பொதுப்பிரிவு

ஆசிரியர் தின‌ வாழ்த்துக்கள்

உயிரெழுத்தை உயிராய் கற்ப்பித்த‌ ஆசிரியரே
மெய்யெழுத்தை மெய்யறிவாய் மெய்ப்பித்த‌ ஆசிரியரே
உயிர்மெய்யெழுத்தை உன்னதமாய் உரைத்த‌ ஆசிரியரே
ஆயுத‌ எழுத்தை ஆக்க‌ அறிவாய் அறியச்செய்த‌ ஆசிரியரே:

தமிழ்மொழி புலமைக்கு புத்துயிர் கொடுத்த‌ ஆசிரியரே
அந்நியமொழி ஆங்கலமொழி அறிவை வளர்த்த‌ ஆசிரியரே
கணக்கை, வாழ்க்கைகணக்குக்கு வசதியாக‌ போதித்த‌ ஆசிரியரே
அறிவியலை ஆழ்ந்த‌ அறிவாக்கி சிகரம் தொடவைத்த‌ ஆசிரியரே;

சமூகவியலை சமுதாய‌ அறிவாக்கி நாட்டுப்பற்றை நாட்டிய‌ ஆசிரியரே
விளையாட்டை, விவேகமுடனூட்டி வீரமகனாக‌ விளைவித்த‌ ஆசிரியரே
களிமண்ணுக்கும் உயிர் கொடுத்து கருவறையாய் மாற்றிய‌ ஆசிரியரே
பள்ளி மாணவர்களிடம் பாசமாய் பழகி வழிகாட்டிய‌ ஆசிரியரே;

உங்களின் பாதக் கமலங்களுக்கு, எங்களது நல் வணக்கங்கள்
சிரம் தாழ்ந்த‌, கரம் குவிந்த‌, வரமான‌, வளமான‌ வணக்கங்கள்
பண்பார்ந்த‌, உளமார்ந்த‌, நெஞ்சார்ந்த‌, அன்பார்ந்த‌ வணக்கங்கள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவார்ந்த‌, அழகான‌ வணக்கங்கள்.

ஆசிரியர் தின‌ நல் வாழ்த்துக்கள்.

5
Average: 5 (3 votes)

ராப் மாஸ்டரும் இமா மிஸ்ஸும்

பாடசாலையில் இந்த வருடம் 'காலா' (gala) இல்லையாம். இந்தக் கல்வியாண்டில் கற்பித்தலுக்கு வெளியேயான நிகழ்வுகள் அதிகம் வருவதாலும் மூன்றாம் தவணை இறுதியில் அதிபர் நாற்காலியில் மாற்றம் ஒன்று நிகழவிருப்பதாலும் இந்த முடிவு.

இதனால் நிறைய வேலை குறையும். அதற்கு ஈடுகட்ட, ஏற்கனவே வேறு வேலைகள் வந்தாயிற்று. :-)

காலா இருந்தால்... வாரம் ஒரு விடயம் சொல்லிவிடுவோம் - துணிகள், வைத்திருக்கக் கூடிய உணவுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், தோட்டம்... இப்படி. கடைசி நாள் கேக் தினம்.

இன்னது என்றில்லாமல் பொருட்கள் வந்து குவியும். ஒருவருக்கு வேண்டாதது இன்னொருவருக்குப் பெறுமதியாக இருக்கும் இல்லையா! பொருட்கள் வந்து சேரச் சேர நாங்களும் எல்லாவற்றையும் தரம் பிரித்துக் கொண்டே போவோம். இதனால் காலை வகுப்புகள் ஆரம்பிக்க முன், இடைவேளைகள், non contact (இங்கு free period அப்படித்தான் அழைக்கப்படுகிறது) பாடசாலை விட்டதும் முக்கால் மணி நேரம் இப்படி எப்படி முயன்றாலும் தரம் பிரித்தல் கடைசி நாள் வரை முடிவதில்லை.

சின்னவர்கள் நிறைய உதவுவார்கள். இடையில் கண்ணில் பட்டவற்றை எடுத்து விளையாடவும் ஆரம்பிப்பார்கள். :-)

சில கடைகள், தொழில் நிறுவனங்கள் விற்பனை தாமதமாகும் பொருட்களை எங்களுக்குக் கொடுத்து உதவுவது உண்டு. இவை இங்கு மலிவு விலையில் விற்கப்படுவதால் விலை போகும்.

பாடசாலை நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலா அன்று பொறுப்பான வேலைகள் நிறைய இருக்கும். பொருட்கள் வாங்கச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

இங்கு இது பதினைந்தாவது வருடம் எனக்கு. முதல் வருடம் லினன் பகுதியில் நின்றேன். பிறகு தொடர்ந்து பல வருடங்கள் பொம்மை விற்பனை. இடையில் ஒரு வருடம் குழந்தைகளோடு பலூன் விற்றேன். சமீப காலமாக ஃபேஸ் பெய்ண்டிங் பகுதியில் வேலை கிடைக்கிறது.

ஒரு தடவை ஏதோ ஒரு கடையிலிருந்து பிரிக்கப்படாமல் பெட்டிகளில் நீளநீளமாக என்னவோ ப்ளாத்திக்குப் பொருட்கள் வந்து சேர்ந்தன. சுமார் ஐம்பது பெட்டிகள் இருக்கும். என்னவென்று அறியாமல் எப்படி விலை நிர்ணயிப்பது! ஒன்றைப் பிரித்துப் பார்த்தோம். என்னவோ 'wrap master' என்று இருந்தது. cling wrap dispenser என்று புரிந்தது. பரிசோதித்துப் பார்க்காமல் எப்படித் தெரியும் நல்லதா இல்லையா என்று! என்னவோ ஒரு காரணத்தால் வில்படாமல் தங்கியிருப்பது எப்படி நல்ல பொருளாக இருக்க முடியும்! $ 3.00 என்று விலை குறித்தோம். முழுவதையும் விற்றால் $150 டாலர் வரும். இருபதுதான் விற்பனையாகிற்று. மீதி இருந்ததைப் பொதி செய்யும் சமயம் எனக்கும் ஒன்று வாங்கிக் கொண்டேன். வழக்கம் போல, 'சரிவராவிட்டால் போகிறது $ 3.00 பாடசாலைக்கு என் அன்பளிப்பு,' என்று எண்ணிக் கொண்டுதான் வாங்கினேன். பிற்பாடு ஒரு சமயம் கடையில் பார்த்தேன். விலை $ 30.00 என்றிருந்தது. ஏங்கிப் போனேன். :-)

ஆரம்பத்தில் அமைதியாக சமையல் மேடையில் அமர்ந்திருந்தார் ராப் மாஸ்டர். பிறகு பயன்பாடு எங்களுக்குப் பிடிபட ஆரம்பித்தது. முன்பெல்லாம் க்ளாட் ராப்பைப் பிரிக்கும் சமயம் அட்டைப் பெட்டியோடு இணைந்திருக்கும் உலோகப் பற்கள் என் கையைப் பதம் பார்க்கும். இந்த உபகரணம் வந்த பிற்பாடு அந்தச் சிரமம் இல்லை. அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாகப் பல வருடங்கள் எங்களோடு இருந்து விட்டுத் திடீரென்று ஓர் நாள் உடைந்து போயிற்று. ;(

மூடியில் இருந்த கம்பிச்சுருளொன்று தெறித்து விலக, கூடவே சின்னதாக ஒரு ப்ளாத்திக்குத் துண்டும் பறந்து போயிற்று. பெட்டியை மூடி வைக்க இயலவில்லை. கிட்டத்தட்ட... வீசியே விட்டேன்.

ராப் மாஸ்டர் இல்லாமல் கை முறிந்தாற் போலிருந்தது. புதிதாக ஒன்று வாங்கலாம் என்று நினைத்தால் விலை! மூன்றுக்கும் முப்பதுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு மனதில் பாரமாக வந்து போயிற்று. பரவாயில்லை, வாங்கிவிடுவோம் என்று நினைத்துப் போனால் எங்குமே காணோம்.

வீசுவதற்கான பொருட்கள் இருந்த பெட்டியில் இருந்து மீண்டும் வெளியே வந்தது டிஸ்பென்சர்.

ஒரு வெள்ளை நாடா, வெள்ளை நிற வெல்க்ரோ, double sided tape, கத்தரிக்கோல்... இத்தனையையும் எடுத்துக் கொண்டு திருத்த வேலையில் ஈடுபட்டேன். படம்... அருகே வர மாட்டேன் என்று அடம் பிடித்து மேலேயே தங்கி விட்டது. படிப்பவர்கள் அட்ஜஸ்ட் ப்ளீஸ். :-)

1. பெட்டியின் நடு வழியாக, பெட்டி முழுவதையும் சுற்றி வெள்ளை நாடாவை ஒட்டினேன். பின் பக்கம் பிணைச்சல் விரிந்து கொடுக்கும் கோட்டை மட்டும் தவிர்த்து, மீதியை double sided tape கொண்டு ஒட்டினேன்.

2. முன்புறம் சின்னதாக ஒரு துண்டு வெள்ளை நிற வெல்க்ரோ இணைத்துவிட்டேன்.

மீண்டும் முன்பு போலவே சமையல் மேடையில் கம்பீரமாக அமர்ந்து கோலோச்சுகிறார் எங்கள் க்லிங் ராப் டிஸ்பென்சர்.

5
Average: 5 (5 votes)

ரஜினீஸ் தத்துவங்கள்

'நான் நான்' என்று ஆணவத்தோடு சொல்வதைவிட‌ 'நாம் நாம்'என்று அடக்கத்தோடு சொல்லு. உலகம் உன் கையில்,

இளமையில் ஆரோக்கியம் தொலைத்துப் பணத்தை தேடுகிறோம். முதுமையில் பணத்தை தொலைத்து ஆரோக்கியம் தேடுகிறோம்.

காற்றில் கலந்து, செவியில் நுழைந்து, இதயத்தை நிரப்பும் இசையை கேள். மனம் பூவாக‌ மலரும்.

முடியாது, முடியாது என்று நூறு முறை சொல்வதை விட‌, 'முடியும்' என்று ஒரு முறை சொல் முடியாததும் முடியும்.

கொடுத்து சிவந்த‌ கரங்களை விட‌ உழைத்து சிவந்த‌ கரங்களை பாராட்டு.அதுதான் உழைப்புக்கு மரியாதை ஆகும்.

வாழ்க்கை என்பது ஒரு புதிர், புரட்சி, போராட்டம், சந்தோஷம், மகிழ்ச்சி, விளையாட்டு, சவால், சாதனை. வாழ்ந்து சாதிக்கலாம் வாங்க‌.

தோல்விகளைக் கண்டு துவளாதே. வெற்றியைக் கண்டு வெறியாட்டம் போடாதே.

உனக்குள்ளும் பல‌ தலைவர்கள் உண்டு. முயற்சிச்செய். நீயும் தலைவன் ஆவாய்.

எரிவது இன்றையப் பிணம். எரியூட்டுவது நாளையப் பிணம்.

ஒரு குடும்பம் வாழ‌ ஒருவன் அழியலாம். ஒரு ஊர் வாழ‌, ஒரு குடும்பம் அழியலாம். அழிவும், சில‌ நேரங்களில் பயனுள்ளதே.

பணக்காரனைக் கண்டு வெம்பாதே. பிச்சைக்காரனைக் கண்டு சிரிக்காதே.இவை உன் குணத்தையே அழித்துவிடும்.

வானவில் ஓர் வண்ணப்பூச்சரம், ஓவியம், கதம்ப‌ மாலை, அழகு வண்ண பட்டுப்புடவை, வரவேற்பு தோரண‌ வளைவு, மயில் வண்ண‌ சால்வை. மொத்தத்தில் இயற்கை நமக்குத் தந்த‌ கவிதை, கவிதை.

இறந்தகாலத்தை நினைத்து கவலைப் படாதே. எதிர்காலத்தை எண்ணி பயப்படாதே. நிகழ்காலமே பொற்காலம். நிகழ்காலத்தை சந்தோஷமாக‌ அனுபவி.

உற்சாகமாக‌ இருக்கும்போது கடினமான‌ வேலைகளை செய், ஓய்வு எடுக்கும்போது எளிமையான‌ வேலைகளை செய். வாழ்க்கை சுலபமாக‌ இருக்கும்.

நஷ்டம் வேண்டுமா கோபப்படு. லாபம் வேண்டுமா சமாதானமாக‌ இரு.

தவறு செய்தால் பயப்படு. மீண்டும் அந்த‌ தவறு நேராமல் பார்த்துக்கொள். அதுவே வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்.

வழிப்பாட்டைவிட‌ முதன்மையானது, மனிதனை மனிதன் புரிந்துக்கொள்ளுதலும், மதிப்பதும், அன்பு செலுத்துவதும் ஆகும்.

பசி மனிதனை வென்றுவிடுகிறது.பல‌ தவறுகளுக்கும் பசியே காரணமாகிவிடுகிறது.

மாற்றம் என்பது வளர்ச்சியின் தொடக்கம். அதுவே வெற்றியின் அறிகுறி.

பணம் பத்து நன்மை செய்தால், உன் நல்ல‌ குணம் கோடி நன்மை செய்யும்.

பொறுமை உள்ளவனே பொறுப்புள்ள‌ தலைவனாக‌ வாழ்ந்துக்காட்ட‌ முடியும்.

பலருக்கு வழிகாட்டியாக‌ வாழ்ந்து காட்டு, அதுவும் ஒரு சாதனைத்தான்.

இறந்தகால‌ சாதனையாளர்களைவிட‌, நிகழ்கால‌ சாதனையாளர்களை அடையாளம் காட்டு. அது வாழ்க்கைக்கு நம்மிக்கை ஊட்டும்.

5
Average: 4.7 (3 votes)

என்னைச் சுற்றி ஓர் உலகம்

இன்பச் சுற்றுலா போயிட்டு வந்தாச்சு. டிஸ்னி வேர்ல்டு, பாராசூட் ரைடு, பவளப்பாறை விசிட்னு ஜாலியடிச்சிட்டு வந்தாச்சு. எல்லாம் பிடிச்சுதா? இந்த‌ டூரில் எனக்குப் பிடித்த‌ விஷயம் எது என்பதை இந்தப் பதிவில் குறிப்பிடுகின்றேன்.

முன்னதாக‌ அப்படியே என்னோடு வாங்க‌ பார்க்கலாம்.

கூ......க்கூ......க்கூ...

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டு இருக்கிறது. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தால் வெளியே உலகமே ஓடுவது போல‌ இருக்கிறது.

ஆனால், உள்ளே அந்தப் பெட்டியில் இருந்த‌ அத்தனை பேரும் ஆளுக்கொரு மொபைலில் மெசேஜ் அனுப்பிக் கொண்டும், பேசிக் கொண்டும், (மொபைலில் தான்) பாட்டு கேட்டுக் கொண்டும் தனி உலகில் இருந்தனர்.

நம்மைச் சுற்றி என்ன‌ நடக்கிறது என்ற‌ சிந்தனையே இல்லாமல் அவர்கள் தனியே வேறு உலகில் சஞ்சரித்தனர்.

அப்படியே ஒரு அபார்ட்மெண்டுக்குள்ளே நுழைவோம்.

மாலை ஆறு மணி. சன் டிவியில் "முந்தானை முடிச்சு" சீரியல் பாடல் ஒலிக்க‌ ஆரம்பித்தது. இனி யார் கூப்பிட்டாலும் காது கேட்காது. சமையல் அடிப்பிடித்தாலும் தெரியாது.

நிறைய‌ வீடுகளில் நிலைமை இதுதான். யாராவது விருந்தினர் வந்தாலுங்கூட‌ அந்த‌ டி வி பெட்டியை ஆஃப் பண்ணுறது கிடையாது.

மாறாக‌, அடடா, சீரியல் போகுதே, இந்த‌ மனுஷி போக‌ மாட்டேன்னு நிற்கிறாளே என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட‌ உலகில் நாம் வாழ்கிறோம்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம்.

கிட்டத்தட்ட‌ பத்து தினங்கள் நீடித்த‌ இந்த‌ சுற்றுலாவில் எனக்குப் பிடித்த‌ விஷயம் எதுவென்பதை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

பத்து நாளும் என் கணவரும், குழந்தைகளும் என் அருகிலேயே இருந்தது தான் எனக்குப் பிடித்த‌ விஷயம்.

அதுவும் மொபைல், லேப்டாப், இல்லாத‌ உலகில் நாங்கள் இருந்தோம் என்பதே ஹைலைட். இந்த‌ வரியை அண்டர்லைன் பண்ணிக்கோங்க‌. அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே மொபைல் உபயோகிக்கப்பட்டது.

மற்றபடி மொபைல், லேப்டாப் இல்லாத‌ ஓர் உலகில் நாங்கள் மிதந்தோம். நாங்கள் நால்வர் மட்டுமே இந்த‌ உலகில் இருப்பது போலத் தோன்றியது. எங்களுக்கான‌ நாட்களாக‌ அவை தோன்றின‌.

நாங்கள் மட்டுமே எங்களுக்குள் பேசிக் கொண்டோம்; சிரித்துக் கொண்டோம்; கோபித்துக் கொண்டோம். எங்கள் நால்வருக்கிடையே ஐந்தாமவர் யாரும் நுழைய‌ முடியாத‌ நாட்களாக‌ அவை இருந்தன‌.

என் குழந்தைகள் கண்ணில் கண்ட‌ காட்சிகளை எல்லாம் படமெடுத்தனர். முகத்தை அஷ்ட‌ கோண‌லாக‌ வைத்துக் கொண்டும், அப்பாவியாக‌ வைத்துக் கொண்டும் காட்சிகளைப் பதிவு செய்து அவர்கள் அடித்த‌ லூட்டி சொல்லி மாளாது.

இதுவே வீட்டில் இருந்தால் மொபைல், லேப்டாப், டிவி, புக்ஸ் என்று தனித்தனியே அவரவ‌ர் உலகில் மூழ்கி விடுவர்.

இந்த‌ இடத்தில் என்னைக் கவர்ந்த‌ கதை ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள‌ விரும்புகின்றேன். இது பல‌ வருடங்களுக்கு முன் நான் மங்கையர் மலரில் படித்தது. என்னால் மறக்க‌ முடியாத‌ கதைகளில் இதுவும் ஒன்று.

கதைக்கரு ....மங்கைய‌ர் மலர்
வசனம்...நிகி

ஒரு அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, குழந்தை இது ஒரு இனிய‌ குடும்பம். இவர்களுக்கு நல்ல‌ பொழுதுபோக்கு தொல்லைக் காட்சிப் பெட்டியாகும். ஸாரி தொலைக்காட்சிப் பெட்டியாகும்.

ஒரு நாள் மாலை மயங்கும் நேரம். மணியோ ஆறைத் தாண்டியது. சீரியல் பார்ப்பதில் குடும்பமே ஆர்வமுடன் மூழ்கி இருக்கின்றது.

"அடடா என்ன‌ ஆச்சு?"

"குழந்தை அழுது"

"வுட்வர்ஸ் கொடுக்கச்சொல்லு. நீ குழந்தையா இருக்கறச்ச‌ அதான் கொடுத்தேன்"

"அடடா இப்போ என்னாச்சு? கரண்ட் போச்சே விளம்பரம் முடியறதுக்குள்ளே வந்துடுமா" இது அம்மா.

"எப்போ வரும்னு தெரியலியே. முக்கியமான‌ சீன் ஆச்சே" இது பாட்டி.

"அந்த‌ ஈபி ல‌ போனைப் போட்டு கேளுடா" இது தாத்தா.

"ஒரு மணி நேரம் கழிச்சு தான் வருமாம்ப்பா" இது அப்பா.

"பாட்டி நீங்க‌ ஒரு பாட்டுப் பாடுங்களேன்" இது ஸ்ரேயாக் குட்டி.

அந்தப் பாட்டியும் "தாயே யசோதா" என்று ஒரு அழகிய‌ கீர்த்தனையைப் பாடிக் காட்டுகிறாள்.

"தாத்தா, நீங்க‌ ஷேக்ஸ்பியர் நாடகத்தில‌ வரும் காட்சியை நடித்துக் காட்டுங்க‌" ஆர்வமுடன் கேட்கின்றாள். அவரும் டயலாக் சொல்லி நடித்துக் காட்ட‌,

"ஹையா சூப்பர் தாத்தா"

"அப்பா நீங்க‌ சூப்பரா மிமிக்ரி பண்ணுவீங்களே"

விதவிதமான‌ குரலில் பேசிக் காட்ட‌, அங்கே ஒரே கைத்தட்டல்கள்.

"அம்மா நீங்க‌ ஒரு குட்டிக் கதைம்மா"

மொத்தக் குடும்பமும் அங்கே குதூகலமாக‌ மகிழ்ந்தார்கள்.

அந்தச் சூழலை கற்பனை செய்து பாருங்கள். அனைவரும் சேர்ந்து சிரித்து, மகிழ்ந்து, ஜாலியாக‌.....ஓ எத்துணை குதூகலம்....ஆனந்தம்.....பரவசம்.

அந்தோ பரிதாபம்!! கரண்ட் வந்துவிட்டது.

டிவி உயிர்பெற‌ சீரியல் ஓடுகின்றது. அனைவரும் மீண்டும் டிவியில் மூழ்கிவிட‌ அந்த‌ குட்டிப் பாப்பாவை மட்டும் காணவில்லை.

ஸ்ரேயாக் குட்டி எங்கே?? அனைவரும் தேடிய‌ போது அந்தக் குட்டிப் பாப்பா பூஜையறையில் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.

"சாமி, தினமும் கரண்ட் போகட்டும்"

5
Average: 5 (6 votes)

முதற் தெரிவு

இப்போதெல்லாம் எந்த வேலையையும் பொறுப்பெடுக்கத் தயக்கமாக இருக்கிறது. நான் எதையாவது நினைத்திருக்க திடீரென்று எதிர்பாராமல் வேறு வேலை வந்து வைக்கிறது. இரண்டும் முக்கியமானதாகவும் பெரிதாக நேரம் எடுப்பதாகவும் இருக்கும் போது ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டுமோ திருப்தியில்லாத விதமாக அரைகுறையாக முடிகிறது. ;(

இன்றும் ஒரு தோழி தொலைபேசியில் அழைத்தார். ஒரு கேக் வேண்டுமாம். சற்றுப் பெரிய வேலை கேட்கிறார். பிடித்திருந்தாலும் பொறுப்பெடுக்க இயலவில்லை. நிச்சயம் குறிப்பிட்ட அந்த வாரம் வேறு வேலைகள் இருக்கின்றன. அரை மனதாக முடியாது என்றுவிட்டேன்.

படத்திலுள்ளது... முன்பு ஒரு முறை திருப்தியில்லாது முடிந்த கேக்.
எதிர்பாராமல் அந்த வாரம் பிள்ளைகள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் வந்தால் எப்பொழுதும் சந்தோஷம்தான். வேறு எதற்காகவும் அந்தத் தருணங்களை இழக்க விரும்புவது இல்லை. ஐஸிங் வைக்க ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் கிடைத்தது. அதற்குள் இரண்டு தொலைபேசி அழைப்புகள், நான் கிளம்பத் தயாரானது எல்லாமே அடங்க வேண்டி இருந்தது. இது குடும்பத்தாருக்கு மட்டும் என்பதாலும் பாடசாலைக்கு அனுப்ப வேறு அழகான கேக் ஏற்கனவே செய்து முடித்திருந்தேன் என்பதாலும் மனது ஒரு விதமாக ஆறுதல் அடைந்தது.

எத்தனை பேர் புலம்பல்களைப் படித்திருக்கிறேன்... வளர்ந்த குழந்தைகள் தங்களை வந்து பார்ப்பதில்லை, அன்பாக நடத்துவதில்லை என்பது பற்றி. என் குழந்தைகள் என்னைத் தேடி வரும் போது... அனுபவிக்க வேண்டாமா! அவர்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது; அவற்றைப் பெறுமதியாக நினைக்கிறேன்; எதிர்பார்க்கிறேன் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டாமா!

இப்போதெல்லாம் பொறுப்பெடுக்கும் வேலைகள் தாமதமானால் பிரச்சினை இல்லை என்பது போலிருந்தால் மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.

என் குழந்தைகள்தான் இப்போது என் முதற்தெரிவு. மீதி அனைத்தும் இரண்டாம் பட்சம்தான்.

5
Average: 5 (5 votes)

உரு மாறிய‌ உலோகங்கள்

நம் பாட்டி காலத்தில் வீடு முழுவதும் ஆட்சி செய்துக் கொண்டு இருந்தது பித்தளை பாத்திரங்கள். பெரிய‌ பெரிய‌ அண்டாக்கள், குண்டான்கள், தாம்பாளத்தட்டுக்கள், அடுக்குகள், சம்புடங்கள், போனிக்கள்,பேசின்கள், தவலைகள், குடங்கள், டம்ளர்கள், கரண்டிகள், வாளிகள் எல்லாமே பித்தளை சாமான்கள் தான். சமையல் அறையில் விதவிதமான‌ பித்தளை சாமான்கள் எல்லா அளவுகளிலும் இருக்கும். யார் வீட்டில் விசேஷம் என்றாலும் எல்லார் வீட்டு பித்தளை சாமான்களும் அவர்கள் வீட்டில் இருக்கும். அப்போது சாமான் வாடகைக்கு கிடைக்காதக் காலம். எங்கள் வீட்டில் கடைக்கு சாப்பாடு எடுத்து செல்லும் நான்கு அடுக்கு டிபன் கேரியர் உண்டு. அதில் பத்துப்பேர்க்கு சாப்பாடு எடுத்து செல்வார்கள். அவ்வளவு பெரியது. சோமாசி கரண்டி ஒன்று இருக்கும். அதன் ஒரு பக்கம் வண்டிச்சக்கரம் போல் இருக்கும். சோமாஸ்களின் ஓரங்களை வளை வளைவாய் கட் பண்ண‌ சோமாசி கரண்டிகளை பயன்படுத்துவார்கள்.அது பாட்டிக் காலம். கற்காலம்னு கூட‌ சொல்லலாம்.நாம் பித்தளை பாத்திரத்தை யார் கை வலிக்க‌ பளப்பளனு தேய்ப்பது என்று கவலைப்பட்ட‌ காலம்.

அடுத்து வந்தது நம் அம்மாவின் காலம். எல்லாமே எவர்சில்வர். பித்தளையில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகையிலும் சில்வர் சாமான்கள்.எல்லாம் சில்வர் மயம். ஒரே பளப்பளா தகத்தகா. சில்வர் பாத்திரங்களை தேய்ப்பதும் சுலபம். பராமரிப்பும் சுலபம். வெயிட்டும் குறைவு. தூக்கிச்செல்வதும் சுலபம். பித்தளை சாமான்களை விட‌ விலையும் குறைவு என்று புகழாரம் தான். பாட்டிக்கால‌ பித்தளை சாமான்கள் எல்லாம் சில்வர் சாமான்களாக‌ உரு மாறத் தொடங்கின‌. கல்யாண‌ சீர் வரிசை சாமான்களில் சோப் டப்பாக் கூட‌ சில்வர் என்பது பெரும் பாராட்டுக்கு உரியதாக‌ இருந்தது. எங்கும் சில்வர் எதிலும் சில்வர். இந்த‌ சில்வர் காலம் பொற்காலம்னு சொல்லலாம்.

அடுத்து வருவது நம் காலம். அது தான் வண்ண‌ மய‌ பிளாஸ்டிக் சாமான் காலம். பிளாஸ்டிக்ல‌ என்ன‌ சாமான் இல்லைனு சொல்ல‌ முடியுமா?. பச்சை கலர் சிங்குச்சா, சிவப்பு கலர் சிங்குச்சா, வெள்ளை கலர் சிங்குச்சானு எல்லா கலரும் வந்துவிட்டது. இதிலே அவரவர் ராசி கலர்னு சொல்லி தேடித்தேடி பிளாஸ்டிக் சாமான் வாங்க‌ ஆரம்பித்துவிட்டோம். பித்தளையை விட‌ விலை குறைவு. சில்வரை விட‌ விலை குறைவு. வெயிட்டும் குறைவு. சுத்தப் படுத்துவதும் சுலபம்னு சொல்லிச்சொல்லி பிளாஸ்டிக் பொருட்களை நாம‌ கில்லி அடிக்கிறோம். பித்தளை போய் சில்வர் வந்தது டும்டும்டும். சில்வர் போய் பிளாஸ்டிக் வந்தது டும்டும்டும்னு கும்மி அடித்துக்கொண்டிருக்கிறோம். இது கலிகாலம்.

அடுத்து வருவது நம் பிள்ளைகள் காலம். இந்த‌ காலத்திற்கு பித்தளையும் வேண்டாம். சில்வரும் வேண்டாம். பிளாஸ்டிக்கும் வேண்டாம். ஏன்னு சொல்லட்டுமா? வீட்டுச்சமையல் என்பதே மறந்துவிட்டதே,மூன்று வேளை சாப்பாடு என்பதே இரண்டு வேளையாக‌ சுருங்கி அந்த‌ இரண்டு வேளை சாப்பாடும் வெளியில் ஓட்டலில் தான் என்பது எழுதப்படாத‌ சட்டம் ஆகிவிட்டதே. உரு மாறி வந்த‌ உலோகம், இப்ப‌ காணாமலே போய்விட்டதுங்க‌. கற்காலம், பொற்காலம், கலிகாலம் போய்விட்டது. இனி கொடுங்காலம் தாங்க‌. அந்த‌ ஆதங்கத்தில் தான் இந்தப்பதிவை கொடுக்கிறேன்.

5
Average: 4.8 (6 votes)

நேரம் தவறாமையும், பள்ளிச் சுற்றுலாவும்..

அனைவருக்கும் இனிய வணக்கம்_()_ :)

நேரம் தவறாமை என்னும் இப்பதிவினை எழுத தூண்டியதே, என் மகளின் பள்ளிக்கூடத்தில் சுற்றுலா அழைத்து சென்ற பொழுது நடந்த விசயங்களை பார்த்ததுதான்.

மதியம் 2.30 மணிக்கு அனைவரும் பள்ளி வளாகத்தில் குழுமவேண்டும் என்ற அறிவுறுத்தலின் பேரில், நாங்களும் மகளை அழைத்துக்கொண்டு சரியாக 2.25 ஆஜராகிவிட்டோம்.
அங்கு சென்றால் வளாகமே வெறிச்சோடி இருந்தது. எங்களுக்கோ பயங்கர சந்தேகம் ஒருவேலை நாம்தான் தேதி சரியாக பார்க்காமல் சென்றுவிட்டோமோ என்று.
ஆசிரியரிடம் செல் பேசலாம் என்று நினைத்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்ததில் எங்களைப் போன்ற அப்பிராணி பெற்றோர் தங்களது குழந்தையுடன் தம்பதி சமேதரராக அமர்ந்திருந்தனர்.

நமக்கு ஏற்பட்ட சந்தேகமே அவங்களுக்கும் வந்துச்சாம், அப்பாடா மனசு ஒரே குசியாகிடுச்சு, பின்ன யாம் பெற்ற இன்பம் வேறு ஒருவரும் பெற்றார் என்றால் குசிக்கு கேட்கவா வேண்டும்.

மெது மெதுவாக வரத்தொடங்கினர். இரண்டு பேருந்துகளில் பயணம் துவங்குவதாக திட்டமிட்டு இருந்தனர்.

இங்கு வருத்தத்துடன் குறிப்பிட்டாக வேண்டிய ஒன்று என்னவென்றால் ஆசிரியரும் குறிப்பிட்ட நேரம் கழித்தே வந்தார் :( எகொசஇ..:(

நேரத்தைப்பற்றி போதிக்கவேண்டிய நீங்களே நேரம் கழித்து வரலாமா, என்று கேட்கவில்லை. மனதில் இருத்திக்கொண்டதோடு சரி.
புலம்பல்களுக்கு இடம் இருப்பதால் தான் இது போல நேரிடையாக கேட்கவில்லையோ என நினைத்து விடாதீர்கள்.

ஆசிரியர், ஆசிரியை வந்த உடனே குழந்தைகள் ஒவ்வொருவரும் பேசும் அழகை பார்த்த உடனே எல்லாமே மறந்துவிட்டது.

நா(னெ)மெல்லாம் ஆசிரியர் வந்தால் வணக்கம் வைத்துவிட்டு, அகன்றுவிடுவேன்.
ஆனால் இப்பலாம் ரொம்பவே மாற்றம்.
மிகவும் நட்புடன் பழகுவதை பார்க்கும் பொழுது ஆச்சர்யம்தான் உண்டானது.

ஒரு பையர் கேட்கிறார் மிகவும் அதிகார தோரணையில் சர் வென் வில் லீவ் .... ஒரு நிமிடம் ஜெர்க்காகித்தான் போனோம். அதற்கு தகுந்த பதிலை புன்முறுவலுடனே அளித்தார் அவ்வாசிரியர்.
மொட்டதாசன் குட்டைல விழுந்த மாதிரியே இருந்தது. ஒருவேலை நா(ன்)ம்தான் பத்தாம்பசலியா இருக்கமோ என்று உள்ளம் ஒரு நிமிடம் கனைத்து திரும்பியது.

சினிமாக்களில் வருவது போல, நானெல்லாம் அப்ப ஆசிரியர் சொன்னா ரொம்ப மருவாதியா பேசுவேனு ஆரம்பிச்சா நல்லா இருக்காதேனும் ஒரு எண்ணம் எழுந்து அடங்கியது.

தவறென்று சொல்லவில்லை, ஆனாலும் வரும் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே மறைந்து மாறிவிடுமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

வீட்டில் என்றால் அப்பாவை பெயர் சொல்லி செல்லம் கொஞ்சும் குழந்தைகளும் உண்டு, அம்மாவை செல்லப்பெயர் வைத்து அழைக்கும் குழந்தைகளும் உண்டு.
சில வீடுகளில் மரியாதையில் கொஞ்சம் குறைந்தாலும் முறைத்தலை அனுபவிக்கும் குழந்தைகளும் உண்டு.
இதுதான் நல்லது, இதுதான் கெட்டது என விளிக்கும் விதத்தைவைத்து அளவிடமுடியாது.

பாத்தீங்களா, தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத விசயத்தை நோக்கி பதிவு சென்று கொண்டிருக்கிறது.
இருங்க லகானை நேரம்தவறாமையை நோக்கி இழுக்கிறேன்.
மனம் சண்டிக்குதிரையாகி நொண்டிதான் அடிக்கிறது.

என்னைப்பொறுத்தவரைனு பெரிய வார்த்தை சொல்லும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை, அதனால் உலகம் என்ன சொல்லுதுனா, பெரிய பெரிய அறிஞர்கள், கற்றறிந்த சான்றோர்கள் என்ன சொல்றாங்கனா, நல்ல பழக்கம், கெட்டபழக்கம் என்பதுலாம் நாம் நடைமுறைப்படுத்துவதில்தான் இருக்கு.
அதாவது எப்படி தீய பழக்கம் அண்டிவிட்டால் அது விடாது கருப்பு போல் தொடர்கிறதோ, அது போல நல்ல பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் நல்லதாம்.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போலத்தான் இதுவும்.

நேரத்தை தவறவிட்டதனால் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய அரிய வாய்ப்புகளை இழந்தவர்கள் ஏராளம்.

மிக முக்கியமான சந்திப்புகள் கூட இந்த நேர ஆளுமைத்திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில், வெற்றி பெறாமலே போயிருக்கின்றது.

சிலபேர் சொல்வாங்க நான் என்ன பெரிய கலெக்டர் உத்யோகத்துக்கா போறேன், நேரத்துக்கு போறதுக்குனு, கலெக்டர் முதல் கடைக்கோடி ஊழியர்வரை நேரத்தை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

சாப்பிட நேரமில்லை, தூங்க நேரமில்லை ஒரே பரபரப்பு, இந்த பரபரப்பை குறைக்கணும்னா, நிச்சயம் நேரம்தவறாமை இருக்கவேண்டும். பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கும் நாளில் அமைதியா அமர்ந்து யோசித்தோமேயானால் கட்டாயம் ஏதோ ஒரு தவறினால் நேரத்தை கடந்துவிட்டிருப்போம். அந்த நேரத்திற்கான வேலையை தள்ளிப்போட்டிருப்போம்.

சிறுவயது முதலே நேரத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்க நாம்தான் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
பள்ளி ஊர்தி வந்து நின்று சப்தம் எழுப்பினால் மட்டுமே சாக்ஸ் போடுவேன் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளை சரியான அறிவுறுத்தலின் சரிசெய்யவேண்டும்.
காலையில் சீக்கிரமே எழும் பழக்கத்தை கடைபிடித்தாலே, அந்நால் முழுவதும் இனிமை ததும்பும் நாளாக ஒளிவீசும்.

இத்தனையும் எழுதிவிட்டு அன்று எத்தனை மணிக்கு சுற்றுலா கிளம்பினார்கள் என்பதை சொல்லாமல் விட்டால் தகுமா? சரியாக 4.00 மணிக்கு கிளம்பினார்கள்.
மலைவாசஸ்தலம் என்பதால் சீக்கிரமே அதாவது 3.00 மணிக்கு கிளம்பலாம் என்ற திட்டம் மாறிப்போய் கொஞ்சமே கொஞ்சம் அதாவது ஒரு மணிநேர காலதாமத்திற்கு பொறவு கிளம்பிட்டாங்க.

குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச்சென்று, அழைத்து வந்தனர். என் மகளுக்கு முதல் பள்ளி சுற்றுலா என்பதால் கொஞ்சமல்ல நிறையவே பயத்துடன் அனுப்பி வைத்தோம். அந்த பயத்தை போக்கும் விதமாக இருந்தது ஆசான்களின் கனிவான கவனிப்பும், பாதுகாப்பும்.
மதிப்புமிக்க அவர்களுக்கு மனமார்ந்த நன்றி சொல்லி அழைத்து வந்தோம்.

பின்குறிப்பு:

ஏதோ நேரத்தைப்பற்றி ரொம்பவே வியாக்கியானம் பேசி இருக்கனே, அப்ப நேரந்தவறாமைய சரியா பின்பற்றி ரொம்ப பெரிய புள்ளியா இருப்பனோனு நினைச்சு போடாதீங்க. (இப்பிடிவேற ஒரு நெனப்பா??)
நேரத்தை சரியாக கையாளும் வல்லமையை நானும் பின்பற்ற ரொம்பவே மெனக்கெடுறேன், அப்பவும் சொதப்பிடுது. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுனும் இப்பதிவினை சொல்லலாம். பயிற்சி கட்டத்தில்தான் இருக்கிறேன் இன்னமும்.

5
Average: 5 (5 votes)

என் சமையலறையில்

கடந்த புதன்கிழமை என் V ஸ்லைசரின் பாகமொன்றைத் தேடிக்கொண்டிருந்தேன். காணோம். ;( கர்ர்ரென்றிருந்தது. மீண்டும் வார இறுதியில் தேட ஆரம்பித்தேன். ஏற்கனவே இரண்டு நாட்களாக எங்கே தேடினேனோ அங்கேயேதான் அழகாக உட்கார்ந்திருந்தது நான் தேடியது. ;D கண்ணை மூடிக்கொண்டே தேடியிருப்பேனோ! ;)

இந்தத் தேடலில் ஒரு நன்மையான காரியம் ஆகிற்று. சில உபகரணங்களைத் தரம் பிரித்து ஒரு பெட்டியில் போட்டுவைக்க முடிந்தது. அப்படியே இங்கும் உங்கள் பார்வைக்கு வைக்க முடிந்தது. :-)

மேலே படத்திலிருப்பவை... என் பிரியமான பீட்ஸா பரிமாறி & முட்டை பிரி கருவி. (இதுக்கு பீட்ஸா சர்வர் & எக் செபரேட்டர் என்று எழுதாட்டா கூட படம் பார்த்து புரிஞ்சிருப்பீங்க. இருந்தாலும் எழுதி வைக்கிறேன்.) பீட்ஸா என்பதை ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் தெரிந்திருந்த காலம் அது. க்றிஸ் கேக் பரிமாறலாம் என்று நினைத்து வாங்கிவந்திருந்தார். பீட்ஸா வெட்டுவதற்கு அதன் சக்கரத்தின் அச்சு பலமாக இல்லை. ஆனால் மீதி வேலைகள் எல்லாம்... முக்கியமாக எடுக்கும் கேக் துண்டை அழகாகத் தட்டில் தள்ளிவிடும் வேலையை அருமையாகச் செய்யும்.

அருகே இருப்பது egg separator. தற்செயலாக ஒரு முட்டை கெட்டுப் போயிருந்தால் அன்று தொடர்ந்து பயன்படுத்த இயலாது. கழுவித் துடைப்பது கேக் செய்யும் சமயம் சரிவராது. துளி ஈரம் இருந்தாலும் கேக் வீணாகிப் போகும். அதனால் இரண்டாக வாங்கி வைத்திருந்தேன்.

சென்ற வருடம் என் தோழரொருவர் மின்னஞ்சலொன்று அனுப்பியிருந்தார். எனக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தன் மனதில் படுபவற்றை எபோதாவது இப்படி அனுப்பி வைப்பார். அம்முறை அனுப்பியிருந்த காணொளியில் உடைத்த முட்டையிலிருந்து மஞ்சட்கருவைத் தனியே பிரிக்கச் சுலபமான வழியென்று ஒன்று காண்பிக்கப்பட்டிருந்தது. முட்டையை உடைத்து ஒரு தட்டில் ஊற்ற வேண்டும். உலர்ந்த வெற்று குடிநீர்ப் போத்தலொன்றை தலைகீழாகப் பிடித்து, சற்று அழுத்திக் காற்றை வெளியேற்றி விட்டு மஞ்சட்கருவின் மேல் வைத்துப்பிடித்து கையை மெதுவே இலகுவாக்க மஞ்சட்கரு போத்தலின் உள்ளே ஏறியிருக்கும். முயற்சி செய்து பார்த்தேன். சரிவந்தது. இருந்தாலும் பலநாட்கள் குளிரூட்டியில் வைத்திருந்த பின் அறைவெப்பநிலைக்குக் கொண்டுவந்த முட்டையின் மஞ்சட்கரு உடைந்துபோகும் சாத்தியம் இருக்கிறது.

இப்போது சிலகாலங்களாக முட்டையைப் பிரித்தெடுக்க, YOLKR என்று ஒன்று (இது பார்வைக்கு ink filler ரப்பர்க்குமிழ் போன்றிருக்கும்.) பிரபலமாகி வருகிறது.

இது... meat tenderizer

இறைச்சியை இந்த முட்கருவியினால் நன்றாகக் குற்றிவிட்டு உப்பு, மஞ்சட்தூள், நொருக்கிய மிளகு தூவிப் புரட்டி வைத்து, வெளியில் மூட்டிய தீயின் மேல் கம்பி வலையில் பரப்பிப் போட்டுச் சமைக்க வேண்டும். சூட்டிறைச்சி என்போம். உண்மையில்... jerky தான் இது. 'மரக்கறிதான் சாப்பிடுவேன்,' என்பேன். ஆனால் இப்படிச் சிலது மட்டும் விதிவிலக்கு. ;) மாமிசத்திலிருக்கும் கொழுப்பெல்லாம் அப்படியே உருகி வடிந்து தீர்ந்திருக்கும். தெரிந்து சில பகுதிகளை மட்டும் சாப்பிடுவேன்.

இது... இங்கு பாடசாலையில் எல்லா ஆசிரியர்களுக்கும் ஆளுக்கொன்று கிடைத்தது. மாமி கொடுத்த V ஸ்லைசரில் இதைவிட அருமையானதாக ஒன்று இருந்தது. அது ஊரில் தங்கிவிட்டது. ;(( ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை!

தோடை இனக் காய்கள் எதுவானாலும், முதலில் சிறிது தயார் செய்துவிட்டு இந்த உபரணத்தைச் சுழற்றினாற்போல் உள்ளே இறக்கிவிட்டால் காயை வெட்டாமலே பிழிந்து கொள்ளலாம். இங்கு வந்து மீன் பரிமாறும் சமயம் விரும்பியவர்கள் பிழிந்து விட்டுக் கொள்ளட்டும் என்று, இப்படியே மேசையில் வைத்துவிடுவேன்.

காயைத் தயார் செய்வது என்றேனே! குழம்பிப் போக வேண்டாம் யாரும். ;) செபா சோற்றுப் பானையின் மேல், அரிக்கன்சட்டியில் சிறிது தண்ணீர் விட்டு அதில் பிழிய வேண்டிய தேசிக்காயை சில நிமிட நேரம் போட்டு வைப்பார்கள்.

தெரிந்த ஒருவர் பாதத்தின் கீழ் போட்டு உருட்டுவார். பிறகு கழுவிவிட்டு நறுக்கிப் பிழிந்து எடுப்பார். இன்னொரு வீட்டில் சட்டி இறக்கும் துணியில் (இது பல வருடத்துப் பழங்கதை. அந்தத் துணியின் வர்ணத்தைக் கவனத்தில் எடுக்க மாட்டார்கள்.) தேசிக்காயை வைத்துச் சுழற்றி மேசையில் நான்கு அடி அடிப்பார்கள். பிறகு பிழிந்தால் சுலபமாகச் சாறு வரும். இப்படித் தயார் செய்வதைக் கண்ணால் பார்த்த பின்னால் சம்பல் போன்ற சமைக்காத உணவுப் பொருட்களைச் சாப்பிட மனமே வராது. :-)

கருத்துச் சொல்வதாக உங்களுக்குத் தெரிந்த டிப்ஸ்களை விட்டுச் செல்லுவீர்கள் என்னும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன். :-)

நன்றி _()_

Average: 5 (5 votes)

என் உயிரே

உனக்கான
பாடல்
எங்கோ
ஒலிக்கிறது
மூழ்கி போகிறேன்
உன் நினைவுகளுடன்.

****

என் உயிரே
எங்கே மறைந்தாயோ...
காணாமல்
தவிக்கிறேன்...
சொல்லாமல் ஏன்
சென்றாய்...
காத்திருக்கிறேன்
உன்
ஒரு விழிஅசைப்பில்
விடை பெற...

*****

ஏய் மழையே
உன் காதல்
சொல்லவந்தாயோ
கோலமிட்டு செல்கிறாய்
என்
கண்ணாடி ஜன்னலில்...

****

நீ
அறியாத
என்
காதலை
கண்டுக்கொண்டது
கண்ணிரில்
நனையும்
என் தலையணை...

                 ******

5
Average: 4.8 (4 votes)

சுதந்திரதின வாழ்த்துக்கள்

68வது சுதந்திரதினம் - பலர் தியாகங்களின் தயவால் இன்று நாம் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறோம். இந்நன்னாளில் அவர்களைக் கொஞ்சம் நினைப்போமா!
முதல் சுதந்திரப்போர் 1857ல் மீரட்டில் நடந்த சிப்பாய்க்கலகம் என்றே வரலாறு பதிவு செய்துள்ளது.
இந்நிகழ்வுக்கு முன்பே நம் தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிரான போரட்டங்களை நடத்திருந்தாலும் நம் ஒற்றுமையின்மையால் முறியடிக்கபட்டது. ஆனால் நம் ராணி மங்கம்மா அவர்கள் மட்டுமே ஆங்கிலேயருக்கு எதிரான போரில் அவர்களை வீழ்த்தி ஆங்கிலேயரிடம் மன்னிப்புப் பட்டயம் எழுதி வாங்கிய ஒரே வீரமங்கை ஆவார்.

அதற்குப் பிறகு பல தலைவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த, பலரின் தியாகத்தால் 1947ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திரம் கிடைத்தது.

நாம் குழந்தைகளாய் இருக்கும்போது நமக்கு தெரிந்த சுதந்திரதினம் இருபத்தைந்து காசு நிலா மிட்டாயும், விடுமுறை கிடைக்கும் என்ற ஆனந்தமும். அதற்குப் பிறகு சட்டையில் தேசியக்கொடியைக் குத்திக்கொண்டு திரியும் போது தனி கர்வம் பிறக்கும்.

50வது பொன்விழா சுதந்திரதினம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு சுதந்திரதினம். அன்றைய முதல்வர், ஆளுநர் முன்னிலையில் சென்னை மெரினா கடற்கரையில் இரவு 12 மணியளவில்  பள்ளி மாணவியாய்  நாட்டிய நிகழ்ச்சியில் பங்களித்தது என் சுதந்திரதின மலரும் நினைவுகள்.

நம் பிள்ளைகளுக்கு சுதந்திரதினத்தின் சிறப்பை எடுத்துச் சொல்வோம். சாதி, மத வேற்றுமை கலைந்து இந்தியர் என்று பெருமை கொள்வோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

5
Average: 5 (2 votes)