சேலம் மட்டன் குழம்பு

தேதி: February 24, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

சேலம் மட்டன் குழம்பு (மைக்ரோ அவனில் செய்யும் முறை)

 

ஆட்டு இறைச்சி (மட்டன்) - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
தேங்காய் - 1 மூடி
இஞ்சி - 2 அங்குல துண்டு
பூண்டு - 15 + 10 பல்
காய்ந்த மிளகாய் - 10
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - சிறிது
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - சிறிது
கறிவேப்பிலை - 20
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டினை நறுக்கி கொள்ளவும், தேங்காயை துருவி வைக்கவும். 15 பல் பூண்டு, இஞ்சியை அரைத்து வைக்கவும்.
ஆட்டு இறைச்சியை கழுவி சிறிது உப்பு, மஞ்சள் தூள், பாதி இஞ்சி பூண்டு விழுது, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அவன் பாத்திரத்தில் போட்டு 15 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
வேறு ஒரு மைக்ரோ பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய், பாதி கறிவேப்பிலை, சீரகம், மிளகு போட்டு 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.
பின்னர் 5 வெங்காயத்தை மட்டும் தனியாக வைத்துக் கொண்டு, மீதி வெங்காயத்தை அதில் போட்டு 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும். வதக்கியதை தனியாக எடுத்து அதனுடன் தனியா தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் சிறிது பட்டை, 1 கிராம்பு, சோம்பு, கசகசா போட்டு 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும். பிறகு அதில் தேங்காய் சேர்த்து 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும். வறுத்தவைகளை தனியாக அரைத்து வைக்கவும்.
மைக்ரோ பாத்திரத்தில் மீதி எண்ணெயை விட்டு 1 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும். அதில் மீதி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.
வெளியில் எடுத்து இரண்டாக வெட்டிய 8 வெங்காயம், பூண்டு, மீதி உள்ள இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி, மீதி கறிவேபிப்பிலை சேர்த்து 1 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.
அத்துடன் ஆட்டு இறைச்சி, முதலில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி 5 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.
பிறகு வெளியில் எடுத்து அரைத்த தேங்காய், கசகசா விழுதை கெட்டியாக கரைத்து ஊற்றி 5 நிமிடம் மைக்ரோ ஹையில் வைத்து எடுக்கவும்.
இப்போது சேலம் மாவட்டத்தின் சிறப்பான, சுவையான, கமகமக்கும் மட்டன் குழம்பு தயார்.
அறுசுவையில் 400 க்கும் அதிகமான குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இன்னும் ஏராளமான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

It looks so good. I am going to make this. Since my hometown near Salem. Thank you for sharing.

செல்வி அம்மா எப்படி இருக்கீங்க? உடல் நிலை எப்படி இருக்கு? இத பார்க்கவே செய்யனும் போல இருக்கு. ஆனா என்னிடம் மைக்ரோ அவன் இல்லை, அதனால் சாதாரண சட்டியில் செய்ய போகிறேன். செய்து விட்டு சொல்கிறேன்.நன்றி.

அன்பு தீபு,
நலமா? நான் நல்லா இருக்கேன். மைக்ரோ அவனில்தான் செய்யணும்னு இல்லை. சாதாராணமாகவே செய்யலாம். தனி குறிப்பா கொடுத்திருக்கேன். பாபு அவன் ரெசிபி தேவை என்று சொன்னதால் அவனில் செய்து படம் எடுத்தேன். மறக்க முடியாத சுவையில் இருக்கும்.
முயற்சி செய்யலாம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உங்களை சேரும்.ஹா ஹா அம்மா இந்த குழம்பு சூப்பரா வந்துச்சு ரொம்ப ரஸிச்சு சாப்பிட்டோம் மா. அம்மா எல்லா பாராட்டு உங்களுக்கு தான் நன்றி மா. தீபுன்னு தான் எல்லாரும் கூப்பிடுவாங்கலா நீங்களும் அப்படி கூப்பிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கும் ஏதோ ரொம்ப க்ளோச் ஆன மாதிரி. once again thanks maa.

அன்பு தீபு,
பாட்டெல்லாம் அமர்க்கள படுதே! பாராட்டுக்கு நன்றி. எங்க பக்க பாராம்பரிய சமையல் இது. அதுக்குன்னு ஒரு சுவை இருக்கத்தான் செய்யுது, இல்ல?
நீ எனக்கு நன்றி சொன்னா, நான் எங்க பாட்டிக்குதான் சொல்லணும்.
நான் பழகிட்டா அப்படித்தான், யாரையும் இந்த மாதிரிதான் சுருக்கி கூப்பிடுவேன். கண்டிப்பா ஒரு நெருக்கம் தெரியும். நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி மேடம்,
நீங்கள் களிமண் சட்டியில் சமைப்பீர்கள் போல் தெரிகிறது. என்னிடமும் ஒரு சட்டி இருக்கு ஆனால் அதில் சமைத்தால் மண் வாசனை வருகிறது. நிறைய தரம் முயற்சி செய்து பார்த்துவிட்டேன், மண் வாசனை போக மாட்டேங்குது. வீட்டில் அவர் சாப்பிட்டு விட்டு இனிமேல் இதில் சமைக்காதே என்று சொல்லிட்டார், அதனால் நான் மண் சட்டியை உபயோகிப்பதில்லை, ஆனால் எனக்கு அதில் சமைக்க மிகவும் விருப்பம். மண் வாசனையை போக்க உங்களிடம் எதுவும் யோசனை இருந்தால் சொல்லுங்களேன்.

அன்பு ஸ்ரீநிதி,
நலமா? ஆமாம், நான் அதிகம் மண்சட்டியிலும், கல் சட்டியிலுமே சமைப்பேன். அதிலும் மண் பாத்திரங்கள் உபயோகப்படுத்துவதால், மூன்று நன்மைகள்.
முதல் காரணம் உடம்புக்கு நல்லது. உணவின் சுவை கூடும்.
இரண்டாவது காரணம் மண்பாண்ட கலைஞர்களுக்கு ஏதோ நம்மால் முடிந்த உதவி.
மூன்றாவது காரணம் அடுப்பிலும் வைக்கலாம், ஓவனிலும் வைக்கலாம். போரோஸில் போன்ற விலையுயர்ந்த பாத்திரங்களை வாங்கி, பயந்து கொண்டே உபயோகிக்க வேண்டும். இது அப்படி இல்லை. உடைந்தாலும் குறைந்த விலைதான். நான் தந்தூரி செய்யக்கூட மண்ணால் செய்த அகலமான தட்டுதான் வைத்துள்ளேன்.
முதலில் மண்பாத்திரம் வாங்கியதும் அதில் தண்ணீர் ஊற்றி (நிறைய) அப்படியே இரண்டு, மூன்று நாட்களுக்கு வைக்க வேண்டும். பிற்கு நன்கு தேய்த்து கழுவி விட்டு, தண்ணீர் அல்லது அரிசி கழுவிய நீர் ஊற்றி (முக்கால் அளவு) அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி, ஆறியதும் நன்கு தேய்த்து கழுவி விட்டு பிறகு உபயோகிக்க்லாம். மண் வாசனை வராது, அப்படியும் வந்தால் மீண்டும் ஒரு முறை தண்ணீர் கொதிக்க வைத்து கழுவினால சரியாகி விடும். ரொம்ப நாள் உபயோகிக்காமல் இருந்து எடுத்தாலும் மண் வாசனை வரும். அதற்கும் இதே போல் செய்தால் சரியாகிவிடும்.
இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேட்கவும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி மேடம்,
நான் நலம். நீங்கள் நலமா? நீங்கள் கூறியபடி செய்து பார்க்கிறேன். உங்கள் வேலை பளுவுக்கு இடையில் எனது கேள்விக்கு நேரம் ஒதிக்கி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.

செல்வி... சூப்பர் குறிப்புங்க. நான் இதே முறையில் அடுப்பில் செய்தேன்... ரொம்ப அருமை. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

MADAM,

THE SALEM MUTTON KULAMBU IS VERY USEFUL FOR ME.

THANKS & REGARDS,

NITYA.

ரொம்ப‌ நாலா மண் பாத்திரத்தை எப்படி பழக்க‌ என்று சரியான விடை கிடைக்காமல் வாங்கிய‌ பாத்திரத்தை ஸ்டோர் ரூம்மிலேயே வைத்திருக்கிறேன். உங்கள் குறிப்புக்கு நன்றி. குடிதண்ணீர் பிடித்து வைக்கும் பானையையும் பழக்க‌ வேண்டுமா? அதையும் இப்படித்தான் பழக்கனுமா சொல்லுங்க‌ தோழி.