கத்திரிக்காய் பிரியாணி (மைக்ரோவேவ் முறை)

தேதி: June 22, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

அரிசி - இரண்டு கோப்பை
கத்தரிக்காய் - கால்கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் - இரண்டு
தயிர் - இரண்டு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு நறுக்கியது - தலா ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கெட்டியான தேங்காய்ப்பால் - கால் கோப்பை
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை, கிராம்பு - தலா இரண்டு
மராட்டி மொக்கு - இரண்டு இதழ்கள்
எண்ணெய் - கால் கோப்பை
புதினா நறுக்கியது - கால் கோப்பை
உப்புத்தூள் - இரண்டரை தேக்கரண்டி


 

அரிசியை சுத்தம் செய்து ஊறவிடவும். தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், பச்சைமிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
மைக்ரோஅவனில் வைக்கக்கூடிய பீங்கான் பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அதில் சோம்பு மற்றும் வாசனைப் பொருட்களை போட்டு ஒரு நிமிடம் சூடாக்கவும்.
பிறகு வெங்காயம் பச்சைமிளகாயைப் போட்டு மூன்று நிமிடம் வேகவிடவும்.
வெங்காயம் நன்கு வெந்தவுடன் அதில் கத்திரிக்காய், இஞ்சி, பூண்டு மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பை சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் வேக விடவும்.
இப்பொழுது கத்திரிக்காய் அரை வேக்காடாய் வெந்திருக்கும் நிலையில் அதில் தக்காளி, தயிர் மற்றும் அரிசியை நீரில்லாமல் வடித்தெடுத்து இதில் போட்டு தேங்காய்ப்பாலையும் ஊற்றி கலந்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.
பின்பு அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் மீதியிருக்கும் உப்பையும் போட்டு நான்கு கோப்பை நீரை ஊற்றி பத்து நிமிடத்திற்கு தொடர்ச்சியாக வேகவிடவும்.
கடைசியாக புதினாவைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு மூடியை பாதி திறந்தாற்போல் மீண்டும் மூடி மேலும் ஐந்து நிமிடம் வேகவைத்து சூடாக தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.


பொதுவாக மைக்ரோஅவன்களில் சமைக்க எடுக்கும் நேரமும் திறனும் வேறுபட்டிருக்கும் என்பதால் இந்த குறிப்பின் செய்முறையில் எந்த மாற்றமும் செய்யாமல் அவரவரிடம் இருக்கும் மைக்ரோஅவனுக்கு ஏற்றவாறு நேரத்தை மட்டும் கூட்டியோ குறைத்தோ சமைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம் என் பெயர் வேல்விழி..
நான் USக்கு 2 மாதம் முன்பு தான் கணவர் வேலை விஷயமாக வந்தேன். வேலையை விட்டு இங்கு வந்திருக்கும் என்க்கு புது புது டிஷ் செய்து பழகுவது தான் பொழுது போக்கு.
நான் அறுசுவைக்கு இப்போ தான் முதல் பதிவு போடறேன்.
நான் உங்க டிஷ் பல பல செய்து பாராட்டுகள் வாங்கியிருக்கேன்.
இந்த டிஷும் சூப்பரா வந்தது..
உங்க பெப்பர் சிகென், இனிப்பு புளிப்பு சட்னி+சமோசா இதெல்லாம் என்னொட ஃபேவரிட் ஹிட்..
உங்க குறிப்புகளுக்கு மிக்க நன்றி.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

வணக்கம் வேல்விழி எப்படி இருக்கீங்க? என்னுடைய நிறைய்ய ரெஸிப்பிகளை செய்து பார்த்திருப்பீங்க போல இருக்கு! ரொம்ப சந்தோசமாக இருக்கின்றது ரொம்ப நன்றிங்க.இந்த பிரியாணி எனக்கும் ரொம்ப பிடிக்கும், குட்டி கத்திரிக்காயில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.உங்கள் சுவையான பொழுது போக்கிற்கு எனது வாழ்த்துக்கள்.

ஆமா... //எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே// என்று ஏன் அப்படி கூறுகின்றீர்கள், இரவு பகல் என்று பார்க்காமல் குறிப்புகளை எழுதியது நான், ஆனால் எல்லா புகழும் இறைவனுக்கே போய் சேர வேண்டும் என்பது என்னங்க நியாயம் கொஞ்சம் சொல்லுங்களேன், வேல்விழி பயந்துட்டீங்களா........ தவறாக நினைக்க வேண்டாம் சும்மா உங்களை கலாட்டா செய்வதற்காக எழுதினேன் டே இட் ஈஸி ஒகே...., பை.

ஹாய் மனோஹரி,
உங்கள் கத்திரிக்காய் பிரியாணி விரைவில் சமைத்துப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். மராட்டி மொக்குகள் என்பது எப்படி இருக்கும்? அது இல்லாமல் சமைக்கலாம்தானே? பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

கிராம்பு தான் (னே) மாரட்டி மொக்கு என நினைக்கிறேன். சரியா மனொகரி மேடம்.

இப்படிக்கு
இந்திரா

indira

அன்புச் சகோதரி இம்மா எப்படி இருக்கீங்க, இந்த குறிப்பில் இடம்பெறும் மராட்டிமொக்கு என்பது அதன் மற்றொரு பெயரான அன்னாசிப்பூ என்ற வாசனை பொருள். இது இல்லாமலும் செய்யலாம். இந்த லிங்கில் மராட்டிமொக்கின் படம் உள்ளது பார்வையிடவும் நன்றி.http://www.arusuvai.com/tamil/forum/no/2242

அன்புச் சகோதரி இந்திரா எப்படி இருக்கீங்க? கிராம்பும், மராட்டி மொக்கும் வேறு வேரு. அதன் அளவிலும் வாசனையிலும் வெவ்வேறான குணம் கொண்டது. மேற்கண்ட லிங்கில் மராட்டிமொக்கின் படம் உள்ளது பார்வையிடவும் நன்றி.

மராட்டி மொக்கு பற்றிய விரிவான விளக்கத்திற்கு நன்றி மேடம்.
இந்த பதிவை தேடிதான் தேடுகவில் ”மராட்டி மொக்கு” என்று போட்டு வந்த முடிவில் எடுப்பாகவே ஒரு முடிவில் இரண்டும் (மராட்டி மொக்கு அண்ட் கிராம்பு) இருந்தன. அப்பொழுதே தெரிந்து கோண்டேன். நான் நினைத்தது தவறென்று. மேலும் தங்களின் பதிவு பார்த்து சரியானதை தெரிந்து கொண்டேன். நன்றி
இப்படிக்கு
இந்திரா

indira

மராட்டி மொக்கை ஆங்கிலத்தில் ஸ்டார் அனீஸ் (Star Anise) என்பார்கள்

நன்றி மனோகரி. என்னிடம் ஸ்டார் அனீஸ் இருக்கிறது. பெயர்தான் புதிதாக இருக்கிறது. தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
ப்ரியா, சித்ரா, அட்மினுக்கும் எனது நன்றிகள்.
மனோகரி, மூன்று நாட்களாக மீண்டும் ஒவ்வாமைத் தொல்லை. கத்தரி, தக்காளி, தயிர் மூன்றையும் தவிர்க்கவேண்டி உள்ளது.எனவே தற்போதைக்கு இந்தக் குறிப்பை முயற்சித்துப் பார்க்க இயலாது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் சமைத்துவிட்டுக் கருத்துச் சொல்வேன்.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

பிரியாணி செய்தேன். மிகவும் அருமை. நன்றி.

நன்றி கவின்,இந்த குறிப்பை செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி. எனக்கு குட்டி கத்திரிக்காய் ரொம்ப பிடிக்கும் அது இங்கு ஃபிரஷாக கிடைக்கும் போதெல்லாம் இந்த பிரியாணியை ஈஸியாக செய்துவிடுவேன். நீங்களும் செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

மனோகரி அக்கா உங்கட கத்தரிக்கா பிறியாணி பற்றி எல்லாரும் சொல்லினம் எண்டு நானும் ஓடிப்போய் வட்ட வட்ட கத்தரிக்காய் வேண்டிக்கொண்டு வந்து செய்தனான். சூப்பரா இருந்தது.நல்ல வாசம் வந்து 11.30க்கு பசியத்தூண்டி என்னை சாப்பிட வச்சுட்டுது.ம்ம்ம்ம் மிக்க நன்றி மனோகரி அக்கா.

சுரேஜினி

கத்தரிக்காய் பிறியாணி
மனோகரி அக்கா சுவையான இந்த பிறியாணி, செய்து சாப்பிட்டு எல்லாமே முடிந்துவிட்டது. இன்று எப்படியாவது பதில் போட்டுவிட வேண்டும் என்ற முடிவோடு வந்தேன்.

அளவுகளில் மாற்றம் செய்து ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்துள்ளேன். நான் புதினா சேர்க்கவில்லை அதற்குப் பதில் கறிவேப்பிலைதான் சேர்த்தேன். மராட்டி மொக்கும் சேர்க்கவில்லை. மிக அருமையான சுவை சிக்கின் பிறியாணி வசனை வந்தது. மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் தயாரித்த கத்திரிக்காய் பிரியாணியின் படம்

<img src="files/pictures/aa117.jpg" alt="picture" />