பொதுப்பிரிவு

தீபத் திருவிழா

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமியை திருக் கார்த்திகை தீபமாக‌ கொண்டாடுகிறோம்.

கார்த்திகை மாதம் பிறந்ததும் எனக்கும் பழைய‌ நினைவுகள் பிறந்துவிட்டன‌.

கார்த்திகை பிறந்ததும் முதலில் வாசலில் உள்ள‌ மாடத்தில் விளக்கேற்ற‌ ஆரம்பித்து விடுவோம்.

என்றைக்கு திருக்கார்த்திகை அப்படீன்னு காலண்டரைப் பார்த்து விரல்விட்டு எண்ணிட்டே இருப்போம். ஒவ்வொரு ரூம்லயும் என்னென்ன‌ கோலம் போடலாம்னு யோசிக்கத் தொடங்குவோம். (இது தான் ரூம்போட்டு யோசிக்கிறதோ). ஹால்ல‌, வராண்டால‌, திண்ணையில‌, பூஜையறையில‌ இப்படி போடப்போற‌ கோலத்தை செலக்ட் பண்ணிட்டு காத்திருப்போம்.

தோழிகளிடம் கேட்டு புதுப்புது கோலத்தை கற்றுக் கொள்ளுவதுவும் இதே சீசனில் தான். பள்ளி செல்லும் வழியில் வீடுகளில் போட்டிருக்கும் அழகிய‌ கோலத்தை நின்று கவனித்து விட்டு பள்ளிக்குச் சென்ற‌ உடனேயே நோட்டில் வரைந்து கொள்வதும் உண்டு.

அப்போதெல்லாம் தீபத் திருநாளுக்கு பள்ளியில் லீவு கிடையாது. எங்களுக்கோ சீக்கிரமே வீடு சென்று கோலமிட‌ ஆசையாக‌ இருக்கும்.

சரி எதற்கும் எச்.எம். சிஸ்டரிடம் சென்று லீவு கேட்பதென்று தீர்மானித்தோம். நான் வகுப்பில் எப்பவும் முதல் மார்க் வாங்கும் மாணவியாதலால், என் தலைமையில் அனைத்து மாணவிகளும் எச்.எம். ரூமுக்குச் சென்றோம்.

அப்போது சிஸ்டர் வில்மா மேரி தான் எச்.எம். கண்டிப்பானவர். உள்ளே நுழைந்த‌ எங்களை "என்ன‌" என்று பார்வையாலே கேட்டார்.

'கார்த்திகைக்கு அரை நாள் லீவு விடணும் சிஸ்டர்' என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.

"நீங்கள்லாம் என்ன‌ பண்ணுவீங்க‌" ஆர்வமுடன் கேட்டார்.

"கோலம் போடுவோம் சிஸ்டர்" கோரஸாக‌ கத்தினோம்.

அன்று மதியமே நீண்ட‌ பெல் அடித்து வீட்டுக்கு விட்டாங்க‌. ஒரே சந்தோஷம் தான் போங்க‌.

வீட்டுக்குப் போனதும் பாட்டியம்மா மாக்கரைசல் தயார் பண்ணி வச்சிருந்தாங்க‌.

பச்சரிசி மாவில் கொஞ்சம் மஞ்சட்பொடியும், மைதா மாவும் கலந்து கரைத்துக் கொள்ள‌ வேண்டும். மைதா சேர்ப்பதால் கோலம் அழியாமல் வெகு நாட்கள் நிற்கும். அதில் சிறு துணியை நனைத்து உள்ளங்கையில் வைத்து நனைத்த‌ துணியை அழுத்தினால் மோதிரவிரல் வழியே மாவு வழியும். அப்படியே கோலமிட‌ வேண்டியது தான்.

இந்த‌ மாக்கோலங்கள் உலர‌ அரை மணி நேரமாவது ஆகும். மின்விசிறியை சுழல‌ விட்டு விட்டு, யாரும் மிதித்து விடாமல் பார்த்துக் கொள்வோம்.

தரையை மட்டும் அலங்கரித்தால் போதுமா? கத‌வு ஜன்னல் எல்லாம் 'எனக்கு' என்று கேட்க‌ அதையும் விட்டு விடுவதில்லை.

ஆமண‌க்கு இலையைத் தேடிப் பிடித்து பறித்துக் கொள்ளுவோம். காம்பை கையில் பிடித்தபடி இலையின் நரம்பைத் தவிர‌ மற்ற‌ பச்சையான‌ பாகத்தை பிய்த்து விடுவோம். இப்போது இலையின் நரம்பு மட்டும் ஒரு சூரியன் போல‌ * இப்படி இருக்கும். அதை தேவையான‌ சைசுக்கு சிறிய சூரியனாக‌ வெட்டிக் கொள்ளுவோம்.

அம்புட்டு தான், காம்பை லாவகமாக‌ கையில் பிடித்தபடி நரம்பு பாகத்தை மாவில் அமிழ்த்தி அப்படியே கதவில் அச்சுப் போட‌ வேண்டியது தான். மாவு நீர்க்க‌ இருந்தால் கதவில் வழிந்து விடும். சற்றே கெட்டியாக‌ தோசை மாவு பதத்திற்கு வைத்துக் கொள்ள‌ வேண்டும். கதவில் வரைந்த‌ சூரியனின் நடுவே குங்குமப் பொட்டு வைத்து விடுவோம்.

ஆமணக்கு இலை கிடைக்காதவர்கள் விரலால் வட்டப் பொட்டு வைப்பதுண்டு. சிலரோ ஐந்து விரலும் பதியுமாறு கைத்தடம் இட்டு வைக்கும் வழக்கமும் உண்டு.

அந்தக் கதவைப் பார்த்தாலே மங்களகரமாக‌ இருக்கும்.

அத்தோடு விடுவோமா? திண்ணை மற்றும் படிகளின் சைடையும் விட்டு வைப்பதில்லை. மாக்கரைசலை விரல் வழியே வடித்து விட்டுவிடுவோம். கோடு போட்ட‌து போல‌ வரிசையாக‌ படிகளின் முன்பக்கம் மாவு வழிந்து ஓடியிருக்கும் காட்சியும் அழகாகவே இருக்கும்.

இப்போதெல்லாம் வீட்டின் வழுவழுவென்ற‌ தரையும், டிசைன் போடப்பட்ட‌ கதவுமாக‌ எங்களால் முன் போல‌ கோலமிட‌ முடிவதில்லை.

இன்னும் கேளுங்க‌, விளக்குகளை எல்லாம் பாட்டியம்மா தேய்த்து தங்கமா வச்சிருப்பாங்க‌. அதுக்கு சந்தனம், குங்குமம் வைத்து பூச்சூட்டி தீபம் ஏற்றி வாசலில் கோலத்தின் மீதும், ஜன்னல் ஓரங்களிலும் அடுக்கி விட்டு தெருவில் நின்று அழகு பார்ப்போம்.

வாயுபகவான் அனுக்கிரகம் இருந்தால் மாடி பால்கனியிலும் ஜொலிக்கச் செய்வதுண்டு. சிலசமயம் காற்று பலமாக‌ வீசி வாயுபகவான் கைவரிசையைக் காட்டிவிடுவதும் உண்டு.

அப்படியே பக்கத்து வீட்டுத் தோழிகள் எல்லோரும் என்ன‌ கோலம் போட்டு இருக்காங்கன்னு பார்க்க‌ ஒரு விசிட் அடிப்பதுவும் உண்டு.

எங்கள் வீட்டின் முன் இருக்கும் மாரியம்மன் கோவிலில் எல்லோரும் கூடி ஒரே விளையாட்டு தான்.

உயரமா குச்சி நட்டு அதை ஓலையால் சுற்றிக் கட்டி வைத்து சொக்கப்பனை கொளுத்துவாங்க‌. கிட்டத்தட்ட‌ பதினைஞ்சு அடி உயரம் சொக்கப்பனை இருக்கும். அதைக்கொளுத்தி விட்டதும் எல்லோரும் ஜாலியா கத்துவோம் பாருங்க‌. ஹையோ செம‌ ஜாலி தான் போங்க‌.

இப்போது என் குழந்தைகளுக்கு சொக்கப்பனைன்னா என்னன்னே தெரியாது.

வீட்டிலே பாட்டியம்மா ஓலைக் கொழுக்கட்டை பனையோலையில் செய்து வச்சிருப்பாங்க‌. பனையோலை மணத்துடன் வருடம் ஒருமுறை மட்டுமே தயாராகும் அதன் விதவிதமான‌ செய்முறையை அடுத்த‌ பதிவில் தருகிறேன்.

இப்போது உங்க‌ வீட்டு கார்த்திகையின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள‌ வாருங்களேன்.

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.......

Average: 5 (4 votes)

ஒரு ஊர்ல.....

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவர் ரொம்ப நல்ல ராஜாவாம். இப்படி எல்லாருமே நம்ம பாட்டி, தாத்தா, அம்மான்னு நிச்சயமா கதை கேட்டிருப்போம். இல்ல அம்புலிமாமா, பாலமித்ரா இந்த மாதிரி புக்ல அழகான நல்ல கருத்துள்ள கதைகளை படிச்சுருப்போம். நான் கேட்டத விட படிச்சதுதான் நிறைய.

அம்புலிமாமா புக்ல வேதாளம் சொல்லும் கதைகளும், அந்த ஓவியமும் இன்னும் மனதில் பசுமையாய் இருக்கு. பாட்டி வடை சுட்ட கதை கேட்காத குழந்தைகள் உண்டா!

நாம நம்ம குழந்தைகளுக்கு இப்ப இது மாதிரி கதை சொல்லறோமா?

எங்க வீட்டுல வெயில் காலத்துல ரொம்ப புழுக்கமா இருக்கும். அதனால நானும், என் பசங்களும் மாடியில் போய் காத்தோட்டாம படுத்துப்போம்.
அப்ப ஜாலியா இருக்கும், சீக்கிரம் தூங்கவே மாட்டானுங்க. கதை சொல்லுங்க, கதை சொல்லுங்கன்னு உயிர் எடுத்துடுவானுங்க. நானும் ஏதாவது கதை சொல்லுவேன். கேட்டுன்னே தூங்கிடுவாங்க. சில நேரம் என் கடைக்குட்டி கதை சொல்லறேன்னு ஆரம்பிச்சு அவன் இஷ்டத்துக்கு என்னனவோ சொல்லுவான். 'ம்ம'் சொல்லியே சலிப்பாகிடும். ஆனா அவன் விடவே மாட்டான் ஏதோ அவன் கற்பனையில் சொல்லுவான். அவன் கதை ஒரு ஊரில் ஆரம்பித்தாலும் அங்கு சிங்கம், புலி ந்னு விலங்குகள் தான் வரும்.யார் கதையில் வந்தாலும் கடைசியில் யானை முட்டி ?! இறந்துவிடுவர். அதோடு கதையை முடித்துவிடுவான். (நல்லவேளை) மழலையில் கேட்க சிரிப்பா இருக்கும்.

இப்பவும் பவர்கட் ஆகிடுச்சுன்னா, பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அப்ப டீவியும் ஓடாது. கதை சொல்ல சொல்லி நச்சரிப்பானுங்க. என் குட்டிபையனுக்கு 'அலிபாபா' கதைன்னா ரொம்ப பிடிக்கும். இப்ப நிறைய கதைகள் மறந்துபோச்சு.

எனக்கு சின்னவயசுல ஏழுகடல், ஏழுமலைத்தாண்டி இருக்கற கிளிலதான் உயிர் இருக்குன்னு ஏதோ கதை சொல்ல கேட்டிருக்கேன். அது இப்ப சுத்தமா நியாபகம் இல்லை. உங்க யாருக்காவது அந்த கதை தெரியுமா. தெரிஞ்சா சொல்லுங்க எனக்கும். எனக்கும் கதை கேட்க ஆசையா இருக்கு. சொல்லிட்டு போங்க..:)

5
Average: 5 (5 votes)

அம்மாவின் ஆன்மா

மாதாவாக‌ நின்று உயிரும் உடலும் கொடுத்தவளே
பிதாவாக‌ நின்று வாழ்க்கை பாரத்தை சுமந்தவளே
குருவாக‌ நின்று வாழ்க்கை பாடத்தை போதித்தவளே
தெய்வமாக‌ நின்று ஆசீர்வாதம் செய்ய‌ சென்று விட்டாயா
அம்மா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்.

அம்மா என்ற‌ சொல்லுக்கு அர்த்தம் சொன்னவளே
அன்பு என்ற‌ சொல்லுக்கும் அன்பைக் காட்டியவளே
அழகு என்பது உருவத்தில் அல்ல‌ உள்ளத்தில் உள்ளது என்றவளே
ஆசையை அடக்கி வாழ‌ வேண்டும் என்ற அறிவை அளித்தவளே
அம்மா உன் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இல்லத்தில் ஏற்படும் இல்லாமையையும் இனிமையாய் ஏற்றவளே
பள்ளமும், மேடும் வாழ்க்கையில் சகஜம் அம்மா என்பவளே
நல்லதையும், கெட்டதையும் சமமாக‌ ஏற்கும் பக்குவத்தை புரிய‌ வைத்தவளே
சகலத்தையும் உனக்கே சிரம் தாழ்த்தி வணக்கத்துடன் சமர்ப்பிக்கிறேன்.
அம்மா| அம்மா| உன் ஆத்மா சாந்தி அடையட்டும்.

[31.10.14. அன்று இன்னுயிர் நீத்த‌ என் தாயாருக்கு [வயது 89] எனது கண்ணீர் அஞ்சலி].

5
Average: 4.3 (3 votes)

வரலாற்றின் மறு பக்கம்

"தாஜ்மஹால் "

உண்மைக் காதலின்
உயிரோட்டம் ...
உலகமே புரிந்து கொண்ட அன்பின் ஆழத்தை
உணராமல் உறங்கி விட்ட காதலியின் கல்லறை .....
காதலித்த அவனும் இல்லை அவளும் இல்லை ....
இருந்தும் இருக்கிறது
"தாஜ்மகால் "
அவர்களின் நினைவுகளை சுமந்துகொண்டு ...!!!

தாஜ்மகால் பெயரை சொல்லும்பொதே காதலின் உணர்வை உணர்த்தும் ஓர் அதிசயம் !!!

உலகில் ஏழு அதிசயங்களில் ஒன்று, மிகவும்
அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நினைவகம்,முதல்
முறை பார்க்கும் போது நம் கண்கள் அதன்
அழகினில் மூழ்கி வேறு திசைக்கு திரும்ப மறுக்கும்
அளவிற்கு ரம்யமாக காட்சி அளிக்கும்.
இவை அனைத்தும் மறுக்க முடியாத ஒன்று.
அப்படி ஒரு அற்புதம் தாஜ்மஹால்.

வரலாற்று உண்மைகள் ;

ஒரு தடவை மன்னன்
ஷாஜஹானுக்கு காணிக்கை
கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய
இளம் பெண் இருந்தாள். அவள்
அப்படியே ஜொலித்தாள். அவள்
அணிந்திருந்த வைரமணிகள் கூட
ஷாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின்
பொழுதுபோக்கு நவரத்தினங்களை எடை
போட்டு ஆய்வது.
அவள் கொண்டுவந்த
காணிக்கையோ வைரமணிகள். அவை தன்
கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த,
பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர்
மற்றவர்களை விரைவாக
அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப்
பேசி காணிக்கையை ஆசையுடன்
பெற்று வழியனுப்பினார்.
சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள்
மொய்த்திருந்தன. எல்லாம்
இனிப்புகள். தான்
ஏமாந்ததை ஷாஜஹான் உணர்ந்தாலும்
அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும்
வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல்
காதல் கொண்டார். அந்த
அழகிதான் மும்தாஜ்.

ஷாஜஹானின் மனைவியன் பெயர்கள்
என்ன? ஷாஜஹானின் மனைவி மும்தாஜ்
எவ்வாறு இறந்தார்?

மூன்று மனைவிகள் ஷாஜஹானுக்கு அதில்
முதலாமவர் அக்பர்பாடி ,
அடுத்தவர் கண்டாரி ,
மூன்றாமவர்தான் மும்தாஜ் .

1631ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம்
திகதி அகமத் நகர், பீஜப்பூர் சுல்தான்களையும்
வழிக்குக் கொண்டுவருவதற்காக
மத்திய இந்தியாவுக்குப்
படையோடு ஷாஜஹான் சென்றிருந்தபோது,
மும்தாஜ் பதினாலாவது குழந்தையைப்
பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்த
கையோடு மும்தாஜுக்குத்
திடீரென்று ஜன்னி பிறந்தது.

ஷாஜகானுக்கு தகவல்
சொல்லப்பட் டது. பதறிப்போய்
ஓடிவந்தார் ஷாஜகான்.
அருமை மனைவியை அழுதபடி வாரி மடியில்
இருந்திக்கொண்டார்.

சில நிமிடங்கள் கணவன் கரத்தை இறுகப்
பற்றிக்கொண்டிருந்த மும்தாஜின்
தலை சாய்ந்தது. அன்பு மனைவியின் பிரிவைத்
தாக்கமுடியாமல் துவண்டுபோனார் மன்னர்.
அந்த அன்புக்காக உளிச்சத்தங்களால்
அறிவிக்கப்பட்ட வெள்ளை மௌனம்தான்
அந்த தாஜ்மஹால்.

உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப் போல்
ஒரு இனிய கல்லறை இன்னும்
எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப்
போவதில்லை. மும்தாஜ் எனும் அழகிய மனைவியின்
மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின்
கலை வடிவம் அது.
வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய
அந்த கலை மிகு கட்டிடம் எழுந்த
கதை பெருங்கதை. தட்சிணப் பிரதேசம்
பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் முதன்
முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது.

இதற்குப் பின் ஆறு மாதம்
கழித்து அவரது உடல் ஊர்வலமாக
எடுத்து வரப்பட்டு ஆக்ராவில்
இப்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில்
புதைக்கப்பட்டது.
மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம்
கழித்து ஷாஜஹான் களத்தில்
இறங்கினார்.
வெனிஸ் நகரத்து வெரோனியா,
துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி,
லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும்
வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச்
சேர்ந்து அமைத்த மொத்த
வடிவமே இன்றைய தாஜ்மஹால்.

அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள்,
சிற்பிகள், கொத்தனார்கள் என
இருபதாயிரம் பேர்
வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு மள
மளவென பணிகளைத்
தொடங்கினார் ஷாஜஹான்.

1632- ம் ஆண்டு வேலைத்
தொடங்கி 1652 வரை சுமார் 20
ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான்
இந்த தாஜ்மஹால்ஸ. அதற்குப் பிறகு கூட
ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள சுற்றுப்
புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன.
தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர்
உயரத்திற்கு நிற்கும் 4 மினார்களும் (தூண்)
லேசாக வெளிப்புறம்
சாய்த்து வைத்து கட்டியிரிக்கிரார்கள்.

காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த
தூண்கள் விழுந்தால் கூட தாஜ்மஹால்
மீது பட்டுவிடக் கூடாதே என்ற
காரணுத்துக்காகத்தான்.

தாஜ்மஹாலின் வெளிப்புறக்
கதவுகள், சுவர்களில் பதிக்க இந்தியாவைத்
தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என
பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம்,
முத்து, பவளம் என பல விதம் விதமாக
வரவழைத்து பயன்படுத்தி அழகு பார்த்தார்
ஷாஜஹான்.

புனித குரானிலிருந்து குறிப்பிட்ட
வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை
கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில்
பொறிப்பது என்று முடிவு
செய்தார். இதற்காக உலகிலேயே மிகத்
திறமையான பாரசீக கலைஞர்
‘அமானாத்கான்’ பெயர் சிபாரிசுச்
செய்யப்பட்டது.
‘நான் எந்த வேலைச் செய்தாலும் அதில்
என் கையெழுத்தைப் போடுவேன்
என்று அடம்பிடித்த அவரை ‘சரிஸகையெழுத்து
போட்டுக்கொள்ளுங்கள்’
என்று அனுமதிக்
கொடுத்து வரவழைத்தார்
ஷாஜஹான். இன்றைக்கும் அந்தச்
சிற்பியின் கையழுத்தைக் காணலாம்.
தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர
வேறு எவரின் பெயரும் கிடையாது.
இப்படி அங்குலம் அங்குலமாக
பொன் நகையை உருவாக்குவது போல்
கட்டினார் ஷாஜஹான். தாஜ்மஹால்
கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம்
முஸ்லீம்கள் மட்டுமே பார்க்க
அனுமதிக்கப்பட்டனர்.
பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர்
வர வர அந்தத் தடை தானாகவே நீங்கிப்
போனது. இத்தகைய அழகான தாஜ்மகால்
அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின்
கண்களை பறிக்காமல் இருக்குமா?
பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில்
பதிக்கப் பட்ட வைர,
வைடூரியங்களை சுரண்டி எடுத்துக்
கொண்டு போனார்கள்.
லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர்
இடித்து விடலாம்
என்று ஐடியா கொடுத்தார்.
இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள்
தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக
பெயெர்தெடுத்து, கப்பலில்
ஏற்றிக் கொண்டு போய்,
இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப்
செய்து விடலாம்
என்று ஆலோசனை வழங்கினார்.
இறைவனின் கருணையால்ஸ இன்றைக்கும்
இப்படியொரு அற்புதக் கட்டிடம்
இந்தியாவில் இருக்கிறதென்றால்
அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக
இருந்த கர்சன் பிரபுஸ
கலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும், ஆசையும்
கொண்டிருந்த அவர் மற்றவர்களின்
யோசனையை தூரத்
தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல
முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார்.
அதோடு மட்டுமல்ல.. இப்போது நீங்கள்
தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் –
ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில்
மேலே ஸ ஒரு அழகான
பித்தளை விளக்கு தொங்கிக்
கொண்டிருக்கும்.
இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி,
இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன்
பிரபுதான்.
இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு 1000
யானைகளும், 40000 பணியாளர்களும்
வேலை செய்யப்பட்டனர்.

தாஜ்மகாலை கட்டி முடித்தவுடன், அதன்
கட்டிட வடிவமைப்பாளரின் விழியைப் பிடுங்கி,
தலையை வெட்டி
கொலை செய்தாராம்
ஷாஜகான். அது மட்டுமல்ல,
தாஜ்மகாலை உருவாக்க காரணமாக
இருந்த 22000 தொழிலாளர்களின்
இரு கை விரல்களையும் வெட்டினாராம்
ஷாஜகான். யாரும் இது போல
கட்டிடத்தை இனிமேல் கட்டக்
கூடாது என்பது அவர் சொன்ன
காரணம்.

No votes yet

விதம் விதமா....ஆ..ஆ..ஆரஞ்சு

அறுசுவை மக்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழர்களோட பாரம்பரியத்துல முக்கியமான பழங்கள்னா உடனே நம்ம ஞாபகத்துக்கு வருவது மா, பலா மற்றும் வாழைதான்.. இல்லைங்களா..? ஆனா, இப்பல்லாம் குழந்தைகள்கிட்டே உங்களுக்குத் தெரிந்த பழங்கள் பேரைச் சொல்லுங்கன்னு சொல்லுங்கன்னு கேட்டீங்கன்னா அவர்கள் சொல்லும் பழங்களில் முதல் இடத்தில் இருப்பது நம்ம ஆதாம் ஏவாள் காலத்து ஆப்பிளாக இருக்கும். அடுத்து அதோட இணைப்பிரியா தோழியான நம்ம ஆரஞ்சாக இருக்கும்.

ஆப்பிளுக்கு என்னவோ ஒரே பேருதான்! அது விளையும் ஊரும், நாடும் வேண்டுமென்றால் வேறு வேறாக இருக்கும். ஆனால் இந்த ஆரஞ்சு குடும்பம் இருக்கே! ரொம்பப் பெரிதாக இருக்கும் போல இருக்குங்க! எனக்கு சின்ன வயசில இருந்தே "பெயர்க்காரணம்" தெரிந்துகொள்வது மிகவும் பிடிச்ச விஷயம்..........

இப்ப நம்ம ஆரஞ்சு பெயர்க்காரண பயணத்தை ஆரம்பிக்களாம் வாங்க......
அப்போ ஆரஞ்சுக்கு அர்த்தம்? ஆறும், ஐந்தும் சுளைகள் இருக்கும், அதனால் ஆரஞ்சு!.......ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பதனாலும் இந்த பெயர் வைத்திருக்கலாம்!

ஆரஞ்சு குடும்பத்துல எனக்குத் தெரிந்த முதல் பழம், "கொழிஞ்சிப் பழம்". எங்க ஊர் பக்கம் இந்தப் பழம் அதிகமாக இருக்கும். இதோட தோல் பச்சை நிறத்தில்தான் இருக்கும். இதில் சில பழங்கள் மிக புளிப்பாகவும், சில ரகங்கள் சாப்பிடுவதற்கு சாத்துக்குடியைப்போல இனிப்பாகவும் இருக்கும். எனக்கு சின்ன வயசில சாப்பிடக் கிடைச்சதெல்லாம் புளிப்பு பழங்கள்தான், ஆனாலும் அந்த வயசில சாப்பிடறதுக்கு நல்லாவே இருந்தது!.

என்னொட சின்ன வயதில் எனக்குத்தெரிந்த ஆரஞ்சுன்னா இரண்டே இரண்டு விதங்கள் மட்டும்தான்.
ஒன்று நம்ம ஊர் "சாத்துக்குடி"

மஞ்சளாக, கொஞ்சம் பெரிதாக, உரிக்க சற்று சிரமமாக இருக்கும். அதனாலேயே இதை சாறு பிழிந்து ஜூஸ் போடுவதற்காகவே வாங்குவார்கள். சாறெடுத்துக் குடிப்பதற்காக "சாத்துக்குடி" சரிதானுங்களே?

சாத்துக்குடியையும் நான் சின்ன வயதில் ஆரஞ்சுன்னுதான் சொல்லுவேன்! ரொம்ப வருஷமாக அதே பெயர் என் மனதில் பதிந்துவிட்டதால், நான் முதன் முதலாக பழம் வாங்கபோன இடத்தில் (பெங்களூர்) ஆரஞ்சு குடுங்கன்னு கேட்டேன்! என்னோட கை சாத்துக்குடியை காண்பிக்கிறது! வாய் ஆரஞ்சுன்னு சொல்லுது! கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாக பார்த்து "மொசாம்பி" "பேக்கா"ன்னு கேட்கிறார்! கடைசியில நான்தான் பேக்கு மாதிரி முழிக்கிறேன்! அப்பதான் தெரிந்தது அவுக பேரு அந்த ஊர்ல "மொசாம்பி"ன்னு......... "மொசாம்பி" ங்கிறது ஹிந்தி பெயர் போல! ஆனா அர்த்தம் புரியல!

அடுத்து வந்த ஊர்ல பேக்குமாதிரி முழிக்கிற சிரமம் எல்லாம் இல்லைங்க! பழங்கள் பக்கத்திலதான் தெளிவா பேர் போட்டிருக்குதே! அவுகளோட பொதுப்பெயர் "ஸ்வீட் லைம்" ங்களாம்! நம்ம எலுமிச்சையைப் போலவே பெரிதாகவும், கொஞ்சம் இனிப்பாகவும் இருப்பதனால் இந்தப்பெயர் போல!

இரண்டாவது "கமலா ஆரஞ்சு".
உரிக்க மிக சுலபமாகவும், மஞ்சள் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். இதை உரித்து அப்படியே சாப்பிடலாம். கமலா ஆரஞ்சுங்கிறது நாங்க எங்க ஊர்ல சொல்ற பேரு! அதோட பேருதான் எங்கெங்கோ என்னென்னவோ பேரில் உலாவருது! "கமலா ஆரஞ்சு" இந்தப்பேர் எத்தனைபேருக்கு தெரியும்னு எனக்குத் தெரியாதுங்க? ஆனா எங்க ஊர்ல அப்படிதாங்க சொல்லுவாங்க! எங்க பாட்டிக்கு ரொம்ப பிடித்தபழம், அவங்க பேரும் "கமலா" தாங்க! ஒருவேளை அவர்கள் பெயர்கொண்டதனால் அந்த பழத்தை அவங்களுக்கு ரொம்ப பிடிக்குதோன்னு கூட யோசித்ததுண்டு! ஆனால் ஏன் இதோட பேர் கமலான்னு இதுவரை எனகுத்தெரியவில்லை!

கொடைக்கானல் பக்கம் இதை "கொடைஆரஞ்சு"ன்னு சொல்ல கேள்விப்பட்டிருக்கேன்! ஊரும் பேரும் சரியாப்போச்சு!

இந்த கமலாவையும் பெங்களூர்ல யாருக்கும் தெரியாது! அங்க " நாக்பூர் அரஞ்சு" னு பெயர் போட்டிருக்கும். நாக்பூர்ல விளைந்ததால் இந்தப்பேர்போலன்னு நானே நினைத்துக்கொள்வேன்! அதேபோலவே இருக்கும் இன்னொரு பழத்திற்கு (kinnow) " கின்னோ ஆரஞ்சு" னு பேர். இந்தப்பழம் கொஞ்சம் சாத்துக்குடி போலவே நிறம் மட்டும் ஆரஞ்சாக இருக்கும். இதையும் ஜூஸுக்காகத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள் போல! "கின்னோ" என்றால் ஏதோ ஊராக இருக்கும்னு நினைத்திருந்தேன்! ஆனால் அப்படி இல்லையாம்! இரண்டு வெரைட்டி பழங்களின்( king + willow leaf = kinnow) ஹைபிரிட் தான் இந்த "கின்னோ" வாம்.

இப்ப இருக்கிற ஊர்ல இதோட பெயர் "ஈசி பீலர் ஆரஞ்சு" (easy peeler). பெயர்க்காரணம் பெயரிலேயே இருக்கு இல்லைங்களா? இது இரண்டு விதமாக பெரியதும் (easy peeler) , சிறியதுமாக (baby peeler) இருக்கு!

இந்த குடும்பத்துல அடுத்ததா வர்றவங்க...."சாட்சுமா" (satsuma) . இதுக்கு முன்னாடி எனக்குத் தெரிந்ததெல்லாம் "சுமோ ரெஸ்லிங்"( "sumo wrestling") மட்டும்தான். இப்பதான் இப்படி ஒரு பெயரை கேள்விப்படுகிறேன்! இவங்க எப்படி இருக்காங்கன்னா? சாத்துக்குடியைப்போல நிறத்திலும், உருவத்திலும், உரிப்பதற்கும் கமலா ஆரஞ்ஜு போலவும் இருக்காங்க! இதை உரிப்பது மற்ற எல்லா பழங்களைவிடவும் மிகவும் சுலபமாகவும், உள்ளே விதை இல்லாமலும் இருக்கு! சுவைமட்டும் அதே சுவை! ஆனா ஏன் இந்த பெயர் ? தெரியலைங்க?

அடுத்து வர்றவங்க "ரெட் க்ரேப் ஃப்ரூட்" (red grape fruit). இதுவும் நம்ம சாத்துக்குடியைப் போலவே பெரிதாகவும், மஞ்சள் கலந்த ஆரஞ்சு வண்ணத்திலும் இருக்கு. பழத்தின் உள்ளே மட்டும் பெயருக்கு ஏற்ற மாதிரி சிகப்பு நிறத்தில் சுளைகள் இருக்கு.....ஆனா இதுக்கும் grape க்கும் என்ன சம்பந்தம்னு தெரியலை?
அடுத்தது க்லெமென்டைன்( clementine). இதுவும் நம்ம கமலா ஆரஞ்சைப் போலவேதான் நிறத்திலும், சுவையிலும் இருக்கு. பேர் மட்டும்தாங்க வேற! இதுவும் ஒரு ஹைபிரிட் வெரைட்டி தானுங்களாம்!
கடைசியாக நம்ம "மாண்டரீன் ஆரஞ்சு" . இது இப்போதான் எனக்கு அறிமுகம். அதுவும் அறுசுவையில் இமாம்மாவின், மாண்டரீன் & லாவண்டர் கூடையைப் பார்த்த பிறகுதான்! நான் மாண்டரீன்னா ஏதோ அந்த ஆரஞ்சு கூடைக்குள்ள இருக்கிற பூன்னுதான் நினைத்தேன்! அப்புறமாகத்தான் தெரிந்தது! அதுவும் ஆரஞ்சுன்னு! இதோட அர்த்தமும் எனக்குத்தெரியாதுங்க?

உங்க ஊர்ல இந்த பழங்களுக்கெல்லாம் என்ன பெயர்? பெயர்க்காரணம் என்ன? தெரிந்தால் எனக்கும் சொல்லுங்களேன்?

Average: 5 (2 votes)

தீபாவளி

மனதில் என்னென்னவோ திட்டங்கள் போட்டிருந்தேன்.... எப்படியெப்படியெல்லாம் வாழ்த்தலாமென்று. எதுவும் ஆகவில்லை. நினைத்தால் மட்டும் தன்னால் காரியம் ஆகிவிடுமா என்ன!

அவசரத்திற்கு கைகொடுத்தது அறுசுவைக் கைவினைப் பகுதியில் தற்போது வெளியாகி இருக்கும் தீப ஒளி கோலம். :-) http://www.arusuvai.com/tamil/node/29663

வீட்டினுள்ளே போட வேண்டும். கோலப் பொடி வைத்துப் போட... நடைமுறைச் சிக்கல்கள் இடம் கொடாது. மழை வேறு. கசிந்து பலகையில் சாயம் இறங்கினால்! ஆகவே மீண்டும் ஒற்றைத் தரை ஓடு ஒன்றில் வர்ணச் சுண்ணக் கட்டிகளால் போட்டிருக்கிறேன். வெயில் நாளானால் இதையே வெளியே வைத்துப் பயமில்லாமல் போடலாம். நிறங்கள்... படத்தைப் பார்த்துக் கோலத்தை மனதில் வாங்கிக் கொண்டு வரைந்தேன். நடுவிலுள்ள பூ நிறம் மாறி விட்டது. காம்புகளும் வைக்கவில்லை. பொறுத்துக் கொள்ள வேண்டும். :-)

கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். கடைத் தேங்காயை கடைக்காரருக்கும் குடும்பத்தாருக்குமே உடைக்கலாம் என்று இருக்கிறேன். ;))

இன்று தீபாவளி கொண்டாடும் அனைத்து அறுசுவையினர்க்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

5
Average: 5 (4 votes)

அன்புள்ள " மை " விழியே...

ஏனடி இந்த
ஒற்றைப்பார்வை !

உன்
மை விழிகள்
காதல் எனும்
கத்தி வீசி
வில்லெனும்
புருவங்களால்
அன்பெனும்
அம்பை எய்யுதடி
என்மேல் ....!

சத்தமே இல்லாமல்
நித்தமும்
யுத்தம் ஒன்றை
செய்யுதடி
என் மனதினுள் ....!

ஒரேயொருமுறை
பார்க்கும் -அந்த
ஒற்றைப்பார்வையில்
என் உயிரை
உரசி விட்டுத்தான்
செல்லுதடி
மின்சாரம் மொத்தமும் ....!

வாள்
இரண்டும்
கரு "மை" இட்டு
கூர் தீட்டி
போர் தொடுக்குதடி
என்
இதயத்தோடு .....!

நான்
கண்மூடி தூங்கும்
வேளையிலும் -என்
இமைகளை
ஊடுருவி
விழிகளுக்குள்
பாயுதடி -உன்
பார்வை எனும்
ஏவுகணை .....!

எதிர் நின்றவனின்
பலம் பெறும்
வாலியின்
வரத்தை போல
உன் விழிகளும்
வரத்தை
பெற்றுவிட்டதோ....
நான்
எதிரே நிற்கும்
தருணங்களில்
எல்லாம் -ஏனோ
எனை தடுமாற
வைக்கின்றது
உன்னிடம் ....!

காதலையும்
கனலையும்
சேர்த்துக்கொண்டு
மொழியில்லாமல்
பேசிவிட்டுச்
செல்லுதடி
என்னுள் ....!

ஒரு முறை
அல்ல
இரு முறை
அல்ல
பல முறை
மடிந்துதான்
மீண்டும்
பிறந்து விட்டேன்
உன் காதல்
பார்வையினால் ....
இனி
மரணம் என்பதும்
துச்சம் தானடி
எனக்கு ...!

நீ
பேசவில்லை
என்றாலும்கூட
பரவாயில்லை
நித்தமும்
ஒரு முறையேனும்
உன்
பார்வை ஒன்றை
மட்டும்
வீசிச் சென்றுவிடு
என்மீது
இம் மண்ணில்
நான்
வீழும்வரை
வாழ்ந்து விடுவேன்
உன் விழிகள்
பேசும் மொழிகளால்...!!!

***சஜன்***

5
Average: 5 (3 votes)

பாமரனின் காதல்...

ஆச வச்சேன் உன்மேல நா -
அடி ஆச வச்சேன் உன்மேல !

மீச அத முறுக்கிவிட்டேன் -உன்கூட
நா பேச நினைக்கும் நேரமெல்லாம் !

பேசாம நீ போறதென்ன -என்
மாமன் பொண்ணே ரஞ்சிதமே !

நெஞ்சுக்குள்ள உன் நினைப்பு வந்து -
அஞ்சு மணியானாலும் பசிக்கலையே !

நீ கண்ணோரம் பார்க்கையிலே - எனக்குள்ள
காதல் வந்து பூத்திருச்சோ !

என் மனசோட விளையாடத்தான் -உன்
நினைப்பு அதும் கிளம்பிடுச்சோ !

உன் கொலுசு சத்தம் கேட்கையிலே -என்
மனசு உன்ன கொஞ்ச சொல்லி கெஞ்சுதடி !

ஒத்த சொல்லு நீ சொல்லாமலே -என்
உசிரு கூட மெல்ல வெம்புதடி !

கண்டாங்கி வாங்கி வந்தேன் -அத
கட்ட கூட நீ நினைக்கலையோ !

முன்னாடி நீ வந்தா -நான்
திண்டாடி நிற்குறேனே !

பாவி மக நீ பார்க்கையிலே -என்
மனசு ரெக்க கட்டி பறக்குதடி !

செத்த நேரம் நீ பக்கம் -நின்னா
என் புத்திக்குள்ள கிறுக்கு புடிக்குதடி !

காள இரண்ட அடக்கி வந்தேன் - நீ
கண் நிமிர்ந்து பார்க்கனும்னு !

பேசாம நானிருந்தா நீ -பார்வையால பேசிக் கொல்லுறியே !

உள்ளுக்குள்ள என் நினைப்பிருந்தும் -நீ
மல்லுக்கட்டி அத மறைக்கிறியே !

என்னதான் செஞ்ச புள்ள -அத
கொஞ்சம் சொல்லிட்டுத்தான் போனா என்ன !

கன்னிமார் சாமிக்கிட்ட உன்ன -கை
பிடிக்க நேர்ந்துக்கிட்டேன் !

உறியடிக்க வந்த நேரம் -என்ன
பரிதவிக்க வைக்கிறியே !

மூடி மூடி வச்சாலும் பருத்தி -பஞ்சு
ஒரு நாள் வெடிக்கும் புள்ள !

தேடி தேடி நா வந்தாலும் -நீ
ஓடி ஓடி தான் மறையுறியே !

காலம் நேரம் கூடும்னு -நான்
காத்திருக்கேன் உனக்காக !

சொல்லாமலே நீ இருந்தாலும் -என்
உசிரு அது உனக்குத்தான்டி !
என் மாமன் பொண்ணே
உனக்குத்தான்டி !!!
********

Average: 4 (1 vote)

ஒரு அத்திவாரம் கூரையாகிறது

நியூஸிலாந்து... பாலும் தேனும் விளையும் நாடு. இருப்பினும்... எங்கும் எதுவும் உண்டு.

பாடம் கொடுத்தால் சின்னவர்களுக்கு கொட்டாவி வருகிறது; களைப்பு வருகிறது. நிறையக் காரணங்கள் இதற்கு.

தூர இடத்தில் வீடு இருக்கும். அதிகாலை வேலைக்காக அம்மா, அப்பா புறப்படும் சமயம் அரைகுறைத் தூக்கதில் எழுந்து, தயாராகி, காரில் ஏறித் தூங்கி, பாடசாலையில் இறங்கும் வரை தெரியாத பசி மயக்கம் பாடம் ஆரம்பிக்க வேலையைக் காட்ட ஆரம்பிக்கும். எப்படித்தான் படிப்பார்கள் சின்னவர்கள்!

கடந்த சில வருடங்களாக இங்குள்ள சில பாடசாலைகளில் 'கிக் ஸ்டார்ட்' என்று ஒரு காலை உணவுத் திட்டம் அமுலிலுள்ளது. அழகாக அதை 'breakfast club' என்பார்கள். Fonterra நிறுவனத்தார் பாலும், Sanitarium நிறுவனத்தினர் weet bix - ம் கொடுத்து உதவுகிறார்கள்.

முன்னர் வரைதல், கைவினை, தொழில்நுட்ப வேலைகள் சிலவற்றுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இருபத்தோராம் இலக்க அறையில் இதற்காக ஒரு மேசை போடப்பட்டது. இதற்காக நாற்காலிகள் சிலவற்றை ஒதுக்கினோம். ஃபொன்டேரா குளிரூட்டியொன்றை அன்பளிப்புச் செய்தார்கள்.

மேசைச்சீலைகள், ப்ளாத்திக்குக் கிண்ணங்கள், துடைதுணி வாங்கிப் போடுவோம். இவற்றைத் தான் அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கிறது. விளையாடி வைக்கிறார்கள் சின்னவர்கள். :-)

அதிபர் தன் பங்குக்கு சீனி வாங்கிக் கொடுக்கிறார். ஒரு ஆசிரியை தனக்கு சான்விச் செய்யும் சமயம் அதிகமாகத் தயார் செய்து தனித் தனியே க்ளாட்ராப்பில் சுற்றி எடுத்து வந்து ஃப்ரீசரில் போடுகிறார். இன்னொருவர் 'ஸ்பெஷலில்' போகும் சமயம் வாழைப்பழம், ஆப்பிள் என்று வாங்கி வைக்கிறார். இடைக்கிடை ஒரு குறிப்பிட்ட bakers delight கடையிலிருந்து விதம் விதமாக பாண் வகைகள் கிடைக்கின்றன.

சின்னவர்கள் செய்ய வேண்டியெதெல்லாம், நான்கைந்து பேராக அறையில் நுழைந்து சந்தோஷமாகப் பேசிக் கொண்டே சுவையான, ஆரோக்கியமான காலையுணவை உண்டுவிட்டு... பாத்திரங்களைச் சுத்தமாகக் கழுவித் துடைத்து அதற்கான குட்டி மேசையில் அடுக்கி வைப்பது மட்டுமே. அந்த அறையில் இதற்கான வசதிகள் எல்லாமே இருக்கின்றன.

மதிய உணவை மறந்து வந்தவர்களுக்கும், விசேட காரணங்களுக்காக மற்றும் சிலருக்கும் மதிய உணவு சமயமும் அந்த அறைக்குள் அனுமதி உண்டு. சில சமயம் பாடவேளையில் கூட சாப்பிட அனுப்பப்படுபவர்கள் இருக்கிறார்கள். காலையில் கிளம்புமுன் வீட்டில் பசித்திருக்காது. இங்கு வந்து சக்தி விரயமான பின்னால் பசிக்கும். அப்போது 'தலை வலிக்கிறது, வயிற்றுவலி, வாந்தி வருகிறது,' என்று ஏதாவது சொல்லுவார்கள்.

சென்ற வருட மத்தி முதல் ஃபொன்டேரா நிறுவனத்தினர் வழக்கமாக அனுப்பி வந்த பாட்டில் பாலை விட்டு, 'டெட்ரா பாக்' எனப்படும் பொதிகளில் அடைக்கப்பட்ட பாலை அனுப்புகிறார்கள். இவற்றிற்கு ஆயுள் அதிகம். உடைத்த பின்னால் மட்டும் குளிரூட்டியில் வைக்க வேண்டும்.

இந்த டெட்ரா பாக் பற்றி - டெட்ரா பாக்குகள் வெளியே கடதாசி போல தெரியும்; உள்ளே மினுக்கமாக கடதாசியா ப்ளாத்திக்கா என்று புரியாத பொருளாக இருக்கும். வெளிப்புறம் நீர் வெளியேறாத படலம் ஒன்று, உள்ளே சில படலங்கள் Low-density polyethylene (LDPE), சாதாரண கடதாசி, அலுமினியக் கடதாசி என்பவற்றைக் கொண்டு தயாராகிறது டெட்ரா பாக்.

பலவிதமான கொள்கலன்களும் மீள்சுழற்சி செய்யப்படுவது நாம் அனைவரும் அறிந்த விடயம்தான். இந்த டெட்ரா பாக் வெற்றுப் பெட்டிகளை நீரில் அலம்பி வடிய விட்டு குறிப்பிட்ட ஒரு விதமாக மடிக்கிறார்கள் சின்னவர்கள். அதை இதற்கென்றே உள்ள பெரிய தொட்டியில் போட்டு வைப்பார்கள். தொட்டி நிரம்பியதும் குறிப்பிட்ட ஒரு எண்ணுக்கு ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வார்கள். வாகனம் வந்து அனைத்தையும் எடுத்துச் செல்லும்.

என்ன செய்வார்கள் இவற்றை!

ஆச்சரியமாக இருந்தது அறிந்த போது. இவை கூரைத்தகடுகளாக மாற்றப்படுகின்றனவாம். தாய்லாந்திலுள்ள வசதி குறைந்த குடும்பங்களிற் சிலரது வீடுகளுக்கு நல்லவிதமாகக் கூரைகள் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் எங்கள் பாடசாலையினர் தாய்லாந்திலுள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்படுகிறார்கள்.

5
Average: 4.9 (7 votes)

அ ஆ!! அணில்!!

நேற்று எல்லோரும் கிளம்பியதும் வழக்கமான தனிமை... உடல் நலமில்லை என்று நடமாடாமல் பின் வாசல் கதவை திறந்து வைத்துவிட்டு நேர் எதிரே டைனிங் டேபில் சேரில் அமர்ந்திருந்தேன். லேப்பி எடுக்க தோணல, கையில் மொபைல். என்ன பார்க்கிறேன் என்ன படிக்கிறேன் என்றில்லாமல் கை அதை சீண்டிக்கொண்டே இருந்தது. வேறு என்ன செய்யவும் மனமில்லை, மணிக்கணக்காய் அங்கேயே அசையாமல் உட்கார்ந்திருந்தேன். சற்று நேரத்தில் என் பார்வை வட்டத்துக்குள் ஒரு அசைவு தெரிந்தது. எலியோ என பயந்து போய் திரும்பி பார்த்தால் இடது கை பக்கம் அணில். நான் பார்க்கவும் அது என்னை பார்க்கவும் சரியாக இருந்தது. “ஹேய்!!!” இருவரும் தான். ஆல்வின் அண்ட் சிப் மான்க்ஸ் படம் பார்த்த எஃபக்ட் எனக்கு. அணிலின் ஒவ்வொரு அசைவும் பேசுவது போல கற்பனை மனதுக்கு. உண்மையில் அசைவில்லாமல் ஓசையில்லாமல் இருந்த வீட்டில் அவர் (அணில் தான்... அவனோ அவளோ... அவர் பொது தானே?) என்னை எதிர் பார்க்கவில்லை என்பது போல, அவர் என்னை கண்டதும் ஏதோ அதிர்ந்தது போல இருந்தது. உடனே சிரிப்பு வந்துவிட்டது எனக்கு. வாசலை தாண்டி என் வலது கை பக்கம் வந்தார்... என் முன் இருந்த ஜன்னல் ஸ்க்ரீனில் வேகமாக ஏறி என் கண் பார்வையில் படவும் பயந்து அசைவின்றி நின்றார்.

“ஓய்... ஒன்னும் பண்ண மாட்டேன். ஏன் பயப்படற?”

பதிலில்லை. சினிமாவில் தான் அணில் பேசும், நிஜத்தில்? மொபைல் கையில் இருக்கவும் ஒரு ஃபோட்டோ எடுத்தேன். என் கை கிட்டே போனால் அவர் இன்னும் பயப்படுவது போல இருக்கவும், சூம் செய்தே எடுத்தேன், நானும் எழவே இல்லை என் இடத்தை விட்டு.

ஓசை கொடுத்தேன், திரும்பி திரும்பி பார்த்தார்.

“எங்க உன் ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லையா? இங்க என்ன பண்ற?”

“நான் இருப்பேன்னு நீ எதிர் பார்க்கல இல்ல... எதுக்கு இப்படி நடுங்குற? உன்னை என்ன பண்ணேன் நான்? கியூட்டா இருக்கன்னு ஒரு ஃபோட்டோ. என்னை பார்த்தா அணில் பிடிச்சு திங்கற மாதிரியா இருக்கு உனக்கு? ம்ம்...”

சற்று நேரம் அதுவா போகும் என்று எண்ணி மீண்டும் மொபைலை எடுத்தேன்... ஃபேஸ்புக்ல ஒரு போஸ்ட் அணில் ஃபோட்டோவோட. ஆனா திரும்பவும் தலைவர் அங்கையே இருக்கார். சிரித்தேன் அது என்னை கண்டு பயந்து நிற்பதை பார்த்து.

“கதவு பக்கத்துல தான் நிக்குற... வந்த வழி இன்னும் திறந்து தானே இருக்கு? நானும் நடுவில் இல்ல... ஏன் இந்த பயம்? வந்த வழியாவே கிளம்பு. உள்ள வரும் போது இருந்த தைரியம் எங்க போச்சாம் இப்போ?”

“வெளிய பூனை எதாச்சும் இருக்கா? யாரும் விரட்டி ஓடி வந்தியா? இல்லையே... நிதானமா தானே உள்ள வந்து சுத்தின நீ என்னை பார்க்கும் வரை?? ம்.. உனக்கு எப்ப போகணும்னு தோணுதோ போ. அதுவரைக்கும் இப்படியே தொங்கு” என சிரித்தேன்.

இவ்வளவும் நான் பேச அங்க பார்வை மட்டுமே பதில். சரி... தனியா உட்கார்ந்திருந்ததுக்கு பேச்சு துணை. இவரை ஆஃபீசில் ஃபோன் பண்ணி தொந்தரவு பண்ண ஒரு மேட்டர் கிடைச்சுது... கால் பண்ணேன்.

“பாஸ் ஒரு அணில் பின் வாசல் வழியா வந்து ஸ்க்ரீனை பிடிச்சு நிக்குது”

“அணில் எல்லாம் உள்ள விடாதம்மா... பூச்சி கிருமின்னு இருக்கும்... வாசல் திறந்து வெச்சு வெளிய அனுப்பு. வெளிய சாப்பாடு எதாவது வை போயிடும்.”

கால் கட் பண்ணதும் தேவையில்லாம (??!!) பாபு அண்ணா ஃபேஸ்புக்ல போடுற எபோலா நியூஸ் எல்லாம் நினைவுக்கு வந்தது. அதுவரை இருந்த சிரிப்பு காணாம போச்சு. அணில் இப்ப என் கண்ணுக்கு பெரிய விஷயமா தெரிஞ்சுது.

போய் கொசு அடிக்கும் பேட்டை கொண்டு வந்து “சூ சூ...” என தூரம் நின்றே விரட்டினேன். ம்ஹூம்... என்னைக்கண்டு இன்னும் உயரம் ஏறி நின்றார். :(

ஆனா எனக்கு இப்ப அவர் ரசிக்கல... பயம்... இதயம் பட படன்னு மிளகாய் பட்டாசு போல பொரிஞ்சுது.

எல்லா ரூம் கதவையும் சாத்திவிட்டு மீண்டும் அணிலிடம் வந்தேன்...

“இங்க பாரு நீ வந்து அரை மணி நேரம் ஆகுது, நான் பிள்ளைகளை கூப்பிட போகணும் ஸ்கூலுக்கு. கிளம்பு முதல்ல...”

அவர் வந்ததில் இருந்து தான் பேசலயே... இப்ப மட்டுமா பேச போறார்?!

அவர் பக்கம் உள்ள கப்போர்டுக்கு தாவ பார்க்கவும் பயம் அதிகமானது...

“இது உள்ள போற வழி... நீ வெளிய போன்னு சொன்னேன்...”

“ஏய்... கிளம்புன்றேன்ல...”

பெரிய கம்பை கொண்டு வந்து விரட்ட முயற்சிக்க அந்த உயரத்தில் இருந்து ஜம்முன்னு கீழ லேண்ட் ஆகி கிச்சன் கதவோரம் போய் ஒண்டினார்.

“ஓம் சாய் ராம், ஓம் சாய் ராம்... “ இது நான்.

அவர் என்ன சொல்லிருப்பார்?? “ராம் ராம்???” அப்படித்தான் அப்போ தோணுச்சு!!

ம்ஹூம்... 15 நிமிட வாக்குவாதம்(?? இருவர் பேசினா தான் வாக்குவாதமில்ல??) வீனானது. பின் வாசல் கதவை மூடாமலே பள்ளிக்கு போய் பிள்ளைகளை கூட்டி வரச்சொல்லி தலை மீண்டும் கால் பண்ணிட்டார்.

சரி என்று போட்டது போட்டபடி விட்டுட்டு வேகமாய் துடிக்கும் என் இதயத்தை அடக்க முயன்றபடி

“நான் வீட்டுக்கு திரும்பி வரும் முன் வந்த வழியே போயிடு... பொல்லாத கோபம் வரும் எனக்கு” என்றுவிட்டு கிளம்பினேன்.

வந்து பார்த்தால் அவர் அங்கையே தான் இருந்தார் :(

”ஏய்!!!” அழுகை எனக்கு.

“பிசாசு... போறியா இல்லையா?”

கண்ணாமூச்சி விளையாடும் போது சுவரில் இரண்டு கை வைத்து முகம் மூடும் சிறு பிள்ளை போல அணிப்பிள்ளை கதவு நிலையில் ஒண்டி இருந்தது. நான் கத்தினால் முகத்தை கையால் மூடியது. அதன் இதயம் துடிப்பது கதவு நிலை வாசலில் ஒட்டி இருந்த அதன் உடலில் தெரிய, பார்க்க பாவமாக இருந்த போதும், கோபம்... இங்கும் அங்கும் அது தாவவும், மனதில் பயம் அதன் மேல். கூர்மையான அதன் நகங்கள் இன்னும் பயத்தை குத்திக் கிளறியது. கடைசியில் ஓடி வந்து மீண்டும் வழியை தாண்டி வந்து ஒரு அட்டை பெட்டி சந்தில் மறைந்தார்.

“ச...” :(

எல்லாவற்றையும் விட்டு விட்டு பிள்ளைகளோடு ஒரு ரூமில் கதவடைத்து இருந்தேன் சிறிது நேரம்.

அதன் பின் மெதுவே வந்து அவரை மீண்டும் சீண்டவும், வாசல் கண்டு ஓடினார்.

அப்பாடா!!!

மனித மனம் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி மாறிவிடுகிறது?? அன்பாய் ஆசையாய் ஒரு ஜீவனிடம் பேசிய நான் கடைசியில் அதை பேய் பிசாசு என்று கத்தி போ வெளியன்னு கத்தும் அளவுக்கு போனேனே??!! அதன் பயம் புரிந்தும் இரக்கமே காட்டவில்லையே நான். குட்டியாக கியூட்டாக இருக்கிறது என்றெண்ணி படமெடுத்த எனக்கு அது பெரிய ராட்சஷன் போல காட்சியளித்தது ஏன்? எப்படி? ஏதோ உள்ளுக்குள் இருந்த பயம் இவரின் கிருமி என்ற ஒரு வார்த்தையில் என்னைத் தான் பேயாய் பிடித்து ஆட்டியது போலும்.

அதன் பின்னும் நினைவு முழுக்க அணில், அன்று நடந்தது என்றே சுற்றி சுற்றி வந்தது.

மாலையில் வந்த அவர் “பாவம்மா அது. வெளிய உன்னை விட பெரிசா எதையாவது பார்த்து பயந்து உள்ளே வந்ததோ என்னவோ? நீ ஆடிய ஆட்டத்தில் அது இது அதை விட ஆபத்தானதுன்னு நினைச்சு ஓடி இருக்கும்” என்று சிரித்தார்.

அப்போது தான் அந்த பதட்டம் பயமெல்லாம் போய் வருத்தம் எனக்குமே “ம்ம்... பாவம் தானில்ல. நானும் பயந்துட்டேன். அதுக்கு தெரிஞ்சுருக்காதே நானும் பயந்தேன்னு” என்றேன். இன்று காலையில் இருந்து அவர் கொய்யா மரத்தில் இருக்காரா என அடிக்கடி தேடுகிறேன்.

ஒன்று மட்டும் புரிகிறது... உலகில் எல்லாவற்றையும் விட ஆபத்தானது நொடிக்கு நொடி மாறும் மனித மனம் தான்.

5
Average: 5 (3 votes)