சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல்

தேதி: April 19, 2008

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சர்க்கரைவள்ளிக்கிழங்கு - அரைக்கிலோ
வெங்காயம் - ஒன்று
பூண்டு - இரண்டு பற்கள்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய் - நான்கு
மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு த்தேக்கரண்டி
மிளகாய்தூள் - அரைத்தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - அரைக்கோப்பை
கடுகு சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
நறுக்கிய கொத்தமல்லி - கால் கோப்பை


 

கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
இஞ்சி பூண்டை நசுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
அடுப்பில் வாயகன்ற சட்டியை வைத்து எண்ணெயை காயவைக்கவும். அதில் கடுகுசீரகத்தைப் போட்டு பொரிந்தவுடன் முதலில் கறிவேப்பிலை பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கினால் போதும் அதில் நசுக்கிய இஞ்சி பூண்டைப் போட்டு மற்றும் பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
பின்பு எல்லா பொடிகளையும் சேர்த்து பச்சைவாசனைப் போகும்வரை வதக்கிவிட்டு கிழங்கை போடவும்.
கிழங்குடன் உப்புத்தூளைப் போட்டு நன்கு கிளறிவிட்டு அதன் மீது தேங்காய்ப்பூவை சேர்த்து கிளறிவிடவும்.
கலவையை அடுப்பில் ஐந்து நிமிடம் சிம்மில் வைத்திருந்து நன்கு கிளறிவிட்டு கடைசியில் கொத்தமல்லியத் தூவி இறக்கிவிடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று உங்களது சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல் செய்தேன்..சூப்பராக இருந்தது..அந்த கிழங்கில் எது செய்தாலும் சாப்பிடுவேன்..ஆனால் பொரியலாக முதன் முறை பார்த்த உடனே கிழங்கை வாங்கி கொண்டு வந்து விட்டேன்..ஆனால் கடைசியில் கிழங்கைப் போட்ட பின் தண்ணீர் வேண்டுமா வேண்டாமா என்று குழப்பம் வந்தது...தண்ணீர் கொஞ்சம் ஊற்றியே செய்தேன்.சுவை அருமை

இந்த குறிப்பை செய்துபார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

ஹாய் மனோகரி மேம்,
நேற்று சக்கரைவள்ளிக்கிழங்கு பொரியல் செய்தேன்.நன்றாக இருந்தது முதல் முறையாக நேற்றுதான் சக்கரைவள்ளிக்கிழங்கில் செய்தேன். நன்றி
அன்புடன்
சுதா

ஹலோ குயிலா டியர் இந்த பொரியல் குறிப்பை செய்து பார்த்தீர்களா ரொம்ப மகிழ்ச்சி, பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ஹாய் மனோகரி மேடம்,
வணக்க்ம்.
நேற்று உங்களது சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல் செய்தேன். சூப்பராக இருந்தது.அந்த கிழங்கில் நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். ஏன்னா அப்படியே அல்லது அவித்து சாப்பிடுவோம். மரவள்ளி கிழங்கில் (Tapioca) தான் பொரியல், அவியல், சிப்ஸ், இத்யாதி எல்லாம்.ஆனால் பொரியலாக முதன் முறை அருசுவை மூலம் உங்க ரெசிப்பியை செய்து பார்த்து விட்டேன். சுவை அருமையோ அருமை. படம் எடுப்பதற்குள் பாதி தீர்ந்துவிட்டது.
குறைந்த நேரதில் செய்ய கூடிய ஈசியான ரெசிப்பியும் கூட.

நன்றி
இப்படிக்கு
இந்திரா

indira

வணக்கம் இந்திரா, இந்தகுறிப்பு எல்லா வகை ரசத்திற்கும் பொருத்தமாக இருக்கும் செய்வதற்கும் எளிது. இதைக் கொண்டு நிறைய ரெஸிப்பி செய்யலாம், நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன். தங்கள் பின்னூட்டங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

மனோகரி அக்கா நானும் இந்த பொரியலை செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. என் வூட்டுக்காரருக்கு அவங்க கிராமத்து ஞாபகம் வந்து விட்டதாம். இந்த கிழங்கை வைத்து வேறு ஏதேனும் ரெஸிப்பி உங்களுக்கு முடியும்போது குடுங்கள். நன்றி.

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த கிழங்கு பொரியலின் படம்

<img src="files/pictures/vallikilangu_poriyal.jpg" alt="picture" />

டியர் இந்திரா பொரியல் பார்க்க நன்றாக இருக்கின்றது.மிகச் சரியாக செய்து இருக்கீங்க பாராட்டுக்கள். படம் எடுத்து அனுப்பியதற்கு மிக்க நன்றி.

டியர் மனோகரி மேடம்,
இன்று உங்க சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல் செய்தேன். ரொம்ப டேஸ்ட்டியாக நன்றாக இருந்தது. நான் இதற்கு முன்பு இந்த கிழங்கில் பொரியல் செய்வதுண்டு - ஆனால், உங்க குறிப்பு தேங்காய்ப்பூ எல்லாம் சேர்த்து ரொம்ப வித்தியாசமாக இருக்கு, டேஸ்ட்டும் அப்படியே - என் பொண்ணும் விரும்பி சாப்பிட்டாள். உங்களின் இந்த குறிப்புக்கு ரொம்ப நன்றி மேடம்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு தோழி மனோகரி,
நலமா? கிறிஸ்துமஸ் வந்துவிட்டதால் உங்க சமையலை அதிகம் செய்ய முடியலை. நான் செய்ய நினைத்த குறிப்புகளுக்கு வேண்டிய பொருட்கள் கிடைக்கலை. என்னால் முடிஞ்சது இந்த பொரியல் செய்தேன். நான் பச்சை மிளகாய் சேர்க்காமல் செய்வேன். இந்த முறை வித்தியாசமாக நன்றாக இருந்தது. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹலோ டியர் உடம்புக்கு முடியாத போது எதற்கு சிரமம் எடுக்கின்றாய்? நல்லா ரெஸ்ட் எடு செல்வி ஒகேவா. உண்மைத்தான் இந்த பொரியல் ரொம்ப டேஸ்டா இருக்கும், செய்து பார்த்த உனக்கும் கட்டாயம் தேங்கஸ் சொல்கின்றேன் பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

அன்பின் மனோகரி மேம், சர்க்கரை வள்ளி கிழங்கு என்பது ஸ்வீட் பொடேடோ (வத்தாளங் கிழங்கு)தானே. ஏனெனில் நான் அதில்தான் செய்தேன். நன்றாஜ இருந்தது. இனிப்பும் உறைப்புமாக. இலங்கையில் சிங்கள மக்கள் இவ்வாறு வத்தாளங்கிழங்கில் செய்வார்கள்.நன்றாக இருக்கும். குறிப்பிற்கு நன்றி.
-நர்மதா :)