ரசனை

நினைவுச்சாரல்

உன்
முகம் காணாத
பொழுதுகள்
வெறுமையாய் செல்கிறது...
உன்
புன்னகை இல்லாத
நாட்கள்
எனை கொல்கிறது...
உன்
விழியுடன் பேசாதபோது
ஊமையாய்
மாறிபோகிறேன்
மற்றவரிடம்...

*****
எங்கும்
நிறைந்திருக்கும்
உன
நினைவை
எங்கு சென்று
தொலைப்பது...

****
நினைவுகள் கரம் கோர்க்கின்றன..
உன்
விழியோடு
பேசிய மொழிகள்
வார்த்தைகளாய் ...
மனதுக்கு நெருக்கமாய்
உனது
குரல்
அலைபேசியில்..
வார்த்தைகள்
வரவில்லை
மெளனங்கள்
மட்டுமே இப்போது
பேசிக்கொள்கின்றன...

****
மழையில்
நனைந்த
என்
ஜன்னல்
சாரலை உள்ளே
அனுப்புகிறது
கூடவே
உன்
நினைவயும்...
சாரலில்
நனைகிறேன்
உன் நினைவுடனே...

5
Average: 4.5 (4 votes)

க்யூட் கூட் & ராப்போ

எங்கள் மூத்தவர் அலன் தற்போது ஹமில்டனில் வசிக்கிறார். அவரைப் பார்க்கப் போயிருந்தோம்.

விசாலமான வீடு. அறையின் அளவைப் பொறுத்து ஒருவரோ இருவரோ வசிக்கிறார்கள். விசாலமாக சமையல் மேடை, பெரிது பெரிதாக கூடங்கள், வீட்டைச் சுற்றிலும் அழகாகப் பராமரிக்கப்பட்ட செடிகள்; இவை அனைத்திற்கும் மேலாக ஆங்காங்கே கதவுகளைத் திறந்தால் தெரியும் இயற்கைக் காட்சிகள். கிளம்பி வரவே மனதில்லை.

மதிய உணவின் பின் ஒரு சின்ன உலாக் கிளம்பினோம். வீட்டிற்கு முன்பு கிடுகிடுவென்ற ஓர் இறக்கம். அது அப்படியே ஒரு நீரோடையைச் சுற்றிக் கொண்டு வந்து அதே இடத்தில் முடியும். சுற்றிலும் நீர்க்கோரைகள். இங்கு இதை ராப்போ என்கிறார்கள்.

முன்பு ஒரு முறை ராப்போ மலரலங்காரம் ஒன்று செய்தேன். அங்கே ராப்போ புல்லைப் பற்றிய சில தகவல்கள் சொல்லியிருந்தேன். விரும்பினால் பாருங்கள். http://www.arusuvai.com/tamil/node/24918

இது இடைச்செருகல்....
ஒரு நாள், மட்டுநகர் உப்போடை வாவிக்கரை ஓரமாக நடக்கையில் சட்டென்று சின்னப் பறவை ஒன்று குறுக்கிட்டு ஓடிற்று. சரியாகத் தெரியக் கூட இல்லை. மறைந்து போய் மற்றொரு இடத்தில் தோன்றிற்று. மீண்டும் சட்டென்று மறைந்தது. கறுப்பாக இருந்தது என்பது மட்டும் நிச்சயம். புகைப்படம் எடுக்க அதன் பின்னால் ஓடித்திரிந்து வாகனம் கிளம்புவதற்கு நேரம் ஆகி விட யோசனையைக் கைவிட்டேன். அதைச் சம்புக்கோழி என்றார்கள். அப்போதுதான் ராப்போவை தமிழில் சம்புப்புல் என்பார்கள் என்று அறிந்தேன்.

சம்புக்கோழி பழைய நினைவுகளைக் கூட்டி வந்தது. மகன் வீட்டுக்கு முன் இருந்த நீரோடை ஓரமாகச் சில பறவைகள் - க்றிஸ் வாகனத்திலிருந்து உருளைக் கிழங்குப் பொரிகளை எடுத்து வர, கூட்டமாக ஓடி வந்தன அனைத்தும். புறாக்கள், வாத்துகள், புகேக்கோ... இந்த புகேக்கோகள் வெகு அழகு. முன்பு எங்கள் அடுத்த தெருவிலும் சில மேய்ந்து திரியும். அருகில் சில்வியா பார்க் கடைத்தெரு வந்து, சனநடமாட்டம் அதிகரித்ததன் பின்னால் காணோம் இவற்றை. ;( இன்னொரு சமயம் சொல்கிறேன் இவை பற்றி.

ஓடி வந்த பறவைகள் மத்தியில் ஒரு க்யூட் கூட். உணவு கிடைப்பது தெரிந்ததும் சட்டென்று ராப்போ நடுவிலிருந்து கிளம்பி ஒற்றையாய் ஓடி வந்து சாப்பிட்டது. சட்டென்று ஓடி புதரில் மறைந்தது. சற்று நேரம் கழித்து மீண்டும் வந்தது.

க்றிஸ் காலைச் சுற்றிற்று. அப்போதுதான் அதன் காலைக் கவனித்தேன் - கோழிக்கால் போலவுமில்லை, வாத்துக்கால் போல சவ்வுப் பாதமும் இல்லை. வினோதமான அமைப்பு அது. வெகு அழகாக இருந்தது. நிச்சயம் நீந்துகிற பறவைதான்.

மருமகள் சொன்னார், அது குஞ்சுகளோடு இருக்கிறதாம். அருகே போனால் பெரிதாகக் கத்தித் துரத்துமாம். பத்திரம் என்றார். எங்கள் கண்ணில் பட்டது இந்த ஒற்றை கூட் மட்டும்தான். ஜோடி முட்டைகளோடு கூட்டிலிருந்தது போல.

வீடு வந்து கூகுள் செய்ததில் தெரிந்த தகவல்கள் ----
பெயர் - அவுஸ்த்ரேலியன் கூட் - Australian Coot (யாராவது நாமக்கோழி என்று என்பீர்களானால் அதற்கு நான் பாடு இல்லை. நான் சொல்வதெல்லாம் இங்குள்ள குட்டி கூட்களின் கதை.)

முதல்முதலாக நியூஸிலாந்தில்1958ம் ஆண்டில்தான் கண்டிருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவிலிருந்து நீரோட்டத்தோடு எடுபட்டு ஒரு ஜோடி வந்திருக்க வேண்டும். பிறகு பெருகியிருக்கிறது. நீர்வாழ் உயிரினங்களை உணவாகக் கொள்ளும் இவை சமயத்தில் கரையோரமாகக் கிடைக்கும் உணவுகளையும் உண்ணும். ஓடும் நீரில் மிதக்கும் வண்ணம் குச்சுகள் காய்ந்த இலைகள் கொண்டு கட்டப்படும் இவற்றின் கூடுகள் நீர் அடித்துப் போகாதவண்ணம் ராப்போ இலை அல்லது விலோ மரத்தின் தூங்கும் கிளைகளோடு சேர்த்துப் பின்னப்பட்டிருக்குமாம். அடுத்த தடவை செல்லும் போது கூடு கண்ணில் படுகிறதாவென்று தேடிப் பார்க்கவேண்டும்.

ஆமாம்!! இவற்றைப் பார்க்கும் யாருக்காவது கூட் - 65 சமைத்து நீங்களும் சமைக்கலாம் பகுதிக்கு அனுப்பலாம் என்று தோன்றவில்லையா!!! ;)))

5
Average: 4.7 (3 votes)

எதுவும் கடந்து போகும்

சின்னச் சின்ன வேலைகள் பல. வேலை மும்முரத்தில்தான் இதுவரை இங்கு தொட்டுக்கொள்ளாமல் விட்டிருந்தேன்.

வேலை... பெரிதாக ஒன்றும் இல்லை. வழக்கம் போல அடப்பைக்காரி வேலை. வெற்றிலைக்குப் பதில் காப்பி, டீ. ;)

"டூல் பொக்ஸ்ல லெஃப்ட்ல இருக்கிற மூடியைத் திறந்து... ரெண்டு, ரெண்டங்குல கறுப்பு ஸ்க்ரூ ப்ளீஸ்," ஏணியின் மேலிருந்து குரல் வரும். கீழே இருந்து நீட்ட சும்மாவே எட்டாது. ஸ்டெப் ஸ்டூலை இழுத்துப் போட்டு ஏறி நீட்டுவேன்.

"ஸ்க்ரூட்ரைவர்,"

"குறடு."

புதியவார்ப்பு ரத்தி போல, "வருது," என்று தள்ளிவிட்டு உட்கார முடிந்தால் சுலபமாக இருக்கும். ;))

"எடு," என்று சொல்ல முதல் எடுத்துக் கொடுக்க வேண்டும். "பிடி," என்னுமுன் பிடிக்க வேண்டும். இதுதான் எடுபிடி வேலை. முன்பே என் இந்த உபதொழில் பற்றி அறுசுவையில் அட்மின் சொல்லியிருப்பார். :-) http://www.arusuvai.com/tamil/node/14167 பார்த்தால் புரியும். ;)

எடுத்துக் கொடுப்பது பிரச்சினை இல்லை. நான் உயரமாக இருப்பதுதான் எப்போதும் பிரச்சினை. ;)

சாண்டலியரை கழற்றி வைக்கவேண்டி வந்தது. அன்றே தூக்கணங்களைக் கழுவி உலர வைத்திருந்தேன். பிரதான பாகத்தை மீண்டும் கூரையில் மாட்டப் பார்க்க கர்ர்... வாங்கிய சமயம் மூத்தவர் எங்களோடு இருந்தார். எனக்கு வேலை இருக்கவில்லை. இப்போ எல்லாமே நான்தான் என்று ஆகிவிட்டது.

ஸ்டெப் ஸ்டூல் மேற்தட்டில் ஏறி நின்று பிடித்துக் கொண்டேன். அண்ணாந்து பார்க்கவில்லை. என் கண்ணைப் பற்றி எனக்குக் கவலை இருக்கிறது. அதை இன்னொரு சமயம் சொல்கிறேன்.

க்றிஸ் மாட்ட முயற்சித்துக் கொண்டிருந்தார். வாயில் கோரமாக ஸ்க்ரூப் பற்கள் இரண்டு துருத்திக் கொண்டு தெரிந்தன. ;))

"இன்னும் உயர்த்திப் பிடிங்க," குரல் சற்று கர்ர்..ராக ஒலித்தது போல தோன்றிற்று. உயர்த்துவதென்றால்...!!! ஹ்ம்! "சரி!" தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தேன். எவ்வளவு நேரம்தான் பிடிக்கலாம். கை வலித்தது. ஒற்றைக் கையால் பிடித்துக்கொண்டு வலது கையை இறக்கி இரத்தம் ஓடட்டும் என்று அசைத்துக் கொண்டேன்.

'டிக்!
...டிக்!
........டிக்!'

இடக்கை வலித்தது. கையை மாற்றினேன். இம்முறை வலக்கை முன்பை விட விரைந்து விறைக்க ஆரம்பிக்க க்றிஸ்ஸுக்குத் தெரியாமல் நைஸாக தலையில் வைத்துக்கொள்ள நினைத்தேன். வந்தது வினை. ;D முடியெல்லாம் கொக்கிகளில் மாட்டிக் கொண்டது. ;))

இதுதான் இமா. ;D இப்போ மட்டும் மக்கள் அருகிலிருந்தால்... "சின்னப் பிள்ளைகளைப் படிப்பிச்சுப் படிப்பிச்சு அவங்களைப் போலவே புத்தி போகுது," என்றிருப்பார்கள். ;)

ஒருவிதமாக மாட்டி முடித்தோம். தூக்கணங்கள் நான்கு மிஸ்ஸிங். ;( லைட்டிங் டிரெக்ட் கடையில் கிடைக்குமாவென்று விசாரிக்க வேண்டும்.

ஜன்னல் பாவம் துகிருரிந்து நிற்கிறது. இரவில் மட்டும் பேருக்கு ஸ்டைலாக ஒரு லேஸ் நைட்டி. :) நல்லதெல்லாம் கழுவி பெய்ன்ட் தூவிவிடாமல் மூடிக் கிடக்கிறது. கௌச் இரண்டும் பழைய திரைச்சீலைகளால் இழுத்துப் போர்த்துக்கொண்டு ஒய்வெடுக்கின்றன.

பகலில் வேலை. அது முடிய கடைக்குப் போக வேண்டி இருந்தால் அதையெல்லாம் முடித்துக் கொண்டு வீடு வந்து சின்னச் சின்னதாக உள்ள அலுவல்களையும் பார்த்து, இயலுமான சமயம் வீட்டு வேலையும் நடக்கிறது.

இது... என் வீடு. என் பிள்ளைகள் போல, ட்ரிக்ஸி போல இது இன்னொரு பிள்ளை. அவர்களைப் போலவே... என்னதான் பார்த்துப் பார்த்துப் பராமரித்தாலும் காலம் வந்தால் என்னை விட்டுப் போகும் அல்லது நான் இதை விட்டுப் போவேன். :-)

இது என்ன கதை என்கிறீர்களா! ஞானோதயம், விரக்தி அப்படி எதுவும் கிடையாது. உண்மை இதுதான். பார்த்துப் பார்த்துக் கட்டி அனுபவித்து வாழ்ந்த கூட்டை முற்றாகப் பிரிந்து வந்து பதினைந்து வருடம் ஆகவில்லையா!

அது போல... இதுவும் கடந்து போகும் என்கிறேன். ;))

4
Average: 3.7 (3 votes)

குரலினிது யாழினிது

“கறுப்புக் கயிறு”

’பழனியில் வாங்கிய முருகன் டாலரா?

பம்பை நதிக்கரையில் கிடைத்த ஐயப்பன் டாலரா?

பள்ளி வாசலில் மந்திரித்துக் கட்டிய கயிறா?

வேளாங்கண்ணியில் விருப்பமாகக் கிடைத்த மாதா படமா?

பட்டணத்தில் எல்லோர் கழுத்திலும் எப்போதும்

படர்ந்திருக்கும் கறுப்பு மாலை - என்ன இது?

ஓ - அதுவா,

பக்கத்து வீட்டிலும், பழகியவர்களிடமும்

பேச நேரமில்லை -

ஆனால், பயணத்தின் போது, பேசிக் கொண்டே இருக்கவும்

பாட்டுக் கேட்டுக் கொண்டே மகிழவும் -

பயன் தரும் - இயர் ஃபோனா இது!!!’

ஒரு தமிழ்ப் பத்திரிக்கைக்கு மேலே உள்ள கவிதையை(?!) எழுதி அனுப்பினேன், வெளியாகவில்லை, அதனால் என்ன, இங்கே வெளியிட்டு விட்டேன், வேறு வழியே இல்லை, நீங்கள் படித்தே ஆக வேண்டும்:):)

அதிருக்கட்டும், இயர் ஃபோன் மாட்டிக் கொண்டு, செல் ஃபோனில் பாட்டுக் கேட்பது என்பது இப்போது காலத்தின் கட்டாயமாகி விட்டது. செல் ஃபோன் என்பது, ஃபோன் பேச மட்டுமில்லாமல், ரேடியோ, காமிரா, கணினி என்று பலவிதமாகவும் பயன் படுகிறது.

நானும் இப்போது ஒரு வாரமாக, என்னுடைய செல்ஃபோனில் எஃப் எம் ரேடியோ ஸ்டேஷன்களை ட்யூன் செய்து வைத்துக் கொண்டு, பாட்டு கேட்கிறேன். இரவு 9 மணிக்கு மேல் மட்டும்தான். இந்த நேரத்தில்தான் இனிய பாடல்கள் அதிகம் கேட்க முடிகிறது.

பாடல்கள் கேட்க ஆரம்பித்ததும் எனக்கு மலரும் நினைவுகள் வர ஆரம்பித்து விட்ட்து.

பாடல்கள் கேட்பது என்பது, நமக்குப் பிடித்த பாடல்களை ரெக்கார்ட் செய்து கேட்பதை விட, எதிர்பாராத தருணத்தில் அந்தப் பாடல் வானொலியில் ஒலிபரப்பாகும்போது, அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். அவ்வளவு ஏன்? பஸ்ஸில் போய்க் கொண்டிருப்போம், ஏதாவது ஒரு கல்யாண வீடோ அல்லது காதுகுத்து வீடோ = அங்கே மைக் செட்டில் நமக்குப் பிடித்த பாடல் - சத்தமாக ஒலிக்கும். போகிற போக்கில், காதில் விழுந்து மறையும் ஒரு வரி ‍மனதில் இனம் புரியாத சந்தோஷத்தை உண்டு பண்ணும்.

50 வருடங்களுக்கு முன்னால் ரேடியோ என்பது ஒரு கௌரவ சின்னம். எல்லோர் வீட்டிலும் இருக்காது. ‘அவங்க வீட்டில லேடியோ பொட்டி இருக்குதாம்’ என்று மிகப் பெரிய விஷயமாகப் பேசுவார்கள்.

ரேடியோப் பெட்டி – நிஜமாகவே பெரிதாக பெட்டி போல இருக்கும். அதற்கு சுவரில் ஒரு பெரிய ஸ்டாண்ட் பொருத்தி அதன் மேல் வைத்திருப்பார்கள். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரம் முன்னாலேயே ஸ்விட்ச் போட வேண்டும். அதில் ஒரு பச்சை நிற லைட் ஒளிரும். கைகளைக் குவித்து, அந்த லைட் எரிகிறதா என்று செக் பண்ணுவார்கள். சிறியவர்களுக்கு ரேடியோவைத் தொட அனுமதி கிடையாது.

அப்புறம் ரேடியோவின் சைஸ் குறைந்து கொண்டே வந்து, ட்ரான்ஸிஸ்டர் ஆகியது. கரண்ட மட்டும் அல்லாது, பாட்டரி போட்டு, கேட்கலாம்.

மாத பட்ஜெட்டில் பாட்டரிக்கான ஒரு தொகை கண்டிப்பாக ஒதுக்கப்படும். இப்போது உள்ள மாதிரி பென் சைஸ் பாட்டரி கிடையாது. கொஞ்சம் பெரிதாக, கிட்ட்த்தட்ட 3 அல்லது 4 பாட்டரிகள் தேவைப்படும்.

பிறகு ட்ரான்ஸிஸ்டருடன் இணைந்த ரெக்கார்ட் ப்ளேயர், காசெட் ப்ளேயர் என்று எத்தனை முன்னேற்றங்கள்.

டேப் ரெகார்டர் என்பதில் நிஜமாகவே டேப் இருக்கும். இப்போது 1000 பாடல்களைக் கூட, சின்ன பென் ட்ரைவில் சேமிப்பதைப் பார்க்கும்போது எனக்கு பழைய டேப் ரெகார்டர் நினைவு வருகிறது.

இங்கே இருக்கும் நிறைய தோழிகள் ரொம்பவும் சின்னவர்கள். உங்க வீட்டில் இருக்கும் அத்தைகள், அல்லது உங்கள் அம்மாவிடம் அவங்க ரேடியோவில் பாடல்கள் கேட்ட அனுபவத்தைப் பற்றிக் கேட்டால், கண்டிப்பாக சிலோன் ரேடியோ பற்றி மலர்ந்த முகத்துடன் சொல்வார்கள்.

அந்நாட்களில் விவிதபாரதி என்பது சென்னை மற்றும் திருச்சி நேயர்கள் மட்டுமே கேட்க முடியும். மற்ற ஊர்களில் என்னதான் ட்யூன் செய்தாலும் கர கர என்ற ஒலியின் ஊடே, மெலிதாகத்தான் கேட்கும்.

இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைக் கேட்டால்தான் எங்கள் பொழுதுகளுக்கு ஒரு அர்த்தமே கிடைக்கும்.

நான் சொல்வது - கிட்டத்தட்ட 30-40 வருடங்களுக்கு முன்னால்.

பாடல்கள் அருமையாக இருப்பது ஒரு பக்கம் - அவற்றைத் தொகுத்து வழங்கிய வானொலி அறிவிப்பாளர்கள்(இளைய தலைமுறையினருக்குப் புரிகிற மாதிரி சொல்வதானால் ரேடியோ ஜாக்கி - ஆர்.ஜே) - மறக்க முடியுமா அவர்களை எல்லாம்!!!

தாங்களும் ரசித்து, எங்களையும் சிறந்த இரசனையாளர்களாக ஆக்கியவர்கள் அல்லவா இவர்கள்!

இலங்கை வானொலித் தொகுப்பாளர்கள் என்றால் அப்துல் ஹமீது மற்றும் கே.எஸ்.ராஜா இவர்களது பெயர்கள்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரிகிறது.

இவர்களைத் தவிர, விமால் சொக்கனாதன், புவனலோசனி, இராஜேஸ்வரி சண்முகம், ஆமினா பேகம் என்று நிறைய நட்சத்திரத் தொகுப்பாளர்கள் உண்டு.

மதியம் 1 மணிக்கு என் விருப்பம் என்ற தலைப்பில் அன்றைய அறிவிப்பாளருக்குப் பிடித்த பாடல்களை அரை மணி நேரம் ஒலி பரப்புவார்கள்.

விமால் சொக்கனாதன் = இவர் எனக்கு மிகவும் பிடித்த அறிவிப்பாளர். இவரது தொகுப்பே மிகவும் வித்தியாசமாக இருக்கும். முதலில் ஒரு முருகன் பாடல், அப்புறம் அவருக்குப் பிடித்த வசனத் தொகுப்பு, பிறகு பாடல்கள் – இவற்றிற்கான வித்தியாசமான விளக்கம் என்று அசத்தலாகத் தொகுத்து அளிப்பார். அதிராத மென்மையான குரல் இவருடையது.

இராஜேஸ்வரி சண்முகம், புவனலோசனி இவர்கள் இரண்டு பேரின் குரல்களும் கிட்ட்த்தட்ட ஒரே மாதிரி இருப்பது போல எனக்கொரு பிரமை.

ஆமினா பேகம் – கிளி கொஞ்சுவது என்பார்களே, அது போல மிக மிக இனிமையான குரல் இவருடையது.

அந்த காலகட்ட்த்தில் இந்திப் பாடல்களின் மேல் எல்லோருக்கும் தனி மோகம். இளையராஜா வந்த பிறகுதான் இது மாறியது.

யாதோன் கி பாரத், பாபி, ஆராதனா, ஜானி, என்று பல படங்களின் பாடல்கள் தேனாக ஒலித்து, எல்லோரையும் பரவசப்படுத்திக் கொண்டிருந்தன.

இலங்கை வானொலியிலும் மதியம் 1.30 மணியிலிருந்து 2 மணி வரை, ஹிந்திப் பாடல்கள் ஒலிபரப்புவார்கள். ஆசை ஆசையாக்க் கேட்பதுண்டு.

பாடல்களின் தர வரிசைக்கு ஒரு நிகழ்ச்சி, மதியம் பெண்களுக்கான நிகழ்ச்சி, இப்படி நிறைய உண்டு.

நான்கு மணிக்கு இசைக் களஞ்சியம் என்று ஒரு தொகுப்பு – தனிக்குரலிசை, ஜோடிக் குரல், நகைச்சுவைப் பாடல் என்று வெரைட்டியான பாடல்களை அழகாக வழங்குவார்கள்.

வாரத்தில் ஒரு நாள் – ரேடியோ குறுக்கெழுத்துப் போட்டி என்ற நிகழ்ச்சி – இதை அனேகமாக அப்துல் ஹமீதுதான் வழங்குவார்.

மேலும் கீழுமாக ஆறு வரிசை என்று மொத்தம் முப்பத்தாறு கட்டங்களை பேப்பரில் வரைந்து கொண்டு, ரெடியாக்க் காத்திருப்போம். ஹமீதின் இனிய குரல் - ‘ பாடலைக் கேட்டுக் கொண்டே போட்டிக்குத் தயாராகுங்கள்’ என்று ஒலிக்கும். அவர் கொடுக்கும் க்ளூ கேட்டு, கட்டங்களை நிரப்பி, புதிரை விடுவிப்பதில் சின்னக் குழந்தையைப் போல ஒரு உற்சாகம் வரும்.

இசையும் கதையும் – இந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுகதை – இடை இடையே பொருத்தமான பாடல்கள் என்று ஒலிபரப்பாகும். நேயர்கள் எழுதி அனுப்புவதைத் தேர்ந்தெடுத்து ஒலிபரப்புவார்கள்.

இசை மாலை – இதுவும் நேயர்கள் எழுதி அனுப்பும் நிகழ்ச்சி. அதாவது – ஒரு வாக்கியம் – அந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஆரம்பிக்கும் பாடல் – இப்படி ஒலிக்கும். வாக்கியத்தைக் கேட்டு, அந்த அந்த வார்த்தைக்கான பாடல் என்னவாக இருக்கும் என்று ஊகிப்பதில் ஒரு திரில்.

உதாரணம் சொல்வதானால் - ‘நல்லவன் மனதில் சாந்தி நிலவும்’ என்று ஒரு வாக்கியம் - இதற்கு -

நல்லவன் – ‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’
மனதில் – மனதில் உறுதி வேண்டும்
சாந்தி – சாந்தி என் சாந்தி
நிலவும் – நிலவும் மலரும் பாடுது

என்று இப்படி பாடல்கள் ஒலிபரப்புவார்கள். 7 அல்லது 8 வார்த்தைகள் கொண்ட அர்த்தம் நிறைந்த ஒரு வாக்கியத்துக்குப் பொருத்தமான பாடல்கள் கேட்பது சுவை.

ஜோடி மாற்றம் – இந்த நிகழ்ச்சியில் எப்படித்தான் பாடல்களைக் கண்டுபிடிக்கிறார்களோ என்று ஆச்சரியமாக இருக்கும். அதாவது முதல் பாடலில் டி.எம்.எஸ் தொடங்க, சுசீலா தொடர்ந்து பாடினால், அடுத்து ஒலிபரப்பாகும் பாடலில் சுசீலா தொடங்க, பி.பி.ஸ்ரீனிவாஸ் தொடருவார். அடுத்த பாடலில் பி.பி.எஸ் தொடங்க, ஜானகி தொடருவார். ரொம்ப அருமையாக இருக்கும்.

இன்றைய நட்சத்திரம் – ஒரு குறிப்பிட்ட பாடகரின் பாடல்கள், அவரைப் பற்றிய செய்திகள்.

இன்றைய நேயர் – இதில் நேயர்கள் பத்துப் பாடல்கள் தொகுத்து அனுப்பலாம். நேயரைப் பற்றிய விவரங்களுடன், ஏதாவது மூன்று பாடல்கள் ஒலிபரப்ப்ப்படும்.

இலங்கையில் ரிலீசாகும் திரைப்படங்களுக்கான விளம்பரதாரர் நிகழ்ச்சிகளில் – அந்தப் படங்களில் இருந்து பாடல் வரிகள், வசன்ங்கள் என்று கேட்க முடியும்.

குடும்பக் கட்டுப்பாடு(அப்படின்னா என்ன்ன்னு கேட்காதீங்க) இந்த்த் துறையின் நிகழ்ச்சியில் ஒரு விளம்பரப் பாடல் – ‘அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே, கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே’ என்ற பாடல் மறக்கவே முடியாதது.

அதே போல குணசரி புல்டோ – இந்த விளம்பரம் – ‘அங்கிள் எனக்கு மனசே சரியில்ல’ என்று ஒலிக்கும் குழந்தைக் குரல் – இன்னும் காதில் கேட்கிறது.

அந்தக் கால கட்டத்தில் பாப் இசை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த்து. இலங்கை வானொலியில் அதிலும் புதுமை புகுத்தினார்கள்.

தமிழ் பாப் இசை – மறக்க முடியுமா இந்தப் பாடல்களை? இவற்றை இலங்கை வானொலியில் மட்டுமே கேட்க முடியும் என்பதால் ட்ரான்ஸிஸ்டருக்குள் காதை ஒட்டி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம்.

‘சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே’

கா கா கா க்க்க்கா கா – (இந்தப் பாடலைப் பாடிய பிரபல பாடகரின் மருமகள் இப்போது நம் பெருமைக்குரிய அறுசுவை தோழி என்ற இரகசியத்தையும் இங்கே சொல்லி வைக்கிறேன், கண்டு பிடியுங்க பார்க்கலாம் அவரை!)

இப்படி பல பாடல்கள். இவையெல்லாம் அப்போது கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பிரபலம்.

சரி, தமிழ் நாட்டு வானொலி நிகழ்ச்சிகள் பற்றியும் கொஞ்சம் –

வானொலி நிகழ்ச்சிகள் பற்றி ‘வானொலி’ என்ற பெயரில் ஒரு பத்திரிக்கையே வந்து கொண்டிருந்த்து. நிறைய சுவையான தகவல்களும் இதில் வெளியாகும்.

ஒலிச்சித்திரம் என்ற தலைப்பில் ஞாயிறு தோறும் ஒரு மணி நேரத்துக்கு, திரைப்படங்களின் கதை வசனத்தை சுருக்கமாக ஒலிபரப்புவார்கள். சினிமாவைக் கேட்க முடியும் இதில்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் – வானொலி வடிவம் – எஸ்.வெங்கட்ராமன் என்ற குரல் ஒலிக்கும். நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தைதான் அவர். ‘ரோஜா’ பட்த்தில், அரவிந்த் சாமியின் மேலதிகாரியாக, மதுபாலாவிடம் பணியாரம் செய்து தரச் சொல்லி கேட்பாரே, அவரேதான்.

செய்திகள் வாசிப்பவர்களின் குரல்கள் மிகவும் பிரபலம். இராமனாதன் – இவர் நடிகர் சரத்குமாரின் தந்தை.

பூர்ணம் விசுவனாதன், சாம்பசிவம், சரோஜ் நாராயண்சாமி இவர்களின் அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கும்.

தொலைக்காட்சி வந்தபின் வானொலியின் புகழ் கொஞ்சம் மங்கிப் போயிருந்த்து. இப்போது பண்பலைகளின் ஆட்சி நடக்கிறது. தொகுப்பாளர்களின் தட தட பேச்சு, நடப்பு செய்திகள் என்று கவனத்தைக் கவருவது மகிழ்ச்சிதான்.

காற்றில் கலந்து வந்து, இதயத்தை நிறைத்து, இரசனையை செம்மைப்படுத்திய இந்த இனிய குரலுக்குரியவர்கள் – மறக்க முடியுமா!

என் கணவர் திரு சிலோன் மனோகர் அவர்களுடன் ஒரு சீரியலில் நடித்த‌ போது எடுத்துக் கொண்ட‌ புகைப்படம்.

எதுக்கு இது இங்கே அப்படின்னு கேக்கறீங்களா? ஹி ஹி, ஒரு விளம்பரம்தான்(இதை கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் பேசும் குரலில் படிக்கவும்)

5
Average: 5 (3 votes)

குட்டிஸ் ஹாப்பி அண்ணாச்சி

ஹே.............ய்ய்ய்ய்ய் விட்டாச்சு லீவு

அட இன்னையோட ஸ்கூல் லீவு விட்டாச்சு பசங்களுக்கு.
இன்னைக்கு எங்க தெரு வழியா நடந்துபோன அத்தனை குழந்தைங்க முகத்துலயும் ,அவ்வளவு சந்தோஷம்,உற்சாகம் ,குறும்புத்தனம் எல்லாம் கலந்த கலவையாய் கலர் அடிச்சுன்னு அந்த முகத்துல இருந்த மகிழ்ச்சி எத்தனை கோடி கொடுத்தாலும் நிச்சயமாய் கிடைக்காது.

எங்க வீட்டு மழலைகளும் ஒரே ஹாப்பி அண்ணாச்சி . இனி இவங்கள எப்படி நான் சமாளிக்க போறன்னு நினைச்சா ஒரே கிறு கிறுன்னு வருது எனக்கு.

ஆனா இவங்க சந்தோஷத்தை நினைச்சு பார்க்கும் போது ,நாம இது போலதான உற்சாகமா இருந்தோம் ,யோசிச்சு பார்த்தா அது போல ஒரு சந்தோஷத்தை வேற எப்பவும் இது வரைக்கும் இருந்தது இல்ல.

என்னோட லீவு ரொம்பலாம் கொண்டாட்டமா இருந்தது இல்ல. என்னோட விடுமுறை பொழுதுகள் புத்தகங்கள் கூடதான் கழிஞ்சுருக்கு. அப்பறம் தோழிகளுக்கு எப்பயாவது கடித போக்குவரத்து இருக்கும் அவ்ளோதான் . ரிசல்ட் போஸ்ட்கார்ட்லதான் வரும் ,அதுக்கு ஆவலா காத்திருப்பேன் .

8 வகுப்பு எக்ஸாம் முடியறதுக்கு முன்னாடி ஒரு தோழியுடன் சண்டை போட்டுட்டேன் . ஸ்கூல் விட்டு கடைசியா வரம்போதும் பேசாமயே வந்துட்டேன் . அதுக்கு அப்பறம் அவக்கிட்ட இருந்து ஒரு கடிதம் ரொம்ப வருத்தமா எழுதிருந்தா , இது மாதிரி என்கூட பேசாம இருக்காத ,எனக்கு மின்சார கனவு படத்துல வரும் வெண்ணிலவே பாட்டு கேட்டா உன் நியாபகம் தான் வருது , அப்படின்னு எழுதிருந்தா. இப்ப அவ என்னை நினைப்பாலான்னு தெரியல ,ஆனா எப்பவும் அந்த பாட்டு கேட்டா அவங்க நியாபகம் எனக்கு வராம இருக்காது .

ஆனா நம்ம அளவுக்கு நம்ம குழந்தைகளுக்கு விடுமுறையும் அவ்வளவு மகிழ்ச்சி யா இருக்கறது இல்ல. அந்த கிளாஸ் இந்த கிளாஸ் ந்னு அவங்க எப்பவும் ஓடினே தான் இருக்காங்க..

சரி லீவுக்கு நீங்க எல்லாம் என்ன பிளான் போட்டுருக்கிங்க , குட்டிஸ்ச எப்படி சமாளிக்க போறிங்க .. சொல்லுங்க மக்களே ... ;)

Average: 5 (2 votes)

"அன்றும் இன்றும்"

நளபாகம் 1 ன் தொடர்ச்சியாகவே இருப்பினும் இந்த பதிவில் குறிப்பிடும் பொருட்கள் மற்றும் காரணிகளின் அடிப்படையில் இதற்க்கு "அன்றும் இன்றும்" என பெயரை மாற்றியமைத்து விட்டேன்.

பழங்கால அரண்மனையில் காணப் பட்ட பொருட்களில் மற்றொன்று 'குதில்'. நான் சிறு வயதில் என் பாட்டி வீட்டில் உயரமாக குதில் இருப்பதைப் பார்த்துள்ளேன். எங்கள் ஊரில் "அரங்கு வீடு" என்று Store room-ஐ அழைப்பார்கள். அந்த அறையினுள் இந்த குதில் வைக்கப் பட்டிருக்கும், உள்ளே அரிசி போட்டு வைத்திருப்பார்கள். அதின் அளவையும், உயரத்தையும் வைத்து தான் "எங்கப்பன் குதிலுக்குள் இல்ல என்கிற பழமொழி வந்தது போலும்". இப்போது நமூரில் ஏதாவது அருங்காட்சியகத்தில் கூட குதில் உள்ளனவா என்று தெரியவில்லை. அரண்மனையில் சிறிய குதில்களே இருந்த போதிலும், நிறைய வரிசையாக நிறுத்தப் பட்டிருந்தன. இப்போதெல்லாம் நம் வீடுகளில் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் அரிசி போட்டு வைப்பது பழக்கமாகி விட்டது.

அது போக இடி உரல், ஆட்டும் உரல் என்று வைக்கப் பட்டிருந்தாலும், ஒரு அறையில் மட்டும் ஆட்டு உரல் தரையோடு பதிக்கப் பட்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. அதுவும் நான் சிறு வயதில் என் பெரியம்மா ஒருவரின் வீட்டில் பார்த்த நியாபகம்.

அரண்மனையின் சமையலறைப் பொருட்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றுதான் "அஞ்சரைப் பெட்டி". தினமும் நம் சமயலில் உபயோகிக்கும் ஒரு பொருள் தான் இது.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வோர் பெயரில் அழைக்கப் பட்டாலும், எங்கள் ஊரில் இதை "மசாலாப் பெட்டி" அல்லது "மிளவு பெட்டி" என்பார்கள். மிளவு என்றால் மசாலாவாம். இதையும் என் சிறு வயதில் பாட்டியின் வீட்டில் பார்த்திருக்கிறேன். கறுப்பு நிற மரப் பெட்டியினுள் ஆறு பிரிவுகள் இருக்கும். அதினுள் மசாலா பொடிகள், மற்றும் கடுகு, காய்ந்த மிளகாய் எல்லாம் போட்டு வைத்திருப்பார்கள்.

சிறு வயதிலேயே கிராமத்தை விட்டு நகர்ந்ததினால் என்னவோ அவைகளையெல்லாம் இப்போது மீண்டும் கிராமங்களில் பார்க்க முடிவதில்லை. பழங்கால மசாலாப் பெட்டி இப்போது எனக்கு கிடைத்தால் விரும்பிய நிறத்தில் கலர் அடித்து வைத்துக் கொள்ளலாம் என்று யோசிப்பேன். என்னிடமும் இக்காலத்து முறையில் உள்ள Spices Rack உள்ளதுதான். நா(ன்)ம எப்போதுமே இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்குத்தானே ஆசைப் படுவோம்.
ஆனால் என் வீட்டுக்கு வரும் தோழிகள் முதல் என் சின்ன மாமியார் வரைக்கும் (மாமியாரின் சகோதரி) இது நல்லா இருக்கே என்று அதையே சுற்றி சுற்றி வருவதுண்டு. அவர்களிடம் வட்டமான டிபன் ஃபாக்ஸ் வடிவினுள்ளே கிண்ணங்கள் இருக்குமே அதுதான் உள்ளதாக சொல்வார்கள். அதனால் புதிதாக வீடு வாங்கும் தோழிகளுக்கு இப்படி பொருட்களை வாங்கி பரிசளிப்பேன்.

அரண்மனையில் கரண்டிகளை சொருகி வைத்திருக்கும் ஒரு துளையிட்ட பலகையும் தொங்கிக் கொண்டிருந்தது. ஸ்பூன் ஸ்டான்ட் போன்றது. சிரட்டைகளில் துளையிட்டு அதில் ஒரு குச்சியை சொருகி கரண்டியாக உபயோகிப்பார்கள். எங்க ஊர் திருமணங்களில் சாப்பாடு பரிமாறும் போது அத்தகைய கரண்டிகளைப் பயன் படுத்துவதைப் பார்த்துள்ளேன். இப்போதெல்லாம் ஒரு ஜாடியினுள் கரண்டிகளை நிற்க்க வைத்து வைக்கிறோமே!! காலம் தான் எப்படியெல்லாம் மாறி விட்டது என்று யோசித்துக் கொண்டேன்.

வெள்ளைக்காரர்களுக்கு ஒரு பழக்கம். என்னவென்றால் பழங்கால வீட்டு உபயோக பொருட்கள் (30 ஆண்டுகளுக்கு முன் உள்ளது) சமையலறை, தோட்டம், தையல் தைக்கும் இயந்திரங்கள், விளக்குகள், பீங்கான் மற்றும் மண் பாத்திரங்கள் என்று அந்த காலத்துப் பொருட்களை சேகரித்து பத்திரப் படுத்தி அதை கடையில் விற்ப்பார்கள். பல பொருட்கள் துருப் பிடித்திருக்கும், இருப்பினும் அவற்றிற்க்கான மவுசு மட்டும் குறையவே இல்லை. விலையும் அதிகம். அவர்களின் பழங்கால பாரம்பரிய உடைகள் தொடங்கி, பிஸ்க்கெட், சாக்லேட் போட்டு வைத்திருந்த டப்பாக்கள் வரை இதில் அடங்கும்.

பண்டை காலப் பொருட்கள் சேகரிப்பதை Antique Collections என்றும் அழைப்பர். பொதுவாக இப்படி கடைகள் ஏதாவது ஒன்று தான் இருக்கும். அதிலும் கிராமப் பகுதிகளில் மட்டுமே காணப் படும். பார்ப்பதற்க்கு ரசிக்கும் படியாக இருப்பினும் எனக்கென்னவோ அவற்றின் மீது நாட்டம் வந்ததில்லை. அதுவே நம் கலாச்சாரத்திற்க்குட்ப்பட்ட பொருட்களாயிருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணிக் கொள்வேன்.

தோழிகளே யாரிடமாவது நமது பழங்கால பாரம்பரிய பொருட்கள் இருப்பின் படங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். பார்த்து ரசிக்கலாம்.

5
Average: 5 (5 votes)

ஹேப்பி இன்று முதல் ஹேப்பி...

க்ளிங் க்ளிங் க்ளிங் என்று அலாரம் அலற கண் விழித்து பார்த்தேன் மணி 6.20, அடுத்து ஒரு குட்டி தூக்கம் அடுத்த அலாரம் அலறும் வரை இப்போது மணி 6.40 ஒரு 5 நிமிடம் என்று மனது தூக்கத்திற்க்கு ஏங்க இழுத்துப் போர்த்திக்கொண்டு மீண்டும் கண் அயர்ந்தேன்.

டிங்கலிக்கா பிங்கிலி, பிங்கிலிக்கா ஜங்கிலி... இது அலாரம் சத்தம் இல்லீங்க, எங்கள் குட்டி தேவதையை எழுப்ப் அவங்க அப்பா பாடும் பாட்டுதானுங்க. எங்க நம்ம ஹாரிஸ் ஜெயராஜ் இதை கேட்டிடப் போறாரு.. அப்பறம் நாம ரெக்கார்டிங்கிற்க்கு எல்லாம் வர முடியாது, தலைவர் ரொம்ப பிஸி. அது சரி ஏன் இப்படி ஒரு பாட்டு என்று யோசிக்கிறீங்களா? பாட்டு பாடி தூங்க வைக்கவும் முடியும் பாட்டு பாடி எழுப்பவும் முடியும். பிறகு இப்படி ஒரு பாட்டைக் கேட்டும் மனுஷன் தூங்கவா முடியும். ஆத்தாடி இதை மட்டும் என் கணவர் படிச்சிடக் கூடாது, அப்பறம் நான் அம்புட்டுதான். ஆனால் என் பொண்ணு சொல்லும் "அப்பா சூப்பரா பாட்டு பாடுறாங்க இல்லமா" என்று. ஐஸ் வைப்பதில் இந்த குட்டீஸை அடிச்சிக்க முடியாது.

ஆஹா இப்ப மணி 7 ஆகிடுச்சே என்று ஒரு காக்காய் குளியலை முடிச்சிட்டு சமையல் அறையில் அரக்க பரக்க வேலை. அய்யோ மணி 7.30 ஆகிடுச்சு... நான் ஸ்கூல் போக மாட்டேன் தூங்கனும் என்று அழுத பிள்ளையை அப்படியே அலேக்கா தூக்கிட்டு போய் அதுக்கு ஒரு குருவி குளியலை போட்டு விட்டாச்சு. (நீங்க கண்டிப்பா யோசிப்பீங்க அது எப்படி காக்காய் குஞ்சு குருவியாகும் நு பின்னே நான் பெத்த பிள்ளைய காக்கா என்றா சொல்ல முடியும்.) அது அப்பவும் தூங்கிட்டே தான் இருக்கும். நான் விடுவேனாக்கும் அப்படியே மேக்கப்பை போட்டு, சீருடையை மாட்டி ரெண்டு மாடி வேக வேகமாய் கீழே இறங்கி பள்ளி வேனுக்காக வெயிட்டிங்க்.

7.50 க்கு வரவேண்டிய வேன் மணி 8 ஆகியும் வரவே இல்லை. என்னடா இது என்று ஒரே குழப்பம். "hari ini mengapa anak perempuan anda memakai seragam, hari ini adalah cuti ini?" வழியில் போறவங்க ரெண்டு மூன்று பேர் என்னிடம் எதோ மலாய் மொழியில் சொல்ல எனக்கு ஒன்னும் புரியலை (நமக்கு மலாய் தெரியாங்கறது அவங்களுக்கு தெரியாது இல்லே). சரி பள்ளிக்கு ஒரு போன் பன்னுவோம்னு முயற்சித்தால் ஒரு வாரம் சம்மர் ஹாலிடே என்று பிரின்ஸிப்பால் மேடம் சொன்னாங்க. அடக்கடவுளே இதுக்கா இம்புட்டு அவசர அவசரமாய் அலறி அடிச்சு கிளப்பினது.

சரி இருந்தாலும் ஒரு வாரம் கொஞ்சம் வேலை பளு குறையுமேனு நான் சந்தோஷப்பட. "அம்மா நீ பேட் கேர்ள் ஸ்கூல் லீவா, அப்பறம் ஏன் எனக்கு யூனிஃப்பார்ம் போட்டே" என்று பொண்ணு என்னை செல்லமாய் கடிந்துக்கொள்ள, இதுல தெரிஞ்ச அக்கா வேர ஒருத்தவங்க பார்த்திட்டு "உங்க அம்மா இன்னைக்கு உன்னைய ஜோக்கர் ஆக்கிட்டா டா, நீ முதல்ல போய் சட்டைய மாத்துடா பாப்பானு சொல்லிட்டாங்க." கொடுமையோ கொடுமை சாமி.

பொதுவாக கொளுத்தும் வெயிலின் தாக்கத்திற்காக தான் கோடை விடுமுறை விடுறாங்க. ஆனால் நாங்க என்னதான் குளறுபடி செய்திருந்தாலும் அம்மாவும், பொண்ணும் குளிர்ந்த மழை மேகங்களுடன் கோடை விடுமுறையை குஷியாய் கொண்டாடிட்டு இருக்கோம் மனம் மகிழும் இசையோடு...

கோடைகால காற்றே...
குளிர்தென்றல் பாடும் பாட்டே...
மனம் தேடும் சுவையோடு...
தினம்தோறும் இசைப்பாடு...
அதை கேட்கும் நெஞ்சமே...
சுகம் கோடி காணட்டும்...
இவைகள் இளமாலை பூக்களே, புதுச்சோலை பூக்களே..

5
Average: 5 (6 votes)

தென்றல்

எதெல்லாம் மனதுக்கு அமைதியை, சாந்தியை, மகிழ்வை தருகிறதோ அதெல்லாம் தென்றலின் தீண்டல்தானே. மனம் குழம்பி இருக்கும் பொழுது மெலிதான குளிரோடு மெலிதான காற்று நம்மை தழுவும் பொழுது ஏற்படுமே ஒரு ஆனந்தம் அது இங்கே வந்து செல்லும் அனைவரும் உணர வேண்டும்.
நல்ல விஷயங்கள் எதைப்பற்றியும் நகைச்சுவையோடு பறிமாறிக்கொள்ளலாம்.
கதை
கவிதை,
குறுஞ்செய்திகள்,
துணுக்குகள்.
ஆனந்தம்,
சோகம், இப்படி எல்லாவற்றையும் கலந்து பேசலாம். ஆறுதலையும் மகிழ்வையும் பெறலாம்.

5
Average: 5 (2 votes)

அலாவுதீனும் அற்புத விளக்குகளும்!

என்னவோ Jadoo TV என்று எடுத்து வைத்திருக்கிறார் க்றிஸ். போர் அடித்தால் தட்டுவோம். ஒரு கப் காப்பியோடு அந்தச் சமயம் ஓடும் சினிமாவில் சில நிமிடங்களை மட்டும் ருசித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம். இந்த இடுகையைத் தட்டச்சு செய்ய ஆரம்பித்த அன்று திரையில் தோன்றியவர்... 'அலாவுதீன்'. பிரபுதேவா - மந்திரவாதி மேக்கப் போட்டால் கூட நன்றாகத்தான் தெரிவார் என்று தோன்றிற்று. என் மனதிலிருந்த மந்திரவாதியின் முகம் இவர் போலவேதான் இருக்கும். ஆனால் சற்று குண்டாக வட்டமாக இருக்கும். :-)

முதல் முதலில் பாடசாலை பரிசளிப்பு விழாவின் போது கிடைத்த கதைப் புத்தகங்களில் ஒன்று 'அலாவுதீனும் அற்புத விளக்கும்'. பரிசைப் பெற்றுக் கொண்டு எங்களுக்கென ஒதுக்கியிருந்த அறைக்குச் செல்ல வேண்டும். விழா முடியும் வரை அங்கே அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். எங்களுக்கு பெற்றோருடன் சென்று அமர அனுமதி இல்லை. பரிசளிப்பு விழா முடிந்து வீட்டிற்குக் கிளம்புவதற்குள் வாசித்து முடித்துவிட்டேன். நான் மட்டுமல்ல, கிட்டத்தட்ட என் தோழிகள் அனைவருமே மாற்றி மாற்றி மற்றவர்களது பரிசுப் புத்தகத்தைப் படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

என்னை வரைதலில் ஈடுபாடு கொள்ள வைத்த புத்தகங்கள் இரண்டில் இதுவும் ஒன்று. அத்தனை அழகு. 1968லேயே மெல்லிதாக 'லாமினேட்டட்' செய்யப்பட்ட பளபள அட்டையோடிருந்த அந்தப் புத்தகத்தைத் தடவிப் பார்க்கப் பிடிக்கும். எனக்கு மட்டும்தான் தோழிகள் மத்தியில் லாமினேட்டட் அட்டை புத்தகம் கிடைத்தது என்பது பெருமையாக இருந்தது. அதைப் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு மாய லோகத்தில் சஞ்சரிக்கும் பிரமை கிடைக்கும். என்னோடு இருந்த முப்பது வருடங்களில் முப்பதாயிரம் தடவை படித்திருப்பேன் போல. அந்தப் புத்தகத்திலிருந்த மந்திரவாதி... அப்படியே பிரபுதேவா சாடையில் இருப்பார். ;)

8 வயது இமாவுக்குப் புரியாத விடயங்கள் இரண்டு இருந்தன.
1. சித்திரத்தில் குட்டிப் பையனாகத் தெரிந்த அலாவுதீனுக்கு எப்படி திருமணம்!!! (இளவரசி வேறு என் சைஸில் இருந்தார்கள்.)
2. கவனமாகப் பிரித்த புத்தகத்தின் பின் அட்டையுள், செபாவிடமிருந்து நான் திருடிய 'வண்ணத்துப்பூச்சி டான்ஸ்' புகைப்படம் ஒன்று சொருகி இருந்தேன். (செபா இதைப் படிக்காதிருக்கக் கடவார்களாக.) ;)) அது எப்படிக் காணாமற் போயிற்று!!! பூதம் கொண்டுபோயிருக்குமோ!!

***** ***** *****

இம்முறை விடுமுறையில் நாத்தனார் வீட்டில் என் கண்ணில் பட்டன இரு அற்புத விளக்குகள். அற்புத விளக்குகளேதான் அவை. மின்சாரமில்லாத வீட்டில் அந்தக் குறையே தெரியாமல் இயல்பாக எங்கள் வாழ்க்கை ஓடுவதற்குத் துணையாக இருந்தன இந்த விளக்குகள்.

இரண்டுமே மண்ணெண்ணெய் விளக்குகள். பித்தளை விளக்கு நிறையத் தடவை காயம் பட்டு ஒட்டப்பட்டிருந்தது. பச்சைக் கண்ணாடி விளக்குக்கு ஒரு வெள்ளை ப்ளாத்திக்குப் பாதம் இருந்ததாக நினைவு. இப்போ காணோம். திரி இன்னமும் வேலை செய்கிறது. ஒரு பாதம் போடச் சொல்லி க்றிஸைக் கேட்கலாம். தூக்கி வந்துவிட்டேன். இருக்கட்டும் என்னோடு. என்னை விட வேறு யாருக்கு இவற்றின் அருமை புரியப் போகிறது!!

***** ***** *****

பொழுது தொடர்ந்து போகிறது! ( மு. க. சு - http://www.arusuvai.com/tamil/node/27524 )

விடுமுறை முடிந்து கொண்டு வந்த பெட்டியிலிருந்து மீதிப் பொருட்கள் எல்லாம் ஒதுக்க ஆரம்பித்தேன். அடியிலிருந்து கடிகாரப் பை எட்டிப் பார்த்தது.

அட! என்னவோ எழுதி இருக்கிறதே!!

உன்னிப்பாகப் பார்க்க... சுவாரசியமான ஒரு விடயம் கண்ணில் பட்டது. ஆகா! 'luminary bag' - தீபாவளி விளக்கு!!

அந்தக் குறிப்பில் சொல்லியிருந்த விதமாக, பையை புள்ளிக் கோட்டின் வழியாகக் கிழித்து உள்ளே மின்விளக்கை மாட்டிப் பார்த்தேன்

அழகாக இருக்கிறதல்லவா!

5
Average: 5 (6 votes)

புரியாத பிரியம் பிரியும்போது புரியும்

நாம் சட்டென்று கேள்விப்படும் ஏதோ ஒரு விபத்து, மரணம், பிரிவு, இன்னபிற மனதை பிசையும் நிகழ்வுகள், சொல்வதெல்லாம் என்ன? மாறுகின்ற வாழ்வில் மாறாதது மரணமும், பிரிவும் மட்டுமேன்னுதானே?

அப்படி செய்திகள் செவியில் மோதும்போதெல்லாம், ஒரு நிமிடம் இதுவரை மிக மிக சாதரணமாய் உணரும், நாம் அதிகம் கவனம் செலுத்த மறந்த நம் சுற்றங்கள், உறவுகள், நம் வாழ்வு எல்லாமே வழக்கத்தைவிட அதிகம் மதிப்புமிக்கதாய், அதிசயமானதாய் தோன்றுகிறதுதானே.

அதுபோன்ற தருணங்கள் நமக்கு நிகழ நேரும்போதோ, நிகழ்ந்தபின்போ அதை அந்த உறவை இன்னும் பத்திரமாய் நேசித்திருக்கலாமோ? இப்படி செய்திருக்கலாமோ? அல்லது இப்படி செய்திருக்கவேண்டாமோ? இன்னும் என்ன என்னவோ செய்திருக்கலாம்! இல்லை செய்யாமல் இருந்திருக்கலாம்! என மனம் கசிகிறதுதானே ?

அப்படி செய்ய மீண்டும் ஒரு தருணம் கிடைக்காதா என மதிக்க மறந்துபோன அந்த தருணத்திற்காய் துடிக்கிறதுதானே?

நம்வீடு, துணை, பிள்ளைகள், பெற்றோர்கள், இன்னபிறஉறவுகள், நட்பு, ஆரோக்கியம் இதையெல்லாம் நாம டேக் இட் க்ரேண்டடாக எடுத்துகொண்டு செய்யும் தவறுகள்தான் எத்தனை எத்தனை?

இதையெல்லாம் பாராட்ட, வாய்ப்பளிக்க நாளை வரப்போகும் ஒரு நிரந்தர முடிவு/பிரிவு/இழப்பு/ஏதோ ஒரு நிகழ்வுக்காக, ஒரு தருணத்திற்காய் காத்திருக்கலாமா?

இன்று உலாபோகும் கால்களின் அருமை நாளை ஒரு விபத்து நேர்ந்து அது துண்டாய் போய் நடக்கவே முடியாதவரை உணரப்படுவதில்லை.

வாழ்க்கை என்பது அதிசயம். அதில் எல்லாமே அவசர நிகழ்வுகள்.. இந்த நிமிடம் நமக்கு சொந்தமான வேலை, அடுத்த நிமிடம் கூட பறிக்கப்படலாம்.

இப்போதுள்ள வீடு அடுத்த நிமிடமே காணாமல் போகலாம். இப்போது திட்டி சண்டைபோடும் குடும்ப உறவுகள், நட்பு, நாம் உட்பட அடுத்தநிமிடம் சாசுவதமில்லைன்னு எல்லாருக்கும் தெரியும் என்றாலும் உணரப்படுவதென்னவோ சங்கடமான நிகழ்வுகளில்தான் என்பதுதான் தர்மசங்கடமான உண்மை.

வலிகொடுக்கும் மாற்றங்கள் வாழ்க்கையில் மாற்றவே முடியாது என்கிறபோது வாழும்வரை வலிபரிமாற்றம் தவிர்க்க முயற்சியாவது பண்ணலாமா?

சின்னதோ, பெரிதோ நம் இல்லம் நமக்கு மாளிகைதான்.. அதனாலதானே கால்கள் எங்கே போனாலும் கடைசியில் நம் வீடு நுழைந்ததும் ஒரு உணர்வு வருகிறதுதானே?

அது அந்த இல்ல அருமையை கொஞ்ச நேரம் பிரிந்திருந்த ஒரு பாசம்தானே?பலநாள் பிரிந்த கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் எல்லாருக்குமே அந்த பிரிவு அவர்கள் சேர்ந்திருந்தபோது செய்த தவறுகள், ஆராதிக்க மறந்த தருணங்கள் எல்லாம் அதிகம் நினைவூட்டி எப்ப மறுபடி பார்ப்போம்? இழந்ததை உணர்ந்ததை சரிபண்ணுவோம்? என துடிக்கும்.

சிலவேளை இழந்த(மிஸ்பண்ணிய) சில தருணத்தை / சில உறவை / சில நட்பை சாட்டையடி கொடுத்து நினைவூட்டும் வாசகம் உங்களுக்கும் அப்படியுண்டா..? ஆனால் நமக்கெல்லாம் புரிதலை புரியவைக்க மடிந்துபோன தருணங்கள் மறுபடியும் பிறப்பதில்லதானே?

அதனால இணைந்திருக்கும்போதே, இருக்கும் நேரத்தோடுகூட இன்னமும் கொஞ்ச நேரம் எடுத்து கொண்டு, உயிருள்ள நாள்வரை உறவுகளை உணர்ந்து கொள்ளலாம். உணரவைக்கலாம்!

வாழ்க்கை சுவாரஸ்யமானது வாழத்தெரிந்தவர்களுக்கு!

5
Average: 4.4 (5 votes)