உணவு

சமைக்காமல் அசத்தலாம்

சூரிய‌ ஒளியில் சமைக்கப்பட்ட‌ உணவுகளே பழங்கள் ஆகும். சமைக்காமல் உண்பதென்றால் நமக்கும் வேலை எளிது தானே. சமைக்காமல் அப்படியே சாப்பிடும்போது முழுச்சத்தும் நமக்குக் கிடைக்கிறது. அப்படிப்பட்ட‌ மூன்று குறிப்புகளை இங்கே காணலாம்.

கறிவேப்பிலை கீர்

கறிவேப்பிலை = 1 கப்
தேங்காய்துருவல் = 1 கப்
வெல்லம் = தேவைக்கேற்ப‌
ஏலக்காய் = 2

அனைத்துப் பொருட்களையும் மிக்சியில் போட்டு அரைத்து ஒரு டம்ளர் நீர் விட்டு கலந்து வடிகட்டவும்.

கறிவேப்பிலை கீர் ரெடி. இது சுவையான‌ பானம் ஆகும். கூந்தல் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும். பித்தத்தைப் போக்கும்.

நினைவில் கொள்ளுங்கள். தேங்காயின் அளவு குறையக் கூடாது. ஏலக்காயும் அவசியம் போட‌ வேண்டும்.

பப்பாளி பௌல்

பப்பாளி = 1
எலுமிச்சம்பழம் = 1
தேன் = தேவைக்கேற்ப‌

பப்பாளிப் பழத்தை குறுக்குவாட்டில் வெட்டி விதைகளை நீக்கவும். அப்படியே கிண்ணம் போல‌ வைத்துக் கொண்டு ஸ்பூன் மூலம் சதைப் பகுதியை எடுத்து அதிலேயே போட்டு தேன், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து கலக்கவும்.
ஸ்பூனால் எடுத்து சுவைக்கவும்.

பப்பாளி பிடிக்காதவங்க‌ கூட‌ அப்படியே காலி பண்ணிடுவாங்க‌. இதைத் தயாரிக்க‌ பாத்திரம் கூட‌ தேவையில்லை. ஸ்பூன் மட்டுமே போதுமானது, செம‌ டேஸ்டான‌ குறிப்பு இது. கட்டாயம் ட்ரை பண்ணிப் பாருங்க‌. இதிலும் விரும்பினால் தேங்காய்ப் பால் கொஞ்சம் சேர்க்கலாம்.

இந்த‌ விழுதை அப்படியே பேக் போல‌ முகத்திற்கு ஃபேஷியலாக‌ அப்ளை செய்யலாம். பப்பாளி இறந்த‌ செல்களை அகற்றி முகத்திற்கு பளபளன்னு ஃப்ரெஷ் லுக் கொடுக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ்

பெரிய‌ நெல்லிக்காய் = 2
தேன் = தேவைக்கேற்ப‌
இஞ்சி, புதினா ‍ = சிறிது

மிக்சியில் அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்ட‌ ஜூஸ் ரெடி.

ஔவையார் அதியமானுக்கு அளித்தது நெல்லிக்கனி என்றால் இதன் மகிமையை நான் மேலும் உரைக்கவும் வேண்டுமோ? தினமும் அருந்தி வர‌ முடி நரைக்காது. இளமைத் தோற்றம் நீடிக்கும்.

தோழிகளே மூன்றையும் செய்து பார்த்து சொல்லுங்கள். கறிவேப்பிலை கீர் எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை தயாராகும். சுவைக்கு நான் கேரண்டி...

5
Average: 5 (7 votes)

தீபாவளி லேகியம்

எல்லோரும் தீபாவளிப் பலகாரம் செய்துட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதோடு சேர்த்து எங்க‌ பாட்டி செய்யும் தீபாவளி லேகியத்தையும் செய்து சாப்பிடுங்க‌.

நெய்யில் சுட்ட‌ இனிப்பு, காரம் மற்றும் அசைவம் இப்படி வகை வகையா சாப்பிட்டு நம்ம‌ வயிறு கொஞ்சம் அப்சட் ஆகி இருக்கும். இந்த‌ லேகியத்தை சாப்பிட்டீங்கன்னா பலகாரம் எல்லாம் நல்லா சீரணமாகி வயிறு நம்மை வாழ்த்தும்.
ஓமம் சேர்த்து செய்வதால் வாய்வு கோளாறு வராமல் காக்கும். வயிற்றின் மந்த‌ நிலையைப் போக்கும்.

தீபாவளி லேகியம்

தேவையான‌ பொருட்கள்

சுக்கு = 25 கிராம்
ஓமம் = 50 கிராம்
கண்டந்திப்பிலி = 3 ஸ்பூன்
அரிசித்திப்பிலி = 3 ஸ்பூன்
சித்தரத்தை = 1 குச்சி
இள‌சான‌ இஞ்சி = 1 துண்டு
மிளகு = அரை ஸ்பூன்
மல்லி = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்

இஞ்சியைத் துருவி வெயிலில் உலர்த்தவும். அனைத்துப் பொருட்களையும் உலர்த்தி லேசாக‌ வறுத்து மிக்சியில் நன்கு பொடியாக்கவும்.

பொடி அரை ட‌ம்ளர் வரும். இதோடு வெல்லம் முக்கால் டம்ளர் சேர்க்கவும்.

நெய் = 3 கரண்டி
தேன் = 2 கரண்டி
நல்லெண்ணெய் = 1 கரண்டி

எல்லாவற்றையும் கலந்து அடுப்பிலிட்டு ஐந்து நிமிடங்கள் கிளறவும். கலவை அல்வா பக்குவம் வந்ததும் இறக்கவும். அதிக‌ நேரம் அடுப்பில் இருந்தால் கலவை இறுகி விடும். அப்புறம் கல்லு போல‌ கடிக்க‌ கடினமா ஆயிடும். பக்குவமா சட்டியில் ஒட்டாமல் வந்ததும் எடுங்க‌.

இதை காலை வேளை ஒரு கோலி அளவு எடுத்து உருட்டி அப்படியே சுவைத்துச் சாப்பிடலாம்.

தீபாவளி சமயம் மட்டுமல்லாமல் வாரந்தோறும் அதாவது ஞாயிறு தோறும் உங்க‌ வீட்டு வாண்டுகளுக்கு ஒரு உருண்டை கொடுத்து வந்தால் உணவு நல்லா சீரணமாகி வயிறு சும்மா கலகலன்னு இருக்கும். வயிற்றுக் கோளாறு எதுவும் வராது.

சுவையாக‌ இருப்பதால் அப்படியே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள். சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க‌ மாட்டாங்க‌.

எப்பவும் இந்த‌ லேகியம் நம்ம‌ வீட்டில் இருக்க‌ வேண்டிய‌ ஒன்று. கெட்டுப் போகாமல் ரொம்ப‌ நாள் வரும்.

சில‌ பொருட்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஓமம், சுக்கு ரெண்டும் ரொம்ப‌ முக்கியம். செய்து பாருங்க‌ தோழிகளே.

இன்னொரு டிப்ஸ் சொல்லிட்டுப் போறேன்.

உடம்பெல்லாம் வலி, கை காலெல்லாம் அசதி, ஜலதோஷம் வராப்பல‌ இருக்குன்னு அப்பா சொல்லும் போதெல்லாம் அம்மா இதையே செய்து கொடுப்பாங்க‌.

சுக்கு, கண்டந்திப்பிலி ரெண்டையும் நைசா அரைத்து தேங்காய்ப்பால் ஒரு டம்ளர் விட்டு கருப்பட்டி போட்டு கொதிக்க‌ வைத்து குடித்தால் களைப்பெல்லாம் பறந்து போயிடும். இதுவும் குடிக்க‌ சுவையா இருக்கும்.

பை தோழிகளே !!!
இப்போ போயிட்டு அப்புறமா வரேன். நானும் பலகாரம் செய்யணும்.

5
Average: 5 (3 votes)

கத சொல்லப்போறேன்...

ஒரு ஊர்ல நாகலிங்கம் நாகலிங்கம்னு அன்பே உருவான ஒருவர். அவருக்கு பாரிஜாதம் பாரிஜாதம்னு அழகான மனைவி. அவங்களுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.
ஆண்மகவுக்கு மயில்மாணிக்கம்னும், பெண்மகவுக்கு செந்தாமரைனும் அழகான பேர்.
ஒருநாள் செந்தாமரைக்கு பிறந்தநாள் வந்துச்சு. மயில்மாணிக்கம் தன் அக்காவிற்கு பிறந்தநாள் பரிசு கொடுக்க விரும்பினான்.

அதற்காக தன் சிறுசேமிப்பு பணத்திலிருந்து அக்கா தாமரைக்கு அழகான கைக்கடிகாரம் வாங்கித்தர எண்ணி, தன் தந்தை நாகலிங்கத்திடம் கூறினான்.

ஆனால் நாகலிங்கமோ அதெல்லாம் வேண்டாம், ஏற்கனவே இருக்கும் கைக்கடிகாரங்கள் போதும். அதுவுமில்லாம இந்த சின்ன வயசில சேமிப்பு பற்றி மட்டுமே எண்ணவேண்டுமே ஒழிய, ஆடம்பர செலவைப்பற்றி எண்ணக்கூடாது என்று எடுத்துக்கூறினார்.
வேண்டுமானால் கைப்பட தயாரித்த வாழ்த்து அட்டைகளோ, பிற கைவினைப்பொருட்களையோ, அம்மா பாரிஜாதம் அடிக்கடி பார்க்கும் வலைத்தளத்திலிருந்து கற்றுக்கொண்டு பரிசளிக்குமாறு கூறினார்.

ஆனால் அந்த நேரத்தில் மயில்மாணிக்கத்தின் பிடிவாதமே வென்றது.
நாகலிங்கமும் மயில்மாணிக்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அவனையும் அழைத்துச்சென்று அழகான கைக்கடிகாரம் ஒன்றை வாங்கினார்.
அதை மகள் செந்தாமரையின் பிறந்தநாள் அன்று பரிசளித்தனர்.

அக்கா செந்தாமரைக்கோ கொள்ளை மகிழ்ச்சி. அதை அன்றே பள்ளிக்கு அணிந்து சென்றார்.

அடுத்தடுத்த நாட்களும் அணிந்து சென்றார்.

மொத்தம் நான்கு நாட்கள் கழிந்த நிலையில், அம்மா பாரிஜாதம் , 'எதற்கு இதெல்லாம் போட்டுச்செல்லணும், இன்றிலிருந்து அணிந்து செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

ஆனால் பிடிவாதமாக இன்று மட்டும் அணிந்து செல்கிறேன். பிறகு வாரத்தில் மூன்று நாட்கள் அணிந்து செல்கிறேன் என்று கூறினாள் செந்தாமரை.

அன்று ஆசிரியர் தினம் என்பதால், அதனையே அணிந்துகொண்டு செல்வேன் என சென்ற மகளை கண்டிக்க முடியாமல் திண்டாடினார் அம்மா பாரிஜாதம்.

எது நடந்துவிடும் என நினைத்து அம்மா பாரிஜாதம் அஞ்சினாரோ, அதே போல் கைக்கடிகாரம் தொலைந்து போய்விட்டது.

ஆசிரியர் தினத்துக்கு கேக் வெட்டி கொண்டாடியதால் கைகளில் அப்பியிருந்த கேக்கை கழுவும் பொழுது கடிகாரத்தை கழட்டி வைத்ததாகவும், பிறகு அங்கேயே விட்டு வந்ததாகவும்.
அரைமணி நேரம் கழித்து சென்று பார்த்த பொழுது காணவில்லை எனவும் கூறி அழுத மகளை தேற்றவும் முடியாமல் இரண்டு போடவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தார் அம்மா பாரிஜாதம்.

பாரிஜாதம் மனதில் சிறு வயதில் அழிப்பானை (வாசனை நிரம்பியது, அழகிய வண்ணங்களை உடையது) ஒரு தோழியிடம் கொடுத்துவிட்டு, பிறகு அவர் விடுமுறையில் ஊருக்கு சென்றுவிட்டபடியால் அழிப்பானை நினைத்து ஊண், உறக்கமின்றி தவித்த நினைவு மேலோங்கியது.

பள்ளிக்கு தேவை இல்லாமல் ஆடம்பர பொருட்களை அணிந்துசெல்வது ஆபத்து.

ஆடம்பரம் இன்றியோ, இல்லாதிருந்தாலோ அடுத்தவர் பொருளை மனதாலும் கவர நினைப்பது மாபெரும் குற்றம்.

எடுத்தவர் துப்புரவாளர் சாமந்தி என்று செந்தாமரையின் தோழி ரோஜாவும், இல்லை வேறு வகுப்பு மாணவி என்று இன்னொரு தோழி முல்லையும் கூறினார்களாம். ஆனால் நம் மனம் நோவது என்னமோ நம் குழந்தையின் அஜாக்கிரதையை எண்ணித்தான்.

இதற்குத்தான் அந்தக்கலந்தொட்டே சொல்வார்கள்" தீதும் நன்றும் பிறர் தர வாரா".

மனதினை தேற்ற உள்ளூர சொல்லிக்கொள்வது என்னவென்றால், "ஏதோ கெரவம் இருந்திருக்கும் போல அது இதுல போய்ருச்சு" அடிக்கடி என் பாட்டி சொல்லிக்கொள்ளும் வரிகள் இவை.
நமக்கு இல்லை அந்த வாட்ச், யாருக்கோ வாங்கியது இப்படிலாம் நினைச்சு, ஆறுதல்படுத்தி தேற்றிக்கொள்கிறேன் புண்பட்ட மனதை.

வாங்கிக்கொடுக்கும் போது ஆயிரம் அறிவுரைகள் சொன்ன அப்பா நாகலிங்கமோ, தொலைந்த உடனே மகளை திட்டாமல் சரி விடு, இனிமே இதுமாதிரி கொண்டு போய் தொலைச்சிட்டு அழாதே என்பதாக மட்டுமே இருந்தது.

ஆனால் பாரிஜாதமோ தூக்கத்திலும் துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

உங்ககிட்டயும் ஏதேனும் கதை இருந்தா சொல்லுங்க கேட்கலாம். நிஜமல்ல, கதைதான் கேட்கிறேன் :))

பின்குறிப்பு: இக்கதையில் எத்தனை பூக்களின் பெயர் வந்துள்ளது என்று கூறுங்கள் பார்க்கலாம்.

5
Average: 5 (3 votes)

எளியவகை சட்னிகள்!!

அனைவருக்கும் வணக்கம் :)

கீழ்க்கண்ட குறிப்புகள் மிகவும் துரிதமாக செய்யக்கூடியவை. அதற்காக சுவையில் குறை இருக்கும் என நினையாதீர்கள். சுவையிலும் குறையாமல், நேரமும் எடுக்காமல் செய்யக்கூடிய இச்சட்னி வகைகளை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் :)

தேங்காய் சட்னி:

தேவையான பொருட்கள்:

தேங்காய் 1மூடி
மல்லி தழை 1கைப்பிடி அளவு
பொட்டுக்கடலை 4டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு
இஞ்சி சிறுதுண்டு
பூண்டு 3பல்
வற மிளகாய் 2
கறிவேப்பிலை 2 இணுக்கு
சின்ன வெங்காயம் 2

செய்முறை:

இவை அனைத்தயும் பச்சையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு கடுகு,உளுந்து, 1 இணுக்கு கறிவேப்பிலை தாளிதம் செய்து கொள்ளவேண்டும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வேர்க்கடலை சட்னி : (1)

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை1கப்

தேங்காய்சிறுதுண்டு (விரும்பினால்)

புளிசிறுநெல்லிக்காய் அளவு

வறமிளகாய்4

உப்புதேவையான அளவு

கறிவேப்பிலை4 இணுக்கு

செய்முறை:

வறுத்த வேர்க்கடலை கல் இல்லாமல் இருக்கிறதா என பார்த்துக்கொளவும். விருப்பமிருந்தால் தோலுடன் போடலாம்.
இல்லையேல் தோலை அகற்றிவிடவும்.

மிக்ஸிஜாரில் மேற்கூறிய எல்லாப்பொருட்களையும் போட்டு
அரைத்து எடுக்கவும்.
சுவையான வேர்க்கடலை சட்னி ஒருநிமிடத்தில் ரெடி.

சூடான சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வேர்க்கடலை சட்னி: (2)

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை 1கப் (வறுத்து தோல்நீக்கியது)
புளி கோலிக்குண்டு அளவு
சி. வெங்காயம் 100 கிராம்
வ. மிளகாய் 3
தேங்காய் 1/4 கப்
தனியா 1/4 ஸ்பூன்
சீரகம் 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை 2 இணுக்கு
கடலைபருப்பு, உளுந்துபருப்பு 1டேபிள்ஸ்பூன்(தலா)
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு,உளுந்து பருப்பு போட்டு சிவந்தவுடன் சின்னவெங்காயம் போட்டு வதக்கவும்.
பின்பு வறமிளகாய், கறிவேப்பிலை, மல்லி,சீரகம் போட்டு வதக்கவும்.
ஆறிய பின்பு, தேங்காய், புளி, வறுத்த வேர்க்க்டலை சேர்த்து அரைக்கவும்.
வேர்க்கடலை சட்னி ரெடி.

இந்த முறையும் சாதம், இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். நெய் சேர்த்தால் சுவைகூடும்.
~~~~~~~<><><><>~~~~~~~

அரைத்து சுவைத்து எப்படி இருந்ததென்று கூறுங்கள். நன்றி! வணக்கம் _()_ :)

Average: 5 (3 votes)

ஆப்பமும் விவிக்காயும்

ஆப்பம் சுவையான‌ செட்டிநாட்டு உண‌வு. நமது காலை டிபனுக்கு ஏற்ற‌ ஒன்று. நடுவில் உப்பி மிருதுவாகவும் ஓரத்தில் மொறுமொறுப்பாகவும் பஞ்சு போன்ற‌ ஆப்பம் அனைவருக்கும் பிடித்தமான‌ உணவு.

சின்னக் குழந்தைகளாக‌ இருக்கும் போது எங்கள் வீட்டில் பாட்டிம்மா ஆப்பம் சுட்டு தட்டில் வைத்தால் முதலில் ஓரத்தில் உள்ள‌ மொறுமொறுப்பான‌ பகுதியை ஆர்வமுடன் சாப்பிடுவோம். கடைசியில் தான் மீதியைத் தேங்காய்ப்பால் விட்டு சாப்பிடுவோம்.

அடையாறு ஆனந்த‌ பவனில் ஆப்பத்தை படத்தில் காட்டியபடி வளைத்து வளைத்து பூ போல‌ செய்து பரிமாறுவது தனி அழகு தான்.

நானும் இணயத்தில் சுவையான‌ ஆப்பம் ரெசிபியைத் தேடித் தேடி அலசிப் பிழிந்தேன்.

அனைத்துக் குறிப்புகளிலும் உளுந்து, வெந்தயம் சேர்த்து ஆப்பம் செய்வது பற்றியே காணப்பட்டது.

உளுந்து, வெந்தயம் சேர்த்து ஆப்பம் செய்யும் போது அதன் சுவை சற்றே தோசையை போல‌ வந்துவிடுகின்றது.

எங்கள் பாட்டியம்மா சுவையாக‌ சமைப்பதில் வல்லவர். அந்தக் காலத்தில் பாட்டிய‌ம்மா ஆப்பம் செய்யும் முறையே வேறு.

பச்சரிசியை ஊறவிட்டு உரலில் இடித்து, மாவைச் சலித்து கடைசியில் வரும் அந்தக் குருணையை கஞ்சி காய்த்து, ஆறவிட்டு அதில் இடித்துச் சலித்த‌ மாவைக் கலந்து அதிலே சிறிதளவு புளித்த‌ பதனீரைச் சேர்த்து பிசைந்து வைப்பார்கள். அதில் ஈஸ்ட் இருக்கே அதற்காகத் தான்.

மறுநாள் அந்த‌ மாவு சும்மா புஸூபுஸூன்னு பொங்கி வந்திருக்கும். அதில் ஆப்பச் சோடா சேர்த்து ஆப்பம் செய்வார்கள்.

ஆப்பச் சோடான்னா என்னன்னு விழிக்க‌ வேண்டாம். சோடா உப்பை ஆப்பச் சோடான்னு தான் சொல்லுவார்கள். கடையிலும் அப்படியே கேட்டு வாங்குவோம்.

இப்போது நான் ஆப்பம் செய்முறையைச் சொல்கின்றேன். இந்த‌ முறையில் செய்து பார்த்து உங்கள் கருத்தை எனக்கு தெரிவியுங்கள்.

பச்சரிசி‍‍‍‍‍ _ முக்கால் டம்ளர்
புழுங்கலரிசி _ கால் டம்ளர்
ஜவ்வரிசி _ இரண்டு தேக்கரண்டி

மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊறவிட்டு இத்தோடு

தேங்காய் துருவல் _ நான்கு மேசைக் கரண்டி
சாதம் _ இரண்டு தேக்கரண்டி

கலந்து மிக்சியில் நன்றாக‌ அரைத்து இத்துடன்

தோசைமாவு _ ஒரு கரண்டி
உப்பு _ தேவையான‌ அளவு
தண்ணீர் _ ஒரு டம்ளர்

போட்டு மாவை கலந்து வையுங்கள். தோசை மாவு ஈஸ்ட் செய்யும் வேலையைச் செய்து மாவை நன்கு புளிக்கச் செய்யும். சாதம் சேர்ப்பதால் மாவு விரைவில் புளிக்கும். மறுநாள்,

சர்க்கரை _ அரை தேக்கரண்டி
சோடா உப்பு _ ஒரு சிட்டிகை

சேர்த்து ஆப்பம் சுடுங்கள். சுவையான‌ பூப் போன்ற‌ ஆப்பம் ரெடி. உளுந்து, வெந்தயம் சேராத‌ ஒரிஜினல் ஆப்பத்தின் சுவை இதில் இருக்கும்.

தேங்காய்ப் பாலில் ஏலக்காய், சர்க்கரை கலந்து ஆப்பத்தில் விட்டுச் சாப்பிட‌ பொருத்தமாக‌ இருக்கும். தேங்காய்ப் பால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

இதே மாவில்

வெல்லப்பொடி, ஒரு வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து இனிப்புப் பணியாரம் செய்யலாம். உள்ளி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து காரப் பணியாரம் செய்யலாம். இரண்டுமே அருமையாக‌ இருக்கும்.

இது மட்டுமன்று, இதே மாவில்

பொட்டுகடலை _ நான்கு தேக்கரண்டி
தேங்காய் துருவல்_ ஒரு கப்
சர்க்கரை _ தேவையான‌ அளவு
முந்திரி, திராக்ஷை _நெய்யில் வறுத்தது

அனைத்தும் கலந்து இட்லித் தட்டில் மாவை ஊற்றி இட்லிகளாக‌ எடுக்க‌ அது தான் விவிக்கா.

(இனிப்பு சேர்ப்பதால் மாவு கொஞ்சம் நீர் விட்டுக் கொள்ளும். எனவே, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்தால் போதுமானது).

(இது என்ன‌ பேரு? இது காய் இல்லியே !! என‌ என் புகுந்த‌ வீட்டினர் கூற‌ நானும் இதை இனிப்பு இட்லி என்று அழைக்க‌ ஆரம்பித்து விட்டேன்.)

விவிக்கா மிதமான‌ இனிப்புடன் மிருதுவாக‌ மிகுந்த‌ சுவையுடன் இருக்கும். அதன் மாறுபட்ட‌ சுவை யாவருக்கும் ரொம்பப் பிடிக்கும்.

ஆப்பமாவு இருந்தால் இந்த‌ மூன்று அயிட்டமும் ரெடி. சுவைத்துப் பார்த்து சொல்லுங்கள் தோழிகளே.

5
Average: 5 (5 votes)

பேக் யுவர் கேக் - 2

பெரிய இடைவெளியா போச்சு. பரவாயில்லை, ஆனாலும் விடாம தொடரலாம் தானே! ;) இங்கே பலரும் கேட்க கூடிய ஒரு கேள்வி, கப்புன்னா எத்தனை கிராம்? இது எல்லா பொருளுக்கும் ஒரே மாதிரி இல்லை. அதனால் ஓரளவுக்கு எல்லாத்துக்கும் அளவு தெரிஞ்சுகிட்டா குறிப்புக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள வசதியா இருக்கும். கீழே எனக்கு தெரிந்த சில:

1 கப் மைதா - 125 கிராம்
1 கப் கோதுமை மாவு - 120 கிராம்
1 கப் சர்க்கரை - 200 கிராம்
1 கப் ஐசிங் சுகர் - 125 கிராம்
1 கப் ப்ரவுன் சுகர் - 200 கிராம்
1 கப் ரவை - 160 கிராம்
1 கப் தயிர் - 245 கிராம்
1 கப் சாதாரண பொன்னி அரிசி - 200 கிராம்
1 கப் பாசுமதி அரிசி - 195 கிராம் (200ன்னே வெச்சுக்கலாம் பொதுவா அரிசிக்கு, 5 கப் என்றால் 1 கிலோ)
1 கப் அரிசி மாவு - 160 கிராம்
1 கப் வெண்ணெய் என்பது ஏறக்குறைய 225 கிராம்
1 ஸ்டிக் பட்டர் என்பது ஏறக்குறைய 113 கிராம்.
1 கப் கொக்கோ பவுடர் என்பது 120 கிராம்.

இவை ஸ்டாண்டர்ட் மெஷர்மண்ட் கப் என சொல்லப்படும் 250ml கப்.

பேக்கிங் ட்ரேவை வெறும் வெண்ணெய் / எண்ணெய் தடவியும் தயார் செய்யலாம். அல்லது அவற்றை தடவிய பின் மாவை தூவி தட்டி ட்ரேவின் உள் பகுதி முழுக்க மாவு பரவும் படி செய்து பின் அதிகமாக ஒட்டாமல் இருக்கும் மாவை கொட்டிவிடலாம். சாக்லேட் கேக் என்றால் மாவுக்கு பதிலாக கொக்கோ பவுடரை தூவலாம். அல்லது நான்-ஸ்டிக் குக்கிங் ஸ்ப்ரே பயன்படுத்தலாம். சில நேரம் உள்ளே பட்டர் பேப்பர் நறுக்கிப்போட்டும் கலவையை ஊற்றலாம். பட்டர் பேப்பர் போடும் போது கேக் அடியில் ஒட்டாமல் எடுக்கச் சுலபமாக வரும். அதிக மாய்ஸ்ட் கேக் செய்யும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேக்கிங் ட்ரே நான்-ஸ்டிக் அல்லது கண்ணாடி பயன்படுத்துவதை விட அலுமினியம் நல்ல மெத்தென கேக் தயாரிக்க உதவும் என எப்போதோ டிவியில் யாரோ சொல்லிக்கேட்டேன். ;)

தப்பு தப்பா என்ன நடக்கலாம்... இங்க ஒரு குட்டி பட்டியல்:

1. முதல்ல உங்க அவனை நீங்க சரியா முற்சூடு செய்யறீங்களா? இது பழகப் பழக உங்களுக்கு புரியத்துவங்கும். உங்க அவன் எவ்வளவு நேரத்தில் தேவையான சூட்டுக்கு வருதுன்னு. இல்லன்னா இருக்கவே இருக்கு அவனுக்குன்னு தெர்மாமீட்டர். வாங்கி வெச்சு செக் பண்ணிக்கங்க. ;)

2. அடுத்தது நீங்க சொன்ன பொருட்களை சரியா அளந்து எடுக்கல, அல்லது எதையாவது மாற்றி அதுக்கு பதிலா வேறு எதையாவது சேர்க்க முயற்சித்திருக்கலாம். சரியான சப்ஸ்டிட்யூட் இல்லன்னா கேக் சொதப்பிடும்.

3. சில அவனில் ஒரு பக்கமா அதிகம் சூடாகலாம். அப்படியிருந்தால் குக்கீஸ் போன்றவை அடுக்கும் போது ஒரு பாதி ட்ரேவில் உள்ளவை பேக் ஆகும் முன் மற்ற பாதி டார்க் ஆக துவங்கி இருக்கும். என்னிடம் ஒரு அவன் அப்படி இருந்தது. அது போன்ற பிரெச்சனை இருந்தால் அடிக்கடி நடுவில் கேக் ட்ரேவை திருப்பி விடுவேன். ஓரளவு சரியாக வர உதவியது.

4. அடுத்தது மாவை சரியாக கலக்காமல் விடுவது. இதனால் எல்லாம் ஒன்றாக கலந்து விடாமல் இருந்து, கேக் சொதப்பிவிடும்.

5. அடுத்தது மாவை அதிகம் கலப்பது. குறிப்பில் எப்படி கலக்கச் சொல்கிறார்களோ அப்படியே கலக்க வேண்டும். பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலக்கும் போது கடைசியாக லிக்விட் பொருட்களோடு மாவை கலப்போம், அப்போது பேக்கிங் பவுடர் / பேக்கிங் சோடா வேலை செய்ய துவங்கும். கலவையின் உள்ளே பபுல்ஸ் ஃபார்ம் ஆகும். அதிக நேரம் கலக்கும் போது அந்த காற்று உடைந்து போகும், இதனால் அவனில் வைத்ததும் கேக் உப்பி வராமல் அழுந்திப் போயிருக்கும். உங்க கேக் கெட்டியா இருந்தா இது காரணமா இருக்கலாம்.

6. கேக் மாவை கலந்ததும் உள்ளே வைக்காமல் இருப்பது. அவனை முற்சூடு செய்வது எதுக்காக? மாவை உள்ளே வைத்ததுமே பேக் ஆக துவங்கிடணும், அந்த மாவுக்கு தேவையான சூடு ரெடியா இருக்கணும் என்று தானே? மாவை வெளியே அதிக நேரம் வைத்தாலும் கலந்த மாவுக்கு உடனே தேவையான சூடு கிடைக்காம போகும் தானே? இது ஏன் என்றால் 5ல் சொன்னது போல அந்த பேக்கிங் பவுடர் / பேக்கிங் சோடா வேலை செய்ய துவங்கி சில நிமிடங்களுக்கு தான் அந்த காற்று உள்ளே இருக்கும். அதன் பின் அவை செயலிழந்து போகும். அதனால் அவை செயலிழக்கும் முன் அவனில் சரியான சூட்டில் பேக் ஆக வேண்டும். தாமதமானாலும் கேக் கெட்டியா தான் இருக்கும்.

7. கேக் பேக் பண்ண வைத்த உடனே திறந்து பார்ப்பது, அல்லது அடிக்கடி திறந்து பார்ப்பது உள்ளே உள்ள சூடு குறைந்து போக காரணமாகும். இதனால் உங்கள் கேக் சரியாக பேக் ஆகாமலோ அல்லது நடுவில் அழுந்தியோ போகும்.

8. அதே போல நீங்கள் பயன்படுத்தும் பேக்கிங் பவுடர் / பேக்கிங் சோடா காலாவதி ஆகாமல் இருக்கிறதா என கவனியுங்கள். அப்படி எக்ஸ்பைரி டேட் முடிஞ்சிருந்தா அது வேலையை பார்க்கப்போறதே இல்லை. Sponge Cake முயற்சித்தால் Pan Cake தான் கிடைக்கும். :(

9. முட்டை, பட்டர் ரூம் டெம்பரேச்சரில் இருப்பதும் அவசியம். பட்டரை அப்படியே சர்க்கரையோடு கலக்க சொன்னால் அப்படித்தான் செய்ய வேண்டும். நாமாக வெண்ணெயை உருக்கி சேர்த்தால் குறிப்பில் உள்ள அதே கேக் கிடைக்காது, உங்களுக்கு வேறு மாதிரி தான் ரிசல்ட் கிடைக்கும். ரூம் டெம்பரேச்சர் என்பது ரொம்பவே முக்கியம். வெண்ணெய் அதிக நேரம் வெளியே இருந்தாலும் கேக் நன்றாக வராது. உங்க கேக் சில நேரம் அதிக மாய்ஸ்டாகவும், ஸ்டிக்கியாகவும் (கையில் ஒட்டும்விதமாக) அல்லது நடுப் பகுதி உப்பி பின் வீழ்ந்து போயிருந்தால் அது பட்டர் அதிக நேரம் வெளியே இருந்தது காரணமாக இருக்கலாம். அதிக நேரம் வெளியே இருந்தால் வேர்த்து நீர்த்துப் போகும்.

10. மாவை சரியாக சலிக்காமல் இருந்தாலும் கேக் ஒன்று போல பேக் ஆகாம வர வாய்ப்பு இருக்கு.

11. கேக் மேலே / கீழே டார்க் ஆகியும் கேக் நன்றாக எழும்பவில்லை என்றால் அவன் சூடு அதிகம். கேக் பேக் ஆகிவிட்டது, ஆனாலும் எழும்பவில்லை அதிகம் என்றால் அவனின் சூடு குறைவாக இருந்திருக்கலாம்.

12. மேலே பிசு பிசுப்பது லிக்விட் கண்டண்ட் அதிகமானாலும் ஏற்படும்.

13. பேக்கிங் பவுடர் அதிகமானாலும் கேக் நடுவில் எழும்பிய பின் அழுந்திப்போகும்.

14. அதிக நேரம் பேக் செய்தாலோ, அதிக சூட்டில் பேக் செய்தாலோ கேக் ட்ரையாக வரக்கூடும்.

15. மாவு அதிகமானாலோ அல்லது லிக்விட் / ஃபேட் கண்டண்ட் குறைந்து போனாலோ கூட கேக் ட்ரையாக வரக்கூடும்.

இன்னும் நிறைய இருக்கு... ஆனா எல்லாத்தையும் ஒரே லிஸ்ட்டா போட்டா குழம்பிப் போவீங்க ;) அதனால் இப்போதைக்கு இதோட நிப்பாட்டிக்கறேன். பயன்படுமா மக்களே இந்த குறிப்புகள்?? உங்க கருத்தை சொல்லுங்க. வேறு சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்க, அடுத்த பதிவில் பதில்கள் கொடுக்க முயற்சிக்கிறேன் (எனக்கு பதில் தெரிஞ்சா :P). ஒரு முறைக்கு 10 முறை சொதப்பினாலும் விடாம முயற்சி பண்ணுங்க, உலகில் சுலபமாக கிடைக்கக்கூடியது ஒன்றுமில்லை ;) முயற்சி செய்து தோற்றவர்களும் யாரும் இல்லை.

5
Average: 4.4 (7 votes)

பேக் யுவர் கேக் - 1

கேக் பண்றது ஒன்னும் பெரிய மேஜிக் மேட்டர் இல்லைங்க. அதை ஜுஜுபி மேட்டர் ஆக்குறது உங்க கைல தான் இருக்கு. நான் கேக் பண்ண ஆரம்பிச்சு சில வருடங்கள் ஆனாலும், அதிகமா பேக் பண்றது கடந்த 2 வருடமா தான்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி என்கிட்ட 1/2 கிலோ கேக் பண்ணக்கூட பேகிங் டிஷ் தட்டுப்பாடா இருந்தது. நம்ம தலைவர்கிட்ட எதை கேட்டாலும் “நோ” தான் பதிலா வரும். இப்பவும் பேக்கிங் டிஷ், பேக்கிங் இங்ரெடியண்ட்ஸ் எதை கேட்டாலும் “பேக்கரி ஷாப்பா வைக்க போற??”னு கேட்பார் ;) நல்ல மனுஷன். ஆனாலும் நம்ம அவரை விட நல்லவங்களாச்சே... அதனால் எப்படியும் நினைச்சதை முடிப்போம். நான் என்ன வாங்கினேன் எப்ப வாங்கினேன்னே தெரியாது... அதனால் அது சொதப்பி குப்பைக்கு போனாலும் தெரியாது :P அதுவும் நல்லதா போச்சு. எனக்கும் பேக்கிங் பற்றி பெருசா ஒன்னும் தெரியாது, நம்ம க்றிஸ் மேடம் மாதிரி நிறைய சொதப்பல்ல கத்துகிட்டது தான். அப்படி சொதப்பினா ”கூகுல் கூகுல் பண்ணிப்பார்த்தேன் உலகத்துல... என் கேக் போல யாரும் இன்னும் சொதப்பவில்ல...”னு ஆராய்ச்சி பண்ணியாவது என்ன தப்புன்னு கண்டுபிடிக்க முயற்சிப்பேன். நிச்சயம் “போடா எனக்கு வரல...”னு விட்டதே இல்லங்க. அந்த ஆராய்ச்சியில் நான் கத்துகிட்ட சிலதை இங்க உங்களுக்கும் பயன்படும்னு தரேன். தப்பா இருந்தா பேக்கிங் எக்ஸ்பர்ட் எல்லாம் இந்த சின்ன புள்ளையை மன்னிச்சுபுடுங்கோ.

பேசிக்ஸ்:

1. முதல்ல சரியான மெஷர்மண்ட் கப்ஸ் மற்றும் ஸ்பூன்ஸ் தேவைங்க. குத்துமதிப்பா எல்லாம் கேக்குக்கு அளந்தா கேக் டின்னுக்குள்ளவே குத்துக்கல்லா உட்கார்ந்துக்க வாய்ப்பிருக்கு.

2. மாவை கப்பில் அளக்கும் போது தட்டி அழுத்தி எல்லாம் அளக்க கூடாது. லூசா மாவை கப்பில் கொட்டி ஒரு கத்தி / ஸ்பாடுலா கொண்டு அதை மேலே சமமாக்கி (தலை வெட்டி) லெவலாக்குங்க.

3. கேக் குறிப்பில் என்ன என்ன கேட்டிருக்கோ அதை அப்படியே அளந்து எடுக்கனும். எந்த அளவும், எந்த பொருளும் மாறக்கூடாது. சிலதுக்கு நிச்சயமா சப்ஸ்டிடியூட் உண்டு, அதை நம்ம டிப்ஸ் பகுதியின் இறுதியில் சொல்றேன்.

4. நீங்க பயன்படுத்தும் பாத்திரங்கள் சுத்தமாகவும், ஈரமில்லாமலும் இருப்பது அவசியம். மெஷரிங் கப்ஸ் கூட.

5. அவன் எப்போதும் நாம பேக் பண்ண வேண்டிய டெம்பரேச்சரில் முன்பே இருப்பது அவசியம். எப்படி இட்லி வேக வைக்கும் போது உளுந்தும் அரிசியும் தனி தனியா உட்கார வாய்ப்பு இருக்குன்னு இட்லி சட்டியை முன்பே நீர் விட்டு சூடு பண்றமோ, அப்படித்தான் கேக் பண்றதும். முற்சூடு செய்வது தான் சரியான முறை. அப்பத்தான் நீங்க உள்ள கலவையை ஊற்றி வெச்சதும் பேக் ஆக துவங்கிடும்.

6. முற்சூடு என்பது உங்க அவனை உங்களுக்கு தேவையான சூட்டுக்கு தயார் செய்வது. பேக் செய்ய எல்லாம் தயார் செய்ததும் அவனை முற்சூடு செய்ய ஆன் செய்துவிட்டு மாவை கலக்க துவங்கினால் சரியாக இருக்கும். ஏறக்குறைய 10 - 15 நிமிடம் போதுமானது.

7. கவனிக்க... முற்சூடு அதிக நேரம் செய்வதும் தப்பு, குறைவாக இருப்பதும் தப்பு. உங்க அவனை நீங்க பயன்படுத்த பயன்படுத்த எவ்வளவு நேரத்தில் குறிப்பில் சொன்ன சூடு ஆகுதுன்னு தெரியும். கட்டாயம் குறிப்பில் கொடுக்கும் டெம்பரேச்சர் தான் செட் பண்ண வேணும்.

8. உங்க கலவையின் அளவுக்கு சரியான பேக்கிங் பேன் பயன்படுத்துங்க. கலவை எப்போதும் பாத்திரத்தின் உயரத்தில் பாதி அளவு மட்டுமே வர வேண்டும். அப்போது தான் மேலே எழும்ப இடமிருக்கும்.

9. மாவை எப்பவும் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா போன்றவை சேர்த்து 2 - 3 முறையாவது சலித்து எடுங்க. அப்ப தான் எல்லாம் ஒன்றாக ஈவனா கலக்கும்.

10. நீங்க பயன்படுத்தும் எல்லா பொருளும் ரூம் டெம்பரேச்சரில் இருப்பது அவசியம். குறிப்பில் ஃப்ரிட்ஜில் வைக்க சொல்லாதவரை எதையும் குளிர்ச்சியா பயன்படுத்தாதீங்க. வெளிய எடுத்து வெச்சு ஆற விடுங்க.

11. கலவையை குறிப்பில் சொன்னபடியே தயாரிங்க. அதிக நேரம் கலக்கினால் கேக் ஹார்ட் ஆக வாய்ப்பிருக்கு. சரியா எல்லாம் ஒன்றாக கலக்கலன்னாலும் சொதப்பிடும். மாவை கலந்த பின் உடனே பேக்கிங் டிஷ்ல ஊற்றி விட வேண்டும். கலந்து வைக்க கூடாது. அதனால் ஆரம்பிக்கும் முன்பே டிஷ்ஷை வெண்ணெய் தடவி மாவு தட்டி தயாரா வைங்க.

12. கலவையை டிஷ்ல கொட்டினதும் ஒரு தட்டு தட்டி அதை சமமாக்கி, உடனே அவனில் வைங்க. வெளிய வெச்சிருக்காதிங்க. இட்லி மாவு கலந்ததும் ஊத்தி சட்டியில் வைப்பது போல தான். அதே காரணத்துக்காகவும் தான்.

13. அவனில் பேக் பண்ண எப்போதுமே நடு தட்டை பயன்படுத்துங்க. அடியிலோ, மேலோ வைத்தால் சூடு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்க வாய்ப்பிருக்கு.

14. இரண்டு ட்ரே பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒன்றன் மேல் ஒன்றாக கேக் பேன் இல்லாமல் சற்று தள்ளி தள்ளி வரும்படி அடுக்கலாம்.

15. என்ன தான் கேக் குறிப்பில் பேக் செய்ய வேண்டிய நேரம் இருந்தாலும் அது அவனுக்கு அவன் மாறுபடும். அதனால் கேக் தயாராகிவிட்டது என்பதை சரியா உறுதிபடுத்திக்கொண்டு எடுக்கவும்.

16. உள்ளே விடும் டூத் பிக் அல்லது கத்தியில் ஈரமாக கலவை ஒட்டாமல் சுத்தமாக வந்தால் கேக் தயார் என தெரிந்து கொள்ளலாம். குக்கீஸ் என்றால் 5 நிமிடங்களுக்குப் பிறகு அடிக்கடி பிஸ்கட்களை கவனிக்கவும். அடிப்பாகம் சிவந்திருந்தாலோ, ஓரங்களை தொடும் போது உடையாமல் இருந்தாலோ பிஸ்கட் பேக் ஆகிவிட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்.

17. கேக் கலவையை உள்ளே வைத்த முதல் 5 - 10 நிமிடத்தில் அவனை திறந்து விடக்கூடாது. உங்க கேக் நடுவில் அழுந்திப் போகும் (எல்லாம் அனுபவம் தான்... அறுசுவைக்கு ஃபோட்டோ எடுக்கும் ஆவலில் முன்பெல்லாம் திறந்திருக்கேன் :P)

18. பேக் ஆன பின் கேக்கை அவனில் விடாதீங்க. குறைந்தது 10 நிமிடம் ஆற விடுங்க. கேக் ஆறும் முன் பேனில் இருந்து எடுத்தாலோ, அதிக நேரம் அப்படியே விட்டாலோ கேக்கின் டெக்‌ஷர் மாறிப்போகும். ஆறாம எடுத்தா டிஷ்ல இருந்து கேக் முழுசா வெளிய வராம கூட போகும்.

19. டிஷ்க்கும் கேக்குக்கும் நடுவில் சுற்றி கத்தியால் எடுத்துவிட்டு பின் கவிழ்த்தால் கேக் எடுக்க சுலபமாக வரும். முடிஞ்சா அடியில் ஒரு பட்டர் பேப்பர் போடுங்க, சுலபமா வரும்.

இதெல்லாம் பேக்கிங் பேசிக்ஸ். நீங்க செய்யுறது கேக் / மஃபின் / குக்கீஸ் எதுவா இருந்தாலும் இவை முக்கியமான விஷயங்கள். இனி என்ன என்ன சொதப்பக்கூடும் என அடுத்த பதிவில் பார்ப்போம்.

5
Average: 4.8 (5 votes)

மை டியர் பூரி

பூரி பிடிக்காதவங்கயாராவது இருப்பாங்களா?
ரேவதி மட்டும் விதிவிலக்கா. பூரி பிடிக்காம போறதுக்கு.
எங்கு போனாலும் உணவகத்தில சாப்பிடணும்ன்னு போனா முதல் சொல்லற அயிட்டம் பூரிதான் . புஸ்
புஸ்ன்னு தட்டுல 2பூரி அது பக்கத்துல கிழங்கு கிண்ணத்தையும் வச்சு ,சர்வர் எடுத்துன்னு வரத பார்க்கும் போது , சீக்கிரம் வந்து டேபிள் வைப்பாருன்னு ஆர்வமா பார்த்துட்டு இருப்பேன் . அவர் சரியா நம்ம டேபிள் பக்கத்துல வந்து அடுத்த டேபிள்ள வச்சிட்டு போவாரு . என்னோட ஆர்வமும் புஸ்ன்னு போய்டும் . அடுத்து திரும்பவும் சர்வர் வருவார் . இந்த முறை நிச்சயம் நம்ம டேபிள்தான் . (கடவுள் ஒரு முறைதான்பா ஏமாத்துவாரு )
எடுத்து வந்து அதே புஸ் புஸ் பூரி இப்ப நம்ம டேபிள் . அந்த பூரிய அப்படியே ஆசை தீர பார்த்துட்டு அது புஸ்ன்னு நிக்குமே அதை அப்படியே ஒரு விரலால லைட்டா அழுத்துன்னா ஓட்டை விழுந்து அதுல அடைப்பட்ட காத்து வெளிய போய்ட்டு , ஓசோன்ல விழுந்த ஓட்டை மாதிரி இந்த ஓட்டை பூரியும் என்னையே பார்க்கும் .
அது மேல் கிழங்கு ஊத்தி ,மெல்லமா கிள்ளி வாய்ல போட்டு ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டா.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சரி சரி இப்ப எதுக்கு இந்த கதைன்னு கேட்கறிங்களா .
இப்படி ரசிச்சு ரசிச்சு என் ஆசை  பூரி எனக்கு சுடவே வராது . அதான் இங்க மேட்டர் . சப்பாத்திய எண்ணெய்ல போட்டு எடுத்த மாதிரியே எனக்குஎன்னனு இருக்கும் என்னோட பூரி .ஒவ்வோரு ஞாயிறும் வீட்டுல காலைல பூரி ??? சுடுவேன் . என்னவர் இன்னைக்கு அம்மா ஓட்டைவடை சுடறாங்கன்னு சொல்லுவாரு . என் பூரிக்கு அவர் வெச்ச பெயர் . அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
(ஒரு அறுசுவை உறுப்பினர்க்கு வந்த சோதனை )

தன் முயற்சில சற்றும் மனம்தளராத விக்கரமாதித்தன் மாதிரி ரேவதி யூம் எந்த ஞாயிரையும் விடறதே இல்ல . அதுவும் அந்த வேதாளம் மாதிரி எனக்கு வரவே இல்ல . (இப்படியே பூரி சுட்டு போட்டு பிள்ளைங்க இதான் பூரின்னு ஏத்துக்குனாங்க )

ஒரே குஷ்டமப்பா .ச்சே கஷ்டமப்பா

என் ஆசை பூரியே
நீயும் என்னவனின்
தோழியோ
உனக்கும் என்னை
பிடிக்காமல்
எண்ணெய்யும்
குடிக்காமல்
வருவதே இல்லை..

ரேவதி சோகமா இருக்கேன்ல அதான் கவிதை ??( கவிதையான்னு கேட்கபடாது.)

அப்பறம் சோகம் மறந்ததும். பூரியும் மறந்துடும் . யாரை பார்த்தாலும் நீங்க எப்படி சுடுவிங்க பூரின்னு கேட்காம விடமாட்டேன் . அவங்களும் டிப்ஸ் குடுப்பாங்க . எனக்கு தான் வரவே இல்ல :(

இப்ப சனிக்கிழமை நம்ம சுவாகூட பேசின்னு இருக்கும்போது நம்ம பூரி கதை ஸ்டார்ட் . அவங்களோட குறிப்பு பதூராவும் டிரை பண்ணிருக்கேன் . ம்ம்ம்ம்ம்ம் வரலயே .
அவங்கிட்டயே கேட்டேன் . அவங்களூம் மாவு பாத்திரத்துல கொட்டினதுலருந்து பூரியா சுட்டு எடுக்கறவரைக்கும் சொல்லிகுடுத்தாங்க . இல்லனா வீடியோ எடுத்து அனுப்பிடறேன்ன்னு சொன்னாங்க ( நமக்கு சொல்லி புரியவைக்க முடியாதுன்னு அந்த புள்ளைக்கு தெரிஞ்சுருக்கு )

சரி அதான் இவ்ளோ விளக்கமா சொன்னாங்களே ந்னு ஞாயிறு கிழமை கலத்துல இறங்கியாச்சு .

அட இப்பயாவது வந்துச்சான்னு கேட்கறிங்களா

ம்ம்ம்ம்ம்க்க்கும் ஒன்னே ஒன்னு மட்டும் புஸ் புஸ்ன்னு வந்துச்சு .  :'(

சுவாகிட்ட சொன்னா .அவங்களே கலத்துல இறங்கி நேற்று இரவு பூரி சூட்டு எனக்கு வீடியோவே அனுப்பிட்டாங்க .
அதை பார்க்க பார்க்க ரேவதிக்கு ஒரே அழுகாச்சி . பூரி என்னை பார்த்து ஒழுங்கு காமிச்சு சிரிச்சமாதிரியே இருந்தது .

(அடியே ரேவதி உன்னை பூரிகூட ஒழுங்குகாமிக்குது ,இனியும் நீ பூரி சுடலன்னா )

இன்னைக்கு வீட்டுல எல்லாரையும் கிளப்பி அனுப்பிட்டு  பூரி சுட்டேன்  . (நான் மட்டுமே சாப்பிட்டேன்)

நீங்களே சொல்லுங்க படத்தை பார்த்துட்டு  சரியா சுட்டுருக்கேனா மக்களே ... :P

இந்த பூரி நம் தோழி சுவர்ணாவுக்காக (நீதான சாப்பிட்டன்னு கேட்கபடாது-)

5
Average: 4.8 (5 votes)

முளையவியல்

"முளையவியல் என்றால் என்ன என்று யாருக்குத் தெரியும்?" அறிமுக வகுப்பில் சிஸ்டர் கேட்ட கேள்விக்கு நாங்களெல்லாம் பேசாமல் இருக்க தைரியமாகக் கை தூக்கியது என் மச்சாள் மட்டும்தான்.

"முட்டையை முழுசா அவிக்கிறதுதானே சிஸ்டர்?" சிஸ்டருக்குப் பயங்கரக் கோபம் அன்று. :-)

பிறகு... ஒரு பொருட்காட்சிக்காக சிஸ்டர் எங்களிற் சிலரை வீட்டில் ஆளுக்கொரு கோழியில் முட்டைகளை அடைகாக்க வைக்கச் சொன்னார். அதிலிருந்து தினம் ஒரு முட்டை பாடசாலைக்குக் கொண்டு போக வேண்டும். வளர்ச்சிப் படிமுறைகளை அவதானிப்பது எங்கள் நோக்கம். சிஸ்டர் முட்டைகளை உடைத்துப் பாதுகாத்து.... முழுக்குஞ்சு வரும்வரை இப்படி நடந்தது. இப்போ அந்தக் குஞ்சுகளை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது. ;(

கோழி சாப்பிடுவது பிடிக்காவிட்டாலும்... அது உயிரியல் நீதி என்பது புரிகிறது. விளைய வைத்துச் சாப்பிடுவது தப்பில்லை.

இப்போ சொல்லப் போவது... தாவர விளைச்சல் பற்றியது. ;) சமையலறையிலேயே விளைச்சல். ஆமாம், தானியங்களை முளைகட்டும் பல்வேறு விதங்களில் இதுவும் ஒன்று.

இந்தப் பொருளையும் செஞ்சிலுவைச் சங்கக் கடையில் இருந்துதான் வாங்கி வந்தேன். பத்து வருடங்கள் இருக்கும். முழுப் பலனையும் கொடுத்தாயிற்று. இனி விரைவில் ஓய்வு கொடுக்க வேண்டும்.

கீழே ஒரு வெள்ளைத் தட்டு, மேலே நிறமற்ற தட்டுகள், ஒரு மூடி. எனக்குக் கிடைத்ததில் மூன்று தட்டுகள் இருந்தன. மேற்கொண்டு எத்தனை தட்டுகள் வேண்டுமானாலும் வாங்கியிருக்கலாம். தேவைப்படவில்லை. தட்டுகளில் நீலநிறத்தில் சிறிய பூக்கள் போன்ற அமைப்புகள் இருந்தன. காணோம்.

ஒவ்வொரு தட்டிலும் ஒரு துளை இருக்கும். அதன்மேல் இந்தப் பூக்கள்... வித்துக்கள் அடுத்த தட்டிற்குக் கடந்து போகாமல் இருப்பதற்காக வைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு தட்டிலும் கொஞ்சம் வித்துக்களைப் போட்டு தட்டுகளை அடுக்கிக் கொண்டு மேற் தட்டில் மட்டும் நீர் விட வேண்டும். மேலதிக நீர் ஒவ்வொரு தட்டாக இறங்கி தேவையில்லாதது வெள்ளைத் தட்டில் சேரும். அதை ஊற்றிவிடலாம். (இந்தத் தண்ணீர் தொட்டிச் செடிகளுக்கு நல்லது.)

தட்டுகளில் குட்டிக் குட்டிப் பீலிகள் இருக்கும். அதனுள் மட்டும் நீர் தேங்குவதால் வித்துக்கள் அழுகிப் போகாது.

பிறகு... தினமும் நீரைப் புதுப்பிக்க வேண்டும். வித்துக்கள் மெதுவே முளை விட ஆரம்பிக்கும். தினமும் தேவைக்குக் கொஞ்சம் என்று பிடுங்கிக் கொள்ளலாம்.

நான் போட்டிருப்பது பயறு, கடுகு, வெந்தயம்.

பயன்பாடுகள் சுருக்கமாக...
பயறு - சூப், சாலட், ஸ்நாக் & சமைத்தும் சாப்பிடலாம்.
வெந்தயம் - சாலட், ஸ்நாக்
கடுகு - சான்விச் & ஸ்நாக்

ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை. வெந்தய முளைகளின் மெல்லிய இனிப்புச் சுவை பிடிக்கும். கடுகு - மெல்லிதாய்க் காரமாக இருக்கும். அளவுக்கு அதிகம் சாப்பிட்டால் மட்டும் நாக்கு வெந்து போகும்.
பயறு - சூப்பர் ஸ்நாக்.

இப்படியெல்லாம் சாப்பிடுவதால்தான்... இமா அறுசுவைக்கு சமையற் குறிப்புகள் அனுப்புவதில்லை. ;D

Average: 5 (6 votes)

அவன்லஸ் கேக் ;)

இங்கே கேக் குறிப்பை பார்த்து பலரும் அவனில்லாம பண்ண முடியாதா என கேட்பது வழக்கம் தானே. என்ன தான் குக்கரில் செய்யும் முறை நிறைய அறுசுவையில் இருந்தாலும் மணல் போட்டு செய்வது சிரமம் சிலருக்கு. நீர் இல்லாமல் செய்யும் முறையில் முயற்சிக்கவே பயம் பலருக்கு. எல்லோரும் செய்ய தோதாக ஒரு முறையை கொடுக்க வேண்டும் என சில நாட்களாக யோசித்து வந்தேன். கேரமல் புட்டிங் எல்லாம் அவனிலும் வருது, குக்கரிலும் வருதே, கேக் மட்டும் அப்படி வராதா என யோசனை. அதன் முடிவு இன்னைக்கு இங்கே வந்தாச்சு. இப்போ நீங்க பார்க்கும் கேக் (எக்லஸ் பனானா கேக்), குக்கரில் வைத்து ஸ்டீம் செய்தது. எப்படி இருந்தது?? மெத்து மெத்துன்னு ஜோரா வந்ததுங்க. நம்புங்க... நம்பிக்கை இல்லைன்னா செய்து பார்த்து மறக்காம வனிக்கு சொல்லிடுங்க. எப்படின்னு முறை இதோ ஸ்டெப் ஸ்டெப்பா படத்தோடு கீழே. பீட்டர் இல்லாமல் தயாரிக்கும் எந்த கேக் குறிப்பு வேணும்னாலும் தேர்வு பண்ணிக்கங்க (பீட்டர் வெச்சு அடிக்கும் கேக் நான் இதுவரை முயற்சி பண்ணதில்லை, உங்களுக்கு விருப்பம் இருந்தா தாராளமா ட்ரை பண்ணுங்க). அந்த முறைப்படி மாவை தயார் பண்ண ரெடி பண்ணிக்கங்க (நான் எக்லஸ் பனானா மஃபின்ஸ் ரெசிபி ஒன்னை மனம் போன போக்கில் கலந்திருக்கேன். ஸ்டீம் பண்ண முடியுமா என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள நடத்திய சோதனை.)

1. குக்கரில் 1/2 - 3/4 இன்ச் அளவு அதிகபட்சம் 1 இன்ச் அளவு நீர் ஊற்றுங்க. அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் முற்சூடு பண்ணுங்க.

2. குக்கர் உள்ளே வைக்கும் அதே பாத்திர அடுக்கு பயன்படுத்தி இருக்கேன். இல்லாதவங்க வேறு ஒரு பாத்திரத்தை ஸ்டாண்டாக அடியில் வைக்க பயன்படுத்தலாம். கேக் மிக்ஸ் இருக்க பாத்திரம் நேரா குக்கரில் வைக்க கூடாது. கொஞ்சம் உயரம் தூக்கி வைக்கனும் நீர் படாம. அதுக்காக தான் இந்த அமைப்பு. உயரமா ஸ்டாண்ட் இருந்தா அதையும் பயன்படுத்தலாம்.

3. இன்னொரு கேக் பேக் பண்ணும் பாத்திரமோ அல்லது குக்கர் உள்ளே வைக்கும் பாத்திரத்தின் அடுத்த அடுக்கோ (நான் அதைத்தான் பயன்படுத்தி இருக்கேன்) அதில் வெண்ணெய் தடவி, மாவு போட்டு தட்டி தயார் பண்ணிக்கங்க.

4. அந்த பாத்திரத்தில் அல்லது தயார் பண்ண பேக்கிங் ட்ரேவில் மாவு கலவையை ஊற்றி சூடா இருக்க குக்கரில் வைங்க (மாவு பாத்திரத்தின் உயரத்தில் பாதி மட்டுமே இருக்க வேண்டும், உப்பி வர இடம் வேண்டுமே. மேலே மூட வேண்டாம், திறந்தே வைங்க). பாத்திரம் மிதக்க கூடாது. அப்படி மிதந்தால் அடியில் வைக்கும் பாத்திரத்தில் வெயிட்டா எதையாவது உள்ளே போட்டு வைங்க. நான் ஒரு சின்ன இரும்பு கம்பியை போட்டேன், லேசா கூட ஆடக்கூடாதுன்னு. ஆடினா கேக் ஷேப் கெட்டுப்போகும்.)

5. குக்கரை கேஸ்கட்டோடு வழக்கமா வேக வைக்க மூடுவது போல மூடவும். வெயிட் வைக்க வேண்டாம் (இட்லி வைப்பது போலவே தான்).

6. மிதமான(Medium Flame) தீயில் 20 - 30 நிமிஷம் உங்க மாவின் / தீயின் அளவை பொறுத்து வைத்திருந்து உள்ளே விடும் கத்தியில் ஒட்டாமல் வரும் போது எடுத்து ஆறவிடவும்.

திறக்கும் போது குக்கர் மூடியில் இருந்து நீர் கேக் மேல படாமல் எடுக்கவும். இனி என்ன? ஆறியதும் துண்டு போட்டு பங்கு போட்டு சாப்பிடுங்க. சாஃப்ட்டா இருக்கா இல்லையான்னு டவுட்டே வேண்டாம்... மேலே படத்தை பார்த்தாலே தெரியுதா சாஃப்ட்டோ சாஃப்ட்டுன்னு ;)

இனி அவனில்லை, இவனில்லைன்னோ அல்லது நீரில்லாமல் குக்கர் என்ன ஆகும்னோ யாருக்கும் சந்தேகமே வராது தானே? வரப்புடாது. எல்லாரும் பேக் பண்ணாமல், கேக் பண்ணலாம். :) வாழ்த்துக்கள்.

5
Average: 5 (6 votes)