மட்டன் புளிக்குழம்பு

தேதி: November 25, 2008

பரிமாறும் அளவு: 5-6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுகறி - அரைக்கிலோ
கத்திரிக்காய் - கால் கிலோ
புளி - சிறிய எலுமிச்சையளவு
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - தலா ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத்தேக்கரண்டி
மிளகு சீரகத்தூள் - தலா அரைத்தேக்கரண்டி
சோம்பு - அரைத்தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - நான்கு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை


 

கறியை சிறியத்துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, அதில் மஞ்சள்தூள் மற்றும் அரைத்தேக்கரண்டி உப்பை சேர்த்து ஒரு கோப்பை நீரை ஊற்றி குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
புளி, இரண்டு கோப்பை கரைசல் வருமாறு கரைத்துவைக்கவும்.
கத்தரிக்காயை நான்காகவும், வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும்.
ஒரு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய், சோம்பு கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
பிறகு வெங்காயத்தைப் போட்டு சிவந்ததும் வேகவைத்த கறியை போட்டு இஞ்சி பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
அதை தொடர்ந்து கத்திரிக்காயை போட்டு எல்லாத்தூளையும் சேர்த்து கிளறிவிட்டு புளிக்கரைசல் மற்றும் கறி வெந்த சூப்பையும் ஊற்றவும்.
எல்லாவற்றையும் நன்கு கலக்கிவிட்டு உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும், குழம்பு நன்கு கொதித்தவுடன் அடுப்பின் அனலைக் குறைத்து வைக்கவும்.
காய்கள் நன்கு வெந்து எண்ணெய் மேலே தெளிந்ததும் இறக்கிவிட்டு நன்கு ஆறியப்பின்பு பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள மனோகரி மேடம், இந்த குழம்பில் கத்தரிக்காய்க்கு பதில் முள்ளங்கியும் ஒரு தக்காளியும் சேர்த்து செய்தால் நன்கு வருமா?.எனக்கு முள்ளங்கி போட்ட மட்டன் குழம்பு செய்ய ஆசை.தேடிப் பார்த்து கிடைக்காததால் இந்த குறிப்பு பார்க்கவும் செய்யலாமா என்று யோசனை.நன்றி

டியர் ரதி எப்படி இருக்கீங்க? இந்த குறிப்பைக் கொண்ட உங்கள் யோசனைப் படியே முள்ளங்கிலும் செய்து பாருங்க ஆனால் முள்ளங்கியை தனியே வேகவைத்து தக்காளியோடு சிறிது தேங்காயையும் அரைத்து சேர்த்து செய்து பாருங்க எப்படி வந்ததென்று தெரிவியுங்க நன்றி.