பொதுப்பிரிவு

"அறுசுவை செய்திகள்"

அறுசுவை செய்திகள்

முக்கிய செய்திகள்:
~~~~~~~~~~~~~~~~~~~

1. அறுசுவையில் தீபாவளி

2. தளத்தைக் கலக்கும் ட்ரேஸி

3. மன்றத்தின் போக்கு கடந்த நாட்களில் எப்படி இருந்தது?

4. அடுத்த பட்டிக்கான அறிவிப்பு.

விரிவான செய்திகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~
இனி விரிவான செய்திகளை பார்ப்போம் .

1. செண்பகாவின் கைவண்னத்தில் இனிப்பு , காரம் என அறுசுவையின் தீபாவளி சிறப்பாக அமைந்தது.

2. இமாவின் ஓலையில்லா ஊர் இது வாயிலாக ட்ரேஸி நமது தளம் முழுக்க துள்ளி குதிக்கிறது.

3. கடந்த காலங்களில் அறுசுவையில் வெவ்வேறு விதமான தலைப்புகள் , இது மட்டும்தான் என்பது போலில்லாமல் பலவிதமான பேச்சுகள் , சுவாரஸ்யங்கள் , கலாட்டாக்கள் கலந்து அறுசுவையும் கலகலப்பாக இருக்கும் . கொஞ்சம் மன சங்கடத்துடன் வருபவர்கள்கூட கச்சேரியில் சேர்ந்து மகிழ்ச்சியாக திரும்புவர் . ஆனால் சில நாட்களாக ஒரே விதமான கேள்விகள் . ஒரே விஷயங்கள் பற்றிய பல சந்தேகங்கள் இப்படி சுற்றி சுற்றி மன்றத்தின் போக்கு ஒரே பக்கமாக இருக்கிறது . தோழிகள் சேர்ந்து அறுசுவையை மீண்டும் கலகலப்பாக்கி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

4. அடுத்த பட்டி வரும் திங்களன்று துவங்கப்படும்.நடுவராக பொறுப்பேற்று நடத்திக்கொடுக்க தோழி பிரேமா அவர்களை அன்போடு அழைக்கிறேன்.

இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன. வணக்கம்... :-)

5
Average: 5 (1 vote)

ராமுவும் ஜானுவும்

96 சினிமா இன்னும் பார்க்கவில்லை. விமர்சனங்கள் மற்றும் ட்ரெய்லரில் இருந்து கதைக்கரு என்ன என்பது புரிந்து விட்டது. சமீபத்தில்தான் எங்கள் பள்ளி நண்பர்களின் 25வது ஆண்டுவிழா ரீயூனியனும் நடந்தது. அன்று இந்த சினிமா போன்று எதுவும் நடக்கவில்லை என்றாலும் நாங்கள் அனைவருமே அன்று எங்கள் பள்ளிப் பருவத்துக்கே சென்றுவிட்டோம். ஜானுராமுவின் கதை 96 என்றால் எங்கள் ரியூனியன் 93.
ஒரு வருட காலம் தொடர்ச்சியான திட்டமிடல், நண்பன் ஒருவனின் முயற்சி. தோள் கொடுத்த மற்ற நண்பர்கள் என 25வது ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடந்தது. மே12 2018 அன்றுதான் எங்கள் ஒன்றுகூடல். அதற்கு 1மாதத்திற்கு முன்பிருந்தே அழைப்பிதழ்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நண்பர்கள். அழைப்பிதழோடு நிறுத்தாமல் நண்பர்கள் கையால் ஒரு விதைப்பந்தை மண்ணில் இட்டும் கூடவே ஒரு மலர்ச்செடியும் அளித்து அந்த இரண்டையும் ரியூனியன் அன்று எடுத்து வரச்சொன்னார்கள். விதைப்பந்தும் அழகாக முளைத்து துளிர்க்க ஆரம்பித்து விட்டது. அப்படி எனக்கு அளிக்கப்பட்டவை பிச்சிப்பூ செடியும் புளியமரமும். இப்படி ஒவ்வொருவருக்கும் இரண்டு செடிகள். அவரவர் வீட்டில் இடமிருந்தால் அங்கேயும் அல்லது விழாவை ஒருங்கிணைத்த நண்பர்களே பொது இடத்தை தேர்ந்தெடுத்து நட்டு பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அம்மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது

சிறுகுழந்தைகள் போல் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தோம். மே 11 இரவெல்லாம் தூக்கமில்லை. எப்போதடா விடியும் கிளம்பி விழா நடக்கும் இடத்திற்குப் போகலாம் என்றிருந்தோம். காலையில் சீக்கிரமாகவே கிளம்பி போய்விட்டோம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என் பொறுப்பு. கூடவே இரு நண்பர்களும் துணை நின்றார்கள். ஒருசில நண்பர்களைத் தவிர மீதி அனைவரும் குடும்பத்தோடு சென்றிருந்தோம். விடுபட்ட ஒருசிலரும் காணொளிக்காட்சி மூலமாக இணைந்தார்கள். எங்கள் ஆசிரியர்களையும் அழைத்திருந்தோம். மறுக்காமல் கலந்து எங்களை சிறப்பித்தார்கள்.
அறிமுகம் ஃபோட்டோ செஷன் என முகப்பில் ஆரம்பித்து விழாமேடைக்கு சென்று அமர்ந்ததும் பள்ளியில் நாங்கள் படித்த வகுப்பறை, மைதானம் என எங்கள் நினவுகளில் பசுமையாக நிறைந்திருக்கும் இடங்களை வீடியோ எடுத்து வந்து திரையிட்டார்கள். அனைவரின் கண்களும் லேசாக வேர்த்தது. ரொம்பவும் எமோஷனலாக இருந்தது. ஆசிரியர்கள் சிலரை ஞாபகம் வைத்திருந்தார்கள். சிலரை மறந்து விட்டார்கள். நான் கவிதாவாக, முதல் மாணவியாக என் ஆசிரியர்கள் மனதில் நின்றதை விட என் அண்ணனின் தங்கையாகவும் அப்பாவின் மகளாகவுமே ஞாபகம் நின்றிருந்தேன். என் அப்பாவும் அண்ணனும் கூட எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், எனக்கு கற்பித்த ஆசிரியர்களின் மாணவர்கள். ஆசிரியர்கள் கொஞ்ச நேரம் மட்டுமே இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் மாலை வரை இருந்து முழு நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்கள்.

நண்பர்கள் எங்களுக்கு பேச 25 ஆண்டு கால கதைகள் இருக்கும். ஆனால் எங்கள் குடும்பத்தினருக்கு போரடிக்குமே. அதனால் குழந்தைகளுக்கு ஃபேஸ்பெய்ன்டிங் செய்ய மெஹந்தி போட தனியே பூத் அமைத்திருந்தோம். எங்கள் குழந்தைகளின் தனித்திறமையை வெளிப்படுத்த ஆடல் பாடல் என அவர்களுக்கும் வாய்ப்பளித்தோம். எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞர். அவரையும் அழைத்து அவரும் நிகழ்ச்சி செய்தார். வயிற்றுக்கு அருமையான உணவு. இடையிடையே குளிர்பானங்கள் என மனநிறைவோடு வயிறும் நிறைந்தது.
என்னடா ஜானுவையும் ராமுவையும் இன்னும் காணோம்னு யோசிக்கறீங்களா. எங்கள் ராமுவும் ஜானுவும் தம்பதியராக குழந்தைகளோடு வந்திருந்தார்கள்.
பள்ளிப்பருவத்தில் ஆண் நண்பர்களோடு அதிகம் பேசியதில்லை. ஆனால் அன்று எந்த தயக்கமும் இன்றி பள்ளிப்பருவத்திற்கே போனது போல் பேசி அரட்டையடித்து மகிழ்ந்தோம், அப்போ நாம பேசினது இல்லேல்ல அப்படீன்னு சொல்லி சிரித்தோம். எங்கள் வாட்சப் க்ரூப்பில் இப்போதும் ஒரே அரட்டைதான். அந்த க்ரூப்பில் போய்விட்டால் மனது அந்த 16வயதிற்கு போய்விடுகிறது. நம் தோழிகளும் வாய்ப்பிருந்தால் பள்ளி நண்பர்களை ஒன்றாக சந்திக்க திட்டமிடுங்கள். மனதுக்கு ஒரு ரீசார்ஜ் செய்த உணர்வும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். நாங்கள் இனி எல்லா வருடமும் இப்படி சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இடையிடையே வெளியூரில் இருக்கும் நண்பர்கள் சொந்த ஊருக்கு வரும்போது மினி கெட்டுகெதர்களும் அவ்வப்போது நடக்கின்றன. ஒருவருக்கொருவர் உதவி தேவைப்படும் போது தோள் கொடுக்கிறோம். நட்பு வளர்கிறது. நீங்களும் முயற்சி செய்யுங்கள். கல்லூரி நட்புகளின் ஒன்றுகூடலுக்காக காத்திருக்கிறோம் இப்போது.

Average: 5 (2 votes)

அன்னாபிஷேகம்

சென்ற 24ம் தேதி ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாள்.

பொதுவாகவே தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமியும் ஒவ்வொரு விதத்தில் விஷேசம்தான்.

ஐப்பசி மாத பௌர்ணமியில் தமிழ் நாட்டின் எல்லா சிவன் கோவில்களிலும் சிவலிங்க வடிவத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கும்

சமைத்த அன்னத்தை அபிஷேகம் செய்து, புடலங்காய் போன்ற காய்களை மாலை போல அணிவித்து, மற்ற காய்கறிகளையும் வைத்து அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

மதுரையில் ஆதி சொக்கநாதர் கோவில் (இது மதுரை சிம்மக்கல் அருகில் இருக்கிறது) அன்னாபிஷேக அலங்காரம் ரொம்பவும் அற்புதமாக இருக்கும்.

இப்போதெல்லாம் பக்தர்கள் கோவிலில் தேவாரம், திருவாசகம், சிவ புராணம், சிவ பஞ்சாட்சர ஸ்லோகம், அன்னபூர்ணாஷ்டகம் இவற்றை குழுவாக அமர்ந்து படிக்கிறார்கள். அற்புதமாக இருக்கிறது.

கோளறு பதிகத்தை சிவ சன்னிதியிலோ அல்லது வீட்டிலோ அமர்ந்து, படிக்கலாம்.

எல்லோரும் சிவனருள் பெற வேண்டுகிறோம்.

Average: 5 (1 vote)

சூாிய உதயம்

இந்த பதிவை இங்கே பதிவிட காரணம் கவி அவா்களால் தான். அவா்களுடைய இந்தோனேஷிய அனுபவங்கள் படிக்கும் பாேது ஃபெரியில் சூாியன் அஸ்மனத்தை பற்றி சொல்லியிருந்தாா்கள். அதை படிக்கும் பாேது எனக்கு பழைய நினைவு ஒன்று நினைவுக்கு வந்தது. அதை பதிவிட நினைத்துதான் இந்த பதிவு பாேடுகிறேன். அந்த நிகழ்வும் எனக்கு ஏமாற்றத்தை தந்தது.

12 வருடங்களுக்கு முன்பு நாங்கள் கன்னியாகுமாாி சென்றோம். முதன் முதலில் சூாியன் உதிப்பதை பாா்க்க பாேகிறோம் என்று சந்தாேஷத்தில் விடியல் காலை 5 மணிக்கே கடற்கரை பக்கம் காத்துக் காெண்டிருந்தோம். அங்கே காத்துக் காெண்டிருக்கும் பாேது சின்ன வயசுல நாமா புத்தகத்தில் பாா்க்கும் படம் கடல் மலை இரண்டு மலைக்கு மேலே பொிய சூாியன் நல்லா மஞ்சள் நிறத்தில் பொிசா அழகா உதிக்கிறமாதிாி இருக்கும் (நான் மேலே பாேட்ட படத்தில் இருப்பது பாேல்). நானும் அப்படி தான் கடலுக்கு அடியிலிருந்து பொிசா உதிக்கும்ன்னு கனவு கண்டுக் காெண்டுயிருந்தேன். அந்த அழகிய விடியலை படம் படிக்க கேமராவை கையில் தயாரா வைத்துக் காெண்டிருந்தேன். ஒரு மணி நேரம் காத்துக் காெண்டிருந்தோம்.

சராசாியாக மணி 6.10 கிட்ட இருக்கும் சூாியன் வருது வருதுன்னு அங்க இருக்குற எல்லாேரும் கத்தினாங்க நானும் கேமராவை கையில் வச்சிக்கிட்டு ஆவலாேடு எடுத்து படம் பிடிக்கலாம்ன்னு பாா்த்த சாதரணமா எங்க வீட்டு மாெட்ட மாடில தொிவது பாேல தான் அங்கும் தொிந்தது. எனக்கு வந்துச்சு பாருங்க காேவம். என்னவெல்லாம் யாேசிட்டு இருந்தாேம் இப்படி சாராணமா எப்பவும் பாா்ப்பது போல் தான் இருந்தது, படம் தான் அப்படி வரைவாங்கலா இல்லை சூாியனே அப்படி வருமான்னு தொியவில்லை. ஆனால் நான் பாா்த்த காட்சி எனக்கு பிரமிப்பாக இல்லை. நான் ராெம்ப எதிா்பாா்திருப்பேன் பாேல்.

கவியின் பதிவை பாா்த்தவுடன் எனக்கு இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது..

Average: 5 (1 vote)

குட்டித்தலையின் ஸ்னேக் என்கவுன்டர்கள்

என்னமோ பெரிசா கலாட்டா பண்ணி கிழிக்கற மாதிரி குட்டி கலாட்டக்கள்னு பேரு மட்டும் வச்சுப்புட்டு பேருக்கு மூணே மூணு பதிவை கிறுக்கிப்புட்டு போனவளைக் காணோமேன்னு வையப்படாது மக்காஸ். குட்டித்தலை ரொம்ப பாவம் :)

கிச்சன்ல மசாலா இருந்தாத்தானே சமைக்க முடியும். மண்டைக்குள்ள மசாலா இருந்தாதானே எழுத முடியும். மாசக்கடைசியில கிச்சன்ல உள்ள டப்பாக்களையெல்லாம் தேடி உருட்டி ஒப்பேத்தி சமைக்கற மாதிரி மண்டையில் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு ஒட்டியிருக்கற மசாலாக்களை தட்டி சேர்த்து எழுதி வச்சிருகேன். கம்ப்ளெய்ன்ட் பண்ணாம படிக்கோணும்.

பாம்புன்னா படையும் நடுங்கும்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு பா...ன்னு சொன்னாலே சகலமும் நடுங்கும். அம்புட்டு ஏன் பாம்பு படம் போட்டிருக்கற புத்தகங்கள், நியூஸ் பேப்பர் ன்னு எதையும் தொடக்கூட மாட்டேன். பார்க்க பாம்புத் தலை மாதிரியும் அதன் தோல் பாம்புத்தோல் மாதிரியும் இருக்குன்னு இங்கே கிடைக்கும் ஒருவகை பழத்தை தொட்டுக் கூட பார்க்க மாட்டேன். அம்பூட்டு பயம். இந்த ஃபோட்டோவில் இருப்பது புவா சாலக் (buah salak) என்னும் அந்த பழம்தான்

இப்படிப்பட்ட உலகமகா தைரியசாலியான என்னைத்தேடி ரெண்டு வாட்டி விசிட் அடிச்சிருக்கார் திருவாளர். பாம்பு. கவனமா தெளிவா தப்பில்லாம படிக்கணும். திருவாளர். பாபு இல்லை திருவாளர். பாம்பு :).

ஒருநாள் விடியற்காலை... அதான் சுமார் ஏழரை மணிக்கு வாசலைத் திறந்து காம்பவுண்ட் கேட்டை திறந்துட்டு உள்ளே வரும் போது பார்த்தால்... போர்ட்டிகோவில் சமத்தா ஒருத்தர் உடலில் மஞ்சள் கட்டங்களோட சிவப்பு புள்ளிகள் வச்ச சட்டை போட்டுட்டு சுருண்டு படுத்து தூங்கிட்டு இருந்தார். யாரா இருக்கும்னு பக்கத்துல போய் உட்கார்ந்து பார்த்தால்.... பா... பா... பாம்பூ...... பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒரே ஓட்டம் வீட்டுக்குள்ளாற... அப்புறம் என்ன தலைவரை கூப்பிட்டு அடிச்சு தூக்கிப்போட்டு... என்னத்த சொல்ல போங்க. சாரோட பெயர் கட்டுவிரியனாம். அப்புறம் சொன்னாக ஆத்துக்காரர்.

அப்புறம் இன்னொரு நாள் காலையில் ஆறு மணிக்கு எழும்பி கிச்சனுக்குள் போனேன். மிக்சி வயரில் காய்ந்த கறிவேப்பிலை தண்டு போல் ஏதோ இருந்தது. சரி ஏதோ இருக்கும்னு தூக்க கலக்கத்துலயே ஆத்துக்காரருக்கு காஃபி போட்டு கொடுத்து அனுப்பிட்டு திரும்பவும் ஒரு குட்டித் தூக்கம் போட்டு அதே ஏழரை மணிக்கு எழும்பி கிச்சனுக்கு போய் அந்த கறிவேப்பிலை தண்டு என்னான்னு பக்கத்துல போய் பார்த்தால்... பா... பா... பாம்பூ.... நல்லவேளை இவரும் தூங்கிட்டுதான் இருந்தார். தலைவருக்கு ஃபோன் பண்ணினால் வழக்கம் போல பிசி :(. செக்யூரிட்டிக்கு ஃபோன் பண்ணி குட்டியா ஒரு பாம்பு வீட்டுக்கு விசிட் அடிச்சிருக்கார். வந்து கவனிச்சுட்டு போங்கன்னு சொன்னேன். ரெண்டாவது நிமிஷம் பெரிய கம்போட வந்தாங்க. ஒரே போடு.... தூக்கத்துலேயே அது மேலே போயிடுச்சு. இவரும் குட்டியா இருந்ததாலே இவங்களோட அப்பா அம்மா வீட்டுக்குள்ள எங்கயாச்சும் இருக்காங்களான்னு தேடிப்பார்த்து இல்லைன்னு உறுதிப்படுத்திட்டு போனாங்க. இந்த முறை வந்தவங்க மலைப்பாம்பின் குட்டி.

அம்மே... ரெண்டுவாட்டி விசிட் அடிச்சப்போவும் சமத்தா தூங்கிட்டு இருந்தாங்க. அதனால் கொஞ்சம் தப்பிச்சேன். அப்புறம் என்ன அன்னிக்கு சமையலுக்கு விட்டாச்சு லீவு :). அதுக்கப்புறம் எப்போ கிச்சனுக்கு போனாலும் யாராச்சும் இருக்காங்களான்னு ஒருவாட்டி பார்த்து உறுதிப்படுத்திட்டுத்தான் அடுத்த வேலை.

என்ன இது ஸ்னேக் என்கவுன்டர்ன்னு தலைப்பு போட்டுட்டு பாம்பு படம் எங்கேன்னு கேட்கப்படாது... அதான் சொல்லிட்டேனே பாம்பு படம் எடுக்க வேண்டாம் அதோட படம் பார்த்தாலே பயம்னு. சோ நோ ஃபோட்டோ...

No votes yet

அறுசுவை

Arusuvai welcome

அனைவருக்கும் வணக்கம். அறுசுவை புது பொலிவுடன் மீண்டும் கிடைத்திருப்பது நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி.எத்துனை இணையம் இருந்தாலும் பேசினாலும் பழகினாலும் அறுசுவைக்கு ஈடாகாது.

என்னைப்பொருத்த வரை அறுசுவையால் நான் கற்றுக்கொண்டது ஏராளம். ஒரு காலத்துல மெயில் ஐடி இருக்குன்னு சொல்வதே ஒரு பெருமையான விசயமா இருந்துச்சு அப்படி பட்ட மெயில் ஐடி உருவாக்கினது அறுசுவைக்காகதான். எல்லோருக்கும் எளிமையாக தமிழில் பார்க்கும் தளம் என்றால் அது அறுசுவை என்று சொல்வதில் மாற்றுக்கருத்து இருக்காதென நினைக்கிறேன்.இந்த தளம் தமிழில் தட்டச்சு செய்யவும்,படங்கள் பதிவேற்றம் செய்யவும்,பல பல விசயங்களை கற்றுக் கொள்ளவும், இன்னும் சொல்ல போனால் எப்படி பேசனும் பழகனும்னு கூட சொல்லிக் கொடுத்திருக்குன்னு தான் சொல்லனும்.

நிறைய அன்பான தோழிகளை கொடுத்திருக்கு. பள்ளிகளில் படித்த தோழிகள் கூட இப்பொழுது தொடர்பில் இல்லை மறந்தே போய்விட்டது என்றுதான் சொல்லனும் ஆனால் இங்கு கிடைத்த அறுசுவை நட்புகள் பொக்கிசம் என்றே சொல்லனும். எத்தனை தளங்கல் இருந்தாலும் அறுசுவை போன்ற பாதுகாப்பு வேறு எங்கும் கிடையாது என்றே சொல்லனும்.

அறுசுவை பகுதி ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க அத்துனை சந்தோசம் கிடைக்குது பிறந்த வீட்டுக்கு சென்றது போல பெரு மகிழ்ச்சி :) ஒரு காலத்துல வீட்ல ஏதாவது புதுசா ஒரு சமையல் செய்ன்னு என் கணவர் சொல்வார் அந்த ரெசிப்பி செய்ய தெரியாதுன்னு சொல்லிட்டா உடனே அறுசுவை போய் பாருன்னு அந்த ரெசிப்பிய எடுத்து கொடுத்திடுவார். என்னடா இது செய்ய தெரியாதுன்னு சொன்னாலும் இந்த அறுசுவையால தப்பிக்க முடியலயேன்னு அறுசுவை மேல கோவம் வரும்,அப்படி இருந்த நான் அறுசுவையில் உறுப்பினராகி குறிப்பும் அனுப்பி அறுசுவையை உலகமாகவும்,குடும்பமாகவும் நினைக்க வைத்த பெருமை அறுசுவைக்கே சேரும்.

அப்படி பட்ட அறுசுவை திரும்பவும் எங்களுக்கு கிடைத்ததில் நன்றியும் வாழ்த்துக்களும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

5
Average: 5 (4 votes)

அறுசுவை நட்பூக்களுக்கு

Arusuvai new site

பல நாட்கள் மாதங்கள் கடந்து நம் அறுசுவை புது பெண் போன்று பொலிவுடனும், மெருகுடனும் புதுமையான மாற்றங்களுடனும் வந்த நம் அறுசுவைக்கு வாழ்த்துக்கள்

இனிய நட்பூக்களே நலமா.நம் அறுசுவை தளத்தில்தான் எனக்கு பல நெருங்கிய தோழிகள் கிடைத்தார்கள். சிலருடன் தனிப்பட்ட தொடர்புகள் இருந்தாலும் பெரும்பாலான தோழிகள் இங்குதான் சந்திப்போம். முதன்முதலாக நான் இணையதளத்தை பயன்படுத்த ஆரம்பித்தபோது நான் பார்த்த முதல் தமிழ்தளம் அறுசுவைதான். இப்போது பல மாதங்களின் முடிவில் புது மெருகுடன் வந்த அறுசுவை பார்த்ததும் முதன்முதலாய் பார்த்த அதே மகிழ்ச்சி. பல மாற்றங்களுடன் நல்ல மாற்றமாக வந்த அறுசுவையை வரவேற்போம். நேற்று தோழிகளுடன் சேர்ந்து புதிதாய் வந்த அறுசுவையை ஆராய்ந்து ஆராய்ந்து பழைய அரட்டைகளும், முதன் முதலாய் அறிமுகமான நிகழ்வுகளும், பட்டிமன்ற வாதங்களும், வாழ்த்துக்களும் பார்த்து பேசி பேசி அன்றைய நாளின் மலரும் நினைவுகளின் சந்தோஷ. தருணங்களை மீட்டெடுத்தோம்.

எல்லோரும் எப்படி இருக்கீங்கன்னு வந்து சொல்லிட்டு போங்க. பழைய தோழிகள் மற்றும் புதிதாய் இணைந்துள்ள தோழிகள் அனைவரும் வாங்க பழகலாம். காத்திருக்கிறேன் அனைவரையும் காண...

Average: 5 (2 votes)

மாத்தி யோசிங்க‌

நயனதாரா

மாத்தி யோசி பதிவை படித்த‌ எனது தோழிகள் என்னை கழுவி ஊத்திவிடாங்க‌. ஒவ்வொருத்தரும் கதை சொல்லி அதுக்கு பல‌ தீர்ப்புக்களையும் ''நாட்டாமை மாத்தி யோசி''' நு பன்ச் வாய்ஸ் கொடுத்துடாங்க‌.

சினிமா திரைப்படத்துக்கு கூட‌ மாத்து முடிவு சொல்றாங்க‌. மாத்தி யோசி பாணியிலே இன்றைக்கும் ஒரு பதிவு கொடுத்து, அதுக்கு மாத்தி யோசி முடிவு கொடுனு ஆனா அந்த‌ முடிவு உன் ரஜினி ஸ்டைலே கொடுக்கனும்னு அன்பு மிரட்டல். அதுக்குத்தான் இந்தப் பதிவு. நானும் நைட் தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு, காலை சமையலையும் கெடுத்துவிட்டு இந்த‌ பதிவை கொடுக்கிறேன். சவாலே சமாளி.

நான் ''விறகுவெட்டியும், தேவதையும்''என்னும் கதைக்கு மாத்தி யோசித்தேன். முதலில் அந்தக் கதையின் சுருக்கம்.

ஒரு விறகுவெட்டி குளத்து ஓரம் ஒரு மரத்தை வெட்டும் போது, அவனது கோடாரி குளத்தில் விழுத்துவிட்டது. கொடாரி இல்லாம் விறகு வெட்ட‌ முடியாது, விறகு இல்லையென்றால் பணம் கிடைக்காது, பணமில்லை என்றால் சாப்பாடு கிடைக்காது நு கதறி அழுதான்.

அவனது அழும் குரலைக்கேட்ட‌ தேவதை, அவனது குறையை அறிந்து குளத்திலிருந்து ஒரு தங்ககோடாரியை எடுத்து கொடுத்தது, அவன் அது தனது இல்லை என்றான். அடுத்து வெள்ளிகோடாரியைக் கொடுத்தது, அதையும் தனது இல்லை என்றான். உடனே அவனது இரும்புக்கோடாரியை காட்டியது, அவன் இதுதான் என்னுடையது நு சொல்லி சந்தோழப்பட்டான். அந்த‌ விறகுவெட்டியின் நேர்மையை பாராட்டி, தங்கம் வெள்ளி இரும்பு மூன்று கோடாரியையும் பரிசாகக் கொடுத்து பாராட்டியது தேவதை. இந்தக் கதைக்கு மாத்தி யோசி முடிவு படிங்க‌.

விறகுவெட்டியின் மனைவி குளத்தில் விழுந்துவிட்டாள். விறகுவெட்டி ஓஓஒ நு கதறி அழுதான். அவனது அழுகை சத்தம் கேட்டு தேவதையும் வந்தது.

அவனது குறையைக் கேட்டு ''கவலைப்படாதே, நான் உதவி செய்கிறேன்'' குளத்தில் குதித்தது. நடிகை நயனதாராவை தூக்கி வந்தது. ''இவள்தானே உன் மனைவி, அழைத்துச் செல்''என்றது. உடனே விறகுவெட்டி,'''இவள் தான் என் மனைவி''நு மகிழ்ச்சியாக‌ சொல்லி நயனதாராவை அழைத்துச் சென்றான்.

உடனே தேவதையும் தங்கம், வெள்ளி கோடாரிக்கு கூட‌ ஆசைபடாத‌ நீ இப்போ நடிகையைப் பார்த்த‌ உடன் 'என் மனைவி''நு பொய் சொல்லி ஏமாற்றுகிறாயே நு வருத்தபட்டது. அந்த‌ விறகுவெட்டி, தேவதையிடம் 'என்னை மன்னித்துவிடுங்கள். நான் உண்மையை சொல்கிறேன்'' என்றான்.

''நான் நயனதாராவை என் மனைவி இல்லை என்று மறுத்து இருந்தால், உடனே நீங்கள் குளத்தில் குதித்து 'ஜோதிகா''வை தூக்கி வருவீர்கள். நான் இவர் எனது மனைவி இல்லை என்பேன். நீங்கள் மறுபடியும் குளத்தில் குதித்து என் மனைவியை தூங்கி வந்து இவளா உன் மனைவி என்பீர்கள், நான் இவள் தான் என் மனைவி என்ற‌ உடன் உன் நேர்மையைப் பாராட்டி மூவரையும் பரிசாக‌ கொடுத்து இருப்பீர்கள். ஒரு மனைவியுடன் வாழ்வதற்கே படாதபாடு படும் நா மூன்று மனைவிகளோடு என்ன‌ பாடுபடுவது நு பயத்தில் தாம்மா நயனதாராவைக் காட்டிய‌ உடன் பொய் சொல்லிவிட்டேன் இதுதாம்மா உண்மை. என்னை மன்னிச்சிடுங்க‌ தேவதையே''நு கதறினான்.

அவனது கஷ்டதையும், கவலையையும் உணர்ந்த‌ தேவதை அவனுக்கு தேவையானப் பொருட்களை பரிசாகக் கொடுத்து அவனது உண்மையான‌ மனைவியுடன் சேர்த்து அனுப்பியது.

இது தான் எனது மாத்தி யோசி தீர்ப்பு. இது உங்களுக்கு பிடித்திருந்தால் பாராட்டி பதில் கொடுங்க‌. பிடிக்கவில்லை என்றால் பிடிகாததற்கும் பதில் கொடுக்கலாம்.

4
Average: 3.7 (3 votes)

மாத்தி யோசி

காக்கா நரி கதை

நான் தலைமையாசியராக‌ பணி புரிந்தாலும் முதல் வகுப்புக்கு பாடம் சொல்லித்தர‌ மிகவும் விரும்புவேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் முதல் வகுப்பில் தான் இருப்பேன். பொதுவாகவே பிள்ளைகள் செல்ப் கான்பிடன்ஸ் ஆக‌ வளரவேண்டும் என்பதே என் எண்ணம்.

பொது அறிவு வளர்ச்சிக்கும், நீதி போதனை வகுப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். மாலை வகுப்பு முடியும் போது நகைசுவையாக‌ எதாவது சொல்லி அதற்கான‌ பதிலை தெரிந்து வரச் சொல்வேன்.

ஒரு நாள், நமது பாரம்பரியக் கதையான‌ ''காக்கா நரி வடை'' கதையை சொல்லி, அந்த‌ முடிவுக்கு பதில் வேறு முடிவுகளை மாத்தி யோசித்து வரச் சொன்னேன். அப்பாடா வந்தது பாருங்க‌ முடிவுங்க‌, ஒவ்வொருத்தரும் நான்கு ஐந்து முடிவு சொல்லிட்டாங்க‌.

எப்படி எல்லா மாத்தி யோசிக்கறாங்க‌ பாருங்க‌. ''காக்கா காகா நு பாடவும், வாயிலிருந்த வடை கீழே விழுந்தது. நரி வடையைத் தூக்கிட்டு ஒடீ விட்டது, காக்கா ஏமாந்து போயிடுச்சு''இது தான் நாம் வழக்கமா சொல்வது. பிள்ளைகள் மாத்தி யோசிச்சி சொன்ன முடிவுகள் இதோ

!. காக்கா வடையை பாதுக்காப்ப‌ தன் கால்களில் வைத்துக் கொண்டு 'கா கா கா'' நு பாடிட்டு வடையை தின்றது.

2. காக்கா வடையை முழுவதையும் சாப்பிட்டு முடித்து விட்டு நிதானமா நரியைப் பார்த்து சொன்னது, ''எங்கத் தாத்தா பாட்டி எமாந்து இருக்கலாம், நாங்க‌ இப்ப‌ உன்னை விட‌ புத்திசாலிகள் நாங்க‌ ஏமாற மாட்டோம் ''''இப்ப‌ என்ன‌ பண்ணுவே, இப்ப‌ என்ன‌ பண்ணுவே''நு கும்மியடித்தது.

3. 'நரி அண்ணா, நரி அண்ணா நீ அப்பவே எனக்கு சொல்லி இருந்தா நா அந்தப் பாட்டியை ஏமாற்றி இரண்டு வடையை தூக்கிட்டு வந்து இருப்பேனே''நு காக்கா நரியை பார்த்து சொன்னது.

4.'''நரியே நரியே நீ ஏன் சும்மா நீ அழகா இருக்கே பாட்டுப்பாடுனு கத்திக்கிட்டு இருக்கே, நானே இந்த‌ ஊசிப் போன‌ வடையை யார் தின்பது நு கவலையா இருந்தேன் நீயே வந்துட்டே இந்தா உனக்கே வடை''வீசி விட்டது.

5.நரியே நரியே நீ கபாலி மாதிரி திரும்பத்திரும்ப‌ வந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருப்ப‌, இந்தா இந்த‌ வடையை நீயே எடுத்துக்கோ'நு காக்கா கொடுத்துவிட்டது.

6. நரித் தாத்தா, நாங்க‌ கறுப்புனு எங்களை கேலி பண்ணாம‌ , எனக்கு பசிக்குதுனு கேட்டு வாங்கி சாப்பிடு, ஓகேவானு ''காக்கா நட்பா நரியைப் பார்த்தது.

7. காக்கா நரியிடம்,'''நாங்க‌ இப்போ பேர் அன்ட் ல்வெள‌ லி போட்டு சினிமா ஸ்டார் மாதிரி இருக்கோம் , இன்னும் எவ்ளொ நாளைக்கி காக்கா நீ கருப்பு கருப்புனு சொல்வ‌, உன் கருப்புக் கண்ணாடியை மாத்து''' சொல்லிச் சிரித்தது.

நாம‌ நம்ம‌ பிள்ளைகளுக்கு சின்ன‌ சின்ன‌ கதைக்களைச் சொல்லி ,மாத்தி யோசிக்கச் சொல்லி அவர்களது கற்பனைத் திறனை வளர்க்க‌ வேண்டும் அவசியம்.

3
Average: 3 (2 votes)

கோடை விடுமுறை டிப்ஸ்

பானகம்

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். ஆனால் கோடை வெயிலின் அருமை வெயிலுக்குத் தான் தெரியும். அதுவும் வெயிலுக்கு பேர் போன‌ வெயிலூர் பட்டம் பெற்ற‌ வேலூரில் வசிக்கும் நாங்கள் படும்பாடு அந்த‌ அக்னி பகவானுக்கே வெளிச்சம்.
எதோ தேர்வு எழுதினோமா, பள்ளிக்கு லீவு விட்டாங்களா, பாட்டி வீட்டுக்குப் போனோமா, ஜாலியா இருந்தோமோ என்பதே கனவாகி விட்டது. ஊருக்குப் போகலாம்னு சொன்ன‌ உடனே அவங்க‌ வீட்டில் ஏ சி இருக்கா என்பதே அனைவரின் முதல் கேள்வியா இருக்கு. இல்லைனு சொல்லிட்டா அப்போ யார் வீட்டுக்கு வேண்டாம்
நம்ம‌ வீட்டிலேயே ஏ சி யிலே நிம்மதியா இங்கேயே இருப்போம் என்பதே அனைவரின் ஒட்டு மொத்த‌ தீர்மானமாகி விடுகிறது. இதுதா இப்போ காலத்தின் இல்ல‌, இல்ல‌ கோடையின் கொடுமையாகி விட்டது.

சரிங்க‌ நம்ப‌ ஊரோ வெளியூரோ கோடை வேயிலை ஜெயிக்கனுங்க‌. அதுக்கான‌ டிப்ஸ் பதிவு தான் இது.

1. பழைய‌ சாதத்தில் உப்புப் போட்டு அதிகமா தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து குடிக்கலாம். அதுவும் மாங்காயை ரெயின்போ ஷேப்லே வெட்டி வைத்துக் கொண்டு ''ஒரு வாய் கஞ்சி ஒரு கடி மாங்காய்''நு பாடிக்கொண்டே குடிச்சிப் பார்ங்க‌ அதுவும் ஒரு பத்து மணி வேயிலுக்கு குடிங்க‌ அப்பாடா அதுதாங்க‌ விருந்துனு தோனும். அம்மா பாடு தான் திண்டாட்டம் ஏன்னா பழைய‌ சாதத்துக்காக‌ சாதம் வடிக்க‌ வேண்டிய‌ அதிகப்படியான‌ வேலையாகி விடும்.

2. பானகம் நமக்கு தேவையான‌ தண்ணிரில் வெல்லம் போட்டு நன்கு கலக்கவும். வெல்லம் கரைந்தவுடன் அதில் இஞ்சி சிறிது சிறுசிறு துண்டுகளா நறுக்கிப் போடவும். அளவாக‌ எலும்பிச்சை சாறு சேர்க்கவும். உப்பும் சிறிது சேர்க்கவும். பச்சை மிளகாய் ஒன்று கீரிப்போடவும். வறுத்த‌ வேப்பம்பூ பொடி சிட்டிக்கை சேர்க்கலாம். இந்த‌ சுவையான‌, சத்தான‌ பானகத்தை பிற்பகல் பனிரெண்டு மணிக்கு குடித்தோம் என்றால் அதுதாங்க‌ தேவாமிர்தம்.

3. ஊறவைத்த‌ அரிசி, தேங்காய், பாதாம் பருப்பு. முந்திரி, எலக்காய் அனைத்தையும் மசிய‌ அரைத்து பாயசம் போல் நீர்க்க‌ காய்ச்சி, ஒரு தேக்கரண்டி நெய்யும் சேர்த்து மாலை நான்கு மணிக்கு குடிங்க‌. இதுதாங்க‌ ''சீக்ரட் ஆப் நம் எனர்ஜி'' நு சவால் விடும்.

4.இரவு பத்து மணிக்கு அழகா , ஆசையா, இன்சுவையான‌ ஒரு குல்பி ஐஸை கடிச்சி, நக்கி, அதகளம் படுத்தி ரசித்து சாப்பிட்டோம்னா போதுங்க‌ கோடை காலத்தை ஜெயித்து விடுவோம்.

5. இருக்கவே இருக்கு நமக்குத் தெரிந்த‌ ராகி கூழ், கம்பக் கூழ், மோர். நுங்கு, இளனீ.
என்ன‌ வேயில் ஊரான‌ வேலூர்வாசிகளான‌ நாங்களே கோடைக்காலத்தை ஜெயிக்கும் போது மற்ற‌ ஊர் சகோதரிகள் கோடைக்காலத்தை ஜெயிக்காமலா போய்விடுவீர்கள். ஜெயித்து விட்டு வாங்க‌ அடுத்த‌ பதிவில் பேசலாம். பை....பை.

4
Average: 3.7 (3 votes)