ரசனை

"தாத்தா, பாட்டிகள் தினம்"

அனைவருக்கும் வணக்கம் ,

என் மகன்களின் பள்ளியில் Grand Parents Day (தாத்தா, பாட்டிகள் தினம்) கொண்டாடினார்கள் . அதில் எனது மகன் வரவேற்பு உரை கொடுத்திருந்தார் . அவரது உரையின் தமிழாக்கம் இதோ உங்களுக்காக :-)

விழாவிற்கு வருகைதந்துள்ள ஒவ்வொருவருக்கும் எனது வணக்கங்கள்,

இன்று நாம் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடுகிறோம் . இந்நாளில் எனது தாத்தா , பாட்டி பற்றி சொல்ல விரும்புகிறேன் . அவர்கள் மிகவும் அன்பானவர்கள் , அதே சமயம் மிகவும் கண்டிப்பானவர்களும் கூட , சில சமயங்களில் தண்டனைகளும் கிடைத்திருக்கின்றன .

"தாத்தா , பாட்டிகள் நடமாடும் வாழ்வியல் நூலகங்கள்" . என் தாத்தா பாட்டியும் அப்படித்தான் . என் தாத்தா எனக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தார் . வாய்ப்பாடு , ரூபாய்களின் மதிப்பு , கடிதம் எழுதுதல் , கேரம் , கில்லி , கபாடி போன்றவையும் கற்றுக்கொடுத்துள்ளார் . இதையெல்லாம்விட எங்களின் தாய்மொழி , கலாச்சாரம் , பாரம்பரியம் , நல்லொழுக்கம் , கம்பீரம் , தைரியம் இவற்றையும் கற்றுக்கொடுத்துள்ளார் .

நாங்கள் எப்பவெல்லாம் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றாளும் நாங்கள் விரும்பும் உணவுகளை செய்து கொடுப்பார் எங்கள் பாட்டி . அவர் செய்வதில் லட்டு மற்றும் பிரியாணி எனக்கும் என் தம்பிக்கும் மிகவும் பிடித்தமானவை . செடிகள் வளர்ப்பது , தோட்டப்பராமரிப்பு இவையெல்லாம் என் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டேன் . மேலும் யாரிடமும் மனம் புண்படும்படி பேசக்கூடாது , விட்டுக்கொடுத்து பழகவேண்டும் என அடிக்கடி சொல்லுவார் . அவர்களது சொல்பேச்சு கேட்டதால்தான் இன்று உங்கள் முன்னால் நல்ல தலைவனாக நிற்கிறேன் .

அவர்களோடு செலவிடும் நாட்கள் எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று . நானும் தம்பியும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டு இருக்கிறோம் அடுத்த விடுமுறைக்காக . பாட்டியின் லட்டு சாப்பிட்டபடி தாத்தாவோட வண்டியில் கடைவீதி சுற்றிப்பார்க்க . :-)

இன்று எனது தாத்தா பாட்டியால் இங்கு வர இயலவில்லை , அது மிகவும் வருத்தமாக உள்ளது . ஆனால் , எனது நண்பர்களின் தாத்தா பாட்டிகள் எனது உரையை கேட்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உனர்கிறேன் .

" பெரியவர்களுக்கு என்றும் வழிநடத்தவும் , நேசிக்கவும் மட்டுமே தெரியும்.
நாமும் அவர்களை மதித்து நேசிப்போம்..."

நன்றி....

No votes yet

ஞாபகம் வருதே.....-2

லீவில் வீட்டிற்கு விருந்தாளி வந்து பின் நாங்கள் வெளியில் போனதால் ஞாபகம் வருதே அடுத்த‌ பாகத்திற்கு கால‌ தாமதம் ஆகி விட்டது. பரவாயில்லை மன்னித்து விட்டுடலாம். முதல் பாகத்தில் சொன்னது போல‌. இன்னும் சில‌ பாடல்களும் ஞாபகத்துக்கு வருகின்றன‌.

1. நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மீது ஏறி வா
மல்லிகை பூ கொண்டு வா
நடு வீட்டில் வை
நல்ல‌ துதி செய்

2. அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயை தூற‌ ஓட்டு
ஒரு பங்கு உனக்கு ஒரு பங்கு எனக்கு
ஒரு பங்கு அப்பாக்கு ஒரு பங்கு காக்காக்கு

3. மழை வருது மழை வருது நெல்ல‌ வாருங்க‌
முக்கா படி அரிசி போட்டு முருக்கு சுடுங்க‌
ஏர் இழுக்கற‌ மாமனுக்கு எண்ணி வையுங்க‌
சும்மா இருக்கற‌ மாமனுக்கு சூடு வையுங்க‌

4. பச்ச‌ மிளகா காரம், பன்னண்டு மணி நேரம்
டீச்சர் வந்தாங்க‌, டியூப்லைட் போட்டாங்க‌
வாத்தியார் வந்தாரு, வணக்கம் வெச்சாரு
இன்ஸ்பெக்டர் வந்தாரு, இழுத்து போட்டு அடிச்சாரு

5. அதோ பார் காரு, காருக்குள்ள‌ யாரு?
நம்ம‌ மாமா நேரு, நேரு என்ன‌ சொன்னாரு?
நல்லா படிக்க‌ சொன்னாரு.

6. மொட்ட‌ பாப்பாத்தி, முருக்கு சுட்டாலாம்,
எண்ண‌ பத்தலயாம், கடக்கி போனாலாம்,
காசு பத்தலயாம், கடக்காரன‌ பாத்து கண்ணடிச்சாலாம்.

7. தம்பி தம்பி டா, என்னா தம்பி டா?
குருவி குடுடா, என்னா குருவி டா?
மஞ்ச‌ குருவி டா, அது எப்டி கத்தும் டா?
கீச் கீச்னு கத்தும் டா.

8. ரே ரே ரே ரே ரேட்டு கொட்டாஞ்சி
அம்மா வர‌ நேரமாச்சி தூங்கு தங்காச்சி.
ரே ரே ரே ரே ரேட்டு கொட்டாஞ்சி
அம்மா வர‌ நேரமாச்சி தூங்கு தங்காச்சி.

9. சின்ன‌ சின்ன‌ பை(யி)
காச‌ போட்டு வை(யி)
அம்மா சொல்வது மெய்(யி)
சொல்ல‌ கூடாது பொய்(யி)

10. கணபதி பாப்பா மோரியா
ரவா லட்டு தாரியா?
கணபதி பாப்பா மோரியா
ரவா லட்டு தாரியா?

இம்புட்டு தாங்க‌ என் நினைவில் உள்ள‌ பாடல்கள். உங்களுக்கு இதிலிருந்து எதாவது ஞாபகம் வருதா? உங்களுக்கு வேறு ஏதாவது பாட்டு தெரிந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

5
Average: 5 (2 votes)

ஞாபகம் வருதே...

நாம‌ சின்ன‌ வயசா இருக்கறச்சே எவ்ளவோ பாட்டு பாடி இருக்கோம். அதுலயும் ஒரு சில‌ பாட்டு நம்மால‌ மறக்க‌ முடியாம‌ இருக்கும் இல்ல‌. அது மாறி எனக்கும் மறக்க முடியாத‌ சின்ன‌ வயசு பாட்டு இருக்குங்க‌. என் சின்ன வயசுல‌ பள்ளியில் பேபி கிளாஸ் படிக்கறப்போ (இப்போ தாங்க‌ l.k.g,u.k.g எல்லாம். அப்போ என் ஸ்கூல்ல‌ பேபி கிளாஸ் தான்) என்னையும் நம்பி என் கிளாஸ் டீச்சர் இந்த‌ பாட்ட‌ என்ன‌ ஸ்டேஜ்ல‌ பாட‌ வெச்சாங்க‌. நானும் ரொம்ப‌ நல்லா பாடினேன். பயங்கர‌ கை தட்டல் வாங்கின‌ பாட்டு. அப்றம் வீட்டுக்கு வந்த‌ அப்றம் அப்பா ரெக்கார்டு பண்ணலாம்னு பாட‌ சொன்னா வெக்கம் வந்து பாட மாட்டேனு சொல்லிட்டேன். அப்றம் அந்த‌ பாட்டு மறந்தே போச்சி. இப்போ என் குழந்தைக்கு தூங்க‌ வைக்க‌ பாட்டு பாடற‌ அப்போ அந்த‌ பாட்டு தானா ஞாபகம் வந்துடுச்சி. இத‌ உங்க‌ கூடவும் ஷேர் பண்ணனும்னு ஆசையா இருந்துச்சி. அதான் சரி இதுல‌ போடலாம்னு போடறேன். இது கேள்வி பதில் பாட்டு. நான் கேள்வி பாட்டு பாட‌ என் சக‌ மாணவி பதில் பாட்டு பாடுவா. இதாங்க‌ அந்த‌ பாட்டு.

1. முட்டைக்குள்ளே இருக்கும் போது,
முட்டைக்குள்ளே இருக்கும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட‌
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?

உலகத்த பாக்க‌ போறேன், உலகத்த பாக்க‌ போறேன்
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி‍-அட‌
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி

2. உலகத்த‌ பாத்த‌ பின்னே உலகத்த‌ பாத்த‌ பின்னே
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட‌
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?

குப்ப‌ மேட்ட பாக்க‌ போற‌ குப்ப‌ மேட்ட‌ பாக்க‌ போற‌
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி‍-அட‌
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி

3. ரெக்கைய‌ பிக்கும் போது, ரெக்கைய‌ பிக்கும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட‌
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?

ஹேர்கட் பண்ணிக்கிறேன், ஹேர்கட் பண்ணிக்கிறேன்
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி‍-அட‌
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி

4. மஞ்ச‌ பொடி தூவும் போது மஞ்ச‌ பொடி தூவும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட‌
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?

மஞ்ச‌ தேச்சி குளிக்கற‌ மஞ்ச‌ தேச்சி குளிக்கற‌
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி‍-அட‌
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி

5. மசாலா தடவும் போது, மசாலா தடவும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட‌
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?

ஃபேஷியல் பண்ணிக்கிறேன், ஃபேஷியல் பண்ணிக்கிறேன்
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி‍-அட‌
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி

6. எண்ணையில் பொரிக்கும் போது,
எண்ணையில் பொரிக்கும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட‌
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?

ஆயில் பாத் எடுத்துக்கிறேன், ஆயில் பாத் எடுத்துக்கிறேன்
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி‍-அட‌
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி

7. வாய்க்குள்ளே போகும் போது, வாய்க்குள்ளே போகும் போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி-அட‌
என்னதான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி?

உலகம் ரொம்ப‌ மோசம், உலகம் ரொம்ப‌ மோசம்
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி‍-அட‌
என்று தான் சொல்லுச்சாம் கோழிக் குஞ்சி

இதாங்க‌ பாட்டு. இன்னும் கொஞ்சம் நடுல‌ ஞாபகமே வரல‌. மண்டைல‌ இருக்க‌ வரைக்கும் அனுப்பறேன். பாவம் இல்ல‌ அந்த‌ கோழி குஞ்சி. பாவம் பாத்து என்ன‌ பண்றது. நாம‌ சாப்டலனா கோழி அடிக்காம‌ தான் இருப்பாங்களா இல்ல‌ விக்காம தான் போக‌ போதா? இன்னும் சில‌ பாடல்களும் இருக்கு. இரண்டாம் பாகம் விரைவில்.....

5
Average: 5 (1 vote)

சுவையோ சுவை!!

அறுசுவை மக்களுக்கு வணக்கமுங்க.....

ஒருபக்கம் அறுசுவையில் நம்ம மக்கள், கிச்சன் குயின்களா மகுடம் சூடிட்டு இருக்காங்க!! அதை பார்க்கப் பார்க்க உள்ளுக்குள்ள ஒரே............இருங்க இருங்க, உடனே, உள்ள புகையிதுன்னு அவசரப்பட்டு நினைச்சுடக் கூடாது மக்களே! உள்ளுக்குள்ள ஒரேஏஏஏஏஏஏ......... ஆனந்தம்னு சொல்ல வந்தேனாக்கும்!

உடனே நீங்க கேப்பீங்க, உனக்கு எதுக்கு ஆனந்தம்னு? நம்ம மக்கள் விதம் விதமா படம் காட்டறதப் பார்த்து, நாங்களும் இம்ப்ரஸ் ஆகி, ஏதோ சமைச்சு ,வீட்டுல இருக்கிறவங்கள குஷிப்படுத்தறோமோ, இல்லையோ! ஆனா கடுப்பேத்தறோமாக்கும்!!!

சரி, அந்தக் கதையை விடுங்க, நம்மக் கதைக்கு வருவோம்! நம்மக் கதை என்ன கதைன்னு கேட்டீங்கன்னா? ரசிச்சு, ருசிச்சு சாப்பிடறதுதான்!! வேறென்ன??

மனிதர்களுக்கு பசிக்காம இருந்தாலோ! அல்லது அப்படியே பசிச்சாலும் நாக்குங்கிற ஒரு உறுப்பு இல்லாம இருந்தாலோ, எப்படி இருந்திருக்கும்? நினைச்சுப்பாருங்க...........உணவையும் மாத்திரை ரூபத்தில் விற்பனை செய்திருப்பாங்களோ!!

ரசித்து சமைக்கிறதுங்கிறது எப்படி ஒரு கலையோ, அதுபோல ரசிச்சு, ருசிச்சு சாப்பிடறது ஒரு பெரிய கலை!! சாப்பிடறதெல்லாம் ஒரு கலையான்னு நினைச்சு சிரிக்காதீங்கப்பா!! ரசிச்சு சாப்பிட ஆளே இல்லைன்னா………… சமையலை ஒரு கலைன்னு சொல்ல முடியாது! பசிக்காக செய்யற ஒரு வேலைன்னுதான் சொல்லனும்!

எத்தனையோ விதமான உணவகங்கள், அங்கு கிடைக்கிற உணவுகள், எவ்வளவு சுவையுடன் இருந்தாலும், வீட்டுச் சாப்பாடுக்கு, ஒருபடி கீழதான் அந்த உணவுகள் அப்படிங்கிறது என்கருத்து!

பெண்கள் அறுசுவை அரசிகளா இருக்கலாம்!! ஆண்களுக்கு அவங்க மனைவிமார்கள் சூப்பரா சமைச்சுக் குடுக்கிறவங்களா இருக்கலாம்!! இல்லைன்னா அவரவர்களே கூட சமைக்கத்தெரிந்த செஃப் ஆக இருக்கலாம்!! எப்படி இருந்தாலும், அவரவர்களுக்குப் பிடித்த, ரசித்துச் சாப்பிடக்கூடிய ஒரு ஆத்மார்த்தமான சாப்பாடுன்னா?? அது அவங்களோட அம்மா செய்து குடுத்த ஒரு ரசமோ! சாம்பாரோ! ஒரு துவையலாகவோக் கூட இருக்கும்! இல்லைன்னா பாட்டி செய்த ஒரு இனிப்பு உருண்டையோ! பலகாரமாகவோ! எதுவாக வேண்டுமானாலும் இருக்கும்!!

எங்க பக்க சமையலில் இட்லிக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன்னா, அது கெட்டியாக இல்லாத மட்டன்குழம்புதான்!! இட்லிக்கு மட்டன் குழம்புன்னா 2 இட்லி சேர்த்துக்கூட சாப்பிடத்தோணும்! சில விஷேச தினங்களில், அதே இட்லிக்கு ஆட்டுக்குடழ் குழம்பு சூப்பராகப் போகும்! போனாப்போகட்டும்னு இட்லிக்கு ஒரு இணை சொல்லலாம்னா அது வெங்காயமும், தக்காளியும் சேர்த்துச் செய்யற காரச்சட்னியைச் சொல்லலாம்!!

சப்பாத்திக்கு எத்தனையோ சைட்டிஷ் இருந்தாலும், எனக்குப் பிடிச்ச சைட்டிஷ் சிக்கன் கிரேவிதாங்க!! எங்கபக்கம் விஷெசங்கள், கல்யாணங்களில் கத்திரிக்காய்+ மொச்சை (அ)காராமணி (அ) கொண்டைக்கடலை (புளி சேர்த்து செய்வது) கிரேவி பரிமாறுவாங்க! அதை 2 வது தடவை கேட்டுச் சாப்பிடாதவங்க மிகக்குறைவு!!

அப்பவே செய்து சாப்பிடும் புளிசாதத்தைவிட, விஷேச நாட்களில் மீந்துபோன சாதத்தில் புளிசேர்த்துக் கிளரிவைத்து, அடுத்தனாள் காலையில் தாளித்துக் குடுப்பாங்க பாருங்க! முன்னாடி நாள் சாப்பிட்ட விருந்தைவிட இதுதான் அவ்வளவு பிரமாதமா இருக்கும்!!

காலேஜ்ல,ஸ்கூல்ல ஹாஸ்டல் சாப்பாடுங்கிறது எவ்வளவுதான் கொடுமையா இருந்தாலும், சில சமயம் அங்கேயும் அசத்தலான சாப்பாடு கிடைக்கும்! சில ஐயிட்டங்கள் ரொம்ப பிரமாதமா இருக்கும்! அதுல என்னோட விருப்பம் வெஜிடபிள் பிரியாணி, உருளை பொரியல், பொங்களுக்கு காம்பினேஷனா ஒரு புளிக்குழம்பு குடுப்பாங்க! அந்தமாதிரி ஒரு புளிக்குழம்பு இதுவரைக்கும் எங்கேயும் சாப்பிட்டதில்லைங்க!! யாருக்காவது இந்த புளிக்குழம்பு ரெசிப்பீ தெரிஞ்சா சொல்லுங்கப்பா!

காலை வேளைகளில், அதுவும் குறிப்பா கோடைக்காலங்களில் நீராகாரம் சாப்பிட்டு இருக்கீங்களா? இட்லி, தோசை,பூரி, பொங்கல் மற்றும் இருக்கவே இருக்கு காய்ஞ்சிபோன ப்ரெட் சாண்விட்ச், இவையெல்லாம் இந்த நீராகாரங்கள் பக்கத்துலக் கூட நிக்க முடியாதுங்க!! அதுக்கு கடிச்சிக்கிறதுக்குன்னு (சைட்டிஷ்) ஒரு "புளிகடுப்பான்" எங்க பாட்டி செய்வாங்க! அந்த மாதிரி ஒரு புளித்தொக்கு எங்கேயும் கிடைக்காதுங்க! கத்துக்கலையேன்னு நினைத்து நான் வருத்தப்படற ஒரே ரெசிப்பீ அதுமட்டும்தான்! இந்த நீராகாரத்திலேயும் ஸ்பெஷலா சொல்லனும்னா? முன்னாடி நாளே செய்த கம்புச்சோற்றுடன் (கம்பை உரலில்தான் இடிப்பாங்க) அடுத்தனாள் காலையில் வெண்ணெய் எடுத்தமோர் சேர்த்துக் கரைத்து, தொட்டுக்க சின்னவெங்காயம் இல்லைன்னா மோர்மிளகாய், இதுக்கு ஈடா அந்த தேவலோகத்து அமிர்தத்தையேக் குடுத்தாலும் நானெல்லாம் வேண்டாமின்னுதாங்க சொல்லுவேன்!!!

சமீபத்தில அறுசுவையில் சிம்ளின்னு ஒரு உருண்டை செய்துகாட்டியிருந்தாங்க! அதைப் பார்த்தவுடன் எங்கவீட்டுல செய்யற எள்ளுருண்டை ஞாபகம் வந்தது. எத்தனையோ ஸ்வீட்ஸ் இருந்தாலும் எனக்குப் பிடித்த ஸ்வீட்னா எள்ளுருண்டைதான்! எங்க வீட்ல 2 விதமான எள்ளுருண்டை செய்வாங்க! முதல்ல அரிசிமாவு+வெல்லம்+ வறுத்த எள்ளு சேர்த்து செய்யறது. 2 வது வறுத்தஎள்ளு+வெல்லம்+சிம்ளிக்கு செய்வதுபோல் ராகிஅடை செய்து, மூன்றையும் சேர்த்து உரலில் இடித்து உருண்டை பிடிப்பாங்க! இப்படி வீட்ல எள்ளுருண்டை செய்தாங்கன்னா, அந்த வாசம் உண்மையிலேயே ஊரெல்லாம் வீசும்!!

கம்புல கொழுக்கட்டை செய்வாங்க! அதுக்கு தொட்டுக்க கருப்பட்டிப்பாகு அருமையா இருக்கும்!! எங்கவீட்ல சின்னக்கருவாடை வறுத்து பொரியல் மாதிரி செய்வாங்க! சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டா அவ்வளவு பிரமாதமா இருக்கும்!! கூட வேற எதுவுமே தேவைப்படாது!!

இன்னும் லிஸ்ட்ல‌ நிறைய இருக்குங்க! அடை அவியல், இடியாப்பம்+ ஆப்பம் அதுக்கு இணையா தேங்காய்ப்பால்+வெல்லப்பாகு, முன்னாடி நாளே செய்த மீன்குழம்பு + கருவாட்டுக்குழம்பு, வத்தக்குழம்பு மற்றும் முட்டைக்குழம்புன்னு சொல்லிட்டேப் போகலாம்!!!

இதோடவிட முடியுமா? என்னோட ஃபேவரெட்ஸ் இன்னும் இருக்குங்க! இதுவரைக்கும் சொன்னதெல்லாம் எங்க வீட்டுல சாப்பிட்டது! இதுக்குமேல சொல்றதெல்லாம் ஸ்கூல் படிக்கும்போது வீட்டுக்கு வெளியே சாப்பிட்டது. நம்மளோட ஆல்டைம் ஃபேவரெட்னு சொன்னா அது இலந்தவடைதான்! இப்பவும் எங்கபாத்தாலும் வாங்காம விடமாட்டோமில்ல நாங்க!!

அப்புறம் இருக்கவே இருக்கு ஜவ்வுமிட்டாய், தேன்மிட்டாய், கல்கோனா.......என்னோட ஒரே வருத்தம், இதெல்லாம் இப்ப கடைங்கள்ல கிடைக்கிறதே இல்லை!! சின்ன நெல்லிக்காய் மாதிரியே, உப்பு,மிளகாய்ப்பொடி தூவி "கெலாக்காய்"நு ஒன்று கிடைக்கும்! சுவை நெல்லிக்காயைவிட சூப்பரா இருக்கும் போங்க!!!

""நித்தம் நித்தம் நெல்லுச்சோறு"" இந்த பாட்டை எப்பவாவது கேட்க்க நேர்ந்ததுன்னா!! இத்தனை ஐயிட்டங்களும் என் மனசுக்குள்ள ஒரு ரவுண்ட் வலம் வந்திடும்!!!

((பின்குறிப்பு:= ஒரு பெரிய ரகசியம், உங்களுக்கு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோங்க........ கல்கோனா, கம்மர்கட், இலந்தவடை, தேன்மிட்டாய் மற்றும் ஜவ்வுமிட்டாய் இவைகளோட ரெசிப்பீ தெரிஞ்சவங்க ,அறுசுவையில வெளியிட்டாங்கன்னா, அவங்களுக்கு ""அறுசுவை பேரரசி"" பட்டம் மட்டும் இல்லாம ஆயிரம் பொற்காசுகளும் பரிசா குடுக்கறாங்களாம்!!! :-)))).

4
Average: 3.7 (3 votes)

ஹைக்கூ கவிதை

பெண் ஓவியம்

தமிழ் மொழி உயர்வானது. உன்னதமானது. இலக்கியதில் தமிழுக்கு பல‌ சிறப்புப் பெயர்கள் உண்டு. முத்தமிழ், செம்மொழி, உயர் தனி செம்மொழி, தனித்தமிழ் என்று பல‌ அழகுப் பெயர்கள் உண்டு. ஆனால் நாமோ சென்னைத் தமிழ், நெல்லை தமிழ், கொங்குத் தமிழ், தூத்துக்குடி தமிழ் என்று எத்தனை வகைப்படுத்த‌ முடியுமோ அத்தனை வகைப்படுத்தி விட்டோம்.

தொல்காப்பியர்,அகத்தியர்,நக்கீரர்,திருவள்ளுவர்,பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் வளர்த்த‌ தமிழ் நம் தமிழ்மொழி. அவர்களால் படைக்கப் பட்ட‌ காப்பியங்கள் ஏராளம். வைரமுத்து, மேத்தா போன்றோர் படைத்த‌ ஹைக்கூ கவிதைகள் பாராட்டுக்கு உரியது. இந்த‌ அவசரக் காலத்தில் பொறுமையாக‌ படிப்பது குறைந்துவிட்டது. வேகமாக‌ படித்து, அதன் கருத்தை மட்டுமே தெரிந்துக்கொள்ள‌ ஆசைப்படுகிறார்கள். அதன் விளைவே ஹைக்கூ கவிதைகள்.

நான் படித்த‌, ரசித்த‌ கவிதைகள்,

''வீட்டைக் கூட்டிப் பெருக்கி சுத்தப் படுத்தினாள் இல்லத்தரசி
வீடு சுத்தமானது,
வீதி குப்பையானது.''

''நான் உன்னைப் பார்த்தேன்,என்னை மறந்தேன்
உன் தங்கையை பார்த்தேன், உன்னையே மறந்தேன்''

என்னுடைய‌ கவிதைகள்,

அபலைப் பெண்

உன் குடும்பத்தில் தேட‌ வேண்டிய‌ அன்பை
வெளியில் தேடுகிறாய்
காதலன் கள்ளத்தனமாய் வாங்கிக் கொடுத்த‌
ஐஸ் கீரிமில் கரைந்தும் விடுகிறாய்
உண்மை அன்பை நீ உணர்வதற்கு முன்
அழிந்தும் விடுகிறாய் அபலைப் பெண்ணே.

கல்வி

கற்றது கை மண் அளவு என்றனர் சிலர்
கற்ற அளவிற்கு மேல் சாதித்தும் காட்டினர் பலர்
கையளவு கல்வியே சாதிக்கும் போது
பை அளவு கல்வி பெற‌ முயற்சி செய்
அன்று சாதனை பட்டியலே உன் வசம் இருக்கும்.

பசி

தொழிலாளி கவலைப் படுவது உடல் வலிக்கு அல்ல‌
தன் வயிற்றுப் பசிக்கே.
முதலாளி கவலைப் படுவது வயிற்றுப் பசிக்கு அல்ல‌
தன் உடல் வலிக்கே.

பெண்

பெண்ணே நீ கூழாங்கல் அல்ல‌, வீதியில் வீசுவதற்கு
நீ ஒரு பொக்கீஷம், அதை தெரிந்துக் கொள்
அன்னை, தந்தை அன்பு வளையத்தில் இருக்கிறாய்
அண்ணன், தம்பி அன்பு கவசத்தில் இருக்கிறாய்
அதை நீ அறிந்தும், புரிந்தும், தெரிந்தும் கொண்டால்
உன் வாழ்க்கை உன் வசப்படும்.

5
Average: 4.5 (4 votes)

மழையுடன் ஒரு நாள்.

சென்னையில் மழை. இனி தீபாவளி தீபாவளியா போச்சு. நாலு நாளா வெளுத்து கட்டுது. 3நாள் முன்னாடி துவைச்சு வச்ச துணி இன்னும் மொட்டை மாடிலயே உலருது? ;)

இந்த நேரத்துல வாஷிங்மிஷின் ரிப்பேர்ராகி என்னய பழி வாங்குது. அவர் எனக்கும் இதுக்கு சம்பந்தம் இல்லன்ற மாதிரியே போய்ன்னு இருக்காரு. ( என்ன கொடுமை சரவணன் இது) .

சரி நம்ம புலம்பல் எதுக்கு. சென்னை எப்படி இருக்கு மழைல. அச்சோ 4நாள் மழைக்கு வெள்ளக்காடா இருக்கு. தீபாவளிக்கு நிறைய பட்டாசு கடை திறந்துருக்காங்க. நிச்சயம் பட்டாசு வாங்கற கூட்டம் கம்மிதான். திநகர்ல நடைப்பாதை  வியாபாரம் ரொம்ப ஜருரா நடக்கும். இப்ப கொஞ்சம் அவங்களுக்குலாம் கஷ்டம்தான். ஆனா திநகர், புரசைவாக்கம் கூட்டம் கொஞ்சம் கூட குறையல. என்னவர் கூட கடைக்கு போய்ட்டு கடைசில கூட்டத்தை பார்த்துட்டு எதுவும் எடுக்காமயே திரும்பிட்டோம் வீட்டுக்கு. அப்பறம் அவரை விட்டுட்டு நேத்து நானும், என் தோழியும் போய் எடுத்து வந்துட்டோம்.

மழையில் ஒரு நாள் என்னோட பயணம். சனிக்கிழமை அன்னைக்கு ரிலேஷன் வீட்டுக்கு கிளம்பி போய் நல்லமழைல மாட்டிக்கினோம். வண்டிய மழைலயே ஒரு பக்கமா நிறுத்திட்டு பஸ்நிறுத்தம்ல ஒரு பக்கம் நின்னுட்டோம். நான் ரசனையோடு, அவர் எரிச்சலோடு. :) அப்ப கிளிக்கிய போட்டோ இது.

கிட்டதட்ட மழை குறைய 2மணிநேரம் ஆனது. நாங்க நின்ன இடத்துக்கு பக்கத்துல இருந்த மரத்துல ஒரு கிளை முறிந்து விழுந்தது. நல்ல வேளை ஒரு கார் கொஞ்சம் வேகமாய் வந்துருந்தா அதுமேல விழுந்துருக்கும். நல்ல நடுரோடு கொஞ்சம் கொஞ்சமா வண்டிங்க ஓரமா ஒதுங்கி போக ஆரம்பிச்சுது. போலீஸ் வண்டி உள்பட யாருக்கும் ஓரமா எடுத்துபோட மனசு வரல. டிராபிக் ஆக ஆரம்பிச்சுது. எல்லாருக்கும் மழையில் வீடு போக அவசரம். சரி நின்று பார்த்துட்டு இருந்து என்னவர் எடுத்து ஓரமாக போட்டார். அடுத்து எல்லா வண்டிகளும் வேகம் எடுக்க ஆரம்பித்தது.

சரி சிறு தூறலுடன் மழை பயணத்தை தொடர்ந்தோம். போகும் வழியில் முன்னாள் முதல்வர் வருகைக்காக மழையில் நனைந்தபடி ஆட்டம்,பாட்டத்துடன் மக்கள் வெள்ளம் காத்திருந்தது. அங்கங்க போலிஸ்சும் நின்றபடி வண்டிகளை நிறுத்தி அவர்களால் முடிந்த அளவுக்கு டிராபிக் ஆக்கினார்கள்.
அன்று நம்ம ரேவ் வீட்டுக்கு சர்ப்ரைஸ்சா போலாம்ன்னு பிளான் பண்ணிருந்தேன். ஆனா முடியல மழை& டிராபிக். அப்பறம் எங்க போறது. :(

அப்பறம் மழையில் நனைந்து குளிர் எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. இதுக்கெல்லாம் பயப்படலாமா. இன்னொரு நாள் எனக்கு மழைல நனையற சான்ஸ் கிடைக்காதே.

மழையில் நனைந்து போற விதவிதமான மக்கள். தனக்கு பிடித்தவர் வருகைக்காக மழையை பொருட்படுத்தாத மக்கள். வீட்டுக்கு போக தாமதமானாலும் வழியில் மழையில் நனைந்து தடையை எடுத்துபோட தயங்கும் மக்கள். மழையால் வியாபாரம் கெட்டு வாடிவருந்தும் மக்கள். மழை என்று பாராமல் என்னைப்போலவே கிளம்பி வழியில் மழை நிற்க காத்திருக்கும் மக்கள். ஒதுங்க இடம் இல்லாமல் இடம் தேடி ஓடும் மக்கள். ஒரு மழை விதவிதமான பிரதிபலிப்பு ரசித்துக்கொண்டே வீடு போய் சேர்ந்தேன். ;)

மழையோடு சேர்ந்து இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

5
Average: 5 (3 votes)

எனக்கு பிடித்த பாடல்

'எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே' என்ன பாட்டோட ஆரம்பம் ஆகுதுன்னு யோசிக்கிறிங்களா? அட நம்பி மேல தொடருங்க, ஏன்னா நான் பாடறது நிச்சயம் உங்களுக்கு கேட்காது.

பாட்டு கேட்கறதுன்னா யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க. நம்ம உணர்வுகள் ஏதோ ஒரு பாட்டுமூலமா வெளிப்படுது. சந்தோஷம்னாலும் பாட்டு, சோகம்னாலும் பாட்டு, காதல்ன்னாலும் பாட்டு இப்படியே சொல்லலாம்.

நம்மல  தூங்க வச்சது அம்மாவை விட 'இளையராஜா'வாதான் இருப்பாரு. அவரோட இசையில் நமக்கு இந்த பாட்டுதான் பிடிக்கும்ன்னு குறிப்பிட்டு சொல்லமுடியுமா!
முதல்ல கேட்கும்போது ஒரு பத்து பாட்டு சொல்லுவோம். ஆனா நிச்சயம் அடுத்த முறை வேற பாடல் சொல்லுவோம்.
ஏன்னா நிச்சயம் எண்ணிக்கையில் அடங்காது நம் விருப்ப பாடல்.

எனக்கு ஒரு குட்டி சென்டி மென்ட் இருக்கு. காலைல எழுந்து நான் முதல்முதல்ல கேட்கற பாட்டு எனக்கு பிடிச்சதா இருந்தா அன்றைய பொழுது நிச்சயம் எனக்கு உற்சாகமா போகும்.

சாரல் மழையில் கையில் ஒரு கப் ஃகாபி மனசுக்கு பிடித்த பாட்டு கேட்கும் வேளை அது எனக்கே எனக்கான ஒரு அழகிய தருணம். வீட்டுல காற்று வரலனா இரவு 12 மணின்னாலும் தனியே போய் பாட்டு கேட்டு மொட்டைமாடியில் படுத்திருக்கும் நேரம் அமைதியான இரவில் துனையாய் இருக்கும். என் தனிமை பொழுதை எப்போதும் இனிமையாய் மாற்றும்.

இரவு தூங்கும் நேரத்துலயும் ஏதாவது கவலையில் தூக்கம் வரலனா உடனே பாட்டு கேட்டு தூங்க ஆரம்பிச்சனா எண்ணி 3 பாட்டுக்குள்ள தூங்கிடுவேன். அதனால என் பிளேலிஸ்ட்ல கடைசி 3 பாட்டு என்னோட மோஸ்ட் ஃபேவரிட்டாத்தான் இருக்கும். என்னோட பிளாக்கின் தலைப்பும் ஒரு பாடல் வரிதானே.

சில பாடல் மனசுக்கு ஒரு வலி குடுக்கும், சில பாடல் உற்சாகம் குடுக்கும், சில பாடல் சிலர் நினைவை தூண்டிவிடும். உங்களுக்கு பிடிச்ச பாட்டு எதுன்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்க...:)

5
Average: 5 (5 votes)

கோபப் பறவையொன்றும் கோபிக்காத பறவையொன்றும்

சின்னவர் ஒருவருக்குப் பிறந்தநாள். அன்பளிப்பாக என்ன வாங்கலாம்!

க்றிஸ் சொன்னார், "நிக்ஸனுக்கு Angry Birds' வேண்டுமாம். அப்படியென்றால்! எனக்குத் தெரிந்தவரை ஏதோ பெரியவர்கள் விளையாடும் விளையாட்டு அது.

பாடசாலை முடிந்து கடைத்தெருவிற்குப் போனோம். அங்கிருந்து நிக்ஸன் வீட்டிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. நிக்ஸனின் அக்காவோடு பேசலாம் என்கிற எண்ணம் எங்களுக்கு. அவர்கள் வெளியே கிளம்பிப் போயிருந்தார்கள் என்று தெரியவர, அலைபேசியில் அழைத்தோம்.

"இது ரகசியமாக இருக்கட்டும். Angry Bird என்றால் என்ன?" மறுபக்கம் இருந்து கொஞ்சும் தமிழிலில் பதில் வந்தது, "அடு... ஒரு கேம்... பட்... நிறய இருக்கு. Which one are you asking about aunty?" அது எனக்குத் தெரிந்தால் நான் ஏன் கேட்கிறேனாம்!
"நிக்ஸனிடம் சொல்ல வேண்டாம்," என்றேன். என் கண்ணில் எதுவும் படாவிடால், வாங்கக் கிடைக்காவிட்டால் ஏமாந்து போவாரே!" "There are computer games and toys as well," என்றார்.

சரியென்று கடையெல்லாம் தேடினால் எதையும் காணோம். கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தேன். "Ya! We had a book in the toy section along with a puffy soft toy."

அங்கும் இல்லை; எங்கும் இல்லை; எதுவும் இல்லை. ;( கால் கெஞ்சிற்று. காலை ஆறு மணி முதல் ஓய்வு கொடுக்காமல் நின்றிருக்கிறேன். வேறு வழி தெரியாமல் சின்னவருக்குப் பிடித்த விதமாக ஒரு construction set கண்ணில் பட வாங்கிக் கொண்டோம்.

Angry Bird கிடைக்காதது angry. வீட்டுக்குத் திரும்பலாம் என்று நினைத்தபோது தான் அது கண்ணில் பட்டது. ஒரு கோபமான பறவைச் சீட்டுக்கட்டு. 3D கார்ட் ஒன்றும் இலவசம் என்று போட்டிருந்தார்கள். மலிவாகத் தெரிந்தாலும்... இவற்றையும் சேர்த்துக் கொடுக்கலாம் என்று வாங்கிக் கொண்டோம்.

பெரிய பெட்டியைச் சுற்றி வைத்தேன். கோபப் பறவை ஒரு நாள் முழுவதும் மேசையில் உட்கார்ந்து என்னை முறைத்தது. பிறந்தநாள் அன்று... நேற்று - பாடசாலை முடிந்து வந்ததும் வீட்டில் water filter மாற்றுவதற்கு ஒருவர் வந்தார். அவரை மேற்பார்வை பார்த்துக் கொண்டு கோபப் பறவையையும் ஆராய்ச்சி செய்தேன். இதைப் பறவை வடிவில் சுற்றினாலென்ன!

ஆரம்பித்தேன் வேலையை. என் கண்ணில் பட்ட பொருட்களெல்லாம் சேர்ந்து ஆங்ரி பேட் உருவானார். :-) இடையில் வேறு வேலை செய்ய இயலாததால் இதையே படம் எடுத்துக் கொண்டு இருந்தேன். Angry bird, கொஞ்சம் ugly bird ஆக உயிர் பெற்றார். ;))

நாங்கள் சின்னவர் வீட்டுக்குப் போய் இறங்கியதும் சின்னவர் என் கையிலிருந்த பெரிய பெட்டியை வாங்க வந்தார். அது என் மருந்து என்றேன். நம்பவில்லை அவர். நானும் விடவில்லை.

"I like angry bird," என்றார்.
"I know. I saw a hu...ge angry bird on the tree this morning. It looked so scary so I didn't feel like catching it. ;("
"அன்ட angry bird இல்ல. I want the other angry bird." கொஞ்சம் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
கவனிக்காதது போலவும் புரிந்துகொள்ளாதது போலவும் தொடர்ந்தேன், "Since I couldn't catch that bird... I thought at least I'll make you one." கையிலிருந்த குட்டிப் பறவையைக் கொடுக்க ஒரு சிரிப்புச் சிரித்தார்.

"What!! This doesn't even look like an angry bird!"

"You do something bad and she will go angry at you." என்றேன். என்ன சொல்வது என்று புரியாமல் ஒரு விதமாகச் சிரித்தார். "Thanks aunty," என்றார்.

பறவை கையிலிருந்தது. அதைத் திருப்பிப் பார்த்துவிட்டு "It looks nice," என்றார். இதற்குள் தமக்கையாரும் வந்தார். சின்னவர் கையிலிருந்த வினோத உருக் கொண்ட பறவையைப் பார்த்தார். "இது... ஆங்ரி பேட்," என்று நான் சொல்லக் குழப்பமாக ஒரு சிரிப்புச் சிரித்தார் அவரும். அவருக்கு நான் என்னவோ விளையாடுகிறேன் என்று புரிந்து போயிற்று. ;)

சின்னவர் மெதுவே க்றிஸ் பக்கம் நகர்ந்தார். "எனக்கு கிஃப்ட் ஒண்டும் இல்லயா?" என்றார். க்றிஸ் தன் பங்குக்கு, "அதுதானே ஆன்டி அழகாக ஒரு பேட் செய்து தந்தாங்க." என்றார். ;) சின்னவர் நன்றி சொன்னாலும் பறவையைப் பிடித்தபடி உணர்ச்சியைக் காட்டாமல் அமர்ந்திருந்தார்.

கலாய்த்தது போதும் என்று தோன்ற, "அதை பிரிச்சுப் பார்க்க இல்லையா?" என்று க்றிஸ் கேட்டு வைத்தார்.
"எடு! நீங்க ஒண்டும் தர இல்ல!" இப்போது குரலில் மெல்லிய சோகம். ஆனால் எங்கள் மேல் இருந்த நம்பிக்கையும் கண்ணில் தெரிந்தது. எதாவது வைத்திருப்போம் என்று நம்பினார்.
"தந்தமே! அந்த ஆங்ரி பேட். அதைப் பிரிச்சுப் பாருங்க."

என்ன! எப்படி!
எங்கள் முகத்தைப் பார்த்தார் பரிதாபமாக. பிறகு அனுமதி கேட்டுக் கொண்டு தயக்கமாக இறக்கைகளைப் பிரித்தார், காலைப் பிடித்து இழுக்க இரண்டும் கடதாசியோடு சேர்ந்து வந்தன. ;) ஏஞ்சல் சிரித்தபடி அவதானித்தார்.
வயிற்றைப் பிரிக்க பெட்டி எட்டிப் பார்த்தது.

சின்னவர் முகத்தில் சந்தோஷம். பிரித்த பாதியில் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டார். "Thank you Aunty." என்று ஒரு முத்தம் கொடுத்தார். பிறகு அப்படியே க்றிஸ்ஸுக்கும். திரும்ப மீதிப் பொதியைப் பிரித்துப் பெட்டியைக் கொட்டி... கண்கள் அகல விரிய.. ஒவ்வொரு அட்டையாகப் பார்த்து எனக்குப் புரியாத பாஷையில் என்னென்னெவோ சொன்னார்.

"What does that mean Angel?"
"It means... he likes it. :-)" என்றார் ஏஞ்சல்.

சின்னவர்கள் சந்தோஷம் சின்னப் பொருட்களில்தான். நாம் விலை கொடுத்து நல்லதாக என்ன வாங்கிக் கொடுத்தாலும் அவர்கள் மனதிற்குப் பிடித்தது கிடைத்தால் அதுதான் பெரிது.

பிறகு பெரிய பொதியையும் கொடுத்தொம். இரட்டிப்பு சந்தோஷம் குட்டியருக்கு.

பிறகு.... இராப்போசனம்... கேக் வெட்டுதல். சின்னவர் பிரிய மேலீட்டால். "I want to cake தீத்த aunty," என்றார். "I want to தீத்த her a cherry," என்று கத்தியாலேயே கேக்கின் மேல் இருந்த செர்ரிப் பழத்தைத் தூக்கி என் வாய்க்குக் கொண்டு வந்தார். ;)

குறிப்பு -
குட்டி ஏஞ்சல் - சமீபத்தில் ஆமைக்குட்டி கைவினைக் குறிப்பு http://www.arusuvai.com/tamil/node/28957 கொடுத்த அதே ஏஞ்சல். முன்பும் அறுசுவையில் குறிப்புகள் செய்து காட்டியிருக்கிறார். http://www.arusuvai.com/tamil/node/16679
நிக்ஸன் - அவரது குட்டித் தம்பி.
இருவரும் நியூஸிலாந்தில் பிறந்தவர்கள். தமிழ் நன்கு புரியும். பேச்சும்... ஓரளவு நன்றாகவே வருகிறது, கொஞ்சம் தாராளமான ஆங்கில மழலைக் கலப்புடன். :-)

~~~~~~~~~~~~~
இந்தப் பறவைக்கான செய்முறையைக் காண - http://www.arusuvai.com/tamil/node/29162

5
Average: 5 (6 votes)

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்!!

எனக்கு பொதுவா வெளியே சாப்பிட விருப்பம் உண்டு. ரொம்ப யோசிக்கவே வேண்டாம், அம்மா வீட்டில் அடுப்படி பக்கமே போகாம வளர்ந்துட்டேன் அதுவும் ஒரு காரணம்னு சொல்லலாம். நானே சமைச்சா அந்த அடுப்படியில் வரும் வாசம் அதன் பின் எவ்வளவு பசி இருந்தாலும் சாப்பிடும் ஆவலை விரட்டியடிக்குது. அதுவும் முக்கியமா அசைவம், சமைக்கிற அன்று சாப்பிடவே முடியாது என்னால். பார்ட்டி அன்றெல்லாம் காலை 9 முதல் இரவு 10 வரை என்னால் சாப்பிடாம இருந்து வேலை பார்க்க முடியுறதுக்கு அதுவே முக்கிய காரணம், பசி உணர்வே போயிடும். இந்த வெளியே சாப்பிடும் பழக்கம் ஒரு வகையில் அறுசுவைக்கு வந்த பின் எனக்கு நிறையவே உதவி இருக்கு. வெளிநாடுகளில் நம்ம ஊர் ரெஸ்டாரண்ட் எல்லாம் போனால் கேட்டதும் ரெசிபி கொடுத்துடுவாங்க. சிலர் கையால் செய்த பொடி அது இதுன்னு சுத்துவாங்க, சிலர் மசாலாக்கு ரேஷியோ சொல்ல மட்டாங்க, நமக்கு எடுத்ததும் அவங்க சுவை அப்படியே வந்துடாது (தொழில் ரகசியமோ?). ஆனா அந்த உணவை சாப்பிட்ட நமக்கு செய்ய செய்ய என்ன மாற்றம் வேணும்னு பிடிபட்டுடும். இதுவே வெளிநாட்டு ஆட்களின் ரெஸ்டாரண்ட் என்றால் என்ன மாயமோ தெரியாதுங்க... ப்ரிண்ட் பண்ணி ரெசிபி கொடுத்தவங்க எல்லாம் உண்டு!! அவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லியே ஆகனும். சரி இப்போ என்ன சாப்பாட்டு கதை? சொல்றேன் சொல்றேன். அதுக்கு முன்னாடி வனி வீட்டு ஃபில்டர் காபி சாப்பிடுறீங்களா? இந்த ஃபில்டர் என்னோட ஃபேவரட் ;) அம்மா வாங்கித்தந்தது. இதில் எனக்கு மட்டும் தான் காபி போடுவேன். ஆமாங்க... இதன் அளவு 9 செண்டிமீட்டர் உயரமும் 3 செண்டிமீட்டர் அகலமும். மினியேசர் வெரைட்டி (எங்க நம்ம பூனைக்குட்டி ரேணு). நம்ம சுவாவின் கும்பகோணம் டிகிரி காபி எப்போதும் எனக்கு பிடிச்ச ஒன்று. வீட்டில் யாரும் காபி சாப்பிடும் பழக்கமில்லை, ஆனா வனி ஃபில்டர் காபி பிரியை. :)

கும்பகோணம் டிகிரி காபி என்றதும் நினைவுக்கு வருவது சென்னை டூ வேலூர் சாலை தான். எத்தனை டிகிரி காபி கடைகள்! காஞ்சிபுரம் நெருங்கும் போது ஒரு டிகிர் காபி கடை உண்டு, அது எனக்கு வெகு நாட்களா ஃபேவரட்டா இருந்தது. அதை பற்றி அறுசுவையில் கூட சொல்ல நினைப்பேன். ஆனா சமீபத்தில் போன போது காபி தரம் குறைந்து, சுற்றுச்சூழலும் சுத்தம் குறைந்து... இனி இந்த கடை வேண்டாம் என எண்ண வைத்துவிட்டது.

பெங்களூர் வந்தும் வெளியே சாப்பிடும் பழக்கம் என்னை விட்டுப்போகல. உண்மையில் அதிகமாயிட்டு. வெளிநாட்டில் குறிப்பிட்ட சில உணவகங்கள் தான் பிடிக்கும், அங்கே ஒரே வகை உணவு தான் இருக்கும். ஆனா இங்க நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கே. அப்படி சாப்பிட்டதில் பிடிச்ச சிலது இங்கே. முதல்ல மல்லேஷ்வரம் ஏரியாவில் உள்ள ”ஹல்லி மனே” (கிராமத்து வீடு என்று அர்த்தம்). அங்க நான் முதல் நாள் போனபோது ஃபுல் மீல்ஸ் வாங்கினார் என்னவர். ஆரம்பமே அசத்தலா ராகி ரொட்டியோட துவங்கினாங்க பாருங்க... சூப்பர். 2 பொரியல், 1 கூட்டு, வெரைட்டி ரைஸ், ரொட்டி, குருமா, சாதம், ரசம், தயிர், ஐஸ்க்ரீம், பழம் என்று சிம்பிளான மெனு தான், ஆனா நிரைவா இருக்கும். நானே போதும் என்றாலும் “இதை ட்ரை பண்ணுங்க”னு கேட்டு கேட்டு செர்வ் பண்ணுவாங்க. அங்கே என் ஃபேவரட் ராகி ரொட்டி & அக்கி ரொட்டி தான். கர்நாடகாவின் பாரம்பரிய உணவு வகைகளை இங்கே சுவைக்கலாம். :)

சைவம் என்றால் என்னோட சாய்ஸ் ஹல்லி மனே போலவே “வாசுதேவ அடிகாஸ்”. இங்கே ரவா இட்லி, போண்டா சுப், பூரி சாகு எல்லாம் என் ஃபேவரட். அடுத்த ஃபேவரட் “ஷிவ் சாகர்”. இங்கே கிடைக்கும் “வெஜ் பக்கோரா”, அதோடு வரும் க்ரீன் சட்னி!! சூப்பர். சாட் மசாலா தூவி அதன் வாசமே நம்மை இழுத்து கொண்டு போய் ரெஸ்டாரண்ட் உள்ளே உட்கார வெச்சுடும். இங்கே சுவைத்ததில் சமீபத்தில் எனக்கு ரொம்ப பிடிச்சது “வெஜ் தவா மசாலா”. இன்னும் அந்த குறிப்பு என் அடுப்படியில் ஆராய்ச்சியில் தான் இருக்கு ;)

இன்னும் நிறைய ரெஸ்டாரண்ட் இருக்கு சொல்ல... ஆனா எல்லாத்துக்கும் முன்னாடி இப்போ முக்கியமான இடம் “ஃப்ரேசர் டவுன் - மாஸ்க் ரோட்”. ஆமாங்க ரமதான் ஸ்பெஷல் அங்க தான் உண்மையில் ஸ்பெஷல். மாலை துவங்கும் ஓப்பன் ஸ்டால்ஸ் இரவு முழுக்க இயங்குதுங்க, ரமதான் காலம் முழுவதும். தெரு முழுக்க கூட்டம். என்னவர் பேப்பரில் பார்த்துவிட்டு வந்து சொன்னார், ரொம்ப நல்லா இருக்கும் என்றார்கள் போய் பார்ப்போமா என்று ;) உடனே கிளம்பிட்டோம்ல. பார்க் பண்ண இடம் கிடைப்பதே கஷ்டம், அவ்வளவு ஸ்டால்ஸ் சாலை ஓரம். பெங்களூரில் மிகப்பிரபலமான பல உணவகங்கள் (பீசா ஹவுஸ், எம்பைர், ஷாதி கி பிரியாணி இன்னும் பல) இங்கே ஸ்டால் போடுறாங்க. ஃப்ரேசர் டவுன் ஏரியாவில் ஏற்கனவே உணவகம் வெச்சிருக்கவங்க கூட அவங்க ரெஸ்டாரண்ட் வெளியவே ஓப்பன் ஸ்டால் போடுறாங்க. உள்ளே போய் உட்கார்ந்து காத்திருக்காம எற்கனவே சமைச்சதை போகும் வழியில் உடனே வாங்க வசதியா இருக்கும் என்று. எல்லா இடங்களிலும் கிடைக்கும் உணவு என்னவோ ஒன்றே தான். சிக்கன், மட்டன், மீன் என எல்லாம் மசாலா பூசி எண்ணெயில் குளித்துத் தொங்கும். கீமா சமோசா, கபாப், பிரியாணி, இடியாப்பம் என எல்லாம் உண்டு. சைவப்பிரியர்கள் அங்க வேடிக்கை கூட பார்க்காதீங்க, உங்களுக்கு அங்க ஒன்னும் கிடைக்காது. அசைவப்பிரியையான எனக்கே அங்க போயிட்டு வந்து 10 நாள் அசைவம் பிடிக்காம போச்சுது ;( அந்த எண்ணெயில் வறுத்த அசைவத்தின் வாசம் பண்ண வேலை. சுவையில் குறை இல்லை, விலையும் உணவகத்தில் கிடைப்பதை விட குறைவே. க்ரில், தந்தூரி எல்லாம் வைத்திருக்கும் ஸ்டால்களும் உண்டு. நிச்சயம் ஒரு முறை போய் ருசிக்கலாம். எனக்கு அந்த இடத்தில் ஒரே பிரெச்சனை தான்... பிச்சை. கையில் பிள்ளையோடு நம்மோடு சேர்ந்து நடந்து கையை பிடிச்சு இழுத்து பிச்சை எடுக்கும் ஆட்கள் அங்கே அதிகம். அதைத்தவிற உணவு மட்டும் என்றால் நிச்சயம் போகலாம்.

ஒன்னு உண்மைங்க... உணவு என்பது இப்போதெல்லாம் வயிற்றுக்கு மட்டுமில்லங்க... கண்ணுக்கு மூக்குக்குன்னு மற்ற உணர்வுகளுக்குமே விருந்தா அமையனும். இல்லன்னா “வீட்டில் வைக்கும் ரசம் போதும்” என சீக்கிரம் சொல்ல வெச்சுடும். வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் இந்த இடங்களில் சுவைத்துப்பாருங்க :) உங்க ஏரியாவில் உங்களுக்கு பிடிச்ச உணவகங்களையும் சொல்லுங்க வனி போல ஆட்கள் ஊரை சுற்ற (சாரி புதிதா சாப்பிட) ஆசைப்படுவோம்ல.

5
Average: 5 (5 votes)

தனிமைக் கோலம்

அறுசுவையில் கோலப் பகுதி புதிதாக வந்தாலும் வந்தது, இமாவின் நிம்மதி போயே போச்சு. ;)

தினமும் ஆறு மணி ஆனதும், "வெளியாகி இருக்குமே! பார்க்க வேண்டுமே!" என்று மனது பரபரக்கிறது.

கொஞ்சம் பொறாமைதான். :-) எல்லா இடமும் பலகையும் கம்பளமுமாகக் கிடக்க நான் எங்கே கோலம் போடுவதாம்! வெளியே இறங்க முடியாதபடி காற்றும் மழையும் வேறு.

வீட்டில் எனக்கு மட்டும்... விடுமுறை. தனிமை.... அவ்வ்!! இப்போ ஏன் சம்பந்தமில்லாமல் பிரியசகியின் அந்தக் கவிதை நினைவுக்கு வருகிறது! :-) தலைப்பு... தனிமையோ! பார்க்க வேண்டும்.

நான் தனித்திருக்கும் போது விருப்பமாகச் செய்யும் வேலை ஒன்று உண்டு. solitaire விளையாடப் பிடிக்கும் எனக்கு. இது கணனி விளையாட்டு அல்ல. போர்ட் கேம். கைக்கடக்கமாக மரத்தாலானது ஒன்று கொசுவர்த்தி அட்டைப் பெட்டியில் வைத்திருப்பேன். பிறகு க்றிஸ் தன் கையால் ஒன்று செய்து கொடுத்தார். இது... சின்னவர் எனக்காக ஏழு வருடங்களுக்கு முன் வாங்கிக் கொடுத்தது. நியூஸிலாந்து ரிமுவில் கடைந்தது.

விளையாடும் விதம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆரம்பிக்கும் போது நடுக் குழியில் காய் இருக்கக் கூடாது. எந்தப் பக்கத்தாலும் வெட்டலாம். முடிகிற சமயம் ஒரேயொரு காய், அதுவும் அந்த நடுக் குழியில் மீதம் வர வேண்டும்.

பத்தொன்பது, இருபது வருடங்களுக்கு முன்பு ரூபவாஹினியில் 'ஹிருட்ட முவாவென்' என்னும் சிங்களத் தொலைக்காட்சித் தொடர் ஒன்று பிரபலமாக இருந்தது. அந்த நாடகத்தையே 'Chakablas' என்றுதான் சொல்லுவோம். இந்த விளையாட்டிற்கு நாடகக் கதாபாத்திரங்கள் பயன்படுத்திய பெயர் அது. பல அத்தியாயங்களில் முக்கிய கதாபாத்திரமே solitaire விளையாட்டுத்தான் என்கிற அளவுக்கு இருக்கும். நாட்டில் பட்டி தொட்டி எல்லாம் solitaire புகழ் பரவிற்று.

சிலர் 'இடியப்ப நாடகம்' என்பதுவும் உண்டு. :-) அப்போதெல்லாம் சமையலறைகளிற் தொழிற் சிக்கன உத்திகள்... ;) (அப்படித்தான் பாடசாலையில் மனையியற் பாடத்தில் கற்பித்தார்கள்.) பெரிதாக இல்லை. காஸ் அடுப்பு கூட எங்கள் வீட்டிற்கு வந்திராத காலம் அது. இந்த நாடகத்தில் இடியப்பம் பிழியும் பெரிய மெஷின் ஒன்று வரும். புதினமாக இருக்கும் பார்க்க.

எல்லோரும் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க, எனக்கு குழிகளின் அமைப்பு கோலத்திற்குப் புள்ளி வைப்பதை நினைவுபடுத்தும். ஊரில் அடிக்கடி நான் போடும் கோலங்களில் ஒன்று இன்று உங்கள் பார்வைக்கு.

தரை இல்லாவிட்டால் என்ன! கறுப்பாக ஒரு 'டைல்' வீட்டிற்குக் கீழே பேஸ்மண்ட்டில் கிடந்தது. தூக்கி வந்து கழுவிக் காய வைத்தேன். வெண்கட்டியும் கிடைத்தது. கோலம் போட்டு சற்று நேரம் ரசித்தேன்.

நடுவில் பூசணிப்பூ வைக்காவிட்டால் எப்படி!!! தோட்டமே இல்லாத இந்தக் குளிர் காலத்தில் அதற்கெல்லாம் எங்கே போவது என்று விட்டுவிட மனதில்லை. வல்லவளுக்குப் புல்ல்... ம்ஹும்! play doughவும் அரசாணிப்பூ. ;))
செய்முறை கேக்காதீங்க. வேண்டுமானால் கேக் பூ பாருங்க. --> http://www.arusuvai.com/tamil/node/25736

இந்தக் கோலத்தில் புள்ளி வைத்திருக்கும் முறையை எப்படி விபரிப்பது! ( நேர்ப்புள்ளி என்பது மட்டும் தெரிகிறது.) யாராவது சொல்லிக் கொடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

என் கோலங்களின் சேமிப்பு இது. பதின்ம வயதுகளில் படிப்போடு கூட இப்படியான வேலைகளிலும் ஈடுபட்டு வந்தேன். மங்கையில் வந்த கோலப் பக்கங்களைக் கிழித்துக் கட்டி வைத்திருந்தேன். (யாருக்கோ புத்தகம் கட்டக் காட்டித் தருவதாகச் சொன்னேன். அடியோடு மறந்து போனேன். என்னை இனி நம்பாதீங்க யாரும். ;) ) அட்டையின் உறை... என் கலியாணத்திற்குக் கிடைத்த அன்பளிப்பொன்றைச் சுற்றி வந்த கடதாசி. கொடுத்தவர் பெயர் உள்ளே குறித்திருக்கிறது. :-)

மொத்தமாக ஒரு பெட்டி டாட்டாய்ஸ் சுற்ற வைத்த சுபத்ராவுக்கு இந்த இடுகையும் மேலே உள்ள கோலமும் சமர்ப்பணம். :-)

5
Average: 5 (8 votes)