குடும்பம்

தீபாவளி ஷாப்பிங்

ஷாப்பிங் கிளம்பியாச்சா?

தோழிகள் எல்லாம் இந்நேரம் தீபாவளி ஷாப்பிங் முடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

தீபாவளிக்கான ஜவுளிகள் எடுப்பது என்பது பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. நம்முடைய குடும்ப வருமானம், எத்தனை பேர், அவங்க வயது, நாம் வசிக்கிற ஊர், பார்க்கும் உத்யோகம், நமக்கென்று உண்டான ட்ரெடிஷனல் ஸ்டைல் எல்லாவற்றையும் சொல்லலாம்.

நம்ம வீட்டில் எத்தனை பேர், எந்த வயதில் இருக்காங்க - இது முதலில் பார்த்து என்ன வாங்கணும்னு டிஸைட் செய்துக்கணும்.

வருட முழுவதும் இதற்காகவே சேமித்து வைத்திருந்தீங்கன்னா சூப்பர். போனஸ் வருது, அதில் வாங்கிக்கிலாம்னாலும் சரிதான்.

போனஸ் தொகையிலும் நகை, வீட்டு உபயோகப் பொருட்கள், இப்படி வாங்க வேண்டியிருந்தால், அதையும் கால்குலேட் செய்து கொள்ளுங்க.

உடைகளைப் பொறுத்த வரை - கிராண்ட், ஃபார்மல்ஸ், காஷுவல்ஸ் என்று பிரிச்சுக்கலாம்.

இது எல்லா வயதினருக்குமே பொருந்தும்.

முதலில் இல்லத் தலைவிகளுக்கு -

இந்த வருடத்தில் நிறைய கல்யாண வீடுகள், விசேஷங்கள் அட்டெண்ட் செய்ய வேண்டியிருக்கு என்றால் பட்டு சேலைகள், க்ராண்ட் சேலைகள் ஓ.கே.தான். அதுவுமே நெருங்கிய உறவினர்கள் வீட்டு விசேஷமா, இல்ல ஓரளவுக்கு சிம்பிள் ஆக போகக் கூடிய விசேஷமா என்று யோசிச்சு, அதுக்குத் தகுந்த மாதிரி சேலைகள் எடுங்க.

அலுவலகம் போகிறவங்களுக்கு எவ்வளவு சேலைகள் இருந்தாலும் போதாதுதான். ஃபார்மல்ஸ் ஆக - கண்ணை உறுத்தாத வண்ணங்களில் - டீஸண்ட் டிசைன்களில் பொருத்தமான வண்ணங்களில் ஜாக்கெட்டுகளுடன் எடுத்துக் கொள்ளலாம். அலுவலக உடைகளுக்கு டிசைனர் ரவிக்கைகள் தவிர்க்கலாம்.

காட்டனா, சிந்தெடிக்கா - இந்த சாய்ஸும் யோசிக்கணும்.

கஞ்சி போட்டு அயர்ன் செய்ய நேரம் இருக்கும், அந்த லுக்கே தனிதான் அப்படின்னா காட்டன் சேலைகள் எடுத்துக்கலாம். அதிலுமே ஸ்டார்ச் ஃப்ரீ சேலைகள் இருக்கு. அழகான லுக் தரும் இவை.

சில்க் காட்டன் - இவற்றில் க்ராண்ட் லுக், சிம்பிள் லுக் இரண்டுமே கிடைக்கின்றன. நல்ல ப்ரைட் வண்ணங்கள் கட்டினால் அசத்தலாக இருக்கும்.

சிந்தெடிக் சேலைகள் - அதிகம் விலை இல்லாமல், ரெகுலராக கட்டிக் கொள்வதற்கு நல்லா இருக்கும்.

சுடிதார் வெரைட்டிகள் - கேட்கவே வேணாம். எல்லா விலைகளிலும் எல்லா வெரைட்டிகளிலும் கிடைக்கிறது.

சுடிதார் வாங்கும்போது - எக்செல், மீடியம், ஸ்மால் என்ற அளவுகளில் கிடைக்கும். உங்களுக்குப் பொருத்தமான அளவைப் பார்த்து வாங்குங்க. விலையும் கலரும் பார்ப்பதை விட பொருத்தமான அளவு ரொம்பவும் முக்கியம்.

இல்லத் தலைவர்களுக்கு - தரமான முழுக் கால் சட்டைகள், ஃபார்மல் ஷர்ட்கள், தேவைப்பட்டால் உயர் ரக ஜரிகை அல்லது காட்டன் வேஷ்டிகள் எடுத்துக்கலாம். ஷர்ட், பேண்ட் அளவுகள் முதலிலேயே கரெக்டாக குறிச்சு வச்சுகிட்டு எடுங்க.

குழந்தைகளுக்கு - பார்க்கிற அத்தனையும் வாங்கணும் போலதான் ஆசையாக இருக்கும்.

ஸ்கூல் போகிற குழந்தைகளுக்கு அவங்க பெரும்பாலும் யூனிஃபார்ம் போட்டுக்கிறாங்க. அதனால், விசேஷ வீடுகளுக்கு போட்டுக் கொள்ள ஃபேன்சியான ட்ரெஸ்கள் ஒன்றிரண்டு, அதைத் தவிர ஸ்கூல் விட்டு வந்ததும் உடை மாற்றிக் கொள்ள - காட்டன் ட்ரெஸ்கள் தான் பெஸ்ட்.

லெகிங்ஸ் பற்றி கொஞ்சம் - இந்த உடை பற்றி நிறைய விமரிசனங்கள் இருக்கு. ஆனால் பெண் குழந்தைகள் - 5 வயதிலிருந்து உள்ள சிறுமிகளுக்கு இது ரொம்ப அவசியமாக இருப்பதைப் பார்க்கிறேன்.

ஆமாம் - இந்த வயதுக் குழந்தைகள் விளையாடப் போகும்போது தயக்கமில்லாமல் விளையாட முடிகிறது. மேலே ஃப்ராக் அல்லது சற்றே நீளமான டாப்ஸ் அணிந்து கொள்கிறார்கள். பார்க்கில், வெளியிடங்களில் சௌகரியமாக இருக்கிறது அவங்களுக்கு.
நல்ல டார்க் நிறங்களில் எடுங்கள். வெளிர் நிறங்கள் வேண்டாம்.

ஸ்கூல் யூனிஃபார்ம் ஸ்கர்ட் அணியும்போது, இப்பவெல்லாம் சில பள்ளிகளில் கறுப்பு நிற லெகிங்ஸ் அணியச் சொல்லி, பள்ளியிலேயே சொல்லி விடுகிறார்கள். நல்லதுதான்.

சிறுவர்களுக்கு - செக்ட் ஷர்ட்ஸ், அடர் வண்ணங்களில் ப்ரிண்ட் செய்தவை, ஹாஃப் ட்ரவுசர்கள் இவை நிறைய தேவைப்படும்.

க்ராண்ட் லுக் உடன் உள்ள கோட் டைப் மாடல்கள், ஒன்றிரண்டு ட்ரெடிஷனல் உடைகளும் தேவைதான்.

வீட்டுப் பெரியவங்களுக்கு - அதிகம் எடையில்லாமல், அணிவதற்கும் துவைப்பதற்கும் சுலபமாக, சுருக்கம் விழாத நீட் லுக் உள்ள வெரைட்டிகள் எடுத்தால் பொருத்தமாக இருக்கும். அவங்களோட விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக் கொடுங்கள்.

எல்லோருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்!

3
Average: 3 (2 votes)

இவர் என் அம்மா

Seba amma

இவர் என் அம்மா.
இவர் என் அப்பா.
இவர் என் அண்ணா.
இவர் என் அக்கா...

என் சின்னக் காலத்தில், இலங்கையில் முதலாம் வகுப்புத் தமிழ் மலரில் முதற்பாடம் இப்படித் தான் இருக்கும். :-) சிங்களப் புத்தகத்திலும் இதே விதமாகத் தான் முதலாம் வகுப்புப் பாடம் ஆரம்பித்திருக்கும். அந்த ஓவியங்களை மட்டும் எனக்குப் பிடிப்பதில்லை. மனிதர்களை இன்னும் சற்று அமைப்பாக வரைந்திருக்கலாம் என்று தோன்றும்.

இவர்... என் அம்மா.

பழைய அறுசுவை உறுப்பினர்களுக்கு... இல்லையில்லை, இடைக்காலத்தில் உறுப்பினரானோருக்கு இவரைத் தெரியும். அழகுணர்ச்சியும் நகைச்சுவையுணர்ச்சியும் மிக்கவர். இளமையான மனது, குறும்பாக சின்னச் சின்ன இடுகைகள் என்று பதிவிட்டு இங்கு சில நட்புகளைச் சம்பாதித்திருந்தார்.

அவருக்குப் பின் அவரது உடமைகளை ஒதுக்கும் போது கண்ணில் பட்டது ஒரு பழைய கடித உறை. அறுசுவை நட்புகள் பெயர் சில அதில் குறித்து வைத்திருந்தார். அறுசுவையில் சில கைவினைக் குறிப்புகள் கொடுத்திருக்கிறார் செபா.

அவற்றுக்கான சுட்டிகளை இங்கு இணைக்கிறேன்.

மேலும் சில குறிப்புகள் அனுப்புவதற்குப் பாதி தயாராக அவரது மின்னஞ்சலில் சேமிப்பிலுள்ளதை அவதானித்தேன். நேரம் கிடைக்கும் போது எடிட் செய்து அனுப்ப வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், பார்க்கலாம்.

அறுசுவையில் இடம்பெற்ற கவிதைப் போட்டி ஒன்றுக்கான நடுவர்குழுவில் ஒருவராகவும் இடம்பெற்றிருக்கிறார்.

சரி, இன்று ஏன் இந்த இடுகை!

செபா காலமான முதல் ஆண்டு நிறைவு இன்று.

அவரைப் பற்றி...

இயற்பெயர் : திருமதி. அந்தோனியா ஜெயநாதன்

செல்லமாக - பொன்மணி

அறுசுவையில் - செபா (2009 முதல்)

பிறப்பு : 11 ஜூன் 1931 (சின்ன உப்போடை, மட்டுநகர், இலங்கையில்)

வாழ்ந்தது : 1960 முதல் 2003 வரை திருகோணமலையில் பின்பு நியூஸிலாந்தில்

மீளாத் துயில் ஆழ்ந்தது : 18 அக்டோபர் 2017 அன்று தனது எண்பத்தோராவது வயதில் நியூஸிலாந்தில்

தொழில் : தமிழ் ஆசிரியை

கற்பித்தது : மட்/கோட்டைமுனை ரோ. க. தமிழ் பெண்கள் பாடசாலை, தி/புனித மரியாள் கல்லூரி, தி/புனித சூசையப்பர் கல்லூரி

கணவர்: செ. ஜெயநாதன் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் - திருகோணமலை. இலங்கை)

பெற்றோர் : காலம் சென்ற - செபமாலை (செல்லம்மா) & செபஸ்தியான்பிள்ளை (மட்டுநகர்)

உடன் பிறப்பு : காலம் சென்ற - இன்னாசிமுத்து செபஸ்தியான்பிள்ளை (மட்டுநகர்)

பிள்ளைகள் : நான் - ஜெயா க்றிஸ்தோபர் & என் தம்பி - மருத்துவ கலாநிதி. ஹிலறி ஜெயறஞ்சன். இதற்கு மேல்... மருமக்கள், பேரப் பிள்ளைகள், அவர்களின் மனைவிமார் அனைவரும் நியூஸிலாந்தில் வசிக்கிறோம்.

 

ஒரு நட்பின் ஃபேஸ்புக் சுவரில் இடுகையொன்று பார்த்தேன். அவரது மகன் - என் மாணவர் அவர் - காலமான முதலாம் ஆண்டு நிறைவினைக் குறித்த ஞாபகார்த்த இடுகை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்காக அவர் தெரிந்திருந்த வார்த்தைகள் சற்று வித்தியாசமானவை; பிடித்திருந்தது. புதுப் பிறப்பின் முதலாண்டு நிறைவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மம்மியின் புதுப் பிறப்பின் முதல் ஆண்டு நிறைவு இன்று. தொல்லைகளிலிருந்து விடுபட்டு தேவைகள், சேவைகள் என்று எதுவுமில்லாத புதிய வாழ்க்கைக்குள் சென்ற முதலாம் ஆண்டு நிறைவு. நம்பவே இயலவில்லை. காலம் எத்தனை வேகமாக ஓடுகிறது!

எனக்கு நினைவு தெரிந்து 'மம்மி' என்றுதான் அழைத்து வந்தேன் அவரை. என் மூத்தவர் பேச ஆரம்பித்த வயதில் 'அம்மம்மா' என்று அழைக்க ஆரம்பித்து சட்டென்று அம்மாவாகச் சுருக்கி விட்டார். அதன் பின் வீட்டில் மம்மி நான், அம்மா - என் அம்மா தான் என்று ஆகிவிட்டது. அறுசுவைக்கு வர ஆரம்பித்த பின், 'செபா' என்று கூப்பிடுவேன். மறுப்பு வந்ததில்லை; பிடித்து ஏற்றுக் கொண்டார்.

'செபா' என்பது தன் தாய் செபமாலை, தந்தை செபஸ்தியான்பிள்ளை இருவரது பெயர்ச் சுருக்கமாக, அவர்கள் நினைவாக இருக்கும் என்று தெரிந்துகொண்டதாகச் சொல்லுவார்.

'மம்மி' என்று தாயை அழைக்கும் பழக்கத்தைப் பற்றி பலர் கிண்டலாக இணையத்தில் இடுகைகளைப் பதிவிட்டிருக்கிறார்கள். காணும் போது மெல்லிதாக ஒரு புன்னகை வரும். 'மம்மி' என்பதால் தமிழ் சாகப் போவதில்லை. 'அம்மா' என்கிற ஓர் வார்த்தை மட்டும் தமிழ் வளரப் போதாது. ஈடுபாடு வேண்டும்; பேச்சானாலும் எழுத்தானாலும், செய்வன திருந்தச் செய்ய முயற்சி செய்ய வேண்டும். என் முதலாவது தமிழ் ஆசிரியை மம்மிதான். என் முதல் ஆங்கில ஆசானும் அவர்தான். சிங்களமொழி அடிப்படை சொல்லிக் கொடுத்ததும் அவரேதான். அதனால் தானோ என்னவோ என் கையெழுத்து மூன்று மொழிகளிலும் அவருடையவற்றை அச்செடுத்தாற்போல் இருக்கும்.

எனக்குக் கைவேலையில் ஈடுபாடு வரக் காரணமாயிருந்தவர் முதலில் மம்மி, அதன் பிறகுதான் டடா. அறுசுவையில் என் குறிப்பு வெளியாகி இருந்தால் முதன்முதலில் எனக்கு மம்மிதான் தெரியப்படுத்துவார். பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவார்.

அவரது வாழ்க்கையைப் பற்றிப் பெரிதாக அறிந்துகொள்ளத் தவறிவிட்டேனென்று தோன்றுகிறது. விசாரிப்பதற்கு... விடயம் தெரிந்தவர்கள் உயிரோடு இல்லை அல்லது நான் கேட்பது தொல்லையாக இருக்கும் என்கிற வயதில் இருக்கிறார்கள்.

என்னிடம் ஒரு நாட்காட்டி இருகிறது. ஜிஃப் எம்போரியம் - பெயரைக் கேட்டு மதிப்பிட முடியாத இடம். பல கடைகளிலுமிருந்து விற்பனை ஆகாமல் தங்கிவிட்ட பொருட்கள் இங்கு விற்பனைக்கு வந்திருக்கும். தரமானவையாக இருக்கும்; விலையும் மலிவாக இருக்கும். எங்கும் கிடைக்காத பொருட்களும் இங்கு கிடைக்கும். அங்கேதான் இந்த நாட்காட்டியை வாங்கினேன். பிறகு மம்மிக்கும் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். இப்போதுதான் எல்லாமே என் உடைமைகள் ஆகிவிட்டனவே! இரண்டு நாட்காட்டிகளையும் ஒன்றாகவே வைத்திருக்கிறேன்.

மம்மி மீளாத் துயிலிலாழ்ந்த சில நாட்கள் கழித்து, அவரது நட்புகள் சிலருக்கு இழப்பைத் தெரிவிக்க விரும்பி தொலைபேசி எண்களைத் தேடிக்கொண்டிருந்தேன். நட்புகள் - எண்கள் எங்களுக்குத் தெரியாது. மம்மிக்கு அபார ஞாபகச்சக்தி. பிறந்தநாட்கள், தொலைபேசி எண்கள் எல்லாம் மூளை மடிப்புகளில் பதிவாகியிருந்த காரணத்தால் எங்கும் குறித்து வைத்திருக்கவில்லை அவர். சிலருக்கு இன்றுவரை என்னால் செய்தியைத் தெரிவிக்க இயலவில்லை.

ம்... தொலைபேசி எண்களைத் தேடினேன் என்றேனல்லவா! அப்போது அந்த நாட்காட்டி என் கண்ணில் பட்டது. (மம்மி குளிரூட்டிய அறையில் மீளாத்துயிலிலிருந்தார் அப்போது.) சில தேதிகளைப் பென்சிலால் குறித்துவைத்திருந்தார். எழுத்துக்களில் நடுக்கம் தெரிந்தது. தன் ஞாபகசக்தி குறைகிறது என்று தோன்றியிருக்க வேண்டும். குறித்து வைக்க ஆரம்பித்திருப்பார்.

ஆனால் பென்சிலில் ஏன்! ஏன் பேனாவால் எழுதவில்ல!
நிச்சயமில்லாதது போல் தோன்றிற்றோ!

பின்னாலிருந்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி அந்தந்த மாதங்களுக்குரிய குறிப்புகளை ஒவ்வொரு தேதியாகப் படித்துக் கொண்டே வந்தேன். திடீரென்று... திகைத்தேன்! அதிர்ச்சியில் ஒரு நொடி சிந்தனை உறைந்துபோயிற்று.

அக்டோபர் 18 - Amma's Death என்றிருந்தது.

எப்படி!
நான் எழுதவில்லை. வீட்டில் எழுதுவதற்கு யாரும் இல்லை.
எப்படி! எப்படி அதற்குள்!

சிறிது நேரம் கழித்து ஊகிக்க முடிந்தது. அன்று அவரது அம்மாவின் நினைவுதினமாக இருந்திருக்க வேண்டும்.

ஒரே தேதியில் இவரும்!!!
தேர்வு செய்து போனாரா!

இன்னும் நினைவு இருக்கிறது அந்த நாள். சென்ற அக்டோபர் 18 - புதன்கிழமை.

அப்போது புதன் எனக்கு வேலையில்லாத நாள்; நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்துவந்தேன். புதனன்று பாடசாலையில் பாடகர் குழுவிற்கு (ஆசிரியர்கள் குழு இது) பயிற்சி இருக்கும். வித்தியாசமான ஒரு விடயத்தைக் கற்கிறேன் என்று ஆரம்பித்திருந்தேன். என் துரதிஷ்டம், வகுப்புகள் புதன் பாடசாலை முடிந்தபின் நடப்பதாக முடிவானது.

அன்று ஆறாவது வகுப்பு. பன்னிரண்டு மணிக்குக் கிளம்பி மம்மி வசித்து வந்த எலிசபெத் நொக்ஸ் ஹோம் & ஹொஸ்பிட்டல் சென்றேன். முதலில் தாதியிடம் சென்று பேசிவிட்டு அறைக்குப் போனேன்.

கட்டிலில் அமர்ந்திருந்தார் மம்மி. அது தலைப் பக்கமோ காற்பக்கமோ அல்லது முழுவதாக மேலும் கீழுமாகவோ உயர்த்தி இறக்கக் கூடிய மருத்துவமனைக்குரிய கட்டில். அவசரத்திற்கு அழைக்கவென்று மணியொன்றும் இருக்கும். தலைமாட்டை உயர்த்தி வைத்திருந்தார்கள். முழுகி, கூந்தல் உலர்த்தி உயர்த்திக் கொண்டை போட்டிருந்தார். எண்பத்தொன்றாகியும் நரைக்காத கருங்கூந்தல். மடியில் கடதாசிகள், பேனா, கண்ணாடிக் கூடு.

அன்றுதான் முதன்முதலாக படுக்கையில் காலைக்கடன் கழிக்க உதவி தேவையாக இருந்திருக்கிறது. முதல் நாள் விழுந்திருந்தார். கால்கள் உதவ மறுத்திருக்க வேண்டும். என்னிடம் தன் கண்ணைப் பரிசோதிப்பதற்கு ஏற்பாடு செய்யக் கோரினார்; இரண்டு சால்வைகளை அருகே எடுத்து வைக்கக் கேட்டார்; காலணிகளை மாற்றி புதியவற்றை வெளியே வைத்தேன். எதுவும் சுருக்கமாக பேச்சாக இருக்கவில்லை. நன்றாக வழமையை விடத் தெளிந்த குரலில் பிசிறின்றிப் பேசினார். "நித்திரை நித்திரையா வருது மகள்," என்றார். "நல்லதுதான், நல்லா நித்திரை கொள்ளுங்க. நாளைக்கு வாறன், கதைப்பம்," என்றேன். சொல்லிக் கொண்டு கிளம்பினேன்.

பாடசாலைக்குப் போனேன்; ஆட்கள் குறைவு என்பதால் பயிற்சி செட்டென்று முடிந்துவிட்டது. வீட்டிற்குப் போய் தோட்டத்தில் வேலையாக இருந்த க்றிஸ்ஸிடம், "மம்மி இண்டைக்கு நல்லா இருக்கிறா," என்று சொல்லி விட்டு உள்ளே நுழைய, தொலைபேசி அழைத்தது. "We think you should come now Imma. Anthonia may have passed. We are waiting for the doctor to confirm."

உறக்கத்திலேயே போய்விட வேண்டும் என்கிற அவர் விருப்பம் நிறைவேறிற்று. எனக்குப் பெரிய அதிர்ச்சிதான் ஆனால் அந்த ஆரம்ப நாட்களில் அவரது நட்புகளை ஆறுதற்படுத்தும் பொறுப்பு எனக்கு இருந்தது. என்னைப் பற்றி நினைக்கவோ என் சோகத்தைக் கொண்டாடவோ எனக்கு நேரமிருக்கவில்லை.

ஒரு தடவை மம்மி சொன்னார், "சாகிற மாடு இருக்கிற மாட்டுக்கு வைக்கோலும் தண்ணியும் சேர்த்து வைச்சிட்டுச் சாகிறதில்லை மகள்," என்று. இன்று நினைத்துப் பார்க்கும் போது அதற்குப் பல அர்த்தங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தில் - வேண்டா
நமக்குமது வழியே நாம் போமளவும்
எமக்கென்னென்றிட்டுண்டிரும்.

இதையும் சொல்லிக் கொடுத்தவர்... 'மம்மி' தான். :-)

5
Average: 5 (2 votes)

உற்சாகமான பெண்களாவோம்

ரெம்பக்காலமாகவே பெண்களுக்கு உற்சாகமூட்டும் சிறு சிறு உண்மை
சம்பவங்களை பதிவு செய்ய ஆசை.என் நேரம் ஒத்துழைத்ததால் இன்று வந்திருக்கிறேன்.

வழக்கம் போல வெளியே போயிருந்தோம்.பார்க்கிங்க் இல் என் கணவர் யாரோ தெரிந்த பையனை கண்டு பேசினார் .
என் கணவர் : போன வாரம் ட்ரைவிங் எக்ஸாம் க்கு போனியே லைசன்ஸ் எடுத்துவிட்டாயா???
அந்த பையன் :போய் பெயிலாகீட்டேண்ணா
என் ஹஸ் : யார் இன்ஸ்பெக்டர் ??? எத்தனை பேர் எக்ஸாம் செய்தனீங்கள்.
பையன். மொத்தம் ஆறுபேர் 4 ஆண்கள் 2 பெண்கள் எல்லாருமே வேறு வேறு நாட்டவர்கள் .5 பேர் ஃபெயில் ஒரு தமிழ் அக்கா வந்தவா அவா மட்டும்தான் பாஸ்
என் ஹஸ்: ம்ம் நம்மட தமிழ் பொண்ணுங்கள் ஃபெயில் பண்றது குறைவுதான் ரெம்ப பேவக்ட் ட்ரைவிங்டா ? இட்ஸ் ஓக்கே நீ சட்டெண்டு அடுத்த தடவை போய் எடுத்துடு .
முற்றும்
இப்போ இவர்கள் பேசிக்கொண்டது வெறும் கார் லைசன்ஸ் என்று நீங்கள் நினைத்தால் தவறு .அதெல்லாம் நம் தமிழ் பெண்களுக்கு ஜிஜுப்பி. நம் பெண்கள் விரும்பி எடுக்கும் லைசன்ஸ் az license எனப்படும்
இந்த படத்தில் இருக்கும் ட்ரக் ற்கு உரியது.அயல் நாடுகளுக்கு போய் வரலாம் வாரத்திற்கு 2 தடவை வேலைசெய்தால் கூட ஒரு டாக்டர் சம்பாதிக்கும் அளவு சம்பாதிக்கலாம் .மீதி நாட்கள் குடும்பத்துடன் செலவு செய்யலாம்.

அடுத்து ஸ்கூல் பஸ் ஓட்டுவது . பார்ட் டைம் ஜொப்.இப்படி நிறைய ஆண்கள் செய்யும் வேலைகள் .நம் பெண்கள் செய்வது மட்டுமன்றி கண்டபடி தவறிழைக்காதவர்கள் என்ற நல்ல பெயரும் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
நாடு கடந்தும் அரசியல் , போலீஸ் என்று எதிலும் இருக்கிறார்கள்.
இந்த முன்னேற்றத்திற்கு இடம்கொடுத்தது இந்த நாடும் ,இந்த நாடு பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையும்தான் என்று நீங்கள் நினைத்தால் தவறு.

இங்கும் பெண்கள்மீதான அனைத்து அத்துமீறல்களும் இருக்கவே செய்கிறது.

இதே போன்ற அதீத முன்னேற்றங்களை போர்க்கால சூழ்நிலைகளிலும் நம் ஏழை நாட்டிலும் பார்த்தே வழர்ந்திருக்கிறேன்.

ஏன் அமெரிக்கா மாப்பிளை மாப்பிளை என்பார்கள் .ஆனால் அமெரிக்காவில் உயர்பதவிகளில் திறமையாக செயல்படுவதில் இந்தியப்பெண்களே அதிகமாக இருக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

குடும்ப வாழ்க்கை என்று வந்து விட்டால் நம் தமிழ் பெண்களுக்கு எங்கிருந்தாலும் பொறுப்புக்களும் வாழ்வியல் முறைகளும் ஒன்றுதான்.சில நலன்கள் இருந்தாலும் இடையூறுகளும் அதிகம்தான் .
குழந்தைகள் பராமரிப்பில் எந்த உதவியும் கிடையாது.உடம்பு முடியாவிட்டாலும் வேலைக்காரி என்ற பேச்சுக்கு இடமில்லை.பணக்கஷ்டம் நிறையவே வந்து போகும்.

அப்படி உதவிக்கு யாரும் இருந்தாலும் அது பெற்றோராகவே இருப்பினும் சிரமம் கொடுக்காமல் பிரசவத்திற்கும் உதவி பெறாமல் சமாளிக்கும் மன உடல் தைரியம் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள்.

ஊரில் நிறைய படித்திருப்பார்கள் .ஆனால் அந்த யூனிவேர்சிட்டியில் படித்தேன் ,இந்த யூனிவேர்சிட்டியில் பி எச் டி முடித்தேன் ,மன்னார் குடியில் கேட்டாக ,மாயவரத்திலும் கேட்டாக என்றும்
நான் படித்தேன் படித்தேன் .என் பாட்டி படித்தார் ,தாத்தா படித்தார் ,எஞ்சினியரிங்க் முடித்தேன் என்றெல்லாம் ஃபேஸ்புக் ல் ஸ்டேட்டஸ் ல் தங்களை நிலைநாட்டிவிட்டு
ஆணியும் அசைக்காமல் பழைய புராணத்தையே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார்கள் .

எந்த சலனமும் இல்லாமல் கோப்பிக்கடைக்கு வேலைக்கு போவார்கள் .கடின உழைப்பாலும் நேரம் தவறாமையாலும் சிறிது காலத்திலேயே மனேஜர் பதவியை அடைகிறார்கள் மிகச்சில வருடங்களிலேயே அந்த கோப்பிக்கடையை
தாமே எடுத்து நடத்த தொடங்கி விடுகிறார்கள் அல்லது தனி பிஸ்னஸ் ஆரம்பித்து விடுகிறார்கள்.

இங்குள்ள நிறைய தமிழ் தொழிலதிபர்கள் பெண்கள்தான் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

ஆகவே பெண்கள் அங்கீகாரம் வேண்டும் நாங்களும் ஆதிக்கம் செலுத்துவோம் என்று நினைத்தால் தகர்க்க வேண்டிய முதல்படி பொருளாதார சார்பு.
யாரும் நம்மை விலங்கிட்டு கட்டி இழுத்து வழிநடத்தவில்லை.
நம்பெற்றோர் ,நம் கணவன்,நம் சமூகம்தான் நம்மைச்சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது.வேற்றுக்கிரகவாசிகளால் அல்ல.
எனக்கு சொத்தும் வேண்டாம் சீரும் வேண்டாம் தொழில் கல்வி கொடு என்று போராடி பெற்றுக்கொண்டோமானால் நம்மை யார்தான் அசைக்க முடியும்.

நாம் வருமானத்தோடு வாழ்ந்து அந்த வருமானத்தில் நம் பெற்றோர் சகோதரிகளுக்கு எதையாவது செய்வதில் கிடைக்கும் சுகம் எதிலும் கிடைக்காது .அதே போல அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில்
வலுவிழந்தவர்களாக வேடிக்கை பார்ப்பது மரண வலி என்பதையும் மறுக்க முடியாது.

ஆகவே தடைகள் உடைத்தால்தான் நாம் தலைதூக்க முடியும் என ஆண்களையும் ,மாமியார்களையும் ,சமூகத்தையும் சாடுவதை விடுத்து தடைகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் நான் அருகில் இன்னொரு பாதையை
உருவாக்குகிறேன் என மீறிச்செல்லுங்கள்.

ஆண்களால் பெண்கள் அடையும் சிரமங்களையும் சமத்துவமின்மையையும் சொல்லி சொல்லி மாளுவதை எங்கள் பெண் பிள்ளைகளும் பழகிவிடக்கூடாது.ஒட்டு மொத்த சமூகத்தையும் திருத்தினால்தான் என் வாழ்வு உய்யும் என்பதற்கில்லை.

குறைகள் விளம்புவதை விட்டு தனிப்பட்ட உயர்வை விரும்புவோம் .அதையே அடுத்த தலைமுறைக்கும் விட்டுச்செல்வோம். வேண்டும் வேண்டும் எனும் மன்றாட்டங்கள் வேண்டாம் .பறித்தே எடுப்போம்
.

5
Average: 4.6 (13 votes)

யானைக் கதைகள்

சின்னவர்கள் ஒரு யானைப் பாடல் பாடுவார்கள். அது... 'கோவில் யானை வருகுது, குழந்தைகளே வாருங்கள்.' என்று ஆரம்பிக்கும் இசையோடு அசைந்து பாடும் பாடல். மீதி வரிகளை மறந்துவிட்டேன் யாருக்காவது நினைவிருந்தால் சொல்லுங்கள். யானை தலையை ஆட்டி வருவது போலவும் ஒரு வரி வரும் அந்தப் பாட்டில்.

என் மூத்தவர் அதை எப்படியோ 'கோல்தானை' என்று மனதில் இருத்தியிருந்தார். பேச்சு ஒழுங்காக வராத காலத்திலும் குறும்பு அதிகம். இரண்டாவது சின்னவர் பிறந்த சமயம் நாட்டிலும் என் வீட்டிலும் கொஞ்சம் இடிபாடான காலம். அதோடு 3 மாதம் பிரசவ விடுமுறை + ஒரு நிர்ப்பந்தத்தில் அசைவம் சாப்பிட காலம் - குட்டி குஷ்புவாக இருந்தேன். ஒருநாள் பாடசாலை விட்டு வீடு வந்து படலையைத் திறந்தேன். அது கிரீச்சிட்டுத் திறக்க உள்ளே இருந்து செபா குரல் கேட்டது, 'யார் மகன் கேட்ல!' அதற்கு என் மூத்தவர் சொன்ன பதில்... "கோல்தானை வருகுது," :-)

பிறகு எப்படியோ elephant என்னும் சொல்லைக் கற்றுக் கொண்டார். ஒரு நாள் முற்றத்தில் விளையாடிவர் அலறியடித்து ஓடிவந்தார். "வேலியில எலிஃபன்ட் நிக்குது," சிரித்தோம். கோபம் வந்தது சின்னவருக்கு. "அது தலையைத் தலையை ஆட்டுது," என்று ஆட்டிக் காட்டி, விடாப்பிடியாக இழுத்துப் போய்க் காட்டினார். அவர் காட்டிய இடத்தில் துருப்பிடித்த தகர வேலியில் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தது ஒரு கலட்டி ஓணான். (கலட்டி ஓணான் என்றால் என்னவென்று கேட்கவென்று யாருக்காவது தோன்றிவிடுமோ! அதை அப்படித்தான் சொல்லுவோம். காரணம்... அதன் விலங்கியற் பெயரைத் தெரிந்துகொண்ட பின் புரிந்தது. Calotes என்று கூகுள் செய்து பாருங்கள்.) எலிஃபன்ட், கொஞ்சம் 'எலி' போல் இருக்கும் என்று மகன் உருவகப்படுத்தி வைத்திருந்திருப்பார் போல. :-)

இப்போ சின்னதாக ஒரு செதுக்கல் விளையாட்டு....

தேவையாக இருந்தவை -
முற்றிய குண்டு காரட்
கூரான மெல்லிய கத்தி
கொஞ்சம் நேரம்
கொஞ்சம் தனிமை
கொஞ்சம் பொறுமை

காரட்டின் மொத்தத்தைப் பொறுத்து நீளத்தைக் கணித்துக் கொண்டு அடிப் பகுதியியிலிருந்து ஒரு துண்டு வெட்டிக் கொண்டேன்.

பிறகு கண்ணை மூடி யானைப் பொம்மை ஒன்றின் உருவத்தை நினைவுக்குக் கொண்டுவந்து செதுக்க ஆரம்பித்தேன். என் தனிமைக்கு எப்போழுதும் மதியம் 3 மணியோடு விடுமுறை. நேரம் மூன்றைச் சமீபிக்க, செதுக்கியது போதும் என்று இலைகளைப் பரப்பி விளையாடத் தோன்றிற்று. எப்போதாவது உதவும் என்று புகைப்படமும் எடுத்து வைத்தாயிற்று. பிறகு!! ட்ரிக்ஸியும் ட்ரேஸியுமாக யானையையும் மிச்சம் மீதியையும் உண்டு பசியாறினர். :-)

5
Average: 4.8 (6 votes)

வாழ்வும் வளமும்

எல்லோருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் நின்மதியாகவும் வாழவே ஆசை. இருப்பினும் பலருக்கு அது வெகு தூரமாகவே இருக்கிறது.
சிலருக்கு பிரச்சனைகள், துன்பங்களுக்குரிய நியாயமான காரணங்கள் இருந்தாலும் பலர் தாமே சேகரித்து மீளத் தெரியாமல் சிக்கி உழல்கிறார்கள்.

அதற்கான பல காரணங்களில் ஒன்று மகிழச்சியும் நிம்மதியும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நமக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பதும்,
நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்மை சார்ந்தவர்கள் கெடுக்கிறார்கள் என நினைப்பதும் ஒரு பிரதான காரணம்.

இந்த மாயையில் சுலபமாக மாட்டிக்கொண்டு தங்கள் நிம்மதியை தாமே கெடுத்துக்கொள்பவர்கள் அதிகமாக பெண்களாகவே இருக்கிறார்கள்.

இவர்களது தலையாய பிரச்சனைகள் என்னவென்று பார்த்தால் மாமியார் சரியில்லை, என் குடும்பத்தை மதிப்பதில்லை, நான் எவ்வளவுதான் குடும்பத்திற்காக உழைத்தாலும் எனக்கு தேவையான மதிப்பு அளிப்பதில்லை,
தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கிறார்கள், என்னை குற்றம் சொல்கிறார்கள், எனக்கு சுதந்திரமில்லை, உரிமையில்லை, பெண்களை இந்த சமூகம் ஊதாசீனப்படுத்துகிறது, வீட்டிற்கு தலைமை வகிக்கும் ஆண்கள் நம்மை ஏளனம் செய்கிறார்கள், வீட்டு வேலைகள் குழந்தைகளை பராமரிப்பதில் எனக்கு யாரும் ஒத்தாசை செய்வதில்லை ஆனால் குறை சொல்வதற்கு முன்னிற்கு நிற்கிறார்கள், என் உடல் நிலையையும் சோர்வையும் ஏறிட்டு பார்ப்பதில்லை என் ஆசைகளை நிராகரிக்கிறார்கள் இவைகள்தாம் நம்மில் அனேகமானவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.

ஆனால் இவை எல்லாம் நாம் முன்னெடுக்கும் செயல்களாலும், சிந்தனைகளாலுமே நமக்கு இது பிரச்சனைகளாக விஷ்வரூபம் எடுக்கிறது. குறிப்பாக நம் பெண்கள் அனேகர் இங்கு கூறப்பட்ட அனேகமான பிரச்சனைக்குள்
திக்குமுக்காடுவதற்கு மூல காரணம் பொருளாதார ரீதியிலும், இன்ன பிற தேவைகளிலும் சார்ந்து வாழுதல். இதிலிருந்து மீள ஆண்களுக்கு சரியாக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதல்ல. மிக மிக குறைந்த வருவாய் வீட்டில் இருந்த படியே கூட சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொழுது போக்காக சிறு கைத்தொழில் செய்வதில் எந்த தவறும் இல்லை. இவ்வளவு படித்து விட்டு இதை செய்வதா என்று எண்ணக்கூடாது. சரி அதற்கும் நம் சூழ்நிலை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வீட்டிற்கு செலவாகும் சில பொருட்களையோ காய்கறிகளையோ நாமே தயாரிப்பது மிகச்சிறந்த வழி. இதற்கு கணவர் அதிகம் சம்பாதிக்க அல்லது பிஸ்னஸ் ல் இருக்கும் போது நான் ஏன் இதையெல்லாம் செய்து சிரமப்பட வேண்டும் என்று நினைக்க கூடாது. தனித்து செய்யக்கூடிய
சில பயணங்கள் கொள்வனவுகள் வெளிவேலைகளை நாமே செய்து கொள்வது நமக்கும் குடும்பத்திற்கும் பக்க பலம்.

அடுத்து நம் பாதிப் பிரச்சனைகளை தூக்கி முழுங்கி நம்மை அறியாமல் நம் பிரச்சனைகளை நீக்கும் ஒரு அருமருந்து பொழுது போக்கு. ஆம் சிலர் அவர்கள் இப்படி சொல்லி விட்டார்கள் இவர்கள் இப்பிடி சொன்னார்கள்
ஒரே கவலையாக இருக்கிறது என்னால் மறக்க முடியவில்லை என்பார்கள். மறக்க வேண்டுமா எதுவுமே வேண்டாம் ஒரு தக்காளியை நட்டு வையுங்கள் அது உங்கள் சிந்தனையை ஆக்கிரமிக்கும். அதன் வளர்ச்சி உங்களோடு பேசும். அழகான ஒரு பூ செய்து மேசையில் வைத்துப்பாருங்கள் உங்கள் பார்வை அடிக்கடி அதில் மோதும். சமையலில் ஏதாவது மாற்றம் செய்து அழகு படுத்தி பாருங்கள் யாரும் பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை உங்களுக்கே ஒரு பெருமிதம் தோன்றும். ஆகவே நல்ல பொழுதுபோக்குகளை உங்கள் சூழ்னிலைக்கு ஏற்றால்போல் தேர்ந்தெடுங்கள் அது உங்கள் கவலைகளை வாங்கிக்கொள்ளும்.

எல்லாவற்றையும் விட நம் சிறு சிறு பிரச்சனைகளையும் பெரிதாக நம்மில் திணிக்க வைக்கும் ஒரு விடயம் நம் புலம்பல்கள் என்பது பலருக்கு தெரியாது. அதாவது கவலைகள் பகிர்ந்து கொள்வதால் ஆறுதல் அடைவீர்கள் என்று
சொல்லப்படுவது நோய், மரணங்கள், இழப்புகள் என்பவற்றைத்தான் உங்கள் குடும்பத்தில் நாளாந்தம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளோ குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு ஏற்படும் இடையூறுகளோ அல்ல.

இதையெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவர்களிடம் புலம்புகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த பிரச்சனைகளில் நீங்கள் மூழ்கிப்போய் நிம்மதி இழப்பீர்கள். அதாவது உங்களை அறியாமலே மறக்க வேண்டியதையும்
தூக்கி போட்டு கடந்து போக வேண்டியதையும் அநியாயத்திற்கு மீள்பதிவு செய்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம். அவ்வாறு உங்கள் சகாக்களுடன் பேசும்போது அவர்களும் அவ்வாறுதான் பேசப் போகிறார்கள். அப்படியாயின் உங்கள் சக நண்பி சொல்கிறார் என் கணவருக்கு எப்போதும் சாப்பாட்டில் குறை சொல்வதே வேலை. எரிச்சலாக வருகிறது என்று கூறுவாராயின் நீங்களும் அதே தலைப்பில் நிச்சயம் இணைந்து கொள்வீர்கள். இவ்வாறான பேச்சுக்கள் ஆரோக்கியம் அற்றவை. உங்கள் கணவர் காது பட அவரைப்பற்றி நல்லதாக அடுத்தவர்களிடம் சொல்லிப்பாருங்கள். ஏன் உங்கள் கணவரை நேரடியாகவே பாராட்டுங்கள் என்ன என்ன நல்ல குணங்கள் உள்ளதாக சொல்கிறீர்களோ அந்த குணங்கள் இல்லாவிட்டாலும் ஏற்படுத்திக்கொள்வார்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய நின்மதியை கொடுக்கும். குடும்ப உறுப்பினர் யார் குறையையுமே சொல்லிக்காட்டாதீர்கள்.

நம்மிலும் பல குற்றம் குறைகள் இருக்கவே இருக்கும் பதிலுக்கு நம்மை நின்மதி இழக்கச்செய்து விடுவார்கள்.பொது விடயங்கள் பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள் பற்றிய பேச்சுக்கள் கேள்விகள் சுவாரஸ்யமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

செய்யும் ஒவ்வொரு வேலைகளையும் விரும்பி ரசித்து செய்து விட்டு நீங்களே உங்களை பாராட்டிக்கொள்ளுங்கள். யாரும் நமக்கு உதவ வேண்டும் எதையாவது வழங்க வேண்டும் ஒத்தாசை செய்தே ஆக வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்காமல் முடிந்தளவு நாமே பொறுப்பாக இருக்கும்போது சிரமப்பட்டாலும் நாளடைவில் அதில் மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும்.

கிடைப்பதை மாற்ற முடியாததை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். ஆண்கள் திருமணத்தின் பின்னும் நண்பர்களை இழப்பதில்லை நாம் மட்டும் இழக்க வேண்டி இருக்கிறதே என்று ஆண் வர்க்கத்தை சாடாதீர்கள்.
அதைவிட சந்தோசமாக குழந்தைகளுடன் கூடி மகிழும் பாக்கியத்தை கடவுள் பெண்களுக்கே அதிகம் தந்திருக்கிறான் என்று மகிழுங்கள். ஆண்கள் திருமணத்தின் பின் ஊரையும் குடும்பத்தையும் வளர்ந்த வீட்டையும்
பிரிவதில்லை நம்மை மட்டும் வேரோடு பெயர்க்கிறார்கள் என்று வருந்தக்கூடாது. நமக்கு மாறுபட்ட வாழ்வு மாறுபட்ட இடங்கள் மாறுபட்ட மனிதர்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று
ஆனந்தப்படுங்கள். கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால் அங்கு செல்வதை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் இந்த பிரிவையும் ஏற்றுகொள்ள முடியும். நிறைய ஆண்கள் திருமணத்திற்கு
முன்பே பொருளாதார நிமித்தம் பிரிகிறார்கள்.

இவை எல்லாமே நம்மை நாமே நிம்மதியாக வைக்க உதவும். நம்மைப்பற்றி நாமே அக்கறை கொள்ளாமல் மறைமுக சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அடுத்தவர்களை சாடுவது தவறு. பெண்களுக்கான உரிமை
பெண்களிடம்தான் உள்ளது. மீறி நடக்கும் தவறுகளும் கேடுகளும் அசம்பாவிதங்களும் தவறானவர்களால் நடக்கிறது. ஆண்கள் எல்லோரும் ஆதிக்க வாதிகள் கிடையாது. அப்பாவின் தியாகங்களை போற்றியும் கணவனை
குறை சொல்லியும் வாழ்ந்துவிட்டு திரும்பிப்பார்த்தால் கால ஓட்டத்தில் நம் பிள்ளைகள் தங்கள் அப்பாவை புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்போது உணர்வதை விட இப்போதே உணர்ந்தால் வாழ்வை அழகாக வாழ்ந்து விடலாம்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

5
Average: 5 (12 votes)

வீட்ல விசேஷமா... கேட்கலாமா...

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தம்பதிகள் எதிர் கொள்ளும் கேள்வி "விஷேஷம் ஏதும் உண்டா?". நம் சமூகத்தில் இது மிகச்சாதாரணமாக எல்லோரும் கேட்கும் கேள்வி. இதனால் அடுத்தவரின் மனம் புண்படுமே என்று நாம் நினைப்பது இல்லை. இப்படி கேட்பது ஒன்றும் தவறில்லை, எல்லோரும் கேட்பதுதானே என்றே எண்ணுகிறோம்.

நிச்சயம் இந்த கேள்விகள் அந்த தம்பதிகளின் குறிப்பாக பெண்ணின் மனதில் பதட்டம், பயம் போன்ற குழப்பங்களை ஏற்படுத்தும். இந்த குழப்பமான பதட்டமான மனநிலை கூட கருத்தரிப்பை பாதிக்கும். நம் அளவிலாவது இப்படிப் பட்ட கேள்விகளை கேட்பதை தவிர்த்து முதல் அடியை எடுத்து வைக்கலாமே.

உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியுமா என்பது பழமொழி. கேட்கறவங்க கேட்கத்தான் செய்வாங்க நம்ப மனசை நாமதான் பத்திரமாக பார்த்துக்கணும். சொல்றது ஈசி அனுபவிக்கும் போதும்தானே வலி தெரியும் அப்படீன்னு நினைக்கலாம். நிச்சயம் கஷ்டம்தான். ஆனால் நம்மால் முடியும்.

என் சந்தோஷத்துக்கும் என் கவலைக்கும் நான் மட்டுமே பொறுப்பு அப்படீங்கறதை நாம திடமாக நம் மனசுகிட்ட சொல்லிடணும். நம்மை காயப்படுத்தும் வார்த்தையை மூளைக்கு கொண்டே போயிட கூடாது. கேட்க ஈசியாதான் இருக்கு ஆனால் ப்ராக்டிகலா எப்படி சாத்தியமாகும் மனசு வலிக்குமே அப்படீன்னு நினைக்கலாம். வலிக்கும்தான். ஆனால் ஒரு நிமிடம் அந்த வலியால் ஏதாவது பயன் இருக்கிறதா என்று யோசித்தால், நிச்சயம் எந்த பயனும் இல்லை. மாறாக அந்த வலி நம் மனதையும் உடலையும்தான் பாதிக்கும்.

கருத்தரிப்புக்கு ஆரோக்கியமான உடல்நிலை எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான மனநிலையும் முக்கியம்.

நம்ப மனசை சந்தோஷமா வச்சுக்க சில டிப்ஸ்

கருத்தரிக்க தாமதம் ஆவதற்கோ, குழந்தயின்மைக்கோ, அல்லது உடல்நிலை குறைபாடுகளுக்கோ நாம் எந்த விதத்திலும் பொறுப்பில்லை. நாம் வேண்டுமென்றே இந்த குறைகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் குற்ற உணர்ச்சியும் தேவையில்லை. இதை நம் மனது நம்ப வேண்டும்.

குறை சொல்பவர்களும், நக்கலடிப்பவர்களும் நமக்காக துரும்பைக் கூட கிள்ளிப் போட போவதில்லை. அவர்கள் பேச்செல்லாம் பொருட்டே இல்லை.

குழந்தையின்மை என்பது பாவமோ குற்றமோ இல்லவே இல்லை.
இது முழுக்க முழுக்க தம்பதிகளுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயம். இதில் கணவன் மனைவியிடையேயான புரிதலும், முடிவும் மட்டுமே முக்கியம். குடும்பத்தினர் புரிந்து கொண்டால் சந்தோஷம். புரிய வைக்க முயற்சிக்கலாம். புரிந்து கொள்ளவில்லையா டோன்ட் கேர்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து வீணடிப்பதற்கு அல்ல!

நேர்மறை சிந்தனைகள் நம் வாழ்விற்கான அத்தனை சந்தோஷங்களையும் கொண்டு வரும்.

சொல்ல வந்ததை தெளிவாக. சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் என் அனுபவத்தில் இருந்து சொல்லியிருக்கிறேன். ஒருகாலத்தில் இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ளத் தெரியாமல் நானும் கலங்கி வேதனைப் பட்டிருக்கிறேன். எப்போது என் மனதிற்கு இது என் தவறோ குற்றமோ இல்லை என்பதை உணர்ந்தேனோ அன்று முதல் என் வேதனைகளும் மறைந்தது. இப்போது யார் எப்படி கேட்டாலும் ஆலோசனை சொல்கிறேன் என்று மூக்கை நுழைத்தாலும முன்போல் தலைகுனியாமல் தலைநிமிர்ந்து பதில் சொல்கிறேன். அளவுக்கு மீறி எரிச்சல் படுத்துபவர்களை உறுதியுடன் பதில் சொல்லி விலக்கியும் வைக்கிறேன். பெண்ணுக்கு உரிய குழந்தைக்கான ஏக்கம் அவ்வப்போது தலைதூக்கும்தான். ஆனால் ஏக்கம் எந்த விதத்திலும் எனக்கு உதவப் போவதில்லை என்பதையும் உணர்ந்திருப்பதால், அப்போதெல்லாம் என் மனதை எனக்குப் பிடித்த விஷயங்களில் திருப்புகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.

5
Average: 4.6 (8 votes)

அம்மாவும் நீயே, அக்காவும் நீயே!

இதே தலைப்பில் முன்பு ட்ரிக்ஸியையும் ட்ரேஸியையும் பற்றி எழுதியிருந்தேன். இப்போது வேறு விதமான கதையொன்று சொல்லவிருக்கிறேன்.

Good things come in small packages. :-) பொதி - 2 இது.

என் மூத்தவர் குழந்தையாக இருந்த சமயம் செபாவுடன் வெளியே எங்காவது செல்வதானால், அவர்தான் மகனைத் தூக்கிக்கொள்வார். என்னை விட அதிக நேரம் செபாவோடு செலவளித்த காரணத்தால் சின்னவர் மனதுக்கு, அவர் அம்மாவாகவும் சில சமயம் நான் போட்டியாளராகவும் தெரிந்தேன்.

தெருவில் நடக்கையில்... என்னைச் சின்னவரது அம்மாவாகப் பொருத்திப் பார்க்க இயலாதவர்கள் சம்பந்தமில்லாமல் ஐம்பது கடந்த செபாவிடம், அது அவர் குழந்தையா என்று கேட்டு வைக்கும் போது சிரிப்பாக இருக்கும். :-)

பாடசாலைக் கல்வி ஆரம்பிக்கும் காலம் வர, நான் கற்பித்த பாடசாலையிலேயே சேர்த்துவிட்டேன். என்னோடு அழைத்துச் செல்லலாம்; அவருக்குப் பாடசாலை முடியும் தருணம் செபா அல்லது என் தந்தையார் வந்து அழைத்துப் போக ஏதுவாக வீட்டிற்குச் சமீபத்தில் பாடசாலை இருந்தது.

ஒரு நாள் ஏதோ காரணத்தால் என்னோடு வீட்டுக்கு அழைத்துப் போக வேண்டிய நிலையில், எனக்கு வேலை முடியும் வரை பாடசாலையில் தங்க வைத்தேன். பொழுது போகாத சின்னவர் மாடி ஏறி, ஜன்னல் வழியே தண்ணீர்ப் போத்தலை வெளியே எறிந்து விட்டு தடதடவென்று இறங்கி வந்து எடுத்துப் போனார். மீண்டும் மீண்டும் இது தொடர, மெதுவே வேண்டாமென்று மறுத்துப் பார்த்தேன். அவருக்கும் பொழுது போக வேண்டுமே! நான் நான்காம் முறை என் மறுப்பைத் தெரிவிக்க, அருகே நின்றிருந்த சக ஆசிரியைக்குக் கோபம் வந்தது. "டீச்சர் சொல்லச் சொல்லக் கேளாமல் என்ன குழப்படி?" அதட்டலாக விழுந்த வார்த்தைகளைக் கேட்டு மிரண்டு என்னைப் பார்த்தார். "மம்..மீ..." என்று அழ ஆரம்பித்தார். ஆசிரியையின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே! :-) "உங்கட மகனா?" "சும்மா சொல்லாதைங்க," அவரால் நம்ப முடியவில்லை எனக்கு அத்தனை பெரிய குழந்தை இருந்ததை.

ஒரு ஆசிரியையின் மகளாக, இன்னொரு ஆசிரியையின் மருமகளாக அவர்களுக்குக் கீழே படிப்பதன் சிரமத்தை அனுபவித்திருந்த எனக்கு சின்னவர் வேறு பாடசாலைக்குப் போக ஆசைப்பட்டதும் தடுக்கத் தோன்றவில்லை. பாடசாலை மாற்றியாகிவிட்டது.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிற் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் சின்னவர். பின்னேர வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லும் சமயம் ஒரு 'பொலிஸ் செக் போஸ்ட்' தாண்டிப் போக வேண்டும். அங்கு அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். இரண்டு வார்த்தை சிங்களத்தில் பேசிவிட்டால் மனம் குளிர்ந்து போகும் அவர்களுக்கு. மொழி தெரிந்திருந்தது பல சந்தர்ப்பங்களில் வசதியாக இருந்திருக்கிறது.

ஒரு நாள் அங்கு நின்றிருந்த போலீஸ்காரத் தம்பி, (ஏற்கனவே என் மகனுக்குத் தோழராம் அவர்.) மகனிடம் கேட்கிறார், "அக்காத!" :-)

பாடசாலை மண்டபத்தில் நுழைந்தோம். எனக்கு வேலை முடிந்து வீட்டுற்குப் போய் அவசர அவசரமாக இருந்த வேலைகளை முடித்துக் கொண்டு சின்னவரை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தேன் - சட்டையில்.

கூட்டத்தின் இடையில் மாணவர்களது பயிற்சி வினாத்தாள்களைப் பெற்றோரிடம் கொடுத்து, எந்தப் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கவனித்துக் கொள்ளச் சொன்னார்கள். என் கைக்கு மகனது விடைத்தாள் வந்ததும் சட்டென்று அருகே இருந்த பெண் பறித்துக் கொண்டார்.

சரி, பார்த்துவிட்டுத் தரப் போகிறார் என்றால்... தவறுகளை என் மகனிடம் விமர்சித்து அப்படியே அடுத்து இருந்த இன்னொரு தாயோடு உரையாடி... தாள், ஆள் கடந்து போயிற்று.

அதிபர் மீண்டும் விடைத்தாள்களைச் சேகரிக்க ஆரம்பிக்க, யாரிடமோ இருந்த என் மகனுடைய விடைகளை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். மீண்டும் அதே பெண் - பறித்துக் கொண்டார், அதிபரிடம் நீட்டியவாறு, மகனிடம், "என்ன அலன்! அம்மாவைக் கூட்டிட்டு வரேல்லயோ!" என்றார். தான் கரிசனமாக இருக்கிறாராம், சின்னவரது விடைத்தாளை (தவறுகளை) இன்னொருவர் பார்வையில் படாமல் காப்பாற்றுகிறாராம். :-) அப்படியே தொடர்ந்து நான் பொறுப்பில்லாத அம்மாவாக இருக்கிறேனாம், படிக்கக் கூடிய பையனைக் கவனிக்காமல் என்ன வேலை! இப்படி நீளமாக ஆரம்பித்துக் கரிசனமாகப் புலம்பிக் கொண்டிருந்தார்.

அதிபருக்கு இன்னொரு ஆசிரியையாக என்னை நன்கு தெரியும். அதிபரிடமிருந்து மீண்டும் விடைத்தாள்களைப் பெற்றுக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். மீண்டும் அந்தப் பெண் ஆரம்பித்தார், "அம்மாவை வரச் சொல்லாமல் அக்காவை ஏன் கூட்டிவந்தனீங்கள்?" "இவருக்கு அக்காவே இல்லை," என்றேன் நான். "அன்ரி, இது மம்மி," என்றார் மகன். :-)

தெரிந்திருந்தால் புலம்பாமலிருந்திருக்கலாம் என்று நினைத்திருப்பார் அவர். :-)

சில சமயம் யோசிக்காமல் நாங்கள் சொல்பவை பூமராங் போல எம்மையே திரும்ப வந்து தாக்கி விடுகிறது. :-)

5
Average: 4.8 (4 votes)

மஞ்சப்பை

சில உறவுகள் இருக்கும்வரை அவர்களின் மதிப்பு தெரிவதில்லை.
உறவோ, நட்போ எதுவுமே..

நேற்று டிவியில் மஞ்சப்பை படம் போட்டாங்க. அதில் வரும் தாத்தாவை பார்த்ததும் என்னையும் அறியாமல் என் கண் கலங்கியது என் தாத்தாவை நினைத்து.

அதில் வரும் தாத்தாவை போலவே மிகவும் நேசமானவர். அம்மா, அப்பா இருந்தும் நாங்கள் தாத்தா, பாட்டியுடன் வளரும் சூழல், கருத்து தெரிந்தில் இருந்து அவர் கையை பிடித்தே இந்த உலகத்தை பார்த்தேன்.

நிச்சயம் ஒரு அம்மா, அப்பாவுடன் வளர்வதை விடவும் சிறப்பாகவே வளர்ந்தோம். இது வரை அவர்களை விட சிறந்தவர்கள் என யாரும் நான் நினைப்பதில்லை.

ஆனால் என் பள்ளி பருவத்தில் என் தாத்தா எங்களை விட்டு நிரந்தரமாக பிரிந்தார். அப்போது வருந்தியதைவிட இப்போது வருந்துகிறேன். அவருக்காக எதுவும் செய்ததில்லை என்று.

இருக்கும் போது யாருடைய அருமையும் தெரிவதில்லை. பிரிந்ததுக்கு அப்பறம் வருந்துவதில் ஒரு பயனும் இல்லை.miss my grand pa.நீங்க மிஸ் பண்றிங்களா உங்க தாத்தா,பாட்டி உறவுவை.

5
Average: 5 (3 votes)

யார் சார்ந்திருப்பது யாரை

சில வருடங்களுக்கு முன்னால், சென்னையில் ‘மங்கையர் மலர்’ குழுவினர் நடத்திய ஆண்டு விழாவில், அவர்கள் நடத்திய பட்டிமன்றத்தில் பங்கு பெற்றேன்.

இது இரண்டாவது முறை. இதற்கு முன்னால், மதுரையில் அவர்கள் நடத்திய விழாவில், திரு.கு.ஞானசம்பந்தம் அவர்கள் தலைமையில், ’ஜாதகம் - சாதகமா, இல்லையா’ என்ற தலைப்பில் பேசியிருக்கிறேன்.

இது தவிர, ஜெயா டி.வி. நடத்திய மகளிர் மட்டும் நிகழ்ச்சிகளிலும் பட்டிமன்றத்தில் பேசியிருக்கிறேன்.

பொதிகை டி.வி.யிலும் ‘வாதம் விவாதம்’ நிகழ்ச்சிகளில் இரண்டு முறை பங்கெடுத்துக் கொண்டு, பேசியதுண்டு.

’அறுபது ப்ளஸ் வயடில் தன் துணையை அதிகம் சார்ந்து வாழ்வது - ஆண்களா? பெண்களா?’ என்ற தலைப்பில் ‘ஆண்களே’ என்ற தலைப்பில் பேசினேன்.

நடுவராக இருந்தவர் திரு.டெல்லி கணேஷ் அவர்கள்.

இந்தப் பட்டிமன்றத்தில் பேசிய குறிப்புகள் ஃபைலில் இருந்தது. இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உங்கள் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆவல்.

இதோ நான் பேசிய கருத்துக்கள்:(வந்துட்டாய்ங்கம்மா, வந்துட்டாய்ங்க என்று குரல் கேட்கிறது. அமைதி! அமைதி!!!)

அதிகம் சார்ந்திருப்பது ஆண்களே!!!

10 - 20 வயதில் பள்ளி/கல்லூரி நண்பர்களை சார்ந்து இருக்கிறார்கள் ஆண்கள்.

20 - 40 வயது வரை, அலுவலகம், தொழில் முன்னேற்றம், பணம் சம்பாதிப்பது, ஸ்டேடஸ் உயர்த்திக் கொள்வது - இதில் கவனம். இதனிடையே மனைவி - கணவனின் தேவைகளில், தோள் கொடுத்து, துணை நிற்கிறாள்.

40 - 60 வயது வரை - பிள்ளைகளின் எதிர்காலம், தனது ரிடயர்மெண்ட் பற்றிய ப்ளான் என்று மெச்சூரிட்டி ஆரம்பிக்கும் காலம்.

60 வயது ஆகும்போது - பெற்றவர்கள் அனேகமாக தெய்வ பதவி அடைந்திருப்பார்கள். உடன் பிறப்புகள் அவரவர் வயதிற்கேற்ப, கடமைகளில் கண்ணாகி இருப்பார்கள். அலுவலக நண்பர்களிடம் அதிகம் பேச, பகிர, விஷயம் எதுவும் இல்லை. பிள்ளைகளோ - அவர்களது வாழ்க்கையைத் துவங்கி இருப்பார்கள்.

கண்ணையும் கருத்தையும், நேரத்தையும் முழுமையாக ஆக்கிரமிப்பது மனைவிதான்.

காலையில் - இன்னும் எழுந்திருக்கலையா? என்ற கேள்வி கேட்பதில் ஆரம்பித்து, அடுக்களைக்குள் பத்து முறை எட்டிப் பார்த்து, சட்னிக்கு தேங்காய் கீறிக் கொடுத்து, கடுகு வெடிக்கும்போது, தோள் வழியாக எட்டிப் பார்த்து, இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றலாம், என்று - கடுப்படித்து....

மனைவியுடன் டி.வி. ரிமோட்டுக்கு மல்லுக்கு நிற்பார்கள். அவர் அலுத்துப் போய், பத்திரிக்கையை கையில் எடுத்துக் கொண்டு, ஹாலுக்குப் போனால், இவர் டி.வி.யை அணைத்து விட்டு, பின்னாலேயே வருவார்.

தப்பித் தவறி, உறவினர் வீட்டுக் கல்யாணம், மகள் வீட்டுக்கு ரெண்டு நாள் பயணம் என்று வந்து விட்டால் - அவ்வளவுதான், என்ன ஒரு சிடுசிடுப்பு, எத்தனை கேள்விகள்.

இப்ப போகலைன்னா என்ன, அப்புறமா ரெண்டு பேருமாக அடுத்த மாசம் போகலாமே என்று தடுப்பார்கள்.

வேற வழியே இல்லை, அனுப்பித்தான் ஆகணும் என்றால், அவங்க போய் வந்த பிறகு - வீட்டைப் பார்க்கணுமே.

வாங்கி வைத்த வாழைப்பழம் கறுத்துப் போய் கிடக்கும். தயிர் பாத்திரம் காலி. சாப்பிட்டுத் தீர்ந்ததால் அல்ல. ஃப்ரிஜ்ஜில் வைக்க மறந்து போய், புளித்து, தூக்கிப் போட்டிருப்பார்கள்.

நியூஸ் பேப்பர் திசைக்கொரு பக்கமாகப் பறந்து கிடக்கும். கேட்டால், நேரம் இல்லை, கோயிலில் கொஞ்சம் டைம் ஆகிட்டுது, வாக்கிங் போகும்போது மறந்துட்டேன் என்பார்கள்.

அவ்வளவு ஏன், தினமும் மனைவியிடம் மாத்திரை எடுத்துக் கொடு என்று ஞாபகப்படுத்தி, எடுத்துக் கொடுக்க வைத்து, சாப்பிடுகிற விடமின், ப்ரஷர் மாத்திரைகளை, மறக்காமல், மறந்திருப்பார்கள்.

மொத்தத்தில், மனைவி இல்லாமல், இவர்களால் காலையில் தலை துவட்டிய துண்டு காயப் போடுவது கூட முடியாது.

5
Average: 5 (3 votes)

சொல்லவா வேண்டாமா

என்னடா தலைப்பே விவகாரமா இருக்கேன்னு தோணுதா?

சில விஷயங்களை ஷேர் பண்ணனும்னு நினைக்கிறேன், ஆனா படிக்கறவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை. அதுதான் தயங்கிகிட்டே இருந்தேன். இப்ப சொல்லலாம்னு தைரியப்படுத்திகிட்டு ஆரம்பிக்கிறேன்.

எச்சில், பத்து, பசை – இந்த வார்த்தைகளெல்லாம் வீட்டில் வயசான பாட்டிகள் சொல்லிக் கேட்டிருப்பீங்க. இவையெல்லாம் ஏதோ மூட நம்பிக்கை, பழங்காலப் பழக்கம் என்கிற மாதிரி ஒரு அபிப்ராயம் வந்து விட்டது. ஆனால் இதில் எவ்வளவோ விஷயங்கள் அடங்கியிருக்கு.

“அண்ணாக்கக் குடி” அப்படின்னு சொல்வாங்க. அந்த வார்த்தைக்கே இப்ப அர்த்தம் தெரியாது. செந்தமிழில் மொழிபெயர்ப்பதானால் – ‘அண்ணாந்து குடி’ என்று பொருள்(!)

தண்ணீர், காஃபி, பால் – இவற்றையெல்லாம் தம்ளரில் குடிக்கும்போது, உதடுகளில் படாமல், தலையை கொஞ்சம் மேலே தூக்கி, வாயைத் திறந்து, உதடுகளில் தம்ளர் படாமல், ஊற்றி(!!) குடிக்க வேண்டும்.

இதை நானே செய்வதில்லை என்று முதலில் உண்மையை ஒத்துக் கொள்கிறேன். எனக்கு காஃபியை கொஞ்சம் கொஞ்சமாக, துளித் துளியாக சிப் பண்ணி, ரசித்துக் குடிக்கணும்.

ஆனால் தண்ணீரை பாட்டிலில் இருந்தோ, செம்பில் இருந்தோ குடித்தால், எச்சில் படாமல்தான் குடிக்கிறேன்.

ஸ்கூலில், காலேஜில், ஆஃபிஸில் – எல்லோரும் எல்லோருடைய டிஃபன் பாக்ஸையும் ஷேர் பண்ணிக்குவோம். நானுமே அப்படி செய்திருக்கிறேன்.

இதில் நட்பும், உரிமையும், அது தருகிற சந்தோஷமும் சேர்ந்து இருக்கும்.

குழம்பு சாதம், பொரியல், தயிர் சாதம், பிரியாணி, இட்லி, காரத் துவையல், மிளகாப்பொடி, நெய் சோறு என்று எத்தனை வெரைட்டி இருந்தாலும் அத்தனையும் ஒன்றாகக் கலக்கும்.

அதே மாதிரி, வீட்டிலோ, விருந்து நடக்கும் இடத்திலோ, முக்கியமாக ஹோட்டல்களில் பஃபே நடக்கும் இடங்களிலோ எல்லாப் பாத்திரங்களிலும் இருக்கும் உணவுகளை - நாம் சாப்பிடும் கையால் கரண்டிகளைத் தொட்டு எடுப்பதும், பரிமாறும் கரண்டிகள் நம்முடைய (சாப்பிட்டுக் கொண்டிருக்கும்) தட்டில் பட்டு, பரிமாறிக் கொள்வதும் சரியா?

இப்படி எல்லோருமே செய்யறாங்கன்னு சொல்லவில்லை. ஆனால், இதைப் பற்றிய அவேர்னெஸ் குறைவாக இருக்கோன்னு நினைக்க வேண்டியிருக்கு.

நண்பர்கள் ஷேர் செய்து சாப்பிடும் விஷயத்தில் முக்கியமான ஒன்று – அவை எல்லாமே அளவாக டிஃபன் பாக்ஸில் வரும் உணவுகள். அந்த வேளை சாப்பாடு முடியும்போது, தயாரித்த உணவுகளும் அந்தப் பொழுதுடன் தீர்ந்து விடும். அடுத்த வேளைக்கு மிச்சம் வைக்கப் படுவதில்லை.

ஆனால் வீட்டில், ஹோட்டலில், பெரிய பாத்திரங்களில் மொத்தமாக இருக்கும் உணவுகள் அப்படியல்ல.

தொடர்ந்து பலரும் சாப்பிடுவதற்காக, குறைந்த்து 3 மணி நேரத்தில் இருந்து ஐந்து மணி நேரம் வரை பரிமாறப்பட வேண்டியிருக்கும்.

தயிர், மோர் இவையெல்லாம் நாட்கணக்கில் (2 நாள் வரை) பாதுகாப்பாக இருக்கக் கூடியவை.

எண்ணெய், நெய் இவையெல்லாம் வாரக் கணக்கில் ஒரே பாத்திரத்தில் இருக்கும்.

ஊறுகாய் வகைகள் – மாதக் கணக்கில் – ஏன் – வருடக் கணக்கில் கூட – ஒரே பாத்திரத்தில் கெட்டுப் போகாமல் இருக்கும்.

மிளகாய்ப் பொடியுடன் கலந்து கொள்ள நல்லெண்ணெய் கிண்ணம் இருந்தால், அதை இடது கையால், ஸ்பூனில் எடுத்து, தட்டில் படாமல், ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பருப்பு/பருப்புப் பொடியுடன் சாதத்தில் ஊற்றிக் கொள்ள நெய்க் கிண்ணம் இருந்தால் அதற்கும் இதே முறைதான்.

உப்புக் கிண்ணத்துக்கு இந்த ரூல் ஸ்ட்ரிக்ட்லி அப்ளைட்.

பொதுவாகவே ஒவ்வொரு உணவுக்கும் தனித் தனியான கரண்டிகள் இருக்க வேண்டும். தேங்காய் சட்னி எடுத்த அதே கரண்டியால் புளிக் குழம்பையோ மிளகாய்த் துவையலையோ எடுத்தால் குழம்பு/துவையல் சீக்கிரமே ஊசிப் போய் விடும்.

ஊறுகாய் பாத்திரத்தில் அதற்கென்று இருக்கும் கரண்டிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் மொத்தப் பண்டமும் பாழாகி விடும்.

பால், மோர், தயிர், ஊறுகாய், எண்ணெய், நெய் இவற்றில் மற்ற சமைத்த உணவுப் பண்டங்கள் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பட்டால் - இவற்றில் பூசணம் பூத்து விடும். உபயோகிக்க முடியாது.

இப்போது வரும் சாஸ் அயிட்டங்களும் கூட இதே போலத்தான்.

அடுப்பு பக்கத்தில் தோசை மாவு/பால் இருந்தால், அதில் அடுப்பில் தாளித்துக் கொண்டிருக்கும் தேங்காய் போட்ட பொரியலோ சாம்பாரோ தெறித்து விட்டால் போச்சு, பால், மாவு இவையெல்லாம் கெட்டுப் போய் விடக் கூடும்.

ஹோட்டல்களில் பரிமாறுபவங்க இப்ப க்ளவுஸ் போட்டுக் கொண்டு பரிமாறுகிறாங்க. ஆனால், சாப்பிடுபவர்கள் மேஜை மேல் இருக்கும் சட்னித் தூக்கு/சாம்பார் வாளியில் இருந்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதே கையால் எடுத்துக் கொள்வதோ அல்லது சாப்பிடும் தட்டில் கரண்டி படுவது போல, பரிமாறிக் கொள்வது சரியில்லைதானே.

இப்பவெல்லாம் வீட்டில் சின்ன சின்ன விருந்துகளில், சமைத்த பண்டங்களை, டைனிங் டேபிளின் மீது வைத்து விட்டு, விருந்தினர்கள் அனைவருமாக, பஃபே முறையில் எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடும் முறை வழக்கமாகி வருகிறது.

இது நல்லதுதான், அவங்க அவங்களுக்கு பிடிச்சதை, போதுமான அளவு, தானாகவே பரிமாறிக் கொள்ளலாம்.

இப்படி டேபிளின் மீது வைக்கும்போது – உப்பு, தயிர், மோர், நெய், ஊறுகாய் போன்ற(நாள்பட இருக்கும்) பொருட்களை, ஒரு பக்கமாக, அதற்கு உண்டான ஸ்பூன்களுடன் வைத்து விடலாம்.

இட்லி, தோசை, சப்பாத்தி, நான், பூரி போன்ற பதார்த்தங்களை, ஒரு பக்கமாக – எடுத்துப் போட்டுக் கொள்ள ஏதுவாக – இடுக்கிக் கரண்டியுடன் வைக்கலாம்.

சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் இவற்றிற்கெல்லாம் தனித்தனியாக, தோதான கரண்டிகள் இருக்க வேண்டும்.

சிப்ஸ், வற்றல், வடகம் இவற்றுக்கும் - எடுத்துப் போட்டுக் கொள்ள, பொருத்தமான, ஏந்தலாக இருக்கும் ஸ்பூன்கள் தேவை.

முக்கியமாக, நாமே பரிமாறிக் கொள்ளும்போது, நம் தட்டில் படாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதே போல எடுக்கும் பொருட்கள், மற்ற உணவுப் பண்டங்களில் சிந்தி விடாமல், ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும்.

ஒரு உணவு கெட்டு விட்டால், பணம் பாழாவது மட்டுமல்ல, தெரியாத்தனமாக அதை நாம் சாப்பிட்டால், நம் வயிறு, ஆரோக்கியமும் கூடவே பிரச்னைக்கு உள்ளாகும்தானே.

சில வீடுகளில், பிஸ்கட், சிப்ஸ், மிக்ஸர், முறுக்கு, போன்றவற்றை, ஒரே தட்டில் அழகாக அடுக்கி, எல்லா விருந்தினர்களும் எடுத்துக் கொள்ள தோதாக, டீபாயின் மீது கொண்டு வந்து வைக்கிறார்கள்.

இவற்றை எடுத்து சாப்பிடும்போது, பக்கத்திலேயே கொஞ்சம் டிஷ்யூ வைப்பது நல்லது. கொஞ்சம் எடுத்து சாப்பிட்டால், கையைத் துடைத்துக் கொண்டு, அடுத்த பண்டத்தை எடுக்கலாம்.

மொத்த்த்தில், டேபிள் மேனர்ஸ் என்பது ஹோட்டலில் மட்டுமல்ல, வீடுகளிலும் முதலிலிருந்தே சுத்தமாகவும் பதமாகவும் பரிமாறி, சாப்பிட, பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

4
Average: 3.6 (5 votes)