பொதுப்பிரிவு

குப்பையான விஷயம் அல்ல

’க்ளீன் இந்தியா’ என்ற முழக்கம் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

குப்பையை தரம் பிரித்துப் போடுங்கள் என்று சென்னை மாநகராட்சி சில வருடங்களூக்கு முன்னால் கேட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்.

வண்ண வண்ண குப்பைத் தொட்டிகளும் வீட்டுக்கு வீடு கொடுத்தார்கள் என்று சொல்லப்பட்டது.

அரசாங்கம் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நாமே குப்பைகளை தரம் பிரித்துக் கொட்டினால், வீட்டுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

எப்படி என்று பார்ப்போம்.

குப்பைகளைக் கீழ்க்கண்ட பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்;

1) மறு சுழற்சி செய்யக் கூடிய ஈரமான குப்பை(வெட் ரீசைக்ளபிள்)

2) மறு சுழற்சி செய்யக் கூடிய உலர்ந்த குப்பை(ட்ரை ரீசைக்ளபிள்)

3) மறு சுழற்சி செய்ய இயலாத பயோ மெடிகல் குப்பை

4) எலெக்ட்ரானிக் குப்பை எனப்படும் ஈவேஸ்ட்

5) இது தவிர காயம் ஏற்படுத்தக் கூடிய உடைந்த பொருட்கள்

ஒவ்வொரு பிரிவிலும் பொதுவாக வரக் கூடியவை என்னென்ன என்று பார்க்கலாம்:

1. வெட் ரீசைக்ளபிள்

அடுக்களைக் குப்பை மற்றும் தோட்டத்துக் குப்பை என்று சொல்லப்படும் கிச்சன் வேஸ்ட் மற்றும் கார்டன் வேஸ்ட்
காய்கறிக் கழிவு, மட்டன், சிக்கன், சாதம், டீத்தூள், காப்பித்தூள், முட்டை ஓடு, எலும்புத்துண்டு, பழங்கள், பேப்பர்கள், மரத்தூள், தீக்குச்சி போன்றவை இந்தப் பிரிவில் வரும்.

இவைகளை மக்க வைத்து, உரமாக்க முடியும்.

2. ட்ரை ரீசைக்ளபிள் வேஸ்ட்:

ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், கேரி பேக், ப்ளாஸ்டிக் பொம்மைகள், எண்ணெய்க் குப்பிகள், பேஸ்ட் , சீப்பு, பென்சில், ஃபைல், பேனா, முட்டை டப்பா, அட்டை டப்பாக்கள், அட்டை மற்றும் ப்ளாஸ்டிக் கப்கள், தட்டுகள், அலுமினிய ஃபாயில்கள், பிஸ்கட் ரேப்பர்கள், பாத்திரங்கள், ஹேங்கர்கள், தேங்காய் சிரட்டை போன்றவை இந்தப் பிரிவில் வரும்.

இவற்றை மறு சுழற்சி செய்ய முடியும்.

3. நான் ரீசைக்ளபிள் பயோ மெடிகல் வேஸ்ட்:

உபயோகப்படுத்தப்பட்ட சிரிஞ்சு, கத்தரிக்கோல், கத்தி, பிளேட், ரேஸர், சேஃப்டி பின், குண்டூசி, ஜாடி, நகம், தலைமுடி, பூட் பாலிஷ், டயாபர்கள், நாப்கின், க்ளவுஸ், பூச்சி மருந்து பாட்டில், லிப்ஸ்டிக், காலாவதியான மருந்து, மாத்திரைகள், காது பட்ஸ், பஞ்சு போன்றவை இந்தப் பட்டியலில் வரும்.

இவற்றை நன்றாக பேக் செய்து, டிஸ்போஸ் செய்து விட வேண்டும்.

4. ஈ வேஸ்ட்:

மொபைல் ஃபோன், சார்ஜர், சி.டி.க்கள், டிவிடி, மைக்ரோ அவன், ரிமோட், கார் பேட்டரி போன்றவை இந்தப் பிரிவில் வரும்.

இது தவிர – குப்பையை எடுப்பவர்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு, உடைந்த கண்ணாடி, பீங்கான் தட்டு மற்றும் கிண்ணங்கள் போன்றவற்றை, தனியாக, கவனமாக டிஸ்போஸ் செய்ய வேண்டும்.

இப்படி ஒரு பழக்கத்தை ஆரம்பித்தால், சுற்றுப்புற சூழலும் நாமும் நலமுடன் இருக்கலாம்.

செய்யலாம்தானே!!!

5
Average: 5 (2 votes)

சுயமரியாதை

அறுசுவை மக்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
அனைவரும் எவ்வாறு இருக்கிறீர்கள்? மன்னிக்கவும், இங்கு சரியாக பங்கெடுக்காமைக்கு. ஏனோ திடீரென்று இந்த தளத்தில், இந்தப் பதிவை இட ஆசை. ஒரு திரைப்படம். என் மனதை புரட்டிப் போடுகிறது.இரண்டு நாட்களுக்கு முன்பு '36 வயதினிலே' படம் பார்த்தேன். ஒரு மிகச் சாதாரணமான குடும்பக்கதை தான். என்றாலும் பெரும்பாலான பெண்கள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் மனவலி. அது வீட்டில் மிக நெருங்கிய உறவுகளே ஏற்படுத்தும் வலி. அவர்களின் கனவுகளை எவர்க்காக கலைத்து விட்டு வாழ்கிறார்களோ அவர்கள் ஏற்படுத்தும் வலி. வெளியுலகம் தரும் வலி.இதில் என்னை பாதித்தது வீட்டு மக்கள் ஏற்படுத்தும் அவமானமும் கேலியும்.

நம் பெண்கள் என்னதான் படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் தன் குடும்பத்திற்கு தான் ஒரு பொறுப்புள்ள பிள்ளையாகவே நடந்து கொள்கிறார்கள். அதற்காக தன் கனவைப்பற்றி யோசிப்பதில்லை. இந்நிலையில், தான் மதிக்கும் உறவுகள் (அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், தோழி, தோழன், தாத்தா, பாட்டி,.... மற்றும் கணவர்) எல்லாம் அவள் சுயமரியாதையை இழக்கச் செய்கிறார்கள். ஏதாவது ஒரு வேலை சரியில்லை என்றால் அவமானப்படுத்துகிறார்கள். பள்ளிகளில் படிக்கும் போது, கல்லூரியில் படிக்கும் போது இருக்கும் திறமைகள் மண்ணோடு ஊற்றி மூடப்படுகின்றன. இதற்கு சுற்றுப்புறம்,சூழ்நிலை, பழக்க வழக்கம், உறவுகள் மட்டுமல்லாது பெண்களாகிய நாமும் காரணம்.

பெண்களே முதலில் நாம் நம்மை நேசிப்போம். நம் சுயத்தைக் காப்போம். சுயமரியாதையோடு வாழ்வோம். நமக்கும் சுய மரியாதை உண்டென்பதை உலக்கு நிருபிப்போம். சுயமரியாதை என்பது தலைக்கணம் அல்ல. திமிரல்ல. பெரியோர்களை மதிக்காமல் இருப்பதல்ல. தாந்தோன்றித்தனமல்ல. பெண்ணின் உணர்ச்சி. மானம். உரிமை. ஆகவே நமக்கு நாமே போட்டிருக்கும் வட்டத்திலிருந்து வெளிவருவோம். சாதனைகள் பல புரிவோம்.

கடைசியாக படத்தின் ஒரு கேள்வி என்னை இவ்வாரெல்லாம் யோசிக்க வைத்தது. எண்ணிக்கை மறந்து விட்டது.

'நம் பாரதத்தில்
இவ்வளவு குடியரசு தலைவர்களில் ஒரே ஒருவர் தான் பெண்.
இவ்வளவு பிரதமர்களில் ஒரே ஒருவர் தான் பெண்.
ஏன்,நம் நாட்டில் திறமையான பெண்கள் எண்ணிக்கை அவ்வளவு குறைவாக உள்ளதா!

5
Average: 5 (2 votes)

அன்னையர் தின‌ வாழ்த்துக்கள்

அழகே, அமுதே என்று அழைத்து
ஆராரோ பாடியவள்
கண்ணே, கற்கண்டே என்று அழைத்து
களிப்புடன் கதை சொண்ணவள்.

தடம் பார்த்து நடப்பவனையும் தடம்
பதிக்கச் செய்தவள் அவள்
புடம் போட்டு பார்த்தாலும் குறை
காண‌ முடியாத‌ தெய்வம் அவள்.

தெய்வம் எங்கே என்பவர்களுக்கு
உன்னைப் பெற்ற‌ அன்னையை காட்டு
அன்னை ஓர் கோயில் என்ற‌
அரிச்சுவடியை நம் சந்ததிக்கு சொல்லி வழிகாட்டு.

அன்னையர் தினத்தில் மட்டுமே
வணங்கி உனக்கு பெருமை தேடாதே
ஆண்டு முழுவதும் ஆராதிக்க‌ வேண்டிய‌
தியாக‌ தீபம் என்பதை புரிந்து பாராட்டு.

குழந்தைகள் என்பது அன்னையின் கௌரவச் சின்னம்
அந்த‌ அன்னையின் கௌரவத்தை
நாம் காப்பாற்றுவோம் வாழ்த்துக்கள் சொல்லி
அன்னை, அன்னையான‌ அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

5
Average: 5 (2 votes)

என் சமையலறையில் 2

பொடி வகைகள் தயாரிப்பது பற்றி சென்ற‌ பதிவில் பார்த்தோம். இப்போது வீட்டிலேயே தயாரிக்கும் மாவு வகைகளைப் பற்றி பார்ப்போம்.

முதலில் நாம் அதிகம் பயன்படுத்தும் கோதுமை மாவு.

பஞ்சாப் கோதுமை = 1 1/2 கிலோ (உருண்டை)
சம்பா கோதுமை = 1/2 கிலோ
கடலைப் பருப்பு = 100 கிராம்
மக்காச்சோளம் = 100 கிராம்
சோயாபீன்ஸ் = 50 கிராம்

இவை அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்தி மிஷினில் கொடுத்து மிகவும் நைசாக‌ அரைத்துக் கொள்ளவும்.

இதில் சப்பாத்தி செய்தால் ஆறிய‌ பின்பும் கூட‌ சப்பாத்தி மிருதுவாக‌ இருக்கும். அதற்குக் காரணம் சம்பா கோதுமை சேர்ப்பது தான். இந்த‌ முறையில் அரைத்து சப்பாத்தி செய்து பாருங்க‌. அப்புறம் நீங்க‌ தான் கிச்சன் குயின் மாதிரி சப்பாத்தி குயின்....

நாம் கடையில் வாங்கும் சப்பாத்தி மாவில் சப்பாத்தி சாஃப்ட் ஆ வருவதற்காக‌ என்னென்ன‌ சேர்க்கிறாங்க‌ தெரியுமா? சோடா சேர்ப்பாங்கன்னு சொல்றீங்களா?
அது மட்டும் இல்லீங்க‌.

வைக்கோலை அரைத்து தூளாக்கி சேர்க்கிறாங்க‌.ஒரு பிரபலமான‌ பிராண்டில‌ இப்படி சேர்ப்பதாக‌ மிகவும் நம்பத்தகுந்த‌ தகவல் எனக்கு கிடைத்துள்ளது. உங்க‌ வீட்ல‌ கூட‌ அந்த‌ பிராண்டு தான் வாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.

நான் எப்பவும் கோதுமை வாங்கி அரைத்து கொள்வதே எனது வழக்கம்.

அடுத்து பச்சரிசி மாவு

புட்டு மாவு, இடியாப்ப‌ மாவு, முறுக்கு மாவு இப்படில்லாம் கடையில் வாங்குறோம்.

ரொம்ப‌ ஈசிங்க‌.
பச்சரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிட்டு, நீரை வடித்து விட்டு, ஒரு துணியில் போட்டு நிழலில் உலர்த்தி எடுக்கவும். ஈரம் மட்டும் உலர்ந்தால் போதும். மிஷினில் கொடுத்து புட்டு மாவு என்றால் கொஞ்சம் பரபர‌ என்று அரைக்கணும். மாவை நன்கு வறுத்து சல்லடையில் சலித்து கப்பியை மிக்சியில் அரைத்து மீண்டும் வைத்துக் கொள்ளவும்.

இதிலே புட்டு, கொழுக்கட்டை செய்யலாம்.
இதையே நல்லா நைசா அரைத்துக் கொண்டால் இடியாப்பம் செய்யலாம்; கடலைமாவு கலந்து காராசேவு, ஓமப்பொடி செய்யலாம். உளுந்தம்மாவு கலந்து முறுக்கு செய்யலாம்.

இந்த‌ வறுத்த‌ பச்சரி மாவில் செய்யும் முறுக்கு நல்ல‌ வெள்ளையாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும். உளுந்தம் மாவும் உளுந்தம்பருப்பை பக்குவமாக‌ வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளலாம்.

அரிசிமாவு , உளுந்தம்மாவு 4: 1 என்ற‌ கணக்கில் கலந்து உப்பு, சீரக‌ம், எள் கலந்து வைத்துக் கொண்டால் நினைத்த‌ நேரம் முறுக்கு பிழிந்து கொள்ளலாம். இது போலவே தான் காரசேவும் பிழியலாம்.

கடலைப் பருப்பை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டால் கடலை மாவு ரெடி. ஒரு முறை அரைத்துப் பாருங்க‌. அப்புறம் கடையில் வாங்கும் கடலைமாவை நீங்க‌ ஏறெடுத்தும் பார்க்க‌ மாட்டீங்க‌. சுவையில் அத்தனை வேறுபாடு தெரியும். மீதியை இருக்கவே இருக்கு ஃபிரிஜ். அதிலே பாதுகாக்கலாம். வண்டு விழாது.

உங்க‌ வீட்டுக் குட்டீசுக்கு பாலில் கலந்து கொடுக்க‌ என்னென்னவோ பொடிகளை வாங்குவீங்க‌. அதிலே என்ன‌ சேர்த்திருக்காங்கன்னே தெரியாது.
நான் சொல்லுவதை ரெடி பண்ணிக் குடுங்க‌.

கேழ்வரகு = 1/4 கிலோ
பாதாம் = 50 கிராம்
பிஸ்தா = 50 கிராம்
முந்திரி = 50 கிராம்
வேர்க்கடலை = 50 கிராம் (வறுத்தது)
சுக்கு = ஒரு துண்டு
ஏலக்காய் = 10
குங்குமப்பூ = சிறிது

கேழ்வரகை வறுக்கவும். மிக்சியில் அரைக்கவும். நட்ஸ்லாம் போட்டு தனியே மிக்சியில் அரைக்கவும். அனைத்தையும் சேர்த்து சல்லடையில் சலித்து கப்பியை மீண்டும் அரைக்கவும். நைசாக‌ அரைத்தால் நல்லது.

ஒரு கப் சூடான‌ பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைப் போட்டு, தேவையான‌ வெல்லம் கலந்து ஒரு நிமிடம் கொதிக்க‌ வைத்து எடுங்கள். மிகவும் சுவையான‌ ராகி மால்ட் ரெடி. நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

இரவு உணவுக்குப் பின் பருக‌ ஏற்ற‌ பானம்.

பாதாம் மற்றும் வேர்க்கடலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

செய்து பார்த்து குட்டீசுக்கும், உங்களுக்கும் பிடிச்சுதான்னு சொல்லுங்க‌ தோழீஸ்.

5
Average: 5 (6 votes)

என் சமையலறையில் 1

நம் குடும்பத்தினரின் ஆரோக்கியம் நம் சமையலறையில் உள்ளது. இயற்கையான‌ உணவுமுறைகளை கடைப்பிடித்தால் நோய் வருவதை அனேகமாக‌ தடுத்து விடலாம். நமது உடலிலும் எதிர்ப்புசக்தியை பெருக்கிக் கொள்ளலாம்.

உணவகங்களில் உணவு வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உணவு மட்டுமல்ல‌ சமையலுக்குத் தேவையான‌ பொடி வகைகளைக் கூட‌ கடையில் வாங்காமல் நாமே தயாரிப்பது மிகவும் நல்லது.

என் சமையலறையில் நான் தயாரித்து வைத்திருக்கும் பொடி வகைகளைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் மங்களகரமான‌ மஞ்சட்பொடி.

கடையில் வாங்கும் பாக்கெட் மஞ்சட்பொடியில் மரத்தூளும் கலருக்காக‌ கெமிக்கலும் சேர்க்கிறார்கள். கடையில் விற்பனை செய்யப்படும் மஞ்சட்பொடியை தவிர்த்து இனி நாமே மஞ்சட்பொடியை தயாரிக்கலாம்.

அரைக்கிலோ துண்டு மஞ்சளை வாங்கி வெயிலில் நன்கு உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். நூறு கிராம் அளவு எடுத்து கிச்சன் டிராயரிலும் மீதியை ஃபிரிஜிலும் வைத்து விடுங்கள். வண்டு விழாது. தீரத்தீர‌ எடுத்துக் கொள்ளலாம். நாமும் கலப்படத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அடுத்து வர்றவங்க‌ காரத்தின் ராணியான‌ மிளகாய்ப்பொடி . இதிலும் எடைக்காக‌ செங்கல் பொடி கலப்பதாக கூறுகின்றார்கள். கலருக்காக‌ சில‌ கெமிக்கல்ஸ். எதற்கு வம்பு.

அரைக்கிலோ மிளகாய் வற்றலை வாங்கி வெயிலில் நன்கு உலர்த்தி காம்பை மட்டும் ஒடித்து விடவும். கிரீடம் (ராணியிடமே) மிளகாயிலேயே இருக்கட்டும். மிஷினில் அரைத்து பாதியை ஃபிரிஜிலும் மீதியை கிச்சன் டிராயரிலும் ஸ்டோர் செய்யவும். சுத்தமான‌ மிளகாய்ப்பொடி ரெடி.
இது போலவே மல்லிப்பொடியும் தயாரிக்கலாம்.

ஐம்பது கிராம் நல்ல‌மிளகை லேசாக‌ வறுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொண்டால் நல்ல‌ நல்லமிளகுப் பொடி கிடைக்கும். அப்படியே சீரகப்பொடியும் செய்யலாம்.

பனங்கற்கண்டை மிக்சியிலிட்டு பொடித்து வைத்துக் கொண்டால் நினைத்தவுடன் கற்கண்டு மிளகுப் பால் தயாரிக்கலாம்.

சாம்பார் பொடி, கறிமசால் பொடி, ரசப்பொடியும் நீங்களே தயாரித்து உங்கள் கைவரிசையை காட்டுங்கள்.

காரக்குழம்பு மற்றும் மீன்குழம்புக்கு பொருத்தமான‌ குழம்புப் பொடியை என்னோட‌ பாட்டியம்மா தயாரிக்கும் முறையை இங்கே கூறுகின்றேன்.

மஞ்சள் ‍= நாலு துண்டு
மிளகாய் வற்றல் ‍ = கால் கிலோ (வெயில் உலர்த்தவும்)
தனியா (மல்லி) = கால் கிலோ
கடுகு = நாற்பது கிராம்
மிளகு = 3 தேக்கரண்டி
சீரகம் = இருபது கிராம்
வெந்தயம் = ஒரு தேக்கரண்டி
சோம்பு (பெருஞ்சீரகம்) = இரண்டு தேக்கரண்டி (விரும்பினால்)
கடலைப்பருப்பு = இரண்டு மேஜைக்கரண்டி
துவரம்பருப்பு = இரண்டு மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை = சிறிது

அனைத்தையும் பக்குவமாக‌ வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டால் இரண்டு மாதத்திற்கு குழம்புப் பொடி ரெடி.
தான்க்ஸ் பாட்டிம்மா:)))

அடுத்து வருபவர் பெருங்காயம். சொல்லும் போதே காற்றில் மணம் வீசுது.
அனேகமா நீங்க‌ எல்லோருமே காயப்பொடி தான் வாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.
இனிமே கட்டிக்காயம் வாங்கி ஈரப்பதமாக‌ இருந்தால் சிறியதாக‌ நறுக்கி மூன்று நாட்கள் அப்படியே ஒன்றோடொன்று ஒட்டாமல் வைத்து உலர்த்திக் கொள்ளலாம்.
நன்கு உலர்ந்ததும் மிக்சியில் இட்டு ரெண்டு சுற்று சுற்றினால் காயப்பொடி கிடைக்கும். கலப்படமில்லாத‌ மணமிக்க‌ பொடியாக‌ இருப்பதை உணரலாம்.

இப்படியே மாவு வகைகளையும் நாமே தயாரிக்கலாம். அதைப் பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

இனி முடிந்தவரை இந்தப் பொடிவகைகளை பாக்கெட் பாக்கெட்டாக‌ கடையில் வாங்கி அடுக்காமல் நீங்களே தயாரிக்க‌ முயலுங்கள்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்:))))) ....

5
Average: 4.5 (4 votes)

சித்திரை முதல் பங்குனி வரை

சித்திரையில் புதுமனையில் புகுந்து விட்டேன்
வைகாசியில் இதயத் துடிப்பை அறிந்துக் கொண்டேன்
ஆனியில் என் ஆனந்தத்தை ஆராதித்துக் கொண்டேன்
ஆடியில் ஆசையான‌, ஆறுதலான‌ தொடுதலை உணர்ந்துக் கொண்டேன்

ஆவணியில் அதிரடியான‌ அசைவுகளை தெரிந்துக் கொண்டேன்

புரட்டாசியில் புலன்களின் செயல்களை புரிந்துக் கொண்டேன்
ஐப்பசியில் சப்த‌ ஸ்வரங்களின் இசையை கேட்டுக் கொண்டேன்
கார்த்திகையில் களிப்புடன் தண்ணீரில் சுழலக் கற்றுக் கொண்டேன்

மார்கழியில் களப் பயிற்சி கொண்டு தலைக் கீழாக‌ மாறி நின்றேன்
தையில் தாயைக் காண‌ பத்துமாத‌ பந்தத்தை உடைத்து வெளி வந்தேன்
மாசி, பங்குனி இரண்டு மாதத்தில் உலகத்தையே வெறுத்து விட்டேன்
செயல் மொத்தம் இனிமேல் எனதே என்பதை அறிந்து நொந்து விட்டேன்

தாய் சேய் பந்தத்தில் கருவறையில் இருந்த‌ பத்து மாதம் மட்டுமே
நான் வாழ்ந்த வசந்தமான‌, வரமான‌ வாழ்க்கை என்பதை.

[அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ]]

5
Average: 5 (4 votes)

ரோஜா

நியூஸிலாந்தில் குடியேறிய ஆரம்பத்தில் வாடகைக்கு இருந்த வீட்டுத் தோட்டத்தில் சின்னதாக ஒரு செடி - வித்திலைகளோடு மட்டும் வளர்ந்திருந்தது. வித்தியாசமாக இருக்கவும் அதனை வளரவிட்டு வேடிக்கை பார்த்தேன். சிறிய, பிளவுபட்ட வட்டமான இலைகளோடு இருந்த அந்தக் குட்டிச் செடி எதனாலோ ரோஜாவை நினைவுபடுத்திற்று.

பக்கத்து வீட்டு லின் - தன் சொந்த வீட்டில் குடியிருந்த காரணத்தால் ஒட்டுமொத்த தோட்டப்பரப்பையும் அதனோடு சேர்த்து, பிரதான வீதியிலிருந்து வாகனம் நிறுத்தும் இடத்தை இணைக்கும் பாதையின் இரு புறத்தையும் தனதாகப் பாவித்து பூந்தோட்டமாக்கியிருந்தார். எந்த ஒரு சிறு நிலப்பரப்பும் வீணாகாமல் எங்கு பார்த்தாலும் பூஞ்செடிகள் - பல விதங்களில், பல வர்ணங்களில் பெரிதும் சிறிதுமாக மலர்கள் வருடம் முழுவதும் பூத்திருக்கும்.

அவர் விதம்விதமாக ரோஜாக்கள் வளர்த்துவந்தார். எப்படியோ தப்பி என் தோட்டப் பகுதிக்குள் வந்து வீழ்ந்த ரோஜா விதை ஒன்று முளைக்க ஆரம்பித்திருந்தது.

அது புகைப்படச் சுருள் போடும் புகைப்படக் கருவியும் கிலோக் கணக்கில் பாரமான அலைபேசியும் மட்டும் கையிலிருந்த காலம். அந்த ரோஜாச் செடியின் படம் எதுவும் கைவசம் இல்லை. ;(

ரோஜாக் கன்றைக் கவனமாக வளர்ந்து வந்தேன். வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்தது. பிறகு... அப்படியே விட்டுவிட்டு அடுத்த வீட்டிற்கு குடிபெயர்ந்தோம். ரோஜாவுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

என் தற்போதைய வீட்டுத் தோட்டத்தில் அடிக்கடி ரோஜாக் கன்றுகளைக் காண்கிறேன். பொருத்தமில்லாத இடத்தில் வளர்ந்து வைப்பதால் பிடுங்கிப் போட்டுவிடுவேன். இங்கு கோடை விடுமுறையில்தான் முளைவிட ஆரம்பிக்கிறது. மூன்று நான்கு மாதங்களுக்குள் ஒரு அடி உயரம் வளர்ந்துவிடும்.

ரோஜாப்பழம் (rose-hips) சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக அனைத்து ரோஜாக்களுமே சாப்பிடுவதற்கு உகந்தவைதான் என்கிறார்கள். இதழ்களைச் சாப்பிட முடிந்தால் அந்த ரோஜாவின் காய்களும் சாப்பிடக்கூடியவைதான். ரோஜாக்களின் மொட்டுக்களிலிருந்து தேநீர் தயாரிக்கலாம். அவற்றில் காய்களிலிருந்தும் தேநீர் தயாரிக்கலாம். (இதனைத் தேநீர் என்று அழைப்பது சரியா!!)

இந்த இடுகையிலுள்ள படங்களில் காணப்படுபவை வாசனையான மென்சிவப்பு ரோஜாவின் பழம் - சாப்பிட, திகட்டாத மெல்லிய இனிமையை நா உணரும்.

@}->-- @}->-- @}->-- @}->-- @}->-- @}->-- @}->-- @}->-- @}->-- @}->-- @}->-- @}->--

ரோஜாவைக் கேக் அலங்காரத்தில் பயன்படுத்தும் முறை - 'ஃப்ரொஸ்டிங்' (frosting). எப்படிச் செய்வது என்பதை அறிய - http://www.arusuvai.com/tamil/node/27188

ரோஜா குல்கந்து செய்முறை இங்கே - http://www.arusuvai.com/tamil/node/30515

5
Average: 5 (4 votes)

விட்டுச் செல்வோம்!!

அறுசுவை மக்களுக்கு வணக்கமுங்க...

சமீப காலங்களில் படிக்கிற, கேள்விப்படுகிற விஷயங்கள் ஒவ்வொன்றும் ஒரு பீதியை கிளப்பி விடுவதாகவே இருக்கு மக்களே!!

உலகம் எதை நோக்கி போகுது? நாம் எதை நோக்கி போகிறோம்? இதையெல்லாம் யோசிச்சா? கடைசியில் குழப்பமே மிஞ்சுகிறது........

சரி, நடப்பதை நம்மால் மாற்றமுடியாது! நம் வரையில் நாம் சரியாக இருப்போம்னே வைத்துக்கொள்வோம்!

நம் அனைவரின் மனதிலும் இருப்பது, ஒரு நல்ல வாழ்க்கைத் துணை, அதன்பின் குழந்தை.... அதன்பிறகு அவர்களின் எதிர்காலம்......இப்படித்தானே, ஒரு சாமானிய மனிதனின் ஆசை இருக்கிறது!!

இதில் என்னுள் இருக்கும் கேள்வி என்னவென்றால்...... நாமெல்லாம் நம் குழந்தைகளின் எதிர்காலம்னு எதை நினைக்கிறோம்? ஆரோக்கியமான உணவு... .நல்ல கல்வி... நோய் நொடியில்லாத வாழ்க்கை.....

அவர்களுக்கு பிடிச்ச துறையில் ஒரு நல்ல வேளை....வாழ ஒரு அருமையான வீடு........இப்படியெல்லாம் அமைத்துக் கொடுத்துவிட வேண்டும் என போராடிக்கொண்டிருக்கிறோம்!! இல்லையா?

உண்மையில் இவையெல்லாம் பெற்றுவிட்டால் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்துவிடமுடியுமா??? இதையெல்லாம் அனுபவிக்க அவர்களுக்கு ஒரு இயற்கையான உலகம் வேண்டாமா???

இது என்னம்மா கேள்வி? இப்ப இருக்கிறது இயற்கையான உலகம் இல்லாம வேறென்ன? அப்படீன்னு கேட்பவர்கள் எல்லோரும் நல்லா.... நல்லா யோசித்து பார்ப்போமாக........

இப்ப இருக்கிற நிலமையில்......குடிக்க நல்ல தண்ணீர் இல்லை.......சுவாசிக்க கார்பன் கலக்காத காற்று இல்லை......பாதி நேரம் மின்சாரம் இல்லை......வேண்டியபோது மழை இல்லை........நஞ்சு கலக்காத உணவு இல்லை.....ஆற்றில் நீர் இல்லை ((மிஞ்சி இருக்கிற மணலையும் அள்ளிப்போடுறாங்க))........இன்னும் என்னென்னவோ இல்லை...இல்லை...இல்லைதான்.......

இருக்குன்னு சொல்லிக்கிற எல்லாமே செயற்கைதானே.......வெறும் சிமெண்ட் கட்டடங்களும்.......கலர் கலரான உணவுகளும்.........மேம்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுமே நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு போதுமா???

நாம் குழந்தைகளாக இருந்தபோது பார்த்த மரங்கள், செடிகொடிகள்....நீர் நிலைகள்....விலங்குகள்........விளையாடிய விளையாட்டுக்கள்.......இயற்கையாக நாம் அனுபவித்த அனைத்தும், நம் குழந்தைகளுக்கும்......அவர்களின் வாரிசுகளுக்கும் கிடைக்க வேண்டாமா????

யோசிப்போம் மக்களே! எதை விட்டுச் செல்கிறோமோ? இல்லையோ? கொஞ்சமே கொஞ்சமாவது நம் குழந்தைகளுக்கு இயற்கையை விட்டுச் செல்வோம்!!!

இயற்கையை பாதுகாக்க, நம் ஒவ்வொருவராலும் என்னென்ன செய்ய முடியுமோ! செய்வோமா???

5
Average: 5 (1 vote)

உயரங்கள்

பாடசாலைக்குச் செல்ல ஒற்றை பஸ் கிடைக்காது எனக்கு. ஒன்றில் பதினைந்து நிமிட நடையில் பென்றோஸ் புகையிரதநிலையத்தையொட்டிய தரிப்பை அடைந்து, 008 எடுத்தால் பாடசாலையின் முன்பாக இறங்கலாம். அல்லது வீட்டினருகே அமைந்துள்ள தரிப்பில் 009 பிடித்து, இறங்கும் இடத்திலிருந்து பதினைந்து நிமிடம் நடக்கலாம். காலநிலை நன்றாக இருந்தால் இவை இரண்டுமே ரசிக்கத்தக்க விடயங்கள்தான். சில நாட்கள் பஸ் டிப்போவில் இறங்கிக் கொண்டு அடுத்த பஸ்ஸைப் பிடிப்பதுவும் உண்டு.

இந்தச் சமயம் படிக்கவென்று ஒரு தமிழ்ப் புத்தகத்தை எடுத்துக்கொள்வேன். மனது சொல்லும், 'புத்தகத்தை வீட்டிலும் படிக்கலாம். இந்தச் சந்தர்ப்பங்களையும் காணும் மனிதர்களையும் படி. மீண்டும் காணக் கிடைக்காது,' என்று. :-) பராக்குப் பார்க்கப் பிடிக்கும்.

தினமும் ஒரே முகங்கள், சிலது மட்டும் புதிதாக இருக்கும்.

எதிர்த்திசைத் தரிப்பில் ஒருவர் வந்து இறங்குவார். ஒரு குழந்தை பஸ்ஸிலிருந்து இறங்குவது போல இருக்கும் அவரது அசைவுகள். தொப்தொப்பென்று கால்களைப் பெலனில்லாதது போல வைத்து சமநிலையில்லாத நடை நடப்பார். பார்வையிலும் ஒரு பரபரப்புத் தெரியும். அவர் அண்ணாந்து சைன் போஸ்ட்டைப் படிக்கையில் எனக்குக் கழுத்து வலிக்கும். பஸ்ஸில் ஏறுவது அவருக்குச் சிரமமான காரியமாக இருக்கும். தினமும் செய்யும் காரியம் என்பதால் பழகியிருப்பார் என்று தோன்றும்..

எல்லாமே ஒரு சராசரி மனித அளவை வைத்து அமைந்திருக்கும் உலகில், உயரம் குறைந்தவர்களுக்கு மட்டுமல்ல உயமானவர்களுக்கும் கூட வாழ்க்கையில் ஏதாவது ஒரு இடம் இடிபாடாகத்தான் இருக்கும். அவரவருக்குப் பொருத்தமானபடி சமாளித்துக் கொண்டோ, சிரித்துக் கொண்டோ, போராடிக் கொண்டோ ஓடத்தான் வேண்டும்.

திருமணம் என்று வருகையில் இது பற்றிப் பேசப்படுவது அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணிற்கு வரன் அமையவில்லை. விடயத்தை எங்களுக்குச் சொன்ன உறவினர், "அவ கட்டைதானே! கஷ்டம்," என்றார். அந்தப் பெண் என்னை விட உயரம். ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று மனதுக்குள் சின்னக் கவலை. அதுவே சொன்னவரது பெண்ணாக இருந்திருந்தால்!!

உயரம் அதிகமாக இருந்தாலும் இதே போற் சிரமங்கள் இருக்கும். இவையெல்லாம் எங்கள் சமுதாய அமைப்பினால் வந்த சிரமங்கள் என்று தோன்றுகிறது. பலரது மனதும் சிந்தனைகளும் உயர வேண்டும்; விசாலமாக வேண்டும்.

பாடசாலையில் எங்கள் வகுப்பை உயரமுறைப்படி வரிசையில் நிற்கச் சொன்னால் எப்பொழுதும் நான்தான் முன்னால் நிற்பேன். (கற்பிக்கும் காலத்திலும் அதுவேதான் தொடர்கிறது.) ஆங்கில மொழிப் பிரிவில் என்னைவிடக் குட்டியாக ஒருவர் கற்றார். இன்னமும் அப்படியே இருக்கிறார். எப்பொழுதாவது பேசிக்கொள்வோம். மணமானதாகத் தெரியவில்லை. நான் விசாரிக்க நினைக்கவும் இல்லை. அவரளவில் சந்தோஷமாக வாழ்கிறார். அதுதான் முக்கியம்.

என் உயரம்... பெரிதாகப் பலர் கவனத்திற் படுவதில்லையானாலும் இமா சற்று உயரம்தான். :-)) இதன் காரணமாக.... சின்னச் சின்ன அனுபவங்கள்... பல சுவையானவை; சில சுமையானவை. :-) நேரம் கிடைக்கும்போது ஒன்றிரண்டைப் பகிரலாம் என்று நினைத்திருக்கிறேன்.

Good things come in small packages. :-)

பொதி - 1

நதியா தோடுகள் பிரபலமாக இருந்த காலம் அது. இந்தியாவிலிருந்து திரும்பும் போது மாமி எனக்காக விதம் விதமாக வாங்கி வந்திருந்தார். வேலை, முக்கிய விழாக்கள் தவிர வேறு எங்கு போவதானாலும் சேலையைத் தவிர்த்து சட்டையிலேயே கிளம்பிவிடுவேன். கூடவே பொருத்தமான நிறத்தில் காதில் நதியா தோடு ஊஞ்சலாடும். இப்போதை விட அப்போது நகப்பூச்சிலும் ஈடுபாடு அதிகம். அணியும் ஆடை, முடியை வாரும் விதம், காலணிகள் எல்லாம் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது.

அப்போது கற்பித்த பாடசாலையில் ஒரு பொருட்காட்சி நடாத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. சில பொருட்கள் வாங்கவேண்டி இருந்தது. க்றிஸ்ஸோடு கிளம்பினேன்.

புத்தகசாலையில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியேறி பைக்கில் க்றிஸ் பின்னால் ஏறி அமரும் சமயம்... வேலையிடத்தில் க்றிஸ்ஸுக்கு அறிமுகமாகியிருந்த ஒருவர் எதிர்ப்பட்டார். அதற்கு முன் நான் அந்த நபரைச் சந்தித்திருக்கவில்லை. அவர்களிருவரும் சில நிமிடங்கள் அரட்டையடிக்க ஏதுவாக வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டேன், கையில் பலவர்ணங்களில் சுருட்டிய ப்ரிஸில் போட்கள், பேனைகள் & மகனுக்காக சில கொப்பிகள்.

அரட்டை முடிந்து விடைபெறும் சமயம் நண்பர் என் பக்கம் திரும்பினார். "மகளா?" கேட்டவர், க்றிஸ்ஸிடம் பதிலை எதிர்பாராமல் தானே, 'அப்படித்தான் இருக்கும்,' என்று முடிவு செய்து கொண்டு, "நல்லாப் படியுங்கோ," என்று அறிவுரை சொல்லி நங்கென்று முதுகில் ஒரு செல்ல அடி வைத்தார். இதை எதிர்பாராத க்றிஸ் அதிர்ச்சியாகிப் பதில் சொல்லாமல் ஒரு விநாடி விழித்து வண்டியை உதைத்துக் கிளப்பினார். அந்த உதை... நண்பருக்குக் கிடைக்க வேண்டியது. :-D

பி.கு
1. யாராவது ப்ரிஸில் போட் எண்டால் என்ன? கொப்பி எண்டால் என்ன? எண்டு கட்டாயம் கேட்பீங்கள். இப்பவே சொல்லிருறன் - சார்ட் பேப்பர் & நோட்டுப் புத்தகம்.
2. மேலே இருக்கிற படம் எடுக்கேக்க சின்னவருக்குப் பன்னிரண்டு வயது. பெரியவருக்குப் பதினைந்து.

5
Average: 4.8 (5 votes)

உறவுகள்

சமீபத்தில் சீதாம்மா போட்ட போஸ்ட் எல்லாம் உறவுகள் பற்றிதான். நிறைய நல்ல விஷயங்கள் சொல்லிருப்பாங்க. கணவன் மனைவி உறவு, மாமியார் மருமகள் எல்லாம் அழகான இருவருக்குமான விட்டுகுடுத்தல் பற்றி சொன்னாங்க.

ஆனா நா(ன்)ம யாருடைய அட்வைஸ்யாவது காதில் வாங்கி போட்டு, மனதில் போட்டு சரியா நடந்துருக்கேனா நிச்சயமா இல்லை.

கோபம் வரும் போது முதல்ல நம்மகிட்ட இருந்து பறந்துபோறது நிதானம், யோசிக்கறதே இல்ல. வார்த்தைகள் விட்டுடறது. காசை போட்டா அள்ளிடலாம் ஆனா வார்த்தையை விட்டுட்டா மாறாத வடுவா நின்று உறவை சிதைக்க ஆரம்பிக்குது.

இருவர் பிரச்சனையில் மூன்றாவதாக ஒருத்தர் நுழையும் வரைக்கும் சின்ன பிரச்சனையாத்தான் இருக்கு.அடுத்தவர் வரும்போதே பூகம்பம் வெடிக்க தொடங்குது.

சமீபத்தில் என் உறவு முறையில் நடந்த பிரச்சினை அவர்களை தவிர மற்றவர்கள் பேசியே சின்ன விஷயம் ஊதி பெரிசாகிடுச்சு.

யாரிடம் எப்படி பேசணும் அப்படின்றது ஒரு கலை. அது எனக்கு இன்னும் வரவேயில்லை. இது வரை நல்லா இருந்த உறவுகளும் சில விஷயங்களால் விலகிபோகிறது. மிக சின்ன விஷயம் இப்பல்லாம் போன் யாருக்காவது செய்து பேசினால் ஒரு போன்கூட செய்ய முடியல உன்னால அப்படின்னு நான் போன் பண்ணும்போது கேட்கறாங்க.
இது கூட அவங்க போன் பண்ணி கேட்காமல் நாம பேச நினைக்கும்போது கேட்பாங்க பாருங்க . என்ன சொல்வது போங்க.

கோபத்தில் எடுக்கும் முடிவு எப்பவும் தவறாகவே முடியுது. எல்லோரையும் பத்தி புரியாத வரைக்கும் உறவுகள் நல்லாவே இருந்தது. உறவுகள் கிட்ட சலிப்பு, கோபம், பொறாமை வரும்போது அழகான உறவு சிதைய ஆரம்பிக்குது.

உறவுகளையும் நட்பை போல அளவாக வைத்திருந்தால் நல்லதுன்னு தோணுது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்மும் நஞ்சு.

சொல்லவந்த விஷயம் சரியாசொன்னனாந்னு தெரியல. ஆனா அனுபவம் நல்ல ஆசானாக இருக்கு. கற்று கொண்டே வருகிறேன். இங்கு இருக்கும் ஆசான்களிடமிருந்தும்.

நட்புக்களே

நான் இதை உறவுகள் பத்தி மட்டும்தான் எழுதிருக்கேன். எந்த நட்பையும் கஷ்டபடுத்தணும்ன்னு எழுதல புரிஞ்சுக்கோங்க மக்களே. நட்புக்கு எப்பவும் மனசுல முதல் இடம்தான்.

5
Average: 4.3 (3 votes)