மைக்ரோவேவ் பாண் பழப் புடிங்

தேதி: October 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாண் - 4 துண்டுகள்.
பால் - ஒரு கப் (250 மி.லி)
முட்டை - 2
ஆப்பிள் - ஒன்று
வாழைப்பழம் - ஒன்று
பேரீச்சம்பழம் - 8
பதப்படுத்திய ஆரஞ்சுத்தோல் - 50 கிராம்
கறுப்புச்சீனி - 4 தேக்கரண்டி
மாஜரீன் - ஒரு மேசைக்கரண்டி
கறுவாத்தூள் - 1/2 தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாணை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். பழங்களை தோலை நீக்கி விட்டு நறுக்கி வைக்கவும். ஆரஞ்சுத்தோலையும் நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும். அதில் மாஜரீனை இளக்கி சேர்த்து அடிக்கவும்.
உதிர்த்து வைத்துள்ள பாணுடன் சீனி, நறுக்கின பழங்கள், கறுவாத்தூள் மற்றும் அடித்து வைத்திருக்கும் முட்டை கலவையை ஊற்றி கலக்கவும்.
அவனில் வைக்கும் பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி மைக்ரோவேவ் ஹையில் வைத்து 7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைத்து நறுக்கின பேரீச்சையை மேலே வைத்து அலங்கரிக்கவும்.
இந்த சுவையான பழ புட்டிங்கை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய <b> திருமதி. இமா </b> அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்துவரும் இவர், சமையலில் அதனினும் அதிக வருடங்கள் அனுபவம் பெற்றவராய் இருக்கின்றார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வணக்கம் திருமதி.இமா,

என்னிடம் மைக்ரோவேவ் இல்லை,
அதற்கு பதிலாக இட்லி பானையில் செய்யலாமா?

அன்புடன்
கீர்த்தீஷ்வரி

Keerthi

நன்றாக வருமென்றே நினைக்கிறேன், கீர்த்தீஷ்வரி. முயன்று பார்த்ததில்லை. எனவே சரியாகச் சொல்ல முடியவில்லை. குச்சியால் குத்திப்பார்த்து ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கவேண்டியிருக்கும். எதற்கும் ஒருமுறை பரீட்சித்துவிட்டுச் சொல்லுகிறேன்.
நன்றி.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் இம்மா
இந்த புட்டிங் பார்க்க அழகாக இருக்கு.நீங்கள் உபயோகப்படுத்துய்ய மைக்ரோவேவ் பாத்திரம் அது போலவே கிடைக்கிரதா? நீங்கள் நடுவில் அழகுக்காக பிளாஸ்டிக் டம்ளர் எதும் வைத்து வேக வைத்து எடுத்தீர்களா.ஏனென்றால் பார்க்க அழகாக இருக்கு தெரிந்து கொள்ளலாமே என்று கேட்கிறேன்.

பர்வீன்.

வினவியமைக்கு நன்றி பர்வீன்.
இது போலவே கிடைக்கிறது. ரிங் கேக் ட்ரே மாதிரி, பாத்திரத்தின் மறுபுறம் திருப்பிப் பார்த்தால் நடுவில் குழிவாக இருக்கும். இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாமென்றே நினைக்கிறேன். இதன் விசேஷம் என்னவென்றால், சமைப்பவை அழகாக இருப்பதுடன் சீராகவும் வெந்திருக்கும்.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா
உங்கள் உடன் பதிலுக்கு மிகவும் சந்தோஷம்.பார்க்க மிக அழகாக இருக்கிறது.இது போல் கடைகளில் கிடைத்தால் வாங்கனும் என்று இருக்கிறேன்.மிகவும் நன்றி இமா.

அன்புடன் பர்வீன்.

கீர்த்தீஷ்வரி,

உங்களுக்காக இட்லிப் பானையில் (இட்லியாகவே) அவித்துப் பார்த்தேன். நன்றாகவே வந்தது. தட்டில் எண்ணை தடவ வேண்டும். குச்சியால் குத்திப் பார்த்து ஒட்டாத பதத்தில் இறக்குங்கள். சுவையில் கொஞ்சம் நீர்த்தன்மை அதிகமாக, இனிப்புக் குறைவாகத் தெரிந்தது. இனிப்புப் போதாவிடில் பேரீச்சம்பழம் 2 சேர்த்துக் கொள்ளுங்கள். சீனி அளவைக் கூட்டவேண்டாம். அப்பிள் கடிபடுகிற பதத்தில் இருந்தது. அதுவும் ஒரு சுவையாகத்தான் இருந்தது.
மைக்ரோவேவில் சமைக்கிறபோது ஆயத்த நேரம் மட்டும்தான் என் கருத்தில் இருக்கும். சமைக்கிறபோது அருகே இருக்கத் தேவையில்லை. கழுவுவதற்கு பாத்திரங்களும் அதிகம் இருப்பதில்லை.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

சுமஜ்லா,

ஆம். பாண் - ரொட்டி
கறுவா - லவங்கப் பட்டை (தூளாக்கிக் கொள்ளுங்கள்)
மாஜரீன் - தாவரக் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் போன்ற பதார்த்தம். பட்டர் போலவே பயன்படுத்தலாம்.

இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா

உங்கள் உடன் பதிலுக்கு மிகவும் சந்தோஷம்.
நான் செய்து பார்க்கிரேன்

மிக்க நன்றி
கீர்த்தீஷ்வரி

Keerthi