நாம் இருவர் நமக்கு ஒருவர் - இது ஏற்றுக்கொள்ள கூடியதா? உங்கள் சாய்ஸ் எத்தனை குழந்தைகள்?

கடைசி இரண்டு வாக்கெடுப்பும் கொஞ்சம் சீரியஸ்ஸான வாக்கெடுப்பா இருந்ததால, இங்கே விவாதத்தில அனல் பறந்துச்சு. அடுத்தும் இன்னொரு ஹாட் டாபிக் கொடுக்கத்தான் ஆசை. இருந்தாலும் எப்போதும் விவாதம் சீரியஸ்ஸா இருந்தா போரடிச்சுடும்ங்கிறதால கொஞ்சம் காமெடி கலந்த டாபிக் இந்த முறை வாக்கெடுப்பிற்கு வந்திருக்கு. அதற்காக இதை ரொம்ப காமெடி மேட்டரா நெனைச்சிட வேண்டாம். இதுவும் ஒரு வகையில சீரியஸ்ஸான மேட்டர்தான். ஆனா, விவாதத்தில அனல் இருக்காது. நிறைய காமெடி இருக்கும்ணு நம்புறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னே, இது சம்பந்தமா ஒரு விவாதம் மன்றத்துல நடந்துச்சு. அதை வச்சி வந்ததுதான் இந்த வாக்கெடுப்பு. சிலர் கருத்து சொல்றப்ப, குழந்தைகள் குறைவா இருந்தா அடுத்த தலைமுறையில உறவுகள் இல்லாம போயிடும்னு வருத்தப்பட்டாங்க. இது எந்த வகையில சரியானதுன்னு எனக்கு தெரியல. இரத்த சொந்தங்கள் மட்டும்தான் நமக்கு சொந்தம்னு இன்னமும் நாம ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழறோம் அல்லது வாழ விரும்புறோம்ங்கிறதை இந்த கருத்து சொல்ற மாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு.

இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க..? வழக்கம்போல விவாதத்தை தொடங்குங்க. (தனிப்பட்ட யாரையும் தாக்காம..)

பி.கு: அதிகக் குழந்தைகள் வேண்டும் என்று வலியுறுத்தும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள், அந்நாட்டினவராய் இல்லாது, இந்தியராய் மாறி இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவும். இந்திய சூழ்நிலையை மனதில் வைத்து வாக்கு கொடுங்கள். கருத்து தெரிவியுங்கள்.

அனிதா குறிப்பிட்டிருந்தபடி , இது ஒரு பெரிய டிசிஷன் தான். நானும் பல சமயங்களில் இந்த ஆசை மனதில் இருந்தாலும் இது நடைமுறைக்கு சரி வருமா என்று பல கோணங்களிலும் சிந்தித்திருக்கிறேன். ஆனால் இது நாட்டில் யாரும் செய்யாத விஷயமில்லை. வெளி நாட்டிலும், நமது நாட்டிலும் பலர் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் என்ன ஒற்றுமை என்றால் அவர்களில் பல பேர் பிரபலமானவர்களாக சினிமா துறையை சேர்ந்தவர்களாக இருப்பதுதான். இது ஒரு வகை என்றால் குழந்தை இல்லாதவர்கள் தத்தெடுப்பது இன்னொரு வகை.

ஆனால் ஏற்கனவே ஒரு குழந்தை இருந்து மற்றொரு குழந்தையைத் தத்தெடுப்பது மிகவும் குறைவு. இப்போதுதான் எனக்கே அந்த விஷயத்தில் ஒரு தெளிவான மனநிலை ஏற்பட்டிருக்கிறது. நம்மில் பலர் வீட்டில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளிடம் காட்டும் அக்கறையை ஒரு குழந்தையின் மீது காட்ட யோசிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. வளர்ப்பு பிராணிகளிடம் ஜாதி பார்ப்பதில்லை. ஆனால் மனிதனிடம் மட்டும் பார்க்கிறார்கள். எந்த குழந்தையும் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னையின் வளர்ப்பிலே என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்த நல்ல வாய்ப்பினை ஒரு குழந்தைக்கு நாம் கொடுக்க தயங்குவது ஏன்? காதல் திருமணங்களுக்கு ஒரு காலத்தில் இருந்த எதிர்ப்புகள் இப்போது எத்தனையோ குறைந்திருப்பதைப்போல இந்த நிலைமையும் கூடிய சீக்கிரம் மாறினால் நன்றாக இருக்கும்.

நம்மால் அப்படி ஒரு குழந்தையை வீட்டிற்கு எடுத்து வந்து வளர்க்க முடியாவிட்டாலும் , ஆசிரமத்தில் வளரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து அது பெரியவனாகும் வரை ஸ்பான்சர் செய்யலாமே. அதன் படிப்புக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொண்டு அதற்கு நல்ல ஒரு எதிர் காலத்தை உருவாக்கலாமே. இது வெளிநாட்டில் வசிக்கும் பலருக்கு சாத்தியமே. நாம் KFC போன்ற இடங்களுக்கு சென்று ஒரு நாள் செலவழிக்கும் பணமே கூட அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு போதும். என்னால் மாதா மாதம் நினைவு வைத்துக் கொண்டு அனுப்புவது பல சமயங்களில் முடியாமல் போய்விடும் என்பதால் என் அம்மாவிடம் வருடத்திற்கென்று கொடுக்க சொல்லி விடுவேன். பணம் அதிகம் இருந்தால் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லை. நாம் சில விஷயங்களில் சாதாரணமாக செலவழிக்கும் சிறு தொகையும் அவர்களுக்கு பெரிதும் பயன்படும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடம்பிற்கு எதுவும் வந்துவிட்டால் கடவுளுக்கு காணிக்கையாக வேண்டுவதை விட இப்படி எதாவது இந்த குழந்தைகளுக்கு செய்வதாக வேண்டிக்கொள்ளலாமே. இதற்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். நம்புங்கள். இதுவரை நான் அப்படி வேண்டியது நடந்திருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஊருக்கு செல்லும்போது, ஊரை சுற்றிப் பார்ப்பதோடு ஒரு நாள் இதற்கென ஒதுக்கி எதாவது ஆசிரமத்துக்கு சென்று உங்கள் குழந்தைகளின் கையால் அவர்களுக்கு பரிசளிக்க செய்யுங்கள். புதிய உடுப்புகளோ, பென்சில் பாக்ஸ், ஸ்வீட்ஸ் இப்படி எதுவாக இருந்தாலும் நிச்சயம் உங்களுக்கு சந்தோஷத்தையே அது கொடுக்கும். உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல சிந்தனையை வளர்க்க உதவும்.

இங்கே போன மாதம் பீச்சுக்கு சென்ற போது ஒரு பெண்ணை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து, நீங்க இண்டியனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா என்று கேட்டாள். நான் என்னவென்று கேட்டேன். உங்கள் ஊரில் அஸ்ஸாமில் இருக்கும் ஒரு Tribal குழந்தையை நான் தத்தெடுத்திருக்கிறேன். அவனுக்கு நாந்தான் ஸ்பான்சர். அவன் எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறான். ஆனால் அது இண்டியன் லாங்க்வேஜில் இருக்கு. நான் உங்களுக்கு ஈமெயிலில் அனுப்பிவைக்கிறேன். எனக்கு அதை ட்ரான்ஸ்லேட் செய்து அனுப்பி வையுங்கள். அப்படியே நான் எழுத நினைக்கும் பதிலையும் ஆங்கிலத்திலிருந்து அந்த மொழிக்கு மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டாள். அவள் அனுப்பி வைத்த கடிதத்தில் 3 வது படிக்கும் பிபூல் என்ற பையன் அழகான ஹிந்தியில் தனது கையெழுத்தில் நன்றி சொல்லி அனுப்பியிருந்த கடிதத்தைப் படித்த போது அழுகை வந்தது. நான் என் வாழ்க்கை முழுதும் உங்களை நினைத்துக் கொள்வேன் என்று எழுதியிருந்தான். அவன் அவளை இதுவரை பார்த்ததும் கிடையாது. யாரென்றும் தெரியாது. ஆனாலும் அவன் மனதில் அவளை எந்த அளவு நினைத்து நன்றி சொல்லி இருக்கிறான் என்பது அந்த கடித்ததில் புரிந்தது. அந்தப் பெண் பெரிய பணக்காரி இல்லை. என் ஆபிசின் அருகில் இருக்கும் ஒரு கம்பெனியில் கார்பெட் கிளீனிங் வேலையில் இருக்கிறாள். குறைந்த சம்பளமே. அவளுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கணவனும் இல்லை. இந்த நிலையிலும் உதவி செய்யும் அவளை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. அதுவும் நம் நாட்டுக் குழந்தைக்கு.

என் மனதில்,அப்படி குழந்தை தத்தெடுக்கும் போது அது ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். ஏனெனில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். அறுசுவை உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தினால் எனக்கும் சில விஷயங்கள் தெளிவாகலாம். என் உலகம் என் வீட்டோடுதான். நான் தான் சொசைட்டி என்று நினைக்கிறேன். மாற்றங்களை நாம்தான் ஏற்படுத்த முடியும். தானாக வராது.

தேவா உங்களுடைய பதிவை பார்த்தேன். தத்து எடுப்பதை விட நாம் ஸ்பான்சர் செயவதே சிறந்தது என்பது என் கருத்து. நம் சமுதாயத்தை நம்மால் மாற்ற முடியாது. நாம் ஒரு நிகழ்ச்சி போனால் அந்த குழந்தையின் முன்பே இது தத்து பிள்ளை என்று சொல்லி காட்டி குழந்தையின் மனதை கஷ்டப்படுத்துவார்கள். அதனால் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஸ்பான்சர் செய்யலாம் அது நல்ல கருத்து. நான் இந்தியாவில் இருந்த போது என்னுடைய பிறந்தநாளுக்கு ஒரு ஆசிரமம் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி தருவேன். அது படிப்பு சம்பந்த பட்டுதோ அல்லது அன்றாட தேவைக்கு வாங்கி தருவேன். ஆனால் இங்கு வந்த பிறகு ஸ்பான்சர் செய்யலாம் என்று இருக்கிறேன்.

ஜானகி

இங்கு எழுத பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை.இன்றுதான் உள்ளே வர முடிகிறது.இரண்டு குழந்தைதான் என்னோட விருப்பம்.ஆனால் படிப்பு,வேலை,கவனித்துக்கொள்ள ஆள் போன்ற பல காரணங்களால் ஒன்றுக்குமேல் யோசிக்க முடியவில்லை.

என் மகன் தனியாகவே இருப்பானே என்பதுதான் என் கவலை.அதற்கு ஏன் தத்து எடுத்துக்கொள்ள கூடாது என எங்கள் வீட்டில் பேசிக்கொள்வோம்.பல விஷயங்களில் இதை செய்தால் சிக்கல்கள்.முதலில் நம்முடைய சொந்தங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.என்னதான் நன்றாக பார்த்தாலும் அவர்கள் எதிரிலேயே மற்றவர்கள் ஏதாவது பேசி பிரச்சனை வந்துவிட்டால்?

மேலும் நமக்கே சில நேரங்களில் மற்றபிரச்சனைகளினால் கோபமாக ஏதாவது பேசி குழப்பங்கள் வந்துவிட வாய்ப்புகள் அதிகம்.சொந்தபிள்ளை என்றால் தீட்டினாலோ அடித்தாலோ நமக்கே அந்த நேரம் கஷ்டமாக இருந்தாலும் பிறகு சரியாகிவிடும்.தத்துபிள்ளை என்றால் நமக்கே குற்ற உணர்ச்சி அதிகமாகும்.மொத்தத்தில் இதில் பிரச்சனைகள்தான் அதிகம்.

குழந்தையே இல்லாமல் தத்து எடுப்பது ஏற்றுக்கொள்ளகூடியது.ஒன்று சொந்தப்பிள்ளை இன்னோன்று தத்துபிள்ளை என்றால் நிறையயோசிக்க வேண்டும்.இதை பாதியில் நிறுத்தவோ மாற்றிக்கொள்ளவோ முடியாது.முடிவெடுத்து தத்து எடுத்துவிட்டால் எந்தபிரச்சனை வந்தாலும் சமாளிக்க தயாராக இருக்கவேண்டும்.வெகு சிலரை இப்படி தத்து எடுக்க பார்த்திருக்கிறேன்.

ஆனால் அந்தகுழந்தைகளின் மனநிலை கொஞ்சம் பரிதாபம்.இதனை நாள் பெற்றோராய் இருந்தவர்கள் தன் சொந்தமில்லை என தெரியும்போது நொருங்கிபோகிறார்கள்.கடைசியில் நல்லதை செய்தும் நிம்மதி போய்விட்டால்??

பிறகு தேவா எழுதிய ஸ்பான்சர் எடுப்பது பிரச்சனையில்லாதது.இதுபோல் சில குடும்பத்தையே தத்து எடுத்துக்கொள்வது,அவர்களுக்கு மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை அனுப்புவது,பிள்ளைகளை படிக்க வைப்பது,இதர செலவுக்கு உதவுவது என சில ஆர்கனைசேஷன்கள் செய்து வருகிறது.இதிற்கு பணம் அனுப்புபவர்கள் பலர் வெளிநாட்டில் சதாரண வேலைபார்ப்பவர்கள்தான்.இதில் நமக்கும் தத்து எடுத்த குடும்பத்திற்கும் நேரடி தொடர்பு இருக்காது.சரி இந்த விஷயங்கள் இங்கு தேவையில்லை.

ஒன்றுக்கு மேல் குழந்தைகள் வேண்டும்.நண்பர்கள் ஒரு எல்லைவரை மட்டுமே.எனக்கு பிரச்சனை என்றால் லீவு போட்டு வா என என் உடன்பிறந்தவர்களை கேட்கமுடியும்.நண்பர்களிடம் திருமணமானதும் அவர்கள் குடும்ப சூழ்நிலைகளால் இது போன்று கேட்க முடியாது.உடன்பிறந்தவர்களால் பிரச்சனை சில நேரங்களில் வந்தாலும் நமக்கென்று வரும் சொந்தங்கள் அதுதான்.

சொன்னா நம்பமாடிங்க, இது எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆச, ஒரு குழந்தை தத்து எடுக்கனும்னு.
இத பத்தி பேச எனக்கு வயசு போதாது ஆனா என் கருத்த நான் சொல்ல விரும்புரன். எனோட சின்ன வயசுல இருந்தே நான் சொன்ன விசயம் இது ஒரு குழந்தை பெத்துகனும், ஒரு குழந்தை எடுத்து வளக்கனும்.
பிரக்குரது பெண் குழந்தைய இருந்த ஆண் வளக்கனும், ஆணா இருந்தா பெண் வளக்கனும்
ஒரு குழந்த தத்து எடுக்குரது சும்ம விசயம் இல்ல நிறைய டாகுமென்ட்ஸ் குடுகனும். நான் கொஞ்சம் விசாரிச்சு இருக்கன்.
எத்தன டாகுமென்ட்ஸ்னாலும் சரி என்னொட முடிவு இதுதான்.
ஊர் வாய மூட முடியாது நம்ம பிள்ளையாவே இருந்தாலும் "என்ன பிள்ள அப்பா சாடையும் இல்ல அம்மா சாடையும் இல்ல" நு சொல்ர ஊர் இது.
நாம நம்ம முடிவுல உறுதியா இருந்தா சரி.
பிள்ளைய தத்து எடுக்க போரம்னா அதுக்கு முன்னாடி கண்டிப்பா அத மத்தவங்க கிட இருந்து மறைக்க வழி ஒன்னு தேடிட்டு தான் செய்வம்ல?
எது எப்படி போனாலும் நான் தத்து எடுப்பன், யார் என்ன சொன்னாலும் சரி

hard work and self confidence leads you to the success

hard work and self confidence leads you to the success

சிந்து உங்களுடைய மன தைரியத்தை பாராட்டுகிறேன். நீங்கள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

ஜானகி

(திருமதி. மனோ அவர்கள் அவரால் உள்நுழைவு செய்ய இயலவில்லை என்ற காரணத்தால் இந்த பதிலை எனக்கு அனுப்பியுள்ளார். அதை இங்கே வெளியிட்டுள்ளேன். )

திருமதி ஜெயந்தி சொன்ன கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகிறேன். இப்போது அடிக்கடி நான் ஆதங்கப்படும் விஷயமும் இதுதான். திருமதி ஜெயந்தி சொன்னதுபோல சிறுவயதில், நிலா ஒளியில் சினேகிதர்களுடன் விளையாடி மகிழ்ந்ததும், கூடப்பிறந்தவர்களுடன் கதைகள் பேசிக் களித்ததும் வாழ்க்கையின் கவலைகள் தெரியாமல் பாடிப்பறந்ததுமாய் அன்று எங்களுக்கு கிடைத்த கொடுப்பினைகள் இன்றைய குழந்தைகளுக்கு இல்லை. படிப்பின் அழுத்தம், தொலைக்காட்சி இவற்றில் அவர்களின் இளமையின் சந்தோஷங்கள் காணாமல் போகின்றன. இதில் ஒரே ஒரு குழந்தையாக இருந்தால் கேட்கவே வேண்டாம். அந்த குழந்தையின் வாழ்க்கை, பெற்றோர் பேசிய நேரம் போக, பாக்கி நேரங்கள் தொலைக்காட்சி, தனிமை -இதிலேயே கழிந்து உள்ளத்தின் அத்தனை உணர்வுகளுக்கும் வடிகால் இல்லாமல் போகிறது. அந்தக் குழந்தைக்கு சகோதரத்துவம், கூடி வாழ்தலின் அருமை, பகிர்ந்து கொள்ளுதல், தன் பிராயத்து உனர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளக்கூடிய தோழமை-இவை அனைத்துமே அதன் வாழ்க்கையின் இழப்புக்களாகி விடுகின்றன. திருமதி ஜெயந்தியின் குழந்தைகள் ஒருவருக்கொருவர் பரிவும் பாசமும் காட்டிக்கொள்வதைக் கேட்கும்போது எத்தனை இதம்! இந்தப் பரிவும் பாசமும் இந்த வயதோடு முடியப்போவதில்லை. கடைசி வரை வாழ்வில் சுகமான இதமான உறவுகளாய்த் தொடர்ந்து வரும். வாழ்க்கையில் அனைத்து உறவுகளும் கூடவே இறுதி வரை வருவதுதான் மிகப்பெரிய பலம்.

இளம் வயதில் பொருளாதாரப்பிரச்சினைகள், பிரசவ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகள் காரணமாக ‘ஒரு குழந்தையே போதும்; என்ற முடிவுதான் சரியெனத் தோன்றும். ஆனால் அடுத்தாற்போல இன்னொரு குழந்தை என்பது உங்களின் முதல் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் பலம், என்பதுதான் மிகப் பெரிய உண்மை!

என்னுடைய கருத்து இரண்டு குழந்தைகளுக்குதான்
நமக்கு ஒரு பிரச்சனை என்றால் உடன் ஓடி வருபவர்கள் நம் கூடப்பிறந்தவர்களாகத் இருக்கும்.நம்முடைய நண்பர்களுகுக்கோ சித்தப்பா பிள்ளைகளுக்கோ அல்லது பெரியப்பா பிள்ளைகளுக்கோ கண்டிப்பாக அந்த அளவுக்கு அக்கரை இருக்காது என்பது என் கருத்து
நம்முடைய குழந்தைக்கும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்களுடைய சுகதுக்கங்களை பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் பக்கபலமாக வழ்வார்கள்.என்பதில் ஐயமில்லை
அன்புடன்
சுதா

அட நம்ப சிந்துவா இது!!!! ஏதிந்த தைரியம்! எப்படி வந்தது? உண்மையை கூற வேண்டுமென்றால் இந்த தலைப்பைக் குறித்த உங்களின் பதிவு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. குழந்தை தத்தெடுக்கும் விசயத்தில், உங்கள் பதிவின் மூலம் உங்கள் திடமான மற்றும் அன்பான இதயத்தையும் காண முடிந்தது. இந்த சிறிய வயதில் எவ்வளவு தெளிவான சிந்தனை!!! பாராட்டுக்கள் கூற நினைக்கின்றேன் ஆனால் அதற்கான அருகதை எனக்கில்லை என்பதால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைப்பதெல்லாம் கைக்கூடி எல்லா செல்வங்களையும் பெற்று சிறந்து விளங்க மனதார வாழ்த்துகின்றேன்.

என்று ஒரு காலம் வந்து விடுமோ? 'இந்து' நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன். ஆணின் விந்தையும் பெண்ணின் விந்தையும் சேர்த்து (நம் இந்தியாவில் தான்) குளிர் சாதன அரையில் (மருத்துவமனையில்) வைத்திருக்கிறார்களாம். எப்பொழுது தேவையோ அப்பொழுது எடுத்து கருப்பையில் வைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வார்களாம். யார் தெரியுமா? இன்றைய இளைஞர்களில் சிலர். இப்படி சில ஆண்டுகளாக பெட்டியில் உள்ள! குழந்தையும் உண்டாம். இவர்கள் நிறைய சம்பாதித்து செட்டில் ஆகி! பிறகு குழந்தை பெற்றுக் கொள்வார்களாம். என்ன கொடுமை இது.

அடுத்தது தத்து
சிந்து உங்களுக்கு என் வாழ்த்துக்கள். தைரியமாக உங்கள் கருத்துக்களைச் சொன்னதற்கு. ஆனால் நடைமுறை வாழ்க்கை. எனக்குத் தெரிந்த ஒருவர் மனைவியின் வற்புறுத்தலுக்காக தத்து எடுத்துக் கொள்ள சம்மதித்தார். ஆனால் அந்தக் குழந்தையை சீ சீ என்கிறார். கிட்ட சேர்ப்பதே இல்லை. அன்பு காட்டுவதே இல்லை. கணவன் மனைவி இருவரும் சம்மத்தித்தால் ஒழிய இது சாத்தியப்படாது. இதற்கு பதில் நம் ரோஸ் சொன்னது போல் அனாதை இல்லங்களுக்கு நம்மால் முடிந்ததை செய்யலாம். நம் குழந்தைகளை அந்த இல்லங்களுக்கு அழைத்துச் சென்று உலகத்தின் மறு பக்கத்தை அறியச் செய்யலாம்.
இன்னொரு விஷயம். என் பொருளை நான் தொலைத்தால் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் வேறொருவர் தொலைத்தால்? இதெல்லாம் உலக வழக்கம்.
ஒரே வீட்டில் இருந்தாலும் எத்தனை பேர் மைத்துனர் குழந்தைகளிடம் பேதம் பாராட்டாமல் இருப்பர். இதுவே இப்படி என்றால் அனாதைக் குழந்தை என்றால்.
இருந்தாலும் சிந்து நீங்கள் நினைப்பதுபோல் நடக்க வாழ்த்துக்கள்.

அப்புறம் மனோகரி அதென்ன 'எனக்கு அருகதை இல்லை'. அவரவர் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். உங்களைத் தாழ்த்துவது போல் இருக்கிறது. அப்படி சொல்லாதீர்கள்.
அன்புடன்
ஜெயந்தி

ஜெ அக்கா, இதற்கெல்லாம் இந்தக்காலத்தில் அதிசயப்படமுடியாது.

வாழ்க்கையின் போக்கில் வாழ்ந்து மடிந்தது அந்தக்காலம். ஆனால் இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை உணர்வு. அனேகம் பேர் திருமணத்திற்கு முன்னரே குடும்ப வாழ்க்கையைத் திட்டமிட்டுவிடுகிறார்கள். திருமணமானதும் எத்தனை குழந்தை, எப்போது பெற்றுக்கொள்ளவெண்டும் என்றெல்லாம் திட்டமிட்டுவிடுகிறார்கள். வாழ்க்கையின் ஓட்டத்தில் திட்டங்கள் மாறிப்போனால் விவாகரத்துக்கும் தயாராக இருக்கிறார்கள்.

குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது வாழ்க்கையில் செட்டிலாகவா அல்லது வாழ்க்கைத்துணை மீது நம்பிக்கை வராமலா என்ற கோணத்திலும் யோசிக்கவேண்டியுள்ளது :-)

அப்புறம், தத்தெடுத்து வளர்க்கவேண்டுமென்பது ஆரோக்கியமான சிந்தனை தான். ஆனால் அதில் நடைமுறைச்சிக்கல்கள் அதிகம். ஒரு குழந்தை இருக்கையில் இன்னொரு குழந்தையைத் தத்தெடுக்கும்போது இன்னமும் கவனம் தேவை. நாம் பெற்றெடுத்த குழந்தையின் மனநிலையைப் பற்றியும் யோசிக்கவேண்டும். நமக்கிருக்கும் பக்குவம் குழந்தைகளுக்கும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

சமீபத்தில் சுனாமியின் பாதிப்பினால் அனாதையாகிப்போன குழந்தைகளைப் பார்த்தபோது நானும் என் கணவரும் இப்படிப்பட்ட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவேண்டும் என்று பேசியதற்கு என் குழந்தைகளிடம் எழுந்த மாற்றமே நான் இவ்வாறு எழுதக்காரணம்...

நாம் செய்யவிரும்பும் உதவியை நல்ல சேவை இல்லங்கள் மூலமாகவோ, பாதிக்கப்பட்டவரை நேரடியாக அணுகி அவர்களின் படிப்பிற்கோ வேலைவாய்ப்பிற்கோ உதவுவதே எனக்கு சரியெனப்பட்டது.

மேலும் சில பதிவுகள்