலோசனை என்று எதுவும் கொடுக்க இயலவில்லை. நான் வெறும் பிஸியோதெரபி சிகிச்சை மட்டுமே 15 நாட்கள் எடுத்துக்கொண்டேன்.

எனக்கு கடந்த 2 நாட்களாக இந்த அறிகுறிகள் இருக்கு.... இது நிரந்தரமாக மாறுமா.... எனக்கு பயமா இருக்கு.. ஸ்ல

தலைப்பை சரியாகக் கொடுத்தால் தான் பதில் தெரிந்தவர்களை கேள்வி போய்ச் சேரும் ஜெயப்ரகாஷ்.

‍- இமா க்றிஸ்

அறிகுறிகள் என்று சொல்லி இருக்கின்றீர்கள். முகவாதம் வந்துவிட்டதா? வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றது என்று சொல்கின்றீர்களா? என்ன மாதிரியான அறிகுறிகள் தெரிகின்றது?

இந்த பிரச்சனை நிரந்தரமாக மாறுவது மிகக் குறைந்த சதவீதத்தினருக்கே. நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள் (இதுவரை பார்க்கவில்லையென்றால்). உடனடியாக பிஸியோதெரபி சிகிச்சை ஆரம்பித்தால் இதை விரைவிலேயே சரி செய்து விடுவார்கள். ஏற்கனவே மேலே உள்ள பதிவுகளில் எனக்கு தெரிந்த விபரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டுள்ளேன். 99% இது பயப்படும்படியான பிரச்சனை அல்ல.

மேலும் சில பதிவுகள்