சொல்லிட்டு போக‌ வந்தேன்....." போயிட்டு வரேன்".........

வருடபிறப்புக்கு வாழ்த்து சொல்றமோ இல்லையோ, ஆனா ஏப்ரல் மாசத்துல இருந்து பார்க்கற ஒவ்வொரு தோழிகளிடமும் கேட்பது, சொல்வது எல்லாமே ஊருக்கு எப்ப‌?? டிக்கெட் போட்டாச்சா?

ஒரு மாதம் போக போகிற ஊருக்கு மூன்று மாதம் முன்னவே டிக்கெட் புக் செய்து, இரண்டு மாதங்கள் காத்திருந்து
ஒரு மாதமாய் நாட்கள் எண்ணி, பதினைந்து நாளாய் வேண்டியது வேண்டாதது என கண்ணில் பட்டதையெல்லாம், யோசித்து வாங்கி பேக்கிங் செய்து, ஒரு வாரமாய் வீட்டை சுத்தம் செய்ய என்று ஆர்வமாய் நாட்கள் ஓடுகிறது,ஒரு நாளுக்கு பல முறை எண்ணினால் நாட்கள் குறைந்து விடுமா என்ற கேள்வி நான் எண்ணியபோது தோன்றாமல்,பசங்க எண்ணும் போது மனதில் தோன்றியது,

கதை பேசிகொண்டும், கதை கேட்டு கொண்டும்,ஊரில் வேலை செய்யலாம் என்ற நினைத்த போது மனதில் தோன்றிய உற்சாகம், என்னுடைய திட்டுகளையும், புலம்பல்களையும் கேட்டு கொள்ள என் செடிகளும், சுவர்களும் அங்கு இருக்காது என உணரும் போது கண்ணில் சில துளிகள் தண்ணிருக்கு பஞ்சமில்லை....

எல்லா வேலையும் முடிச்சாச்சு, பேக்கிங் முடிஞ்சிடுச்சு, இனி நிம்மதியா கிளம்ப வேண்டியது தான், ஒரு வேலையும் இல்லைன்னு தோழிகளிடம் நிம்மதியாய் சொன்னாலும்,ஏர்போர்ட்டுக்கு கிளம்பி கதவை பூட்டுகிறவரைக்கும், ஏதோ ஒரு வேலை, டென்ஷனுடன் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை என்ன சொல்ல???

நாளைக்கு இந்நேரம் ஊர்ல இருப்பேன், இந்த கதையெல்லாம் சொல்லுவேன்னு அலுத்து போகாமல் உற்சாகமாய் சொன்ன விஷயங்கள் எல்லாம் மறந்து போகுமா என்று தெரியவில்லை மறுநாள் விடியும் போது, கண் விழித்ததில் இருந்தே ஒரு படபடப்பு தொற்றி கொள்ளும், சிறு துளி உற்சாகமும் தோன்றாது,முகத்தில் அமைதியும், மனதில் ஆரவாரமும் அதிகம் இருக்கும்...

சகலத்தையும் பலமுறை சரிபார்த்துவிட்டு கிளம்பினாலும், ஏதோ ஒன்றை சொல்லாமல் விட்டு செல்லுகிற உணர்வு, இருந்து கொண்டே இருக்கும், கண் கலங்காமல் ஏர்போர்ட் போனாதாய் நினைவே இல்லை...

ஏர்போர்ட்டில் சகலத்தையும் முடித்துவிட்டு எப்படா பிளைட்டுக்கு கூப்பிடுவாங்கன்னு மணியை பார்த்துகிட்டே இருந்தாலும், பிளைட்டில் ஏற வரிசையில் என்றும் முதலாவதாய் நின்றது இல்லை, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், முதல் உரிமை என்று வரிசையே இல்லாமல் ஏறிய அனுபவம் தான் அதிகம்.......

சீட்டு நம்பர் கொடுத்திருந்தாலும் அந்த நாலு சீட்டுல யாரு எங்கன்னு ஒரு குட்டி சண்டை பஞ்சாயித்து எல்லாம் முடிஞ்சு,உட்காந்ததும் பொறுமையே இருக்காது எப்படா பிளைட்டை எடுப்பாங்கன்னு இருக்கும்,

பிளைட் கிளம்பியதும் கீழ பார்த்து ஒவ்வொரு மால், மற்றும் ஏரியாவ கண்டு பிடிக்கறது இருக்கே, வாவ்வ்வ்வ் எனக்கு ரெம்ப பிடிச்ச விஷயம், கிளம்பி 5 நிமிஷம் முடியறதுகுள்ள வெள்ளை பஞ்சுமிட்டாய தவிர ஒன்னும் தெரியாது, அடுத்த நாலரை மணி நேரமும் இனிப்பே இல்லாத பஞ்சுமிட்டாயுடன் தான் பயணம்......

பிளைட் மேலே பறக்க ஆரம்பிச்சதும், எப்பாடா வரும்ன்னு காத்திருப்பது ஊருக்கு அல்ல, சாப்பாட்டுக்கு:))வீட்ல டென்ஷனா இருந்தேன்ல்ல சாப்பாடு உள்ளையே இறங்காது, இப்ப பசிக்குது, கால்வயிறுக்கு தான் வரும், அதுலயும் ஜூஸ் பாக்கெட் வந்தா உள்ள இறங்காது, ஒரு கப் காபி தான் எனக்கு எப்பொழுதும், எனக்கு பாலும், சீனியும் அதிகமா வேனும்ங்கறதுனால பசங்களும், அவரும் நான் கேட்காமலே எனக்கு கொத்திடுவாங்க:))சோ கால் வயிறுக்கு சாப்பாடும், அரை வயிறுக்கு காபியும் குடிச்சதும் தான் எல்லா வேலையும் முடிஞ்சதா ஒரு எண்ணம் தோன்றும்......அவங்க கொடுத்த பாக்ஸை அவங்ககிட்ட அதே மாதிரி கொடுக்கனும் என்பது, என்னுடைய கொள்கையா இருக்குங்கறதால குப்பைய அழகா ரெடி பண்றதுல ஒரு குட்டி சந்தோஷம்:)

அடுத்து பிடிக்கவே பிடிக்காத ஒன்னு ஒரு பார்ம் பில்லப் பண்ண தருவாங்க, அது நினைச்சாலே அய்யோ இதுவான்னு இப்பயே புலம்ப தோனுது:(. இன்னும் மூனு மணிநேரம் இருக்கு கீழ இறங்கன்னு நினைக்கும் போது ஒரு சின்ன எரிச்சல், விட்டு விட்டு குட்டி தூக்கமும், பல சிந்தனைகளிலும் நேரத்தை கழிக்கும் போது, நடு நடுவே மணி பார்த்தால் 10 நிமிடம் மட்டும் தான் கரைந்து இருக்கும்:((

மரங்களும்,வீடுகளும் தெரிகிறது,இதோ அடுத்து ரன்வே கண்ணில் பட்டு பிளைட் கீழே இறங்குகிறது என்று உணரும் போது, எண்ணிலடங்காமல் மனதில் ஸ்ரீ ராம ஜெயம்.....

பிளைட்டை விட்டு வெளியே வரும்போது,சத்தமே இல்லாமல், யாரும் எதும் நினைத்து கொள்ளாமல் வருகின்ற சிரிப்பை நிறுத்த காரணம் கிடைக்காத நிமிடங்கள் அது......... எல்லா செக்கிங்கையும் முடிச்சுட்டு வர வரை இருக்கம் பொறுமை, அந்த லக்கேஜ் வரும் போது சுத்தமா இருக்காது, ஒவ்வொரு பெட்டியும் பார்க்கவும், வெளியே எட்டி பார்க்கவும் இருக்கும் போது நிமிடம் கூட மணி கணக்கா தெரியும்ங்கறது உண்மை....

வெளிய வரும் போது அமைதியாவா சான்சே இல்லை, நான் சிரிச்சா என்ன? கத்துனா என்ன? யாரை பத்தியும் கவலை இல்லை,வீட்ல இருக்கவங்கள பார்த்ததும் வர சந்தோஷம், உற்சாகமான நலம் விசாரிப்பு எல்லோரிடமும், இந்த நிமிஷத்துக்கு தானே ஒரு வருடமாய் வெயிடிங்.....

ஊரில் முதல் பத்து நாள் எப்படி போச்சுன்னே தெரியாது, அதுக்கு அப்பறம் திரும்பவும் நாள் எண்ணுகிற வேலை தான், அதுக்குள்ள நாள் ஓடுதேன்னு ஒரு கவலை, சிரிக்கிற போதெல்லாம் நாள் குறைய கூடாதுன்னும், அழுகிற போதெல்லாம், நாள் சீக்கரம் தீரட்டும் என்றும் சில நேரம் மனதில் தோன்றி மறையும்...

விரும்பினாலோ இல்லையோ கிளம்பி வரதானே வேனும்,இரவெல்லாம் எவ்வளோ பேசினாலும் பத்தாது, மணியை பார்க்கும் போதெல்லாம் தோணும் இன்று இரவு வேகமாய் தீருதோ என்று, விடிந்தாலும் எழ மனமில்லாமல் இருக்கும், கிளம்புகிற நிமிடங்களை நினைக்கும் போதே கண் கலங்கும்,...
இன்றும் எதுவும் சாப்பிட பிடிக்காது, ஆனால் சாப்பிட்டே ஆகனும்,மீண்டும் கிடைக்காது எனக்காக சமைத்த உணவு,

கிளம்பி வெளியே வரும் போது யாரும் அழக்கூடாது என ஒவ்வொரு வரும் கண்ணிரை அடக்க முயற்சித்தாலும் முடியுமா? சான்சே இல்லை....ஏர்போர்ட் போனதும் வருகையாளர் பக்கம் இருக்கவங்களை பார்த்ததும் வரும்போது இருக்கற உற்சாகம் இப்ப இல்லையேன்னு கண் கலங்கும்,நேரமாகுது உள்ள போகனும்ன்னு யார் சொன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு போலாம்ன்னு நின்னாலும் மெளனமாய் தான் கழியும், வர அழுகைய அடக்கிட்டு , சிரிச்சுகிட்டே நான் போயிட்டு வரேன்னு சொல்ல படற பாடு இருக்கே, ஆனா முடியல எவ்வளவு முயற்சித்தும், போயிட்டு வரேன்னு முழுசா வந்ததே இல்லை:(

எந்த பொது இடங்களில் அழுதாலும் சுற்றி இருக்கவங்க பதறிடுவாங்க, நாலு பேரு வருவாங்க என்னாச்சுன்னு விசாரிக்க, ஆனா ஏர்போர்டில் இருக்க ஒவ்வொருத்தர் கண்ணும் கலங்கும், அது யாரையும் பாதிக்காது, யாரை பத்தியும் யோசிக்காது, பதற்றம் இருக்காது... இனி எப்போ பார்ப்போம்ன்னு தெரியலயேன்னு அந்த பிரிவின் வலி மட்டும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாய் இருக்கும்.....

பின் குறிப்பு: பசங்க‌ லீவு விட்டதில் இருந்து சுத்தமா எங்கயும் வர‌ முடியல‌, போதா குறைக்கு என்னோட‌ லாப்டாப் வேற‌ வேலை செய்யல‌, அதுலயே ஒரே பீலிங், இன்னொரு சிஸ்டம் எனக்கு கிடைக்கவே கிடைக்காது, எனக்கும் ஒத்து வரல‌, இருந்தாலும் ஊருக்கு போறப்ப‌ சொல்லாம‌ போக‌ கூடாதுன்னு ஒரு ஹாலோ, ஹாய் , பை பை:)) ஜூலை 30 டூ ஆகஸ்ட் 30 ஊர்ல‌ தான்:)) பெங்களூருக்கும் ஊட்டிக்கும் வர‌ சொல்லி அழைப்பு வந்திருக்கு, நான் திருச்சிய‌ தாண்டுவேனான்னு தெரியல‌ என்பது ஊசிக்குறிப்பு:))))

5
Average: 5 (1 vote)

Comments

இப்போதைக்கு ஊருக்குவரும் உற்சாகத்த‌ மட்டும் நினைச்சுக்கோங்க‌. திரும்பும்போது வரும் கவலை இப்பவேணாம், இந்த‌ விடுப்பும் இனிக்காமல் செய்திடும். பசங்களோட‌ வாங்க‌ நல்லா அம்மா அப்பா கூட‌ எஞாய் பண்ணுங்க‌. முடிந்தவரை இங்க‌ ஊட்டி வாங்க‌. இந்த‌ ஒரு மாதத்தில் அங்க‌ (திருச்சி) நான் வருவனான்னு தெரியலை. அப்படி வந்தா கண்டிப்பா வரேன்.

ஹாய்,

//நாளைய‌ தினத்தை எண்ணி இன்றைய‌ சந்தோஷத்தை இழந்து விடாதே//பீ ஹாப்பீ.குடும்பத்துடன் சந்தோஷமா இருங்க‌.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

, உங்க இடுகையைப் பார்த்ததும் எனக்கும் ஊருக்குப் போக ஆசையாயிருக்கு, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் முற்றிலும் உண்மை. இங்கிருந்து ஊருக்கு கிளம்பும் 2நாளைக்கும் முதலே பசிக்காது, தூக்கமும் வராது. ஊரில் போய் சேர்ந்தால் போதும்ன்னே இருக்கும். திரும்பி வருகையில் அழுதால் என் கணவருக்குப் பிடிக்காது, ஆனாலும் கனத்த மனசுடன் முகம் என்னவோ எனக்கு இறுக்கமாகவே இருக்கும். அங்கிருந்து திரும்பி வருகையில் துள்ளி குதித்து மகிழ்வுடன் வரும் ஒரே ஜீவன் என் மகள் மட்டும் தான்.அவளைப் பொறுத்தவரை இதுதான் நம்ம வீடு என்பாள்.

உங்களின் பயணம் சுகிக்க,விடுநாள் இனிக்க வாழ்த்துக்கள்

//இனிப்பே இல்லாத பஞ்சுமிட்டாயுடன்// அவ்வ்! இதானே பெஸ்ட் பஞ்சுமிட்டாய்!

//பெங்களூருக்கும் ஊட்டிக்கும்// ம்.. கொஞ்சம் நேரம் ஒதுக்கி போகலாம். இது எல்லாம் சுலபத்தில் அமையும் விடயம் இல்லை. கிடைக்கும் போது அனுபவிச்சுரணும். அப்படியே நியூஸியும் வரலாம். எப்ப வரீங்க?

உங்கள் பயணம் இனிமையாக அமைய என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

எவ்வளவு அழகா, விரிவாக சொல்லி இருக்கிங்க. நானே ஊருக்கு கிளம்புகிற மாதிரி feel பண்ணேன். உங்கள் பயணமும் விடுமுறையும் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் : )

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

இந்திய பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்

Be simple be sample

Wish u happy journey and very happy holidays ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகா அனுபவிச்சு எழுதி இருக்கிங்க, அப்படியே அச்சு அசலாய் வெளிநாட்டில் வாழும் தோழிகளின் மனஓட்டம்...
// இனிப்பே இல்லாத பஞ்சுமிட்டாயுடன் தான் பயணம்...... // :‍)
என்ன?, என்னோட பயண நேரம் ரொம்பவே அதிகம்... பறக்க மட்டுமே 18+ மணிநேரம், இன்னபிற எல்லாம் சேர்த்தால் அது ஆகும், எக்கசக்கம். :( என‌க்கும் அப்ப‌டிதான், திரும்ப‌ வ‌ரும் நாள் நெருங்க‌, நெருங்க‌, எதிலுமே ம‌ன‌ம் ஒட்டாது, ப்ளைட்க்கு மூன்று நாள் முன்ன‌மே ஹோம் சிக் தொ‌ற்றிக்கொள்ளும். ஆனால், இப்ப‌ அதைப்ப‌ற்றி எல்லாம் நினைக்காம‌ல், போகும்போது கிடைக்கும் சந்தோஷ தருணங்களை மட்டும் நினையுங்க‌ள். உங்க‌ள் ப‌ய‌ண‌ம் இனிமை நிறைந்த‌‌ அருமையான பயணமாக அமைய வாழ்த்துக்கள் ரேணு.

அன்புடன்
சுஸ்ரீ

பயணம் பற்றி ரொம்ப அழகா அருமையா சொல்லியிருக்கீங்க..
உங்கள் பயணம் இனியதாகட்டும்..

நட்புடன்
குணா