தேதி: June 9, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சீரக சம்பா அரிசி - அரை கிலோ (4 டம்ளர்)
சிக்கன் - 300 கிராம்
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 5
தேங்காய் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 6
சோம்பு - அரை தேக்கரண்டி
தயிர் - அரை கப்
பட்டை - சிறிது
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
ப்ரிஞ்சி இலை - சிறிது
புதினா - அரை கட்டு
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
முந்திரி - 8
எண்ணெய் - கால் கப்
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து சிறிது தயிர் சேர்த்து பிசறி வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் 4 பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும்.

சோம்பு, தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பாதி பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், பாதி கொத்தமல்லித் தழை, பாதி புதினா, 2 பச்சை மிளகாய் மற்றும் முந்திரி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.

பெரிய பாத்திரத்தில் பாதி நெய் மற்றும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் ப்ரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் மீதமுள்ள கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் வதங்கியதும் சிக்கனைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

சிக்கன் நன்கு வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.

முட்டை பொடிப் பொடியாக ஆகும் வரை நன்கு கிளறவும்.

பிறகு அரிசியைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்துக் கிளறவும்.

அரிசியிலுள்ள ஈரப்பதம் நன்கு குறைந்ததும் 8 டம்ளர் சுடுதண்ணீர் ஊற்றி, நன்கு கொதி வந்ததும் மூடி போட்டு வேக வைக்கவும்.

அரிசி முக்கால் பதம் வெந்ததும், உப்பு சேர்த்துக் கிளறி தம்மில் போடவும். (தம்மில் போட தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி வைத்து வெயிட் வைக்கவும்).

10 நிமிடங்கள் கழித்து திறந்து மீதி நெய் மற்றும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான சிக்கன் முட்டை பிரியாணி தயார்.

Comments
செல்வி
தாயையும் பிள்ளையையும் பிரிக்காம பிரியாணி பண்ணிருக்கீங்க.. நல்லா இருக்குங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
செல்விக்கா
பிரியாணி வாசம் கம கமன்னு இங்க வரைக்கும் வருது. சூப்பர்ங்கக்கா.:-)
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
வனி
எல்லோருமே பிரிச்சிடறாங்கன்னு ரெண்டுமே ரொம்ப அழுதுச்சு என்கிட்ட. அதான் பிரிக்காம செய்துட்டேன்:)
நன்றி வனி!
அன்புடன்,
செல்வி.
உமா
அப்படியா உமா, பிரியாணியும் வேண்டுமானால் அனுப்பிடறேன். நன்றி உமா!
அன்புடன்,
செல்வி.
செல்வி அக்கா
சூப்பர் பிரியாணி... முட்டை சேர்த்து ரொம்ப வித்தியாசமா இருக்குங்க அக்கா....
பிரியா
மிக்க நன்றி பிரியா!
அன்புடன்,
செல்வி.
செல்வி அம்மா
செல்வி அம்மா உங்களின் இந்த பிரியாணி செய்தேன். நன்றாக இருந்தது. முதல் முறையாக ரெடிமேட் பவுடர் இல்லாமல் அரைத்து செய்தேன். நன்றி அம்மா. பிரியாணி super
நிஷா