ஆப்பிள் தோசை

தேதி: July 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இந்த ஆப்பிள் தோசையை செய்து காட்டியவர், இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன்
வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

ஆப்பிள் - 3
பட்டர் - 4 மேசைக்கரண்டி
நறுக்கின ஸ்வீட் வெங்காயம் - கால் கப்
கறித்தூள் - ஒரு தேக்கரண்டி
ஏதாவது ஒரு சீஸ் - கால் கப்
சோளமாவு - 2 தேக்கரண்டி
மைதா/கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - தேவைக்கேற்ப


 

ஆப்பிளை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சீஸை துருவி வைத்துக் கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பட்டரைப் போட்டு சூடாக்கவும். பட்டர் உருகியதும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் ஆப்பிள் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
ஆப்பிள் வதங்கியதும் அதனுடன் கறித்தூளை போட்டு நன்கு கிளறி விடவும்.
அதன் பிறகு கரைத்து வைத்திருக்கும் சோள மாவு கரைசலை ஊற்றி கிளறி விடவும்.
கலவை நன்கு கெட்டியாக ஆனதும் இறக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் அல்லது பானில் எண்ணெய் தடவி கரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவை மெல்லிய பெரிய தோசைகளாக ஊற்றி சூட்டெடுக்கவும்.
பிறகு ஒவ்வொரு தோசையின் நடுவிலும் செய்து வைத்திருக்கும் ஆப்பிள் கலவையை நீளவாக்கில் வைக்கவும்.
கலவையை வைத்த பின்னர் இரு ஓரங்களையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்து மூடி விடவும்.
சுவையான ஆப்பிள் தோசை தயார். இதை சூடாக தனியே பரிமாறலாம், அல்லது ஆப்பிள் சாஸுடன் பரிமாறவும். பரிமாறும் போது தோசையை சரிவாக நடுவில் வெட்டி இரு துண்டுகளாக்கி வைக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்