இளம் வயது குறும்புகள்

ஸ்னேகிதிகளே,தேன் மிட்டாய் திரட்டில் ஸ்னேகிதிகள் சிறு வயதில் தாங்கள் ருசித்து,ரசித்ததை பதிவு செய்து இருந்ததை பார்க்கும் பொழுது இந்த திரட் போடலாம் என ஆசை என்னுள் உதயமானது.இப்பொழுது எவ்வளவுதான் வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நன் அனைவருக்குமே இளம் பிராயம் திரும்பி வராதா என்று ஆசை இருந்து கொண்டேதான் இருக்கும்.சிறு வயதில் நாம் செய்த குறும்புகளை ஸ்னேகிதிகள்(விரும்பினால்)இங்கு பதிவு செய்தால் பழைய நினைவுகளுக்கு செல்லலாம்.ஸ்னேகிதிகளின் குறும்புகளை காண ஆவலுடன் இருக்கின்றேன்.
ஸாதிகா

குறும்பு நம்பர் - 1 எங்கள் ஊரில் வீட்டு வாசலுக்கு முன் திரை ஒன்றை போடுவார்கள்(தெருவில் போவோர்,வருவோர் பார்வை வீட்டுனுள் படாமல் இருக்க..இப்பொழுது கூட ஒருசில வீடுகளில் இந்த முறை உள்ளது)விதவிதமான துணிகளில் வாசல்திரை போட்டு இருப்பார்கள்,யார் வீட்டில் புதியதாக,அழகானதாக பட்டதோ கலர் பொடியை கரைத்து திரையில் ஊற்றிவிடுவோம்.திரைக்கு சொந்தகாரர்களின் அர்ச்சனையை வேறு வீட்டு திரை மறைவில் இருந்து ரசிப்போம்
குறும்பு நம்பர் - 2 மெல்லிய கயிற்றில் சுருக்கு முடிச்சு போட்டு மணலில் புதைத்து வைத்து விட்டு கயிற்றின் கடைசி விளிம்பை பிடித்துக்கொண்டு ஒரு ஓரமாக நிற்போம்.யாராவது இளிச்சவாயர்கள் மாட்டினால் சுருக்கு வட்டத்தில் காலை வைத்த வினாடி கயிறை பிடித்து சொய்ங் என்று இழுக்க சுருக்கில் கால் வைத்தவரின் கதி அதோ கதி.
குறும்பு நம்பர் - 3 பெரிய ஸ்னேகித பட்டாளங்களுடன் சினிமா தியேட்டர்(எம்.ஜி .ஆர் படம் ரிலீஸ் என்றால் உடனே ஆஜர்)சென்று பாதிபடம் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது கரண்ட் கட்டாகி விடும் சமயம் ஜெனரேட்டர் வைத்துபடம் காட்ட மாட்டார்கள்.காத்திருந்து பார்த்து ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி விடுவோம்.அந்த கடுப்பை அடுத்த படம் பார்க்கும் பொழுது பிளேடு சகிதமாக சென்று தியேட்டர் சீட்டில் ஒரேகிழி...கமுக்கமாக வந்து விடுவோம்.(அப்பொழுது பண்ணிய அநியாயத்தினாலோ என்னவோதியேட்டர்காரர்கள் துண்டைக்காணோம்,துணியைக்காணோம் என்று ஓடிப்போனவர்கள் இது வரை புதியதாக தியேட்டர் வைக்க முன் வரவில்லை.)ஆம்.சுமார் 1லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் எங்களூரில் இன்று சினிமா தியேட்டர் கிடையாது.
குறும்பு நம்பர் - 3 பூட்டி இருக்கும் வீடுகளில் காலிங் பெல்லை அடித்து விட்டு ஒரே ஓட்டம்.வானரங்களா..சைத்தான்களா என அர்ச்சனை செய்து யாரும் கண்களுக்கு படாத காரணத்தால் கதவை அறைந்து மூடி விட்டு வீட்டுக்கார அம்மாள் போனதும் மறு படி டொய்ங்...(ஒரு தடவை வசமாக மாட்டிக்கொண்டோம்.அப்புறம் கிடைத்த டோஸ்...அப்பப்பா)
குறும்பு நம்பர் - 4 கடற்கரை தோட்டத்திற்கு பிக்னிக் செல்லும் பொழுது கடற்கரை ஓரமாக நின்று தூரத்தில் வரும் சிறிய படகுகள் மீன் பிடித்து விட்டு வரும்.கிட்டே நெருங்கி வந்ததும் பெரியவர்களோடு சேர்ந்து மீனவரை ஒரு கலக்கு கலக்கி (பேரம் பேசி)மீன்காரர் நொந்து விடுவார்.(இப்பொழுது பாவமாக இருக்கின்றது)அப்புறம் மீன்களை பெரியவர்கள் பொரித்துபோடப்போட சட்டியை காலி பண்ணிவிட்டு ஒரே ஓட்டம்தான்.
குறும்பு நம்பர் - 5 நிலக்கடலை விற்கும் ஒரு அம்மா வாய் எப்பொழுது வெற்ரிலை மென்றபடி இருப்பார்.சுண்ணாம்பு தடவி புகையிலை வைத்து அந்த அம்மா வெற்றிலை சாப்பிடும் அழகே அழகு..எங்களுக்கும் அப்படி வெற்றிலை சாப்பிட ஆசை.என் சகாக்களுடன் சேர்ந்து கடையில் வெற்றிலை,பாக்கு,புகையிலை வாங்கி சகாகளுடன் சேர்ந்து வெற்றிலையை சவைக்க ஐயையோ அந்த நிமிஷத்தை இப்பொழுது நினைத்துக்கொண்டாலே இன்னமும் புரை ஏறுகின்றது.
குறும்பு நம்பர் - 6 ஸ்கூல் விட்டதும் அம்மா தரும் பாக்கட் மணியில் ஸ்கூல் வாசலில் விற்கும் கமர் கட்,இலந்தை வடை.மாங்காய்கீற்று வாங்கி சாப்பிட எத்தனிக்கும் பொழுது பள்ளியினுள் இருந்து வரும் தாத்தாவைப் (பள்ளியின் தளாளர் )பார்த்ததும் ஐம்புலனும் அடங்க பக்கத்தில் நிற்கும் தோழியின் கையில் திணித்து விட்டு தா..தா..தாத்தா எனறு நாக்கு டான்ஸ் ஆட அவர் முறைக்க (ஐயோ இப்பொது நினைத்தாலும் பயமாக இருக்கு)

arusuvai is a wonderful website

ஷாதிகா மேடம் என்னமா குறும்பு பண்ணியிருக்கீங்க!நானெல்லாம் ரொம்ப வேஸ்ட்டுன்னு தோணுது.குறும்பே செய்ய மாட்டேனாக்கும் ரொம்ப நல்ல பொண்ணு(சரியான பயந்தாங்கொள்ளின்னு சொல்லாம நல்லா சமாளிக்கறேன்ல...:))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்கக்கூடாது.பதிவை போடுங்கள்.மினி குறும்பாக இருந்தாலும் சரி.

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்