கதை

ஒரு மனிதனின் கதை!

"முன்பெல்லாம் நாடுகள் என்று இருந்ததில்லை. ஒரு உலகம்; ஒரே உலகம்; அது... ஒரு நாடு; ஒரே நாடு. அங்கு.... ஒரு மனிதன் இருந்தான். அவன் ஒரு பெண்ணைக் கண்டான். அவள் தனக்குப் பொருத்தமான துணை எனக் கண்டான். இருவரும் 'லிவிங் டுகெதர்' முறையில் ஒன்றாக வாழ்ந்தார்கள்.

அப்போதெல்லாம் ஆண்களும் பெண்களும் சந்தித்தார்கள்; உறவுகொண்டார்கள்; பிரிந்தார்கள். மீண்டும் வேறு ஆண்களையும் வேறு பெண்களையும் சந்தித்தார்கள்; பிரிந்தார்கள். மீண்டும் வெவ்வேறு ஆடவர்கள் வெவ்வேறு பெண்டிரைச் சந்தித்தார்கள்.

பெண் தாய்மையைத் தனியே எதிர்கொண்டாள். முடிந்த வகையில் பெற்றுவிட்டு அறிந்த விதத்தில் பராமரித்தாள். முடியாத போது தனித்து விட்டுவிட்டுக் கிளம்ப, குழந்தையால் இயன்றால் போராடித் தப்பிப் பிழைத்தது அல்லது மரணித்துப் போயிற்று. பிழைத்து வாழ்ந்த குழந்தை, தன் தந்தை, தாய் யாரென்று அறியாதிருந்திருக்கும்.

அவர்கள்.... வானத்துப் பறவைகளையும் பூமியில் வாழ்ந்த ஏனைய ஜீவராசிகளையும் போல சுதந்திரமாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கென்று சட்டதிட்டங்கள் இருந்ததில்லை. பறவைகள் உண்ணும் பழங்களைக் கவனித்து தாமும் உண்ணப் பழகினார்கள். விலங்குகள் வேட்டையாடும் முறைகளைக் கவனித்து, தாமும் வேட்டையாடி உண்டார்கள். எது உகந்தது எது விஷம் என்று ஒவ்வொரு நாளும் கற்றுக் கொடுத்தது.

தனித்தனி மனிதர்களாக இருந்த ஆண்களும் பெண்களும், பறவைகள் இணையொன்று சேர்த்துக் கூடு கட்டிக் குடும்பமாக வாழ்வதைக் கவனித்தார்கள். பறவைகள் இணை பிரியாமல் சேர்ந்து குஞ்சுகளைப் பராமரித்தன.

மனிதனும் அது போல வாழ விரும்பினான். ஒருவர் உதவி மற்றவர்க்கு அவசியம் என்பதை உணர்ந்தான். பிறகு.... மெதுவே தனக்குப் 'பிடித்த இணை' தனக்கு அவசியம் என்பதைப் புரிந்துணர்ந்தான். காலப் போக்கில்... பிடித்த இணையோடு மட்டும் கூடி வாழ்வது நலம் என்றுணர்ந்தார்கள். அன்பைப் பரிமாற, உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ள குரல் உதவும் என்று கண்டார்கள். ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒவ்வொரு குரல் எழுப்பினார்கள். அவையே சொற்களாகின; சொற்கள் வசனக்களாக... பேச்சு உருவானது.

பிறகு!

அவர்கள் சேர்ந்து குழந்தைகளை உருவாக்கினார்கள். குழந்தைகளை இணைந்தே பராமரிக்க, பாதுகாப்பாக ஒரு இடம் வேண்டியிருந்தது. மரங்களில் அத்தனை பெரிய கூடு கட்டுவது சாத்தியமாகத் தெரியவில்லை. மலையடிவாரங்களில், கற்குகைகளினுள்ளே மழை. வெயில் எதுவும் நுழையாத பாதுகாப்புக்குக் கிடைக்கும் என்று அனுபவத்தில் தெரிந்துகொண்டார்கள். பின்பு அவையே அவர்கள் இல்லம் ஆகிற்று.

அங்கு குழந்தைகளைப் பெற்று பாதுகாப்பாக வளர்த்தார்கள். விலங்குகள் விரட்டவில்லை; வேறு பயங்களும் இல்லை. அவை வளர்ந்தன. இப்படியே தொடர... 'மானிடம்' என்றொன்று உருவாகிற்று. நல்ல குணங்கள் தீய குணங்கள் என்றும் வேறு பலதும் பகுத்துச் சிந்திக்க ஆரம்பித்தனர். ஆளுக்காள் உதவி, இணைந்து வாழ்ந்து சமுதாயம் ஒன்றை உருவாக்கினர்.

மெதுவே.... அறிவு, வசதி, வாழ்க்கை முறை எல்லாமே மெருகேறிற்று. ஏற்கனவே இருந்த ஆராய்ச்சி செய்யும் குணம் மும்முரமாக வேலை செய்ய ஆரம்பித்தது.

தமக்குத் தெரிந்ததை மக்கட்குச் சொல்லித் தர, அவர்கள் அதைத் தம் வாழ்வாதாரமாகக் கொண்டு தொழில்களை ஆக்கிக் கொண்டனர்.

சனத்தொகை தொடர்ந்து பெருக... சுலபமாகத் தெரிந்த தீர்வு - இடப்பெயர்வு. இடம் பெயர்ந்தனர் மக்களும் மக்கள் பெற்ற மக்களும் ஒன்றாக. புலம் பெயர்ந்தனர். மொழிகள் உருவாகிற்று. இனம், சாதி என்றெல்லாம் உருவாகிற்று."

அந்தச் சதுர உணவு மேசையை முழு உலகம் என்பதாகப் பாவித்து இரு கை விரல்கள் வழியாகவும் குகைகளுள்ளும் மரச் செறிவுகளுள்ளும் வெளியேயும் பயணித்தார் சாம் என்னும் அந்த மனிதர்.

"இது தான் மனிதனின் கதை"

அரை மணி நேரம் விடாமல் பேசியதில் களைத்திருப்பார்; வாய் உலர்ந்திருக்கும்; நிறுத்தப் போகிறார் என்று நினைத்தேன்.

ம்ஹும்! இல்லை, மீண்டும் பேச ஆரம்பித்தார் அவர்.

தீவிர சிந்தனையோடு, "முன்பெல்லாம் நாடுகள் என்று இருந்ததில்லை. ஒரு உலகம்; ஒரே உலகம்; அது... ஒரு நாடு; ஒரே நாடு. அங்கு.... ஒரு மனிதன் இருந்தான். அவன் ஒரு பெண்ணைக் கண்டான். அவள் தனக்குப் பொருத்தமான துணை எனக் கண்டான். இருவரும் 'லிவிங் டுகெதர்' முறையில் ஒன்றாக வாழ்ந்தார்கள்." என்று அதே ரீதியில் முதலில் இருந்து தொடங்கித் தொடர்ந்தார் - பேச்சுத் தேர்வொன்றுக்காக நன்கு தயார் செய்து வைத்திருந்ததை வீட்டுக்கு வரும் விருந்தாளிக்குப் பேசிக் காட்டும் குழந்தை போல.

ஒன்றரை வருடங்களாக அவரை அறிந்திருக்கிறேன். வெறுமனே இன்னார் என்பதாக மட்டும் அறிவேன். அதற்கு மேல் தெரிந்துகொள்ள விரும்பியதில்லை. தொண்ணூற்றொன்பது வயது மதிக்க இயலாத கம்பீரம் ஒன்று கண்டேன் அவரிடம். அது கொடுத்த மரியாதை காரணமாக அந்தந்தப் பொழுதுகளுக்கான வாழ்த்துப் பரிமாற்றங்களோடும் புன்னகைப் பரிமாற்றங்களோடும் மட்டும் நின்றிருந்தது எங்கள் பரிச்சயம்.

நெருங்கியிருக்கலாம் நான். என் சிந்தனைப் போக்கு வேறு. மற்றவர்கள் இடத்தில் என்னைப் பொருத்திப் பார்த்து என்னென்ன சங்கடங்கள் வரக் கூடும் என்று சிந்தித்துப் பார்க்கும் தொலை நோக்குச் சிந்தனை. ஒரேயொரு சமயம் சட்டையில் வழிந்திருந்த உணவைத் துடைத்துவிட்டிருக்கிறேன். பின்பெல்லாம் இவர் தொடர்பாக எதை அவதானித்தாலும் அருகே எங்காவது நிற்கும் இல்லப் பணியாளர் ஒருவரை அணுகி என் அவதானத்தைச் சொல்லிவிட்டு விலகி விடுவேன். அவர்கள் செய்தால் பணி; நான் செய்தல்... தவறு - குடும்பத்தாருக்குச் சங்கடம் கொடுத்தவளாவேன்.

ஒரு முறை எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த என்னை நோக்கி உபசாரமாக, தன் குளிர்பானம் நிறைந்த கண்ணாடிக் கிண்ணத்தை நகர்த்தினார். "That's yours Sam, have it." என்றேன். இல்லத்தில் எனக்கென்று தாதியர் தயாரித்துக் கொடுப்பவற்றைத் தவிர எதையும் உண்பதில்லை நான். அவர் நிராகரிப்பாகத் தலையை அசைத்தார்.

எதுவும் பேசியதில்லை என்னிடம். முன்பே சொன்னேனே! பேசும் சொற்பமும் பதில் வாழ்த்து அல்லது நன்றி, மன்னிக்கவும் இப்படி மட்டும் இருக்கும்.

அவரைப் பேசாது அமைதியாக அமர்ந்திருக்கும் மனிதராக மட்டும் கண்டிருந்த எனக்கு அவர் இத்தனை பேசியது ஆச்சரியமாக இருந்தது. பேசிய சமயம் நானும் அவரும் மட்டுமே உணவு மேசையிலிருந்தோம். அந்த மேசைக்குரிய நான்கில் ஓர் நாற்காலிக்குரியவர், அவர் அறையில் உறங்கிக்கொண்டிருப்பதை முன்பே அறையைக் கடக்கும் போது அவதானித்திருந்தேன். இன்னொருவர், இல்லத்திற்குச் சொந்தமான வாகனத்தில் வேறு சிலருடன் மிருகக் காட்சிச் சாலை பார்க்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

தனிமை கொடுத்த பலமா! அல்லது என்னைத் தனித்துச் சந்திக்கக் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்தும் எண்ணமா!

இரண்டும் இராது என்று தோன்றிற்று எனக்கு. அன்று... அவரது நாள். மூளை உற்சாகமான வேலை செய்த ஓர் நாளாக இருந்திருக்க வேண்டும்.

ரீவைண்ட் செய்தது போல் மீண்டும் மீண்டும் முதலிலிருந்து கடைசி வரை மனிதனின் கதையை ஆறு முறையாவது சொல்லியிருப்பார் அன்று. குறுக்கிட விரும்பாது அவதானித்துக் கொண்டிருந்தேன்.
இடையில் ஓர் சமயம், தான் குழந்தைகளைக் கற்பித்து மேன்மையான மனிதர்களாக்கியதைக் குறிப்பிட்டார். தனக்கு ஒன்பது குழந்தைகள் என்றும் அவற்றில் இரண்டு சிறு பராயத்திலேயே மரித்துப் போனதாகவும் சொன்னார். மீதி ஏழு பற்றிய நினைவுகள் அவரிடம் இல்லை.

கேட்டேன். எங்கே என்று தனக்குத் தெரியாதென்றார்.

எனக்குத் தெரியும் - அவர்கள் அனைவரையும் இல்லத்தில் வெவ்வேறு தருணங்களில் கண்டிருக்கிறேன். கனிவான அந்த வயதான குழந்தைகள் தம்மை விட வயதான இந்தக் குழந்தையை அன்பாகத் தலைதடவிப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன்.

இது... ஒரு மனிதனின் கதை. சிறப்பாக வாழ்ந்து குழந்தைகளைச் சீராகச் சான்றோராய் வளர்த்து மேல் நிலைக்கு உயர்த்திவிட்டு, பழுத்து... மக்கிப் போய் உரமாகும் சிறப்பான நாளை எதிர்பார்த்து ஒரே இடத்தில் தங்கிவிட்ட ஓர் பெருமை மிக்க மனிதனின் கதை.

கதை சொல்லி நான்... இல்லத்தின் அதே பிரிவில் மற்றொரு அறைவாசி. என்னால் நகர இயலும்... தள்ளுவண்டி உதவியோடு. சிந்தனையும் தெளிவாகவே இருக்கிறது இன்னும்.

என்றோ நானும் என் அன்புக் குழந்தைகளை அடையாளம் தெரியாதவனாவேனோ! அவர்களுக்கு வலிக்குமே! ;(

வேண்டாம், அதற்கு முன்பே எனை அழைத்துக் கொள் இறைவா!

Average: 5 (3 votes)

கதையல்ல‌ நிஜம்

வசந்தி சற்றே வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள். கண்ணாடி முன்பாக‌ நின்று கழுத்தின் எலும்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

மீண்டும் சென்று எடை பார்க்கும் ஸ்கேலில் தனது எடையைப் பார்த்தாள். நான்கு மாதத்தில் அஞ்சு கிலோ வெயிட் காணோம்.

சோகத்தில் மூழ்கியிருக்கும் வசந்தியிடமே கேட்போம்.

"என்னாச்சு...ஏன் டல்லா இருக்கீங்க‌ வசு"

ரொம்பக் கஷ்டப்பட்டு ஏத்தி வச்சிருந்த‌ என்னோட‌ வெயிட் நாலு மாசத்தில‌ அஞ்சு கிலோ காணாம‌ப் போச்சுங்க‌" என்றாள் லேசாக‌ லூசாகிப் போன‌ ப்ளவுசின் கையைப் பார்த்தபடி.

''மறுபடியும் எனக்கு உடனே வெயிட் போடணுங்க‌. பார்க்கிறவங்க‌ எல்லாம் என்ன‌ வசு உடம்பு சரியில்லியான்னு கேட்கிறாங்க‌. எனக்கு கஷ்டமா இருக்கு. ஏதாச்சும் வழி சொல்லுங்களேன்" முகத்தில் நிஜமான‌ வருத்தம் படர‌.

"டோன்ட் ஒரி வசு. இங்கே நிறைய‌ கிச்சன் குயின்ஸ் லாம் இருக்காங்க‌. உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க‌. ஆமா, ஏன் இப்படி ஆயிட்டீங்க‌. உடம்புக்கு......." மெதுவாக‌ நானும் இழுத்தேன்.

"சே...சே..... நான் நல்லா ஹெல்த்தியா தான் இருக்கேன்." அந்தக் கதையைச் சொல்ல‌ ஆரம்பித்தாள் வசு.

"பால் சாப்பிடாதீங்க‌. அஞ்சு வயசுக்கு அப்புறமா பால் தேவையே இல்லை. கறவை மாட்டுக்கெல்லாம் ஹார்மோன் ஊசி போட்டு நிறைய‌ பால் கறக்கிறாங்க‌. அது நல்லதில்லன்னு வாட்ஸ் அப்ல‌ மெசெஜ் பார்த்தேங்க‌. சரி நமக்கு நல்லது தான‌ சொல்றாங்கன்னு பால் வேண்டாம்னு விட்டுட்டேங்க‌"

"சரி அப்புறம்"

''சர்க்கரையா..... அது வெள்ளை நச்சு. அதுல‌ பிளீச்சிங் பவுடர் பாதிக்குப் பாதி சேர்க்கிறாங்க‌. எலும்பெல்லாம் போயே போச்சுன்னு ..... உங்க‌ பதிவைப் படிச்சதும், சர்க்கரையை சுத்தமா நிறுத்திட்டேங்க‌. சரி தானேங்க‌"

'இவங்க‌ சுத்தி வந்து நம்ம‌ தலையில‌ கை வைப்பாங்க‌ போல‌' சரின்னு தலை ஆட்டினேன்.

''பிராய்லருக்கு நோ...மட்டனுக்கு நோ... மீன் மட்டும் தான் ஓ.கே.வா?'' கேள்வி எழுப்ப‌

''ஓ.கே.'' என்றேன் நானும்.

''அடுத்து மைதா மாவு. நிறைய‌ நாடுகள்ல‌ தடை செய்யப்பட்ட‌ உணவுப் பொருள் மைதான்னு தினசரியில் படிச்சிட்டு நானும் மைதாவுக்கு எங்க‌ வீட்ல‌ தடா போட்டேங்க‌. பேக்கரி அயிட்டம்ஸ் எல்லாம் இந்த‌ தடை உத்தரவால் நின்னு போச்சுங்க‌. பரோட்டாவும் இல்லாமப் போச்சு." வாடினாள் வசந்தி.

"அப்போ என்ன‌ தான் சாப்புடறீங்க‌ வசு"

"காலை உண‌வு எனக்கு நட்ஸ் மட்டும் தான். அஞ்சு பாதாம், அஞ்சு முந்திரி, மூணு பேரீச்சை, ரெண்டு பிஸ்தா, ஒரு வால்னட், ... நோ காஃபி... நோ டீ....ஒன்லி ஃப்ரெஷ் ஃப்ருட்ஸ் " உற்சாகத்துடன் கூற‌,

"அப்போ, உங்களுக்கு சமையல் வேலை இல்லே" நான் முணுமுணுத்தேன்.

"அங்கே இருக்கு விஷயம். எல்லா பழமும் எடுக்க‌ மாட்டேங்க‌. திராட்சையில‌ ஏகப்பட்ட‌ மருந்தாம். ஆப்பிள் ல‌ நிறைய‌ கெமிக்கல்ஸ். அதை வாங்க‌ மாட்டேன். மாம்பழம் நேச்சுரலா பழுத்ததான்னு தேடித் தேடி வாங்கணும்." விவரித்தாள் வசந்தி

வசமா வந்து மாட்டிக்கிட்டோமோ விழித்தேன் நான்.

''காய்கறியும் நாட்டு ரகமா பார்த்து தான் வாங்கணும். பாருங்க‌ முருங்கைக்காய்க்கு மருந்து கிடையாது...இப்படி....ம்" பாடம் நடத்த‌

தலையை ஆட்டி வச்சேன் நானும்.

"சிறுதானியம் நிறைய‌ சேர்த்துகிட்டேன். அரிசி உணவு அளவு குறைச்சாச்சி . தேங்காய் எண்ணெயை ஆட்டி வச்சிருக்கேன். மற்ற‌ எண்ணெயை எல்லாம் குறைச்சிட்டேன். எல்லாம் கலப்படம் கொலஸ்ட்ரால்." கண்களை உருட்டியுபடி விவரித்தாள்.

"யோகா பண்ணுறேன். வாக்கிங் போறேன். நான் ரொம்ப‌ ஹெல்த் கான்ஷியஸ் "

இது வேறயா..அக்கறையாக‌ கவனித்தேன்.

"இப்போ சொல்லுங்க‌. நான் இதெல்லாம் மீற‌ மாட்டேன். ஆனால், நான் வெயிட் போடணுமாக்கும்" பெரிய‌ குண்டாகப் போட்டாள் வசந்தி.

"எதைச் சாப்பிடன்னு புரியலங்க‌. சாப்பிட‌ எதை எடுத்தாலும் ட‌வுட்டு. தட்டுல‌ எதைப் பார்த்தாலும் ஹெல்த்தியான்னு ஒரு கேள்விக்குறி. தலையே சுத்துதுங்க‌ எனக்கு. ப்ளீஸ் ஹெல்ப் மீ." பரிதாபமாகக் கேட்டாள் அவள்.

''உங்க‌ வீட்ல‌ இதுக்கெல்லாம் எப்படி ஒத்துகிட்டாங்க '' எனக்குள் சந்தேகம்.

"எப்படி ஒத்துக்குவாங்க‌. ஹோட்டல் ஃபுட் வேண்டாம். ஓ.கே. வீட்டுச் சாப்பாட்டில் இத்தனைக் அமர்க்களம் தேவையான்னு சொல்லி......சொல்லி...." கண்களைக் கசக்கினாள் அந்த‌ மகராசி.

"சொல்லுங்க‌ வசு. சொல்லி....." நானும் ஆறுதலாக‌ அவளது கரத்தைப் பற்றி கேட்க‌

"என்னைப் பார்க்க‌ வச்சி நெய் அல்வாவும், லட்டுமா சாப்பிட்டு வெளுத்துக் கட்டுறாங்க‌" ஓ வெனெ அழுது கொட்டினாள் வசு.

மீ...பாவம்.......:(

வசந்தியோட‌ டயட்டை மாற்றாம‌ மெனு சொல்லுங்க‌ தோழீஸ்....

மெனு ப்ளீஸ்.....

4
Average: 4 (7 votes)

விலகிச் செல்லும் மரமும் விதையும்

வழமையான காலைப்பொழுதுதான் ஆனால் வழமைக்கு மாறாக வெறிச்சோடி கிடந்தது அமிர்தாவின் மனம் .நீண்ட அமைதியின் நிசப்த்தத்தை கிழித்து வெளிவந்த பெருமூச்சுடன் சுற்று முற்றும் பார்த்தாள்
மனம் மட்டுமா வெறிச்சோடி கிடந்தது வீடும் தான்.
கண்ணீர்த்துளிகள் அடிக்கடி கன்னத்தில் சூடு வைப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.
வழக்கமான கோபங்கள் கடும் வார்த்த்தைகள் எல்லாம் வடித்து போட்டது போல் இருந்தது.

அவள் உள்ளம் அறிந்த அமிர்தாவின் கணவன் தலைகோதி ஆதரவாய் சாய்ந்து கொள்ள தோள் கொடுத்தான் .இதைக்கேட்டதும் ,புதிதாக திருமணமானவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆம் புதிதாக திருமணமானவர்கள்தான்
ஆனால் அது அமிர்தத்தின் கடைக்குட்டி மகள். ஏற்கனவே ஒரு மகள் திருமணமாகி போயிருந்தாள்.மகனும் திருமணமாகி வேலை நிமித்தம் தனிக்குடித்தனம் போயிருந்தான்.

அம்மா அப்பா 3 பிள்ளைகளைக் கொண்டது அமிர்தாவின் குடும்பம். யார் உதவியும் கிடைக்காமல் பற்பல தியாகங்கள் செய்து பசி தூக்கம் தள்ளி வைத்து குழந்தைகளை வளர்த்தாள்
.காலையில் சமைத்து விட்டு பிள்ளைகளை ஆயத்தம் செய்து
கணவனுடன் புறப்பட்டு பிள்ளைகளை டே கேர் ல் விட்டு கணவன் ஒரு பக்கம் வேலைக்கு செல்ல தானும் ஒருபக்கம் ஓடி ஓடி வேலைக்கு செல்ல வேண்டி இருந்தது.இப்படியே வேலைப்பழுவிற்கும் பரபரப்பிற்கும் எப்போதும்
குறைச்சல் இல்லாமல் பொழுதுகள் கழிந்தது .

காலையில் எழுந்த உடனே கரண்டிகள் பாத்திரங்கள் அமிர்தாவின் கோவத்திற்கு சங்கீதம் இசைக்கும்.கணவனுக்கு காப்பி குடுக்கும்போது :எல்லாம் நானே செய்தாக வேணும்,அதை செய்து தந்தால் என்ன இதை செய்து தந்தால் என்ன
என்ற புலம்பல்களுக்கு எப்போதும் குறைவிருக்காது.

ராஜ் ம் அன்பான கணவன் தான் .இருந்தாலும் ஏனோ சில வீட்டு வேலைகளில் ஈடுபாடு இருக்கவில்லை.வெளி வேலைகள் கஷ்டமான வேலைகள், எதையாவது பழுது பார்ப்பது என்றால் ஆர்வமுடன் செய்பவனுக்கு பால் சூடாக்குவதும்
வெங்காயம் அரிவதும் கடினமாக தெரிந்தது.அமிர்தாவின் புலம்பல் தாங்க முடியாமல் சில நாட்களில் செய்து கொடுத்தாலும் பல வேளைகளில் ஒதுங்கி விடுவதே வழக்கம்

பாதி சமையலில் இருந்து ஓடி வந்து பிள்ளைகளை தட்டி எழுப்பி விட்டு மறுபடியும் ஓடுவாள்.தனக்கும் கணவனுக்குமான மதிய சாப்பாட்டை லஞ் பாக்ஸ் ல் போட்டு வைத்து விட்டு மறுபடியும் பிள்ளைகளிடத்து போனால் அவர்கள் தங்களை மறந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.

அவ்வளவுதான் பத்திரகாளியாக மாறிவிடுவாள்.சத்தம் மட்டுமென்ன விடி காலையிலேயே தலகாணியோ எதுவோ கிடப்பதை கொண்டு அடி கூட விழ தவறியதில்லை .

அவர்களுக்கும் பழகி விட்டிருந்தது யாருக்கு அடி விழவில்லையோ அவர் பெருமைக்குரியவராக மற்றவர்களை கேலி செய்வதும் நடக்கும்.

சொந்தங்களுக்கும் தன் ஒத்தவர்களுக்கும், பிள்ளைகளுக்கு தேவைப்பட்ட எல்லாமே தான் கொடுப்பதும் ,அவர்களுக்கு தனித்தனியாக பணம் சேமிப்பு செய்வது பற்றியும் ,நல்ல பாடசாலையில் கல்வி ,நல்ல ஆடைகள் என்று தேவைப்பட்டதெல்லாம் அவர்களுக்கு கிடைப்பதையும் சொல்லி சொல்லி பெருமை பட்டுக்கொள்வாள்.
.
அதுமட்டுமல்ல மற்றவர்களுக்கு அறிவுரை கூட சொல்லுவாள் டி வி யில் பாட்டு கேக்கிறார்களே உங்கள் பிள்ளைகள் இதுக்கு பதில் டிஸ்கவரி சானலை பாக்க சொல்லி சொல்லலாமே? என் பிள்ளைகளையெல்லாம் நான் பாட்டுக்கு ஆட விடமாட்டேன் ,
ஸ்கூல் முடிந்து வந்து இப்பிடி அங்கொன்றும் இங்கொன்றும் புத்தக பாக் ,சப்பாத்து ,சொக்ஸ் என சிதறி போடுகிறார்களே இது கூடாத பழக்கம் நான் அனுமதிப்பதில்லை.அதை அதை அங்கே அங்கே வைத்தே ஆக வேணும் எனக்கு என்பாள் .

இப்படியே குழந்தைகள் வளர வளர அமிர்தாவின் கோவத்தின் வெளிப்பாடுகள் மாறியதே தவிர கோவம் மட்டும் மாறவில்லை.எப்போதும் கடுமையாகவே நடந்து கொண்டாள்.
பிள்ளைகள் விளையாடினால் போய் படி என்பதும் ,ஆடிப்பாடி
களித்தால் மார்க் வாங்கிய கடுமையில் என்ன ஆட்டம் வேண்டி கிடக்கு என்பதும் ,அலங்கரித்துக்கொண்டால் இது தேவையா ????? கூடாது இதெல்லாம் வேண்டாம் என்பதும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க கடுமையான சட்டங்கள் வைப்பதும்
ஓயாமல் அறிவுரைகள் சொல்வதுமாய் அமிர்தாவின் செயல்பாடுகள் இருக்க ,

காலம் மட்டும் மிக வேகமாய் உருண்டு சென்று கொண்டிருந்தது .பிள்ளைகளும் திருமண வயதை எட்டியது மட்டுமல்ல ஒரு ஒருவராக திருமணமாகி கூட்டை விட்டு பறந்தனர்.

அந்த ரீதியில் தான் இன்று கடைசி மகளும் திருமணமாகி செல்ல வேலையில் இரு ந்தும் ஓய்வு கிடைக்க வாழ்க்கையை முதன் முறையாய் நின்று நிதானித்து திரும்பி பார்த்தவளுக்கு
எல்லாம் கடந்து போய்விட்டிருந்தது .

எங்கோ குழந்தை அழும் சத்தம் கேட்டது .இதுவே என் குழந்தையாக இருக்கக்கூடாதா என்று வாய்விட்டு சொன்னாள்

ஏன திடீரென இந்த மாதிரி பேசுகிறாய் என்ற கணவனுக்கு

ஆம் என் மூர்க்க குணங்களை தூக்கி எறிந்து விட்டு ,அன்பாய் ,ஆதரவாய் ,செய்யும் தியாகங்களை ரசித்து குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகள் விதிக்காமல் அரவணைத்து அனுபவித்து வாழ ஆசைப்படுகிறேன் என்றாள்,

அதற்கு அமிர்தாவின் கணவன் அதற்கு ஏன் கவலை படுகிறாய் நம் மூத்த மகளின் செல்லத்தை அடிக்கடி கூட்டி வந்து பார்த்துக்கொள்வோம் .நாம் என்ன தூரத்திலயா கட்டிக்கொடுத்திருக்கிறோம் கவலையை விடு என்ற போது ,அமிர்தா உடைந்துபோய் சத்தமாக அழுதுகொண்டே சொன்னாள்,

கடந்த தடவை போன போது நான் மகளிடம் கேட்டேன் குழந்தையை கூட்டிப்போகிறேன் என்று அவள் மறுத்து விட்டாள்.
இல்லை அம்மா நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் நம்மோடு பட்ட சிரமமே போதும்.எனக்கு என் குழந்தைகள்
எந்த சிரமமும் கிடையாது,அவர்கள் ஒவ்வொரு செயலையும் நான் ரசிக்கிறேன் . நிர்ப்பந்தங்களும்,கட்டுப்பாடுகளையும் அவர்கள் மேல் திணிக்க விரும்பவில்லை,அவர்கள் வீட்டை கலைத்து போட்டால்
அவர்களுடன் சேர்ந்தே சுத்தம்
செய்து விடுவேன்.நான் அவர்களுக்காக செய்யும் தியாகங்கள் வேலைகளை சுமையாக எண்ணவில்லை.எனக்கு அது சுகமாக இருக்கிறது அம்மா.
சுடு சொற்களை அவர்கள் மீது வீசி பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க விரும்பவில்லை.

நீ இங்கு வருமுன் நானும் பிள்ளைகளும் கரம்போட் விளையாடிக்கொண்டிருந்தோம் ,உனக்கு பிடிக்காதே என்று நிறுத்தி அதை ரூம் ல் கொண்டுபோய் வைத்து விட்டோம்.பிள்ளைகளுக்காக எங்களையும் வீட்டையும் மாற்றி வைத்திருக்கிறோம்.
எங்கள் வசதிக்கு அவர்களை வளைக்க விரும்பவில்லை.நாளை அவர்கள் இந்த வீட்டை விட்டு தனி வாழ்க்கைக்கு செல்லும் போது இங்கு கடந்து போன ஒவ்வொரு நினைவுகளும் அவர்களை சந்தோசப்படுத்த வேணுமென்று நினைக்கிறேன் அம்மா.

வசதி, வாய்ப்பு, பேரறிவு, புகழ்,பணம் எல்லாவற்றையும் வைத்து அவர்கள் உயர்வையும் மகிழ்ச்சியையும் சம்பாதிப்பதை விட அன்பையும் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வைத்து அவர்கள் உயர்வை சந்திக்க கற்றுக்கொடுக்கிறேன்.இல்லை இல்லை
உதாரணமாய் வாழ்ந்து காட்டுகிறேன்.
என்று மகள் சொன்னதை சொல்லி முடித்தாள் அமிர்தா.

எனக்கு என் பிள்ளைகள் குழந்தைகளாக வேண்டும். நான் அவர்கள் என்ன செய்தாலும் அன்பால் அரவணைத்து கலகலப்பாக வாழ வேண்டும் என்றாள் .காலம் கடந்துவிட்டதை மறந்தவளாய்.

ஆம் பிள்ளைகள் மேல் நாம் எவ்வளவு உயிராக இருந்தாலும் அவர்கள் நம் வீட்டின் நீண்ட கால விருந்தாளிகள்.எப்போதுமே எங்கள் பிள்ளைகள்தான் இருந்தாலும் நாளை எங்கள் வீட்டுக்கு வந்தால்
வீட்டை கலைத்து போட்டு ஓடி ஆடி குழப்படி செய்ய மாட்டார்கள். நீங்கள் கண்ணயரும்போது கண்ணை திறந்து பார்த்தோ காதுக்குள் விரல்விட்டு குடையவோ மாட்டார்கள்.

அவர்கள் குறும்புக்காலம் ,கவலைகள் வேர்விடாத காலம், சுமைகள் தோள் மீது ஏறாத காலம் ,எங்கள் வீட்டில் எங்களோடு இருக்கும் அந்த பொற்காலம்தான் என்பதை மறக்க கூடாது.

முடிந்த அளவு அன்பால் வழிநடத்துவோம்.அன்பால் ஆகாதது எதுவுமில்லை.

5
Average: 4.6 (13 votes)

சிறு மாற்றம் பெரு மகிழ்ச்சி {உண்மை சம்பவம் }

அரிசியை வெயிலில் வைத்து எல்லை தாண்டி சிந்தாமல் பரவி விட்ட செல்வாம்பிகைக்கு எல்லையை தாண்டி எங்கெங்கோ சென்றுவரும் சிந்தனைகளை சிதறாமல் சேர்க்க வழிதெரியவில்லை.

ஒரு வித கலக்கமும் மகிழ்ச்சியும் சேர்ந்து சொல்லொணா உணர்வுகள் மனதில் அலைபாய ஒரு கையால் காக்கையை விரட்டியபடி மூழ்கித்தான் போனாள் சிந்தனைக்குள்.

அப்படி என்னதான் சிந்தனை.

வெளிநாட்டில் இருக்கும் மகனின் உதவியுடன் தன் ஒரே மகளை நோர்வே யில் மணம் முடித்து குடுத்திருந்தாள். மகள் கர்ப்பமாக இருப்பது அறிந்து வேண்டிய கடவுளர்களுக்கு எல்லாம் நேத்தி செலுத்தி முடிக்கு முன்னரே

''பிரசவ காலத்துக்கு உன்னை இங்கே அழைக்கிறேன் அம்மா ஆயத்தம் செய்து கொள்''

எனும் மகளின் வார்த்தைதான்

ஆம் பங்குனி பிறந்தால் 58 வயதாகப் போகிறது.அடிக்கடி இடுப்பு பிடித்துக்கொள்கிறது.சக்கரை வேறு அதிகமாகிவிட்டதை மருத்துவர் உறுதிப்படுத்திவிட்டார்.காலைப்பனியில் ஓயாமல் தும்மல் போட வேண்டி இருக்கிறது.கண்கள்வேறு அடிக்கடி புகை படிந்ததுபோல் மாயம் செய்கிறது.

என்னதான் செய்வது வயதானால் எல்லோருக்கும் பொதுவாக வரும் அசெளகரியங்கள்தானே எண்றெண்ணி மெதுவாக எழ முயன்றவளை
பலமாக அழைத்தது கணவன் ரத்தினத்தின் கனமான குரல்.

''எங்கே என் கண்ணாடி ? அரை மணிநேரம் பேப்பர் படிக்க ஒரு மணிநேரம் தேடவேண்டி இருக்கிறதே இந்த கண்ணாடியை. எடுத்து பத்திரமாக வைக்க மாட்டியா ???''

ஆமாம் செல்வாம்பிகையின் கணவணுக்கு சுமை தூக்குதல் போன்ற பெரிய வேலைகள் தான் செய்யத்தெரியும் தனக்கான சிறு சிறு வேலைகள் எல்லாமே மனைவியே செய்து பழகிப்போய்விட்ட நிலையில்
கண்ணுக்கு முன்னால் இருந்தாலும் மனைவி எடுத்துக்கொடுக்காமல் அந்த கண்ணாடியை எடுத்து மாட்ட மாட்டார்.

சுற்று முற்றும் பார்த்து ஒரே நொடியில் எடுத்துக்கொடுத்தவளின் சிந்தனை ஓட்டம் மட்டும் முடிவுக்கு வந்ததாக இல்லை.

எல்லோரும் சொன்னார்கள் உனக்கென்ன கொடுத்து வைத்தவள் ,இந்த வயதில் வெளிநாடெல்லாம் போக கிடைத்திருக்கிறது என்று.எல்லோரும் பெருமையாக பார்ப்பதை ரசித்தாலும் சம்மந்தபட்டவளுக்குத்தானே அதன்
மறுபக்கத்தை சிந்திக்க வேண்டிய தேவை இருக்கும் .

பாட்டன் முப்பாட்டன் என்று பிறந்து வளந்த நாட்டின் காலையில் சில்லிடும் இம்மியளவு பனியே ஒத்துக்கொள்ளவில்லை, வயசான காலத்தில் நம்மையே யார் பார்ப்பார்கள் என்ன செய்ய போகிறோம் என்று இருக்க ,
மருந்தும் மாத்திரையும் அதிகமாகிக்கொண்டு போகும் இந்த நிலையில், கடல் தாண்டி அதுவும்,
64 வயதாகியும் கைக்குழந்தைபோல் இன்னும் அடம்பிடிக்கும் கணவனை சொந்தங்கள் உதவியில் விட்டு தன்னந்தனியே பழக்கமில்லாத ஊருக்கு எப்படி போவேன் அங்கே போய் எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று
இதயம் படபடக்க, தண்ணீரை எடுத்து குடித்து மறைத்துக்கொண்டாள்.

ஆயினும் செல்வாம்பிகையின் பயத்தையும் படப்டப்பையும் மகளும் கண்டு கொள்வதாக இல்லை. யாரும் கண்டு கொள்வதாகவும் இல்லை .பரபரப்பாக எல்லா வேலைகளும் நடக்க மகள் சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும்
ஓடி ஆடி வாங்கி பாசல் செய்து திணித்து முடிக்க எப்படி நகர்ந்தது என்று தெரியாமல் வேகமாக நகர்ந்த நாட்கள் பிடித்து தள்ளிவிட, தாய்நாட்டிற்கு தற்காலிக விடை கொடுத்து நோர்வே வந்து சேர்ந்துவிட்டாள்.

புது நாட்டில் கால் வைத்தவளுக்கு ,என்னதான் இந்த உலகில் கொட்டிக்கிடந்தாலும் மனம் என்னவோ நமக்கு பொருத்தமானவற்றில் மட்டுமே லயிக்கும் என்பது போல் ஆச்சரியத்தில் ஆழத்திய விடயம்
புதிய நாட்டின் வயோதிபர்கள்.

இவர்களுக்கு எல்லாம் என்ன வயசிருக்கும் என்று கேட்டவளுக்கு அங்குள்ளவர்கள் சொன்ன பதில் மேலும் ஆச்சரியம் .ஆம் 60 க்கு அதிகம் என்பதே .

என்றுமே எங்குமே பாத்திருக்கவில்லை.கண்களை நம்பவே முடியவில்லை. எவ்வளவு அழகாக உடை அணிந்து இருக்கிறார்கள்.எவ்வளவு சுறுசுறுப்பாக தங்கள் வேலையை செய்கிறார்கள்.உதவி இல்லை என்று உரிக்காமல் ஓரமாக
வாரக்கணக்கில் போட்டு வைத்த தேங்காய்கள் ஞாபகத்தில் வந்து போனது.

65 வயது பாட்டி காரை எடுத்துக்கொண்டு கடைக்கு போய் சாமான்கள் வாங்கி வருவதை மேலும் கீழுமாக பார்த்தாள் செல்வாம்பிகை.பேரப்பிள்ளைகளை பாடசாலை கூட்டிபோவது,தம்பதிகளாக கடற்கரைக்கு செல்வது,வேறு நாடுகளுக்கு
இடங்கள் பார்க்க செல்வது,மேலதிகமாக பொது தொண்டுகள் செய்வது என எல்லாமே ஆச்சரியப்படுத்த உடம்பில் ஒரு உற்சாகம் பரவ அன்றுதான் 58 வயது வயோதிபம் இல்லை என்பதை உணர்ந்த்தாள்.
தொடர்ந்து எந்த மாத்திரையும் தேவைப்படவில்லை.மகிழ்ச்சியுடன் ஓடியாடி வேலைகள் செய்து கலகலப்பாக இந்தவளுக்கு கண்ணீர் பீறீட்டது காரணம் கேட்ட மகளிற்கு சொன்னாள்,
''என் தாய் தந்தையர்கள் உறவினர்கள் மூதாதையர்கள் இப்பிடியும் வாழலாம் என்று தெரியாமல் வயதாகி விட்டது வயதாகி விட்டது என புலம்பி மூலையில் முடங்கி மாண்டு விட்டார்களே என்று குழந்தை போல் குலுங்கி அழுதாள்.

இந்த பயணம் அவள் வாழ்வு முறையையே புரட்டிப்போட்டிருந்தது .சென்ற தேவைகள் சிறப்பாய் முடிய ஊர் வந்து சேர்ந்தவளுக்கு ஒரே உற்சாகம்.வயதாகி விட்டது இனி இதெல்லாம் எதற்கு என்று வைத்திருந்த கைக்கடிகாரத்தை
எடுத்து தன் கணவனிடம் பற்றி மாத்தி தரும்படி கொடுத்தாள்.
ஆச்சரியத்துடன் இது என்ன புது வினோதம் என்று வினவிய கணவனுக்கு அனைத்தையும் புரிய வைத்தாள்.ஏன் கடைசி மூச்சு வரை ரசித்து வாழக்கூடாது என்று கேள்வி கேட்டாள்.நாங்களும் சத்தான உணவுகளை எடுத்து வளர்ந்தவர்கள்தானே
சுத்தமான காற்றை சுவாசித்தவர்கள்தானே நோயும் பிணியும் அண்டிவிட்டதாக ஏன் வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்றாள்.

செல்வாம்பிகை வீட்டில் இப்போது எல்லாமே மாறிப்போய் இருந்தது .மாத்திரைகள் இடம் தெரியாமல் போயிருந்தது.உதவி கேட்டு அடுத்தவர்களை நச்சரிக்கும் தேவைகள் ஒழிந்து போயிருந்தது
.குட்டி குட்டி பயணங்களும் ஆரவாரங்களும் வாழ்வை நிறைத்திருந்தது.இங்கும் வயோதிபத்தை ஓரம் கட்டி வீரமாக வாழும் பலர் கண்ணுக்கு தெரிய தொடங்கினார்கள்.

5
Average: 4.5 (17 votes)

அன்பின் அறுசுவை

மெதுவடை

மதுமதி தன் ஐந்து வயது மகளை தூங்க‌ வைத்தாள். இரண்டு வயது மகனுக்கு பாட்டிலில் பால் புகட்டினாள். சரவணன், அவளது கணவன் அருகில் வந்து அமர்ந்தான். ''நம் கல்யாண‌ நாளை விசேஷமாக‌ கொண்டாட‌ வேண்டும் என்றாயே, என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று யோசித்தாயா?''என்றான். ''ஆமாங்க‌ நானும் பலவிதமா திட்டமிட்டுள்ளேன். காலை எட்டு மணிக்கு கோயில், ஒன்பது மணிக்கு நம் வீட்டில் டிபன், மாலை ஆறு மணிக்கு ஓட்டல் வெல்கமில் நமது உறவினர், நண்பர்களுக்கு டின்னர். என் ஏற்பாடு உங்களுகு வசதியா, போதுமா? ஏதாவது மாற்றம் உண்டா?''' என்று கேள்விகளை அடுக்கினாள். ''ஒ.கே. எல்லாம் சரியாக‌ உள்ளது. வெரி குட். ஆனால், காலை நம் வீட்டில் டிபன் என்று அணுகுண்டு போட்டுள்ளாயே? யார், யார் டிபனுக்கு வருகிறார்கள்? ''என்று கேலியாகப் பார்த்தான்.
'''ஆமாங்க‌ என் டிபன் அணுகுண்டு மாதிரித்தான் இருக்கும். ஏன் கேலி பண்ண‌ மாட்டீங்க‌|. என்று பொய் கோபத்துடன் சிணுங்கினாள். ''உங்க‌ அப்பா, அம்மா, எங்க‌ அப்பா,அம்மா மட்டுமே''என்றாள். ;;சரி, சரி என்ன‌ மெனு' என்றான் சரவணன். '''உங்க‌ அப்பா அம்மாவுக்குப் பிடித்த‌ கேரட் அல்வா, பூரி, உருளைக் கிழங்கு மசாலா. எங்க‌ அப்பா அம்மாவுக்குப் பிடித்த‌ கேசரி, இட்லி, வடை, சாம்பார். சரியா'''என்றாள் மதுமதி. '''ஏம்மா வெட்டிங் டே நமக்கா? இல்லை அவர்களுக்கா? ''நக்கலாக‌ வினவினான் சரவணன்.
'''நாம் அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது ஒவ்வொரு நாளும் நமக்குப் பிடித்த மெனுவையே அவங்க‌ செய்வாங்க‌. இப்ப‌ நம்ம‌ வீட்டுக்கு அவங்க‌ வரும் போது அவங்களுக்கு பிடித்த‌ ஐட்டங்களை கொடுத்தோம்னா அவர்களுக்கு சந்தோஷமா இருக்குங்க‌'. அதணால் தான் இந்த‌ மெனு'''என்றாள் . '''சரியான‌ திருட்டுக் கள்ளி''என்று அவள் கன்னத்தில் தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
;;;மதுமதி, நாளைக்கு நமக்கு கல்யான‌ நாள், தேவையானதை வாங்கி விட்டாயா? ''என்றான். '''ம்ம்ம் '' நு தலையை ஆட்டினாள். தன் சமையல் குறிப்புக்களையும் காட்டினாள். அவனும் குறிப்பை உரக்கப் படித்தான். ''கேசரிக்கு பால் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக‌ இருக்கும், கேரட் அல்வாவிற்கு கோவா சேர்க்க‌ வேண்டும், கோதுமை மாவுடன் கொஞ்சம் ரவை கலந்து பூரி செய்தால் , பூரி உப்பலாக‌ வரும். ம்ம். ஒகே ஜமாய்.'''என்றான்.
அவள் அருகில் வந்தாள் மகள், ''நாம‌ நாளைக்கு பிஸியா இருப்போம். நா இப்பவே ஓம் ஒர்க் முடித்து விடுகிறேன் . ஹெல்ப் பண்ணுங்கமா''என்றாள். மகளுடன் சேர்ந்து அவள் வேலை முடிய‌ டைம் இரவு 11. அடுத்து நை நை என்று சினுங்கிய‌ மகனுக்கு விக்ஸ் தடவி, தட்டி கொடுத்து தூங்க‌ வைக்கும் போது டைம் நைட் ஒரு மணி.
சரவணனும், மதுமதியும் ஒருசேர‌ கண்விழித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை சொல்லி கடிகாரத்தைப் பார்த்தனர். சரியாக‌ காலை மணி எட்டு. கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்தால் வாழ்த்துக்கள் சொல்லினர் இருவரது அப்பாவும் அம்மாவும். எல்லோரும் கோயிலுக்கு சென்று வந்தனர். சரவணனும், மதுமதியும் எல்லோரும் ஓட்டலுக்கு டிபன் சாப்பிட‌ போகலாம் என்று அழைத்தனர்.
''மதுமதி, உங்க‌ அப்பா அம்மாவிற்குப் பிடித்த‌ கேசரி, இட்லி, வடை, சாம்பார் நான் கொண்டுவ்ந்துள்ளேன், எல்லோருக்கும் பரிமாறு''என்றாள் அவள் மாமியார். ''மதுமதி, உங்க‌ மாமியார் மாமனார்க்கு பிடித்த‌ பூரி, கிழங்கு மசாலா, இனிப்பும் நான் கொண்டு வந்துள்ளேன் பரிமாறு''என்றாள் அவளின் தாயார். தேங்க்ஸ்மா என்று மாமியாரை வணங்கினாள். நன்றிமா என்று தாயைக் கட்டிப் பிடித்தாள்.
'''இது அன்பின் அறுசுவை விருந்து'''கோரஸாக‌ பாடி மகிழ்ந்தனர் சரவணன், மதுமதி குடும்பத்தினர். உண்மையான‌ அன்பின் அறுசுவை இது தாங்க‌.

3
Average: 3 (3 votes)

நானும் ஒரு பெண்

பூக்காரப் பார்வதியின் கைக்கள் வேகமாகப் பூக் கட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் மனமோ தனது வாழ்க்கை புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டு இருந்தது. பதிமூன்று வயதில் கல்யாணம், பதினெட்டு வயதிற்குள் இரண்டு பிள்ளைகள், இருபது வயதிற்குள் கணவனை இழந்த‌ விதவை என்ற‌ பட்டம். அன்று ஆரப்பித்த‌ பூக்கட்டும் உத்தியோகம் இன்று வரை தொடர்ந்து நடக்கிறது என்று அவள் எண்ணம் ஓடியது.

அக்கா, அக்கா என்று கூப்பிட்டுக் கொண்டே கோதை வந்தாள். வா கோதை என்று பார்வதியும் குரல் கொடுத்தாள். ''என் பெண்ணுக்கு வர‌ மாதம் வளைக்காப்புக்கா, நீங்க‌ தான் பூச்சடை தைத்து கொடுக்கணும், அவளுக்கு தலை முடியும் குறைவு, ஆளும் குள்ளம் அதணாலே எடைக் கொறைவா, கனம் அதிகமில்லாம‌ ஒரு பூச்சடை செய்துக் கொடுக்கனும்'' என்று கோதை தன் பேச்சை முடித்தாள். ''நீ கவலையே படாதே, பூவை குறைத்து கலர், கலர் உல்லன் நூல், சரிகை சேர்த்து அதிக‌ கனமில்லாத‌ பூச்சடை தைத்து தருகிறேன்' என்று நம்பிக்கை கொடுத்தாள் பார்வதி. ''சரிக்கா ரொம்ப‌ சந்தோஷம். ஆமா நீ எப்பொதான் இந்த‌ எண்ணையிறங்கிய கம்மலை மாற்றப் போறியோ ம்ம் '' என்று பெருமூச்சு விட்டு வெளியே சென்றாள் கோதை.

மறுபடியும் தன் கதையை நினைத்துக் கொண்டாள் பார்வதி. பெரியவனுக்கு கல்யாணம் செய்து தனிக்குடித்தனம் வைத்து விட்டோம். சின்னவனுக்கும் கல்யாணம் செய்துவிட்டோம், அவன் நேரமோ நம்ப‌ நேரமோ புண்ணியவதி தலை பிரசவத்தில் சிக்கலாகி தன் பிள்ளையோட‌ எம‌ லோகம் போய் சேர்ந்து விட்டாள். இரண்டு வருஷமா போராடி இப்ப‌ தா இன்னொரு கல்யாணத்திற்கு ரெடி பண்ணி இருக்கேன், அடுத்த‌ வாரம் கல்யாணம் நு மனசுக்கூள்ள‌ சொல்லிக் கொண்டாள் பார்வதி.

அவள் மகனின் கல்யாண‌ நாளும் வந்து விட்டது, ஓடிஓடி வேலை செய்து கொண்டே தன் பெரிய‌ மறுமகளை தேடினாள். எதிர் வீட்டு படியில் உட்கார்ந்து கொண்டு இருப்பதை பார்த்து அவளிடம் ஓடினாள். ''சீக்கிரம் புறப்படும்மா பெண் அழைப்புக்கு நீ முதலில் செல்ல‌ வேண்டும்'' என்று அவசரப் படுத்தினாள். ''ஆமா, ஆமா நீங்க‌ முதலில் எனக்கு புதுப் புடவை எடுத்து கொடுங்க‌, அப்பத்தான் நான் பெண் அழைப்பிற்கே செல்வேன்''என்றாள் மறுமகள். அட‌ தேவுடா என்று தன் தலையில் கை வைத்துக் கொண்ட‌ பார்வதி, கல்யாணத்திற்கு மொய் பணம் வரும் அதில் உனக்கு நீ கேட்ட‌ புடவையை எடுத்து தருகிறேன் கோபித்துக் கொள்ளாமல் கல்யாண‌ வேலையை பார்க்கும்படி கெஞ்சினாள். ஆமா நீங்க‌ யார் கல்யாணத்திற்கு மொய் போட்டிக்க‌, இப்ப‌ உங்களுக்கு அவங்க‌ வந்து மொய் போட‌ என்று நொடித்தாள் மறுமகள். பார்வதியோ, கல்யாண‌ செலவுக்கு வைத்து இருந்த‌ பணத்தில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து மறுமகளிடம் கொடுத்து விட்டு, பெண் அழைப்பிற்கு செல்லும்படி சொல்லிவிட்டு அமைதியாக‌ சென்றாள். தன் காதில் இருந்த‌ கம்மலை கையால் தொட்டுக்கொண்டே சென்றாள் பார்வதி.

பார்வதியை பார்க்க‌ வந்தாள் கோதை. ''அக்கா எங்க‌ உங்க‌ எண்ணை இறங்கிய‌ அழுக்கு கம்மல்''என்றாள் கோதை. அந்த‌ அழுக்கு கம்மல் புடவை பணமாக‌ மாறிய‌ கதையை கூறிய‌ பார்வதி, நானும் ஒரு பெண் தானே எனக்குனு இருந்த‌ அந்த‌ அழுக்கு கம்மல் கூட‌ போய்விட்டது கோதை என்று கதறும் பார்வதியை தேற்றத் தெரியாமல் விக்கித்தாள் கோதை.

5
Average: 5 (5 votes)

ஸ்மைலி

அவள் சித்திரைத் திருநாளுக்காக‌ வீட்டை களீன் செய்ய‌ ஆரம்பித்தாள்.

ஒவ்வொன்றாக‌ க்ளீன் செய்தபின் வேண்டாத‌ துணிகளை பெரிய‌ பை ஒன்றில் எடுத்து வைத்தாள். அவற்றை அயர்ன் செய்து உபயோகிக்கும் யாருக்காவது கொடுப்பது அவள் வழக்கம்.

அவற்றினூடே இருந்த‌ அழகிய‌ சிவந்த‌ நிறமுடைய‌ டி ஷர்ட் ஒன்று கண்ணைப் பறித்தது. அதன் நடுவில் இருந்த‌ ஸ்மைலி அவளைப் பார்த்து கண்சிமிட்டி 'நான் உனக்கு வேண்டாமா' என்று பார்வையாலேயே கேட்டது. அதை மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொண்டாள்.

கண்கவரும் கலர்...
மனம் மயக்கும் டிசைன்...
என்ன‌ செய்யலாம் இதை? யோசித்தாள்.

டோட் பேக் செய்யலாமா? ரெண்டு ஸ்லீவையும் வெட்டி எடுத்து விட்டு அடியில் ஜாயின் பண்ணினால் பை ரெடியாகி விடுமே.

ஊஹூம். வேண்டாம். பை ரெடியாகும். ஆனால், அதை உபயோகிக்க‌ யாரும் ரெடியாக‌ மாட்டாங்க‌.

டி ஷர்ட்டை தரையில் விரித்து வைத்தபடி கற்பனையை சிதற‌ விட்டாள். சோபாவில் இருந்த‌ குஷன் கண்ணில் பட்டது.

ம்...ஐடியா.....இதிலே ஒரு வட்ட‌ குஷன் செய்யலாமே. ஏற்கனவே குஷன் எக்ஸ்பர்ட்னு பேரு வேறு இருக்கே. விடலாமா?

ஸ்மைலியைச் சுற்றி சாக்பீசால் ஒரு வட்டம் வரைந்தாள். கனகச்சிதமாக‌ வெட்டினாள். இப்போது ஸ்மைலி மட்டும் அவள் கைகளில் தவழ்ந்தது.

அறுசுவை கைவினைக் குறிப்பில் உள்ளபடியே அழகான‌ குஷன், ஊசி நூலுக்கு வேலை இன்றி பத்தே நிமிடத்தில் ரெடியானது.
லின்க் இங்கே
http://www.arusuvai.com/tamil/node/26558

ஸ்மைலி இப்போது ஒரு கண்ணை மட்டும் சிமிட்டி முகம் மலர‌ சிரிப்பது போல் தோன்றியது. அவள் மனமும் மகிழ்ந்தது. கட்டிலில் வைத்து அழகு பார்த்தாள். ஒரு ஃபோட்டோவும் எடுத்தாயிற்று.

நம் தயாரிப்பு நமக்கு அழகாகத் தான் தோன்றும். பார்க்கும் எல்லோரும் கருத்துச் சொல்ல‌ வேண்டாமா? (ஏனுங்க‌ படிக்கிற‌ உங்களையும் சேர்த்துத் தான் சொல்றேனுங்க‌)

அன்று முதலில் வீட்டுக்கு வந்தது அவள் கணவன் தான்.

ஹாலினுள் நுழைந்ததும் குஷனை எடுத்துக் காட்டினாள்.

"நல்லா இருக்கே..எப்போ வாங்கினோம்?"

"ஊஹூம். வாங்கினதில்லை. நானே செய்ததாக்கும்." குரலில் பெருமையுடன்.

"ம்... இதுக்கெல்லாம் நேரமிருக்கும். ஆபீசுக்கு வர‌ நேரமிருக்காது." சொல்லிக் கொண்டே டைனிங் ஹாலுக்கு விரைந்தான்.

அவளோ விடுவதாக‌ இல்லை. இரண்டடி முன்னால் வந்து," எப்படி இருக்குன்னு சொல்லலியே?"

"நல்லாத் தான் இருக்குன்னு முதல்லேயே சொன்னேனே" புருவத்தை உயர்த்தியபடி சிறிய‌ ஸ்மைலுடன் பெட்ரூமினுள் நுழைந்து விட்டான்.

அவனுக்கு இதில் எல்லாம் ஈடுபாடு கிடையாது என்பது அவள் அறிந்ததே. சரியாகக் கவனிக்காமலேயே ஆளை விட்டால் போதும்னு பாராட்டும் ரகம். ஆனாலும் அவளும் விடுவதில்லை. எல்லாம் ஒரு ஆர்வம் தான்.

அடுத்து வந்தது செல்ல‌ மகன்.

"ஆஹா... சூப்பர்மா.... ரொம்ப‌ நல்லா இருக்கும்மா...எப்படிம்மா..... இப்படில்லாம்......"
மனம் திறந்து பாராட்டினான். கையில் எடுத்து சோபாவில் வைத்து அழகு பார்த்தான்.

"தங்கச்சிக்கும்மா இது..... அவளுக்கு ஸ்மைலி ரொம்பப் பிடிக்குமே. அவள் ரூமில் வைத்தால் ரூமே அழகாயிடும்மா"

என் மனம் மகிழ்ந்தது. என்ன‌ செய்தாலும் பாராட்டும் பிள்ளை. அம்மாவை சந்தோசப்படுத்த‌ எப்போதும் பாராட்டு மடல் வாசிப்பான்..

அடுத்து வீட்டினுள் நுழைந்தது குட்டிப் பொண்ணு.

"வாவ்........ஸ்மைலி குஷன்....அம்மா இது எனக்கே எனக்கு. சூப்பர்மா....இது என்னோட‌ பெட்டுக்கு மேட்சா இருக்கும். நானே வச்சிக்கறேன் மா"

எடுத்துக் கொண்டு ஓடினாள். தலையணை மீது வைத்து அழகு பார்த்தாள். ஸ்மைலியோடு சேர்ந்து அவளும் சிரித்தாள்.

என் முகமும் சேர்ந்து ஸ்மைலித்தது. என்ன‌ தான் கடையில் வாங்கினாலும் நாமே செய்ததென்றால் தனி மகிழ்ச்சி தானே.

ஸ்மைலி எல்லோருக்கும் பிடிச்சிருக்கா தோழிகளே........ .

http://www.arusuvai.com/tamil/node/26335
http://www.arusuvai.com/tamil/node/31273

5
Average: 5 (6 votes)

சேய் தாயானது

தாயும் சேயும்

அம்மா, அம்மா என்று முனங்கிக் கொண்டு இருந்தாள் அம்மா ஆனந்தி.அவளது ஏழு வயது மகள் அகிலா, அவள் அருகில் வந்து நின்றாள். அம்மாவைத் தொட்டுப் பார்த்தாள். தன் அப்பாவை அழைத்து, அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று ஆதங்கப் பட்டாள். அம்மாவிற்கு அன்று முழுவதும் ஓய்வு தேவை என்பதை புரிந்துக் கொண்டாள். அப்பாவுடன் சேர்ந்து தானும் சமையல் செய்யவேண்டும் என்று எண்ணினாள். அப்பாவிடம் ' டீலா' என்று கையை உயர்த்தினாள். அவள் தந்தையும் ஒகே, ஒகே என்றார்.

தாங்கள் செய்ய‌ வேண்டிய‌ முதல் வேலை, அம்மாவுக்கு சூடாக‌ ஒரு கப் காபி கொடுக்க‌ வேண்டும் என்று முடிவு எடுத்தனர். இருவரும் சேர்ந்து பில்டர் டிகாஷ்ன் போட்டனர். சிறிது நேரம் கழித்து பில்டரை திறந்துப் பார்த்தால், நோ டிகாஷன். அப்பாவின் முகத்தில் அசடு வழிந்தது.உடனே அகிலா, 'ஐயோ அப்பா' என்று தன் தலையில் தட்டிக்கொண்டு, பில்டரின் தலையையும் தட்டினாள். டிகஷான் இறங்கியது. தன் அம்மாவிற்கு, இதமான‌ சூட்டில் பதமான‌ சுவையில் காபியை கொடுத்தாள். தன் தாய்க்கு ஒரு தாயாக‌ , பாசமாக‌ தடவிக் கொடுத்தாள்.

அடுத்த‌ வேலை, பத்தியக் கஞ்சி தயார் செய்வது. குக்கரில் பருப்பு வைத்து குழைய‌ வேக‌ வைத்தார்கள். வேக‌ வைத்த பருப்பில் இருந்து தண்ணீரை வடிகட்டி அதில் புளியையும், தக்காளியையும் போட்டு நன்கு கரைத்தனர். மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயம் சேர்த்து தாளித்து ரசம் தயார் செய்தனர். குழைய‌ வேக‌ வைத்தப் பருப்பை நன்கு கடைந்து சிறிது உப்பும் நெய்யும் கலந்து வைத்தனர்.

அரிசியை மிக்ஸியில் இட்டு சிறு ரவையாக‌ உடைத்தனர். திட்டமான‌ அளவு தண்ணீர் கொதிக்க‌ வைத்து அரிசி ரவையைக் கொட்டி கட்டி தட்டாமல் கலக்கி, பதமாக‌ வேக‌ வைத்து கஞ்சி செய்தனர்.அதில் தேவையான‌ உப்பு சேர்த்தனர். சிறிது சீரகமும் சேர்த்து கலக்கினர். சமையல் முடிந்தது. அப்பா மகளைப் பார்த்து சிரிக்க‌, மகள் அப்பாவைப் பார்த்து சிரிக்க‌ ஒரே சந்தோஷம்தான்.

அகிலா, அம்மாவிற்க்கு சுவையான‌, பதமான‌ பத்தியக் கஞ்சியைக் கொடுத்து, கடைந்தபருப்புடன் தொட்டுக் கொண்டு குடிக்கச் சொன்னாள். அம்மா தன் வாய் கசப்பிற்க்கு கஞ்சியை குடிக்க‌ முடியாமல் வாய் குமட்டலுடன் முகத்தை சுளித்தாள். உடனே அகிலா, கஞ்சியுடன் ரசத்தைக் கலந்து, அன்பு மிரட்டலுடன் குடிக்க‌ வைத்தாள்.

அப்பா, தன் மனைவியையும், தன் மகளையும் அன்போடுப் பார்த்தான். ''தாய் சேயானதையும், சேய் தாயானதையும்''பார்த்தான். அந்த‌ விந்தையான‌ காட்சியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.

5
Average: 5 (2 votes)

மூவிராசாக்கள்

மூவிராசாக்கள் பற்றி ஒரு இடுகை வெளியிடாவிட்டால்... என்னை நம்பியவர்களைக் கைவிட்டதாகும். ;) இன்று மூவிராசாக்கள் கதை... அல்ல; ஒரு அலசல்.

மூவிராசாக்கள்... உண்மையில் மூன்று ராசாக்கள்தானா!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆள் ஆளுக்கு ஒரு ஒட்டகத்தில் நாடு விட்டு நாடு பயணப்படும் வசதி கொண்டிருந்த இவர்கள் நிச்சயம் வசதி படைத்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.

வான சாஸ்திரிகள், அதாவது நட்சத்திரங்களைக் கற்பவர்கள் இவர்கள் என்கிறது விவிலியம். நட்சத்திரங்கள் வழியே, 'யூதர்களுக்கு ஒரு ராஜா பிறந்திருக்கிறார்,' என்பதாக அறிந்து, அவரை வணங்கப் பயணப்படுகிறார்கள். ஏரோது மன்னனிடம் போய் விபரம் கேட்க, அதிர்ந்து போன மன்னன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவர்கள் குட்டி ராஜாவைக் கண்டு, மீண்டும் நாடு திரும்பும் வழியில் தன்னைச் சந்தித்து விபரம் சொல்லிப் போனால் தானும் சென்று தரிசிக்க ஏதுவாக இருக்கும் என்கிறான்.

இவர்கள் மூவரையும் வால் நட்சத்திரம் ஒன்று வழிநடத்துகிறது. இவர்கள் கொண்டு சென்ற அன்பளிப்புகள்... தமிழ் விவிலியத்தின் படி... பொன், வெள்ளி, தூபம். ஆங்கிலத்தில்... gold, incense, myrrh என்றிருக்கிறது. மொழிபெயர்த்தவர்கள் எங்கள் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றம் செய்திருக்க வேண்டும். இங்கு பெறுமதியானவை எவை என்பதை மனதில் வைத்து எழுதியிருப்பார்கள் போல. சீன மொழி விவிலியத்தில் வேறு மூன்று பெறுமதியான பொருட்கள் இடம்பெற்றிருக்கக் கூடும்.

incense, myrrh இரண்டுமே குமஞ்சான் வகைதான் என்பது என் விளக்கம்.

குமஞ்சான் என்றால் என்னவென்று யோசித்திருப்பீர்கள். ;) சாம்பிராணியைத்தான் இப்படிச் சொல்கிறேன். செபா என்னை வளர்த்த அதே சமயம் என் முடியையும் தனியாக வளர்த்தார்கள். :-) அடர்த்தியாக நீண்டிருக்கும் என் கூந்தலைக் கழுவி நீரைத் துவாலையால் ஒற்றி எடுத்த பின் குமஞ்சான் பிடிப்பார்கள். அந்தக் கால முடி உலர்த்தி (hair dryer) அது. ஒரு சில சமயங்களில் குமஞ்சான் வாசனையைத் தாண்டி என் முடி எரிந்த வாசனை கூட வரும். :-) 'குமஞ்சான்' என்பது எந்த மொழியிலிருந்து எங்கள் தமிழுக்கு வந்ததோ நானறியேன். அறிந்தவர்கள் சொல்லி உதவலாம்.

சாம்பிராணி... ஏதோ ஒரு மரத்தின் பிசின் என்பதாகத் தெரியும். அதைத் தணலில் போட வாசனையுடன் புகை எழும்பும்.

அதை விட்டுவிட்டு மூவிராசாக்களுக்கு வருவோம். ஆங்கிலத்தில்!! Three Kings. இங்கு அந்தப் பெயரோடு ஓர் இடம் இருக்கிறது. அங்குள்ள நூலகத்தில் தமிழ்நூல்கள் படிக்கக் கிடைக்கும். :-) மீண்டும், தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறேனா!! :-)

அந்த மூன்று ராஜாக்களையும் கீழ்த்திசை ஞானிகள் என்றும் சொல்கிறார்கள். கீழ்த்திசை... இந்தியா, இலங்கை!! ஒருவர் இந்தியர் எனச் சொல்லப்படுகிறது. (விவிலியத்தில் அல்ல.) கஸ்பார், பல்தசார், மெல்கியோர் ஆகிய பெயர்களில் எது இந்தியர் ஒருவரது பெயர் போல ஒலிக்கிறது!! கஸ்பர்... கொஞ்சம் காசியப்பன் போல ஒலிக்கிறது. ;-) அந்த ஆள்தான் தந்தையைச் சுவரெழுப்பிக் கொன்ற கொடுமைக்காரனாயிற்றே! ம்ஹும்! கொஞ்சம் பிற்காலத்தவர் காசியப்பன். அவராக இருக்க முடியாது. யான் பெற்ற... குழப்பம், பெறுக இவ்வையகமும்! :-) ஆர்வம் இருப்போர் அவர்களே ஆராய்ச்சி செய்யக்கடவீர்களாக.

பிறகு... அம் மூவரும் குழந்தை யேசுவைத் தரிசித்த பின்னால் ஏரோதைச் சந்திப்பதைத் தவிர்த்து வேறு திசையில் பயணிக்கிறார்கள்.

மேலே உள்ள மூவரும் எங்கள் வீட்டுப் பாலன்பிறப்புத் தொகுதியில் உள்ளவர்கள். முன்பெல்லாம் நத்தாருக்கு முதல் நாள் வீட்டில் பாலன் குடில் வைத்து, மூவிராசாக்கள் திருநாள் (தை 6) அன்று எடுப்போம். இப்போ எல்லாமே மாற்றம் காண்கிறது.

எங்கள் வீட்டு இரண்டு ராணிகள் இவர்கள். சின்னவர் வந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது. கிடைக்கும் என் ஓய்வு நேரம் முழுவதையும் கவர்ந்துகொள்கிறார். :-)

Average: 5 (3 votes)

நாங்களும் விபரம் தான்

பனிக்கால வீடு

ஒரு வின்டர் காலம். எங்கள் வீட்டில் சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டி அடைத்துக் கொண்டது. கோடை காலம் எனில் தண்ணீரை வாளியில் கொண்டு போய் வெளியில் ஊற்றலாம். இது கொஞ்சம் கஷ்டமான, நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயம் தான். என் கணவர் வேலையிலிருந்து வரும் வரை சமாளித்தால் பிறகு அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையிலும் இடி விழுந்தது. ஏனெனில், அவர் வேலையால் வந்த நேரம் இரவு 9 மணி.
வெளியில் பனி கொட்டத் தொடங்கியது. மைனஸ் குளிர். மலை போல குவிந்த பனி குளிரை இன்னும் அதிகமாக்கியது. வாளியில் மொண்டு தண்ணீரை வெளியே ஊற்றுவது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எடுடா போனை, அழுத்துடா நம்பரை என்று தொலைபேசியில் குறிப்பிட்ட கம்பனியை அழைத்தாயிற்று. அவர்களும் நாங்கள் வருவோம், ஆனால் வரமாட்டோம் என்ற ரீதியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 4 - 5 அடி பனியில் வருவது மிகவும் சிரமம். தெருக்களில் இன்னும் மலை போல குவிந்திருந்த பனியில் வருவது சாத்தியமல்ல. ஒரு வழியாக மதியம் அளவில் மெயின் ரோடுகள் மட்டும் ஓரளவுக்கு சுத்தமாகி இருந்தது. ஆனால், கிளை ரோடுகளில் பனியை அகற்ற குறைந்தது 2 நாட்களாவது ஆகும். எங்கள் வீடு மெயின் ரோடிலிருந்து சில அடிகள் தூரத்தில் இருந்தபடியால் ஓரளவு சுத்தமாக இருந்தாலும், எங்கள் வீட்டின் முன்பு குவிந்திருந்த பனியை அகற்ற திணறிப் போனோம்.

முதல் பிரச்சினை, அள்ளிய பனியை கொட்ட இடமில்லை. இரண்டாவது நாங்கள் பனியை அள்ளி தெருவின் ஓரமாக கொட்ட, தெருக்களில் மேழும், கீழும் ஓடித் திரிந்த பனி அகற்றும் வண்டிகள் மீண்டும் பனியை எங்கள் பக்கம் குவிக்க, கடுப்பாகிய நான் குளிரினால் ஒழுகிய மூக்கினையும் பொருட்படுத்தாமல், பனி அகற்றும் வண்டி ஓட்டுநரை கெஞ்ச, அவர் மனமிரங்கி என் ட்ரைவேயில் இருந்து பனியை அகற்றி விட்டு போனார்.
ரோடுகள் கொஞ்சம் சுத்தமாகவும், நாங்கள் அழைத்த கம்பெனி வாகனம் எங்கள் வீட்டின் முன்பு பார்க் பண்ணவும், எனக்கு நெஞ்சில் தண்ணீர் வந்தது. அதன் பிறகு தான் இன்னும் தலைவலி காத்திருந்தது என்று எனக்கு அப்போது விளங்கவில்லை.
வந்தவர் பெயர் மார்க் என்று ஞாபகம். மார்க் 6 அடி உயரம், 3 அடி அகலம். அவர் சொன்னார், எங்கள் கம்பெனி பாலிஸி வீட்டுக்கு வருவதற்கு மட்டும் 200 டாலர்கள் சார்ஜ் பண்ணுவோம். அதன் பிறகு ஒவ்வொரு அரை மணி நேரமும் 50 டாலர்கள். சில வேளைகளில் அரை மணி நேரத்தில் வேலை முடியலாம், அல்லது 2 மணி நேரமும் ஆகலாம், என்றார்.
நான் இந்த தண்ணீர் பைப்பினை கழற்றி, அதில் இருக்கும் அடைப்புகளை அகற்றி, ஒரு நீளமான கம்பியினை இதன் வழியாக செலுத்தி, அழுக்குகள், சாப்பாட்டு பொருட்கள் எல்லாவற்றினையும் சாக்கடையில் தள்ள வேண்டும். இதில் இருக்கும் ஒரு சிரமம் தேங்கும் தண்ணீரை வாளியில் நிரப்பி, வெளியில் கொண்டு போய் ஊற்ற வேண்டும்....என்னது தேங்கும் தண்ணீரை வெளியே கொண்டு போய் ஊற்ற வேண்டுமா? எனக்கு மார்க்-ஐ பார்க்க, பார்க்க இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று விளங்கவில்லை. மார்க் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார். அவரின் உடல் எடையினை நினைத்து தான் என் கவலை எல்லாமே.

நான் அவரிடம் சொன்னேன், ராசா, நீங்க கஷ்டப்படவே வேண்டாம். நீங்கள் வாளிகளில் தண்ணீரை நிரப்பி மட்டும் வையுங்கள். எழுந்து நடந்து போய்..எதுக்கு ரிஸ்க்! நான் குடு குடுவென ஓடிப் போய் வாளிகளை காலி பண்ணுவேன், என்றார். அவர் மிகவும் மகிழ்ந்து போனார். அப்படியா செல்லம், மிக்க நன்றி என்றார்.
என் கணவர் முறைத்தார். உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று அவர் பார்வை சொன்னது. இதுக்கெல்லாம் பின்வாங்கும் பரம்பரையா! நான் ஒரு நிமிடத்தில் செய்யும் வேலையை மார்க் செய்ய குறைந்தது 4 நிமிடங்கள் ஆகும். நான் பத்து நிமிடங்களில் 10 வாளிகளை காலி பண்ணி விடுவேன், ஆனால், பாருங்கள் மார்க்... என்று கணக்கு பாடம் நடத்தினேன் என் கணவருக்கு. அவர் என்னவோ பண்ணித் தொலையுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.
என் உதவியினால்(!) மார்க் வேலையினை 2 மணி 40 நிமிடங்களில் முடித்து விட்டார். கால்குலேட்டரை எடுத்து அழுத்தினார். ஏதோ நம்பர்களை அழுத்துவதும், பிறகு என்னைப் பார்ப்பதுமாக இருந்தார். கண்ணு, இன்று வேலைக்கான தொகை 280 டாலர்கள். ஆனால், உன் உதவியினை மெச்சி உனக்கு 20% டிஸ்கவுன்ட் என்றார்.
காலையிலிருந்து பனியை அகற்றிய அசதி, பிறகு அழுக்குத் தண்ணீரை ஓடி, ஓடி வெளியில் கொண்டு போய் ஊற்றிய அசதி, தலைவலி ஒரு பக்கம், ஒழுகும் மூக்கு மறுபுறம் என்ற எல்லா பிரச்சினையும் அந்த 20% டிஸ்கவுன்டில் ஒரு நிமிடம் மறைந்து போனது. அவரை வழி அனுப்பி விட்டு, சோஃபாவில் போர்வையினை போர்த்துக் கொண்டு படுத்துவிட்டேன். மதியம் என்ன சாப்பாடு என்று என் கணவர் கேட்டது பின்னர் குளிர்சாதன பெட்டியினை குடைந்தது எதையும் நான் கண்டு கொள்ளவில்லை. உங்களுக்கு நான் 56 டாலர்கள் சேமித்து கொடுத்து இருக்கிறேன். சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள் என்றேன். இது உனக்குத் தேவையா? என்று வடிவேல் பாஸையில் தன்னை தானே திட்டியவாறே ஏதோ சமைக்க ஆரம்பித்தார் என் கணவர்

5
Average: 5 (6 votes)