பாகற்காய் பிரட்டல்

தேதி: December 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.7 (3 votes)

 

பாகற்காய் - 2
பெரிய சிகப்பு வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய்த்தூள் -‍ ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் ‍- ஒரு தேக்கரண்டி
சர்க்கரை ‍- ஒரு தேக்கரண்டி
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு (அ)
புளி பேஸ்ட் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு -‍ தேவையான அளவு
எண்ணெய் ‍- 3 தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி


 

முத‌லில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பாகற்காயை நீளவாக்கில் நான்காக வெட்டி,(விரும்பினால் விதையை நீக்கிவிட்டு), படத்தில் இருப்பதைப்போல மெல்லிய துண்டுக‌ளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள‌வும். நறுக்கிய பாகற்காய் துண்டுகளுடன், சிறிது உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து விட்டு வைக்கவும். இப்படி குறைந்தது ஒரு அரை மணி நேரம் விட வேண்டும். (குறிப்பு: இப்படி செய்வதால், பாகற்காயின் கசப்புத்தன்மை வெளியே வர உதவும்.)
கசகசாவையும், தேங்காய்த் துருவலையும் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் போட்டு கரைத்து வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், உப்பு கலந்து வைத்த பாகற்காய் துண்டுகளை கையால் பிழிந்து, தண்ணீரை எடுத்து விட்டு கடாயில் போட்டு நன்கு வதக்கவும்.
முக்கால் பாகம் பாகற்காய் வெந்ததும், அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட்டு, மீண்டும் அதே கடாயை அடுப்பில் வைத்து, 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், மஞ்சள்தூள் சேர்த்து அதனுடன் தக்காளியையும் போட்டு மேலும் வதக்கவும். வெங்காயம், தக்காளி எல்லாம் நன்கு வதங்கியதும், எல்லா தூள் வகைகளையும் கலந்து, உப்பு சேர்த்து ஒருமுறை வதக்கவும். பிறகு இதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது, கரைத்து வைத்த புளித்தண்ணீர்/புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
எல்லாமுமாக சேர்ந்து, கொதி வந்த நிலையில், ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் பாகற்காய் துண்டுகளை போட்டு, சர்க்கரையையும் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பாகற்காய் வெந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது, சுவையான பாகற்காய் பிரட்டல் தயார். சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் பிரட்டல். பார்க்க அழகு, ஆரோக்கியமானது. :) அவசியம் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யம்மி....பார்க்கவே சுவையா தெரியுது...வாழ்த்துக்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

செய்முறை விளக்கம் அருமையாக இருக்கு. செய்திருப்பதை பார்த்தாலே செய்ய தூண்டுது. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சாதத்துடன் சேர்த்து சாப்பிட நல்ல சைட் டிஷ்,வாழ்த்துக்கள்

நேத்து தான் பாகற்காய் வாங்கினேன்.............இன்னைக்கே செய்யணும் போல இருக்கே....சூப்பர்........... வாழ்த்துக்கள்

குறிப்பை வெளியிட்ட அட்மின் & அறுசுவை குழுவிற்கு என் நன்றி!

வனி,
வாங்க! பிரட்டல் பிடிச்சிருக்கா, ரொம்ப சந்தோஷம்! :) உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி! அவசியம் செய்துபாருங்க வனி!

இளவரசி,
பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி!

லாவண்யா,
பாராட்டிற்கு மிக்க நன்றி! செய்யத்தூண்டுதா, அப்ப‌ யோசிக்காதீங்க, உடனே செய்திடுங்க! :) வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி லாவண்யா. முடியும்போது அவசியம் செய்துபார்த்து சொல்லுங்க.

ஆனந்தி,
பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

சிம்ரா,
பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!
பாகற்காய் ரெடியா இருக்கிறதா? அப்புறம், செய்து பார்த்திங்களா?!

அன்புடன்
சுஸ்ரீ

உங்களின் பாகற்காய் பிரட்டல் செய்தேன். நல்லா சுவையாக இருந்தது.பாகற்காயின் கசப்பு உங்களின் குறிப்பின் படி செய்த போது தெரியவில்லை. ஆரோக்கியமான ரெசிப்பி.ரெம்ப தேங்க்ஸ்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு சுபத்ரா, என் ரெஸிப்பி ட்ரை பண்ணி பார்த்து, உங்களுக்கு பிடித்து இருந்தது என்று படித்ததும்! மிக்க நன்றி!.
(ஆமாம், என் ஹஸ்க்கு பாவக்காய் பிடிக்கும், ஆனால் கசப்பு பிடிக்காது! :) ஆக, நான் இந்த மாதிரி கொஞ்சம் கசப்பு எடுத்துவிட்டு பண்ணுவது வழக்கம்.) மீண்டும் நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

என்னவருக்கு பாகற்காய் என்றால் ரொம்ப பிடிக்கும். உங்கள் செய்முறை நன்றாக இருக்கிறது. அடுத்த முறை இந்த முறையில் தான் செய்வேன். வாழ்த்துகள் ஸ்ரீ

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்க கணவருக்கும் பாகற்காய் பிடிக்குமா? உங்களுக்கும் பிடிக்கும்தானே?! :) கட்டாயம் செய்து பார்த்து எப்படி இருந்துச்சுனு சொல்லுங்க ரேவதி!

செய்முறை குறித்த உங்க பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ரேவதி!

அன்புடன்
சுஸ்ரீ